மலையகம் இலங்கை தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. புவியின் சார்பாக சப்ரகமுவ குன்றுகளைத் தவிர்த்து கடல் மட்டத்திலிருந்து முன்னூறு மீட்டருக்கு மேல் அமைந்துள்ள பகுதி ‘மலையகம்’ என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சமூகஞ்சார் வரைவிலக்கணங்கள் படி இலங்கையின் மலையகம் இவ்வெல்லைக்கு அப்பாலுள்ள பகுதிகளையும் இணைத்துக் கொள்கிறது. அதனடிப்படையில் மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களும் மலையகத்தின் சமூகஞ்சார் வரைவிலக்கணத்தி்ல் உள்ளடங்குவதோடு சிலவேளைகளி்ல் கொழும்பு மற்றும் காலி மாவட்டங்களும் உள்ளடக்கப்படுகின்றன. அதற்கமைய மலையகத்தில் வாழும் தமிழர்களைக் குறிக்கும் பொதுச் சொற்களாக ‘மலையகத் தமிழர்’, ‘மலையகத் தோட்டத் தொழிலாளர்’ ஆகியன அமைகின்றன. ஒரு சமுதாயம் தன்னைத்தானே சுதாகரித்துக்கொண்டு தன் நிறையையும் குறையையும் உணர்ந்து கொண்டு வாழ்க்கையிலும் அந்தஸ்திலும் உயர்வதற்கு தனது இன்றைய நிலையையும் கடந்த கால வரலாற்றையும் ஆழமாக அறிந்திருத்தல் அவசியம். நமது பூர்வீக சரித்திரத்தை நன்கு தெரிந்து கொண்டால் தான் எதிர்காலத்தில் நாம் எப்படி திட்டமிட்டு முன்னேறுவது என்பதை நிர்ணயிக்க முடியும் என்ற நோக்கத்தில் மலையக மக்கள் இலங்கையில் குடியேறிய விதத்தையும் அவர்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இக்கட்டுரையானது மலையகத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் நாடற்றவர்களாக இருந்தமைக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையாது தேக்கமுற்றிருந்தமைக்கும் அடிப்படையாக அமைந்த காரணங்களை இனம் காணுவதுடன் அவர்களின் இன்றைய பின்தங்கிய நிலைக்கு பொறுப்பாக இருக்கும் ஏனைய காரணிகளையும் இனம் காணுவதையும் முக்கிய நோக்காகக் கொண்டுள்ளது. இத் தொழிளாலர்களின் வருமானம், கல்விநிலை, வீட்டுவசதி, சுகாதார வசதிகள் என்பன அவர்களின் இன்றைய வாழ்க்கை நிலைமையினை இனம் காட்டும் குறிக்காட்டிகளாகும்.
அவற்றைக் கொண்டு அவர்களுடைய சமூகப் பொருளாதார நிலைமையினை அளவீட்டு ரீதியாக நாம் அறிந்துக்கொள்ளமுடியும். இத்தகைய குறிக்காட்டிகள் ஏன் நீண்டகாலமாக கீழ் நிலையிலே இருக்கின்றன என்பதை இக்கட்டுரையின் வாயிலாக விவாதிப்போம். இதற்காக குறைந்த வேதனங்கள், தாழ்ந்த கல்விநிலை, தாழ்நிலையான வீட்டு வசதி மற்றும் திருப்தியற்ற சுகாதார வசதிகள் என்பவற்றிற்கான மூலக்காரணங்களையும் அவற்றின் விளைவுகளையும் விளக்கி அவை எவ்வாறு மலையகத் தோட்ட தொழிளாலர்களின் இன்றைய சமூகப் பொருளாதார நிலைமைக்கு பொறுப்பாயிருக்கின்றன என்பதையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இருநூறு ஆண்டுகள் கடந்துவிட்டது. இருநூறு ஆண்டுகள் கடந்தும் இன்றும் எம் மக்களின் நிலை என்ன? என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. தமது கடும் உழைப்பினாலும் உதிரத்தாலும் மலையகத்தை பசுமை கொஞ்சும், வளம் கொழிக்கும் பூமியாக்கிய எம்மக்கள் எவ்வித மனித உரிமைகளுமின்றி அடிப்படை வாழ்க்கை வசதிகளுமின்றி அரை அடிமைகளாக இன்றும் ஓர் இருண்ட காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரியது. அதேவேளை எங்களைப் போன்று இந்தியாவில் இருந்து வேறுநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் இன்றைய நிலைமை அந்நாடுகளில் உள்ள ஏனைய சமூகங்களுக்கு சமமானதாகவே அமைந்திருக்கிறது. அவர்களது சமூகப் பொருளாதார நிலைமைகள் உயர்வான மட்டத்தில் உள்ளது. எனினும் நாம் எங்கே இருக்கின்றோம்? தொழில் நிலையில், தொழி்ல் முறையி்ல் எவ்வித மாற்றமும் இல்லை. தமிழ் இன வரலாற்றில் 19ம் நூற்றாண்டினை கறைபடிந்த ஓர் காலக்கட்டமாக குறிப்பிடுதல் முடியும். தமிழ்த் தொழிலாளர்கள் பல நூற்றாண்டுகளாகத் தமது தாயகத்திலேயே தமது இனத்தவராலேயே சாதி, குலம், சமயம், சாஸ்திரம், தெய்வம் முதலியவற்றின் பெயராலே தயை தாட்சண்யமின்றி் சுரண்டப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டும் வாழ்வு பறிக்கப்பட்ட நிலையில் வேறு வழியின்றி தமது வயிற்றுத் தீயை தணித்தற் பொருட்டு இதயக் குமுறலுடன் கலங்கிய கண்களுடன் தாயகத்தை விட்டு வெளியேறினர். இவர்கள் அனுபவித்த கொடுமைகள் பல. அவர்களது வரலாறு சோகம் மிகுந்து, துயரங் கவிந்து, இருள்படிந்து, குருதி நிறைந்த வேதனைகள் மலிந்து காணப்பட்ட வரலாறு.
