இலங்கையில் தமிழ் பௌத்தர் - பகுதி 2
Arts
23 நிமிட வாசிப்பு

இலங்கையில் தமிழ் பௌத்தர் – பகுதி 2

November 24, 2023 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன

இலங்கைத் தமிழர்களுக்கு பௌத்தம் ஏன் அந்நியமாகிப் போனது? தமிழ் பௌத்தம் இலங்கையில் ஏன் அழிந்தது? இந்த கேள்விகளுக்கான பதில்கள் தமிழர் ஒருவரிடம் இருந்து தான் வர வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு தமிழரை எம்மால் காணமுடியவில்லை. அதனால் அந்த தமிழ் மனிதனைப் பற்றிய விவரங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் புத்த பாரம்பரியம் குறித்த சர்வதேச கல்வி மாநாடு 1992 மே 25 முதல் 30 வரை தென்னிந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து இந்த மாநாட்டிற்கு வருகை தந்த நாற்பது அறிஞர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஸ்வீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானில் பௌத்த நன்கொடையாளர்கள், தமிழ்நாட்டின் அடையாறில் அமைந்துள்ள ‘ஆசியாடிகா ஆய்வு மையம்’ ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்ததன. மாநாடு ஆங்கிலத்தில் நடைபெற்றது.

முந்தைய மாநாட்டில் இலங்கையில் தமிழ் பௌத்தம் என்ற கருப்பொருள் தொடர்பில் மாநாட்டு கட்டுரை திரு.ஏ. வேலுப்பிள்ளை என்ற இலங்கைத் தமிழரால் சமர்ப்பிக்கப்பட்டது. அவர் ஸ்வீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியர் ஆவார். முன்னதாகவே அவர் தமிழ் பௌத்தம் பற்றி  இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றில் முதலாவதான Religions In Yalpanam up to the Thirteenth Century AD (1990) எனும் கட்டுரை Lanka  சஞ்சிகையின் 5 ஆவது இதழில் எழுதப்பட்டது. இரண்டாவது கட்டுரையின் தலைப்பு, The Manimekalai – Its Historical Background And Indigenization of Buddhism (1990). அடுத்ததாக உப்சலா பல்கலைக் கழகத்தின் மதக் கற்கை நெறிகள் தொடர்பான பேராசிரியர் பீட்டர் ஷால்க், (Peter Schalk) 1988 இல் எழுதிய The History of Religions in Yalpanam எனும் கட்டுரை முன்வைக்கப்பட்டது (இது தொடர்பான கருத்தரங்கு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது). அத்துடன் 1991 இல் மேற்படி இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை அவர் ஒரு மிதவாதி என்பதை காட்டுகிறது. அதனை ஒரு ஆய்வுக் கட்டுரை என்று குறிப்பிட முடியாது. ஒரு கல்வி ஆவணம். விரிவுரைத் தொனி சில இடங்களில் மேலோங்கி உள்ளது. சில இடங்களில் வரலாறு திரிக்கப்பட்டும் உள்ளது.

