பௌத்த சிற்பங்கள் ஊடாக அறியப்படும் இலங்கை - ஆந்திர உறவுகள் : பகுதி 2
Arts
21 நிமிட வாசிப்பு

பௌத்த சிற்பங்கள் ஊடாக அறியப்படும் இலங்கை – ஆந்திர உறவுகள் : பகுதி 2

December 9, 2024 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

பலதரப்பட்ட மதங்களைப் பின்பற்றிய மக்களின் கலைரசனைக்குரிய பொருளாக இருப்பது புத்தர் சிலைகளாகும். இவை பௌத்த மதத்தின் வழிபாட்டுப் பொருளாக மட்டுமன்றி, சிற்பக் கலையின் முக்கிய  கவின்கலைப் பொருளாகவும் காணப்படுகிறது. இலங்கையில் இச்சிலைகள் இருக்கும் நிலையிலும், நிற்கும் நிலையிலும், கிடக்கும் நிலையிலும் காணப்படுகின்றன. ஆந்திராவில் மகாயான பௌத்த மதம் அடைந்த வளர்ச்சியைத் தொடர்ந்து கி.பி. 1 ஆம் 2 ஆம் நூற்றாண்டுகளில் இச்சிற்பங்களை ஆக்கும் மரபு தோற்றம் பெற்றாலும் இலங்கையில் இதன் தோற்றம் தொடர்பாக முரண்பட்ட கருத்துகள் காணப்படுகின்றன. ஆனந்தக்குமாரசுவாமி, இலங்கையின் காலத்தால் முந்திய இச்சிலைகள் ஆந்திராவுக்குரிய ஒருவகைப் பளிங்குக் கல்லால் ஆக்கப்பட்டிருப்பதால் அங்கிருந்தே இவை கொண்டுவரப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிறார் (குமாரசுவாமி, ஆனந்த.1980). ஆனால் கொடகம்பர, கல்லாலான புத்தர் சிலைகள் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் இருந்து கிடைத்தாலும் இதற்கு முன்பே இவ் உருவங்கள் இலங்கையில் மரம், களிமண், உலோகம், செம்பு, பொன், சுடுமண் முதலியவற்றால் ஆக்கப்பட்டிருந்ததென்றும், இவையே இலங்கையில் சுயமாக புத்தர் சிலை தோன்ற முன்னோடி வடிவங்களாக அமைந்தன என்றும் கூறுகிறார் (Godakumbara,L. E., Vol. xxvi. p.230). ஆனால் எமக்குக் கிடைக்கும் காலத்தால் முந்திய புத்தர் சிலை சம்பந்தமான தொல்பொருள் சான்றுகள் பெரும்பாலும் ஆந்திராவுக்குரிய ஒருவகைப் பளிங்குக் கல்லால் ஆக்கப்பட்டிருப்பதோடு அதன் தொழில்நுட்பம், பாணி அமைப்பும் ஆந்திரக் கலைமரபை ஒத்திருப்பதால் இலங்கையின் ஆரம்பகால புத்தர் சிலைகள் ஆந்திராவில் இருந்தே கொண்டு வரப்பட்டன எனக் கூறலாம்.  இவ்வாறான சிலைகள் பெருமளவுக்கு அனுராதபுர நகரைச் சுற்றியே காணப்படுகின்றன. இவற்றுள் ரூவான் வெலிசாயா தாதுகோபத்தில் உள்ள நிற்கும் புத்தர் சிலையும் அதற்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இருக்கும் நிலையில் உள்ள புத்தர் சிலையும் சிறந்த சான்றாகும். இவ்விரு சிலைகள் பற்றி ஆனந்தகுமராசுவாமி குறிப்பிடுகையில் “இவற்றின் பிரமாண்டமான வடிவங்களும், பௌத்த அறநெறியின் விழுப்பமும் அடக்கமான உணர்ச்சியை வெளிப்படுத்தும் தன்மையும், சிற்பியின் தனித்தன்மையையோ சாதுரியத்தையோ பிரபலப்படுத்தாத கொள்கையும், அமராவதி புத்தர் சிலைகளிலும் உண்டு” என்றார் (குமாரசுவாமி, ஆனந்த.,ப.68).

