அறிமுகம்
இலங்கையில் கிமு. பத்தாம் நூற்றாண்டு முதலாகப் பரவிய பெருங்கற்காலப் பண்பாடு நாகரோடு தொடர்புடையது. அந்தப் பண்பாட்டினை நாகர் பரப்பினார்கள் என்பதையும் அவர்கள் தமிழ் மொழி பேசியவர்கள் என்பதையும் அப்பண்பாட்டு மக்களின் ஈமத் தலங்கள் சிலவற்றிலுள்ள ஈமக் கல்லறைகளின் கல்வெட்டுகளினால் அறிய முடிகின்றது.
எழுத்தின் பயன்பாடு அறிமுகமாகியதும் நாகர் ஈமக் கல்லறைகளிலே சொற்களையும் இரு வசனங்களையும் ஒரு கிரயாபூர்வமான முறையிலே பதிவுசெய்தனர். அவை நாகரைப் பற்றியவை. தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. தமிழ்ப் பிராமி வடிவங்களில் எழுதப்பட்டவை. கல்லறைகளில் மட்டுமன்றி ஈமத் தாழிகளிலும் அவற்றைப் பதிவு செய்தனர். பதவிகம்பொலவிற் காணப்படும் பிரமாண்டமான பள்ளிப்படை (Dolmen), இவ்வன்கட்டுவவிலுள்ள கல்லறைகள், அங்குள்ள ஈமத்தாழிகள், அவற்றிலே படையல்களை வைப்பதற்குப் பயன்படுத்திய பல்வேறு வகையான மட்கலன்கள் ஆகியன இந்த வழமைக்குரிய முன்னுதாரணங்களாகும். குடித்தொகையில் நாகர் மேலோங்கியிருந்த பகுதிகள் எல்லாவற்றிலும் இந்த முறை பொதுவழமையாகிவிட்டது.
மகாவம்சம் முதலான பாளி நூல்கள் யாழ்ப்பாணக் குடாநாடு, அதற்கண்மையிலுள்ள தீவுகள் ஆகியவற்றை நாகதீப என்ற பெயராற் குறிப்பிடுகின்றன. அதனை மணிமேகலை நாகநாடு எனக் குறிப்பிடுகின்றது. ஆனால் அது “ணாகதீவு” என்னும் பெயரால் அங்கு வாழ்ந்தவர்களிடையே வழங்கியது என்பதை வல்லிபுரம் பொன்னேட்டின் மூலம் அறியமுடிகின்றது.
நாகரிக வளர்ச்சிக்கு ஏதுவான உற்பத்தி முறையினையும் தமிழ் மொழியினையும் இலங்கையில் அறிமுகம் செய்த நாகர் மூலமாகவே நாக வழிபாடும் சிவலிங்க வழிபாடும் பரவலாயின. கிமு. மூன்றாம் நூற்றாண்டிலே பௌத்த சமயம் பரவியதும் அதில் நாகர் ஈடுபாடு கொண்டனர். இலங்கையிலுள்ள பிராமிக் கல்வெட்டுகளில் தொண்ணூறுக்கும் மேற்பட்டனவற்றில் நாகர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சமுதாயக் கட்டமைப்பிலே பல்வேறு நிலைகளிலுள்ள நாகர் பௌத்த சங்கத்தாருக்கு வழங்கிய நன்கொடைகளைப் பற்றிய குறிப்புக்கள் அவற்றிலே பதிவுசெய்யப்பட்டுள்ளன. பௌத்த துறவிகளுக்கு உறைவிடங்களாகக் குகைகளை நாகர் வழங்கியுள்ளனர். அவர்களிற் சிலர் அரசர்; வேறுசிலர் கமஞ்செய்வோர் (கமிக); இன்னுச் சிலர் உலோகத் தொழில் புரிவோர். நாகநகர், நாககுலம் என்பன பற்றிய குறிப்புகளும் கல்வெட்டுகளிற் காணப்படுகின்றன.