ஆனால் சிங்கள பௌத்தத்திற்கு எதிரான தமிழ் பௌத்தத்தின் வடிவத்தை அடையாளப்படுத்துவதில் எதிர்ப்பின் காரணங்கள், எதிர்ப்பின் வரலாறு, அந்த காரணங்களின் உண்மை தன்மை ஆகியவற்றைப் புரிந்து கொள்ள வேலுப்பிள்ளையின் விரிவுரையும் உண்மையை உணர்த்தும் எழுத்தும் பயனுள்ளதாக இருந்தது என்பதை இவ்விடத்தில் கூற முடியும். வேலுப்பிள்ளையின் ஆங்கில ஆவணத்தின் சிங்கள மொழிபெயர்ப்பும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. வேலுப்பிள்ளை தனது ஆங்கிலக் கட்டுரையில ஒரு இடத்திலாவது ‘இலங்கை’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘Sri Lanka’ என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஆங்கிலத்திலும் கூட ‘Sri Lanka’ என்று இருந்த வார்த்தையை ‘இலங்கை’ என்றே குறிப்பிடுகின்றார். வேலுப்பிள்ளையின் தொனியை அடையாளம் காண்பதற்காக, ‘இலங்கை’ என்று அழைக்கப்படுவதை, அப்படியே இருக்க அனுமதிப்போம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பௌத்தம் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டது. அந்தத் தமிழ் பௌத்தத்தின் மறுமலர்ச்சியே தமிழ்ப் பண்பாட்டை மெருகூட்டுவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தமிழ் பௌத்தத்தின் மீள்கட்டுமானத்தின் தேவை மிகவும் பாரதூரமானது. அதை நன்கு உணர்ந்த ஒரு மக்கள் கூட்டமாகவே இலங்கைத் தமிழ் மக்கள் இருக்கின்றனர். இலங்கை மக்கள் தொகையில் முக்கால்வாசி பேர் சிங்களவர்கள். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பௌத்தர்கள். பல தசாப்தங்களிலிருந்து இப்போது வரை சிங்கள பௌத்த நலன்களே இலங்கை அரசியலின் அடிப்படையாக இருந்து வருகிறது. தமிழ் சிறுபான்மையினரால் இந்த நிலைமையை பொறுத்துக்கொள்ள முடியாது.

நாட்டுக்கு வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இலங்கையில் சிங்கள பௌத்தம் எந்த அளவுக்கு அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது என்பதனை அறிந்து கொள்வது கடினமானதாகவே இருக்கும். அது அப்படி நடக்கின்றதா என்று கற்பனை செய்வது கூட கடினம். ‘அகிம்சை’ போன்ற பௌத்தக் கருத்துக்கள் திரிபுபட்டே காணப்படுகின்றன. தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் பௌத்த பிக்குகள், பௌத்த தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எதிர்ப்பு பிரச்சாரங்கள் தொடங்கப்படுகின்றன. இவற்றால் கோபமடைந்த சிங்கள மக்களின் நடவடிக்கைகளால் இரத்தம் சிந்திய நிகழ்வுகளும் வரலாற்றில் உள்ளன. ஆனால் இதற்கு சிங்கள பௌத்த இனவாதமே காரணமாக இருந்துள்ளதன்றி புத்தரின் மகத்தான போதனைகளை இழிவுபடுத்தும் அளவிற்கு தமிழ் மக்கள் மோசமானவர்கள் இல்லை.

பௌத்தம் தன் வரலாற்றுக் காலத்தில் தமிழர்களிடையே மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது என்பது உண்மைதான். தமிழ் பௌத்தர்கள் தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன. தமிழ் பௌத்தர்களின் பாரம்பரிய தாயகமான இலங்கையிலேயே (The Traditional Home lands of Ilankai) அவர்களது பௌத்த கலைகள், கைவினைகள் பிறந்தன. இலங்கையில் அண்மைக்காலம் வரை விஞ்ஞான ரீதியாக தொல்லியல் அளவை முறைகள் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் எச்சங்கள் கூட அடிக்கடி சிங்கள பௌத்தர்களின் பாளி மூலங்களின் படி விளக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பாளியில் தேரவாத பௌத்த தர்மங்களே அதிகம் பொதிந்துள்ளன. இந்த விளக்கங்களின்படி, இலங்கை தமிழ் பௌத்த மக்களுக்கு அதில் அதிகமாக இடமில்லை. இதனால் தமிழர் தாயகம் என்ற கருத்தாக்கம் பற்றி சிந்திக்க வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது (The Tamils have no place in Ilankai and the recognition of a tamil region is unthinkable).

இவ்வாறான இனவாத சித்தாந்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் யதார்த்தத்திற்கு இடமில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் பரந்து வாழ்ந்தாலும் அவர்கள் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலேயே அதிகமாக உள்ளனர். அந்த இரண்டு மாகாணங்களின் நிலப்பரப்பு, முழு இலங்கை நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு. 1930 வாக்கில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நாட்டின் மொத்த சிங்கள மக்கள் தொகையில் சிங்களவர்களின் எண்ணிக்கை 5% ஆகும். அந்த சதவீதம் 80 களின் நடுப்பகுதியில் 25 % ஆக உயர்ந்தது. காரணம், சுதந்திரத்திற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கள அரசுகளால் பாரம்பரிய தமிழர் தாயகம் சிங்களவர்களுக்கு கையளிப்பு செய்யப்பட்டது. அதன் விளைவாக மணலாறு போன்ற தமிழ் கிராமப் பெயர் வெலிஓயா என்று சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