அண்மையில் ஈழத்துச் சிற்பக் கலை பற்றி ஆராய்ந்த பரணவிதான அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆந்திரக் கலை மரபுக்குரிய மூன்று புத்தர் சிலை பற்றிக் குறிப்பிட்டுள்ளார் (Paranavitana, S.,1936,P.17). இம்மூன்று சிலைகளும் இருக்கும் நிலையில் அமைந்து காணப்படுகின்றன. ஆந்திராவுக்குரிய பளிங்குக் கல்லால் ஆக்கப்பட்ட முதலாவது புத்தர் சிலை 4 ½ அங்குல உயரமுடையது. தியான முத்திரைக் கைகளுடன் யோகநிலையில் வீற்றிருக்கும் இச்சிற்பத்தின் கீழ் எதுவித ஆசனமும் இல்லை. அதற்குப் பதிலாக, சிற்பத்தைச் சுற்றி அலைபோன்ற கோட்டினை நெளியலாகக் காணலாம்.  இது பாயாக அல்லது மடித்துப் போடப்பட்ட துணியாக இருக்கலாம். சாந்தமும் கருணையும் பொருந்திய இச்சிற்பத்தின் தலைப்பாகை, தலைமயிர், முகபாவம், ஆடை அணியப்பட்டுள்ள விதம் என்பன அப்படியே ஆந்திரச் சிற்ப முறையினை ஒத்துள்ளது.  2 ⅔ அங்குல உயரமுடைய இரண்டாவது புத்தர்சிலை முதலாவது சிலையைப் போலத் தியான நிலையில் உள்ளது. இச்சிற்பத்தின் பல்வேறு பாகங்கள் சிதைவடைந்து விட்டமையினால் இவற்றின் சிறப்பம்சங்களை அதிகம் விரிவாக்கிக் கூறமுடியாதுள்ளது.  மூன்றாவது புத்தர் சிலை 4 ¾ அங்குல உயரமுடையது. ஒரு மரத்தின் கீழ் சிம்மாசனத்தில் மெத்தை மீது புத்தர் அமர்ந்திருப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.  அவருடைய தலையைச் சுற்றி ஒளிவட்டம் காணப்படுகின்றது. சிலையின் வலது பக்கத்தில் ஒரு தெய்வீக வடிவம் கையில் சாமரை பிடித்துக் கொண்டு காற்றிலே மிதப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது (ibid). இச்சிற்பத்தின் சில பாகங்கள் உடைந்த போதிலும் இவற்றை ஆக்குவதற்குக் கையாண்டிருக்கும் தொழில்நுட்பத் தன்மை ஆந்திர அமைப்பினை நினைவுபடுத்துகிறது.

இலங்கையில் உள்ள காலத்தால் முந்திய புத்தர் சிலைகளுள் 1946 ஆம் ஆண்டு மகாஇலுப்பளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிற்கும் நிலையிலான புத்தர்சிலை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ஆந்திரப் பிரதேசத்துக்குரிய ஒருவகைப் பளிங்குக்கல்லால் ஆக்கப்பட்ட இச்சிலையின் உயரம் 6 அடியாகும். இடதுகை அபய முத்திரையுடன் காணப்படும் போது வலதுகை போர்த்தப்பட்ட காவி உடையினை நெஞ்சுடன் அணைத்தபடி பிடித்துக் கொண்டிருக்கிறது (Paranavitana,S.,1936:ப.17). வலது கையின் மேலால் மடிக்கப்பட்ட காவி உடை மீண்டும் பாதம் நோக்கி வந்து பாதத்திற்குச் சற்று மேல்நோக்கித் தொடங்கும் காவி உடைக்குச் சமமாக நிற்கிறது. காவி உடையின் மடிப்புகள் தெளிவாகத் தெரிகிறது. சிலையின் நெற்றியில் காணப்படும் உர்ணம் (திலகம்), சிங்களச் சிற்பிகளால் ஆக்கப்பட்ட சிலைகளிலே இடம்பெறாத அமராவதிப் பாணியை ஒத்துக் காணப்படுகிறது. இதை ஒத்த பௌத்த சிலைகள் நாகர்ஜீனகொண்டாவில் காணப்பட்டாலும் அதை விட இச்சிலை சிறந்ததாகும் (இந்திரபாலா.கா, 8-8-68). பொதுவாக இச்சிற்பத்தின் பாணியைமைப்பு, உடையின் மடிப்புகள், எல்லையற்ற ஞானம், எல்லையற்ற கருணை, நிர்வாண நிலையிலுள்ள களங்கமற்ற அமைதி என்பன கி.பி 2 ஆம் நூற்றாண்டு ஆந்திரக் கலைமரபினை  நினைவுபடுத்துகின்றன (Wijesekara,N.1962 p.56). பிற்பட்ட ஆந்திரக் கலைமரபைச் சேர்ந்த புத்தர் சிற்பம் ஒன்று அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு தற்பொழுது கொழும்பு நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது. யோகநிலையில் காணப்படும் இச்சிலை 5 அடி 4 அங்குலம் உயரமுடையது. இதன் உடல் அமைப்பு, காவி உடையின் மடிப்புகள் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குரிய அமராவதிக் கலைமரபுச் சாயலைக் கொண்டுள்ளது (ibid).

தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் வரலாற்றுக் காலத்தின் தொடக்கப் பகுதியில் பௌத்தர்களாகவும், பௌத்தத்தை ஆதரிப்போர்களாகவும் இருந்திருக்கலாம் என்பதற்கு இலங்கையின் வடக்கு – கிழக்குப் பிராந்தியங்களில் காணப்பட்ட பௌத்த சின்னங்கள் சான்றாகவுள்ளன. இப்பிராந்தியங்களில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தமிழ்க் குடியேற்றங்கள் காணப்பட்டதுடன் முக்கிய பிரதான சைவ ஆலயங்களும் காணப்பட்டன (சிற்றம்பலம்,சி.க,1984,ப.111). இங்குள்ள கந்தரோடை, வல்லிபுரம், மாதோட்டம், கோணேஸ்வரம் என்பன முக்கிய நகரங்களாகவும் வர்த்தக மையங்களாகவும் விளங்கின. இதனால் பலநாட்டு வர்த்தகர்கள் நடமாட்டம் ஏற்பட்டதுடன் அவர்களது பண்பாட்டுச் செல்வாக்கும் இடம்பெற்றது. குறிப்பாக கிரேக்க, ரோம, சீன, இந்தியத் தொடர்பின் முக்கியத்துவத்தை இலக்கியங்களிலும், தொல்பொருட் சின்னங்களிலும் காணலாம். இவ்வாறான இடங்களில் பௌத்த சின்னங்கள் காணப்பட்டமைக்கு சமகாலத்தில் தென்னிந்தியாவில் சிறப்பாக, ஆந்திராவில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்ததுடன் இலங்கையின் ஏனைய பிராந்தியங்கள் போல இப்பிராந்தியங்களும் ஆந்திராவுடன் நெருங்கிய கலாசாரத் தொடர்பினைக் கொண்டிருந்ததே காரணமாகும். இதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டில் பல்லவ, சோழ, பாண்டிய அரசுகள் எழுச்சியடைந்த போது அவற்றின் செல்வாக்கும் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் குச்சவெளி என்னும் இடத்தில் 1965 ஆம் ஆண்டு தலையில்லாத புத்தர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆறு அடி உயரம் கொண்ட நிற்கும் நிலையில் அமைந்த இச்சிற்பம் ஒருவகைச் சுண்ணாம்புக் கல்லினால் அழகிய வேலைப்பாடுகளுடன் ஆக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் காவி உடைக்குக் கீழே பாதங்களுக்கு இடையில் இரு மலர்ச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இப்படியான சிற்பத்தை இலங்கையில் வேறு எந்தப் புத்தர் சிலையிலும் காண முடியாது (இந்திரபாலா.கா., 8-8-86). இதன் அங்க அமைப்புகளும் உடை அணியப்பட்டுள்ள விதமும் கி.பி 2 ஆம் நூற்றாண்டுக்குரிய ஆந்திரப் புத்தர் சிலைகளின் அமைப்பினை நினைவுபடுத்துகின்றது (Wijeyasekara,N,1962,p.15).

கிழக்கு மாகாணத்தைப் போன்றே வடமாகாணத்தின் சில பகுதிகளிலும் பௌத்த கலைச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுல் கந்தரோடை, சுன்னாகம், வல்லிபுரம், புத்தூர் என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கந்தரோடையின் தொல்பொருளியற் சிறப்பினை வெளியுலகிற்கு முதன்முதலாக எடுத்துக் காட்டிய பெருமை போல் பீரிஸ் என்ற அறிஞரைச் சாரும். இவரைத் தொடர்ந்து பிடல் என்பவரும், பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொனற், பரொன்சன், விமலா பெக்லி ஆகியோரும் இப்பணியை தொடர்ந்து செய்தனர். இவர்களின் பணியால் இந்து, பௌத்த மத வழிபாட்டுடன் தொடர்புடைய 20 இற்கு மேற்பட்ட ஸ்தூபிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஸ்தூபிகளுக்குரிய முடிகள், தூண்கள், கர்மிகா என்பனவும் அழிபாடுகளிடையே கண்டுபிடிக்கப்பட்டன. இது மேலும் பல ஸ்தூபிகள் இங்கு இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகின்றது (Godakumbara,C.E,1968p.12). இங்கு ஆந்திரத் தொடர்பை வலியுறுத்த பௌத்தக்கலைகள் மட்டுமல்ல; நாணயங்கள், கல்வெட்டுகள் என்பனவும் காணப்படுகின்றன. இங்கு கண்டெடுக்கப்பட்ட பௌத்தச் சின்னங்களில் புத்தரது சிலைகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இதில் இருக்கும் நிலையிலான தலையற்ற புத்தர் சிலை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ஆந்திராவுக்குரிய ஒருவகைப் பளிங்குக் கல்லால் ஆக்கப்பட்ட சிலை, 15 அந்தர் நிறையினை உடையது. மார்பகம் மட்டும் 5 ½ அடி அகலம் கொண்டது (ibid). முழங்காலில் நின்று வணங்கக்கூடிய வகையில் தட்டையான ஆசனத்தில் செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தின் கால் உடைந்த நிலையில் உள்ளது. சிலையின் வலதுபக்க முழங்கை தனியான கல்லில் செதுக்கப்பட்டு இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மடிப்புக் குலையாத நிலையில் இதன் போர்வை வலதுபக்க மார்பை மூடிய நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் சாந்தமும் கருணையும் அமராவதிக் கலை மரபை அப்படியே பிரதிபலிக்கின்றது. நிற்கும் நிலையில் அமைந்த புத்தர் சிலை ஒன்று 1916 ஆம் ஆண்டு போல் பீரிஸ் என்பவரால் சுன்னாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது (Lewis J.P., 1916, p.96). 12 அடி உயரமும் 20 அங்குல மார்பகமும் கொண்ட இச்சிலை ஒருவகைப் பளிங்குக் கல்லால் ஆக்கப்பட்டது. மேல் அங்கியின் அமைப்பு பாதத்தினை மறைத்த நிலையில் இடது கையில் இருந்து கீழ்நோக்கித் தொங்குவதாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதில் ஆந்திரக் கலை மரபின் சாயலைக் காணலாம்.