நாகரிற் சிலர் கப்பலோட்டுதல், கடல்வழி வாணிபம் என்பவற்றில் ஈடுபட்டதால் அந்நாட்களிற் பரதகண்டத்திலே தொடர்பு மொழியாக விளங்கிய பிராகிருத மொழியினையும் பயன்படுத்தினார்கள். குடித்தொகையிலே இனக்கலப்புக் கூடுதலாக ஏற்பட்டிருந்த பிரதேசங்களில் நாகர் பொதுமொழியான பிராகிருதத்தைப் பயன்படுத்தினார்கள். பிராகிருதமே பௌத்த சமயத்தின் இலக்கிய மொழி என்பதாலும் போதனா மொழி என்பதாலும் அதன் செல்வாக்கு இலங்கையின் பெரும் பகுதியில் மேலோங்கியது. அதன் விளைவாக மொழிமாற்றம் ஏற்பட்டது. அது ஆதி வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்டுவிட்டது. நாகரின் பேச்சுவழக்கான தமிழ் மொழியும் இடைக்கற்கால மக்கள் பேசிய மொழியும் அழிந்துவிட்டன. ஆயினும் நாகர் வழங்கிய நன்கொடைகளைப் பதிவு செய்யும் கல்வெட்டுகளிலே பல தமிழ்ச் சொற்கள் பிராகிருத மயமான கோலத்திற் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் பதவிநிலை, நிலவியல், நீரியல் என்பன தொடர்பானவை.
இலங்கைத் தமிழரின் வரலாற்று ரீதியான வதிவிடங்களான வட, கிழக்கு மாகாணங்களில் அடங்கிய நிலப்பகுதிகளில் வேறொரு வகையான மொழிமாற்றம் ஏற்பட்டது. அங்கு தமிழ் மொழியின் செல்வாக்கு மேலோங்கிவிட்டது. பழங்குடியினரான யக்கரின் மொழியும் தொடர்பு மொழியான பிராகிருதமும் வழக்கொழிந்துவிட்டன.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை அங்கு மொழிமாற்றம் எதுவும் நிகழவில்லை பிராகிருதம் அங்கு ஒரு ஆவணமொழியாகவும் பயன்படுத்தப்படவில்லை. வல்லிபுரம் பொன்னேடு மட்டுமே புறநடையாக உள்ளது. அங்கு புழங்கிய பெயர் பொறித்த உலோகப் பொருட்கள் ஏராளமானவை. அவற்றுட்சில காலத்தால் வல்லிபுரம் பொன்னேட்டிற்கும் முற்பட்டவை. பௌத்தப்பள்ளிக்கு உரியனவும் அவற்றுள் அடங்கும்.
யாழ்ப்பாணத்திலே பௌத்த சமயம் நாகர் சமுதாயத்திலே பரவியது. அது பெருங்கற்காலப் பண்பாட்டு மரபுகளை ஆதாரமாகக் கொண்ட மக்களிடையே பரவியது. அந்தப் பண்பாட்டை நாகரே அங்கு பரப்பினார்கள். அதனால் அங்கு தமிழ் மொழி பேச்சுவழக்கு மொழியாக வழங்கியது. அந்த மொழியைப் பேசியவர்களே பௌத்தராயினர். அதனால் பௌத்த கட்டுமானங்களிலும் பௌத்தப் பள்ளிகளில் வாழ்ந்தவர்களின் பாவனைப் பொருட்களிலும் வழிபாட்டுச் சின்னங்களிலும் பெயர்களையும் வசனங்களையும் தமிழில் எழுதியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் ஆதிகாலத்தில் நிலவிய பௌத்தம் பற்றிப் பேசுகின்ற பொழுது இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். பௌத்த சமய சின்னங்களில் எழுதப்பட்ட பெயர்களும் வசனங்களும் நாகர் சமுதாயத்தின் பாரம்பரியமானவை. அவை ஆதி வரலாற்றுக் காலத்தில் நிலைபெற்ற பெருங்கற்காலப் பண்பாட்டின் அம்சமானவை. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையிலே பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் கந்தரோடையில் மிகுந்து காணப்படுகின்றன. அதேபோல தமிழ்ச் சொற்களும் பெயர்களும் எழுதிய பௌத்த சமய சின்னங்களும் அங்குதான் பரவலாகக் காணப்படுகின்றன. மேலும் பெருங்கற்பண்பாட்டுக் காலத்து ஈமக் கல்லறைகளிற் காணப்பட்ட இரு தமிழ் வசனங்களும் கந்தரோடையிலுள்ள தூபிபோன்ற கட்டுமானங்களின் அடித்தளங்களில் அமைக்கப்பட்டுள்ளமை ஆய்வாளரதும் ஆர்வலரதும் கவனத்துக்கு உரியது.