தமிழர்களின் கிராம நிலங்களை அபகரிப்பதை நியாயப்படுத்தும் சிங்களவர்கள், அவர்களின் பூமியில் பௌத்த இடிபாடுகள் இருப்பதனை காரணமாக முன்வைக்கிறார்கள். அத்தகைய இடிபாடுகள் முதலானவற்றை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் புத்த பிக்குகள் குடியேற்றப்பட்டனர். பின்னர் விகாரையை மையப்படுத்தி சிங்கள பௌத்த குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டது. புதிதாகக் குடியேற்றப்பட்ட இந்தச் சிங்களவர்களுக்கே அப்பகுதியின் நிர்வாகமும் வழங்கப்பட்டது. பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் அசல் தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறே மணலாறு வெலிஓயாவாக மாறியது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சேருவாவில விஹாரை மற்றும் வெல்கம் விஹாரை தொடர்பிலும் இதுதான் நிலைமை. செருவாவில மற்றும் வெல்கம் விஹாரை பௌத்த வழிபாட்டுத் தலங்களாக மாற்றமடைந்தன. அருகில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டனர். அசல் தமிழ் குடியேறிகள் வெளியேற்றப்பட்டனர். தொல்பொருள் மதிப்புடையது என்று தீர்மானிக்கப்படாத இடத்திலும் கூட அரச மரங்களை நட்டு தொன்மையைக் காப்பாற்றுகிறோம் என்று பாசாங்கு செய்து அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சிறில் மெத்யூ மேற்படி  தமிழர் வாழ்கின்ற பகுதிகளில் பௌத்தர்களின் 276 இடிபாடுகள் இருப்பதாகவும், அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் யுனெஸ்கோவுக்கு பொய் தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்றை எழுதி அனுப்பப்பினார்.

இத்தகைய நிலையில் ‘பௌத்தம்’ என்ற வார்த்தையைக் கேட்கக்கூட இலங்கைத் தமிழ் மக்கள் அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டது. தமிழர் பகுதியில் பௌத்த இடிபாடுகள் இருப்பதாக கேள்விப்பட்ட உடனேயே சிங்களவர்கள் தங்களை வெளியேற்றி விடுவார்கள் என தமிழ் மக்கள் கருதுகின்றனர். பௌத்தர்களுக்கு ஒவ்வொரு பௌத்த எச்சமும் சிங்கள பௌத்த எச்சமாகவே தோன்றுகிறது. அதனால் தமிழ் மக்கள் பௌத்த சிங்கள இடிபாடுகளை அழிப்பதாகவும் கூறுகிறார்கள்.

தீபவம்சம், மகாவம்சம் முதலான பாளி குலக் கதைகளில் கூறப்படும் தொன்மங்கள் சிங்களவர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கவை. மேற்படி வம்சக் கதைகளின் வாயிலாகவே  தூய புத்த தர்மம் சிங்களவர்களால் இலங்கையில் பாதுகாக்கப்படுகிறது என்று அவர்கள் கருதுகிறார்கள். புத்தர் மூன்று முறை இலங்கைக்கு விஜயம் செய்தார். அதில் இரண்டு விஜயங்கள் நாகர்கள் வசிக்கும் நாகதீப மற்றும் களனி ஆகிய இடங்களில் நடைபெற்றன. மகாவம்சத்தின் படி, சிங்களவர்களின் முன்னோர்களான விஜய என்பவன் இந்தியாவின் வடநாட்டில் இருந்து வந்து இந்நாட்டில் இறங்கியதும் புத்தரின் பரிநிர்வாணம் நிகழ்ந்ததும் அதே நாளிலாகும்.

