பௌத்தமும் ஈழமும் - பகுதி 2
Arts
19 நிமிட வாசிப்பு

பௌத்தமும் ஈழமும் – பகுதி 2

August 12, 2024 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

ஈழத்தின் வாயிலாக அமைந்த மணிபல்லவத்தில் புத்தர் முதன்முதலாக வந்தார் எனப் பௌத்த நூல்கள் கூறுகின்றன. புத்தர் வந்தார் என்பது மகிந்தர் முதலான தேரர்களின் வருகையைக் குறிப்பதாகும். தமிழ் நாகர்களின் அரசில் மணிபல்லவம் முதல்நிலை பௌத்த புனிதத் தலமாயிற்று. நாக அரசைக் கடந்து அநுராதபுரம் சென்ற மகிந்தன் அங்கு சமயப் பரப்புரை செய்ய எடுப்பித்த விகாரை பிற்காலத்தில் மகிந்தலை (மகிந்தனின் தலைமையிடம்) என அழைக்கப்படுவதாயிற்று. தமிழ் பௌத்தருக்கு மணிபல்லவம் தலை இடம் ஆயினமை போல் சிங்கள பௌத்தருக்கு மகிந்தலை தலையிடமாயிற்று. ஆனால், இலங்கைக்கு முதலில் புத்தர் வந்ததாகக் கூறப்படும் இடம் மணிபல்லவமே. நாகநாட்டு மக்களும் அநுராதபுர அரசு மக்களும் தத்தம் இடங்களைத் தலையிடமாகக் (முதல்) கொண்டு போற்றினர். இந்நிலையில் எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு நாக நாட்டில் அரசரும் மக்களும் பௌத்தத்தைத் துறந்து சைவ சமயத்தின் பால் சென்றமையால் பௌத்தம் அந்தச் சூழ்நிலையில் நாக நாட்டில் வீழத் தொடங்கியது. பௌத்தத் திருப்பதிகள் போற்றுவார் இன்மையால் தமிழகப் பௌத்தப் பள்ளிகள் அழிந்தமை போலவே ஈழத்திலும் பௌத்தம் பெரிதும் சிதைவுற்றன. ஆயினும் நாக நாட்டிற்குப் புறத்தே மகிந்தலையைச் சிங்களவர்கள் தங்களது முதல் புனிதத் தலமாகவும் மணிபல்லவத்தை இரண்டாவது புனிதத் தலமாகவும் குறிப்பிடத் தொடங்கினர். ஆனால், முதலில் பௌத்தம் வந்தது மணிபல்லவத்திற்கே என்பதனை அவர்களால் மறுக்க இயலவில்லை. ஆயினும் தமிழர் விட்டொழித்த தலத்தைத் தங்களுக்குடைய இரண்டாம் நிலைத் தலமாகவே வைக்க எண்ணினர். இதுவே மணிபல்லவம் தமிழ்ப் பௌத்தத்தலம் என்பதற்கு ஒரு சான்றாகும். ஏனெனில் அது சிங்களத் தலமாக இருப்பின் இலங்கையில் முதல் புனிதத் தலமாகவல்லவா இருந்திருக்க வேண்டும்? தமிழ்ப் பௌத்தத் தலமாக இருந்ததால் இரண்டாம் தலமாயிற்று. காலனிய ஆட்சிச் சூழலில் இடித்த இத்தலங்களை எல்லாம் டச்சுக்காரர் ஆட்சியில் புதுப்பித்துக் கொண்டார்கள். ஆனால், தமிழரின் தாயகங்களில் இருந்து பௌத்தம் தங்களுக்கு வந்தது என்று சொல்வதைச் சிறுமையாகக் கருதிய சிங்களவர்கள் புத்தர் ஆகாய மார்க்கமாக வந்தார். மகிந்தர் பாடலிபுத்திரத்திலிருந்து வானமார்க்கமாக வந்தார் என்பனவாக எழுதிவிட்டனர் என்று மயிலை. சீனி. வேங்கடசாமி குறிப்பிடுவார். 

பௌத்தத் தமிழர்கள் எழுதிய தமிழ் நூல்களைச் சிங்களவர் படித்தார்கள் என்பதற்கும், அவற்றைச் சிங்களமயப்படுத்திக் கொண்டார்கள் என்பதற்கும் சான்றுகள் உண்டு. கி.பி. 11 ஆம் நூற்றாண்டிலே தோன்றிய தமிழ் இலக்கண நூல் ‘வீரசோழியம்’. இந்நூலினைச் சோழநாட்டின் பொன்பற்றி எனும் ஊரினையாண்ட குறுநில மன்னனான புத்தமித்திரன் என்பவர் இயற்றினார். இவர் பௌத்த சமயத்தினைப் பின்பற்றிய தமிழர். இதனை:

“மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன் மெய்தவத்தால்
தொக்கவன் யார்க்குந் தொடரவொண் ணாதவன் தூயனெனத்
தக்கவன் பாதந்தலைமேற் புனைந்து தமிழுரைக்கப்
புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்தமித்திரனே”

-வீரசோழியப் பாயிரம்

எனும் அடிகளால் அறியலாம். மேலும், இந்நூலினை இயற்றும்படி ஊக்குவித்தவன் சோழப் பேரரசனான வீரசோழன். இதனால் அச்சோழன் பெயரையே அந்நூலுக்குப் புத்தமித்திரர் சூட்டினார். இதனை:

“தேமேவிய தொங்கற் றேர்வீர சோழன் றிருப்பெயரால்
பூமே லுரைப்பன்”

-வீரசோழிய பாயிரம்

எனும் பாயிரவடிகளின் வழி அறியலாம். இத்தமிழ் இலக்கண நூலினை அப்படியே தழுவி கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் சிங்கள மொழியின் முதல் இலக்கண நூலாகிய ‘சிதத்சங்கரா’வை வடிவமைத்துக் கொண்டார்கள் என்பதினை அறியலாம். இது குறித்து அறிஞர் பலர் ஆய்ந்துள்ளனர்.

மேலும் மணிமேகலையில் காணக்கிடைக்கும் அரிய பௌத்த மெய்யியல் கலைச்சொற்களின் வழி தமிழ் மரபில் பௌத்தம் வேரூன்றி நின்ற பாங்கினை உணரலாம். தமிழர்களில் ஈழநாட்டுத் தமிழர்களே இறுதியாகப் பௌத்தத்தைக் கைவிட்டவராவர். அதனால், தமிழகத் தமிழர்களிடம் காணப்படாத பல பௌத்தக் கூறுபாடுகள் இன்றளவும் அவர்களிடம் காணப்படுகின்றமையைக் காணலாம். அவற்றை மிகுத்துக் கூறின் விரியும். சிலவற்றை மாத்திரம் சுட்டிச் செல்வோம்.

உணவினை உண்ணும் முறைமையால் பல்வகை உணவுகளினையும் ஒன்றன்பின் ஒன்றான படிநிலை வரிசையில் (சான்றாக, முப்பழம், பணியாரம், பருப்பு, குழம்பு, மிளகுச்சாறு, பாயசம், தயிர் என்பனவாக) பரிமாறி உண்பதே பண்டைத் தமிழர் மரபு. ஆனால் பௌத்த மரபில் பரிமாறுதல் என்பது குறைவு. ஒரே முறையிலேயே உணவு வகைகள் அனைத்தும் உண்கலத்தில் வழங்கப்பட்டுவிடும். இதனை இன்றும் பர்மியர், தாய்லாந்தியர், கம்போடியர், சிங்களர் முதலாய மக்களிடம் காணலாம். இவை பௌத்த மடங்களில் இருந்து இம் மக்களிடம் பரப்பப்பட்ட பண்பாடு. இவ்வாறு உணவு வகைகளை ஒன்றாக வைத்து உண்ணும் பௌத்த மரபு இன்றும் ஈழத்தமிழரிடம் உண்டு.

கல்வியில் புகழில் உயர்ந்தவர் எக் குலத்தாராகிலும் எந் நாட்டினராயினும் அவர்களைத் தங்கள் சமூக அமைப்பில் உயர்நிலையில் வைத்துப் போற்றுவது பௌத்த மரபு. இப் பண்பும் ஈழத்தமிழர்களிடம் இன்றும் வழக்கில் உள்ள பண்பாடாகும். இவை போன்று பல்வகைப் பண்பாட்டுக் கூறுபாடுகளைக் கூறிச்செல்லாம்.

பௌத்தம் இலங்கையில் பரவுவதற்குச் சற்று முற்பட்ட காலத்திலேயே ஆசிவக மதம் ஈழம் முழுவதும் பரவிவிட்டது. இதற்கு ஈழமண்டலம் முழுவதும் காணப்படும் ஐயனார் வழிபாடே சான்று. பௌத்தம் மணிபல்லவத்தை மையமாகக் கொண்டமை போல், ஆசீவகம் இன்றைய அனலை தீவை மையமாகக் கொண்டிருந்தது. அனலை தீவே ஆசிவத்தின் தலைமைப் பீடமாக விளங்கியது. ஆசிவத்தின் முதன்மைக் கொள்கை அதன் அணுவியற் கொள்கையே. அதனடிப்படையில் எழுந்த அணுழை தீவே அனலை தீவாயிற்றெனலாம். பௌத்தம் ஈழத்தில் பெரும் அலையாக எழுந்தபோது ஆசிவகம் தம் இருப்பைத் தக்கவைக்கப் பெரிதும் போராடி வீழ்ந்ததெனலாம்.