19ம் நூற்றாண்டில் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பூரண அடிமைகளாகவும் அரை அடிமைகளாகவும் கூலிகளாகவும் தமிழ்த் தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து பண்டங்களைப் போன்றோ மந்தைகளைப் போன்றோ கப்பல்களில் ஏற்றிச் செல்லப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். தமிழக வரலாற்றில் முன்னைய எக் காலக்கட்டங்களிலும் காணப்படாத அளவிற்கு 19ம் நூற்றாண்டில் இலட்சோபலட்சம் தமிழ்த்தொழிலாளர்கள் தமிழகத்திற்கு மிக அண்மையிலுள்ள இலங்கையில் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பாலுள்ள நாடுகளுக்கும் தீவுகளுக்கும் கொண்டுசென்று குடியமர்த்தப்பட்டனர். நேவிஸ், அன்ரீல்ஸ, தாஹித்த, நியூ கலிடோனியா. கிரனிடா, சென்குறேக்ஸ், பிஜி, டேமிறா, மொறீசியஸ், ரிறினிடாட், றியுனியன், தென் ஆப்பிரிக்கா, வியட்னாம், அந்தமான், சுமத்திரா, சிசெல்ஸ, ஜமெய்க்கா, கரினாம் பிரிட்டிஸ் , கயானா, பிரெஞ்சாக்கயனா, குவாட்லோப், சிங்கப்பூர், மலேசியா ஆகியன அவற்றுள் சில முக்கியமான இடங்கள் ஆகும்.
அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு முதலில் பிரித்தானிய, பிரான்சிய ஆட்சியாளர்களாலும் பின்பு சுதேச ஆட்சியாளர்களாலும் அந்தந்த நாடுகளையும் தீவுகளையும் சேர்ந்த சுதேச இனத்தவர்களாலும் தொழிலாளர்களல்லாத ஏனைய இந்தியர்களாலும், வணிகர்கள், அதிகாரிகள், தோட்ட உத்தியோகத்தர்கள், பிற அலுவலர்களாலும் கொடூரமாக சுரண்டப்பட்டனர். இன்று இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய சில நாடுகளிலேயே தமிழத்தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலாளர்களாகவும் அதேசமயம் தமிழர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய நாடுகளுள் இலங்கையே முதன்மையாக இலட்சோப இலட்சம் தமிழ் தொழிலாளர்களை கொண்டுள்ளதாக விளங்குகின்றமை கவனத்திற் கொள்ளப்படவேண்டும். இவ்வாறு தமிழகத்திலிருந்து கடந்த நூற்றாண்டிலே இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியேறிய அல்லது குடியேற்றப்பட்ட தமிழ்த்தொழிலாளர்கள் மிக அண்மைக்காலம் வரை சூழ்நிலை நிர்ப்பந்தங்களால் இலங்கையிற் காலம் காலமாக வாழ்ந்து வந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்நு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். ‘கூலிகள்’ என்றும் ‘கள்ளத்தோணிகள்’ என்றும் ‘வடக்கத்தையார்’, ‘தோட்டக்காட்டார்’, ‘இந்தியாக்காரர்’ என்றும் அழைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டனர். மலையக மக்களின் துயரங்களும் இன்னல்களும் சுரண்டல் கொடுமைகளும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கின்றன. மலையகப் பகுதியில் குடியேறிய தொழிலாளர்கள் கடந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக தமக்கே பிரத்தியேகமாகவுரிய பல பிரச்சனைகளையும் இலங்கையில் வாழும்பல்வேறு சமூகத்தினருக்கும் பொதுவாகவுரிய பல பிரச்சனைகளையும் கொண்டவர்களாக இன்றுவரை வாழ்க்கைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும்கூட கோடிக்கணக்கான உடலுழைப்பாளிகள் நாள் முழுவதும் மாடாக உழைத்தாலும் வறுமையாலும் பட்டினியாலும் வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அதேசமயம் சமூகத்தின் மேல்மட்டத்தில் உள்ளோர் செல்வச்செழிப்புடன் ஆடம்பர வாழ்வில் திளைப்பதை அவதானிக்கலாம். 21ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டமான இன்றும் கூட இலங்கையின் ஏனைய சமூகத்தினருடனோ, சமூகப் பிரிவினருடனோ, ஒப்பிடுகையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார நிலைமைகள், கல்வி வசதி, வாழ்க்கைத் தரம் முதலியன மிகவும் இரங்கத்தக்க நிலையில் காணப்படுகின்றன. மிதமிஞ்சிய உழைப்பும் மிகக்குறைந்த வருவாயும் அறியாமையும் வறுமையும் சொல்லொணாத் துயரங்களும் அவலங்களும் அவர்களது சொத்துக்களாக விளங்குகின்றன. ஆரம்பத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தாலும் பின்னர் இலங்கைச் சுதேசிகளான சிங்கள, முஸ்லிம், தமிழ்ச் சமூகத்தினராலும் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகின்றார்கள். இலங்கை மலையகத் தமிழர்கள் மட்டுமன்றி தமிழகத்திலும் இன்றும் தமிழர்கள் நிலைமை முடிவற்ற சோகநாடகமாகவும் தொடர்கதையாகவும் விளங்கிவருகிறது. இலங்கை இந்திய அரசுகளினால் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் நிமித்தம் தோட்டத் தொழிலாளர்களில் கணிசமான தொகையினர் தாயகம் திரும்ப வேண்டியேற்பட்டது. அவ்வாறு தாயகம் திரும்பியோரின் நிலைமையும் “நரியூருக்குப் பயந்து புலியூருக்குப்போன” கதையாகிப்போனது.