மிஹிந்த தேரர் கிபி. 3 ஆம் நூற்றாண்டில் பௌத்தத்தை இலங்கைக்கு கொண்டு வந்தார் என்பது உண்மையென்றாலும், அதற்கு முன்பே இங்கு பௌத்தம் இருந்திருக்கிறது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

வம்ச பரம்பரைக் கதைகளின்படி, சிங்கள மன்னர்கள் முழு நாட்டையும் ஒன்றிணைத்தனர் என்று கூறப்படுகிறது. மன்னர் புத்த மதத்தைத் தழுவிய உடனேயே நாட்டு மக்களும் பௌத்தர்களாக மாறினர். ஆயினும் இத்தகைய பாளி வம்சக் கதைகளில் கிடைக்கப்பெறும் ஆதாரங்களை விட, கல்வெட்டுகள் கடந்த காலத்தைப் பற்றிய உண்மையான தகவல்களைக் கூறுகின்றன. அதிர்ஷ்டவசமாக, பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட பல பிராகிருத ஆவணங்கள் கிடைத்துள்ளன. எனினும், பேராசிரியர் செனரத் பரணவிதான அவர்களின் விளக்கம் சிங்கள பௌத்தர்களின் மகிழ்ச்சிக்காகவே எழுதப்பட்டுள்ளது என்று தோன்றுகிறது.

பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிராமி கல்வெட்டுகளும் இந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும் அவற்றின்படி வட இந்திய மக்கள் மட்டுமே இங்கே இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. இலங்கையில்  அன்றைய காலத்தில்  வலுவான தமிழ் அல்லது திராவிட சமூகம் வாழ்ந்ததாக இலங்கை தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். இலங்கை மற்றும் தென்னிந்திய திராவிட தொடர்புகளை, பண்டைய பானை ஓடுகள் நிரூபிக்கின்றன. இவை அனுராதபுரத்திற்குள் பல பிரதேசங்களில் காணப்பட்டமை நிரூபணமாகியுள்ளது. வட இந்திய ஆரியர்களைக் காட்டிலும் தென்னிந்திய திராவிடர்களைக் கொண்ட இலங்கை இராச்சியம் தொடர்பாக பேராசிரியர் P.E.E. பெர்னாண்டோ, Dr சுதர்சன் செனவிரத்ன, பேராசிரியர் டபிள்யூ.எஸ். கருணாரத்ன, பேராசிரியர் ஆர்.ஏ.எல்.எச். குணவர்தன முதலிய சிங்கள அறிஞர்களும் கருத்துக் கூறியுள்ளனர். மேற்படி கருத்துக் குறித்து அவர்கள் பேராசிரியர் பரணவிதானவிடம் கேள்வி  எழுப்பி உள்ளார்கள்.

பௌத்தம் பிராகிருத மொழி மூலம் இலங்கைக்கு வந்தது என்பது இரகசியமல்ல. பிராகிருதத்தில், பழங்கால பிராமி எழுத்துக்களும் முழுமையாக திராவிடமாகவே வெளியிடப்பட்டுள்ளது. கிபி. 2 ஆம் நூற்றாண்டில் தொலமி வரைந்த இலங்கை தீவின் முதல் வரைபடத்தின்படி, தெற்கில் உள்ள மக்கள் சிங்கள மொழியை பேசவில்லை மாறாக தமிழ் மொழியையே பேசியுள்ளனர். மேற்படி கருத்துக்களின்படி பண்டைய பௌத்தம் சிங்கள பௌத்தமாக இருந்திருக்க முடியாது.