analaitheevu

ஈழத்தில் தமிழர்கள் பௌத்தத்தைவிட்டு சைவ நெறியினைக் கைக்கொள்ளத் தொடங்கிய வரலாற்றினை இனி ஆய்வோம். தமிழ்ச் சமூகத்தில் சங்ககாலத்திற்கு முன்பு தொடங்கி, இன்றளவும் சமய மாறுதல்களும், பொருந்துதல்களும், சமயத் தக்கவைப்புகளும் தொடர் நிகழ்வுகளாகின்றன. ஆசீவகம், பௌத்தம், சமணம், வைதீகம், இசுலாம், கிறித்தவம் முதலாய பல சமயங்கள் தமிழர் மீதும் தமிழ்மொழியின் மீதும் சாலத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. பண்டைத் தமிழ்ச் சமுதாய அமைவில் தமிழர்களின் மீது புறச் சமயங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும், பொருந்துதல்கள் குறித்தும் சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, நீலகேசி, யசோதரகாவியம், சூளாமணி, மேருமந்திர புராணம், திருநூற்றந்தாதி, தேவாரம், பெரியபுராணம், திருவாசகம், சிவஞான சித்தியார் பரபக்கம், நீலகேசித் திரட்டுரை, சிவஞான சித்தியார் பரபக்கத்திற்குத் திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் எழுதியவுரை முதலான நூல்களின் வழி அறியலாம். பண்டைத் தமிழரின் சமய மோதல்கள் குறித்தும், சமய மாறுதல்கள் குறித்தும் தெரிவிப்பனவாக இவை அமைகின்றன. மகேந்திரவர்மன் கூன்பாண்டியன் முதலாய மன்னர்களும், நாவுக்கரசர் முதலான துறவியரும் தங்களைச் சமய மாறுதலுக்கு உட்படுத்திக் கொண்டவர்களே. தமிழகத்தில் சமய மாறுதல்கள் மூன்றாம் நூற்றாண்டில் ஆசிவகம், பௌத்தம் முதலானவற்றிலிருந்து சமணத்தை நோக்கியதாகப் பெரிதும் இருந்தது. ஆனால், ஐந்தாம் நூற்றாண்டிற்கு பிறகு பக்தி இயக்க வளர்ச்சியால் மாறுதல்கள் வைதீகத்தினை நோக்கியதாக அமைந்தன. தொண்டை நாட்டிலே நாவுக்கரசர் முதலானோரும், பாண்டிய நாட்டில் ஞானசம்பந்தரும் சமணரை நீக்கி வைதீகத்தினை மேம்படுத்தினர். குலசேகர ஆழ்வார் போன்றோர் பௌத்த கோயில்களில் கொள்ளையிட்டும் வைணவத்தை மேம்படுத்தினர். ஆனால், ஈழத்தினைப் பொறுத்தவரை, கி.பி. 8 ஆம் நூற்றாண்டுவரை தமிழரிடம் பௌத்தநெறி மேலோங்கியே இருந்தது. 

கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் ஈழத்திலும், தமிழகத்திலும் சமண, பௌத்த வைதீகத்திற் கெதிராகத் தங்களது தமிழ் மரபின் வழிபட்டதாகிய தென்புலத்தார் வணக்கம், தாய்த் தெய்வழிபாடு முதலியவற்றினை அடிப்படையாகக் கொண்ட தமிழிய வழிபாட்டுச் சடங்கியலைக் கொண்டதாகிய கட்டமைப்பினைப் பரவலாக்கும் ஒரு முயற்சியாக கண்ணகி வழிபாட்டுப் பரவலாக்கம் அமைந்தது எனக் குறிப்பிடலாம். உலக மன்னவன் என்று சிலப்பதிகாரத்தால் குறிப்பிடப்படும் செங்குட்டுவச் சேரனால் இப்பெருமுயற்சி செய்யப்பட்டு, பல நாடுகளைச் சேர்ந்த மன்னர்களும் அழைக்கப்பட்டு, ஒரு மாநாடு போல் கண்ணகி வழிபாட்டுப் பரவல் குறித்த  நிகழ்வு நிகழ்த்தியமையை:

“உலக மன்னவ னின்றோன் முன்னர்
அருஞ்சிறை நீங்கிய வாரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரு மாளுவ வேந்தரும்
கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்”

-சிலம்பு. 30: 156-160

எனும் மேற்கண்ட அடிகளில் வழி அறியலாம். இவ் வரிகளில் பயிலும் கயவாகு தமிழ் மன்னனே (அவன் சிங்கள மன்னன் அல்ல வென்பதினை விரிவஞ்சி பிரிதோர் இடத்தில் காண்போம்.); அவன் தமிழகம் முழுதும் ஏற்பட்ட கண்ணகி வழிபாட்டு மரபை ஈழத்திலும் பரவலாக்க முயற்சித்து வென்றவன். பல சமய நுழைவுகள் ஈழத் தமிழரிடம் ஏற்பட்ட போதும், பௌத்தப் பெரும் அலையில் தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள் சிதையாமல் காத்தவன் இவனே. பௌத்தத்தின் உச்ச காலமாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தென்புலத்தார் வணக்கத்தின் மரபுவழிப்பட்ட கண்ணகி வழிபாட்டைக் கையிலெடுத்துக் கண்ணகிக்குக் கோயில் எடுத்து ஆடித் திங்கள் பெருவிழா எடுத்துக் கொண்டாடியமையை,

“அதுகேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகுவென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டமுந்துறுத்தாங்கு அரந்தை கெடுத்து வரந்தருமிவளென ஆடித்திங்க ளகவையின் ஆங்கோர் பாடிவிழாக்கோள் பன்முறை யெடுப்ப மழைவீற்றிருந்து வளம்பல பெருக்கிப் பிழையாவிளையுள் நாடாயிற்று.”

எனும் சிலப்பதிகார உரைபெறு கட்டுரைவழி அறியலாம். ஈழத்தில் பௌத்தம் மிகச் செழித்தோங்கிய போது இக்கண்ணகி வழிபாட்டுத் தமிழ் மரபினை அதனால் அழிக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகே தமிழர்கள் பௌத்தத்தைக் கைவிட்டுச் சைவ சமயத்தைக் கைக்கொள்ளத் தொடங்கினர். இவை குறித்த தரவுகளை இங்கு ஆய்வோம். இலங்கையில் சமய மாறுதல்கள் குறித்த செய்திகள் திருவாதவூரடிகள் எனும் மாணிக்கவாசகரின் வரலாற்றினைக் கூறும் நூல்களிலேயே காணக்கிடைக்கின்றன. இவற்றில் உ.வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப்பட்ட செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (கி.பி. 13. நூற்.), பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடற் புராணம் (கி.பி.17), கடவுள் மாமுனிவர் பாடிய திருவாதவூரடிகள் புராணம் (17 ஆம் நூற்றாண்டு), திருவுத்தரகோசமங்கை புராணம் (18 ஆம் நூற்றாண்டு), கல்லாடம் என்பன நமக்குக் கிடைக்கும் சான்றுகளாகின்றன. இவற்றில் ஈழத்தில் பௌத்தர்கள் சைவர்களாக மாறிய கதைகளின் அமைவைக் காண்போம்.

சிவனடியார் ஒருவர் தமிழக சிவதலங்களை வழிபட்டு வருகையில் பொன்னம்பலத்தில் உறையும் கூத்தனை வழிபட்டுவிட்டு ஈழநாட்டை அடைந்தார். இவர் செல்லுமிடந்தோறும் “பொன்னம்பலம்” எனக் கூறுதலினை வழமையாகக் கொண்டிருந்தார். இதனைப் பொறுக்காத ஈழ பௌத்தர்கள் தம் மன்னனிடம் முறையிட்டனர். ஈழ மன்னனும் அவ்வடியாரை அழைத்து வரப் பணித்தான். அரசன் முன்னிலையில் அழைக்கப்பெற்ற அவ்வடியார் பொன்னம்பலம் எனக்கூறி அமர்ந்தார். அச் சொல் கேட்ட மன்னன் பொன்னம்பலத்தின் விளக்கத்தைக் கேட்டான். தில்லைச் சிற்றம்பலத்தின் சிறப்பையும், ஒருமுறை பொன்னம்பலமெனில், ஐந்தெழுத்து மந்திரத்தை இருபத்தோராயிரத்து அறுநூறு முறை ஓதிய பயன் கிடைக்கும் என்பனவாகக் அவர் விளக்கம் கூறிமுடித்தார். அதுகேட்ட அரசவைப் புத்தகுரு வெகுண்டு திரிபீடகத்தைத் திருவருள் செய்த புத்ததேவர் அல்லாது வேறொரு தெய்வமும் உண்டோ, நான் தில்லையை அடைந்து சைவர்களை வாதில் வென்று பொன்னம்பலத்தைப் புத்தவிகாரமாக மாற்றுவேன் எனச் சூளுரைத்துச் சிற்றம்பலத்தை நோக்கித் தமது புத்தகுழு புடைசூழப் புறப்பட்டார். ஈழ மன்னனும் தனது ஊமை மகளை அழைத்துக் கொண்டு தில்லை நோக்கி ஏகினான். தில்லையை அடைந்த பௌத்தகுரு திருப்புலீச்சரத் திருக்கோயிலிலே தங்கினான். தில்லை மக்கள் புறச் சமயர்களைத் தில்லையை விட்டு அகலுமாறு கூறினர். ஆனால், புத்தகுரு உங்கள் சோழ மன்னனுக்குகெதிரில் உமது சைவம் பொய்ச் சமயமெனச்சாற்றி, புத்ததேவனே மெய்யான கடவுள் என்பதை மெய்ப்பித்தாலன்றி, இவ்விடத்தை விட்டகலேன் என்றனன். பௌத்தரை வாதில் வென்று அகற்றுதலே சிறந்ததென உணர்ந்த தில்லைவாழ் அந்தணர் சோழமன்னருக்கும், சிவனடியார்களுக்கும், அறிஞர்களுக்கும் ஓலை எழுதியனுப்பினர். அன்றைய இரவின் வைகறைப் பொழுதிலே நகரமக்கள் அனைவரின் கனவிலும் தோன்றிய சிவபெருமான் ஊரெல்லையில் தங்கியுள்ள வாதவூரன், தர்க்க சாஸ்திர முறைக்குப் பொருத்தமான வகையில், புத்தர்களை வாதில் வெல்வான் அழைப்பீராக வெனக்கூறி மறைந்தார்.

