பௌத்த சிற்பங்கள் ஊடாக அறியப்படும் இலங்கை - ஆந்திர உறவுகள் : பகுதி 1
Arts
21 நிமிட வாசிப்பு

பௌத்த சிற்பங்கள் ஊடாக அறியப்படும் இலங்கை – ஆந்திர உறவுகள் : பகுதி 1

December 5, 2024 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

இலங்கை பிரதேச ரீதியில் தனிப்பட்ட நிலப்பரப்பைக் கொண்டிருந்தாலும் பண்பாட்டு வளர்ச்சியில் அது இந்தியாவுடன், சிறப்பாக தென்னிந்தியாவுடன் பண்டைய காலம் தொட்டு நெருங்கிய தொடர்புகொண்டு வந்துள்ளது. ஆயினும் இலங்கையின் புராதன பண்பாட்டு வரலாற்றை ஆராய்ந்த பலரும் வட இந்தியத் தொடர்புக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல் தென்னிந்தியத் தொடர்பை ஆராய்வதில் அதிக அக்கறை காட்டவில்லை. இலங்கையின் ஆதிகால வரலாற்றைக் கூறும் பாளி இலக்கியங்களில் தென்னிந்தியாவைப் பகைமை நாடாகவும், வட இந்தியாவைப் பாரம்பரிய நட்புறவு கொண்ட பிரதேசமாகவும் கூறப்பட்டுள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும். ஆயினும் அண்மைக்கால தொல்லியல், மானிடவியல், சமூகவியல் ஆய்வுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இலங்கைக்கும் திராவிட மொழி பேசும் தென்னிந்தியப் பிரதேசங்களான இன்றைய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என்பவற்றிற்கும் இடையே நெருங்கிய கலாசாரத் தொடர்புகள் இருந்துள்ளன என்பதை நிரூபித்துள்ளன. இவற்றின் ஓர் அம்சமாகவே இக்கட்டுரையில் இலங்கை – ஆந்திர பௌத்த சிற்பக்கலை உறவு பற்றி ஆராயப்படுகின்றது.

இலங்கையில் தோன்றிய காலத்தால் முந்திய நுண்கலைகளில் சிற்பக் கலையும் ஒன்றாகும். இதுவும் பிற கலைகள் போன்று இந்நாட்டின் ஆதி மக்களாகிய தமிழ் – சிங்கள மக்களின் கூட்டு முயற்சியினால் வளர்ந்ததொன்றாகும். ஆயினும் பெரும் கலைப் படைப்புகள் என்று கூறக்கூடிய சிற்பங்கள் பௌத்த மதத்தின் வருகையைத் தொடர்ந்து வளர்ச்சியடைந்துள்ளன. பௌத்தத்திற்கு முந்திய பிறசமயம் சார்ந்த சிற்பங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை பெரும்பாலும் அழியும் பொருட்களால் ஆக்கப்பட்டதனால் அவை பற்றி அதிகம் கூற முடியாதிருக்கிறது.

பொதுவாக சிற்பக் கலையின் தொன்மையை அறிவதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் அகழ்வாராய்ச்சி, மானிடவியல் ஆராய்ச்சி என்பன நன்கு உதவுகின்றன. அத்துடன் இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், முத்திரைகள், சின்னங்கள் ஆகியவையும் தகுந்த சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன. இச்சான்றுகளை அடிப்படையாக வைத்து இலங்கைச் சிற்பக்கலை பற்றி ஆராய்ந்த இந்நாட்டு, மேல்நாட்டுக் கலைவரலாற்று ஆசிரியர்கள் பலரும் ஆங்காங்கே இலங்கைச் சிற்பக்கலையின் தோற்றம் பற்றியும் ஆராய்ந்துள்ளனர். இவர்களில் சிலர் இலங்கையிலே வரலாற்றுக் காலத்தில் வளர்ந்த கட்டடச் சிற்பக்கலை மரபானது முழுமையாக அந்நிய அடித்தளத்தில் எழுந்த மரபு என்றும், வேறு சிலர் இலங்கையின் கலையானது எந்தவித தனித்துவமான அபிவிருத்தியும் இல்லாது வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாக்கப்பட்ட கலையெனவும் கூறுகின்றனர். இன்னும் சிலர் இந்தியக் கட்டட சிற்பக்கலை மரபானது இங்கு புகுத்தப்பட்டபின் அதில் இருந்து உருவாகிய மரபு எனவும் வாதிட்டுள்ளார் (Paranavitana, S. 1957, p. 10). அண்மையில் சிங்கள விகாரைக் கட்டடக்கலை பற்றி ஆராய்ந்த சேனக பண்டாரநாயக்கா உள்நாட்டுக் கட்டடக்கலை மரபே இலங்கைக் கலை மரபுக்கு ஊற்றாக அமைந்ததென்றார். இவர் இலங்கைச் சிற்பங்களின் பிரதேச ரீதியான தனித்துவத்தையும் கல், மண், மரம் முதலியவற்றால் அமைந்த புராதன குடிசை அமைப்பினையும் இதற்குச் சான்றாகக் காட்டினர் (Bandaranayaka, S. 1974. p,11)  இந்தியக் கலை மரபின் செல்வாக்கு இலங்கைக் கலை மரபு வளர உதவியது என்பதை இவர் ஏற்றாலும், அதனால் இலங்கைக் கலை மரபு தனது உந்துசக்தியை இழக்காது வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட சில பண்புகளை அடக்கி, வேறு சில பண்புகளைத் தனக்குத் தேவையான முறையில் மாற்றி, இன்னும் சில பண்புகளை ஏற்காது வளர்ந்ததென்றார் (Ibid).

