பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக அழைத்து வரப்பட்ட மக்கள் கூட்டத்தினரோடு மலையகச் சமூகம் தோற்றம் பெறலாயிற்று என்பது யாவரும் அறிந்த உண்மை. அவர்களால் உருவாக்கப்பட்ட சமூக, பண்பாட்டுத் தளத்திற்கு 200 ஆண்டுகால வரலாறு உண்டு. வலியுடன் காலூன்றி வாழும் எம் மக்களிடம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பின்னர், இலக்கிய முயற்சிக்கான அடித்தளம் மெது மெதுவாகத் துளிர் விடத் தொடங்கியது. ஆரம்ப காலங்களில் மலையக இலக்கியத்தில் ஆண் படைப்பாளர்களே தங்களின் சமூகப் பிரச்சினைகளை கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய படைப்புகளினூடாக வெளிக்கொணர்ந்தனர். 1935 களில் தொழிற்சங்க ரீதியில் மலையக பெண்களுக்காக மீனாட்சியம்மை நடேசையர் குரல் கொடுத்தார். அதற்குப் பிறகு மலையகப் பெண்களின் துயர் சூழ்ந்த வாழ்க்கைக் கோலங்களை ஆண் படைப்பாளர்கள் வெளிக்கொணர்ந்தனர். அவை எம் மக்களின் பாடுகளை உலகறியவும் செய்தன எனில் மிகையாது. ஆண் தன் நிலைப்பாட்டில் இருந்து பெண் குறித்துப் பேசுவதை விட, பெண்களுடைய பிரச்சினைகள் எவ்வளவு தூரம் பெண்களுடைய குரலாக வெளிப்படுகின்றது என்பதே முக்கியமானதாக அமைகின்றது. அதன் அடிப்படையில் 1980 இற்குப் பின்னர் உயர்கல்வித் துறையில் ஏற்பட்ட வாய்ப்புகளினால் சிறிது சிறிதாகப் பெண் கவிஞர்கள் எழுதத் தொடங்கினர். பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்பட்ட பெண்கள் அங்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொண்டு, தங்களுடைய பிரச்சினைகளை எழுதத் தொடங்கினர். இந்த எழுத்து முயற்சி நூலாக்கங்களாகவும் வெளிவந்தன. இருப்பினும் இப் படைப்புக்கள் தொடர்ச்சியாக வெளிவந்தனவா என்பது வினாவாகவே அமைகின்றது. அவ்வாறு எழுதப்பட்ட கவிதைகளில், மலையக வாழ்வியல் அம்சங்கள் மற்றும் பால்நிலைக் கருத்தியலை உள்ளடக்கிய ஒரு சமூக இயக்கத்தில் பெண்கள் எவ்வாறு செயற்படுகின்றனர்? குறிப்பாக, பெண்களின் சமூகப் பிரச்சினைகள் எவ்வளவு தூரம் வெளிவந்துள்ளன? அவற்றின் பால்நிலை வெளிப்பாடுகள் யாவை? என்பவற்றை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
1935 களில் தொழிற்சங்க ரீதியில் மலையகப் பெண்களுக்காகக் குரல் கொடுத்தவர் மீனாட்சியம்மை ஆவார். அவரின் குரல் வழி மலையக நிலத்தில் இரவும் பகலும் பாடுபட்ட பெண்களின் துயர் சூழ்ந்த வாழ்வும், சமூகசார் பிரச்சினைகளும் வெளிவரத் தொடங்கின. ஆணாதிக்க ஒடுக்கு முறைகளை மனதில் நிரப்பியும், கொழுந்துக்கூடையை முதுகில் சுமந்தும், குடும்பச் சுமையை தலையில் சுமந்தும் வாழும் மலையகப் பெண்களின் பாரம் இன்று சிறிது குறைந்திருந்தாலும் முழுமையாக வேரறுக்கப்படவில்லை. வலியுடன் மலைகளைக் கடக்கும் ஒவ்வொரு தாய்மார்களின் பெரு மூச்சிலும் அவர்களின் ஏமாற்றங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது எனலாம்.