ஈழத்தில் தொன்மையான கலாசார வரலாற்றைக் கொண்டுள்ள பிரதேசங்களுள் யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்த வல்லிபுரக் குறிச்சியும் ஒன்றாகும். இங்குள்ள விஷ்ணு கோவிலுக்கு அருகே மிகப் பழைய கட்டிட அழிபாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (சிவசாமி.வி, 1973.ப.98). அத்துடன் இப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வின் போது தற்போதைய வல்லிபுரக் கோவிலுக்கு வடக்கே 50 யார் தொலைவில் புத்தரது சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வகைப் பளிங்குக் கல்லால் ஆக்கப்பட்ட நிற்கும் நிலையிலான இப்புத்தர் சிலையின் வலதுகரம் உடைந்த நிலையில் உள்ளது. வலது மார்பும் தோளும் காவி உடையினால் மறைக்கப்பட்டுள்ளது. ஆடையின் அமைப்பு பாதத்தினை மறைத்த நிலையில் பாதத்தில் இருந்து மடிக்கப்பட்டு மீண்டும் இடது கையில் இருந்து கீழ்நோக்கிச் செல்வதாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் பொதுவான அமைப்பும் ஆடை மடிப்பில் காணப்படும் தெளிவான தன்மையும் ஆந்திரக் கலைமரபின் செல்வாக்கைப் பிரதிபலிக்கின்றன. சிறிது காலம் யாழ்ப்பாணப் பழைய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த இச்சிலை தற்போது பர்மிய நாட்டில் காணப்படுகின்றது (Lewis,J.P., 1916). 1954 ஆம் ஆண்டு புத்தூர் என்ற இடத்தில் ஒரு புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. புத்தூரையும் சுன்னாகத்தையும் இணைக்கும் பிரதான வீதியின் மேற்குப் பகுதியில் நிலாவரை என்ற இடத்திற்கு அண்மையில் உள்ள தோட்டத்தில் இச்சிலை காணப்பட்டது. ஒரு வகைச் சுண்ணாம்புக் கல்லால் ஆக்கப்பட்ட இச்சிற்பத்தின் பல பாகங்கள் உடைந்த நிலையில் உள்ளன. இது 3 அடி 3 அங்குல உயரமுடையது. தலை மாத்திரம் 1 அடி 2 அங்குலம் உயரத்தைக் கொண்டது (Ceylon Today.,p.17). இச்சிலையின் அங்க அமைப்பும் உடையின் பாணி அமைப்பும் வல்லிபுரப் புத்தர் சிலையை ஒத்துள்ளன.

நீண்ட கதைகளை சிற்பங்கள் மூலம் வெளிப்படுத்துவது தென்னாசிய சிற்பக் கலையில் காணக்கூடிய சிறப்பான அம்சங்களில் ஒன்று. பெளத்த நூல்களில் கூறப்பட்ட புத்தருடைய வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட பல சம்பவங்களைப் புடைப்புச் சிற்பங்களாக வெளிப்படுத்தியமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சிற்பங்கள் அக்கால மக்களது சமய நம்பிக்கைகளை மட்டும் புலப்படுத்தவில்லை; அக்கால மக்களது வாழ்க்கை முறையினையும் பண்பாட்டுச் சிறப்பினையும் பிரதிபலித்து நிற்கின்றன. இத்தகைய சிற்பங்களை பொதுவாக ஸ்தூபியைச் சுற்றிவர அமைந்த அளிகள், வேதிகைகள், தோறணைப் பகுதியில் காணப்பட்ட தூண்கள் என்பனவற்றில் காணலாம். இதற்கு ஆந்திரா, குறிப்பாக அமராவதி ஸ்தூபிகள் சிறந்த உதாரணங்களாகும். ஆனால் ஈழத்தைப் பொறுத்தவரை இப்படியான கலை அம்சம் அதிகம் வளரவில்லை என்றே கூறலாம் (Wijeyasekara,N.1962,144). எனினும் யாதகக் கதைகள் சித்தரிக்கபட்ட ஒரு சில புடைப்புச் சிற்பங்கள் அனுராதபுரத்தின் சில பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் மயாதேவி கனவு, சித்தார்த்தர் துறவு, ஸ்ராவஸ்தி அற்புதம் என்பன குறிப்பிடத்தக்கன. ஆரம்பத்தில் இவை ஆந்திராவில் ஆக்கப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிக்க வேண்டும் (Paranavitana,S,1971,p.129). ஆயினும் பின்பு இவை இலங்கையிலேயே படைக்கப்பட்டிருக்கலாம்.

இவ்வாறான புடைப்புச் சிற்பங்களில் ஸ்ராவஸ்தியில் நடந்த அற்புதத்தைச் சித்திரிக்கும் சிற்பமானது கலை வேலைப்பாட்டில் காலத்தால் முந்தியதாகும் (Wijeyasekara,N,1962). புத்தரது வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளதாக பௌத்த யாதகக் கதைகள் கூறுகிறது. இதில் யமக பாடிஹாரியம் எனப்படும் இரட்டை அற்புதம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ஒருமுறை அவர் மந்திர சக்தியினால் ஆகாயத்தில் எழுந்து நின்றபோது முதலில் உடலின் மேற்பாகத்திலிருந்து நெருப்பும், கீழ்ப்பாகத்தில் இருந்து நீரும் புறப்பட்டன என்றும்; பின்னர் மேற்பாகத்திலிருந்து நீரும் கீழ்ப்பாகத்திலிருந்து நெருப்பும் புறப்பட்டனவென்றும்; இதே போன்று உடலின் இடது, வலது புறங்களிலிருந்து நீரும் நெருப்பும் மாறிமாறி வெளிப்பட்டன என்றும் அப்பௌத்த நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு வேறுபட்ட இருபத்திரண்டு அற்புதங்கள் மூன்று இடங்களில் நடந்தன. அதில் ஒன்றே ஸ்ராவஸ்தி நகரமாகம் (Wijeasekara,N,1962,P.144). இவ் அற்புதத்தைப் புலப்படுத்துவதாகவே முன்பு கூறப்பட்ட புடைப்புச் சிற்பம் விளக்குகிறது.  