இலங்கையிலே ஆதிகாலம் முதலாகத் தமிழ்மொழி பேசும் சமூகங்களிடையிற் பௌத்த சமயம் பெற்றிருந்த செல்வாக்கினைப் பற்றிய புரிந்துணர்வு இந்நூற்றாண்டு தொடங்கியதன் பின்பு கணிசமான அளவில் முன்னேற்றங் கண்டுள்ளது. அது இங்குள்ள பெருந்தொகையான தமிழ்ப்பிராமிக் கல்வெட்டுகள் அடையாளங் காணப்பட்டமையின் விளைவாகும். அதன் பலனாக மறைந்தும் மறந்தும் போய்விட்ட ஒரு வரலாற்றை மீட்டுக்கொள்ள முடிகின்றது.
மகாவம்சம், மணிமேகலை போன்ற நூல்களும் பிராகிருத மொழியிலுள்ள பிராமிக் கல்வெட்டுகளும் பெயர்கள் பொறித்த பௌத்த சமய வழிபாட்டுச் சின்னங்கள், சேதியங்கள் போன்ற கட்டிடங்களின் அழிபாடுகளும் மற்றைய ஆதாரங்களாகும். இவை பெரும்பாலும் ஆதிவரலாற்றுக்காலம் (கிமு.300–கிபி.500) தொடர்பானவை.
எட்டாம் நூற்றாண்டு முதலான காலத்தைப் பொறுத்தவரையில் தமிழ்மொழிக் கல்வெட்டுகள் முதன்மை பெறுகின்றன. அவற்றில் விபரங்கள் கூடுதலாகக் கிடைக்கின்றன. இதுவரை எல்லாமாகப் பௌத்த சமயம் தொடர்பான 27 கல்வெட்டுகள் அடையாளங்கண்டு, அவற்றின் வாசகங்களும் மைப்படிகளின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிலே கல்வெட்டு எழுதப்பட்ட காலத்தில் ஆட்சிபுரிந்த அரசனின் பெயர், அவனது ஆட்சியாண்டு, நன்கொடை வழங்கியவரின் பெயர், அதனைப் பெற்றுக் கொண்ட நிறுவனத்தின் பெயர், அது அமைந்திருந்த இடம் என்பன பற்றிய விபரங்கள் சொல்லப்படும். அவற்றின்மூலம் பௌத்தப்பள்ளிகளுக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகளைப் புரிந்து கொள்ளமுடியும். அத்தகைய தமிழ்க் கல்வெட்டுகள் திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிற் கூடுதலாகக் கிடைத்துள்ளன.
நாகரும் பௌத்த சமயமும்
யக்கரும் நாகரும் இலங்கையின் ஆதியான குடிகளாவர். தொல்லியற் சான்றுகளின் அடிப்படையில் அவர்களை முறையே இடைக்கற்கால (Mesolithic Culture) பண்பாட்டு மக்கள், பெருங்கற்கால, ஆதி இருப்புக்காலப் பண்பாட்டு (EIAC) மக்கள் என அடையாளங் காணலாம். இடைக்கற்காலப் பண்பாட்டு மக்களான யக்கர் இலங்கையில் கிமு. 28,000 வருடங்களில் வாழ்ந்தனரென்று கொள்ளப்படும்.
இலங்கையில் ஆதி இரும்புக்காலப் பண்பாடு கிமு. ஒன்பதாம் நூற்றாண்டளவிற் பரவத்தொடங்கியது. அது பெரும்பாலும் தமிழகத்துக் கரையோரங்கள் வழியாகப் பரவியது. நாகர் தமிழ்மொழி பேசியவர்கள் என்பது ஆதி இரும்புக்காலப் பண்பாட்டின் அடையாளங்களான ஈமக் கல்லறைகளிலுள்ள கல்வெட்டுகளினால் உறுதியாகின்றது. பதவிகம்பொலவிற் காணப்படும் பள்ளிப்படை, இவ்வன்கட்டுவ என்னுமிடத்திலுள்ள ஈமக் கல்லறைகள் என்பவற்றிலுள்ள கல்வெட்டுகள் இதற்கான ஆதாரங்களாகும். அவை தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றை ஆதியான தமிழ்ப் பிராமி வடிவங்களில் எழுதியுள்ளனர்.
