இனக்கலவரமும் இலக்கிய வெளிப்பாடும்
மலையகத் தமிழர் வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் தொட்டு தொழிற்சங்க அடிப்படையிலும் இன, வர்க்க அடிப்படையிலும் பல்வேறுவிதமான எழுச்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடம்பெற்று வந்துள்ளன. அவ்வாறு எழுச்சி பெறுகின்ற ஒவ்வொரு காலப்பகுதியிலும் அதற்கெதிராக அவர்களை ஒடுக்குவதற்கான நடைமுறைகளும் திட்டமிட்டு இடம்பெற்று வந்துள்ளன. இந்தியர் எதிர்ப்பு வாதம், இனவாதம் போன்ற கருத்து நிலைகள் இதில் முதன்மை வகித்தன. இவ்வாறு வளர்ந்து வந்த ஒடுக்குமுறைகள் எழுபதுகளில் தீவிர இனவாதமாக மாற்றம் பெற்றன. 1972, 1981, 1983 ஆம் ஆண்டுகளில் பாரிய இனவெறிச் சம்பவங்கள் நடைபெற்றன. ஓ.ஏ. இராமையா (2018:2016) 1973ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் நாடு முழுவதும் சிறுபான்மை தமிழர்களுக்கெதிராக மிகவும் மோசமான முறையில் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு ஆகிய பிரதேசங்களில் வாழும் தமிழர்களின் சொத்துக்களுக்குப் பெரும் அழிவுகள் ஏற்பட்டதோடு பலர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இது மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது வரலாற்றில் மிக மோசமான பாதிப்புகளையும் சிதைவுகளையும் ஏற்படுத்தியது. பௌத்த இன மேலாண்மைச் சிந்தனையின் உச்சக்கட்ட தாக்குதலை மலையகத் தமிழர்கள் எதிர்கொண்டனர். மலையகத் தேசியவாதச் சிந்தனைகள் வளர்ச்சிபெற்று வந்த காலப்பகுதியிலேயே இவ்வாறான சம்பவங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இனக்கலவரம் குறித்த இலக்கியப் பதிவுகளை கணக்கிடும்போது கவிதைகள் சிலவற்றில் அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், சிறுகதைகள் மற்றும் நாவல்களில் இவ்விடயம் பெரிதும் உருக்கொள்ளவில்லை. மலையகத்தில் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘நாங்கள் பாவிகளாய் இருக்கிறோம் அல்லது 1983’ என்ற நாவல் இதனை வெளிப்படுத்தும் இலக்கியப் பதிவாகக் கொள்ள முடியும். இந்நாவல் 1983 இனக்கலவரத்தை பிரதானப்படுத்தி எழுதப்பட்டிருந்தாலும் மலையகத் தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடூரங்களை மையப்படுத்தியதாக அமையவில்லை. மலையகத் தமிழர் செறிவாக வாழும் நுவரெலியா, பதுளை மற்றும் அவர்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழக்கூடிய கேகாலை, இரத்தினபுரி போன்ற பிரதான நகரங்களிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் மலையக மக்கள் இனக்கலவரங்களால் பெரிதும் தாக்கப்பட்டனர். எனினும் இந்நாவல் கொழும்பை கதைக்களமாக கொண்டு எழுதப்பட்டமை கவனிக்கத்தக்கதாகும். ஆகவே மொத்தமாக அவதானிக்கும்போது இனக்கலவரத்தையும் அதன் பின்னணிகளையும் அடிப்படையாகக் கொண்ட மலையக இலக்கியங்கள் பெரிதும் கவனப்படுத்தப்படவில்லையென்றே குறிப்பிட முடியும்.
எண்பதுகளின் இலக்கிய முகிழ்ப்பு : இனத்துவம், வர்க்க நிலை, தொழிற்சங்கச் சிதைவுகள்
எண்பதுகளின் ஆரம்பத்தில் இனமுரண்பாடுகளும் இனவாத நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டபோது மலையகத் தமிழர்களிடையே இனத்துவச் சிந்தனைகள் வெளிக்கிளம்புகின்றன. இனவொடுக்குமுறைகளுக்கு எதிராக மலையகத் தமிழர்களின் இனப்பிரச்சினையை பேசும் வகையிலான கவிதைகளும், மற்றும் அரசியல் தலைவர்களிடையே இனவாதச் சிந்தனைகள் செயற்படுவதை எள்ளலாக சிறுகதைகளில் சொல்லும் இலக்கியப் பண்புகளும் வளர்ந்திருந்தன (மு.சிவலிங்கம்).
எண்பதுகளில் மலையக இலக்கியத் தளத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பண்புநிலை மாற்றமானது மலையக புவியியல் பிரதேசங்களில் எல்லை நிலங்களில் வாழக்கூடிய மக்களைப் பற்றிய இலக்கியப் படைப்புகள் உருப்பெற்றமையாகும். குறிப்பாக மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி முதலிய பகுதிகளில் வாழக்கூடிய மக்களைப் பற்றிய பதிவுகள் இலக்கியத்தில் இடம்பெறத் தொடங்கின. இப்பகுதிகளில் மலையகத் தமிழர்கள் சிங்களவர்களுடனும் சில பிரதேசங்களில் முஸ்லிம் மக்களுடனும் இணைந்து வாழுகின்றனர். இவர்கள் குறித்த இலக்கிய உருவாக்கம் இக்காலப்பகுதியிலேயே இடம்பெறுகின்றன. மாத்தளை மலரன்பன், அல் அலீமத் ஆகியோரது படைப்புகளில் இதனை அவதானிக்கலாம். மாத்தளை மலரன்பனது எழுத்துக்களில் மலையகத் தமிழர் சிங்களவர்களுடன் இணைந்து அந்நியோன்யமாக வாழ்வதையும் அவர்கள் ஒன்றாக இணைந்து அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் காணமுடிகிறது (கோடிச்சேலை-1989, பிள்ளையார் சுழி-2008). பெரும்பாலும் இறப்பர் தோட்ட வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட இக்கதைகளில் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்களைப் போலவே அங்கு வேலை செய்யும் சிங்களத் தொழிலாளர்களையும் சமாந்தரமாகப் படைத்துள்ளார். இச்சிறுகதைகளில் சிங்களவர், தமிழர் உறவைச் சிறப்பாகப் பேணும் நோக்கில் பாத்திரங்களை உருவாக்கியிருப்பது சிறப்புக்குரியதாகும். (1983) இனக்கலவரத்திற்கு பின்னர் ஏற்பட்ட இலக்கியப் படைப்புகளில் இனத்துவ நல்லிணக்கத்தை பேணும் இலக்கிய உருவாக்கத்தைக் காணமுடிந்தது.
