பெருங்கற்பண்பாட்டுக் கால இலங்கையில் தமிழரும் பௌத்தமும்
Arts
16 நிமிட வாசிப்பு

பெருங்கற்பண்பாட்டுக் கால இலங்கையில் தமிழரும் பௌத்தமும்

July 1, 2024 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

கி.மு.3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இலங்கையில் அறிமுகமாவதற்கு முன்னர் இங்கு நிலவிய பெருங்கற்காலப் பண்பாட்டுடன் பொதுவானதொரு பண்பாடு இலங்கை முழுவதிலும் காணப்பட்டது. இப்பண்பாட்டின் பரவல், செறிவு, வளர்ச்சி, அவற்றின் வளங்கள் என்பன இடத்திற்கு இடம் வேறுபட்டு காணப்பட்டமைக்கு அவ்வவ்விடங்களில் காணப்பட்ட பௌதீக வளங்கள் காரணமாக இருப்பினும் அவை பெருங்கற்காலப் பண்பாட்டுடன் ஏற்பட்ட அபிவிருத்திகளாகும். இப்பண்பாடு அறிமுகமாவதற்கு முன்னர் இலங்கையில் மலைநாடு தொட்டு தாழ்நிலம் வரை ஏறத்தாழ 75 இற்கு மேற்பட்ட இடங்களில் இடைக்கற்கால அல்லது நுண்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் வட இலங்கையில் புளியங்குளம், கட்டுக்கரைக் குளம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளிலும் இப்பண்பாட்டு மக்கள் வாழ்ந்திருக்கக் கூடிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை நோக்கும் போது இப்பண்பாட்டு மக்கள் இலங்கையில் பரவலாக வாழ்ந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

நுண்கற்காலப் பண்பாடு இலங்கை தென்னிந்தியா முழுவதற்கும் பொதுவான பண்பாடாக இருந்துள்ளது. இனம், மொழிகள், பண்பாட்டுக் கூறுகள், தொழில்நுட்பம் என்பவற்றில் பொதுத்தன்மை காணப்பட்டது (இந்திரபாலா 2006: 87). இப்பண்பாட்டைத் தொடர்ந்து முன்னேற்றகரமான பெருங்கற்காலப் பண்பாடும், மக்களும் இலங்கைக்கு புலம்பெயர்ந்து வந்தபோது அப்பண்பாட்டை முன்பு இங்கு வாழ்ந்த நுண்கற்கால மக்கள் பின்பற்றினர் அல்லது பெருங்கற்காலப் பண்பாடு அப்பண்பாட்டை உள்வாங்கிக் கொண்டது எனக் கூறலாம். இதனால், வரலாற்றுக் காலத்தில் இருந்து மொழியடிப்படையில் தமிழ், சிங்களம் என வேறுபடுத்திப் பார்க்கப்படும் மக்கள் இன அடிப்படையில் ஒரு இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதே பொருத்தப்பாடாகும் (இந்திரபாலா 2006: 86). அதில் தமிழ் மொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டிலிருந்து தமிழ் மொழி பேசும் மக்களாக இலங்கைக்கு வருவதற்கு முன்னரே அவர்களின் மூதாதையினர் வரலாற்றிற்கு முற்பட்ட கற்காலத்திலிருந்து இலங்கையில் வாழ்ந்துள்ளனர் (புஷ்பரட்ணம் 2003: 2-41, இந்திரபாலா 2006: 86). இவற்றை விளங்கிக் கொள்ள பௌத்த மதத்துடன் தோன்றிய புதிய பண்பாட்டையும், மொழிகளையும் நோக்குவது பொருத்தமாகும்.