ஒரு நாட்டின்மீது இன்னொரு நாட்டின் பண்பாட்டுப் பரவல் அல்லது செல்வாக்கு ஏற்படுகின்றபோது அந்நாடு அப்பண்பாட்டை அப்படியே உள்வாங்கிக் கொள்வதில்லை. அந்நாட்டின் பௌதீக, அரசியல், சமூக, சமய, பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப சில தனித்துவம் அல்லது சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். இதே தன்மையை இலங்கை – இந்திய சிற்பக்கலை உறவிலும் காணலாம். இலங்கைச் சிற்பங்கள் சிலவற்றில் இலங்கைக்கே உரிய தனித்துவமான அம்சங்கள் பல உண்டு என்பதனை மறுப்பதற்கில்லை. அதற்காக இலங்கைச் சிற்பக்கலை சுதேச மரபில் இருந்து வளர்ந்ததெனக் கூறுவதற்கில்லை. கலைகளில் தேசியத்தன்மை கொண்ட பரந்த இந்தியாவுக்குள் பிரதேச ரீதியான தனித்துவங்கள் காணப்படுகின்றன. அதற்காக அவை பிரதேச ரீதியான சுதேச கலைமரபைக் கொண்டு வளர்ந்ததெனக் கூறுவதற்கில்லை. இது போன்ற தன்மையே இலங்கைச் சிற்பக்கலை மரபிலும் காணப்படுகிறது எனலாம்.

இலங்கையில் காணப்படும் காலத்தால் முந்திய சிற்பங்கள் பௌத்த, இந்து மதங்கள் சார்ந்தவையாகும். இச்சிற்பங்கள் இந்திய சிற்பங்களுடன், கலை ரீதியாக மட்டுமன்றி கருத்து அதன் உள்நோக்கம், கலை நுணுக்கம் என்பவற்றிலும் நெருங்கிய ஒற்றுமைத்தன்மையோடு காணப்படுகின்றன. இவ்வொற்றுமையின் தொடக்கத்தைக் கோடிட்டுக் காட்டுவதில் இலங்கையின் பெருங்கற்காலப் பண்பாடு பற்றிய சமீபகால ஆய்வுகள் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது. இப்பண்பாட்டில் காணப்படும் பலவித சுடுமண் பாவைகள், மணிகள், அலங்காரப் பொருட்கள், மட்பாண்டங்களில் காணப்படும் பலவிதக் குறியீடுகள், சித்திரங்கள், சமகால ஆந்திர – தமிழ்நாட்டுப் பெருங்கற்காலப் பண்பாட்டு கலை வடிவங்களுடன் நெருங்கிய ஒற்றுமைத்தன்மை உடையன. தென்னிந்தியாவில் இப்பண்பாட்டுடன்தான் பழைய ஆலயங்கள் தோன்றியதாகக் கூறப்படுகின்றது (நடன. காசிநாதன், 1978). இதனால் இலங்கையிலும் இந்துக்கலைப் பாரம்பரியத்தின் தொடக்கமாக பெருங்கற்காலப் பண்பாடு அமைந்ததெனக் கூறலாம். ஆயினும் இப்பண்பாட்டுக் கலை வடிவங்களின் பல்வேறு அம்சங்கள் பிற்கால பௌத்தச் சிற்பங்களிலும் இடம்பெறுவதால் இது பௌத்தக் கலைக்கான மூலக்கூறையும் கொண்டிருந்ததெனக் கூறலாம். எனவே இலங்கையின் பௌத்த, இந்து சிற்பக் கலையின் தோற்றத்திற்கான மூலக்கூறு தென்னிந்தியாவின் பின்னணியில் தோன்றியதெனக் கூறுவதே பொருத்தமாகும். ஆயினும் இலங்கை பௌத்த சிற்பக்கலை வரலாற்றை ஆராய்ந்த பலர் இக்கலை இந்நாட்டில் வளர்வதற்குப் பௌத்த மதம் பரவக் காரணமாக இருந்த வட இந்தியக் கலைமரபே காரணம் எனக் கூறியுள்ளனர் (Paranavitana, S. 1957, P-9). ஆனால் இலங்கையில் பௌத்த மதமும் பௌத்தக் கலையும் வளர்த்த வலாற்றைச் சமகால ஆந்திரப் பிரதேசத்துடன் தொடர்புபடுத்தி ஆராயும் போது, அப்பிரதேசம் இலங்கைப் பௌத்த பண்பாட்டு வளர்ச்சியில் ஏற்படுத்திய செல்வாக்கை உணர முடியும்.