மலையகப் பெண்களின் பாடுகளைப் பற்றி சி.வி. வேலுப்பிள்ளை, குறிஞ்சித் தென்னவன் முதலியோர் கவிதைகளைப் பாடியிருந்தாலும், பெண்களின் பிரச்சினைகளை பெண்களின் குரல் வழியாகக் கேட்கும் போது மாபெரும் சக்கி பிறக்கின்றது. மலையகச் சூழலில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண் கவிஞர்கள் காணப்படுகின்றனர் என்பதே நிதர்சனம். 1980 இற்குப் பிறகு ஏற்பட்ட உயர்கல்வி வாய்ப்புகள், பல்கலைக்கழகப் பிரவேசம் என்பவற்றை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டமை அவர்கள் எழுத்துலகில் கால்பதிக்கக் காரணமானது. அந்த வரிசையில் சந்திரலேகா கிங்ஸ்லி, நாகபூசணி, மஞ்சுளா, எஸ்தர் லோகநாதன், சண்முகப்பிரியா, இஸ்மாலிகா, இராகலை தயானி, சர்மிளாதேவி போன்றோரைக் குறிப்பிடலாம். அவர்களுக்கான தளத்தை கலையருவி, தேட்டம், வடம், புதியபூமி, தாயகம், லயம், அகல், சக்தி, காற்புள்ளி போன்ற சஞ்சிகைகள் வழங்கின. மிக முக்கியமாக 2007 ஆம் ஆண்டு ஊடறு வெளியீடாக மலையகப் பெண் கவிஞர்களின் படைப்புக்கள் “இசை பிழியப்பட்ட வீணை” எனும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்டமை மலையகப் பெண் கவிஞர்களை உலகிற்கு வெளிக்காட்டியது எனலாம். இக் கவிதைகளில் பெண்களுடைய பிரச்சினைகள் எவ்வளவு தூரம் அவர்களுடைய குரலாக வெளிக்காட்டப்படுகின்றது என்பதே முக்கியமானதாகும். கவிதைகளில் பெண் குறித்த பால்நிலை வேறுபாடுகள் கீழ்வரும் தலைப்புகளின் கீழ் ஆராயப்படுகின்றது.

வேலைத்தலமும் பெண்களும்
எமது நாட்டின் பொருளாதாரத்தில் மலையகப் பெண்களின் உழைப்பு முதுகெலும்பைப் போன்றது. அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் மலையக பெண்கள் பிய்த்தெடுக்கும் தேயிலைக் கொழுந்துக்கு அதிக கேள்வி நிலவுவது சர்வதேசம் அறிந்த உண்மையாகும். அவ்வாறு வாழும் பெண், தன் வாழ்நாளில் பெரும் பங்கை தேயிலை மலையிலே கழிக்கின்றாள். தோட்டத்தில் ‘கான்’ வெட்டுதல், உரம் போடுதல், மருந்து தெளித்தல், கன்று நடல் போன்றவற்றோடு ஆணின் உழைப்பு வரையறுக்கப்பட்டு விடுகின்றது. மாறாக பெண்ணின் பாடு ஒவ்வொரு நாளும் 8 மணித்தியாலத்திற்கும் மேலாக நீள்கின்றது. 18 கிலோ எடுத்தால் அன்றைய நாளுக்கான கூலித் துண்டில் பதியப்படும். இதற்காக அவள் கடும் பிரயத்தனங்களைக் கடக்க வேண்டும். இன்று, மது அருந்துவதில் நுவரெலியா மாவட்டம் 2 ஆம் இடத்தில் இருக்கிறது. மதுப் பிரியர்களிடமிருந்து தன் குடும்பத்தையும் பிள்ளைகளையும் பாதுகாக்கப் போராடுவது மலையகப் பெண்களின் வாழ்நாள் தலைச்சுமையாய் அமைகின்றது. சமையல் வேலை, வீட்டு வேலை, பிள்ளைகளைப் பராமரித்தல் என தொடர்ச்சியான சுழற்சி வேலையை மலையகப் பெண் செய்துகொண்டே இருக்கின்றாள். பிள்ளைப் பேற்றினைத் தொடர்ந்து 30 நாட்கள் கடந்ததுடன், மலை நோக்கி நகரும் துர்ப்பாக்கியச் சூழ்நிலை மலையகப் பெண்களுக்கு மட்டுமே உரித்துடையதாக இருப்பது கவலைக்கிடமானது. இவ்வாறாக, வேலைத்தலத்திலும் வீட்டிலும் ஆண் – பெண் அசமத்துவ நிலை பேணப்படுவதை பின்வரும் கவிதைகளின் ஊடாக நோக்கலாம்.
