சமஷ்டி அரசியல் முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 2
Arts
14 நிமிட வாசிப்பு

சமஷ்டி அரசியல் முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 2

November 20, 2024 | Ezhuna

இனக் குழுமம், சமயம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் வேறுபாடுகளைக் கொண்ட பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களில் (MULTI – CULTURAL SOCIETIES) சமாதான வழிகளில் தீர்க்க முடியாதனவான சிக்கலான அரசியல் பிரச்சினைகள் தீவிரமடைந்து உள்நாட்டுக் குழப்பங்களிற்கும், உள்நாட்டு யுத்தங்களிற்கும் வழிவகுத்துள்ளன. இதனை மூன்றாம் உலக நாடுகளின் சமகால வரலாறுகள் உணர்த்தியுள்ளன. இவ்வரசியல் பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தைகள் மூலம் சமாதான வழியில் தீர்த்தல், சம்மந்தப்பட்ட நாடுகளின் அமைதிக்கும், சமூக – பொருளாதார – அரசியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. அமைதி வழியான தீர்வை அரசியல் தீர்வாக (POLITICAL SOLUTION) அமைப்பதோடு அதிகாரப் பகிர்வு (POWER SHARING), சுயாட்சி (SELF RULE) ஆகியவற்றுக்கான ஆட்சிக் கட்டமைப்புக்களை, அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்குவதும் இன்றியமையாத முன் தேவையாக உள்ளது. அந்த வகையில், ‘அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்’ என்னும் இப்புதிய தொடரில் மூன்றாம் உலக நாடுகளான இலங்கை, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் அனுபவங்களை விளக்கியுரைக்கும் கட்டுரைகளின் தமிழாக்கம் வெளியிடப்படும். பல்வேறு தீர்வு மாதிரிகள், அத்தீர்வு மாதிரிகளின் பின்னால் உள்ள அரசியல் கோட்பாடுகள் (POLITICAL THEORIES), அரசியல் யாப்புத் தத்துவங்கள் (CONSTITUTIONAL PRINCIPLES) என்பனவும் விளக்கிக் கூறப்படும்.

ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ்

வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளான கனடா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் சிறப்புக் கூறுகளை இக்கட்டுரையின் முற்பகுதியில் எடுத்துக் கூறினோம். அடுத்து, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளாகவும் பன்மொழிச் சமூகங்களாகவும் அமையும் இந்தியா, மலேசியா ஆகிய இரு நாடுகளின் சமஷ்டி முறைகளின் சிறப்புக் கூறுகளை நோக்குவோம்.

இந்தியா

இந்தியாவின் சமஷ்டி பற்றிய எமது ஒப்பீடு பன்மொழி (சிங்களம், தமிழ், ஆங்கிலம்), பல்சமய (பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம்), பல்பண்பாட்டுச் சமூகங்களையுடைய இலங்கையின் அரசியல் முறையோடு ஒப்பிடுவதாக இருக்கும். எமது ஒப்பீட்டிற்கு றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலை அடிப்படையாகக் கொள்வதோடு ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் ‘Towards Democratic Governance in Sri Lanka : A Constitutional Miscellany (2014)’ என்ற நூலில் இந்தியா குறித்து அவர் எழுதியிருப்பவற்றையும் ஆதாரமாகக் கொண்டுள்ளோம். றொனால்ட்.எல்.வாட்ஸ் அவர்களின் கருத்துகளைத் தொகுத்து 5 தலைப்புகளில் கீழே தந்துள்ளோம்.

1. மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரமுடைய சமஷ்டி

இந்தியாவின் சமஷ்டியினை மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரமுடைய சமஷ்டி (Centralised Federation) என றொனால்ட்.எல். வாட்ஸ் குறிப்பிடுகிறார். சுதந்திரமடைந்த காலத்தில் இந்தியா எதிர்நோக்கிய பிரிவினைவாத அச்சுறுத்தல், அரசியல் யாப்பினை வரைந்தவர்கள் மத்தியில் அதிகாரங்களை உடைய அரசு முறையே இந்தியாவிற்கு ஏற்றது எனச் சிந்திக்க வைத்தது. ஆயினும் அவர்கள் இந்தியாவின் பன்மைத்துவத்தை (Diversity) கருத்தில் கொண்டு சமஷ்டி முறையிலான அரசுக் கட்டமைப்பை உருவாக்கினார்.