வர்க்கநிலை
1980களில் மலையக இலக்கிய உருவாக்கப் போக்குகளில் இனத்துவ சிந்தனைகள் முனைப்பு பெறத் தொடங்கியபோதும் அதனைக் கடந்த வர்க்கநிலைப்பாட்டை வலியுறுத்தும் இலக்கிய அமைப்புகளும் உருவாகாமலில்லை. 1982ம் ஆண்டு வெளிவந்த ‘தீர்த்தக்கரை’ சஞ்சிகை இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. தீர்த்தக்கரை என்ற பெயரில் இயங்கிய குழுவினர்கள் மார்க்சியப் பார்வை கொண்டவர்களாகவும் மலையகத் தமிழர்களது வரலாற்றையும் அவர்களின் விடுதலையையும் வர்க்க அணுகுமுறையில் நோக்குபவர்களாகவும் செயற்பட்டனர். இவர்களால் வெளியிடபப்ட்ட தீர்த்தக்கரை சஞ்சிகையும் இக்கருத்துநிலையைக் கொண்ட ஆக்கங்களைச் சுமந்தவையாகும். குறிப்பாக இதில் இயங்கிய எல். சாந்தகுமார், எல். ஜோதிகுமார் ஆகியோர் மலையகச் சமூகம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டனர். மலையகத் தமிழரது வரலாற்றில் தீர்க்கமான கருத்துநிலைகள் கலை இலக்கியத் தளங்களில் இக்காலத்தில் உருவாகத் தொடங்கியது.
தொழிற்சங்கச் சிதைவுகள்
கவிதை இலக்கியத்துறையில் மல்லிகை.சி. குமார், சு. முரளிதரன் போன்ற கவிஞர்கள் தீவிரமாக சமூக விமர்சனத்துடன்கூடிய கவிதைகளை எழுதினர். இவர்களது கவிதைகள் சிறந்த கவித்துவத்துடனும் வீரியத்துடனும் மலையகத்தைப் பேசின. அதுவரைக்காலமும் தொழிற்சங்க பலத்துடன் மக்களை நிர்வகித்து வந்த தலைமைகள் மற்றும் நிர்வாகிகளை விமர்சித்தும் மக்களின் விடிவுக்கான சரியான பாதைகளை கண்டறிவதற்கான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துவதாக அவை அமைந்தன.
“தொழிற்சங்கங்கள்
புகுந்ததும்
துயர்மூச்சு போனதா?
சில சமயங்களில் இவைகள்
துரைசங்கங்களாகும்”
(சு. முரளிதரன் : தீவகத்து ஊமைகள்)
“தொழிற்சங்கங்கள்
உன் நிழலில்
ஒதுங்கின”
(சு. முரளிதரன்: தியாக யந்திரங்கள்)
முதலிய கவிதைகளில் தொழிற்சங்கங்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைவதையும் அவற்றின் போக்குகள் எவ்வாறு மக்கள் சார்பற்ற நிலைக்கு மாறியுள்ளன என்பதையும் அவதானிக்கலாம். ஞானசேகரன் போன்ற நாவலாசிரியர்களின் இக்கால நாவல்கள் தொழிற்சங்கங்களின் சிதைவுகளையும் அவை அரசியல் கட்சிகளாக மாறுவதையும் பிரதிபலித்தன. ஒரே தோட்டத்தில் பல தொழிற்சங்கங்கள் தங்களுக்கிடையே தொழிலாளர்களை பகிர்ந்து கொள்வதனால் தோட்டங்களில் தொழிற்சங்கப் போட்டியும் பகைமையும் வளர்க்கப்பட்டு தொழிலாளர்கள் பல துண்டுகளாகும் நிலையேற்பட்டது. மேலும் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் தீவிரமாக உருவாகிய தொழிற்சங்கங்கள் பின்னரைப் பகுதியில் சிதைவுறுகின்ற அவலநிலை உருவாகியது. தொழிற்சங்கங்கள் பலம் இழக்கத்தொடங்கியது மட்டுமல்லாது அவை கட்சிகளாக மாறுகின்ற காலப்பகுதியில்தான் இந்நாவல் வெளிவருகிறது (சு.தவச்செல்வன் : 2018).