இரு பிராந்தியங்களிற்கும் இடையே வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து நெருங்கிய தொடர்புகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இலங்கையின் காலத்தால் முந்திய இடைக்கற்காலப் பண்பாடும் (Mesolithic Culture) அதையடுத்துத் தோன்றிய பெருங்கற்காலப் பண்பாடும் (Megalithic Culture) தமிழ் நாட்டைப்போல் ஆந்திரப் பிரதேசத்துடனும் ஒற்றுமைத்தன்மை கொண்டு காணப்படுகின்றது. மேலும் இவ்வொற்றுமை வரலாற்றுக் கால ஆரம்பத்துடன் இலங்கையின் பௌத்த மதம், மொழி, எழுத்து ஆகிய துறைகளிலும் காணப்படுகின்றன. இதற்கு இக்காலத்தில் ஆந்திரப் பிரதேசம் கடல் வாணிபத்தில் செழித்தோங்கி இருந்தமையே காரணமாகும். தொலமி என்ற கிரேக்க ஆசிரியர் சைசோலியா என அழைக்கப்பட்ட கோதாவரி கிருஸ்ணா நதிக்குட்பட்ட பிரதேசத்தில் இருந்தே கப்பல்கள் இலங்கை, தென்கிழக்காசியப் பிரதேசங்களுக்குச் சென்றதாகக் கூறுகிறார். இந்நாடுகளுடன் ஆந்திரப் பிரதேசம் செய்து கொண்ட கடல் வாணிபமே அந்நாட்டில் பௌத்தமும், பௌத்தக் கலைகளும்  வளர்ச்சியடையக் காரணமாகும். இக்கால ரோம – ஆந்திர வர்த்தகத்தில் தங்கம், முத்து, சங்கு, யானை, யானைத்தந்தம், பட்டு, வெற்றிலை, நறுமண மூலிகைகள் ஆகிய பொருட்கள் முக்கிய இடம் வகித்ததனால் அவற்றை இயற்கையாகக் கொண்டிருந்த இலங்கையில் ஆந்திர வணிகர்கள் வணிகத்தில் ஈடுபட்டனர். ஆந்திர மன்னர்களில் தலைசிறந்தவன் எனக் கூறப்படும் கௌதமபுத்திர சாதகர்ணி காலத்துக்குரிய நாணயம் ஒன்று வல்லிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதே பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொற்சாசனம் கூட ஆந்திரத் தொடர்பை வலியுறுத்துவதாக உள்ளது. இச்சாசனத்தின் மொழி, கருத்து என்பதையிட்டு முரண்பட்ட கருத்துகள் காணப்பட்டாலும் இதன் வரிவடிவங்கள் சமகால ஆந்திர வரிவடிவங்களை ஒத்துக் காணப்படுகின்றன. பொலநறுவை மாவட்டத்தில் உள்ள துவிகல என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டில் கைப்பிடி போன்ற சித்திரங்கள் அதே காலப்பகுதிக்குரிய ஆந்திர நாணயங்களிலும் காணப்படுகின்றன. இதனால் இக்கல்வெட்டு ஆந்திர வணிகன் ஒருவனால் எழுதப்பட்டிருக்கலாம் என ஊகிக்க இடமளிக்கிறது. சுன்னாகத்திற்குக் அருகேயுள்ள கந்தரோடை என்ற இடத்தில் கி.பி. 3 ஆம், 4 ஆம் நூற்றண்டுக்குரிய  முத்திரை கண்டுபிடிக்கப்பட்டது. ‘விஸ்ணுபூதியஸ்’ என்ற பெயர் பொறித்த இம்முத்திரை ஆந்திர வணிகன் ஒருவனுக்குரியதெனவும் கூறப்படுகிறது. இச்சான்றுகளை எல்லாம் நோக்கும்போது வரலாற்றுக்கால ஆரம்பத்தில் இருந்து கி.பி. 4 ஆம் நூற்றாண்டுவரை இலங்கையில் ஆந்திரப் பண்பாட்டுச் செல்வாக்கு இடம்பெற இவ்வர்த்தகத் தொடர்புகளே காரணம் எனக் கூறலாம்.

இலங்கை – ஆந்திர, பௌத்த மத உறவுகள்

இலங்கை வரலாற்றில் பௌத்த மதத்தின் அறிமுகத்துடன் புதிய பண்பாட்டுச் சக்திகள் தோன்றி வளர்வதனை அவதானிக்கலாம். பௌத்த மதம் சார்ந்த கட்டட, சிற்ப, ஓவியக் கலைகள் தோற்றம் பெறவும், பௌத்த – சிங்களப் பண்பாடு உருவாகவும் இம்மதம் இங்கு குறுகிய காலத்தில் அரச ஆதரவுடன் மக்கள் மத்தியில் பரவலான செல்வாக்கைப் பெற்றதே காரணமாகும். புராதன இலங்கையில் இம்மதம் செல்வாக்குப்பெற்ற காலகட்டத்தில் தென்னிந்தியாவில், சிறப்பாக ஆந்திராவில் இம்மதம் வளர்ச்சியடைந்து காணப்பட்டது. ஆனால் பௌத்த மதத்தின் அறிமுகத்தையும் அதன் வளர்ச்சியையும் தொடர்புபடுத்திக் கூறும் பாளி இலக்கியங்களும், வரலாற்று ஆசிரியர்களும் சமகாலத்தில் ஆந்திராவுடன் கொண்டிருந்த தொடர்பை முக்கியப்படுத்திக் கூறவில்லை.