பாளி நூல்களின்படி, பேரரசர் அசோகர் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பௌத்த தர்ம தூதுக்குழுக்களை அனுப்பினார். அசோகப் பேரரசின் தெற்கு எல்லை தமிழ்நாட்டின் வடக்கு எல்லை வரை பரவியிருந்தது. ஆனால் தமிழகத்தில் பௌத்த தர்மம் பரப்பப்படுவதைப் பற்றி பாளி நூல்கள் மௌனமாகவே உள்ளன. பாளி எழுத்தாளர்கள், அசோகரின் மகன் மகிந்த தேரர் இலங்கைக்கு ஆகாய மார்க்கமாகவே வந்தார் என்று கூறியிருக்கின்றனர். அதேபோல் பிக்குனி சங்கமித்த வெகு தூரத்திலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக வந்தாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை  வேண்டுமென்றே புறக்கணிப்பதே இப்படி கூறுவதற்கு காரணம். பல வரலாற்றாசிரியர்கள் அசோக மன்னரின் பல கல்வெட்டுகளைக் கொண்டு தமிழ் பௌத்தத்துக்கும் சிங்கள பௌத்தத்துக்குமான தொடர்பை நிரூபித்துள்ளனர். அந்தக் கல்வெட்டுக்களின் படி கேரளபுத்திரன், சத்தியபுத்திரன், சோழன், பாண்டிய, தம்பபண்ணி ஆகிய பிரதேசங்களுக்கு மன்னர் அசோகர் தனது பௌத்ததர்ம தூதுக்குழுக்களை அனுப்பினார் என்று தெரிகிறது. முதலில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பிரதேசங்களும் தமிழ்நாட்டை சேர்ந்தவை என வரலாற்றாசிரியர்கள் அடையாளம் கண்டுள்ளனர். ஐந்தாவது தம்பபண்ணி என்பது இலங்கை என்று அறியப்பட்டுள்ளது. அசோகப் பேரரசர் இந்தப் பகுதிகள் எதையும் தனித்தனியாக இனம் காணவில்லை. அதற்குக் காரணம் மூன்றாம் நூற்றாண்டில் இந்த ஐந்து தமிழ் பிரதேசமும் ஒன்றாக இணைந்த தமிழ் மாநிலமாக கருதப்பட்டதாக இருக்கலாம்.

அசோகப் பேரரசரின் பௌத்த தர்ம தூதர்கள் சென்ற மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது பௌத்த தர்மத்தை விரிவாக்கும் நடவடிக்கைகள் இங்கு மிக வெற்றிகரமாக இருந்துள்ளன. இலங்கை    பேராசிரியர் கலாநிதி பொன்னம்பலம் ரகுபதியால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் படி இங்கு காணப்பட்ட பௌத்த தர்மம் நாட்டுக்கு மத்தியில் காணப்பட்ட பௌத்தம் அல்ல, மாறாக வணிகத்துடன் தொடர்புடைய புத்த மதம் ஆகும். அவரது கூற்றுப்படி கந்தரோடை ஸ்தூபியானது, அமராவதி அல்லது நாகர்ஜுனகொண்டா போன்ற அமைப்பில் காணப்படுகிறதேயன்றி நாட்டின் தெற்கு பகுதியில் அல்லது அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்தூபிகளுக்கு சமமானதாக அல்ல. யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட பௌத்த கட்டிடங்களுக்கு உள்ளூர் மூலப் பொருட்களான அரிதான பவளம் மற்றும் சுண்ணாம்புக் கற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. காணப்படும் மட்பாண்டங்களும் தென்னிந்திய கலாச்சாரத்தை ஒத்தவையாகவே உள்ளன. பாளி நூல் ஆசிரியர்களின் கூற்றுப்படி, இங்கு வாழ்ந்த மக்கள் நாக கோத்திரத்தைச் சேர்நத பூர்வ ஆரிய குடியேற்றக்காரர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சோழர்கள் ‘நாகநாடு’ என்ற பிரதேசத்துடன் திருமணப் பாரம்பரியங்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக மணிமேகலை காவியம் விபரிக்கிறது. கலாநிதி ரகுபதியின் கூற்றுப்படி, யாழ்ப்பாணத்தில் பௌத்தம் கிறிஸ்துவின் பிறப்பிலிருந்து கிபி 12 ஆம் நூற்றாண்டு வரை பரவிக் காணப்பட்டுள்ளது. நாகநாடு என்பது ‘இலங்காபதீபம்’ அல்லது ‘இரத்தினதீபம்’ என அழைக்கப்பட்டது என்றும் ஆனால் அது இலங்கையில் இருந்து பிரிந்த ஒரு சுயாதீனமான நாடாக இருந்தது என்றும் பீட்டர் ஷால்க் கூறுகிறார். கலாநிதி ரகுபதி, இந்த சுதந்திர ராஜ்ஜியம் 5 ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சி அடைந்தது என தனது தொல்லியல் ஆய்வுகளின் வாயிலாக குறித்துக் காட்டுகின்றார். நாகநாடு பிரதேசத்தின் பிராந்தியத் தலைவர் ஒருவரால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடகிழக்கு பகுதியில் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டதாக வல்லிபுரம் பொன் தகட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிபி. 6 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் தமிழ் பௌத்தம் வீழ்ச்சியடைய தொடங்கியது. இதற்கு இரண்டு விஷயங்கள்  தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. முதலாவது அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்த சிங்கள மன்னர்கள் யாழ்ப்பாணத்தின் மீது அதிகாரத்தை பிரயோகித்தமை. இரண்டாவது, சிங்கள பௌத்த போதகர்கள் யாழ்ப்பாணம் செல்வதில் அக்கறை காட்டமை. ஆனால் கிபி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிங்களக் கல்வெட்டு ஒன்று யாழ்ப்பாணத்தின் கந்தரோடை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தற்போது யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அசோக சக்கரவர்த்தியின் விருப்பமான பெயரான ‘தேவநம் ப்ரிய’ அவருக்கு மரியாதை தரும் பெயராக அனுராதபுர மன்னரால் பயன்படுத்தப்பட்டது. சேர நாடு அல்லது கேரளா, திராவிட நாட்டு தமிழ் மன்னர்களும்கூட ‘தேவநம் ப்ரிய’ என்ற பெயரை ‘தேவனுக்கு பிரியமானவர்’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியதாக கலாநிதி  எம்.ஜி.எஸ். நாராயணன் கூறுகிறார். இதேபோல் மேலும் இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை ‘வானவரன்பன்’ மற்றும்  ‘இமயவரம்பன்’ ஆகியனவாகும்.

