அநுராதபுரத்தில் தமிழ் பௌத்த மன்னர்கள்
Arts
7 நிமிட வாசிப்பு

அநுராதபுரத்தில் தமிழ் பௌத்த மன்னர்கள்

September 3, 2024 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட முதலாம் நூற்றாண்டின் மூன்றாம் காலின் ஆரம்பத்திலிருந்து கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட ஐந்தாம் நூற்றாண்டின் இரண்டாம் கால் வரையுள்ள ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டு காலமாக இலங்கையிலே தமிழ் மன்னன் எவரும் ஆட்சி புரியவில்லை. எனினும் இக் காலப்பகுதியிலே தமிழ் மக்கள் முன்போலத் தொடர்புகளை ஏற்படுத்தி இந்நாட்டுக்கு வந்திருக்க வேண்டும். மன்னரைப் பற்றியும் பௌத்த சங்கத்தைப் பற்றியும் எழுதி வைத்த பழைய வரலாற்றாசிரியர்களுக்கு மக்கள் வரலாற்றிலே அக்கறை இருக்கவில்லை. இதனால் தமிழ் மக்களைப் பற்றி மட்டுமன்றிச் சிங்கள மக்களைப் பற்றியும் அதிக தகவல்களை எங்களுடைய இலக்கிய ஆதாரங்களிலிருந்து பெற முடியாதிருக்கின்றது.

சொத்திசேனன்

ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து அநுராதபுரத்தின் அரச சபையிலே மீண்டும் தமிழருடைய செல்வாக்குப் பரவத் தொடங்கியது. கி.பி. 406 இல் உபதிஸ்ஸ மன்னன் அவனுடைய பட்டத்தரசியாலே கொல்லப்பட்டான். மன்னனுடைய தம்பியாகிய மஹாநாமவுடன் தொடர்பு கொண்டிருந்த அப்பட்டத்தரசி மன்னனைக் கொன்றபின் மஹாநாமனை மணமுடித்துக் கொண்டாள். மஹாநாமன் புதிய மன்னனாகப் பதவி பெற்றான்.

இவனுடைய அரச சபையிலே தமிழருடைய செல்வாக்குக் காணப்பட்டது என்று கொள்ளச் சான்றுண்டு. இறந்த மன்னனுடைய பட்டத்தரசியையே மஹாநாமன் தனது பட்டத்தரசியாகவும் கொண்டிருந்தாலும், அவன் ஒரு தமிழ்ப் பெண்ணையும் மணம் புரிந்திருந்தான். இப் பெண் தென்னிந்திய அரச குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவளா என்பது தெரியவில்லை. அவள் அரச வம்சம் ஒன்றைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு.

மஹாநாமனுக்குப் பின்பு மன்னனாகப் பதவிபெற்ற சொத்திசேனன் என்பவன் தமிழ் அரசிக்குப் பிறந்த புத்திரனாவன். பட்டத்தரசிக்குப் பிறவாதவனாக இருந்தது மட்டுமன்றி, ஒரு தமிழ்ப் பெண்ணுக்குப் பிறந்தவனாக இருந்தமை அரச பதவியைப் பெறுவதற்குச் சொத்திசேனனுக்குத் தடையாக இருக்கவில்லை. இது அக்காலத்திலே இன பேதக் கருத்துகள் வலுப்பெறாது இருந்தன என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக் காட்டாகும்.

அரச பதவியைப் பெற்றிருந்தாலும் அதிக காலத்துக்கு அவனால் ஆள முடியவில்லை. பட்டத்தரசிக்குப் பிறந்த இளவரசியாகிய ஸங்கா என்பவள் சத்திரக்காரனாக (குடை பிடிப்போனாக) கடமையாற்றிய தனது கணவனை மன்னனாக்குவதற்காக சொத்திசேனனைக் கொன்றாள். புதிதாகப் பதவிபெற்ற ஸங்காவின் கணவனும் அதே ஆண்டிலே இறக்க நேரிட்டது. அவனுக்குப் பின் அரச பதவிக்கு உரிமையில்லாத மித்திரஸேன என்பான் ஓர் ஆண்டு காலம் ஆட்சி நடத்தினான். இது கி.பி. 429 இல் நடந்தது.