மலையக தமிழர்களது இலக்கிய உருவாக்க வளர்ச்சியில் இக்காலப்பகுதியில் கோட்பாட்டு ரீதியான படைப்பாக்க அணுகுமுறை முளைவிடத் தொடங்கியது. குறிப்பாக மார்க்சிய இலக்கியக் கோட்பாட்டுப் புரிதலுடன் எழுதுகின்ற போக்கு உருவாகத் தொடங்கியது. சாந்திகுமாரின் ‘மலையக சமூகம்’ பற்றிய ஆய்வுக்கட்டுரை தொடங்கி தீர்த்தக்கரை சஞ்சிகையில் சிறுகதைகள் படைத்த ஆனந்த ராகவன், பிரான்சிஸ் சேவியிர், கேகாலை கையிலைநாதன் ஆகியோர் எழுதித் தொகுத்த தீர்த்தக்கரைக் கதைகள் வரை இதன் அடிப்படைகளை உணரலாம். மலையக மக்களின் வாழ்க்கையையும், உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் சிறுகதைகள் தீர்த்தக்கரையில் வெளிவந்தன. திறமையுள்ள இளைய எழுத்தாளர்களின் படைப்புகள் அவை (வல்லிக்கண்ணன்:1995). தீர்த்தக்கரை சஞ்சிகையின் தொடக்கமாக அமைந்த இக் கோட்பாட்டெழுத்துக்கள் தொடர்ந்து தொண்ணூறுகளில் நந்தலாலாவாக உருமாறுகின்றது. தீர்த்தக்கரையிலிருந்து விரிந்த தளத்தில் ஆரம்பகால நந்தலாலா சஞ்சிகை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த கோட்பாட்டு ரீதியான இலக்கிய படைப்புகளும் இலக்கியப் புரிதல்களும் அக்காலப்பகுதியில் படைப்புத்துறையில் அதிகமாக பங்களிப்புச் செய்த மல்லிகை சி. குமாரது படைப்புகளிலும் வெளிப்பட்டது. மலையகத் தமிழர்களது சமூக அரசியலையும் அதன் பிரதானிகளையும் நன்கு புரிந்துகொண்ட எழுத்தாளராக மல்லிகை சி. குமாரை மதிப்பிடலாம். மலையக இலக்கியத்தில் மக்கள் இலக்கிய கோட்பாட்டைத் தொடக்கி வைத்தவர் சி.வி. வேலுப்பிள்ளையென்றால் இருபத்தோராம் நூற்றாண்டு படைப்பிலக்கியத் துறையிலும் அதனை வளர்த்தெடுத்துச் சென்றவர் மல்லிகை சி. குமாராவார். அவரது ‘மாடும் வீடும்’ கவிதைத்தொகுதி, பத்திரிகைகள், இதழ்களினூடாக வெளிவந்த சிறுகதைகள் மற்றும் நாவல்களில் மலையகத் தமிழர்களது வாழ்வியல் கூறுகளின் நுட்பமான பதிவுகளைக் காணமுடியும். இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தில் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலக்கியப் படைப்பாக்கங்கள் உருவாகுகின்றன. குறிப்பாக மாத்தளை கார்த்திகேசு (வழி பிறந்தது-1992), புலோலியூர் சதாசிவம் (ஒரு நாட் பேர்-1995), தி. ஞானசேகரன் (லயத்துச் சிறைகள்-1994), மாத்தளை ரோகினி (இதயத்தில் இணைந்த இரு மலர்கள்-1997) ஆகிய நாவலாசிரியர்கள் பல்வேறு கோணங்களில் மலையகத் தமிழர்களின் பின்னணிகளை தமது எழுத்தில் பதிவு செய்தனர். இக்காலப்பகுதியில் முகிழ்த்தெழுந்த மற்றுமொரு கவிஞர் இராகலைப் பன்னீர் மலையகத் தொழிலாளர்களது விடுதலைக் கருத்துநிலையை அடிப்படையாகக் கொண்டு கவிதைகள் படைத்தவராக அறியப்படுகிறார் (புதிய தலைமுறை-1999). மலையக இலக்கியம் பற்றிய தேடல் மற்றும் ஆய்வு முயற்சிகள் முதன் முதலாக இக்காலப்பகுதியிலேயே தொடக்கி வைக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது (மலையகத் தமிழர் இலக்கியம்-1994). சாரல் நாடன் மற்றும் அந்தனி ஜீவா போன்றோர் ஆரம்பகால மலையக இலக்கியம் மற்றும் இலக்கிய ஆளுமைகளைப் பற்றி பதிவு செய்யத் தொடங்கினர். மலையகத்தில் தோற்றம் பெற்ற நாவல்களை அடிப்படையாகக் கொண்ட பல்கலைக்கழக புலமைநிலைப்பட்ட ஆய்வை பேரா.க. அருணாசலம் தொடக்கி வைக்கின்றார் (மலையகத் தமிழ் நாவல்கள் அறிமுகம்-1999).