மலையகச் சமூகத்தின் பெரும்பகுதியினர் ‘உடலுழைப்பாளிகள்’ என முத்திரை குத்தப்பட்டு உடலுழைப்புக்கு மட்டும் தகுதியாக்கப்பட்டனர். சமூகத்தின் தாழ்ந்த படித்தரங்களில் நசுக்குண்டு வாழ்க்கைப் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கம் என்று தலைநிமிரா வண்ணம் அவர்களின் அகமும் புறமும் கட்டுப்படுத்தப்பட்டிருக்க இன்றும் முதலாளி வர்க்கத்தினர் அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, சமயம் முதலிய துறைகளைப் பயன்படுத்திக் கொள்வதை காணலாம். அரசியல், பொருளாதார பலத்தினால் அவர்களை இலகுவாக அடக்கி ஆள முடிகிறது. மக்களின் பொருளாதார நிலை சீர்கேடடைவதை நாம் கண்கூடாக காணமுடிகிறது. இத்தகைய நிலைமை காரணமாக சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ‘அன்றாடம் காய்ச்சிகளான’ உழைக்கும் வர்க்கத்தினர் படுபயங்கரமாக பாதிக்கப்படுகின்றனர். அவலங்களில் அதல பாதாளத்திற்கு தள்ளப்படுகின்றனர். அடிக்கடி ஏற்படும் பஞ்சங்கள் சமூகத்தின் மேல் மட்டத்தினரைப் பாதிப்பதில்லை. சமூகத்தின் அடிமட்ட மக்களையே வெகுவாகப் பாதித்து அவர்களது உயிர்களைக் குடித்து ஏப்பம் விடுகின்றன. மிகப் பாரதூரமான முறையில் சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கும் சுரண்டல் முறைகளுக்கும் ஆளாகி கொண்டிருப்பது உழைக்கும் வர்க்கத்தினரே.
நாம் ஏலவே கூறியது போல தாழ்த்தப்பட்ட மக்கள் உடலுழைப்பாளிகள் முதலியோரின் சந்ததியினரே இன்றைய மலையகத் தோட்டத் தொழிலாளர்களுள் பெரும்பாலானோராவர். கடந்த இரண்டாயிரமாண்டுக் காலத் தமிழகச் சமூக வரலாற்றை மனிதாபிமானத்துடன் மிக உன்னிப்பாக அவதானிக்கும் போது பஞ்சப்பட்ட அந்த அப்பாவி மக்களின் இன்னல்களும் பரிதாபகரமான நிலையும் காலத்திற்கு காலம் அதிகரித்து வருவதால், மலையக மக்களின் அவலக்குரல் ஈனஸ்வரமாகவும் உள்ளத்தை உருக்கும் சோக கீதமாகவும் ஆழமான கிணற்றின் அடி ஆழத்திலிருந்து கேட்பது போல் ஒலிப்பதையும் உணரமுடிகிறது. இந்த அப்பாவி மக்கள் அங்கு தமிழகப் பண்ணைகளில் தமிழர்களாலேயே அடிமையாக்கப்பட்டிருந்தனர்.
பண்ணைகளில் அடிமைகளாக வேலை செய்த உடலுழைப்பாளிகளின் நிலை கண்டு மனம் வெதும்பிய பட்டாளி சீத்தாராமையா என்பவர் 1940ம் ஆண்டிலே “சேற்றிலும் சகதியிலும் உழன்று பயிரிடும் பண்ணையடிமை அரைவயிற்றுக் கஞ்சியுடனோ பட்டினியாகவோ வேலை செய்கின்றான். அவனுக்குப் புயல்மழை வெயில் எதுவும் ஓய்வு தருவதாக இல்லை. மரணம் ஒன்றே ஓய்வு தருகிறது. நமக்காக நெல் விளைவித்து அவன் வறுமையில் வாடுகின்றான். நம் பசுவை வளர்த்து நமக்கு பால் தருகின்றான். ஆனால் அவனோ கஞ்சியையும் தண்ணீரையும் தவிர வேரறியான். அவன் நமக்காகக் கிணறு தோண்டுகின்றான். ஆனால் அதில் நீர் ஊறும்போது அவனை அதிலிருந்து விலக்கி விடுகின்றோம். அவன் பரிதாப நிலை நம் நெஞ்சை தொடுவதாக உள்ளது.” என கூறியுள்ளமை ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. சிற்சில வேறுபாடுகளை தவிர தமிழகத்துப் பண்ணை அடிமைகளின் நிலைமையும் அவர்களது பரம்பரையைத் சேர்ந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்களினது நிலையும் எத்துணை ஒற்றுமையுடையன என்பதை இங்கு விளக்கிக்கூற தேவையில்லை. தமிழகத்தில் விவசாயக் கூலிகளை 2 வகைகளாக பிரித்து வைத்திருந்தனர்.