தமிழர் படையெடுப்பு

கி.பி. 428 இல் மஹாநாமன் இறந்ததை அடுத்து அநுராதபுரத்திலே அரசியற் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன என்பது தெளிவாகின்றது. இவ்வாறு அரசியற் குழப்பங்கள் காணப்பட்ட போது, கி.பி. 429 இல் தமிழ்நாட்டிலிருந்து பண்டு என்பான் தலைமையிலே ஒரு படையெடுப்பு நடைபெற்றது. ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தமிழ்நாட்டிலிருந்து ஏற்பட்ட ஒரு படையெடுப்பு இதுவேயாகும். இப் படையெடுப்பை நடத்தியவனுடைய பெயர் பண்டு என்று சூளவம்ஸத்திலே கொடுக்கப்பட்டுள்ளது (சூளவம்ஸ என்பது மஹாவம்ஸ நூலின் இரண்டாம் பாகமாகும்).

சிங்கள, பாளி நூல்களிலே பண்டு என்னும் பெயர் பொதுவாகப் பாண்டியனைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கும் படை நடத்தியவன் ஒரு பாண்டியனாக இருந்தமையினால் அவனுக்குப் பண்டு என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது என எண்ணத் தோன்றுகிறது. ஆனால் சிங்கள வரலாற்றாதாரங்களாகிய பூஜாவலியிலும் ராஜாவலியிலும் இவன் சோழ நாட்டவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவன் பாண்டிய வம்சத்தவனாக இருந்திருந்தால் அவனுடைய படையெடுப்புக்கும் சொத்திசேனனுடைய கொலைக்கும் தொடர்பு உண்டு என ஊகிக்க இடமுண்டு.

தமிழ் அரசியாகிய சொத்திசேனனின் தாய் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவளாக இருந்திருக்கலாம். சொத்திசேனன் கொல்லப்பட்டதன் விளைவாக அவனுடைய தாயாரின் இனத்தவன் ஒருவன் இங்கு படையெடுப்பை நடத்தியிருக்கலாம். தமிழ்நாட்டிலே களப்பிரர் படையெடுப்பினாலே பாதிக்கப்பட்ட பாண்டியரே இவ்வாறு இலங்கைக்குப் படையெடுத்தனர் என்றும் ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்குச் சான்றுகள் போதா.

பெரும் பாரிதேவன்

பண்டு அல்லது பாண்டு மன்னன் ஐந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்து இறக்க, அவனுடைய மகன் பெரும் பாரிதேவன் மன்னனாகி மூன்று ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனுடைய பெயர் பாரிந்த (பாரீந்திரன்?) எனச் சூளவம்ஸத்திலே கொடுக்கப்பட்டுள்ளது. சிங்களக் கல்வெட்டு ஒன்றிலே இப்பெயர் பரித தேவ (பாரி தேவன் அல்லது பாரிந்த தேவன்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு கல்வெட்டிலே இவனுடைய தம்பி பெயர் ‘இளம் பாரிதேவன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமையனின் பெயரும் பாரிதேவன் என்று இருப்பதால் தமையனை தமிழ் மரபின்படி பெரும் பாரிதேவன் எனலாம்.

பெரும் பாரிதேவன் பல வகையாலும் முக்கியத்துவம் பெற்ற ஒரு மன்னனாவான். இவனுக்கு முற்பட்ட இலங்கைத் தமிழ் மன்னர்களைப் பற்றி இலக்கிய ஆதாரங்களிலிருந்து மட்டுமே அறிகின்றோம். அவர்களுடைய கல்வெட்டுகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் பெரும் பாரிதேவனுடைய கல்வெட்டொன்று நமக்குக் கிடைத்துள்ளது. ஆகவே, இதுவே இலங்கைத் தமிழ் மன்னர்களுடைய கல்வெட்டுகளுள் மிகப் பழையது. இவனுக்குப் பின்பு அடுத்தடுத்து ஆண்ட மூன்று தமிழ் மன்னர்களைக் குறிபிடுகின்ற கல்வெட்டுகளும் நமக்குக் கிடைத்துள்ளன. இக் கல்வெட்டுகள் அனைத்தும் சிங்கள மொழியில் உள்ளன. தமிழ் மன்னர்களாக இருந்தும் இவர்களுடைய கல்வெட்டுகள் சிங்களத்திலே இருந்தமைக்குக் காரணம் சிங்கள மொழியே அரசாங்க மொழியாகவும் பெரும்பான்மையினர் மொழியாகவும் விளங்கியமை காரணமாகும்.