தேவநம்பியதீசன் அநுராதபுரத்தை ஆண்ட காலத்தில் (கி.மு. 247) மௌரிய மன்னன் அசோகனது மகன் மகிந்தனும், மகள் சங்கமித்திரையும் இலங்கைக்கு அனுப்பப்பட்டமையே பௌத்த மதம் இலங்கையில் பரவக் காரணம் எனக் கூறப்படுகிறது (M. V .XII. 15). ஆனால் இக்காலத்திற்கு முன்னரே இம்மதம் இலங்கையில் பரவியதற்குச் சான்றுகள் உள்ளன. அசோகன் ஆண்ட காலத்தில் கூட இம்மதம் இலங்கையில் பரவினாலும் கூட அம்மதம் நேரடியாக வடஇந்தியாவில் இருந்து பரவியதா அல்லது அசோகன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஆந்திரப் பிரதேசத் தொடர்பால் பரவியதா என்பதில் கருத்து முரண்பாட்டிற்கு இடமுண்டு. பாளி இலக்கியங்கள் தவிர்ந்த ஏனைய சான்றுகளை நோக்கும்போது ஏனைய பண்பாட்டுச் சக்திகளைப் போல் பௌத்த மதமும், பௌத்தப் பண்பாடும் தென்னிந்தியத் தொடர்பால், சிறப்பாக ஆந்திரச் செல்வாக்கால் பரவியதென்ற முடிவுக்கு வரமுடிகிறது.

அசோகன் ஆட்சியில் பௌத்த மத செல்வாக்கிற்கு உட்பட்ட இடங்களில் ஆந்திரப் பிரதேசமும் ஒன்று என்பதை அவன் ஆட்சிக்கால சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இக்கால மன்னர்கள் அரசியல், பொருளாதார ரீதியாக இம்மதத்திற்கு ஆதரவு கொடுத்ததினால் குறுகிய காலத்தில் இப்பிரதேச சமூகக் கட்டமைப்பில் ஆழமாகவும் பரவலாகவும் பௌத்தமதம் செல்வாக்குப் பெற முடிந்தது. இவற்றை அமராவதி, நாகர்ஜீனகொண்டா, பட்டிப்புரோலு போன்ற இடங்களிலுள்ள பௌத்தக் கல்வி மையங்கள், கலைக்கூடங்கள் உறுதிப்படுத்துகின்றன. இவ்விடங்களில் காணப்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் சில புத்தபிரானின் விசுவாசமிக்க பௌத்த குருமார் பௌத்த யாத்திரிகர்களுக்கும், பக்தர்களுக்கும் அறிவூட்டும் பணியில் ஈடுபட்டதாகக் கூறுகிறது (கிருஸ்ணமூர்த்தி, க. ப.12). இவற்றை நோக்கும் போது இம்மதப் பிரசாரம் உள்நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி பிற நாடுகளில் இருந்து வந்த பௌத்தர்களுக்கும் போதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. இவ் இடங்களுடன் இலங்கை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து வர்த்தக, பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்ததனால், கூடவே பௌத்த மதக் கருத்துகளும் இலங்கைக்குப் பரப்பப்பட்டிருக்கலாம். வடஇந்தியாவில் அமைந்த மௌரியத் தலைநகருடன் இலங்கை கொண்டிருந்த நேரடித் தொடர்பே இலங்கையில் பௌத்த மதம் பரவக் காரணம் எனக் கூறும் வால்பொல ராகுல தேரோ இலங்கையில் காணப்படும் அசோகப் பிராமி வரிவடிவங்களையும் பிராகிருத மொழியில் உள்ள சாசனங்களையும் அதற்குச் சான்றாக  எடுத்துக் காட்டுகிறார். (Rahula, W. 1966, p. 61) ஆனால் இக்காலத்தில் தமிழ்நாடு தவிர்ந்த இந்தியாவின் பெரும்பாலான பிரதேசங்களில் அசோகச் சாசனங்களே பயன்படுத்தப்பட்டன. எனவே இச்சாசனங்கள் வடஇந்தியத் தலைநகரங்களில் இருந்து இலங்கைக்கு அறிமுகமாகியதை விட அயலில் உள்ள ஆந்திராவில் இருந்து பரவுவதற்கு கூடுதலான வாய்ப்பு இருந்திருக்கும். அத்தோடு பௌத்த மதத்தைப் பிற இடங்களுக்குப் பரப்பக் காரணமாக இருந்த அசோகன், அதற்குத் தர்ம மகாமாத்திரர் என்ற நிர்வாகப் பிரிவை அமைத்திருந்தான். ஆனால் அவனுடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தவன் எனக் கூறப்படும் இலங்கை மன்னன் தேவநம்பியதீசன் அதுபோன்ற ஒரு நிர்வாகப்பிரிவை இலங்கையில் ஏற்படுத்தியமைக்கு எதுவித சான்றுகளும் இல்லை. அசோகன் தனது பௌத்த மதக் கருத்துகளை மக்களுக்கு எடுத்துக்கூற பாறைகளிலும் கற்றூண்களிலும் பல வரி கொண்ட சாசனங்களைப் பொறிப்பித்தான். ஆனால் இலங்கையில் இதுபோன்ற சாசனங்கள் காணப்படவில்லை. மாறாக ஆந்திராவை ஒத்த பௌத்த குகைகளும் சாசனங்களுமே இலங்கையில் காணப்படுகிறது. இவ்வொற்றுமைகள் இலங்கையில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கும் பிற்காலத்தில் இம்மதம் தீவிரமாக வளர்வதற்கும் ஆந்திரத் தொடர்பே காரணம் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