பொழுது புலர்ந்ததும் இச்செய்தியை மக்கள் வாதவூரருக்குத் தெரிவித்தனர். அதுகேட்டு எழுந்த வாதவூரார் பௌத்தர்கள் மண்டபத்தினை அடைந்து சிவனோடு இயையாத அவர்களைத் தான் காணல் தகாதென இடையில் திரையிட்டு அமர்ந்தார். சோழ மன்னனும் அங்குவந்து வாதவூரார் அருகில் அமர்ந்தான். ஈழத்தரசனும் சோழனுக்கு திறைப்பொருளை வழங்கி வணங்கினான். அவனையும் தன் அருகில் இருத்தினான் சோழ மன்னன். ஆய்வு நெறியில் வல்ல சான்றோர் பலரும் அவையில் கூடினர். சோழமன்னனும் அடியாரை நோக்கிச் சைவத்தை நீவிர் நிலை நிறுத்துவீராயின் பௌத்தர்களைப் போக்குவது எமது கடன் எனக் கூறினான். பிறகு வாதவூரடிகள் பௌத்தர்களோடு வாதம் செய்து வருகையில் பௌத்தர்கள் சிவனை இகழ்ந்தனர். அதுகேட்டு ஆற்றாத வாதாவூரார், நாமகளை புத்தர்களின் நாவிலிருந்து விலகுமாறு கட்டளையிட்டார். புத்தர்கள் ஊமைகளாயினர். அதுகண்ட ஈழத்தரசன் வாதவூரரை வணங்கி அடிகளீர் பேசவல்ல பௌத்தர்களை ஊமையாக்கினீர், பிறவியூமையாகிய எமது மகளைப் பேச வைப்பீராயின் யான் உங்களுக்கு அடியேனாவேன் என்றனன். வாதவூரார் அம்மன்னனின் மகளை அழைத்து முன்பு புத்தகுரு தம்மிடம் கேட்ட வினாவிற்கெல்லாம் விடைகூறும்படி கூறினார். அவளும் அவ்வினாவிற் கெல்லாம் அளவைமுறை விலகாது விடை கூறினாள். வாதவூரார் அவ்வினா விடைகளைத் தொகுத்து மங்கையர் பாடி விளையாடிப் பயிலும் முறையில் திருச்சாழற் பாடல்களாக அமைத்தார்.

இந் நிகழ்வைக் கண்ட ஈழவேந்தன் வாதவூரார் அடிகளில் விழுந்து தொண்டனானான். பௌத்தர்களுக்கு ஊமை நீக்க வேண்டுமெனவும் இறைஞ்சினான். அடிகளது பார்வையால் பௌத்தர்கள் ஊமை நீங்கப் பெற்றனர். அப் பௌத்தர்கள் தங்களுக்கு வாதவூரர் திருநீறும், அக்கமாலையும், கல்லாடையும் அளிக்க வேண்டுமென வேண்டினர். வாதவூரரும் அவர்களுக்குத் திருநீறு வழங்கி அவர்களது துவராடையைச் சுட்டெரித்து அவர்கள் அனைவரையும் சைவராக்கினார் என இந் நூல்களில் கூறப்பட்டுள்ளன. இந்நிகழ்வு பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்திலும், திருவாதவூரர் புராணத்திலும், திருப்பெருந்துறைப் புராணத்திலும் கல்லாடத்திலும் சிற்சில வேறுபாடுகளுடன் சுருக்கியும் விரித்தும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பொதுவில் ஈழத்தில் பௌத்தத்தை வீழ்த்தி சைவ சமயத்தை உய்வித்தமையை விளக்குவனவாக இவை அமைகின்றன.