பெளத்த மதமும் தமிழரும்

பௌத்த மதத்தின் அறிமுகம் பெருங்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து இலங்கையின் பண்பாட்டு வரலாற்றில் ஏற்பட்ட இன்னொரு புதிய பண்பாட்டின் தொடக்க காலமாகப் பார்க்கப்படுகிறது. இம்மதம் கி.மு.3 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து மௌரிய மன்னன் அசோகனது ஆட்சியில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட போது இலங்கையில் நிலவிய பெருங்கற்கால பொருளாதாரக் கட்டமைப்பும், சமூகப் பிரிவுகளும் பௌத்த மதம் குறுகிய காலத்தில் பரவுவதற்கும், வளர்வதற்கும் சாதகமாக இருந்தது. இம்மதத்தைப் பெருங்கற்காலப் பண்பாட்டு வழிவந்த மக்களில் பெரும்பான்மையோர் பின்பற்றியிருக்கலாம் என்பதை இப்பண்பாட்டு மையங்களை அண்மித்துக் காணப்படும் பௌத்த மதத்துடன் தொடர்புடைய பிராமிக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. பாளி இலக்கியங்கள் குறிப்பிடும் தொடக்ககால பௌத்த ஆலயங்கள் கூடப் பெரும்பாலும் இப்பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்களை ஒட்டியதாகவே காணப்படுகின்றன. பௌத்தம் ஒரு புதிய மதத்தின் அறிமுகமாக மட்டுமன்றி அது இலங்கையில் எழுத்து, மொழி, இலக்கியம், வரலாற்றைப் பேணும் மரபு, கட்டிடக்கலை, பௌத்த சங்கம் என்பனவற்றின் தோற்றத்திற்கும் காரணமாகியது. இதனால் இலங்கையில் புதிய பண்பாடு தோற்றம் பெற்றது.

பௌத்த மதத்துடன் இலக்கிய மொழியான பாளியும், கல்வெட்டு மொழியான பிராகிருதமும் அறிமுகப்படுத்தப்பட்டது. பிராகிருத மொழி இலங்கையில் மட்டுமன்றி பௌத்த மதம் பரவிய அனைத்து நாடுகளிலும் கி.பி 4 ஆம் நூற்றாண்டு வரை (கி.மு. 3 முதல் கி.பி. 4 வரை) கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது. சமகாலத்தில் தமிழகத்தில், தமிழ் கல்வெட்டு மொழியாக இருந்தும், அவற்றில் 25 விழுக்காடு பிராகிருதச் சொற்கள் கலந்து எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டு மொழியாக இருந்த பிராகிருத மொழியைச் சில அறிஞர்கள் சிங்கள மொழிக்கு முன்னோடியான மொழி (Proto) Sinhala) என அழைக்கின்றனர். வேறு சிலர் பழைய சிங்களம் எனக் கூறுகின்றனர். பிராகிருதம் என்பது பழைய மொழி என்ற பொருளைக் கொண்டது. இம்மொழிச் சொற்கள் பலவற்றைத் தமிழ் உட்பட பிற மொழிகள் கடன் பெற்றுள்ளன. தெலுங்கு மொழி பேசும் ஆந்திர மாநிலத்தில் உள்ள தந்திக்கம், புட்டுகாமம் முதலான இடப்பெயர்கள் 11 ஆம் நூற்றாண்டில் முக்கிய அரச தலைநகராக இருந்துள்ளன. தமிழகத்தில் உள்ள அதிரம்பாக்கம், அயின்காமம், பெரியகையகம் என்பன வரலாற்றுப் பழமை வாய்ந்த இடப்பெயர்களாக உள்ளன. இவற்றில் பொது விகுதியாக வரும் ‘சும. காம’ என்பன பிராகிருத மொழியில் இருந்து பெறப்பட்டவை. சமகாலத்தில் பாளி இலக்கியங்களிலும், பிராமிக் கல்வெட்டுகளிலும் இவை இடப்பெயர்களின் பொதுவிருதியாக வருகின்றன. இவற்றில் இருந்தே தமிழில் உள்ள வலிகாமம், வீமன்காமம், மல்லாகம், சுண்ணாகம், கொடிகாமம், பனங்காமம், தம்பலகாமம் முதலான இடப்பெயர்கள் தோன்றியிருக்க வேண்டும். ஆயினும் ஒப்பீட்டளவில் இலங்கையின் சிங்கள மொழி உருவாக்கத்தில் பிராகிருத மொழிக்கு முக்கிய பங்குண்டு எனலாம். இதனால் பௌத்த மத்தைப் பின்பற்றிய பெரும்பான்மை மக்கள் காலப்போக்கில் சிங்கள மொழி பேசும் பௌத்தர்களாக மாறியபோது, இன்னொரு பிரிவு மக்கள் பிராகிருத மொழிக்கு உட்படாது தமிழ் மொழி பேசிய இனக்குழுவாக மாறினர் (Indrupala 2005).