2. மொழிவழி மாநிலங்களை உருவாக்குதல்

பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட பன்மொழிச் சமூகம் என்பது இந்தியாவின் யதார்த்தமாகும் (Reality). ஹிந்தி மொழியைப் பேசும் மக்கள் அந்நாட்டின் மொத்தச் சனத்தொகையின் 40% மட்டுமே என்பதும் மக்கள் தொகையின் 60% வெவ்வேறு பிராந்திய மொழிகளைப் பேசுவோராகவும் இருந்தனர் என்பதும் கருத்திற் கொள்ள வேண்டிய விடயங்களாகும். இக்காரணத்தால் இந்தியா 1956 – 1966 காலத்தில் மொழிவழி மாநிலங்களை உருவாக்கியது. மொழி அடிப்படையிலான ஓரினத்தன்மை (Linguistic Homogeneity) மாநில அரசுகளின் மறுசீரமைப்புக்கு அடிப்படையாயிற்று.

3. அசமத்துவ சமஷ்டி அமைப்பு

இந்தியாவின் சமஷ்டி முறையின் முக்கிய இயல்புகளில் ஒன்று அசமத்துவக் கட்டமைப்பு (Asymmetrical Structure) ஆகும். தமிழ்நாடு ஒரு மாநில அரசாகும். தமிழ் பேசும் மக்களைக் கொண்டதும், முன்னாள் பிரஞ்சுக் காலனியுமான புதுச்சேரி, யூனியன் பிரதேசம் (Union Territory) ஆக விளங்குகிறது. இந்திய ஒன்றியத்தின் உறுப்பாக அமையும் அலகுகளிற்கிடையே காணப்படும் பாரிய வேறுபாடுகளுக்கு இது ஒரு உதாரணமாகும். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியின் அருணாசலம் பிரதேசம், மிசோராம், மணிப்பூர், நாகலாந்து என்பன தொடக்கத்தில் யூனியன் பிரசேங்களாக இருந்தன. இன்று அவை மாநில அரசுகள் (States) என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன. ஒப்பீட்டளவில் சனத்தொகையில் சிறியனவான அந்த மாநில அரசுகளுக்கும் பெரிய மாநில அரசுகளுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.

4. பலகட்சி முறை

இந்தியாவின் தொடக்க காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் பெரும்பாலான மாநிலங்களில் செல்வாக்குடையதாக இருந்தது. காலப்போக்கில் ஒரு கட்சி ஆதிக்கத்திற்கு மாறான பலகட்சிமுறை (Multi–Party System) இந்தியாவில் வளர்ச்சி பெற்றது. பிராந்தியக் கட்சிகள் பல தோற்றம் பெற்றன. இதனால் முரண்பாடுகளை இணக்க முறையில் தீர்வு செய்யக் கூடியதான கூட்டாட்சி அரசாங்கங்கள் (Coalition Governments) ஆட்சி அதிகாரத்தைப் பங்காளிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டன. இவ்வகையான அதிகாரப் பகிர்வு (Power Sharing) இந்தியாவின் சமஷ்டியின் அதிகாரப் பகிர்வுக்கு அரண் சேர்ப்பதாக அமைகிறது.

5. பாராளுமன்ற முறை

இந்தியா, பாராளுமன்ற முறையைச் சமஷ்டி முறையுடன் கலப்புச் செய்து, பாராளுமன்ற சமஷ்டி (Parliamentary Federalism) என்ற மாதிரிக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. மத்தியிலும், மாநிலங்களிலும் மந்திரிசபை முறை செயற்பாட்டில் உள்ளது. பிரதமர் அரசாங்கத்தின் தலைவராவார் (Head of Government); ஜனாதிபதி அரசுத் தலைவராவார் (Head of State). மத்திய பாராளுமன்றத்தின் இரு சபைகளதும், மாநில சட்டசபைகளதும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ‘Electoral College’ ஆல் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். ஒன்றிய அரசினால் மாநிலங்களின் ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கனடாவின் சமஷ்டி மாதிரி எவ்வாறு பல்மொழிச் சமூகமான கனடாவை ஒன்றிணைத்து வைத்துள்ளதோ, அவ்வாறே மொழிப் பன்மைத்துவம் உடைய இந்தியாவை அதன் பாராளுமன்ற சமஷ்டிமுறை ஒன்றிணைத்துள்ளது என றொனால்ட்எல். வாட்ஸ் குறிப்பிடுகிறார்.