மேற்கண்டவற்றால் ஈழத்தில் திருவாதவூரார் எனும் மாணிக்கவாசகரால் பௌத்தம் வீழ்த்தப்பட்டுச் சைவ மார்க்கம் தொடங்கப்பட்ட செய்தியினை அறிகின்றோம். ஆனால், இச் சமயமாற்றம் ஈழத் தமிழ்ப் பௌத்த மன்னனிடமும் தமிழ்ப் பௌத்த மக்களிடம் ஏற்பட்டதா, அல்லது சிங்கள பௌத்த மன்னனிடமும் மக்களிடமும் ஏற்பட்டதா? என்பதனை அறிதலும் ஐயமறத் தெளிதலும் இன்றியமையாததாகும். இதனைப் பின்வருமாறு தெளியலாம்.

  1. இச்சமயமாற்றம் குறித்துக் கூறும் மேற்கண்ட நூல்கள் அனைத்திலுமே ஈழமன்னன் எனும் சொல் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை, சிங்களம் எனும் சொற்கள் பயன்படுத்தப்படவில்லை.
  2. பௌத்த பிக்குவிற்கும் மாணிக்கவாசகருக்கும் நிகழ்ந்ததாகக் கூறப்படும் வாதங்களின் வினா விடைகள் தமிழ் மொழியிலேயே அமைவனவாகக் காட்டப்பட்டுள்ளன. வேறு மொழியில் அமைந்ததற்கான குறிப்புகள் எங்குமில்லை.
  3. ஈழ மன்னனின் மகள் பௌத்தர்களின் வினாக்களுக்குத் தமிழிலேயே  விடையளிப்பதாக அமைந்துள்ளமையால், அம்மன்னனும் அப்பெண்ணும் தமிழர் எனத் தெளிவாகலாம். 
  4. பொன்னம்பலம் எனும் சொல்லுக்குப் பொருள் தேடுதலும் சித்தாந்த சைவத்திற்பாற் பட்டனவாகவே அமையும். இன்றும் பொன்னம்பலம் எனும் பெயரினை ஈழத்தில் மிகுத்து காணலாம். தமிழகத் தமிழரினும் ஈழத் தமிழரே தில்லை அம்பலத்தைத் தாய்வீடாகக் கருதிப் போற்றுகின்றமையையும் காணலாம். இதற்கான காரணமாக அவர்களினை பௌத்தத்திலிருந்து விடுத்து சைவ நெறிப்படுத்தத் தொடங்கிய தலம் அது என்பதினை மதிப்பிடலாம்.
  5. இத்துடன் மற்றொரு காரணத்தினையும் எண்ண வேண்டும். சிங்களர் தேரவாத பௌத்தத்தினையும், தமிழர் மகாயான பௌத்தத்தினையும் கடைப்பிடித்தனர் என்பது தெளிவு. இதன்வழி ஆராயும்போது, தேரவாதத்தில் தருக்கம் இல்லை. புத்தர் தத்துவ விசாரணைகளையும் தருக்க விவாதங்களினையும் பெரிதும் மறுத்துப் புறந்தள்ளியவர். ஆனால், மகாயான பௌத்தர் தம் கொள்கைகளை நிலைநாட்டுதற்குத் தருக்கவாதத்தை (அளவை நூல் முறைமையை) ஏற்றுக் கொண்டனர். நாகார்சுனரின் ‘உபய கௌசல்ய சூத்திரம்’ என்பது பௌத்தத்தின் முதல் தர்க்க நூல். ஆனால், அவர்கள் பெரிதும் நையாயிக தருக்கத்தையே கைக்கொண்டனர். சௌந்தராத்திக யோகசரர்கள் அத்தருக்கத்தினை மேம்படுத்தி பௌத்த நெறிக்கு ஏற்றதாக்கினர். தமிழில் சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில் அதனை நன்கு பயன்படுத்தியுள்ளார். இதன்வழி தில்லையில் நடந்த தருக்க வாதத்தில் சிங்கள பௌத்தர்கள் பங்கேற்கவில்லை எனவும், தமிழ்ப் பௌத்தர்களே பங்கேற்றுச் சமய மாறுதல்களை அடைந்தார்கள் என்பதினையும் அறியலாம்.

மாணிக்கவாசகரால் ஈழத் தமிழர்கள் பௌத்தத்தைவிட்டு சைவத்தினைக் கைக்கொள்ளத் தொடங்கிய காலம் எதுவென ஆராய்தல் இன்றியமையாததாகும். இவை குறித்து இனிக் காண்போம்.