இரண்டாயிரத்துக்குப் பின்னரான சமூக மாற்றமும் இலக்கியப் பரிமாணமும்
தொண்ணூறுகளில் தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்படுகின்றன. இதனையடுத்து தோட்டங்களை தனியார் கம்பனிகள் குத்தகைக்கு எடுத்துக்கொள்கின்றன. இதனால் தொழிலாளர்கள் மீதான நிர்வாகங்களின் கெடுபிடிகள் அதிகரித்தன. இச்சூழ்நிலைகள் இரண்டாயிரமாம் ஆண்டை நெருங்கும்போது பல பரிமாணங்கள் அடைந்தன. இரண்டாயிரமாம் ஆண்டுகளில் மலையகத்தில் ஏற்பட்ட பிரதான மாற்றங்களாக; தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளாக மாற்றமுற்றமை, பிரதான தொழிற்சங்கங்களில் ஏற்பட்ட பிளவுகள், மற்றும் புதிய தொழிற்சங்கங்கள் உருவாகியமை, தொழிலாளர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வேறு வழிகளைத் தேடத்தொடங்குதல், இதனால் தேயிலை தொழிற்துறை மீதான ஈடுபாடு குறைவடைதல், வேறு தொழில்களை நாடுதல், நகர்ப்புற தொழில்கள் மீதான கவனம், தொழிலுக்காக கொழும்புக்கு இடப்பெயர்வு, வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுதல், புலம்பெயர்வு ஆகியன அதிகரித்தமை ஆகியனவற்றைக் குறிப்பிடலாம் (சு. தவச்செல்வன்:30). மலையகத்தில் மத்தியதர வர்க்கமானது இரண்டாயிரத்துக்குப் பின்னரேயே பெரும்படையாக எழுச்சிபெறுகின்றது. இவர்கள் தொழிலாளர்களிலிருந்து அந்நியமாகின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கின்ற நிலப்பகுதிகளிலிருந்து வெளியேறியதோடு அவர்களது பண்பாட்டிலிருந்தும் அந்நியமாயினர். இவற்றோடு மட்டுமல்லாது இலங்கையில் உலகமயமாக்களின் தாக்கம் இரண்டாயிரத்துக்குப் பின்பே மலையகத்தில் அதிகமாக உணரப்பட்டது. இவ்வாறான சமூக மாற்றங்கள் தொழிலாளர்களிடையே பல்வேறு சிக்கல் வாய்ந்த நிலைமைகளை உருவாக்கியதோடு தொழிலாளர்களை உதிரிகளாக்கின. தொழிற்சங்க போர்வைகளைப் பயன்படுத்திக்கொண்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மட்டுமே தக்கவைத்துக்கொண்ட அரசியல் கட்சிகள் மக்களது வாக்குகளை சேகரிப்பதிலேயே கவனம் செலுத்தத் தொடங்கின. பெருந்தோட்டங்களில் சடுதியாக இடம்பெற்ற இந்த இடப்பெயர்வுகள், புலம்பெயர்வுகள் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் யுவதிகளையும் கொழும்பு போன்ற பிரதான நகரங்களுக்கு தொழில்தேடிச் செல்வதற்கு வழிவகுத்தன. இவ்வாறு தொழில் நாடி இடம்பெயர்ந்தவர்கள் பலர் அப்பகுதிகளில் நிரந்தரவாசிகளாகவும் மாறினர். இரண்டாயிரத்துக்குப் பின்னர் மலையகச் சமூகத்தில் கல்வி சார்ந்த விழிப்புணர்வுகள் ஏற்பட்டமையால் பாடசாலைக் கல்வி வளர்ச்சியேற்பட்டது. பெருந்தோட்ட மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் அதிகம் நாட்டம் கொண்டமையால் பாடசாலைக் கல்வியில் வெற்றிபெற்ற சிலர் உயர்கல்வி நாடிச்சென்று பல்வேறு பதவிநிலைகளைப் பெற்றனர். கல்விநிலை சார்ந்த இந்தச் சமூக நகர்வானது (Social Mobility) ஒரு சில மாற்றங்களைக் கொண்டுவந்தன. குறிப்பாக அதிகமான ஆசிரியர்களைக் கொண்டதொரு மத்தியதர வர்க்கம் உருவானது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடரும் உயர்கல்வி வாய்ப்புகளை சிலர் பெற்றாலும் பெரும்பாலான மாணவர்கள் இடைவிலகினர். இடைவிலகியவர்கள் தோட்டங்களைவிட்டு கொழும்பு போன்ற புறநகர் பகுதிகளில் தொழில் புரிந்தனர். சிறுவர் தொழிலாளர்கள் (Child Labour) என்றதொரு பிரிவினரும் இதில் உருவாகினர். எஞ்சியோர் தோட்டத் தொழிற்துறையிலேயே பேர் பதிந்து கொண்ட புதிய தலைமுறைத் தொழிலாளர்களாயினர். மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகள் தோட்டத் தொழிற்துறை சார்ந்த தொழிலாளர்களது எண்ணிக்கையில் பெருமளவான வீழ்ச்சியை ஏற்படுத்தியது. இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் இடம் பெற்ற இவ்வாறான சமூக மாறுதல்களை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு இலக்கியப் படைப்புகள் வெளிவந்தன. குறிப்பாக மு. சிவலிங்கத்தின் ‘ஞானப்பிரவேசம்’, ‘விட்டில் பூச்சிகள்’, ‘மார்கழிப்பனி’, ‘நிலைமை கொஞ்சம் மாறும்போது’ போன்ற சிறுகதைகளை உள்ளடக்கிய ‘ஒரு விதைநெல்’ (2005), தெளிவத்தையின் சிறுகதைகள் மற்றும் பதுளை சேனாதிராஜாவின் ‘குதிரைகளும் பறக்கும்’ (2014) போன்ற சிறுகதைகளில் கொழும்புக்கு வேலைக்குச் சென்று அவ்வீடுகளில் பிரச்சினைக்கு உள்ளாகின்ற சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் பிரச்சினைகளும், வீட்டு வேலைக்குச் செல்கின்ற பெண்கள் பற்றிய பிரச்சினைகளும் பேசப்பட்டுள்ளன.