“அவளுக்கென்று எந்த விடியலும்
புதியல்ல
இந்த வானமும் சொந்தமில்லை
……………………………….
தலையில் மூங்கில் கூடை
இடுப்பில் ரெட்டு படங்கு
மட்டக்குச்சி
மட்டக்கத்தி
அவளை விடியல் அலங்கரிக்கிறது
அவளின் விடியலில் ஆகத்துயரம்
பிள்ளை மடுவத்தில் தேவீயின்
குழந்தையை கைவிடுதல் தான்
………………………………
கனிந்த பழங்களைப் பிழிதல்
கனிச்சாறு என்பது போல் கனிந்த வாழ்வை
தேசத்தின் முதலுக்காய் பிழிந்து கொண்டிருக்கிறாள் – தேவீ
மார்பில் கசியும் தாய்ப்பாலும்
வியர்வையும் தேவியை நனைக்க
வந்துவிட்டாள் அவள் தேயிலைப் பெரு மலைக்கு………..”
என்னும் எஸ்தர் லோகநாதனின் வரிகளிலும் (பெரு வெடிப்பின் மலை – தேவி),
“பகல் முழுவதும் பட்டினியால்
வாடும் குழந்தைகள்
சாப்பாடில்லாவிட்டாலும்
சாராயமே வாழ்க்கையாகிவிட்ட
கணவன்
கூடையைச் சுமந்தே
முப்பது வயதிலேயே
ஐம்பது வயதுத் தோற்றம்
…………………………..
மொத்தத்தில் – முட்களே ஆடைகள்
சோகமே அவள் சுவாசம்
வேதனையே
அவள் உலகம்
இவள்
தேயிலைத் தோட்டத் தொழிலாளிப் பெண்!
என்னும் அ. பரமேஸ்வரியின் (இசை பிழியப்பட்ட வீணை – தொழிலாளிப் பெண்ணின் சோக கீதம்) வரிகளிலும் மலையகப் பெண்களின் நிலை வெளிப்படுகின்றது.
இவ்வாறாக இரத்தத்தையும் சதையையும் தனது நிலத்திற்காகவும் தன் குடும்பத்திற்காகவும் செலவிடும் பெண்களுக்கு கிடைப்பது என்ன? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் உடல் பலம் குறைந்தவர்கள் எனக் கூறப்பட்டாலு பெண்களின் உழைப்பு இக் கூற்றைத் தகர்த்து எறிவதாகவே உள்ளது. தொடர்ச்சியான வேலை, உடல் ரீதியான உபாதைகளை ஏற்படுத்தி அவர்களின் ஆயுளைக் குறைக்கின்றது. இன்னும் கூட தூர மலைப்பகுதிகளில் வேலைக்குச் செல்லும் போது அங்கே சிறுநீர் கழிப்பதற்கு மலசலக்கூட வசதியின்மை, குளவி கொட்டுதல், சிறுத்தைப் புலிகளின் தாக்குதல் என்பவற்றினால் பெண்கள் வேலைத்தலங்களில் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது.

மேலும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாகச் செல்லும் மலையகப் பெண்கள் அங்கு பல கொடுமைகளை அனுபவிக்கின்றனர். தீக்காயங்களுடனும், தலையில் ஆணி அடிக்கப்பட்டும், சில நேரங்களில் பிரேதமாகவும் வரும் சம்பவங்களை பத்திரிகைகள் வாயிலாக அறிந்துள்ளோம். சிறு குழந்தைகளைக் கணவனின் பொறுப்பில் விட்டுவிட்டு அந்நியதேசம் செல்லும் பெண்களின் பணத்தை, கணவன்மார்கள் சாராயக் கடைகளில் வீண்விரயமாக்கும் நிலையும் மலையக சமூகத்தில் இன்று வரை தொடர்கிறது. இதன் போக்கு பின்வரும் கவிதையில் இழையோடுவதைக் காணலாம்.