தமிழ் நாட்டிலிருந்து சைவாசாரியார் ஒருவர் ஈழ நாட்டிற்குச் சென்று அங்குள்ள பௌத்த மன்னனைச் சைவ சமயத்திற்குத் திருப்பினார் என இராஜரத்நாகரி யென்னும் இலங்கைச் சரித நூல் கூறுகின்றதென்றும், அந்நூலிற் குறித்த காலம் கி.பி. 819 ஆம் ஆண்டினை ஒட்டியதென்றும் நெல்சன் என்பவர் தாம் எழுதிய மதுரைச் சரித்திரத்தில் (Madura Manuea) குறிப்பிட்டுள்ளதாகக் க. வெள்ளைவாரணர் குறிப்பிடுவார்.4 அத்துடன் இவர் மாணிக்கவாசகர் குறித்த கால ஆய்வில், மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம், கி.பி. 792 முதல் 835 வரை ஆட்சிபுரிந்த முதல் வரகுண பாண்டியனது காலமே என்பார். இதே கருத்தினை இவருக்கு முன்பும் டி.வி. சதாசிவ பண்டாரத்தார் கொண்டிருந்தார். ஆனால், தமிழ் வரலாறு எனும் நூலின் ஆசிரியரான தஞ்சை ஸ்ரீநிவாசப்பிள்ளையவர்கள், கி.பி. 862 முதல் 880 வரை ஆண்ட இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்தவரென்பார். 

maanikavasakar

மேற்கண்ட மாணிக்கவாசகர் காலம் குறித்த கருத்துகளைக் கொண்டு ஆய்வதன் வழி ஈழத்தில் தமிழர்கள் சமய மாற்றம் அடைந்த காலத்தினை அறுதியிட முடியும் எனலாம். திருவாதவூராரின் வரலாற்றினைக் கூறும் திருவாதவூரர் புராணம் முதலாய நூல்களில் சோழ மன்னனின் முன்பே தில்லையில் மாணிக்கவாசகருக்கும் ஈழத்துப் பௌத்தர்களுக்கும் வாதம் நிகழ்ந்து, ஈழத்து மன்னனும் பௌத்த பிக்குகளும் சைவராயினர் எனத் தெளிவுறக் கூறப்பட்டுள்ளது. இச்செய்தி கால வரையறைக்கு இன்றியமையாததாக அமைகின்றது. எனில் சங்ககாலத்திற்குப் பிறகு ஆட்சியைக் களப்பிரர்களிடம் பறிகொடுத்து வரலாற்றிலிருந்து மறைந்த சோழர்களைக் குறித்த செய்திகள், தமிழகத்தில் ஒன்றும் கிடைத்தில்லது. பிற்காலத்தில் சோழர்கள் குறித்த செய்தி விஜயாலயச் சோழன் தொடக்கமே கிடைக்கலாயிற்று. விஜயாலய சோழன் கி.பி. 850 ஆம் ஆண்டில் முத்தரையரையிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றியதன் வழியே தமிழக வரலாற்றில் சோழர்கள் மீண்டும் வெளிப்பட்டதாக க. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுவர். இதன்வழி கொண்டாய்ந்தால் ராஜரத்நாகரி நூலின் வழி நெல்சன் குறிப்பிடும் கி.பி. 819 என்பதற்குச் சற்று அரை நூற்றாண்டுகள் பிந்தியேனும் இச் சமயமாற்ற நிகழ்வு நிகழ்ந்திருக்க வேண்டும். கி.பி. 850 ஆம் ஆண்டில் விஜயாலயன் தஞ்சையைக் கைப்பற்றியவுடன் வெகு விரைவிலேயே சோழமண்டலம் இவன் ஆட்சியில் பல்லவர்களிடம் இருந்து பெறப்பட்டதென வரலாற்றாய்வாளர்கள் கருதுவர். அதன்படி நோக்கின் கி.பி. 870 ஆண்டுகளின் வாக்கில் இந்நிகழ்வுகள் நிகழ்ந்தவேளை தில்லையிலும் சோழர் ஆட்சியே நிகழ்ந்திருக்கும். இது க. வெள்ளைவாரனாரும், டி.வி. சதாசிவப் பண்டாரத்தாரும் குறிப்பிடும் முதலாம் வரகுணப் பாண்டியன் காலத்திலிருந்து (கி.பி. 792 – 835) பெரிதும் வேறுபட்டதல்ல எனலாம். மாணிக்கவாசகர் 42 ஆண்டுகள் வாழ்ந்ததாகப் பழம்பாடல் ஒன்று கூறும். அதன்படி அவர் முதலாம் வரகுணன் காலத்திற்குச் சற்று பிந்தி விஜயாலயனின் தொடக்க காலத்தில் வாழ்ந்திருக்கலாம். மேற்கண்ட சான்றுகளின் வழி ஈழத்தமிழ்ப் பௌத்தர்கள் கி.பி. 850 முதல் கி.பி. 870 வரையிலான கால கட்டத்தில் மாணிக்கவாசகரால் சைவத்திற்கு மாற்றப்பட்ட நிகழ்வு நிகழ்ந்திருக்கும் எனக் கொள்ளலாம் (அன்றே கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் தமிழகத்தில் நுழையும் முன்பு சோழராட்சி சோழநாட்டில் நிலவிய வேளை மாணிக்கவாசகர் வாழ்ந்திருக்கலாம். அக்கருத்தினையே மறைமலையடிகள், சி. அருணைவடிவேலு முதலியார் போன்ற அறிஞர்கள் கொண்டிருந்தனர். அதற்கான பல சான்றுகளும் உண்டு. அவற்றில் ஒன்று, கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் சமணத்திலும் பௌத்தமே தமிழகத்தில் கோலோச்சியது; அதனால்தான் மாணிக்கவாசகர் சமணத்தைப் பெரிதாகக் குறிப்பிடாமல் பௌத்தத்தையே சாடினார் என்பது. சங்ககாலத்தில் சோழநாட்டின் ஆதிக்கத்தில் ஈழமண்டலம் விளங்கிற்று. அதனால்தான் மேற்கண்ட திருச்சாழல் குறித்த கதையில் சோழ மன்னனுக்கு ஈழமன்னன் திறை வழங்கினான். ஆகவே கி.பி. மூன்றாம் நூற்றாண்டே அது என்பது ஒரு கருத்தாக அமைகிறது). எப்படியும் பௌத்தத்தின் வீழ்ச்சியை ஈழத்தில் தொடக்கி வைத்தவர் மாணிக்கவாசகரே என்பது திண்ணமாகிறது. இந் நிலையில் பிற்காலச் சோழப் பேரரசின் வளர்ச்சியும் செல்வாக்கும் ஈழத்தில் சைவத்தை நிலை நிறுத்துவதில் பெரிதும் வலிமை செலுத்தின. ஆயினும் படிப்படியாகவே பௌத்தம் தமிழர்களை விட்டகன்ற தெனலாம்.