புதிய தலைமுறை எழுத்தாளர்கள்
இருபத்தோராம் நூற்றாண்டில் முதலாவது தசாப்த காலப்பகுதியில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியின் காரணமாக மலையக இலக்கியத்துக்கு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் சிலர் பங்களிப்புச் செய்யத் தொடங்கினர். நவீன இலக்கிய வாசிப்பு, புதிய இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய தேடல், உயர்கல்வித் தொடர்புகள் மற்றும் இக்காலப்பகுதியில் இயங்கிய சமூக அரசியல், இலக்கிய இயக்கச் செயற்பாடுகளின் உந்துதல் முதலிய காரணிகளால் இவர்கள் உலகளாவிய இலக்கிய படைப்புகளை வாசித்து தமது படைப்புத்தளத்தை உருவாக்க முயற்சித்தனர். குறிப்பாக மாரிமுத்து சிவகுமார், வே. தினகரன், சண்முகம் சிவகுமார், சு. தவச்செல்வன், சிவனு மனோஹரன், பிரமிளா செல்வராஜா, மு. கீர்த்தியன், செ.ஜெ. பபியான், வே. கிருஸ்ணபிரியன், எட்டியாந்தோட்டை கருணாகரன், லுனுகலை ஸ்ரீ, எஸ்தர் லோகநாதன் போன்றவர்கள் இக்காலப்பகுதியில் இயங்கிவரும் புதிய தலைமுறை எழுத்தாளர்களாவர். புதிய தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பல்வேறு கோட்பாடுகளின் செல்வாக்கு காணப்படுகின்றன. குறிப்பாக மார்க்சியம், பெண்ணியம், பின்நவீனத்துவக் கோட்பாடுகளின் செல்வாக்கு இவர்களது எழுத்துக்களில் வெளிப்படுவதை அவதானிக்க முடிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் மலையக மக்களிடையே இடம்பெற்ற உலகமயம் மற்றும் தனியார் மயமாக்கல் பிரச்சினைகளுடன் தொடர்புபட்ட வாழ்க்கை முறைகளின் பிரதிபலிப்புகளை இவ்வெழுத்தாளர்களின் படைப்புகளில் காணமுடிகிறது. இப்படைப்பாளிகளின் படைப்புகள் நூலுருவில் பின்னர் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது. மலைச்சுவடுகள் (மாரிமுத்து சிவகுமார்), சிவப்பு டைனோசர்கள், டார்வினின் பூனைகள் (சு. தவச்செல்வன்), ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடாங்கி, மீன்களைத்தின்ற ஆறு (சிவனு மனோஹரன்), குதிரைகளும் பறக்கும், உயிருதிர்காலத்தின் இசை (பதுளை சேனாதிராஜா), பீலிக்கரை, பாக்குபட்டை (பிரமிளா செல்வராஜ்), மல்லியப்பூ சந்தி (திலகர்), நாளை வரும் மழை (மு. கீர்த்தியன்), உயிர்த்தெழச் சொல்லுங்கள் (செ.ஜெ. பபியான்), மோட்ச முழக்கம் (லுனுகலை ஸ்ரீ), அவமானப்பட்டவனின் இரவு (எட்டியாந்தோட்டை கருணாகரன்), வேரின் பிரசவங்கள், மூதன்னையின் பாடல் (கிருஸ்ண பிரியன்) முதலான படைப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். புதிய தலைமுறை எழுத்தாளர்கள் இக்காலத்தில் மலையகத்தில் எழுதத் தொடங்கியிருந்தாலும் அறுபதுகள் தொடக்கம் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதோடு அவர்களது படைப்புகளும் வெளிவந்துகொண்டிருந்தன. குறிப்பாக மு. சிவலிங்கம், தெளிவத்தை ஜோசப், மாத்தளை மலரன்பன், மல்லிகை சி. குமார், இரா. சடகோபன், அல் அஸீமத் ஆகியோர் தொடர்ந்தும் எழுதிவருகின்றனர். இவர்களது எழுத்துக்களில் தற்கால அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் செயற்பாடுகளைப் பற்றிய விமர்சனங்கள் அதிகம் காணப்படுகின்றன. மு. சிவலிங்கம் (ஒரு விதைநெல்), மல்லிகை சி. குமார் (வேடத்தனம்), மல்லியப்பு சந்தி திலகர் (மல்லியப்பூ சந்தி) ஆகியோரது சமகாலப் படைப்புகளில் தமது அரசியல் தலைமைகள் மீதான எதிர்ப்பு, தலைவர்களின் ஏமாற்றுத்தனங்கள் போன்ற விடயங்களை எள்ளலுடன் முன்வைக்கும் உத்திமுறைகளை காணலாம்.
மலையகத் தமிழர்களது வரலாற்று நிலைப்பட்ட எழுத்துகள்
இரண்டாயிரமாம் ஆண்டுகளின் முதல் கால்நூற்றாண்டு எழுத்து முயற்சிகளில் குறிப்பிடத் தகுந்த புதிய விடயமாக இம்மக்களது வரலாற்று நிலைப்பட்ட எழுத்துக்களின் வரவைக் குறிப்பிடலாம். முன்னதாக எண்பதுகளில் சி.வி. வேலுப்பிள்ளை (நாடற்றவர் கதை), பீ.ஏ. காதர் (இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்) போன்றோர் மலையகத் தமிழர்களது வரலாற்றை எழுத ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாக இரண்டாயிரமாம் ஆண்டின் இரண்டாவது தசாப்தத்தில் மலையகத் தமிழர்களது வரலாற்றையும் அதன் மூலங்களையும் தேடும் முயற்சி இடம்பெற்றது. குறிப்பாக கோப்பிக்கால மக்கள் வாழ்வியல் மற்றும் வரலாற்றை ‘கண்டிச் சீமையிலே’ என்ற நூலினூடாக இரா. சடகோபன் எழுதியுள்ளார். ‘மலையகத் தமிழர் வரலாறு’ என்று நேரடியாகவே சாரல்நாடன் எழுதியுள்ளார்.