பல்நிறமணிகளை ஒன்றாகச் சேர்த்து உருவாக்கப்படும் பல்வண்ணப் பட்டை கண்ணுக்கு இனிமை தரும் காட்சியாய் அமைகிறது. அவ்வாறே பன்மைப் பண்பாடுகள் உடைய சமூகங்கள் ஒருங்கே வாழும் நாடுகளின் பல்வண்ணப் பண்பாடு (Cultural Mosaic) அந்நாடுகளுக்கு அழகையும், பொலிவையும் வழங்குவது. அதேவேளை பன்மைப் பண்பாட்டை அழித்து ஒருமையை உண்டாக்கி முரண்பாடுகளை நீக்கவும் முடியாது. சமஷ்டி முறைமை முரண்பாடுகளை நீக்கி வேற்றுமையில் ஒற்றுமையை வளர்ப்பது. இந்தியாவின் சமஷ்டி அத்தகைய முன்னுதாரணங்களில் ஒன்று என அரசியல் யாப்புச் சட்ட அறிஞர் ஜயம்பதி விக்கிரமரட்ண கூறுகிறார். அவரது ‘Towards Democratic Governance in Sri Lanka : A Constitutional Miscellany என்னும் நூலில் (பக். 29-33) அவர் இந்தியாவின் சமஷ்டி பற்றிக் கூறியிருக்கும் கருத்துகளை அடுத்து நோக்குவோம்.

பிரித்தானியர் இந்தியாவிற்கு வருவதற்கு முந்திய காலத்தில் இந்தியா என்ற ஒன்றுபட்ட தேசம் இருக்கவில்லை. நூற்றுக்கணக்கான அரசுகளையும் சிற்றரசுகளையும் கொண்டிருந்த இந்தியாவைக் கைப்பற்றிய பிரித்தானியர், இந்தியாவை விட்டு நீங்கிச் சென்ற போது அவர்களது மேலாளுகைக்குக் கீழிருந்த 550 வரையான இறைமையுடைய அரசுகளை விட்டுச் சென்றனர். பிரித்தானியர் நேரடியாக ஆட்சி செய்யாத பிரதேசங்களோடு இவ்வரசுகள் (Princely States) இணைக்கப்பட்டன. புதிதாக உருவான இந்திய ஒன்றியம் (Union) இவ்வாறுதான் உருவானது.

1948 இல் இந்தியா சுதந்திரமடைந்த போது ‘ஒடிசா’ என அழைக்கப்படும் இன்றைய ஒடிசா மட்டுமே மொழிவழி மாநிலம் என்ற அடையாளம் உடையதாக இருந்தது. ஒடிசா மொழி பேசுவோரைக் கொண்ட மாநிலமாக ஒடிசா 1936 இல் பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்டது. ஏனைய மாகாண அரசுகள் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களை உள்ளடக்கி எழுந்தமானமாக வரையப்பட்ட எல்லைக் கோடுகளைக் கொண்டனவாக உருவாக்கப்பட்டன. இத்தகைய மாகாணங்களுக்கு அன்றைய சென்னை மாகாணம் ஒரு உதாரணமாகும்.