“வறுமையே தலையெழுத்தாகிப் போன
மலையகத்துக்கு
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
திரவியம் தேட
போகத் தயாரானேன் மத்திய கிழக்குக்கு
கொழும்பின் நிறமே தெரியாத எனக்கு
அரபு நாடுகளின் நிறம் எவ்வாறு
தெரியப்போகின்றது………”
– மஞ்சுளா (இசை பிழியப்பட்ட வீணை – சவால்)
இவ்வாறு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கஸ்டப்படும் மலையகப் பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகவே உள்ளது.
பெண்ணும் காமமும்
பெண், வரலாற்று காலம் தொடக்கம் இன்று வரை, சதை விரும்பிகளால் காமப் பொருளாகவே பார்க்கப்படுகின்றமையை அறியலாம். பெண் உடல் வேட்கை, பாலியல் சேட்டையாகவும், துஷ்பிரயோகமாகவும் வெளிப்படுகின்றது. பிரயாணத்தின் போது அவள் படும் அவஸ்தைகளை பின்வரும் கவிதை கூறுகின்றது.
“சில அழுக்கு கண்கள்
அந்தரங்கத்தில் மேயும் போது
ஆடையுடுத்தியும் அம்மணமாவோம்
அந்தவொரு தருணத்தில்
உயிர் போகும் உடல் வேகும்
வண்டி நெருக்கமானால்
வந்து நெருக்கமாகி – நொறுக்கி விடுவார்கள்
…………………………………………”
காம இச்சைக்காக காதலிக்கும் ஆண்களின் நிலைப்பாட்டினை பினவரும் கவிதை வெளிப்படுத்துகின்றது.
பாவம் அவள் பருவமடைய முன்
படுக்கை வெறியர்களுக்கு இரையானவள்
தொட்டில் தாண்டி பத்தாண்டில்
கட்டிலில் கற்பை இழந்தவள்
…………………………………….
காம கபடியில் உடலிழந்த இவளின்
கற்பைத் தேடி அழைக்கிறாயா?
காதல் கொண்டவன் நீ
காமம் தேடியவன் நீ
கன்னிப் பரிசோதனை செய்து
கழட்டிவிட்டவன் நீ
ஐந்து நிமிட இன்பத்தில்
அவள் இதயத்தை அரிந்து விட்டாய்
மோகத்தால் – மோகமொன்றே காதலானால்
இதயத்தை ஏன் கேட்டாய்?
– இராகலை தயானி (அக்கினியாய் வெளியே வா).
காதல் என்ற போர்வையில் பெண்கள் காலம் காலமாக ஏமாற்றடைந்த வண்ணமே இருக்கின்றனர். இதனால் கல்வியை கைவிட்டு சிறு வயதிலேயே திருமண பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றனர். அத்துடன் ‘அம்மாவின் கணவர்’ எனும் தலைப்பில் ம. கலையரசி எழுதிய கவிதையில், அம்மாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் ஓர் ஆண், அவர் மனைவியின் பிள்ளைகளை வேற்றார் பிள்ளைகளைப் போல் நினைத்து, காமப் பார்வையில் பிள்ளைகளை அணுகும் வக்கிர எண்ணங்களை, பின்வருமாறு கூறுகின்றார்.
“விடுமுறை இல்லா பசி
அவனுக்கு என்மீது
கிழிந்த சேலை
தெரியாத அவனுக்கு
கிழிசலின் வழி
தெரியும்
சதைப்பிண்டம்…………………
என் கதறிய நாவும்
சிதறிய வார்த்தைகளும்
கலங்கிய கண்களும்
நொருங்கிய இதயமும்
எப்போதும் அவன்
காமப்பிடியிலேயே
ஜுவிக்கிறது…..