இளம் பாரிதேவன்

பெரும் பாரிதேவனுடைய சகோதரனாகிய இளம் பாரிதேவன் (பாளியில் குத்த பாரிந்த, இளம் அல்லது சிறிய பாரிந்த) கி.பி. 437 தொடக்கம் 452 வரை பதினாறு வருடங்கள் ஆட்சி புரிந்தான். இவனுடைய காலத்திலே தாதுஸேன என்ற சிங்கள இளவரசன் தமிழ் மன்னர் ஆட்சியை எதிர்த்துப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தான். தாதுஸேனனுக்கு ஆதரவளித்தவர்களை இளம் பாரிதேவன் தண்டித்தான் என்றும் தாதுஸேனனுக்கும் இவனுக்கும் இடையிலே போர் நடைபெற்றது என்றும் சூளவம்ஸத்திலே கூறப்பட்டுள்ளது. இவனுடைய ஆட்சிக் காலத்திலே இவன் “அறச் செயல்களையும் தீய செயல்களையும் புரிந்திருந்தான்” எனச் சூளவம்ஸ ஆசிரியர் தீர்ப்பளித்துள்ளார்.

இளம் பாரிதேவன் இறந்த பின்பு திருதரன் (சூளவம்ஸத்திலே திரிதர எனவும், கல்வெட்டு ஒன்றிலே ஸிரிதர எனவும் குறிப்பிடப்பட்டுள்ள இவன் பெயர் ஸ்ரீதர என்ற பெயரின் திரிபாகும்) என்ற தமிழ் மன்னன் பதவியேற்றான். இவனுக்கும் இளம் பாரிதேவனுக்கும் இடையில் என்ன தொடர்பு இருந்தது என்பது தெரியவில்லை. இவன் பதவியேற்று இரண்டு மாதங்கள் சென்ற பின் தாதுசேன இவனுடன் போர் தொடுத்து இவனைக் கொன்றான்.

இவனுக்குப் பின் தாடியன் என்ற தமிழன் மூன்று ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என அறிகின்றோம். இவனுக்கும் திருதரனுக்கும் இடையில் இருந்த தொடர்பு சூளவம்ஸத்திலே கூறப்படாவிட்டாலும் திருதரனின் மகனே தாடியன் என்பதும் தாடியனுடைய முழுப்பெயர் மகாதாடியன் மகாநாகன் என்பதும் கல்வெட்டொன்றிலிருந்து நமக்குத் தெரிய வருகின்ற செய்திகளாம். தாடியன் மூன்று ஆண்டுகள் ஆண்ட பின்னர் அவனையும் தாதுஸேன போரில் கொன்றான் என அறிகின்றோம்.

எனினும் தாதுஸேனனால் அரச பதவியைக் கைப்பற்றிக்கொள்ள முடியவில்லை. தாடியனுக்குப் பின் பீடியன் என்ற இன்னொரு தமிழன் ஏழு மாதங்கள் ஆட்சிபுரிந்தான். இவனைக் கொன்ற பின்பே தாதுஸேன அரச பதவியைப் பெற்றான் என்று கூறப்பட்டுள்ளது. சூளவம்ஸத்திலே கூறப்பட்டுள்ளது போல திருதரன், தாடியன் ஆகியோரையும் தாதுஸேனனே கொன்றான் என்பது சந்தேகத்துக்குரிய விஷயமாகும்.

தமிழ் மன்னர் சமயம்

கி.பி. 429 இற்கும் 455 இற்கும் இடைப்பட்ட காலமாகிய தமிழர் ஆட்சிக் காலத்திலே “பகைவனால் புத்த சாசானம் அழிக்கப்பட்டிருந்தது” என்பது சூளவம்ஸ ஆசிரியருடைய கூற்றாகும். ஆட்சிபுரிந்த மன்னர்கள் அந்நினியர்களாகையால் அப்படி நடந்திருக்கலாம் என்று பொதுவாக ஏற்றிருப்போம். ஆனால் சூளவம்ஸ ஆசிரியருடைய கூற்று பிழையானதென்பதை நிரூபிக்கும் வகையிலே நமக்குக் கல்வெட்டுகளின் சான்று கிடைத்துள்ளது. இந்தச் சான்றின்படி, ஆட்சிபுரிந்த ஆறு மன்னர்களுள் மூவராவது பௌத்தத்தை ஆதரித்து இருந்தனர் என்றும் அவர்கள் பௌத்தராக இருந்திருக்க வேண்டும் என்றும் கொள்ள இடமுண்டு.