1950 இல் புதிய அரசியல் யாப்பை உருவாக்கிய போது மொழிவழி மாநிலங்களை அமைக்கும் யோசனை நிராகரிக்கப்பட்டது. ஆயினும் சில ஆண்டுகள் கடந்த பின் மொழியடிப்படையிலான மாநில அரசுகளை உருவாக்கும் கோரிக்கையை இந்தியத் தலைவர்கள் ஏற்றனர். இது அத் தலைவர்களின் துணிச்சலையும், தாராள மனப்பான்மையினையும், தூர நோக்கினையும் எடுத்துக் காட்டுகிறது. மாநில அரசுகளை மறுகட்டமைப்புச் செய்வதற்கு மொழியடிப்படையிலான ஓரினத்தன்மை (Linguistic Homogeneity) அமைதலே பகுத்தறிவுக்கு ஏற்றதென்பதை இவ்விடயம் பற்றி ஆராய்ந்த ஆணைக்குழு சிபார்சு செய்தது. 1956 ஆம் ஆண்டின் அரசு மறுசீரமைப்புச் சட்டமும் (The states Reorganization Act of 1956) அதற்குப் பின் இயற்றப்பட்ட பிற சட்டங்களும் புதிய மாநில அரசுகளைத் தோற்றுவித்தன. குறித்த ஒரு மொழியைப் பேசுவோரை உள்ளடக்கியதான தனித்தனி மாநில அரசுகள் உருவாகின. பொதுவான பண்பாட்டு அடையாளத்தில் (Common Identity) மக்களை இயலுமான வரையில் ஒன்றிணைத்து இவ்வரசுகள் உருவாக்கப்பட்டன.

மராத்தியர்களுக்கு – மஹராஷ்டிரா

குஜராத்தியர்களுக்கு – குஜராத்

பஞ்சாபியர்களுக்கு – பஞ்சாப்

தெலுங்கர்களுக்கு – ஆந்திரா

மலையாளிகளுக்கு – கேரளா

கன்னடர்களுக்கு – கர்நாடகா

என இந்தப் பட்டியல் நீண்டு சென்றது. தமிழர்களுக்கு தமிழ்நாடு என்ற தனி அரசும் உருவாக்கப்பட்டது. புதிய அரசுக்கு பிரிவினைவாத இயக்கத் தலைவர் சி.என். அண்ணாத்துரை கோரிய ‘தமிழ்நாடு’ என்ற பெயரையே இந்திய அரசுத் தலைவர்கள் வழங்கினர். இந்தியத்  தலைவர்கள் மாநிலங்களிற்கு மொழி அடையாளப் பெயர்களைச் சூட்டுவதையிட்டு அச்சம் கொள்ளவில்லை என்கிறார் ஜயம்பதி விக்கிரமரட்ண. பழங்குடிகள் வாழும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து புதிய மாநில அரசுகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்தன.

2000 ஆம் ஆண்டில் பின்வரும் மூன்று புதிய மாநில அரசுகள் உருவாக்கப்பட்டன.

  1. சத்திஷ்கார்
  2. உத்தராஞ்சல்
  3. ஜார்கன்ட்

இவை மூன்றும் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார் என்ற மாநிலங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு எல்லைகள் வகுக்கப்பட்டன. சத்திஷ்கார் கனிம வளம் மிக்க பகுதியாகும். மத்தியப் பிரதேசத்தின் பகுதியாக இருந்த சத்திஷ்காரின் கனிம வளத்தால் பெற்ற வருவாயின் பெரும் பங்கை மத்திய பிரதேச அரசு தனதாக்கிக் கொண்டது. இதனால் சத்திஷ்கார் மக்கள் தமக்கு நீதி கோரிப் போராடி வந்தனர். உத்தராஞ்சல் மலைப் பிரதேசமாகும். இப்பகுதி பண்பாடு, சாதிக்கட்டமைப்பு, பொருளாதாரம் ஆகிய விடயங்களில் தனித்துவமானது. இம் மக்களின் தனிமாநிலக் கோரிக்கை இத்தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜார்க்கண்ட் மாநிலம் பெரும்பான்மை பழங்குடிமக்கள் வாழும் பிரதேசமாகும். இப்பகுதியின் பழங்குடியினர் இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே விடுதலைக்காகப் போராடி வந்தனர்.