பௌத்த மதம் இலங்கையில் குறிப்பிட்ட இனம், மொழி அல்லது குறிப்பிட்ட இடத்திற்குரிய மதமாக வளரவில்லை. அது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இலங்கையின் பல பிராந்தியங்களுக்கும் பரவியதற்கு தொல்லியல், இலக்கிய ஆதாரங்கள் உண்டு. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த துறவியான சங்கமித்தையால் கொண்டு வரப்பட்ட புனித சின்னமான வெள்ளரசக்கிளை, யாழ்ப்பாணத்தில் உள்ள ஜம்புக்கோளப் பட்டினத்திலிருந்து அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்டதாக மஹாவம்சம் என்ற நூல் கூறுகிறது. தேவநம்பியதீஸன் தனது ஆட்சியில் ஜம்புக்கோளப்பட்டினத்திற்கு அண்மையில் திஸமாரசும விகாரையும், அதற்கு வெளியே பஞ்சினரமா என்ற விகாரையும் (மன்னார்?) கட்டியதாக இந்நூல் மேலும் கூறுகிறது. பிற்காலத்தில் ஜம்புக்கோளபட்டினத்தில் இருந்த விகாரையை கனிட்ட தீஸன் (கி.பி. 167- 186), வொகரிக தீஸன் (கி.பி. 209-211), முதலாம் விஜயபாகு போன்ற மன்னர்கள் புதுப்பித்துக் கட்டிய செய்திகளும் காணப்படுகின்றன. இவ்வரலாற்றுக் குறிப்புக்களை வன்னிப் பிராந்தியத்தின் சில இடங்களிலும், யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் கந்தரோடை கண்ணாகம், மகியப்பிட்டி, வல்லிபுரம், நவகிரி, நெடுந்தீவு, நயினாதீவு முதலான இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர், போதிசத்துவர் சிலைகள், பௌத்த வழிபாட்டு எச்சங்கள் என்பன உறுதி செய்கின்றன.