இவ்வாறான சிற்பங்கள் வட இந்தியாவின் காந்தராவிலும் (Paranavitana,S,1971) தென்னிந்தியாவில் ஆந்திராவிலும் (ibid) காணப்படுகின்றன. அண்மையில் இலங்கையில் அனுராதபுரத்தில் பழுதடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பமும் இவ் அற்புதத்தையே வெளிப்படுத்துவதாகப் பேராசிரியர் வோகெல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் (Paranavitana.S.1936,p.16). ஆயினும் இலங்கைச் சிற்பத்திற்கும் காந்தரா சிற்பத்திற்கும் அமைப்புரீதியில் வேறுபாடு காணப்படுகின்றது. அனுராதபுர சிற்பத்தில் புத்தர் அபய முத்திரைக் கையுடன் ஆசனத்தில் அமர்ந்திருக்க அவரைச்சூழப் பலர் காணப்படுகின்றனர் (Wijeyasekara.N.1962,plat). ஆனால் காந்தாராவில் புத்தர் பத்மாசனத்தில் வீற்றிருக்க அவரைச் சூழப் பெருந்தொகையான தெய்வங்களும் பிறவும் காணப்படுகின்றன (இந்திரபாலா.கா.1969.08.01). ஆனால் ஆந்திரச் சிற்பத்தைப் பொறுத்தவரை அது இலங்கையுடன் நெருங்கிய ஒற்றுமைத் தன்மையைக் கொண்டுள்ளது (Saraswati,S.K, 1975. Plate, XII). இலங்கைச் சிற்பத்தில் காணப்படும் ஆட்களுடைய வடிவம், அவர்கள் அணிந்துள்ள தலைப்பாகைகளின் அமைப்பு, முதுகினைக் காட்டி நிற்கும் பாத்திரங்கள் செதுக்கப்பட்டுள்ள முறை, ஆண் பாத்திரங்கள் அணிந்துள்ள இடைத்துண்டின் வடிவம், இந்த இடைத்துண்டுகள் அணியப்பட்டுள்ள முறை, ஆசனங்களின் வடிவம், அவற்றில் காணப்படும் கோலங்கள் என்பன கி.பி 2 ஆம் நூற்றாண்டுக்குரிய அமராவதிக் கலை மரபை நினைவூட்டுகிறது (இந்திரபாலா, கா.1-8-69). அண்மையில் ஈழத்துச் சிற்பக்கலை வரலாறு பற்றி ஆராய்ந்த நந்தா விஜயசேகர என்பவர் இச்சிற்பம் பற்றிக் குறிப்பிடுகையில் ”இவற்றை ஆக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகைச் சுண்ணாம்புக்கல்லும் சிற்பம் வடிப்பதில் கையாளப்பட்டுள்ள கலைநுட்பங்களும் ஆந்திராவை ஒத்துள்ளமையால் இவை அங்கு ஆக்கப்பட்டுப் பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம்” என்றார் (Wijeyasekara, N, 1962, p.44).

அண்மையில் அனுராதபுரத்தில் கி.பி 4 ஆம் நூற்றாண்டுக்குரிய ஒரு புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சற்றுப் பழுதடைந்த நிலையில் காணப்படும் இச்சிற்பம் தற்போது கொழும்பு நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது (Paranavitana,S,1971,p.129). இச்சிற்பம் அமராவதி, நாகர்ஜீனகொண்டா போன்ற இடங்களில் காணப்பட்ட ஒரு வகைச் சுண்ணாம்புக்கல்லில் ஆக்கப்பட்டிருந்தமையால் இதுவும் முன்பு குறிப்பிட்ட சிற்பத்தைப் போன்று ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் (ibid). இதில் சித்தரிக்கப்பட்டுள்ள காட்சியானது புத்தரது பிறப்புடன் சம்பந்தப்பட்ட மாயாதேவியின் கனவினைப் பிரதிபலித்து நிற்கிறது.

பௌத்த யாதகக் கதைகள், இளவேனிற் காலத்தில் ஒருநாள் மாயாதேவி உறங்கிக் கொண்டிருக்கையில் ஒரு கனவு கண்டார் என்றும், அந்தக் கனவில் ஆறு தந்தங்களைக் கொண்ட ஒரு இளம் வெண்ணிற யானை மாயாதேவியின் கர்ப்பத்தை அடைந்தது எனவும், அந்தவேளையில் பல்லாயிரக்கணக்கான தெய்வங்கள் காட்சியளித்தன என்றும் கூறுகின்றன. இவ்வாறான ஒரு கதையே அனுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட புடைப்புச் சிற்பத்தில் மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது (Wijeyasaekara,N,1962). இது போன்ற சிற்பங்கள் ஆந்திரா ஸ்தூபிகளிலும், பிற பௌத்த வழிபாட்டுக் கட்டிடங்களிலும் காணப்படுகின்றன (Barrett,D,1954 pl.VII). அத்துடன் இவ் இரு நாட்டுச் சிற்பங்கள் வடிவ அமைப்பிலும், பாணி அமைப்பிலும் ஒரு நாட்டு உற்பத்தி போன்று காணப்படுகின்றன. சிறப்பாகப் பெண் அணிந்துள்ள அதிக இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட சேலையும் கண்களின் அமைப்பும் நெருங்கிய ஒற்றுமைத்தன்மை கொண்டுள்ளன (இந்திரபாலா,கா 24-7 68).