2013 ஆம் ஆண்டில் இந்திய அரசு தெலுங்கானா என்னும் புதிய அரசை ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியைப் பிரிப்பதன் மூலம் உருவாக்குவதை அங்கீகரித்தது. ஆந்திராவின் 40% மக்களைக் கொண்ட தெலுங்கானா, ஆந்திராவின் வரவு செலவுத் திட்டத்தின் 75% வருவாயை ஈட்டிக் கொடுக்கும் பகுதியாக இருந்தது. மத்திய அரசுக்கும் அப்பகுதியிலிருந்து வருவாய் சென்றது. இருப்பினும் தெலுங்கானா அபிவிருத்தியில் பின்தங்கிய பகுதியாக உள்ளது. அப்பகுதிக்கான நதிநீர்ப் பங்கீடு, வேலை வாய்ப்பு, வருவாய் ஒதுக்கீடு என்பனவற்றிலும் சமத்துவமின்மை இருந்து வந்தது. மொழியால் ஒன்றுபட்டவர்களாயினும் ஆந்திராவின் பிற பகுதிகளிற்கும், தெலுங்கானாவிற்கும் பிராந்திய ரீதியிலான வேறுபாடுகள் இருந்துள்ளன. புதிய மாநில அரசு உருவாக்கப்படுவதற்கு ஆந்திராவிற்குள் எதிர்ப்புத் தோன்றியது.

இந்தியாவில் மிகச் சிறிய சமூகங்களும் தமது தனித்துவ அடையாளத்தைப் பாதுகாத்துக் கொண்டு, அரச அதிகாரத்தில் தமது பங்கினையும் (Share of state Power) பெற்றுக் கொண்டுள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசம் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். புதுச்சேரி புவியியல் தொடர்ச்சியற்ற பகுதிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டதாகும். புதுச்சேரியின் பெரும்பகுதி தமிழ் நாட்டின் எல்லைகளால் சூழப்பட்ட பகுதியாகும். அதன் தலைநகர் புதுச்சேரியாகும். அங்குள்ள மக்கள் தமிழ் பேசுவோராவர். தமிழ் நாட்டின் கரையோரப் பகுதியான காரைக்கால் புதுச்சேரிக்குத் தெற்கே 130 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கும் தமிழ்மொழி பேசுவோர் பெரும்பான்மையினராக உள்ளனர். மாஹே (Mahe) என்னும் சிறுபகுதி இந்தியாவின் மேற்குக் கரையோரத்தில் கேரள மாநிலத்தின் எல்லைகளால் சூழப்பட்டுள்ளது. 830 கி.மீ தொலைவில் உள்ள இப்பகுதியில் வாழும் மக்கள் மலையாள மொழியைப் பேசுவோராவர். ஆந்திர மாநிலத்தின் யனம் (Yanam) என்ற பகுதி புதுச்சேரியில் இருந்து 870 கி.மீ தூரத்தில் உள்ளது. இவ்வாறாகப் புதுச்சேரி, காரைக்கால், மாகே, யனம் ஆகிய புவியியல் ரீதியில் தொடர்ச்சியற்ற பகுதிகள் (Non-Contiguous Areas) புதுச்சேரி என்ற யூனியன் பிரதேசத்தில் இணைக்கப்பட்டிருப்பதையும், அந்த அதிசயத்தின் பின்புலத்தையும், இலங்கைத் தமிழர்களும் அவர்களின் சகோதர இனத்தவர்களான சிங்களவர்களும், முஸ்லீம்களும் அறியாதிருக்கிறார்கள்.

இந்த அதிசய உண்மைகளை ஜயம்பதி விக்கிரமரட்ண வெளிப்படுத்தியிருப்பது பாராட்டப்பட வேண்டியது. புதுச்சேரியின் பகுதிகளாக உள்ள புவித் தொடரற்ற பகுதிகள் தமக்கு அருகே உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம் ஆகிய பகுதிகளுடன் இணைய விரும்பவில்லை! முன்னாள் பிரஞ்சுக் காலனிகள் என்ற பொதுப் பாரம்பரியத்தின் அடிப்படையில் எழும் பொது அடையாளமும், பண்பாட்டுப் பாரம்பரியமும், தனித்துவமும் புதுச்சேரி பிரதேசத்துடன் இணையும் விருப்பத்திற்கு காரணமாக அமைந்தன. போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் காலனியாக விளங்கிய கோவா (Goa) ஒரு சிறிய பிரதேசம்; இன்று இது ஒரு தனி மாநில அரசாக விளங்குகிறது. முன்னாள் காலனிகளான டட்றாவும், நகர் ஹவேலியும் (Dadra and Nagar Haveli), டமன், டியு (Daman and Diu) என்பனவும் யூனியன் பிரதேசங்களாக உள்ளன. இவை புவியியல் தொடர்பற்ற பிரதேசங்கள் என்ற உண்மையை ஜயம்பதி விக்கிரமரட்ண குறிப்பிடுகிறார்.