அவனது பார்வை
என் தங்கை மீது
படர்ந்து விடக்கூடாது
என்ற அச்சத்தில்…”

இவ்வாறாக, பெண்கள் காமுகர்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையைக் காணலாம். காமம் தொடர்பாக பெண் பேசக்கூடாது என்ற மனநிலை உண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில், காமம் தொடர்பாகவும் தவறான காமப் பார்வையிருந்து தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்வதென்ற விடயத்தில் பெண்கள் தெளிவாக இருப்பது அவசியமானதாகும். இன்று ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு, நல்ல தொடுகை பற்றியும், தீய தொடுகை பற்றியும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
பெண்ணின் பார்வையில் அரசியல்
காலங் காலமாக தேர்தல் காலங்களில் மட்டும் வெளிநடப்புச் செய்யும் அரசியல் வாதிகளின் கபடத் தனங்களைச் சொல்லும் கவிதைகளையும் மலையகப் பெண்கள் பாடியுள்ளனர். ‘அரசியல் பழகு’ என்பதை எல்லாப் பெண்களுக்கும் கட்டாயமாக்க வேண்டிய தேவை உள்ளது. ஆண்கள் மட்டுமே பேசிய அரசியல் விடயங்களை, பெண்களும் பேசக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பது சமத்துவத்தினை பிரதிபலிக்கின்றது.
“தகரத்துளைகளில்
வெயில் காலங்களில்
எட்டிப் பார்க்கிறான் சூரியன்
மழைக் காலங்களில் அழையாத விருந்தாளியாய்
உள் நுழையும் வருணனின் கொடை
வெற்றிலை எச்சில்
சிறுநீர் சிலசமயம் மலத்தோடு
மந்த கதியில் ஓடும் வடிகால்
இன்னல் வரம் பெற்றதால் தானோ
எந்த அண்ணலுக்கும்
இன்னும் எங்கள் இருப்பிட இம்சை புரியவில்லை….
– இராகலை தயானி (அக்கினியாய் வெளியே வா)
இன்றும் கூட வாழ்விடங்களில் மாற்றம் ஏதும் இல்லாமல் வாழும் எம் மக்களின் நிலை கவலைக்கிடமானதாகும்.
“எங்கள் எம்.பி மிகவும்
நல்லவர்
………………………
மக்களின் துன்பங்களைக் கண்டு
துவழமாட்டார்
வேதனைகளில் வெகுண்டெழவும் மாட்டார்
தனது பாதையில் எதையும்
அலட்சியமின்றி அவமானங்களையும்
ஆத்திரமின்றி
ஏற்றுக்கொள்ளும் புதுமைப்பிறவி
எங்கள் எம்.பி மிகவும் நல்லவர்”
– ரா.கெத்தரீன் (இசைபிழியப்பட்ட வீணை – எங்கள் எம்.பீ)-
“லயங்களின் தகரக் கூரைகளுடன்
இப்பவோ அப்பவோ நொறுங்கி விழக்கூடும்
வெள்ளை மண் பூசிய செவிரோடும்
அவன் குழந்தைகளும் சிறுத்தைகளும் குளவிகளும்
1000 ரூபாக் கூலிக் கனவுகளோடும் நூற்றாண்டுகள்
அரசியல்வாதிகளின் அப்பழுக்கற்ற வாக்குறுதிகளோடும்
பத்திரமாயிருக்கிறாள் பெறுமதியற்ற
தோட்டத் தொழிலாளி…”
1000 ரூபாய் பொய்யுரைகளையும், அதனை இன்னும் நம்பிக் கொண்டு வாழும் தோட்டத் தொழிலாளிகளின் எதிர்பார்ப்பின் ஏமாற்றங்களையும் ‘பெரு வெடிப்பின் மலை’ தொகுப்பில் எஸ்தர் லோகநாதன் உரத்துப் பேசுகின்றார்.
பெண் தேடும் சுதந்திரமும் இருப்பும்
மலையகத்தில் கல்வி ஏற்படுத்திய தாக்கம் பெரிது. பெண்கள் கல்வி கற்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அவர்களுக்கான சுதந்திரத்தையும் இருப்பையும் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். அது அவர்களின் வாயிலாகவும் வெளிப்படுகின்றது.
“இத்தனை சிறகுகளில் உன்
சிறகின் வகையுணர்ந்து
உன்னத நிலையுடன்
உறுதியாய் நிமிர்ந்து விடு
உதறும் உன் சிரிப்பில்
உடையட்டும் கட்டுகள்
இன்னும் ஏன் தலைகவிழ்ப்பு
……………………………
உன் சிறகுகளை
நீயே சிதைத்துக் கொண்டு
மரபுக் கூட்டுக்குள் அடைப்பட்ட காலம்
மலையேறிப் போச்சு
வெளியே வா”
…………………………………..