மலையகத் தமிழர்களது முதலாவது நூல், முதல் பத்திரிகை எழுத்து, முதல் பெண் ஆளுமை, முதல் நாவல் எழுத்து போன்றவற்றை தேடி எழுதுகிறார் மு. நித்தியானந்தன். ‘தூரத்துப் பச்சை’ நாவலுக்குப் பின் மலையகத் தமிழர்களது வரலாற்றை புனைவாக்கியுள்ளனர் சிலர். மு. சிவலிங்கத்தின் ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ மற்றும் மாத்தளை சோமுவின் ‘கண்டிச் சீமை’ ஆகிய நாவல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. எனினும் மாத்தளை சோமுவின் நாவல் மலையக மக்களது வரலாற்று எழுதுகைக்கு முரணாகவே அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. மேற்குறிப்பிட்ட வரலாற்றுநிலைப்பட்ட எழுத்துகள் புனைவு (பஞ்சம் பிழைக்க வந்த சீமை, கண்டிச்சீமை) அபுனைவு (கண்டிச்சீமையிலே, கூலித்தமிழ்) ஆகிய இருநிலைப்பட்டவையாக அமைகின்றமை கவனிக்கத்தக்கது.
மலையக சமூகம் மற்றும் கலை இலக்கியம் தொடர்பான ஆய்வுத்துறை வளர்ச்சி
மலையகம் குறித்த பல்வேறு வகைப்பட்ட ஆய்வுத்துறைகளின் வளர்ச்சி இரண்டாயிரமாம் ஆண்டுகளுக்குப் பின்னரே மிகத்துரிதமாக இடம்பெறுகிறது. மலையக இலக்கியத்துடன் தொடர்புபட்ட விமர்சனங்கள் மற்றும் ஆய்வுகள், சமூக அரசியல் ஆய்வுகள், இலக்கியங்கள் குறித்த ஆராய்ச்சிகள், பண்பாட்டுத் துறை ஆய்வுகள் என பல்வேறு வகையில் விரிந்தன. இவை தனிப்பட்ட ஆய்வுகள், நிறுவனம் சார்ந்த ஆராய்ச்சிகள் என இருநிலைப்பட்டன. மேற்குறிப்பிட்ட ஆய்வுகளை பல்கலைக்கழகங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பெரிதும் மேற்கொண்டிருந்தன. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அந்தனி ஜீவா, சாரல்நாடன், க. அருணாசலம் போன்றோரால் ஆரம்பிக்கப்பட்ட மலையக இலக்கியம் பற்றிய ஆய்வுகள் சி.வி பற்றிய எழுத்துகள், நடேசய்யர் பற்றிய ஆய்வுகள் முதலியவற்றோடு மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள், மீனாட்சியம்மாள் பற்றிய அறிமுகம், வாய்மொழி இலக்கிய ஆய்வுகள் என்று தொடர்ந்தன. மலையக இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளுடன் கூடிய விமர்சனங்களையும் இக்காலப்பகுதியில் இணைத்து மேற்கொண்டவராக லெனின் மதிவானம் விளங்குகிறார். ‘ஊற்றுக்களும் ஓட்டங்களும்’, ‘மீனாட்சியம்மாள் முதல் மார்க்ஸிம் கார்க்கி (2012)’, ‘மலையகம் தேசியம் சர்வதேசம் (2010)’ என்பவை மதிவானத்தின் குறிப்பிடத்தக்க நூல்களாகும். வ. செல்வராஜ் , ஜெ. சற்குருநாதன், மொழிவரதன் போன்றோரும் இலக்கிய மேடைகளில் ஆய்வுகளை மேற்கொண்டதோடு சில சஞ்சிகைகளிலும் விமர்சனங்களை எழுதி வருகின்றனர். இருபத்தோராம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் எழுதத் தொடங்கிய பெ. சரவணகுமார், சு. தவச்செல்வன், எம்.எம். ஜெயசீலன் ஆகியோரது எழுத்துகள் முன்னைய ஆய்வாளர்களிலிருந்து வேறுபட்ட தளங்களை நோக்கி விரிவடைவதை இக்காலத்தில் அவதானிக்க முடிகிறது.
மலையக இலக்கிய ஆய்வுத்துறையில் இயங்கும் மேற்குறிப்பிட்டோரின் எழுத்துக்களைத் தவிர்த்து இலங்கையிலுள்ள தமிழ் பல்கலைக்கழகங்களில் பட்டக்கல்வி மாணவர்களின் ஆய்வேடுகள் மலையகக் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கூத்துக்கள் என்று பரந்து விரிந்த தளங்களிலும் தலைப்புகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்நிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்ட ஆய்வேடுகளில் இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் பெரும்பாலான ஆய்வுகள் நூல் வடிவம் பெறாமையாலும் வெளியிடப்படாமையாலும் அவை சமூக வாசிப்புக்குட்படுத்தப்படவில்லை. பல்கலைக்கழக புலமைநிலைப்பட்ட ஆய்வுகளில் குறிப்பாக மலையகக் கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகள் அதிகம் கையாளப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான கல்விசார் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை நிறுவன மயப்படுத்தப்பட்ட கல்விசார் கல்விப் பிரச்சினைகளுக்கே முக்கியத்துவமளித்துள்ளன. மாறாக மலையக சமூகநிலைப் பிரச்சினைகளோ, மக்கள் பிரச்சினைகளோ முன்னிலைப்படுத்தப்பட்ட தன்மை மிக மிகக் குறைவு.