- கட்டுண்ட விவசாயக்கூலிகள் (Attached agricultural laborer)
- தற்செயல் விவசாயக்கூலிகள் (Casual agricultural laborer)
காலம்காலமாக விவசாயக்கூலிகள் என பிரிக்கப்பட்ட இவர்கள் நிலைமையில் வேறுபாடோ வளர்ச்சியோ காணப்படவில்லை. சமூகப் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட உடலுழைப்பாளிகள் சாதி வெறியர்களாலும் நிலவுடைமையாளர்களாலும் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதற்கு இந்த இரு சாராரும் நல்லதொரு உதாரணமாகும். நாட்டின் பொருளாதாரத் துறையின் சுமை தாங்கிகளான மலையகத்தோட்ட தொழிலாளருக்கும் இவர்களது வாழ்வின் அவலங்கள் ஏறத்தாழ ஒரே அச்சில் வார்த்தது போல பொருந்துவதைக் காணலாம். அன்றும் இன்றும் தமிழகத்திலும் மலையகத்திலும் பழைய ஒடுக்குமுறைச் சாதனங்களுக்கும் நவீன ஒடுக்குமுறை சாதனங்களுக்குமிடையே வேறுபாடுகள் உண்டானதே தவிர, அவர்களது இரங்கத்தக்க நிலையில் அதிகம் வேறுபாடுகள் காணப்படவில்லை.
பிரித்தானியர் இலங்கைக்கு வந்த காலப்பகுதியோடு இங்கு அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்ட வரலாற்றுடன் இணைந்ததாக மலையக தமிழ் மக்களின் வரலாறும் காணப்படுகின்றது. 1948ம் ஆண்டுவரை பாட்டாளி மக்களாக இன்னலுற்று சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலைமைகளில் பின்தங்கியவர்களாக காணப்பட்ட மலையகத் தமிழர்களுடைய நிலை சுதந்திரத்தின் பின் குடியுரிமை நிராகரிக்கப்பட்டமையால் மேலும் மோசமாக்கப்பட்டது. இலங்கையில் இவ்வாறு துன்புற்ற இம்மக்களில் பெரும்பான்மையோர் இன்னும் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பின் தங்கியவர்களாகவே காணப்படுகின்றனர். இத்தகைய பின்தங்கிய நிலைமைகளின் உண்மைத் தாற்பரியங்களை அரசாங்கமும் மக்களும் அறிஞர்களும் புரிந்துக்கொள்ள வேண்டும். பாதிப்பிற்குள்ளானவர்கள் தமது நிலையினை நன்கு உணரும்போதுதான் அவர்களிடையே விழிப்புணர்வும் அதனால் அந்நிலையிலிருந்து விடுபடும் உணர்வும் ஏற்பட முடியும். அரசாங்கத்தினர் இப்பிரச்சினைகளை நன்கு விளங்கி கொண்டால் மட்டுமே அதற்கான தீர்வுகளை வழங்குவது பற்றிச் சிந்திக்கத் தலைப்படுவார்கள். ஏனையோர் இவற்றை பற்றி நன்கு விளங்கி கொள்வதன் மூலமே பாதிக்கப்பட்ட சமுதாயத்திற்கு சார்பான பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்க முடியும். நீண்ட காலமாக தேசிய நீரோட்டத்திலிருத்து ஒதுக்கப்பட்டிருந்த காரணத்தினால் மலையக மக்களுக்கு அரசின் மூலம் கிடைக்கக்கூடிய சேவைகளும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் இன்னும் வந்தபாடில்லை. அரசின் மூலம் கிடைக்கும் சேவைகளை அமுல் படுத்துவதிலுள்ள பலவீனத்தாலும் போதியளவு நிர்வாக கட்டமைப்பு இல்லாததினாலும் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைக்கு வராத அவலநிலை உள்ளது. ஓர் சமூதாயம் முன்னேற வேண்டுமானால் அங்கே அனைவருக்கும் குறைந்தபட்ச வாழ்க்கைத்தரம் பேணப்படல் வேண்டும். அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள், போக்குவரத்து வசதி, கல்வி என்பனவும் இவற்றை பெற்றுக் கொள்வதற்கான தொழிலும் மிக அவசியம்.