Kantharoda vihara

அசோகரால் பௌத்தம் மதம் கேரளாவிற்கு கொண்டுவரப்பட்டது அசோகரால் அனுப்பிவைக்கப்பட்ட பௌத்த தர்ம தூதுவர்களாலேயாகும். பௌத்தம் கேரளா வழியாக யாழ்ப்பாணத்திற்கு வந்ததாக ஒரு கருத்து உள்ளது. அதற்கு காரணம் யாழ்ப்பாண குடா நாட்டை  அண்டிய பகுதிகளில் பல தீவுகள் ஆழமற்ற கடலில் அமைந்திருப்பதனாலாகும். இந்த கடல் மார்க்கம் சங்கு மற்றும் முத்து சிப்பிகளுக்கு பெயர் பெற்றதாகும். வரலாற்றுக் காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் முத்து, சிற்பிகளை சேகரித்து ஆபரணங்கள் செய்வதற்கும் வணிகத்தில் ஈடுபடவும் பழகியிருந்தார்கள். இந்த உண்மை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்த மக்கள் ‘முக்குவர்’ சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கிபி. ஆறாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் குடியேறி இருந்ததாகக் கருதப்படுகின்றது. தமிழ் காவியமான மணிமேகலையில் மணிபல்லவம் பற்றிய அறிமுகத்தில் சங்குகள், முத்துச்சிப்பிகள், பவளப்பாறைகள்  பற்றிய குறிப்பும் இவை அக்காலப் பகுதியில் இந்த சமூகத்தின் பொருளாதாரத்திற்கு பங்களித்தமை தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்குவர்கள் புலம்பெயர் சமூகத்தினராக இருந்ததுடன் வர்த்தக சமூகமாக இருந்து தமிழ் பௌத்தத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்ததார்கள் என்று கொள்ளலாம்.

vallipuram buddha statue

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 18 தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் 9 ஆய்வுகளில் புத்த கட்டிடங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சிறிய தீவுகளிலும், களப்பு மற்றும் கடற்கரைகளுக்கு அருகிலும் காணப்பட்டுள்ளன. நாகநாடு என்று அழைக்கப்பட்ட பிரதேசத்தின் தலைநகரை கந்தரோடை என்று அழைத்தார்கள். வல்லிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை அமராவதி புத்தர் சிலையின் வடிவமைப்புக் குணாதிசயங்களைக் கொண்டிருந்தாலும், அமராவதி கல்வெட்டுக்களிலும் வல்லிபுரம் தங்கத் தகட்டிலும் காணப்படுகின்ற மொழியை ஒப்பிடும்போது, அது ஒத்ததாக இல்லை என பேராசிரியர் பரணவிதான கூறுவது சிங்களவர்களை மகிழ்விப்பதற்காகவே எனக் கருத இடமுண்டு.