யூனியன் பிரதேசமாக தமது பிரதேசத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும்; அல்லது தமக்கு முழுமையான மாநில அரசு என்ற அந்தஸ்தை வழங்க வேண்டும் என்பதான கோரிக்கைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எழுந்துள்ளன. இந்திய யூனியனிற்குள் சுயாட்சியைக் (Autonomy) கோரும் இந்தக் கோரிக்கைகள் இந்தியத் தலைவர்களால் அனுதாபத்தோடு பார்க்கப்பட்டு முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு வந்துள்ளன. கோர்க்கா தேசிய விடுதலை முன்னணி (Gorkha National Liberation Front) கோர்க்காலாந்தினை தனியரசு ஆக்க வேண்டும் என்று கோரி ஆயுதப் போராட்டத்தை நடத்தி வந்தது. இதன் விளைவாக 1988 இல் டார்ஜீலிங் கோர்க்கா மலைப்பிரதேச கவுன்சில் அமைக்கப்பட்டது. இது முழுமையான மாநில அரசிலும் குறைந்த அதிகாரமுடைய சபையாகும். 2007 ஆம் ஆண்டில் ‘கோர்க்கா ஜன்முக்கி மோர்ச்சா’ மீண்டும் தனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்துக் கிளர்ச்சி செய்தது. 2011 இல் மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிவடைந்ததும் வங்காள மாநில அரசுக்கும் ‘கோர்க்கா ஜன்முக்கி மோர்ச்சா’ விற்கும் இடையே ஓர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதே போன்று தனியான போடோலாந்து அரசு (Bodoland State) அமைக்க வேண்டும் என்ற போடோ மக்களின் கோரிக்கைக்கு அமைய அசாம் மாநில அரசுக்கு உட்பட்ட பகுதியில் ‘போடோலாந்து பிரதேச கவுன்சில்’ (Bodoland Territorial Council) 2003 இல் உருவாக்கப்பட்டது.

இன்னொரு புதுமையான செய்தியையும் ஜயம்பதி விக்கிரமரட்ண கூறுகிறார் (பக். 32). ஜம்மு-காஷ்மீர் பகுதியில் லெக் (LEH) என்ற மாவட்டத்தில் லடாக்கியப் பௌத்தர்கள் (Buddhist Ladakhis) பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். தாம் சமய பண்பாட்டு அடிப்படையில் வேறுபட்டவர்கள் ஆகையால் தமது மாவட்டத்தைத் தனி அரசு அலகாக அங்கீகரிக்க வேண்டும் என ‘லெக்’ மக்கள் கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய அரசும், யூனியன் அரசும் லடாக் மக்களுக்கு சுயாட்சியுடைய மலையக அபிவிருத்திக் கவுன்சில் (Autonomous Hill Development Council) ஒன்றை அமைத்தன. இதற்கு அருகே உள்ள கார்கில் (Kargil) பகுதி ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதியாகும். இப்பகுதி மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்வதற்காக இப்பகுதிக்கு ஒரு ‘Autonomous Council’ அமைக்கப்பட்டது. இவ்வாறான கவுன்சில்களை அமைத்ததன் மூலம் இப்பகுதிகளின் மக்களுடைய அபிலாசைகள் பூரணமாக நிறைவேற்றப்பட்டன என்று கூறவும் முடியாது என ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவிக்கிறார். அப்படியானால் இந்தியா பிரிந்து சிதைவடைவது தவிர்க்க முடியாது என்று முடிவு செய்வதா என்று வாசகர்கள் கேட்கலாம்? அப்படியல்ல; பன்மைப் பண்பாடுகளை முகாமை செய்வதில் வெற்றியடைந்து வரும் முன்னுதாரணமான சமஷ்டியாக எமது அயல்நாடான இந்தியா இருந்து வருகிறது என்பதே உண்மையாகும்.