புத்தரது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அவரது துறவறம் பற்றிய சம்பவம், சிற்பக் கலைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவற்றைச் சித்திரிக்கும் புடைப்புச் சிற்பங்கள் ஆந்திராவிலும் பிற பௌத்த நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் கூட இத்தகைய புடைப்புச் சிற்பம் ஒன்று 1875 ஆம் ஆண்டு அம்பலாந்தோட்டைக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. புத்தரது பெருந்துறவினைக் குறிக்கும் 11 ½ சதுர அங்குலப் பரப்பில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது (Paranavitana, S., 1936, p. 16). புத்தர் ராஜபோகங்களை அனுபவித்த பின்னர் ஒருநாள் தன் மனைவி யசோதராவையும், மகன் ராகுலனையும் விட்டு யாருக்கும் தெரியாமல் தன்னுடைய குதிரையில் ஏறி வெளியே சென்று துறவறம் பூண்டதா பௌத்த நூல்கள் கூறுகின்றன. இத்தகைய சம்பவமே அமராவதியிலும் இலங்கையிலும் உள்ள புடைப்புச் சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இலங்கையில் செதுக்கப்பட்ட சிற்பத்தில் இக்காட்சி சற்று வேறுபட்ட முறையில் செதுக்கப்பட்டுள்ளது (இந்திரபாலா, கா., 1-8-69). அமராவதி சிற்பத்தில் அழகாகச் சித்திரிக்கப்பட்ட இக்காட்சியில் சித்தார்த்தர் குதிரையில் ஏறிச் செல்வதையும் புடைசூழச் சிலர் நிற்பதையும் ஒருவர் குடைபிடிப்பதையும் காணலாம் (Barrett, D. 1954, pl- XIII). ஆனால் இலங்கைச் சிற்பத்தில் சித்தார்த்தர் அபயமுத்திரைக் கையுடன் நிற்கிறார். அவருக்குப் பின்னால் கந்தரா குதிரை நிற்கிறது. மூன்று தெய்வங்கள் வணங்கி நிற்க ஒரு தெய்வம் அவருடைய பிரசித்தி பெற்ற பிட்ஷா பாத்திரத்தைக் கொண்டுவந்து கொடுக்கிறது. அருகில் குதிரைப் பாகன் நிற்கின்றான் (Wijesekara, N. 1962, pl-72). இக்காட்சி இல்லத்தை விட்டுச் செல்லும் காட்சியன்று, இல்லத்தை விட்டு வெளியேறிய பின் தன் குதிரையையும் பாகனையும் விட்டுத் துறவியாக, பிட்ஷா பாத்திரத்தையும் ஏற்றுச் செல்லுகின்ற காட்சியாகும் (இந்திரபாலா. கா.. 1-8-69). இச் சிற்பத்தின் பாணி அமைப்பு முற்பட்ட அமராவதி கலைப்பாணியில் இருந்து சற்று வேறுபட்டு இருப்பதால் சில கலை வரலாற்று ஆசிரியர்கள் இச்சிற்பம் குப்தர் கலை மரபிற்கு அல்லது பல்லவ கலை மரபிற்கு உரியதாகலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இச்சிற்பத்தை ஆக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள பளிங்குக்கல் ஆந்திரப் பிரதேசத்திற்கு உரியது மட்டுமன்றி, புத்தருடைய உடல் உறுப்புகள் சற்றுப் பெரிதாக இருப்பதும் குறிஞ்சியின் அமைப்பு, பாகனுடைய தலைப்பாகையின் அமைப்பு, முகில்கள் சித்தரிக்கப்பட்டுள்ள முறை என்பனவும் பிற்பட்ட அமராவதிக் கலைப்பாணியை ஒத்திருக்கிறது. ஆகையால் இச்சிற்பம் ஆந்திராவில் செதுக்கப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் (Wijesekara, N., 1962).

சிகிரியாவில் காணப்படும் தாதுகர்ப்பத்தில் சுண்ணாம்புக் கல்லினால் ஆன புடைப்புச் சிற்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நான்கு பக்கங்களைக் கொண்ட புடைப்புச் சிற்பத்தின் ஒவ்வொரு பகுதியும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சற்றுப் பழுதடைந்த நிலையில் காணப்படும் இச்சிற்பம் இந்தியப் புராணக் கதைகளில் கூறப்படும் மேருமலையைச் சித்திரிப்பதாகக் கருதப்படுகிறது (Paranavitana. S. 1936, p. 16). இச் சிற்பத்தை ஆக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒருவகைச் சுண்ணாம்புக்கல் ஆந்திராவுக்கு உரியதாக இருப்பதாலும் இச்சிற்பத்தில் காணப்படும் உருவங்கள் அமராவதியை ஒத்திருப்பதாலும் இது ஆந்திராவில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம். தற்பொழுது இது கொழும்பு நூதனசாலையில் காணப்படுகிறது.