மௌரியப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அதன் சிற்றரசர்களாக இருந்த சாதவாகன வம்சம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆந்திராவில் சுதந்திர அரசாக எழுச்சியடைந்தது. இவ்வரசுதான் மௌரியர் ஆட்சியைத் தொடர்ந்து இந்தியாவில் பௌத்த மதத்தைப் பாதுகாத்து அம்மதத்தை அயல் நாடுகளுக்குப் பரப்பிய அரசாக விளங்கியது. இக்காலகட்டத்தில் இலங்கை ஆந்திராவுடன் நெருங்கிய வர்த்தக உறவு கொண்டிருந்ததினால், தேரவாத பௌத்த மதம் அநுராதபுரத்தில் மகாவிகாரையைத் தலைமைப்பீடமாகக் கொண்டு வளர்ச்சிபெற முடிந்தது. இவ்வுறவு பௌத்தத்தின் இன்னொரு பிரிவான மகாயான பௌத்தம் ஆந்திராவில் எழுச்சியடைந்தபோது மேலும் நெருக்கமடைந்தது. இம்மதப் பிரிவு கி.மு 2 ஆம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் தோன்றினாலும் சாதவாகனார் ஆட்சியில் தான் ஆந்திராவில் இதன் கோட்பாடு முதன்முறையாக வரையறை செய்யப்பட்டது. இதற்கு அஸ்வகோசர், நாகர்ஜீனர் போன்றோர் காரணமாக இருந்தனர். இவர்களுள் நாகர்ஜீனருக்கும், இலங்கை மன்னன் ஒருவனுக்கு மகனாகப் பிறந்த ஆரியதேவனுக்கும் இடையே ஏற்பட்ட உறவால் இம்மகாயான பௌத்த மதம் இலங்கையில் தீவிரமாகப் பரவியது (Paranavitana, S. 1957, p. 35). பரணவிதான, வட்டகாமினி காலத்தில் (கி.மு. 104) இம்மதம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது தீவிரமாக வளர்ச்சியடைய ஆந்திராவில் வாழ்ந்த நாகர்ஜீனரே காரணம் என்றார் (Ibid). சீன யாத்திரிகரான யுவான் சுவாங் தனது நூலில் ஆரியதேவர் நாகர்ஜீனரைச் சந்தித்தபோது ஆரியதேவரின் புகழைக் கேட்டு, “எனக்குப் பின் என் அணையா விளக்கைக் காக்கும் பொறுப்பை உன்னிடம் தருகிறேன்” எனக் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார் (நீலகண்டசாஸ்திரி K. A, 1965, p. 107). இவரே நாகர்ஜீனர் எழுதிய மாத்திய மகாகாரிகாவுக்கு உரை விளக்கம் எழுதியதுடன் சதுசத(கம்) முதலிய நூலையும் எழுதினார். இந்நூல்கள் இலங்கைப் பௌத்தரினால் பெரிதும் மதிக்கப்பட்டது.

சாதவாகனரைத் தொடர்ந்து கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்த இக்ஷ்வாகு வம்ச காலத்தில் ஆந்திராவின் மகாயான பௌத்த மத செல்வாக்கு இலங்கையில் தீவிரமடைந்தது. இம்மதக் கருத்துகள் மக்களைப் பெரிதும் கவர்ந்ததால் இலங்கையுட்பட பல நாடுகளில் இருந்து பௌத்த யாத்திரிகர்கள், பௌத்த கல்விமான்கள் ஆந்திரா சென்று அங்குள்ள பௌத்த ஆலயங்களைத் தரிசித்தனர். இங்கு கண்டெடுக்கப்பட்ட கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு ஒன்று பௌத்த கல்வியைக் கற்பதற்காக பௌத்த யாத்திரிகர்கள் தமிலா (தமிழ்நாடு), ஒட்ரா (கலிங்கம்), தம்பபண்ணி (இலங்கை) போன்ற இடங்களில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டு, இலங்கைப் பௌத்தர்களுக்காக நாகர்ஜீனகொண்டாவில் போதிசிறி என்ற பெண் சீகள விகாரையைக் கட்டியதாகக் கூறுகிறது (Wijayasekara, N. 1962, p.99). இதன் மூலம் இலங்கைப் பௌத்தர்களின் வருகை ஆந்திராவில் அதிகரித்திருந்தமை புலனாகின்றது. ஆயினும் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் இக்ஷ்வாகு வம்சம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து பௌத்த மதமும், பௌத்தக் கலையும் வீழ்ச்சியடைந்தன. இதனால் இப்பிரதேசத்துடனான இலங்கையின் தொடர்பு குறைவடைந்து தென்னிந்தியாவின் இன்னொரு பிரதேசமான தமிழ்நாட்டுடனான பௌத்த மத உறவு வலுவடைந்தது.