வல்லிபுரம் தங்கத் தகட்டில் உள்ள பிராகிருத மொழியில் திராவிடத்தின் செல்வாக்கு காணப்படுகிறது என பின்னர் அறிவிக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் இக்காலத்தைச் சேர்ந்த பிராகிருதக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எழுத்துக்களும் திராவிட பாணியைச் சேர்ந்தவை என  பேராசிரியர் பீட்டர் ஷால்க் குறிப்பிடுகின்கிறார். வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தகட்டின் மொழியானது ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் காணப்படுகின்ற மொழியான பிராகிருதத்தில் எழுதப்பட்டிருக்கின்றமையானது, பண்டைய பிராமி கல்வெட்டுகளோடு ஒப்பிடும்போது ஒத்ததாக காணப்படுகின்றன. இதே வகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தங்க நாணயமும் அதே மொழி வகைக்குள் அடங்குகின்றன. இந்த திராவிடத் தாக்கத்தை புரிந்துகொள்ள தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பல்லவர்களின் சமகாலத்து கல்வெட்டுக்களையும் வல்லிபுரம் தங்கத்தகட்டு குறிப்புக்களையும் பிராகிருத கல்வெட்டுக்களுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்வது சாலச் சிறந்தது.

vallipuram gold plate

வல்லிபுரம் பொன் தகடு மிகச் சுருக்கமான ஆவணம் என்பதால் அதனை உறுதியான முறையில் அலசல் செய்வது கடினம் என்பது உண்மைதான். ஆனால் அதைப் பற்றி பரணவிதான சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. வல்லிபுரம் புத்தர் சிலை அமராவதி பௌத்த கலை பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், கந்தரோடை  ஸ்தூபிகளைப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட புத்த மதம் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தது என்பது தெளிவாகிறது. இப்படித்தான் பௌத்தம் பல வகைகளில் வேறுபட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட பௌத்தம் ஒருபோதும் சிங்கள பௌத்தத்திற்கு சமமானதாக இருக்கவில்லை.

வடஇந்திய பௌத்தம் யாழ்ப்பாணத்திற்கும் வந்தது என்பதற்கு கலாநிதி ரகுபதி போதுமான சான்றுகளை வம்சக் கதைகளின் வாயிலாக முன் வைத்துள்ளார். காசி நாட்டிலிருந்து காரதீப நகருக்கு ஒரு துறவி பயணம் செய்ததாக ஜாதகக் கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது அவற்றுள் ஒன்று. காரதீபம் என்றால் யாழ்ப்பாணத்தின் காரைநகர் என்றும், இன்றும் காரைநகர் கரையில்  ‘விஹாரகொடல்ல’ என்ற ஒரு இடம் காணப்படுகின்றது என்றும் இது ‘வேறபிட்டி’ என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது என்றும் கலாநிதி ரகுபதி எடுத்துக் கூறுகிறார்.

இளவாலை, கரவெட்டி, மந்துவில், பச்சிலைப்பள்ளி ஆகிய இடங்களிலிருந்தும் பௌத்த இடிபாடுகள் கிடைத்துள்ளன. தமிழ்ச் சொல்லான பச்சிலைப்பள்ளி என்பது சமஸ்கிருதத்தில் பர்ணஷாலா, பாளியில் ‘பன்னஷாலா’ என்ற சொற்களைப் போன்றது. இது  ஆனையிறவு என்ற இடத்துக்கு அருகே  அமைந்துள்ள ஒரு தமிழ் பௌத்த விகாரை ஆகும். பௌத்தம் இலங்கையின் தென் மாகாணத்தில் இருந்து வந்தது என்ற கூற்று உண்மையாயின் அதற்கான நுழைவாயில் ஆனையிறவில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி வாயிலாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள மற்ற பௌத்த மையங்களுக்கு பச்சிலைப்பள்ளி வழியாகவே பௌத்தம் பரவியது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாக கோத்திரர்கள் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டது பற்றிய பாளி மரபுவழிக் கதைகளுக்கு புதிய விளக்கம் அளித்து தமிழ் பௌத்தமத வரலாற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது.