விருத்தியுறும் நாடுகளும் சமூகமும் தமது மக்களுடைய கல்வியறிவு, தொழில்நுட்ப அறிவு என்பனவற்றின் வளர்ச்சியிலே பெரிதும் தங்கியுள்ளது. உதாரணமாக பின் தங்கியவர்களாக வாழ்ந்த ஐரோப்பிய இனத்தவரே இன்று பெரிதும் கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம் நாகரீகம், வாழ்க்கைத்தரம், அரசியல் அதிகாரம் என்பவற்றில் முன்னேறிக் காணப்படுகின்றனர். தொழிநுட்ப வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் அவற்றிற்கு அடிப்படையாகிய கல்வி வளர்ச்சியுமே இதற்கு காரணம் என்பதில் மாறுப்பட்ட கருத்து இருக்க முடியாது. இதனாலேயே 21ம் நூற்றாண்டினை ‘அறிவுமைய தகவல் மைய நூற்றாண்டு’ எனவும் அந்நூற்றாண்டின் சமூகம் அறிவுசார் சமூகம் என்றும் கணிக்கப்படுகின்றது. மனித வாழ்வில் சகல அம்சங்களின் மேம்பாடும் முன்னேற்றமும் இறுதியில் கல்வியினாலேயே தீர்மானிக்கப்படும் என்ற சிந்தனை 20ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. 1920ம் ஆண்டளவில் மேலைநாட்டு பொருளியல் சிந்தனையாளரான ‘அல்பிரட் மார்சல்’ உற்பத்திக்கான சக்தி வாய்ந்த சாதனம் அறிவு என்றும் அதனை கொண்டே இயற்கையை பயன்படுத்தி மனிதனின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனும் கருத்தை தெரிவித்தார்.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கல்வியினால்தான் ஓர் சமூகத்தின் தலையெழுத்ததையே மாற்றமுடியும். இலங்கையின் எழுத்தறிவு வீதம் 97.3 என்று புள்ளி விபரம் கூறுகிறது. அந்த புள்ளி விபரக் கணக்கறிக்கையை வைத்துக்கொண்டு நம்மை நாமே நீண்ட காலமாக ஏமாற்றிக் கொள்ளும் ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசியல் சிக்கல்களும் முரண்பாடுகளும் நிறைந்த இக்காலக் கட்டத்தில் கல்வி என்பது சமூகத்தின் அனைத்து அங்கத்தினரையும் சென்றடையாத பட்சத்தில் சமூகம் வளர்ச்சியடையும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இலங்கை அரசு இலவசக் கல்வியுடன் செயற்படுத்தப்பட்ட கட்டாயக் கல்வி, பாடசாலைக் கல்வி, விஞ்ஞானக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி என பல கல்வி முறைகளை அறிமுகப்படுத்தினாலும் ஏனைய சமூக மாணவர்களுடன் ஒப்பிடும்போது மலையகச் சமூக மாணவர்கள் கல்விக்குரிய முக்கியத்துவத்தை கொடுக்காமல் அதனைப் புறக்கணித்து பாடசாலையை விட்டு அதிகமாக இடைவிலகுகின்ற நிலை காணப்படுகிறது. ஏன் இவ்வாறு மலையகப் பாடசாலை மாணவர்கள் அதிகமாக பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர் என்பதை பகுப்பாய்வு செய்து பார்த்து, பொருளாதார – சமூக – குடும்பச் சூழல் – பாதுகாப்பு போன்றவைகளே மாணவர்களின் இடைவிலகல்களுக்கு காரணமாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே இலவச கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நடத்துவதன் மூலம் ஓரளவேனும் மாணவர் இடைவிலகலை தடுக்கலாம். இலங்கையின் எழுத்தறிவு 97.3 வீதமாக உயர்ந்து காணப்பட்டாலும் மலையகத்தை பொறுத்த வரை கல்வி ரீதியான முன்னேற்றம் மிக குறைந்தளவிலேயே காணப்படுகிறது. சமூக நீதி, கல்வியில் சம வாய்ப்புகள் மலையகத் தமிழர்களை சரியாக எட்டவில்லை. மலையகப் பாடசாலைகளிடையே வளப் பங்கீடுகளில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனால் மலையக எழுத்தறிவு 58.5 வீதமாக உள்ளதுடன் மாணவச் சேர்ப்பு, பல்கலைக்கழக அனுமதி போன்றவற்றில் பின்தங்கி உள்ளனர். அத்துடன் மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளில் 13.1 வீத மாணவர்கள் பாடசாலை செல்லாதவர்களாகவும், தரம் ஐந்து வரை பாடசாலை செல்வோர் 43 வீதமாகவும், தரம் ஆறிலிருந்து பத்துவரை பாடசாலை செல்வோர் 37.7 வீதமாகவும், சாதாரண தரம் சித்தியடைவோர் 3.8 வீதமாகவும், உயர்தரம் சித்தியடைவோர் 2.3 வீதமாகவும் காணப்படுகின்றனர். மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் அவர்களே இலங்கையில் கல்வி வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியவர்களாக காணப்படுகின்றனர்.
மலையகக் கல்வி வளர்ச்சி குறைவுக்கு வெவ்வேறு காரணங்கள் காணப்பட்டாலும் மிகப் பிரதான காரணங்களில் ஒன்றாக மாணவர் இடைவிலகலே காணப்படுகிறது. இவ்வாறு கல்வியைப் புறக்கணித்து மாணவர்கள் ஏன் இடைவிலகுகின்றனர் என ஆராய்ந்து பார்த்தால், அதற்கு பின்வரும் காரணங்கள் செல்வாக்கு செலுத்துவதை பார்க்கலாம்.
வறுமை : மாணவர்களின் இடைவிலகலுக்கான பிரதான காரணம் வறுமையாகும். அந்த வகையில் வறுமை ஏற்படுவதற்கு பிரதான காரணமாக காணப்படுவது அதிகரித்து வரும் விலையேற்றத்திற்கு ஏற்ப தோட்ட தொழிலாளிகள் சம்பளம் அதிகரிக்கப்படாமை ஆகும். இதனால் தங்கள் பிள்ளைகளுக்குரிய கல்வி நடவடிக்கைக்குரிய செலவீனங்களை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதால் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர்.