அந்தக் கல்வெட்டுகள் நாகரைப் பற்றியவை. அவற்றில் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த வேளிரின் பெயர்கள் இரு சிறிய வசனங்களில், மீண்டும் மீண்டும், கிரயாபூர்வமாக மேல்வருமாறு எழுதப்பட்டிருக்கும்:
வேள் ணாகன் மகன் வேள் கண்ணன்
வேள் கண்ணன் மகன் வேள் ணாகன்.
இவ்வன்கட்டவவிலுள்ள கல்லறைகளில் வைக்கப்பட்டிருந்த மட்கலன்களின் வெளிப்புறத்தில் இவை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளன. ஈமக் கல்லறைகளிலுள்ள வசனங்களை நாகர் வீட்டுப்பாவனைப் பொருட்கள், பொதுப் பாவனைக்குரிய பொருட்கள், வழிபாட்டுச் சின்னங்கள் முதலானவற்றில் எழுதியுள்ளமை விநோதமானது.
கட்டுமானப் பொருட்களான தூண்தாங்கு கற்கள், நீர்வினியோகம் தொடர்பான கிணற்றுப்பிட்டி, மடு, ஏரி போன்றவற்றின் அணைக்கட்டுகள், செக்கு, உரல், அம்மி-குளவி, மட்கலன்கள், கட்டுமானங்களின் அடித்தளங்கள் முதலானவற்றில் அவற்றைப் பதித்துள்ளனர். அது பரதகண்டத்துச் சமுதாயங்களில் அவர்களுக்கு மட்டும் சிறப்பாகவுரிய வழமையாகும்.
நாக வழிபாடு சிவலிங்க வழிபாடு என்பன நாகர்மூலமாவே இலங்கையிற் பரவலாகின. சிவலிங்கம், திருசூலம், வேல் போன்ற சைவசமய சின்னங்களும் ஸவஸ்திக வடிவமும் ஆதி இரும்புக் காலத்து மட்கலங்களில் அமைந்த குறியீடுகளில் இடம்பெற்றுள்ளன. அத்தகைய மட்கலவோடுகள் தமிழகத்திலும் இலங்கையிலும் கிடைத்தள்ளன. இலங்கையிற் பௌத்த சமயம் பரவிய பின்பு நாகரிற் பலர் அதில் ஈடுபாடு கொண்டனர். குடியிருப்புப் பகுதிகளிற் பௌத்த சின்னங்களை அமைத்து வழிபாடு செய்தனர். அவர்கள் வாழ்ந்த இடங்களில் நாகவழிபாடு, சிவலிங்க வழிபாடு என்பவற்றுக்குரிய சின்னங்கள் காணப்படுகின்றன. நாகவழிபாட்டினர், சைவர், பௌத்தர் என்ற வேறுபாட்டு உணர்வுகள் அக்காலத்தில் வெளிப்படவில்லை. அதனால் வெவ்வேறான முறைகளை அவர்களாற் சமயபேதமின்றிப் பயன்படுத்த முடிந்தது.
பொதுவான கடவுட் பெயர்களும் தலப்பெயர்களும்
நாகர் ஐந்தலை நாகவடிவத்தைக் கடவுளின் சின்னமாக வழிபட்டனர். அதனை மணிணாகன் என்று குறிப்பிடுவது வழமை. சிவலிங்க வழிபாட்டிலும் பௌத்த சமய வழிபாட்டிலும் இடம்பெறும் வழிபாட்டுச் சின்னங்களிலும் அதே பெயரை எழுதியுள்ளனர். நாகர் அமைத்த ஐந்தலை நாக சிற்பங்களிற் பெரும்பாலானவற்றில் மணிணாகன் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். அதே போல புத்தர் படிமங்களிலும் புத்தர் பாதம், சேதியம் போன்றவற்றிலும் அந்தப் பெயரைப் பொறிப்பது நாகரின் வழமையாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குசலான் மலையின் அடிவாரத்திலே ஐந்தலை நாகவடிவம், புத்தர் பாதம் என்பனவற்றின் உருவங்கள் ஒன்றின் அருகில் மற்றொன்றாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடற்குரியது. இரண்டிலும் மணிணாகன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. நாகவழிபாட்டு முறையினைப் பின்பற்றிய தமிழ் மொழி பேசும் நாகரிடையில் பௌத்த சமயம் செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கு இவ்விரு வழிபாட்டுச் சின்னங்கள் அடையாளமாகும்.