வரலாற்று அறிஞர்களில் ஒரு பிரிவினர் இலங்கையில் கண்டுபிடிக்கப்படும் புராதன பௌத்த மதம் தொடர்பான சான்றாதாரங்களை ஒரு மதத்தின் பண்பாட்டுச் சின்னங்களாகப் பார்க்காது குறிப்பிட்ட இனம் முன்பொருகாலத்தில் வாழ்ந்ததன் அடையாளமாகவே நோக்குகின்றனர். ஆனால் இலங்கையில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு வட இந்தியத் தொடர்பு ஒரு காரணமாக இருப்பினும் அதன் வளர்ச்சிக்கு தமிழக – ஆந்திரச் செல்வாக்கே முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்துள்ளது. பேராசிரியர் பரணவிதான இலங்கையின் தொடக்க காலப் பௌத்த கலைப்படைப்புகள் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டதாகக் கூறுகிறார். பாளி இலக்கியங்கள் தமிழகத்திலிருந்து வந்த புத்தத்த (Buddhatta), புத்தகோஸ் (Buddha Hosa), தர்மபால (Dharmapala) முதலான பௌத்த துறவிகள் இலங்கையில் தேரவாத பௌத்தத்திற்கு ஆற்றிய பணிகளை முக்கியப்படுத்திக் கூறுகின்றன. தமிழகத்தில் தோன்றிய பௌத்த காப்பியமான மணிமேகலை என்ற நூல் அறவணவடிகள், மணிமேகலை முதலானோர் இலங்கையில் நாகநாடு, மணிபல்லவம், இரத்தினதீவம் முதலான இடங்களுக்குச் சென்று அங்குள்ள பௌத்த பாதபிடிகையைத் தரிசித்ததாகக் கூறுகிறது. அவற்றுள் நாகநாடு, மணிபல்லவம் ஆகிய இடங்கள் யாழ்ப்பாணத்தையும், இரத்தினதீவம் சிவனொளிபாத மலையையும் குறிப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது (திருநாவுக்கரசு 1978:62). அவற்றுள் தமிழகத்தில் இருந்து 40 காதம் தொலைவில் உள்ள மணிபல்லவம் நெடுந்தீவு என்ற இடத்தையே குறிப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இலங்கையை சேர்ந்த பௌத்த துறவிகள் தமிழ்நாட்டிற்குச் சென்று அங்குள்ள பௌத்த பள்ளிகளில் கல்வி கற்றதற்கும், தமிழ்நாட்டுப் பௌத்த குருமார் இலங்கையில் உள்ள பௌத்த விகாரைகளில் தங்கியிருந்து பாளி இலக்கியங்களுக்கு விளக்கவுரை எழுதியதற்கும் ஆதாரங்கள் உண்டு. சோழ நாட்டு தமிழ் பிக்குவான மகிந்தனே, மகாசேனன் ஆட்சியில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டில்) இலங்கைக்கு வந்து மகாயான பௌத்த மதத்தைப் பரப்புவதற்குக் காரணமாக இருந்துள்ளான்.

இவ்வரலாற்றுச் சம்பவங்கள் தமிழகத்தைப் போல் சமகாலத்தில் இலங்கையிலும் தமிழர்களில் கணிசமானவர்கள் பௌத்தர்களாக, பௌத்த மதத்தை ஆதரித்தவர்களாக இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. இதைப் பாளி இலக்கியங்களும் சமகாலப் பிராமிக் கல்வெட்டுகளும் உறுதிசெய்கின்றன. அநுராதபுர அரசில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் 22 ஆண்டுகள் (கி.மு. 177-155) ஆட்சி புரிந்த சேனன், குத்திகன் ஆகிய தமிழ் மன்னர்களும், கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் 44 ஆண்டுகள் (கி.மு. 145-101) நீதி தவறாது ஆட்சிபுரிந்த எல்லாளன் என்ற தமிழ் மன்னனும் தமது பழைய மத நம்பிக்கையை கைவிடாத போதிலும், பௌத்த மதத்திற்கு ஆதரவாக ஆட்சி செய்தார்கள் என மகாவம்சம் கூறுகிறது (Mahavamsa XX1:34). வட இலங்கையில் பெரியபுளியங்குளம், அநுராதபுரம், அம்பாறையில் குடுவில், திருகோணமலையில் சேருவில் ஆகிய இடங்களில் காணப்படும் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் தமிழ் வணிகர்கள் பௌத்த துறவிகளுக்கு, பௌத்த சங்கத்திற்கு வழங்கிய குகைகள், கற்படுக்கைகள் என்பன பற்றிக் கூறுகின்றன (Paranavithana 1970). பிராகிருதம் பௌத்த மதத்திற்குரிய மொழியாக இருந்தும், இலங்கையில் உள்ள பல பிராமிக் கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கேயுரிய சிறப்பெழுத்துக்களைக் கொண்டிருப்பதுடன், அவற்றில் தனிநபர், உறவுமுறை, பட்டம், சமூகம் சார்ந்த பெயர்கள் தமிழிலும், பிராகிருதமயப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்களாகவும் எழுதப்பட்டிருப்பது அக்கல்வெட்டுகளைப் பொறித்தவர்கள் பௌத்த மதத்தவர்களாக அல்லது பௌத்த மதத்தை ஆதரித்தவர்களாக இருந்துள்ளனர் என்பதைக் காட்டுவதாக உள்ளன. அண்மையில் பேராசிரியர் கிருஸ்ணராஜா கந்தரோடையில் பௌத்த சின்னங்கள் காணப்படும் சுற்றாடலில் மேற்கொண்ட ஆய்வின்போது பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனங்கள் சிலவற்றைக் கண்டுபிடித்துள்ளார். அச்சாசனங்கள் தமிழ் மற்றும் பிராகிருத மொழிகளில் அமைந்திருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தது.