இலங்கையில் ஆந்திர சிற்பக்கலை மரபு

இலங்கையின் பௌத்தச் சிற்பக்கலை மரபை ஆராய்ந்த கலைவரலாற்று ஆசிரியர்கள் பலரும் வடஇந்தியாவில் இருந்து பௌத்த மதம் இலங்கையில் பரவியபோது கூடவே மௌரியக்கலை மரபும் இலங்கைக்கு அறிமுகமாகியதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் மௌரியர் ஆட்சியில் பௌத்த தூபிகள், விகாரைகள், சைத்திய மண்டபங்கள் அமைக்கப்பட்டதாகப் பாளி இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவை பற்றிய முழுமையான சான்றுகள் இன்றுவரை சரிவர அடையாளம் காணப்படவில்லை. மௌரியர் ஆட்சியைத் தொடர்ந்து கி.மு. 2 ஆம், 1 ஆம் நூற்றாண்டுகளில் தான் பெரும் பௌத்த கலைப்படைப்புகள் என்று கூறக்கூடியவை சுங்கர், ஆந்திரர் ஆட்சியில் பாரூட், சாஞ்சி, புத்தகாயா, அமராவதி, நாகர்ஜீனகொண்டா போன்ற இடங்களில் தோன்றி வளர்ந்தன. இலங்கையிலும் காலத்தால் முந்திய பௌத்த கட்டட, சிற்பக் கலைகள் கி.மு. 2 ஆம் 1 ஆம் நூற்றாண்டுகளில்தான் தோன்றி வளர்ந்தன (சிவசாமி. வி. 1978, ப. 104). இதனால் இலங்கையின் பௌத்தக் கலைமரபு பெஞ்சமின் றோலன் (Roland, B. 1953, p.209), கோகாட்  (Hocord, A. M. 1924-28, p.95) என்போர் கூறியது போல ஆந்திரக்கலை மரபின் செல்வாக்கால் தோன்றியதெனக் கூறுவதே பொருத்தமாகும்.

ஆரம்பத்தில் இலங்கையில் காணப்பட்ட பெரும்பாலான பௌத்த சிற்பங்கள் ஆந்திராவுக்குரிய ஒருவகை பளிங்கு, சுண்ணாம்புக்கல் முதலியவற்றால் ஆக்கப்பட்டிருந்தது. இதனால் இச்சிற்பங்கள் முதலில் ஆந்திராவில் ஆக்கப்பட்டு, பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதெனக் கூறலாம். இது பற்றிப் பரணவிதான (Paranavitana, S. 1936. p.17) குறிப்பிடுகையில்,

“அமராவதியிலும் நாகர்ஜீனகொண்டாவிலும் உள்ள தூபிகளை அலங்கரிக்கும் சிற்பங்களை உருவாக்கிய சிற்பிகள் பௌத்தர்களுடைய வழிபாட்டிற்காகப் பெருமளவில் கலைப்பொருட்களை உருவாக்கியிருக்க வேண்டும். இத்தகைய கலைப்பொருட்கள் பல இலங்கை திரும்புகின்ற சிங்கள யாத்திரிகர்களினால் அல்லது அநுராதபுரத்தைத் தரிசிக்க வந்த பௌத்தர்களினால் கொண்டுவரப்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் இவ்வாறு கொண்டுவரப்பட்டாலும் பின்னர் இலங்கையில் இருந்து ஆந்திரா சென்ற சிற்பிகள் ஆந்திரக்கலை மரபில் சிற்பங்களை ஆக்கப் பழக்கப்பட்டிருக்கலாம். பின்னர் அந்நாட்டுக்குரிய பளிங்கு, சுண்ணாம்புக் கற்களை இலங்கையில் இறக்குமதி செய்து இலங்கையிலேயே சிற்பங்களை வடித்திருக்கலாம். இதற்குச் சிலவேளை ஆந்திரச் சிற்பிகளே இங்குவந்து உதவியிருக்கலாம்” என்கிறார்.

இவ்வாறான சிற்பங்களை இலங்கையில் காலத்தால் முந்திய கண்டக சேத்தியம், தக்கண தூபி, மகாதூபி என்பனவற்றில் சிறப்பாகக் காணலாம். இத்தூபிகளின் வாகல்கடம், தூண்கள், அவற்றின் தலைப்பகுதி, கைப்பிடிச்சுவர்கள், வேதிகைகள், கும்மட்டப்பகுதிகள் என்பவற்றில் புடைப்புச் சிற்பங்களாகவும், தனிச் சிற்பங்களாகவும் பல உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் கற்பக விருட்சம், பூரணகும்பம், தாமரைப் பூ, மிருகங்கள், பறவைகள், தர்மச்சக்கரம், புத்தர் திருவடி என்பன சமகால ஆந்திரத் தூபிகளில் காணப்பட்ட சிற்பங்களுடன் தொழில்நுட்பம், பாணி அமைப்பு என்பனவற்றில் நெருங்கிய ஒற்றுமைத்தன்மை கொண்டு காணப்பட்டன. இதனால் ஆந்திரக்கலை மரபுக்குரிய கிளை ஒன்று இலங்கையில் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும் என்பது பரணவிதானவின் கருத்தாகும் (Paranavitana, S. 1971, p.13).

ஆந்திராவில் மகாயான பௌத்தம் எழுச்சியடைந்தபோது புத்தர், போதிசத்துவர்களை மனித வடிவில் சிற்பங்களாக ஆக்கும்முறை தோன்றியது. இதனால் இதுவரை தூபிகளை அலங்கரித்த புத்தரது ஞாபகச் சின்னங்களுக்குப் பதிலாக அவரது வாழ்க்கையில் நடந்த பல்வேறு அற்புதங்களையும், பௌத்த மதக் கோட்பாடுகளையும் புலப்படுத்த மனித, தெய்வ மிருக உருவங்கள் படைக்கப்பட்டன. இவை சமகாலத்தில் இலங்கை பௌத்தக் கலைமரபிலும் மாறுதல்களை ஏற்படுத்தின. இவ்வாறான சிற்பங்களுள் நாக, நாகினி, துவாரபாலகர் சிற்பங்கள் ஆந்திர – இலங்கை சிற்பக் கலை உறவிற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