பண்பாட்டுத்துறை ஆய்வுகள்
மலையக மக்களிடம் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்த கலை வடிவங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ச்சிபெற்று வடிவமாற்றம் பெற்றன. நாட்டார் பாடல், கும்மி, கோலாட்டம், ஒப்பாரி போன்ற வாய்மொழிப் பாடல் மற்றும் நடன வடிவங்களும் காமன்கூத்து, அர்ச்சுணன் தபசு, பொன்னர் சங்கர், பவளக்கொடி, காத்தவராயன் கூத்து, கெங்கையம்மன் கூத்து போன்ற கூத்து வடிவங்களும் காலமாற்றத்திற்கேற்பவும் மலையக புவியியல் அமைப்புக்கேற்பவும் வளர்ச்சி பெற்றிருந்தன. இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இக்கலைவடிவங்கள் தொடர்பான ஆய்வுகள் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக காமன் கூத்து பற்றிய கண்ணோட்டங்கள் பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படத் தொடங்கியன. சந்தனம் சத்தியநாதன், மாத்தளை வடிவேலன், அ. லெட்சுமணன், சோபனாதேவி, ஹரிஸ், பொன். பிரபாகரன் போன்றோரால் காமன் கூத்துப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்பண்பாட்டு நிலைப்பட்ட ஆய்வுகளில் பொன். பிரபாகரனின் ‘காமன்கூத்து ஓர் அரசியல் பொருண்மிய ஆய்வு’ என்ற நூலானது மலையகத் தமிழர்களது தேசிய கூத்தாக காமன் கூத்தை நிறுவும் முயற்சியாக அமைவதோடு மலையகத் தேசியத்தை நிறுவதற்கான அடிப்படை கூறுகளை காமன்கூத்து எவ்வாறு கொண்டிருக்கிறது என்பது பற்றியதுமாகும்.
மலையகப் பண்பாட்டுத்துறை ஆய்வுகளில் 1993ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வு நூல்கள் மிக முக்கியமானவை. ந. வேல்முருகு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ‘மலையக மக்களின் சமய நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும்’ என்ற ஆய்வு நூல் மலையக மக்களது சமய வழிபாட்டு நம்பிக்கைகள் அவர்களின் வாழ்க்கை மரபுகளுடன் ஒன்றிணைந்து காணப்படும் தன்மைகளை வெளிக்கொணர்ந்தது. தொடர்ச்சியாக இதே ஆண்டில் உதயம் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும்’ என்ற ஆய்வுத்தொகுதி பண்பாட்டுத்துறை குறித்த புதிய திசைவெளிகளை காண்பிப்பதாய் அமைந்தது. குறிப்பாக பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்வாய்வுகள் ஒன்பது ஆய்வாளர்களின் பதினொரு வெவ்வேறு கலை மற்றும் பண்பாடு குறித்த தேடலாகவும் பதிவுகளாகவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முடிவுரை
மலையகத் தமிழர்களது இருநூறு வருட வரலாறானது கோப்பிக் காலம் முதல் இன்றுவரை (1823 – 2023) கணிக்கப்பட்டு ஒரு காலக்கணக்கெடுப்பு இக்கட்டுரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்துச் சமூக நிலையையும் அச்சமூக நிலைமைகளை அக்காலகட்டத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் எவ்வாறு பிரதிபலித்து வந்துள்ளன என்பதையும் இக்கட்டுரை மதிப்பீடும் செய்துள்ளது. இம்மதிப்பீட்டில் முடிவுரையாக சில கருத்துகளை முன்வைக்க வேண்டியுள்ளது. ஆங்கிலத் துரைமாரின் எழுத்துக்களிலிருந்தே மலையக எழுத்துகள் தொடக்கம் பெற்றுள்ளமையை இத்தேடலின் வழியாக உறுதிசெய்துகொள்ள முடிகிறது. குறிப்பாக கோப்பிக் கால மலையகத் தமிழர் சமூகத்தின் நிலைமைகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாக துரைமாரின் எழுத்துகளே நமக்கு கிடைக்கின்றன. இரண்டாவதாக, மலையகத் தொழிலாளர்கள் தொழிற்சங்கமாக சேர்ந்து இயங்கத் தொடங்கிய காலத்திலேயே அவர்கள் மத்தியில் இலக்கிய உருவாக்கமும் இடம்பெறத் தொடங்கிவிட்டன. இன்று வரையிலும் கூட மலையகத் தமிழர்களது பிரச்சினைகளை அல்லது மக்கள் இலக்கியப் பணிகளை மேற்கொண்டதில் அதிக பங்கு மலையகத் தொழிற்சங்கவாதிகளுக்கே உண்டு. மலையக இலக்கியத்தின் செழுமையான பக்கங்களை வளர்த்தெடுத்தவர்கள் தொழிற்சங்கவாதிகளாகவோ அல்லது அதனுடன் தொடர்புபட்டவர்களாகவே அமைகின்றனர். மலையக மக்கள் வரலாறும், தொழிற்சங்க அரசியல் வரலாறும், இலக்கிய வரலாறும் ஒன்றாகவே பயணிக்கின்றன. மலையக அரசியலின் தொடக்கத்தை இருநிலைப்பட்டதாகவே அறிய முடிகிறது. தொழிற்சங்க உருவாக்கத்துடன் கூடிய மக்கள் அரசியல் ஒரு தொடக்கமென்றால், இந்திய நலன்பேணும் முதலாளித்துவ நலன் சார்ந்த அரசியல் மற்றொரு தொடக்கம். முதலாவது தொடக்கம் இடையிலேயே முறியடிக்கப்பட்டு இரண்டாவது அரசியல் தளம் மேலோங்கி வந்திருந்தாலும் இடதுசாரி பாரம்பரியத்துடன் கூடிய மக்கள் அரசியல் ஒவ்வொரு காலத்திலும் செயற்பட்டே வந்துள்ளது. அது இலக்கியத்திலும் பேசப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மலையக அரசியலின் வரலாற்றுப் போக்கில் சில இடங்களில் ஏற்பட்ட உடைவுகளே அரசியல் ரீதியாக தீர்க்கமான முடிவுகளை எட்ட முடியாமைக்கான காரணமாகவும் அமைந்துள்ளன.