நெடுந்தீவிலுள்ள பௌத்த தூபி

கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் அதுராதபுரத்தில் 4 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பரித்தனும் (441-444), 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அவன் தம்பி குட்டபரிந்தனும் (444-460) பௌத்த மதத்திற்கு ஆற்றிய பணிகளை அநுராதபுர, அறகமக் கல்வெட்டுகள். கூறுகின்றன. இதனால் குட்டபரிந்தன் பரிதேவன், புத்ததாஸன் முதலான பட்டங்களைப் பெற்றதாக அநுராதபுரக் கல்வெட்டுக் கூறுகிறது. இலங்கையில் சோழர் ஆட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை பெளத்த சங்கத்திற்கும் தமிழக சோழ நாட்டுப் பௌத்த சங்கத்திற்கும் இடையே நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது. சோழநாட்டுப் பௌத்த துறவியான தீபங்கரர் இலங்கையில் சிங்கள் பௌத்த துறவியான ஆனந்த வரைதன என்பவரிடம் கல்வி கற்றவர். இவர் சோழங்க தீபங்கர் என இலங்கையில் அழைக்கப்பட்டார். இவரைப் போல் சோழ நாட்டைச் சேர்ந்த காசியப்பர், புத்தமித்திரர், ஆனந்தர், அநுரத்தர் முதலான தமிழ்ப் பௌத்த துறவிகள் இலங்கையில் பணிபுரிந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன (இந்திரபாலா 2006 : 294). திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட 16 தமிழ்க் கல்வெட்டுகள் தமிழ்ப் பௌத்தத்துடன் தொடர்புடையவை. இவை சோழர் ஆட்சியில் இலங்கையில் தமிழ்ப் பௌத்தம் நிலவியதற்குச் சான்றுகளாகும். நெடுந்தீவில் காணப்படும் பௌத்த தூபியில் மூன்று கல்வெட்டுகள் தமிழிலும், கிரந்தத்திலும் எழுதப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள் 14 ஆம், 15 ஆம் நூற்றாண்டுகளிலும் இங்கு தமிழ்ப் பௌத்தம் இருந்ததற்குச் சான்றுகளாகும். கி.பி. 14 – 15 ஆம் நூற்றாண்டளவில் எழுந்த ‘நம்பொத்த’ என்ற சிங்கள இலக்கியம் அநுராதபுரத்திற்கு வடக்கிலமைந்த தமிழ்ப்பட்டினத்தில் (தெமில பட்டணத்தில்) பௌத்த யாத்திரிகர்கள் சென்றுவரக்கூடிய இடங்களாக தெல்லிப்பளை, மல்லாகம், நாகர்கோவில், விமன்காமம், ஊர்காவற்துறை, நயினாதீவு, காரைதீவு, புங்குடுதீவு, தனத்தீவு (நெடுங்கேணி) முதலான இடங்களைக் கூறுகிறது. இவற்றை நோக்கும் போது முன்னொரு காலத்தில் இங்கு வாழ்ந்த தமிழர்களுள் பௌத்த மதத்தைப் பின்பற்றியவர்களும் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது. இதற்கு நெடுந்தீவிலுள்ள 15 – 16 ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ் – கிரந்த மொழிக் கல்வெட்டுகளுடன் கூடிய பௌத்த தூபிகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

8905 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.