பெற்றோர்களின் அக்கறையின்மை : மலையகப் பெற்றோர்களில் பெரும்பாலோர் போதியளவு கல்வியறிவு அற்றவர்கள் ஆகையால் தங்களுடைய பிள்ளையின் கல்வி அறிவு பற்றிய விடயங்களில் அசமந்தப் போக்குடன் இருப்பதுடன் மாணவர்கள் மத்தியிலும் இதே மனநிலை காணப்படுவதால் மாணவர்கள் கல்விக்குரிய முக்கியத்துவத்தை வழங்காமல் பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர்.
போக்குவரத்து வசதியின்மை : மலையக மக்களை பொறுத்த வரை அவர்களுடைய குடியிருப்புகள் மலைப்பாங்கான பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருப்பதால் அங்கு சென்று வருவதற்குரிய பாதை வசதிகள் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகிறமையால் மாணவர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலைக்குச் சமூகம் தராமையாலும், பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் பெரும் சிரமத்தை எதிர் கொள்வதனாலும் பாடசாலையை இடை நிறுத்தும் தீர்மானத்தை மேற்கொள்கின்றனர். உதாரணமாக இன்றும் பல மாணவர்கள் உயிர் அச்சுறுத்தல் நிறைந்த காட்டுவழிப் பாதையூடாகவும், மிகவும் அபாயகரமான பாலங்கள், நீர்வழிப் பாதைகளூடாகவும் பாடசாலை செல்வதை நாம் அன்றாடம் காணலாம்.
சிறுவயதுக் காதல் : அதிகமாக இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியில் சிறுவயதுக் காதல் அதிகரித்து வருவதுடன் இதனால் மாணவர்கள் கல்வியில் அக்கறைகாட்ட முடியாத நிலை உருவாகி, மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர்.
தாய் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லல் : மலையகப் பகுதிகளில் தாய்மார்கள் அதிகமாக வீட்டு பணிப் பெண்ணாக வெளிநாடு செல்வதனால் வீட்டில் மூத்த பிள்ளைகளே இளைய சகோதரர்களுக்குரிய சேவைகளைச் செய்யவேண்டிய நிலை உருவாகின்றமையால் அவர்களால் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்படுகின்றது.
குடும்பத் தலைவனின் குடிப்பழக்கம் : குடும்ப தலைவனின் குடிப்பழக்கம் காரணமாக வருமானம் குடிப்பழக்கத்திற்கே செலவாகின்றமையால் பிள்ளைகளுக்குரிய கல்விச் செலவிற்குரிய பணம் கிடைப்பதில்லை. மேலும் தந்தையின் குடிப் பழக்கத்தால் ஏற்படும் விபரீதங்கள் மாணவர்களுடைய அந்தஸ்தை குறைப்பதால் பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர். குடும்பத் தலைவர் மட்டுமின்றி சில குடும்பங்களில் பெண்களும் மதுப்பாவனைக்கு அடிமையாக இருப்பதனையும் குறிப்பிட வேண்டும்.
காட்டு விலங்குகளின் தொல்லை : மலையகப் பிரதேசங்களில் காட்டு விலங்குகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாலும் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும் பாதைகளில் இடையூறு ஏற்படுவதாலும் மாணவர்கள் பாதுகாப்புக் கருதி கல்வியை கைவிடுகின்றனர்.
ஆசிரியர்களின் அசமந்தப்போக்கு : பாடசாலையின் தரத்தை உயர்த்தி காட்டும் பொருட்டு வகுப்பில் திறமையாக கல்வி பயிலும் மாணவர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதுடன் திறமையாக இயங்காத மாணவர்களை இரண்டு அல்லது மூன்று வருடங்கள் வகுப்பேற்றாமல் வைத்திருப்பதால் கல்வி மீது மாணவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர்.
நண்பர்களின் வேண்டுகோள் : ஏற்கனவே பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களின் சுதந்திரமான செயற்பாடுகள் காரணமாகவும் அவர்கள் பாடசாலை தொடர்பாக கூறும் தவறான கருத்துகள் காரணமாகவும் அவர்களுடன் இடைவினை புரிவதாலும் மாணவர்களுக்கு இடைவிலகுகின்ற எண்ணம் தோன்றுகின்றது. அத்துடன் சிறுவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் அதிகரித்து வருவதால் சிறுவர் தொழிலாளர்களாகச் செல்ல பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர். மேற்கண்ட பிரச்சினைகளே மலையகக் கல்வி வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் மாணவர்களும் பகிடிவதை, காதல், தற்கொலை போன்ற இன்னோரன்ன காரணங்களால் தமது கல்வியை மட்டுமன்றி வாழ்வினையும் இழக்கின்றனர்.
ஆசிரியர்களின் நடத்தை : கண்ணியமிக்க ஆசிரியத்தொழிலை சில ஆசிரியர்கள் தவறான வழியில் பயன்படுத்துவதாலும் முறை தவறி மாணவர்களிடையே, குறிப்பாகப் பெண் பிள்ளைகளிடையே, அத்துமீறி நடந்து கொள்வதாலும் பெண்பிள்ளைகளின் பாதுகாப்புக் கருதியும் மாணவர்கள் இடைவிலகுகின்றனர்.