இரண்டாயிரத்துக்கு பின்னரான சமூக மாற்றங்கள் சடுதியானவை. இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் காலாண்டை எட்டியிருக்கும் இருபத்திரண்டு ஆண்டுகளில் மலைய இலக்கியத் துறையில் பன்முகத்தன்மை கொண்ட படைப்புகள், ஆய்வுகள் வெளிவந்திருந்தாலும் அவை குறித்து இங்கு விரிவாக நோக்கப்படவில்லை. குறிப்பாக இக்காலத்தில் மலையக கல்வித்துறை வளர்ச்சியுடன் இணைந்து ஆய்வுத்துறை வளர்ச்சிபெற்றமை விசேடத்துவ அம்சமாக கருதமுடிகிறது. இருநூறு வருடகால மலையக சமூகமும் இலக்கியமும் பற்றிய இக்காலக்கணக்கெடுப்பு ஒரு முன்னோடி முயற்சியாகவே அமைகிறது. இம்மதிப்பீட்டினை மேலும் விரிவுபடுத்தி நோக்கவும் இடமுண்டு.
சான்றாதாரங்கள்
- சடகோபன் இரா (2014), கண்டிச் சீமையிலே, கோப்பி கால வரலாறு (1823-1893) வீரகேசரி வெளியீடு.
- ஜெயவர்த்தனா. கு. (2009), இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம், தமிழில் க. சண்முகலிங்கம், குமரன் புத்தக இல்லம்.
- சாரல் நாடன் (2011), மலையகத் தமிழர் வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
- சிவராஜா அம்பலவாணர் (1997), இலங்கை வாழ் (இந்திய வம்சாவளி) மலையகத் தமிழரின் வரலாற்றின் ஆரம்பம் பற்றிய சில குறிப்புகள். மலையக தமிழாராய்ச்சி மாநாட்டு மலர்.
- வேலுப்பிள்ளை சி.வி (1983), மலைநாட்டு மக்கள் பாடல்கள், கலைஞன் பதிப்பகம்.
- நித்தியானந்தன். மு. (2014), கூலித்தமிழ், க்ரியா.
- மோகன்ராஜ். க. (2014) இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், ஈழ ஆய்வு நிறுவனம்.
- சாரல் நாடன். (2014), இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள், குமரன் புத்தக இல்லம்.
- ஜெயவர்த்தனா. குமாரி. (2011), இலங்கையின் இனவர்க்க முரண்பாடு, குமரன் புத்தக இல்லம்.
- நல்லம்மா (1928), மகளிரும் வாக்குரிமையும், இலங்கை இந்தியன் பத்திரிகைக் கட்டுரைகள், The Ceylon Indian.
- மீனாட்சியம்மாள், கோ.ந. (1940), இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை. கணேஷ் பிரஸ்.
- நடேசய்யர். கோ. (2017), இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம், மீள்பதிப்பு குமரன் புத்தக இல்லம்.
- நடேசய்யர். கோ. (1939), தொழிலாளர் சட்ட புஸ்தகம், கணேஷ் பிரஸ்.
- லெனின் மதிவானம் (2012), ஊற்றுக்களும் ஓட்டங்களும், பாக்கியா பதிப்பகம்.
- சாரல் நாடன் (2013), இலங்கைத் தமிழ்ச் சுடர் மணிகள், சி.வி. வேலுப்பிள்ளை, குமரன் புத்தக இல்லம்.
- அந்தனி ஜீவா (2005), மலையகத் தொழிற்சங்க வரலாறு, மலையக வெளியீட்டகம்.
- தவச்செல்வன். சு. (2016), கொலைச்சிந்தும் கலகக்குரலும், தாயகம் சஞ்சிகை.
- சாரல் நாடன் (2015), மலையக விடிவெள்ளி கோ.ந. மீனாட்சியம்மாள், குமரன் புத்தக இல்லம்.
- முத்துலிங்கம். பெ. (2012), தொகுப்பாசிரியர், மலையக முச்சந்தி இலக்கியம், பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், கயல்கவின் வெளியீடு.
- தவச்செல்வன். சு. (2019), புனைகதையும் சமூகமும், மழை வெளியீடு.
- சிவானந்தன். அரு. (2020), சென்று வருகிறேன் ஜென்ம பூமியே, பாக்யா பதிப்பகம்.
- பன்னீர் செல்வம், சி. (2006), ஒரு சாலையின் சரிதம், மக்கள் கண்காணிப்பகம், தமிழ்நாடு.
- கந்தையா. மு.சி. (2015), சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள், விடியல் பதிப்பகம்.
- தோழர் ஓ.ஏ. இராமையாவின் நிழலும் நிஜமும், (2018), தோழர் ஓ.ஏ. இராமையா ஞாபகார்த்த மன்றம்.
- மலரன்பன் (1989), கோடிச்சேலை.
- மலரன்பன் (2008), பிள்ளையார் சுழி, எஸ். கொடகே சகோதரர்கள்.
- முரளிதரன். சு. (1986), தியாக யந்திரங்கள், மலையக வெளியீட்டகம்.
- முரளிதரன். சு. (1988), கூடைக்குள் நேசம், மலையக வெளியீட்டகம்.
- முரளிதரன். சு. (2001) தீவகத்து ஊமைகள், மலையக வெளியீட்டகம்.
- தீர்த்தக்கரை கதைகள் (1995), நந்தலாலா வெளியீடு, அன்ன பதிப்பு.
- அருணாசலம். க. (1999), மலையகத் தமிழ் இலக்கியம், தென்றல் பப்ளிகேசன்.
- சாந்திகுமார். எல். (2022), காலமும் மனிதர்களும்.
- சாரல்நாடன் (2022), வானம் சிவந்த நாட்கள், குமரன் வெளியீடு.
- செவ்வொளி. (2016) மலையகத்தின் சமகால இலக்கிய பண்பாடு சார்ந்த சிந்தனை, ஆய்வரங்க சிறப்பு மலர், சென்.ஜோசப் கல்லூரி மஸ்கெலியா.