இலங்கையில் சிங்கள அரசு அமைவதற்கு முன்னரேயே நாகதீபமும் களனியும் இருந்துள்ளதுடன் அவற்றுக்கு புத்தபெருமான் விஜயம் செய்துள்ளார் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது நாகதீபம் அல்லது நாகநாட்டின் நாக கோத்திரர்கள் தமிழ் பேசினர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அப்படியானால் அப்போது இலங்கையில் காணப்பட்ட பௌத்தம் தமிழ் பௌத்தமாகவே இருந்திருக்க வேண்டும். பின்னர் இந்த தமிழ் பௌத்தம் மகிந்த தேரரின் வருகையின் பின்னர் சிங்கள் பௌத்தத்துடன் கலந்திருக்க வேண்டும்.

Sri Bhada

மணிமேகலை என்ற பிரசித்தி பெற்ற தமிழ் காவியத்தில் குறிப்பிடப்படுகின்ற ‘மணிபல்லவம்’ என்ற பௌத்த வணக்கத்தலம் புத்தரின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு புனிதத் தலமாகும். இது தமிழ் பௌத்தர்களின் பிரதான வணக்கஸ்தலமாக இருந்ததுடன் அது ‘ஸ்ரீ பாத’ என்று வணங்கப்படுகின்ற சிங்களவர்களின் புனித பூமியாகவும் கருதப்பட்டதால் அது சிங்களவர்களுக்கும் ஒரு பிரதான வணக்கஸ்தலம் ஆனது. மேற்படி மணிபல்லவத்தில் காணப்பட்ட ஶ்ரீபாத பௌத்த வணக்கஸ்தலம், ஆரம்பகாலத்தில் தமிழ்  பௌத்தர்களின் வணக்கஸ்தலமாக மட்டுமே இருந்த போதும் பின்னர் அது சிங்களவர்களால் கைப்பற்றிக் கொள்ளப்பட்டது.

மணிமேகலை என்ற பௌத்த மத காவியம், குறிப்பாக தமிழில் பௌத்த மதத்தை பிரச்சாரப்படுத்தும் முக்கிய காவியமாக திகழ்ந்த போதும், அது ஒரு இடத்தில்கூட ஒரு சிங்கள பௌத்த மன்னர் பற்றி குறிப்பிடவில்லை என்பது இங்கே மனதிற் கொள்ளவேண்டிய ஒரு விடயமாகும். அதுமட்டுமன்றி இந்தக் காவியத்தில் ஸ்ரீ மகாபோதி பற்றியோ, மிகிந்தலை பற்றியோ, மகா விகாரை தொடர்பிலோ, ஸ்ரீ தலதா மாளிகை பற்றியோ எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

samanthar and appar

கிபி. 7 ஆம் நூற்றாண்டில் இருந்து தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு இந்து மத தர்மமானது வேகமாகப் பரவத் தொடங்கியது. ஞானசம்பந்தர், அப்பர் ஆகிய சைவ சமய நாயன்மார்கள் தமிழ்நாட்டில் பௌத்தர்களுக்கும் ஜைனர்களுக்கும் பெரும் தொந்தரவுகளைச் செய்து வந்தனர். சம்பந்தர், தேவார திருப்பதிகம் என்ற பக்தி கீதங்களை எழுதி பௌத்த சமயத்தை காரசாரமாக விமர்சித்தார். ‘பெரியபுராணம்’ என்ற சைவ சமய நூல் கூறுகின்றதன்படி சோழ மண்டலத்தில் ‘போதிமங்கை’ என்ற இடத்தில் ஞானசம்பந்தர் அமைதியாக சைவ சமய மதப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போதும், சில சமயங்களில் அவர் கலகக்காரர் போல் நடந்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. மேற்படி இடத்தின் பெயரால் கொண்டு நடத்தப்பட்டது ஒரு பௌத்த வணக்கஸ்தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11362 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார். விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்.