இக்கலைச் சின்னங்கள் உலகில் தொன்மையான வழிபாடுகளுள் நாக வழிபாடும் ஒன்றாகும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவுக்கு ஆரியர் வருவதற்கு முன்பாகவே இங்கு வாழ்ந்த திராவிட மக்களிடம் இத்தகைய வழிபாட்டு முறைகள் இருந்ததற்கான தடயங்கள் சிந்துவெளியில் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது (Ferguson, J. F. 1873, p.244). இலங்கையிலும் பௌத்த மதம் பரவுவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த ஆதி ஒஸ்ரலோயிட், திராவிட மக்களிடம் இவ்வழிபாடு நிலைத்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

தென்னாசியாவின் ஆதியான இவ்வழிபாடு காலப்போக்கில் இந்துக் கடவுளரோடு சங்கமித்ததென்பதற்குச் சிவன் நஞ்சுண்டவனாகவும், பாம்புத் தலையை அணிந்தவனாகவும், விக்ஷ்ணு ஆதிசேக்ஷனில் அறிதுயில் கொள்பவராகவும் சித்திரிக்கப்பட்டுள்ளமை சான்றுகளாகும். அதுபோலவே பௌத்தத்திலும் இந்த அம்சம் பிற்காலத்தில் இணைந்து கொண்டதென்பதைப் பௌத்த ஆலயங்களில் வரும் நாக, நாகினி உருவங்களுடன் பாம்பு உருவம் காணப்படுவதைக் கொண்டு அறியலாம். ஆனந்தக்குமார சுவாமி, வைதீக மதம் சார்ந்த இக்கலைகள் பௌத்தத் தலங்களில் துவாரபாலகராக அமைக்கப்பட்டமை பௌத்தம் அடைந்த வெற்றிக்குச் சிறந்த அறிகுறியாகும் என்கிறார் (குமாரசுவாமி, ஆனந்த., 1980. ப.62).

இவ் ஆதி வழிபாடு பற்றி பிரமாணங்களிலும், இதிகாசங்களிலும் குறிப்பிடப்பட்டாலும், இவ் ஆரம்பகால கலை வடிவங்கள் பௌத்த ஆலயங்களிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றன. இவை பௌத்த ஆலயங்களில் தனித்தும் பல இடங்களில் மனித – தெய்வ உருவங்களுடன் இணைந்தும், பௌத்த மதத்திற்குச் சேவை செய்பவர்களாக, பௌத்த மதத்தைப் பூசிப்பவர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. இவை பாம்பின் உருவத்தில் இருந்தாலும் எந்த நேரத்திலும் எந்த வடிவத்தையும் எடுக்கும் தன்மை வாய்ந்தவையாகும். வடமொழியில் நாகர்கள் பாம்பாகவும், யானையாகவும் கொள்ளப்படுகின்றனர். பாம்பு வேதகாலத்தில் முகிலாகவும் உருவகிக்கப்பட்டுள்ளது. இவை பல அழிவுகளை ஏற்படுத்தக் கூடியவையாகக் கருதப்பட்டாலும், கீழும் மேலும் உள்ள நீர்நிலைகளைக் காப்பவையாகவும் கருதப்பட்டன.

இலங்கையில் இப்புராதன கலை வடிவங்கள் அநுராதபுரத்தில் உள்ள தூபராம, கண்டக சேத்திய, ஜேதவனராம, அபயகிரி ஆகிய தாதுகர்ப்பங்களின் வாசல் பகுதியின் இருமருங்கிலும், கைபிடிச் சுவர்களின் முடிவிலும் தனிச் சிற்பங்களாகவும் புடைப்புச் சிற்பங்களாகவும் காணப்படுகின்றன. பெரும்பாலான நாக உருவங்கள் மிருக வடிவில் இருந்தாலும் சில இடங்களில் மனித வடிவில் 3, 5, 7 அல்லது 9 பாம்புத் தலைகள் கொண்ட நாகபாம்பு, மனிதத் தலையின் பின்னால் இருந்து மேல் எழுவனவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அபயகிரித் தாதுகர்ப்பத்தில் மனித உருவில் உள்ள நாகினியின் பின்னிருந்து ஐந்து தலை கொண்ட பாம்பு ஒன்று மேலெழுவதாக உள்ளது. இவ்வுருவம் நிற்கும் நிலையில், கலை இரசனைக்குரியதாக வலதுபக்க இடுப்புச் சரிந்து காணப்படுகின்றது. உடலின் பாரத்தை வலது பாதம் தாங்கிக் காணப்படுவதால் முழங்கால் வளைந்து காணப்படுகின்றது. உள்ளங்கையில் பூக்கள் நிறைந்த பூரணகும்பம் காணப்படுகின்றது. இந்நிலை செழிப்பு, வளர்ச்சி ஆகியவற்றை வெளிப்படுத்துகிறதெனலாம். இன்னொரு சிற்பத்தில் நாக அரசனின் கீழ் சிறிய உருவம் ஒன்று அவனின் காலால் மிதிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. தீயசக்திகளை நசுக்குவதை இந்நிலை உணர்த்துகிறது எனலாம்.