இதேபோல பொலநறுவையில் அழிந்த நிலையில் காணப்படும் பபலு விகாரையின் தூபியில் இருந்து அமராவதி கலைமரபுக்குரிய சில புடைப்புச் சிற்பங்கள் 1909 ஆம் ஆண்டு எச். சி. பி. பெல் என்பவரால் கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இவ்விகாரை கி. பி. 12 ஆம் நூற்றாண்டுக்குரியதாயினும் இதில் காணப்படும் சில புடைப்புச் சிற்பங்கள் முற்பட்ட அனுராதபுர காலத்தைச் சேர்ந்தவையாகும். இத்தகைய சிற்பங்கள் அமராவதியில் இருந்து கொண்டுவரப்பட்டு நீண்டகாலமாக அனுராதபுரத்தில் வழிபாட்டுச் சின்னங்களாகப் பயன்படுத்தப்பட்டு, பின்னர் பொலநறுவை பபலு விகாரையில் இடம்பெற்றிருக்க வேண்டும் (Paranavitana, S., 1936).

ஈழத்து பௌத்த சிற்பக் கலையில் பிரதானமான ஒரு கலையம்சமாக சந்திரவட்டக்கல் (Moon Stone) இடம்பெறுகிறது. இலங்கைக்குரிய பௌத்த சிற்பக் கலையம்சங்கள் பல இந்தியாவில் இருந்து பௌத்தத்துடன் புத்தூக்கம் பெற்றுள்ள போதிலும், இந்நாட்டிற்கே உரிய சில தனித்துவக் கலையம்சங்களும் இங்கு தோற்றம் பெற்றன என்பதை மறுப்பதற்கில்லை. இதற்குச் சந்திரவட்டக்கல் சிறந்த உதாரணமாகும். இதில் காணப்படும் பல்வேறு சிற்ப வடிவங்கள் இலங்கைக்கேயுரிய தனித்துவக் கலையம்சமாகக் காணப்படுகின்றது. ஆயினும் ஈழத்தில் இக்கலையம்சம் இடம்பெறுவதற்கு ஆந்திரப் பிரதேசம் முன்னோடியாக இருந்ததென்பதற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன (Paranavitana, S. vol. XVII).

சந்திரவட்டக்கல் என்பது பௌத்தமத வழிபாட்டுடன் தொடர்புடைய விகாரை, ஸ்தூபி அல்லது சிலையகம் போன்ற கட்டிடத்தின் பிரதான வாசலின் படிக்கட்டுக்கு முன்பு அரைவட்ட வடிவில் அமைந்த பாகமாகும் (Ibid). இக்கலையம்சம் இந்துக் கோவில் சிலவற்றில் காணப்பட்ட போதிலும் ஈழத்தில் இது பெரும்பாலும் பௌத்த கட்டிடங்களுடன் தொடர்புடையதாகக் காணப்படுகிறது. காலத்தால் முந்திய சந்திரவட்டக் கற்கள் மிகிந்தலை, அபயகிரி விகாரை, கந்தரோடை போன்ற இடங்களில் காணப்பட்டன (Ibid). இவை கி.மு. 1 – 2 ஆம் நூற்றாண்டுக்குரியவை. தொடக்ககால சந்திரவட்டக் கற்கள் அலங்காரம் அதிகாரம் இல்லாது வெறுமையானதாகக் காணப்பட்டது. இது ஆந்திரக் கலைத் தொடர்பைக் காட்டுகிறது. குறிப்பாக அமராவதி, நாகர்ஜுனகொண்டா போன்ற இடங்களில் உள்ள சந்திரவட்டக் கற்கள், மூன்று கற்களை இணைப்பதன் மூலம் ஆக்கப்பட்டது. இதில் ஒரு அரைவட்டக் கல்லில் மாத்திரம்தான் சிற்பங்கள் காணப்படும். இத்தகைய அம்சங்கள் கந்தரோடை, அனுராதபுரத்திலுள்ள அபயகிரி விகாரை போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சந்திரவட்டக் கல்லில் காணப்பட்டன (Paranavitana, S., 1936). இந்தியச் சிற்பக் கலைமரபில்  தாமரைப்பூ ஒரு முக்கிய அம்சமாகக் காணப்பட்டது. பல மதங்களின் பொதுவான சின்னமாகக் காணப்பட்ட இத்தாமரைப்பூ, ஆந்திரச் சந்திர வட்டக் கல்லில் முக்கிய கலையம்சமாக இடம்பெற்றது. இவற்றின் செல்வாக்கு இலங்கைச் சந்திரவட்டக்கல்லிலும் இடம்பெற்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் திரியாய் என்ற இடத்தில் உள்ள வட்டமான சைத்தியக் கிருகத்தில் காணப்பட்ட சந்திரவட்டக் கல்லில் இதனைக் காணலாம்.