“எத்தனை பெண்கள் எம்மில் இன்று
எம்மை ஆளுகிறார் – உயர் பதவியை
நாடியுள்ளார்
சற்றே சிந்தனைக் குதிரையைத்
தட்டிடுங்கள்
நினைத்திட்டால் பெண்கள்
முடித்திடல் இலகு.
இன்றே முடிவெடுங்கள் அதற்காய்!
இவ்வாறாக பெண்ணின் சுதந்திர இருப்பு வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றது. பாரதி காணத் துடிக்கும் புதுமைப் பெண்ணாய் தானும் மாற வேண்டும் என்ற அவா அவர்களின் படைப்புகளில் காட்டப்படுகின்றது.
முடிவுரை
மலையகத்தில் உருவாகிய பெண் கவிஞர்கள், தான் ஓடியாடித் திரிந்த சமூகத்தின் நிலை பற்றியும், தான் வாழும் சமூகத்தை எப்படி தனக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் பலவாறாக யோசித்து, தங்கள் கவிதைகளைப் படைத்துள்ளார்கள். ஒரு வரையறைக்குள் அடக்கி வைக்கப்பட்ட பெண்களை, அவர்களுக்குக் கிடைத்த கல்வியே சிந்திக்கத் தூண்டியது எனலாம். சமூக அடுக்கமைவில் பிள்ளைப் பேற்றிலிருந்து ஆண் – பெண் வேறுப்பாட்டுக்கான அடித்தளம் இடப்படுகின்றது. ஆண் பிள்ளை என்றால் ஆசையுடன் சிரிக்கும் முகம், முதல் பிள்ளை பெண்ணாகப் பிறந்திட்டால் முகம் சுழிக்கும் நிலை காணப்படுகின்றது. பெண் கவிஞர்களின் படைப்புகளில் வெளிப்படும் ஆண் அடக்குமுறைக் கவிதைகளைக் கொண்டு, முழு ஆண் சமூகத்தையும் அவர்கள் தவறாக வெளிக்காட்டவில்லை. மாறாக, சமூகத்தில் பலரோடு சிலராக உலாவும் ஆணாதிக்கவாதிகளையே அடையாளப்படுத்துகின்றனர். அவர்களிடம் நேரடியாகக் கூற முடியாததை மறைமுகமாகக் கூற முற்படும் போது, அங்கே ஏதோவொரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையிலேயே இவர்களின் கவிதை எழுதப்படுகின்றது.
பெண் சுதந்திரத்திற்கும், அவர்களின் இருப்பிற்கும் ஆண் தலைமைகளும் கைகோர்ப்பதால் மட்டுமே சமூக மாற்றத்தைக் கொண்டுவர இயலும். அது படைப்புலகிலும் முன்னிலைப்படுத்தப்படல் வேண்டும். குறிப்பாக, மலையக இலக்கியத் தளத்தில் ஆண் கவிஞர்கள் காமம், அரசியல் குறித்துப் பேசும் போது ஏற்றுக்கொள்ளும் வாசகவட்டங்கள், ஒரு பெண் படைப்பாளி இவற்றை எழுதும் போது, ஏளனப் பார்வையில் பார்க்கும் நிலை மாற்றப்பட வேண்டும். தன் உடல் சார்ந்த விடயங்கள் மற்றும் உணர்ச்சிகளை வெளியில் பகிர, படைப்புகளில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். காரசாரமான விமர்சனங்களை அள்ளிக்கொண்டுப் போய் வீசாமல், அவர்களைத் தொடர்ந்து எழுதத் தூண்டச் செய்தால், மலையகத்தில் இன்னும் பல பெண் கவிஞர்களை உருவாக்க இயலும். படைப்புகளிலும் பெண் பற்றிய புரிதல்களை ஏற்படுத்திக்கொண்டு, பால்நிலை வேறுபாடுகளை நீக்கும் போது, மலையகத்தில் காத்திரமான பெண் படைப்பாளிகள் உருவாவது திண்ணம்.
தொடரும்.