பெரும் பாரிதேவன் ஒரு பௌத்த விகாரைக்குத் தானங்கள் செய்திருந்தான் என்பதை அறிவிக்கின்ற ஒரு கல்வெட்டு நமக்குக் கிடைத்துள்ளது. இது பெருமளவிற்குச் சேதமடைந்திருப்பதால் இதிலே உள்ள பல விபரங்களை அறிய முடியாதுள்ளது. இளம் பாரிதேவன் ஒரு பௌத்தனாக விளங்கினான் என்பதை இன்னொரு கல்வெட்டு அறிவிக்கின்றது. இக் கல்வெட்டின்படி, இளம் பாரிதேவன் தாங்கியிருந்த விருது புத்ததாசன் என்ற விருதாகும். அவனுடைய பட்டத்தரசி ஒரு பௌத்த விகாரைக்குப் பல தானங்களை வழங்கியிருந்தாள் என்ற செய்தியை இக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. இவ்வாறே தாடியன் என்பவனும் கதிர்காமத்திலே ஒரு பௌத்த விகாரைக்குச் சில தானங்களை வழங்கியிருந்தான்.

இப்படித் தானம் வழங்கிய மன்னர்கள் பௌத்தர்களாக இருந்திருக்க முடியும். இலங்கையின் மன்னர்கள் பௌத்தர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலே பெருமளவிற்கு வலுப்பெற்றிருந்த காரணத்தினாலேயே இங்கு ஆட்சி நடத்திய தமிழ் மன்னர்களும் பௌத்தர்களாக மதம் மாறியிருப்பர். இக் காரணத்துக்காகவேதான் 18 ஆம் நூற்றாண்டில் கண்டியை ஆண்ட நாயக்கர்களும் பௌத்தர்களாக மாறியிருந்தனர்.

நிலப்பிரபுக்கள் ஆதரவு

பொதுவாக எந்த நாட்டிலும் அந்நியப் படையெடுப்பாளர்கள் ஆதிக்கம் பெறும்போது உள்ளூர்ச் சக்திகள் சில அவர்களுக்கு ஆதரவு நல்குவதுண்டு. இலங்கையிலே இதற்கு முன்பு ஆதிக்கம் பெற்ற தமிழ்ப் படையெடுப்பாளர்களுக்கு எத்தகைய சக்திகளுடைய ஆதரவு இருந்தது என்பதை அறியச் சான்றுகள் போதாது. சேனன், குத்திகன் ஆகியோருக்கு வர்த்தகர்களுடைய ஆதரவு இருந்திருக்கலாம். ஐந்தாம் நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் மன்னர் அறுவருக்கு எத்தகைய சக்திகள் உதவி புரிந்திருந்தன என்பதை ஓரளவு அறிவதற்குச் சூளவம்ஸத்திலே சான்று கிடைத்துள்ளது.

கடைசித் தமிழ் மன்னனைக் கொன்று அரச பதவியைக் கைப்பற்றிய தாதுஸேனன் “தன்னையோ தூய தத்துவத்தையோ பௌத்தத்தைதோ பாதுகாக்காது தமிழருடன் கூடியிருந்த உயர் குலத்தவர் மீதும் குலக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் ஆத்திரங்கொண்டு, அவர்களுடைய ஊர்களை அபகரித்து அவர்களுடைய ஊர்களுக்கிருந்த பாதுகாப்பையும் நீக்கினான்” எனச் சூளவம்ஸத்திலே கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து நிலப்பிரபுக்களுள் ஒரு பிரிவினருடைய ஆதரவைத் தமிழ் மன்னர் பெற்றிருந்தனர் என அறிய முடிகின்றது. தங்கள் நலன்களையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்காக உயர் குலத்தவர்கள் அவ்வாறு நடந்தனர் என்றே விளக்க வேண்டியுள்ளது.

*இக் கட்டுரை 1969 ஜுலை 6 இல் வீரகேசரியில் வெளிவந்தது.


ஒலிவடிவில் கேட்க

8801 பார்வைகள்

About the Author

கா.இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் மற்றும் நெடுங்கால தொல்லியல் அனுபவம் உடையவரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான வரலாற்று நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.