மேற்குறித்தன போன்ற பிரச்சினைகள் எழும்போது பிரதேசம், மொழி, சமயம், பண்பாடு என்பனவற்றால் தனித்துவ அடையாளங்களுடைய மக்கள் சமூகங்களிற்கு அசமத்துவ சமஷ்டி ஒழுங்கமைப்புகள் (Asymmetrical Federal Arrangements) மூலம் தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்பானியா தேசமும், ஐக்கிய இராச்சியமும் அசமத்துவ (Asymmetry) முறைத் தீர்வுகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள நாடுகளுக்கு உதாரணங்கள் என ஜயம்பதி விக்கிரமரட்ண குறிப்பிடுகிறார். இன்று இந்திய யூனியனில் மாநில அரசுகளாக விளங்கும் அருணாசல பிரதேசம், அசாம், மிசோராம், மணிப்பூர், நாகாலாந்து ஆகியன புவியியல் ரீதியில் தூரத்தே ஒதுங்கி நிற்கும் வடகிழக்கு மாநிலப் பகுதிகளாகும். சனத்தொகை குறைந்த இப்பகுதிகள் தொடக்கத்தில் யூனியன் பிரதேசங்களாக இருந்தன. இவை டெல்லியின் அதிகார மையத்தின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. இன்று இவை சுயாட்சியை உடையனவாக உள்ளன. சிக்கிம் 1974 இல் இந்தியாவுடன் இணைந்தது. முதலில் அப் பகுதி ‘Associated State’ என்ற அந்தஸ்துடையதாக இந்தியாவுடன் இணைந்திருந்தது. வடகிழக்குப் பகுதியின் அரசுகள் யாவும் பழங்குடி மக்கள் (Tribals) வாழும் பகுதிகளாகும். நாகாலாந்தின் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்களாவர். நாகாலாந்து தனி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட போது, அசமத்துவ ஒழுங்கமைப்பு முறையிலான சிறப்புச் சலுகைகள் அம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டன. நாகா மக்களின் வழமைச் சட்டங்கள் (Customary Law), சிவில், குற்றவியல், நீதி நடைமுறை, சமூக – சமய நடைமுறைகள், காணி உரிமை என்பன அரசியல் யாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகள் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ­பாராளுமன்றம் இயற்றிய சட்டங்கள் ஏதேனும், நாக மக்களின் மேற்குறித்த நடைமுறைகள் – உரிமைகளுக்கு மாறுபட்டனவாயின், அவை அம்மக்கள் விடயத்தில் ஒரு நிபந்தனைக்கு உட்பட்டே செல்லுபடியாகும் என்ற ஏற்பாடு உள்ளது. நாகாலாந்தின் சட்டசபை விசேட தீர்மானம் மூலம் அங்கீகாரம் வழங்கினால் மட்டுமே அச்சட்டங்கள் செல்லுபடியாகும் என்பதே அந்நிபந்தனையாகும் (உறுப்புரை  371A (1).

இந்தியா, இனத்துவ முரண்பாடுகளை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்யும் நாட்டிற்குச் சிறந்த உதாரணமாகும். இந்தியா, சமூக யதார்த்தத்திற்கு முகம் கொடுத்து, மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவமுடையதாகத் திகழ்கிறது. இந்தியா சுதந்திரமடைந்த போது அது ஒரு தனித்தேசமாக, அரசாக (A Single State) நிலைத்திருக்க முடியாது என்று சிலர் கூறினர். ஆனால் இந்தியா தனது பிரச்சினைகளைப் புத்தாக்க முறையில் தீர்வு செய்து கொள்வதற்கு என்றும் தயாராகவே இருந்து வந்துள்ளது என்று கூறும் ஜயம்பதி விக்கிரமரட்ண, ஆயினும் இந்தியாவில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன என்றும் கூறி, இந்தியாவின் சமஷ்டி முறை குறித்த தமது ஆய்வை நிறைவு செய்கிறார். ‘Yet Unresolved Kashmir’ (இன்னும் தீர்வு செய்யப்படாத காஷ்மீர் பிரச்சினை) என்ற பகுதி (பக். 34-36) காஷ்மீர் பற்றி ஆராய்கிறது. 2014 ஆம் ஆண்டில் இந்நூல் எழுதப்பட்டது. அதன் பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சமஷ்டி முறையைச் சிதைக்கும் நிகழ்வுகள் பல நடந்தேறின. இருப்பினும் இந்தியாவின் சமஷ்டி நம்பிக்கையூட்டும் கலங்கரை விளக்கமாகவே விளங்கி வருகிறது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

1755 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)