நாகரின் வேறுபட்ட சமய வழிபாட்டுச் சின்னங்கள் வேறு தலங்களிலும் ஒரே இடத்தில் இருந்தன. மட்டக்களப்பு மாவட்டத்துக் கோவில்குளம் என்னுமிடத்திலுள்ள தலமொன்றில் லிங்க வடிவம், புத்தர் படிமம், ஐந்தலை நாக உருவம் ஆகியன கிடைத்தள்ளமை குறிப்பிடற்குரியது. அதேபோல, கிளிநொச்சி மாவட்டத்து உருத்திரபுரத்தில், ஏறக்குறைய 18 நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட சைவ வழிவாட்டுச் சின்னமாகிய லிங்கம், நாகவழிபாட்டுச் சின்னமாகிய ஐந்தலை நாக வடிவம் என்பனவும் பௌத்த பள்ளியொன்றின் கட்டுமானத்தின் அடையாளங்களும் இன்றும் காணப்படுகின்றன. அவை ஒரு சிறிதளவான நிலப்பரப்பிற் காணப்படுகின்றன. பௌத்த பள்ளியின் தூண்துண்டம் ஒன்றில் நாகபந்த வடிவம் தெரிகின்றது. நாகர் அமைத்துள்ள கட்டுமானங்கள் அனைத்திலும் அவர்களின் குலமரபுச் சின்னமாகவும் வழிபாட்டுச் சின்னமாகவும் விளங்கிய நாக வடிவம் அமைக்கப்பட்டிருக்கும்.
நாகர் தாந்தாமலையில் உருவாக்கிய பௌத்தப் பள்ளியின் தூண்கள் சிலவற்றில் நாகவடிவத்தைச் செதுக்கியுள்ளனர். வழிபாட்டுக்குரிய தேவர்களையும் புத்தர், போதிசத்துவர் முதலானோரையும் வழிபாட்டுச் சின்னங்களையும் பொதுமையில் மணிணாகன் என்று குறிப்பிட்டதைப் போன்று வழிபாட்டு நிலையங்களான கோட்டங்கள் எல்லாவற்றையும் மணிணாகன் பள்ளி என்று நாகர் குறிப்பிட்டனர். அவற்றிலே புழங்கிய கலன்களையும் அவ்வாறு குறிப்பிட்டடனர்.
மணிணாகன் பள்ளி என்ற பெயர் எழுதிய தொல்பொருட் சின்னங்களை வந்தாறுமூலையிலுள்ள அளவிற் சிறிய சிவன்கோயில், அம்மன் கோயில் என்பவற்றிலே தான் முதன் முதலாக அடையாளங் காணமுடிந்தது. அங்குள்ள சிவன்கோயில் வளாகத்தில் நிலத்திலே கிடந்த உருளை வடிவமான தூண்துண்டம் ஒன்றில் மணிணாகன் பள்ளி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை இலகுவாக அடையாளங் காணமுடிந்தது. இரண்டாவது தடவை அதனைப் பார்க்கச் சென்றபொழுது, அதன் கோலம் உருமாறிவிட்டது. சிறிய கோட்டமொன்றை அமைத்து, அதனை அதில் லிங்கமாகப் பிரதிஷ்டை செய்துள்ளனர். அதிலே நின்ற கோலமான சிறுத்தைப்புலியின் வடிவமும் தமிழ்ப் பிராமி வடிவங்களில் எழுதிய மணிணாகன் பள்ளி என்ற பெயரும் தெளிவாகத் தெரிகின்ற சிவன் கோயிலில் வரலாற்றுச் சிறப்புடைய வேறிரு சின்னங்களையும் காணமுடிந்தது. அவற்றிலொன்று அளவிற் சிறிய நந்தியின் சிற்பம். அதில் மணிணாகன் என்ற பெயர் காணப்படுகின்றது. மூன்றாவது உருப்படி, பித்தளை வார்ப்பான கைவிளக்கு. அதிலே மணிணாகன் பள்ளி என்ற பெயர் ஈரிடங்களில் உலோகக் கருவியினால் வெட்டப்பட்டுள்ளது. மணிணாகன் பள்ளி என வழங்கிய கோட்டத்திற்குரிய பொருள் என்பதால் அதன் பெயரை விளக்கிற் பொறித்துள்ளனர். அவ்வாறு பெயரிடப்பட்ட விளக்குகளும் வேறு வகையான பொருட்களும் வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள பலவிடங்களிற் கிடைத்துள்ளன.