ஆனால் பிற்பட்ட சந்திரவட்டக்கல்லின் வடிவ அமைப்பிலும் அலங்காரத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆரம்பத்தில் மூன்று அரைவட்டக் கற்கள் கொண்டு இணைக்கப்பட்ட கலையம்சத்தில், பின்பு எட்டு அரைவட்டக் கற்கள் இணைக்கப்பட்டதுடன் பொலநறுவைக் காலத்தில் அது முழுவட்ட வடிவமாகவும் மாறியது (Wijesekara, N., 1962). அதேபோல அலங்காரத்திலும் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இதில் இலங்கைக்குரிய தனிக் கலையம்சமாக யானை, குதிரை, நாக்கு, தீ, கொடிப்பின்னல் என்பன இடம்பெற்றன. இவை ஈழத்துச் சிற்பக்கலை வரலாறு இந்தியப் பொதுமைக்கு உட்பட்டு வளர்ந்தாலும், தனக்குரிய சில தனித்துவங்களைக் கொண்டு வளர்ந்துள்ளது என்பதனைக் காட்டுகின்றது. மேலே கூறப்பட்ட பல சிற்பங்களைத் தவிர, ஆந்திரக்கலை மரபுக்குரிய வேறும் சில சிற்பங்கள் ஈழத்தில் சரியாக ஆராயப்படாமலும் கண்டுபிடிக்கப்படாமலும் உள்ளன. இவை எதிர்கால ஆய்வினால் வெளிக்கொணரப்படலாம்.

எனவே நாம் ஆந்திராவுக்கும் ஈழத்துக்கும் இடையிலான நீண்ட காலக் கலாசாரத் தொடர்பிற்குப் பௌத்த சிற்பங்களையும் சிறந்த சான்றுகளாகக் கொள்ளலாம். ஈழத்தில் இக்கலைகள் தோன்றி வளர்வதற்கு ஆந்திரக் கலைமரபே முன்னோடியாக அமைந்தது. இது ஈழத்துக் கலை வரலாற்றில் ஏற்பட்ட ஒரு காலப்பகுதிக்குரிய நிகழ்ச்சியைக் குறித்து நிற்கும் அதேவேளை, மரபு வழியாக ஈழத்துப் பண்பாட்டு வரலாற்றில் தென்னிந்தியா செலுத்திய பங்களிப்பினையும் காட்டி நிற்கிறது. ஈழத்தின் ஆதிக் குடிகளும் நாகரிகத்துக்கு வித்திட்ட பெருங்கற்காலப் பண்பாடும் தென்னிந்தியாவில் இருந்து, சிறப்பாக, தமிழ்நாட்டில் இருந்து வந்தன என்பதை தொல்பொருட் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. பின்னர் வரலாற்றுக் காலத்தில் இடம்பெற்ற பௌத்தமும் பௌத்தப் பண்பாடும் இதே பிராந்தியங்களில் இருந்து பரப்பப்பட்டன என்பதை, தொல்பொருள் சான்றுகள் மட்டுமன்றி சாசன, இலக்கியச் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. இவற்றின் ஒரு அம்சமாகவே ஆந்திரக்கலை மரபுக்குரிய ஈழத்துச் சிற்பங்கள் விளங்குகின்றன.

உசாத்துணை

  1. இந்திரபாலா, கா. 08.08.1968 ”அமராவதிப் பாணியில் அமைந்த அரிய சிலைகள்”, வீரகேசரி வார வெளியீடு.
  2. 31.05.1969 ”ஆந்திரப் படிமக் கலையின் செல்வாக்கு”, வீரகேசரி வார வெளியீடு.
  3. காசிநாதன், நடன.  1978, ”கட்டிடக் கலை”, தமிழக தூண்கலைகள், (ப.ஆ) ஞானப்பிரகாசம் கமலையா (சென்னை) பக் 82-93
  4. சிவசாமி, வி. 1978, ”இலங்கைச் சிற்பங்கள்” தமிழாராய்ச்சியின் புதிய எல்லைகள், (ப.ஆ) வானமாமலை, நா. சென்னை. பக்.100-112.
  5. சிற்றம்பலம், சி.க 1984 ”ஈழமும் இந்து மதமும் – அனுராதபுர காலம். சிந்தனை, (ப.ஆ) சிற்றம்பலம், பக் 108-141 (திருநெல்வேலி)
  6. நீலகண்டசாஸ்திரி,கே.ஏ 1976, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டார் குறிப்புக்கள் (சென்னை)
  7. Bandaranayake,Senaka 1974, Sinhalese Monastic Architecture(Leiden)
  8. Brown,Percy. 1976, Introduction to Indian Art (ed) Mulk Raj Ananda (Madras)
  9. Fergusson, J.T.  1873, Tree and Serpant worship or illustration of mythology and Art in India (London)
  10. Geiger,W. 1960,(Eng.tr), Mahavamsa (Colombo)
  11. Godakumbara,C.E .1965 “A bronze buddha image from Ceylon” Artibus Asia, vol.xxvi (Switzerland)pp. 230-236
  12. Hocart, A.M 1924 -t28, “Archaeological Summary” Ceylon Journal of Science Vol II, (London) pp. 73-97
  13. Lewis,J.R 1916, “Some notes on Archaeological matters in the northern province ” Ceylon antiquary and literary Register, Vol II (Colombo)
  14. Paranavitana, 1936, Art of Ancient Sinhalese (Colombo)
  15. 1971, “Example of Andhra Art recently found in Ceylon” Annual Bibliography of Indian Archaeology, Vol xx (Leyden) pp. 13-15
  16. Parkar, H, 1909, Ancient Ceylon (London)
  17. Roland Benjamin, 1953, The Art and Architecture of India (Maryland)
  18. Saraswathi,S.K, 1975, A survey of Indian Sculpture (New Delhi)
  19. Smith,V.S. 1911, A History of fine Arts in India and Ceylon (Oxford)
  20. Wijayasekara,N, 1962. Early Sinhalese Sculpture (Colombo)

ஒலிவடிவில் கேட்க

2262 பார்வைகள்