rajaraja perumpalli

தமிழகத்தில் நாகப்பட்டின பௌத்தப் பள்ளியை இராச இராசன் கட்டியமை, வீரசோழன் காலத்தில் பொன்பற்றி புத்தமித்திரர் வீரசோழியம் எழுதினமையும், ஈழத்தில் திருகோணமலையில் இராச இராசப் பெரும்பள்ளியை இராச இராசன் கட்டியமையும், தீவகத்தில் இராசேந்திரன் புத்தப்பள்ளி கட்டியமையையும் கொண்டு நோக்கும்போது, சோழப் பேரரசு காலத்தில் தமிழர்களிடம் நலிவுற்றிருந்த பௌத்தம் அருகி அருகி பிற்காலப் பாண்டியப் பேரரசின் தொடக்கத்தில் முற்றாக மறைந்ததெனலாம். சமண, பௌத்த, வைதீகம் என எச்சமய மாறுதல்கள் வந்தபோதும் தமிழத்திலும் ஈழத்திலும் அடிப்படையான மண்ணின் மைந்தர்களிடம் தமிழ்மரபு வழிபட்ட வழிபாடே விஞ்சி நின்றது. ஈழத்துத் தென்பாகமும், தமிழகத்துக் கொங்கு மண்டலமும் மேம்போக்கான அரசியல் மட்டத்திலான அயற்சமய தாக்கங்களைப் பெற்றதே ஒழிய, அடிநிலையில் தங்களது மரபுசார் சமய முறைமையினையே இன்றளவும் பின்பற்றி வருவன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்வழி கி.பி. 14 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகத் தமிழகத்திலும், ஈழத்திலும் காணக் கிடைக்கும் பௌத்தச் சிற்பங்களும், தொல்லியல் சின்னங்களும் தமிழருக்கே உரிமையானவையாம் என்பதினைக் கருத்தில் கொண்டு, தமிழர்கள் தங்கள் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தல் தொடர்பான அறிவினை வளர்த்துக் கொள்ளுதலும் இன்றியமையாதது. அத்துடன் அவற்றை பாதுகாப்பதற்கான திணைக்களங்களையும் தாங்களே ஏற்படுத்தி, தங்களுடைமைகள் பிறரிடம் களவு போகாமல் பாதுகாத்தல் வேண்டும். அன்றேல் பல வரலாற்றுத் திரிபுகள் ஏற்படுவதற்கு வழியமைக்கப்பட்டுவிடும்.

அடிக்குறிப்புகள்

4. க.வெள்ளைவாரணன்; பன்னிருதிருமுறை வரலாறு- இரண்டாம் பாகம், பக். 68.  

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4979 பார்வைகள்

About the Author

ஜெகநாதன் அரங்கராஜ்

முனைவர் ஜெ. அரங்கராஜ் யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்தவர். இவர் பழந்தமிழ் இலக்கியத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம் முதலான துறைகளில் தமது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சிங்கப்பூர்த் தமிழ்ப் பாடநூற்கள் குறித்தும் பண்டைத் தமிழர்களின் அயலகத் தொடர்புகள் குறித்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ‘செம்மொழித் தமிழ் இலக்கண, இலக்கிய மேற்கோள் அடைவு’ என்னும் இவரது நூல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் ஈழம், தமிழகம் என இரண்டு தலங்களிலும் ஆய்வு மேற்கொண்டுள்ள ஆய்வாளராக இவர் திகழ்கின்றார்.