இதுவரை நாகரின் பாவனைக்குரிய பொருட்களில் மணிணாகன், மணிணாகன் பள்ளி என்ற பெயர்களையும் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த வேளிரான நாகரின் பட்டப் பெயர்களையும் குறிப்பிடும் இரு சிறிய வசனங்களும் அமைக்கப்பட்டிருக்கும் என்பதை இதுவரை கவனித்தோம். இவை அண்மைக்கால ஆய்வுகளின் மூலம் கிடைத்த விபரங்கள். பலருக்கு இது இன்னும் புரிந்துகொள்ள முடியாத விடயம்.
இலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளிற் பௌத்த சமயம் தொடர்பான புராதனமான வரலாற்றுச் சின்னங்கள் காணப்படுகின்றன. வன்னியில் அவை மிகக் கூடுதலான அளவிற் கிடைக்கின்றன. நாகரின் வழிபாட்டுச் சின்னங்களான நாக சிற்பங்களும் மிகவும் புராதனமான லிங்க உருவங்களும் அங்கு அதிகமாக உள்ளன. யாழ்ப்பாணத்திலே கந்தரோடையிற் பௌத்த கட்டடங்கள், சிற்பங்கள் என்பவற்றின் அடையாளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. திருகோணமலை மாவட்டத்திலுள்ள வெல்கம் விகாரை, ஸேருவல விகாரம் என்பன மிகவும் புராதனமானவை. அதேபோல மட்டக்களப்பு மாவட்டத்திலே தாந்தாமலையில் மிகப் புரதானமான பௌத்தப்பள்ளி ஒன்றின் அழிபாடுகள் பரந்து காணப்படுகின்றன. அவற்றை கலாநிதி குணபாலசிங்கம், நாவற்குடா இந்து கலாசார நிலையத்தின் பொறுப்பதிகாரியாகப் பணிபுரிந்த எழில்வாணி பத்மகுமார் போன்றோர் அடையாளங் கண்டுள்ளனர்.
வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள பௌத்த சமய சின்னங்களைப் பற்றிப் பிரித்தானிய நிர்வாக அதிகாரிகளான ஹியூ நெவில், ஹென்றி பார்க்கர், எச்.சி.பி.வெல் (Hugh Neville, Henry Parker, H.C.P.Bell)) முதலியோராற் சரியாக எதனையும் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கையிலுள்ள வரலாற்றாசிரியர்களாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவற்றிலுள்ள எழுத்துகளையும் சொற்களையும் அடையாளங் காணமுடியாதமையே அதற்குரிய காரணமாகலாம்.
இலங்கைத் தமிழர் கிமு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் முதலாக வாழ்ந்துவரும் பகுதிகளிற் காணப்படும் பௌத்தம் தொடர்பான சின்னங்கள் ஆதிவரலாற்றுக் காலத்தில் நாகர் அமைத்த பௌத்தம் தொடர்பான கட்டுமானங்களின் அடையாளங்களாகும். அவற்றிலே பதிக்கப்பட்டுள்ள சொற்கள், பெயர்கள் என்பவை தமிழ் மொழியில் அமைந்தவை. மணிணாகன், மணிணாகன் பள்ளி என்ற பெயர்களும் நாகரின் ஈமக்கல்லறைகள் முதலானவற்றில் எழுதப்பட்ட இரு தமிழ் வசனங்களும் அவற்றிலே பரந்து காணப்படுகின்றன. பிராகிருத மொழிச் சொற்களை அவற்றிலே காண முடியவில்லை. தமிழ்ப் பிராமி வடிவங்களில் அமைந்த தமிழ்ச் சொற்கள் பதிக்கப்பட்ட பௌத்த சின்னங்களும் பல நூற்றுக் கணக்கானவை. யாழ்ப்பாணத்திலே கிடைத்துள்ள ஆவணங்களில் வல்லிபுரம் பொன்னேடு மட்டுமே புறநடையானது. அது பிராகிருத மொழியில் அமைந்தது. ஆயினும், அதில் நாகதீவு என்னும் நாட்டுப் பெயரும் சிவிராயன் என்னும் குறுநில வேளின் பெயரும் பிராகிருத மயமான கோலத்தில் எழுதப்பட்டுள்ளன.
தொடரும்.