உலக நாடுகள் துறைசார் ரீதியில் பெரிய அளவில் அபிவிருத்தி அடைந்து வருகின்றன. எனினும் அபிவிருத்தி அடைந்து வரும் ஆசிய நாடுகள் தொடர்ந் தேர்ச்சியாக பல்வேறு சமூக விரோதப் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து அபிவிருத்தியில் பின்னடைவைக் கண்டுவருகின்றன. உள்நாட்டு யுத்தம், போதைப்பொருள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், இயற்கை வளங்கள் சட்டவிரோதமாக சூறையாடப்படல் என்பன அவற்றுள் சிலவாகும். பத்தாயிர அபிவிருத்தி இலக்கு (Millenium Development Goals) ஒன்றை நிர்ணயித்து 2020 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு நாடும் சில இலக்குகளை அடையவேண்டும் என்று ஐ.நா சபை அபிவிருத்தி அமைப்பு திட்டம் வகுத்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் இத்தகைய இலக்கை அடைய தடையாக இருப்பது மலையக பகுதிகளில் அபிவிருத்தி மிகவும் பின்தங்கியிருப்பதே. இதை நிவர்த்தி செய்வதற்காக ஐ.நா அபிவிருத்தி அமைப்பு (U.N.D.P) பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்திற்காக ஓர் தேசிய நடைமுறைச் சட்டத்தை (National action plan) தயாரிக்க உதவியது. இத்திட்டம் தயாரிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் அதை முன்னெடுத்துச் செல்ல உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனையான விடயம்.
மலையகம் கொடிய யுத்தத்திற்கு முகம் கொடுக்காத போதும் பொருளாதார யுத்தத்திற்கு முகம் கொடுத்துள்ள ஓர் சமூகமாகும். ஏற்கனவே மலையக மக்களின் பொருளாதார நிலைமை அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலைமையில் போதை அரக்கனின் கால்களில் சிக்கி மலையக மக்கள் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். மலையக மக்களின் தொழில்முறையும் வாழ்க்கை முறையும் அவர்களை இயல்பாகவே போதைப் பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்தியுள்ளன. இந் நிலையில் மலையகத்தில் அரசாங்க அங்கீகாரம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் சாராயம், கள்ளு, பியா் என்பவை தாராளமாக விற்றுத் தீர்க்கப்படுகின்றன. மலையக மக்கள் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டம் அகில இலங்கை ரீதியாக மதுப் பாவனையில் இரண்டாமிடத்தில் உள்ளதென்பது எமது சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிப் பாதைக்கு இடப்பட்டுள்ள கடிவாளம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். மதுபான விற்பனை மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானப் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்ட தரவுகளின் படி தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் மதுபான நுகர்வு மிக அதிகமாக உள்ளதென்பதை தெளிவாக அறியமுடியும். தவிர மதுபானங்களின் விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளதால் சில மாவட்டங்களில் காய்ச்சி வடிகட்டிய சாராயத்தை மலையக மக்கள் அதிகளவில் அருந்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மலையகத்தில் காய்ச்சி வடிக்கப்படும் சட்டவிரோத சாராயமான ‘கசிப்பு’ விற்பனை மத்திய மாகாணத்திலும் சப்ரகமுவ மாகாணத்திலும் ஊவா மாகாணத்திலும் அதிகமாக உள்ளது. சட்டவிரோத மதுப் பாவனையில் சிறுநீரகநோய், மாரடைப்பு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களால் மலையகத்தில் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனினும் இவ்வாறு உயிரிழப்புக்கள் ஏற்பட்டாலும் அவற்றை நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக தெரியவில்லை. மதுப் பாவனைக்கு வயது வித்தியாசமின்றி இளைய தலைமுறைகளும் அடிமையாகி வருவது வேதனைக்குரிய விடயமாகப் பார்க்கப்பட வேண்டும். தோட்டப்புறங்களை இலக்குவைத்து சந்திக்கு சந்தி திறக்கப்பட்டுள்ள அரச அங்கீகாரம் பெற்ற மதுப் பாவனை விற்பனை நிலையங்கள் மலையக மக்களை தொடர்ந்தும் மதுவிற்கு அடிமையாக்கி கட்டிப்போட்டுள்ளன. பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் மாணவர்களும் மதுப் பாவனையிலும் புகைத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலைப் பருவத்தில் மதுவுக்கு அடிமையாகும் மாணவர்கள் குறித்த சில நாட்களில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகுவதுடன் சமூகச் சீரழிவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இவர்கள் காலப்போக்கில் சமூக விரோதிகளாக மாறி குற்றச் செயல்களில் ஈடுபடுவது மலையகத்தில் அதிகரித்து வருகிறது. நவ நாகரீக மோகம் காரணமாக இளைஞர்கள் அதிக விலைகொடுத்து டின்களில் அடைக்கப்பட்ட பியரை அருந்துகின்றனர். ஆண், பெண் இளைய தலைமுறையினர் என அனைவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவது எமது சமூகத்தின் குடும்பக் கட்டமைப்பை சீரழித்து சமூக வளர்ச்சியை வீழ்ச்சியடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. மலையகப் பெண்கள் அதிகமாக வெற்றிலையோடு சேர்த்து புகையிலை உண்ணும் பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். மலையகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் அதிகமானோர் வாய்ப்புற்று நோய்க்கே இலக்காகி வருகின்றனர்.