ஆனந்தக்குமாரசாமி இந்த நாக, நாகினிச் சிற்பங்கள் பாரூட், சாஞ்சி கலைமரபின் சாயலை ஒத்துக் காணப்படுகின்றதெனக் குறிப்பிட்டுள்ளார் (Coomaraswamy, A. K, 1927, p. 162). ஆனால் பாரூட், சாஞ்சி கலை மரபில் இவ்வுருவங்கள் பெரும்பாலும் மனித வடிவில் உள்ளன. இவை நாக, நாகினி வடிவம் என்பதை இவ்வுருவங்களுக்குக் கீழே நாகர்கள் என எழுதப்பட்டதைக் கொண்டே அடையாளம் காணமுடிகிறது (Parkar, H., 1909, p. 15). ஆனால் இலங்கையிலும் ஆந்திராவிலும் மனித உருவங்களின் பின்னால் நாகத்தலைகள் விரிந்து மேலெழுவதாக உள்ளன. பாரூட், சாஞ்சி மனிதச் சிற்பங்களில் சில நாக உருவங்களுடன் இணைந்து காணப்பட்டாலும் அம்மனித உருவங்கள் தடித்தும், அசைவுத்தன்மை அற்றதாகவும் காணப்படுகின்றன (Zemmer, H., 1955, P.35). ஆனால் இலங்கையிலும் ஆந்திராவிலும் இவ்வுருவங்கள் மெல்லியதாகவும் அசைவுத்தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றன.

பெஞ்சமின் றோலன்ட், கலைநயம் பொருந்திய இச் சிற்பங்கள் அமராவதிக் கலைமரபை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் ஆக்கப்பட்டதாகக் கூறினாலும் இவற்றில் காணப்படும் பல ஆபரணங்களும் தலையலங்காரங்களும் குப்தர் கலை மரபுக்குரிய கலைப்பாணியைப் பிரதிபலிக்கின்றன எனக் கூறியுள்ளார் (Roland, B. p. 216). ஆனால்  ஜேதவனராம, கண்டக சேத்திய தாதுகர்ப்பங்களிலும் காணப்படும் இவ்வுருவங்களின் உடற்கூற்றையும் அலங்காரத்தன்மையையும் நோக்கும்போது, இவை அப்படியே அமராவதிக் கலைப்பாணியை நினைவுபடுத்துவனவாக உள்ளன.

சில இடங்களில் இந்த நாகபாம்பின் உருவம் துவாரபாலகர் சிற்பங்களுடன் இணைந்து காணப்படுகின்றது. இதற்கு அநுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாகச்சிற்பம் சிறந்த சான்றாகும். சாதாரண மனித வடிவில் இருந்து வேறுபட்ட இவ்வடிவம் தடித்த உருவமும் பானை போன்ற வயிறும் கொண்ட குள்ள வடிவில் காணப்படுகின்றது. பெரும்பாலும் இந்துக் கோயிலின் கருவறையின் வாசற்பகுதியில் காணப்படுகின்ற இவை இலங்கை – ஆந்திரப் பௌத்த ஆலயங்களில் நாக உருவத்துடன் இணைந்து காணப்படுகின்றன. வின்சன் சிமித் இலங்கையில் இவ்வாறான சிற்பங்கள், பாதாமிக் சாளுக்கிய கலை மரபுடன் ஒற்றுமைத்தன்மை கொண்டவையாகக் காணப்படுகின்றன என எடுத்துக் காட்டியுள்ளார் (Smith, V. A. 1911, p. 132). ஆனால் இலங்கையில் உள்ள இக்கலை வடிவங்கள் ஆந்திராவுக்குரிய ஏனைய கலைமரபுகளுடன் இணைந்து காணப்படுவதோடு கலை ரீதியாகவும் ஆந்திரக் கலைமரபை ஒத்துக் காணப்படுவதால் இவையும் ஏனைய சிற்பங்களைப் போல் ஆந்திரச் செல்வாக்கால் தோன்றியதெனக் கூறலாம். இச் சிற்பத்தின் இன்னொரு வடிவமான கணங்கள், அமராவதி தூபியில் புடைப்புச் சிற்பங்களாகவும் தனிச் சிற்பங்களாகவும் ஆக்கப்பட்டுள்ளன. இவற்றைத் துவாரபாலகர் சிற்பத்தின் முன்னோடி வடிவம் எனக் கூறலாம். இதையொத்த வடிவங்கள் இலங்கையில் இசுறுமுனிய போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களில் காணப்படுகின்றன.

மனித, தெய்வ உருவங்களுடன் இணைந்து காணப்பட்ட நாகபாம்பின் உருவம் சில இடங்களில் பலதலை கொண்ட தனி உருவமாகவும் காணப்படுகின்றது. இது நாக வழிபாடு பிற்காலத்தில் தனியொரு வழிபாடாக வளர்ச்சிபெற்றதைக் குறிக்கிறது எனலாம். இதற்கு ஜேதவனராமவில் கண்டெடுக்கப்பட்ட கி.பி. 2 ஆம் 3 ஆம் நூற்றண்டுக்குரிய சிற்பம் சிறந்த உதாரணமாகும். ஆந்திராவுக்குரிய ஒருவகைப் பளிங்குக் கல்லால் செய்யப்பட்ட இச்சிற்பத்தை நோக்கும்போது இது ஆந்திராவில் செய்யப்பட்டுப் பின் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதெனக் கருதலாம்.


ஒலிவடிவில் கேட்க

4004 பார்வைகள்