புற்றுநோயால் தாக்கப்பட்டு மரணமடையும் பெண்களின் எண்ணிக்கை தோட்டப்பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறுகிய கால இடைவெளிக்குள் அதிகரித்து வருகின்றது. கடந்த 20 வருட காலப்பகுதியில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை இலக்கு வைத்து அதிகளவு மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள், இது தமிழ் பேசும் மக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த நீண்டகால நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ள சதி முயற்சியா என்பவை குறித்து தெளிவான ஆய்வுகள் மலையகத் தன்னார்வ அமைப்புகளால் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது.
மதுவிற்கு புறம்பாக கஞ்சா, ஹெரோயின் உட்பட பல புதிய போதைப் பொருட்களும் புழக்கத்தில் உள்ளன. தமது தோட்டங்களுக்கு அண்மையில் மதுபானச் சாலைகளை மூடிவிடுமாறு தோட்ட மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் அதிகளவில் வெற்றி பெறவில்லை. இப்போராட்டங்களில் சிலவேளை இனமுறுகல் ஏற்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் ஜீன் மாதம் 26ம் திகதியை சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினமாக உலக நாடுகள் அனுஷ்டித்து வருகின்றன. இக் காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையின் தீமை குறித்து அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு செயற்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்தாலும் இது போதைப்பொருள் பாவனையாளர்களின் மன நிலையில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக் குறியே. மலையகத்தில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், ஒரு நகருக்கு பல மதுபானச் சாலைகள் இருக்கின்றன. தெருவிற்கு தெரு மதுபானச் சாலைகள் உள்ளன. காலை நேரம் இரவு நேரம் என பாராமல் மக்கள் குவியல் குவியலாக எந் நேரமும் மதுபானச் சாலைகளில் குவிந்து கிடப்பதையும் காண்கின்றோம். காலையிலிருந்து கடுமையாக உழைத்தவர்கள் உடல் வலிக்காகவும் குளிருக்கு இதமாகவும் மதுபானம் அருந்துவர் என்று சிலர் இதனை நியாயப்படுத்துவதைக் காண்கின்றோம்.
போதைப்பொருள் விற்பனையில் சில அரசியல் பின்னணிகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அதனை தடுக்கும் முயற்சிகள் கைகூடவில்லை என்றே கூறவேண்டும். அதிலும் மலையகப் பாடசாலை மாணவர்களை குறிவைத்து இந்த போதைப்பொருட்கள் வியாபாரம் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இன்று பாடசாலைக்கு அருகில் போதைப்பொருளை விற்பனை செய்யும் நாசகார வேலைகளில் பல சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா, குடு, ஹெரோயினை தாண்டி ஐஸ் எனப்படுகின்ற போதைப்பொருட்களின் பாவனை சமீப காலமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் புற்றுநோய்க்கு ஆளாகி உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
போதைப்பொருட்களின் பாவனையால் இன்று இளம் வயது திருமணங்களும் அதிகரித்து வருகின்றன. சில மாணவர்களை ஆசிரியர்கள் கட்டுப்படுத்தும் போது பெற்றோர்களும் உண்மை நிலையறியாது எதிர்ப்பை வெளியிடுகின்றனர். அதே போல சில ஆசிரியர்களும் இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாகத் தெரிகின்றது. இதற்கான முகவர்களும் தனியானதொரு வலையமைப்பும் இயங்குவதாக அறிய முடிகிறது. சில இடங்களில் இதனை தடுக்க வேண்டிய பாதுகாப்பு அதிகாரிகள் கூட இலஞ்சம் பெற்றுக்கொண்டு கண்காணிப்பதில்லை; மாறாக போதை வியாபாரத்திற்கு உதவுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. எது எப்படியோ போதைப்பொருள் பாவனையால் உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல பிரச்சினைகள் வருகின்றன. இதனால் மாணவச் சமூகம் அழிவதோடு திறமையான எதிர்காலச் சந்ததியினரை உருவாக்க முடியாத நிலைமை தோன்றியுள்ளது.
மலையகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக பல பிரச்சனைகள் உள்ள நிலையில் தற்போது போதைப்பொருள் மிகப் பெரிய பிரச்சனையாக சமூகத்தில் உருவாகி உள்ளமை வேதனையளிப்பதாக உள்ளது. இவை எல்லாம் மிகப்பெரிய வலையமைப்புகளுடனும் முகவர்களுடனும் தொடர்புபட்டிருப்பதால் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க முடியும். ஆசிரியர்களினால் தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க முடியும். அவர்களது நட்பு வட்டாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி போதை உலகிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாளைய சமூகத்தை காப்பாற்ற முடியும். மலையகப் பகுதிகளில் அதிகரித்துள்ள மதுபானச் சாலைகளை குறைக்கவும், புதிய மதுபானச் சாலைகளை திறக்காமல் தடுக்கவும் சட்டவிரோத மது உற்பத்தியை தடுக்கவும் கீழ் மட்டத்திலிருந்து பல வேலைத் திட்டங்கள மலையகத்தில் முன்னெடுக்கப்படுதல் அவசியமாகும். அதற்கான பொறுப்பு மலையக மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமன்றி சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் உண்டு. அப்போதுதான் மாணவர்களை மட்டுமன்றி மலையகத்தின் சகல தரப்பினரையும் காப்பாற்றி மதுப்பாவனையை இல்லாதொழித்து மதுவற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பமுடியும்.
தொடரும்.