பல்லவர் தொடர்பு
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டத்தில் ஸிலாமேக வண்ண மன்னன் (619 – 628) அநுராதபுரத்தில் ஆட்சி நடத்தியபோது ஸிரிநாக என்பான் தமிழர் படை ஒன்றின் உதவியுடன் அநுராதபுரத்து மன்னனைத் தாக்கி அரசைக் கைப்பற்ற முயன்றான். அவனுடைய படை உத்தரதேஸத்திலிருந்தே தெற்கு நோக்கி அநுராதபுரத்துக்கு முன்னேறியது. ஆட்சியைக் கைப்பற்ற எண்ணிய தலைவன் ஒருவன் வட பகுதியிலிருந்து படை கொண்டு சென்றமை கவனிக்கத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும். இதன்பின் அடிக்கடி இப்படியான நிகழ்ச்சிகள் வடக்கிலிருந்து நடைபெற்றன. இவற்றுள் மிகவும் முக்கியமானது பல்லவப் பேரரசர் உதவியுடன் மானவர்மன் என்ற சிங்கள இளவரசன் நடத்திய படையெடுப்புகள் எனலாம். இக்காலத்து அரசியல் குழப்ப நிலையை விளங்கிக் கொள்ளவும், இதில் உத்தரதேஸம் கொண்டிருந்த பங்கினை மதிப்பிடவும் மானவர்மன் படையெடுப்புகள் உதவுகின்றன.
அநுராதபுரத்தில் 650 தொடக்கம் 659 வரை ஆண்ட இரண்டாம் கஸ்ஸப மன்னனின் மகனாகக் கருதப்படும் மானவர்மன் தந்தை இறந்தபோது ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் விளைவாக அநுராதபுரத்தை விட்டு ஓடி ஒளித்தான். இப்படியாக உரிமையிழந்த இளவரசர்கள் அநுராதபுரத்தை விட்டு ஓடி ஒளிவது எந்த வகையிலும் புதிய நிகழ்ச்சி அன்று. அப்படி ஓடும்போது பொதுவாக இளவரசர்கள் தெற்கு நோக்கி மலைப் பிரதேசத்துக்கு அல்லது அப்பால் ரோஹணத்துக்குச் செல்வதே வழக்கம். வழமைக்கு மாறாக மானவர்மன் வடக்கு நோக்கி ஓடி உத்தரதேஸத்தில் அடைக்கலம் புகுந்தான். இதற்கு ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். வடபகுதி இவனுக்குக் கூடுதலான பாதுகாப்பைக் கொடுத்தமை காரணமாகலாம். ஆனால் அவன் அங்கு இருப்பதை அநுராதபுரத்தில் ஆட்சி நடத்திய ஹத்ததாட்ட அறிந்து அவனைக் கைப்பற்ற முயன்றபோது, மானவர்மன் வட பகுதியை விட்டுப் பல்லவ அரசுக்குச் சென்று பல்லவப் பேரரசனின் பாதுகாப்பைப் பெற்றான்.
மானவர்மன் இலங்கையின் வடபகுதியில் அடைக்கலம் புகுந்தமைக்கும், பின்னர் ஆபத்துத் தோன்றியபோது அங்கிருந்து காஞ்சிக்குச் சென்றமைக்கும் பல்லவர் செல்வாக்கு வடபகுதியில் பரவியிருந்தமை காரணமாக இருந்திருக்கும் எனக் கொள்ளலாம். அவன் அநுராதபுரத்தை விட்டு ஓடும் முன்னரே பல்லவர்களுடைய தொடர்பு அவனுக்கு இருந்திருக்கும். இக்காலப் பகுதியில் பல்லவர் வட பகுதியில் ஓரளவு ஆதிக்கம் பெற்றிருந்தனர் என்று சந்தேகிக்க இடமுண்டு. எப்படியும் வட பகுதியில் காணப்பட்ட அரசியல் நிலை பல்லவருக்குச் சாதகமானதாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. முன்னர் கூறியது போல, ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சி நடத்திய பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு இலங்கையை வெற்றி கொண்டதாகத் தென்னிந்தியக் கல்வெட்டுச் சான்று உள்ளது. அவன் காலத்திலிருந்து வட பகுதியில் பல்லவர்களுடைய செல்வாக்கு இருந்தது எனலாம். இத்தகைய பின்னணியிலேயேதான் பல்லவ அரசிலிருந்து மஹாயான பௌத்தம், கட்டட சிற்பக் கலைகள், கிரந்த எழுத்து முறை மற்றும் வணிக கணங்களின் வர்த்தகம் ஆகியவற்றின் செல்வாக்கு வடகிழக்கு இலங்கையில் மிகுந்து காணப்பட்டது.
பல்லவர் தலைநகராகிய காஞ்சியில் மானவர்மன் பல ஆண்டுகள் தங்கியிருந்தான். அங்கிருந்த காலத்தில் பல்லவர் தங்கள் பகைவர்களாகிய சாளுக்கியருக்கு எதிராக நடத்திய போர்களில் பல்லவருக்கு உதவினான். இறுதியில் முதலாம் நரசிம்ம வர்மன் (630 – 668) கொடுத்த படை உதவியுடன் அநுராதபுரத்தில் தான் இழந்த அரசுரிமையைப் பெற முயன்றான். மானவர்மனின் படை வெற்றிகரமாக எதிர்ப்பின்றி அநுராதபுரத்தை நோக்கிச் சென்றபோதும் திடீரெனப் படையெடுப்பை நிறுத்திக் காஞ்சிக்குத் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்குக் காரணம் காஞ்சியில் பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் நோயுற்றிருந்தமை என அறிகின்றோம். காரணம் எதுவாக இருந்தாலும் பல ஆண்டுகளுக்குப் பின் தன் உரிமையைக் கோருவதற்குத் தமிழ் நாட்டு மன்னன் ஒருவன் உதவியைப் பெற்று மானவர்மன் எடுத்த முதலாவது முயற்சி பலனில்லாது முடிவடைந்தது. காஞ்சிக்குத் திரும்பிச் சென்ற மானவர்மன், மேலும் பல ஆண்டுகள் காத்திருந்து, இறுதியில் இரண்டாம் நரசிம்ம வர்மன் ஆட்சியின் போது படையெடுத்து வந்து வடபகுதியில் தன் நிலையை வலுப்படுத்தி, அநுராதபுரத்தை நோக்கி முன்னேறினான்.
அநுராதபுரத்தில் அக் காலகட்டத்தில் பொத்தகுட்டன் என்னும் தமிழ்த் தலைவன் மிகுந்த அரசியல் ஆதிக்கத்துடன் ஹத்ததாட்ட என்பவனை மன்னனாக நியமித்து வலுவுடன் நிர்வாகம் நடத்திக் கொண்டிருந்தான். மானவர்மன் படை அநுராதபுரத்தை அடையுமுன் பொத்தகுட்டனுடன் ஹத்ததாட்டனும் வடக்கு நோக்கிச் சென்று மானவர்மனை எதிர்த்தனர். ஆனால் பல்லவப் படையை இவர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை. இருவரும் கொல்லப்பட்ட பின் 684 இல் மானவர்மன் அநுராதபுரத்தில் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.
பல்லவர் படைகள் வட பகுதியில் வந்திறங்கிய நிகழ்ச்சிகளும் பல்லவர் ஆதரவைப் பெற்ற சிங்கள இளவரசன் ஒருவன் அநுராதபுரத்தில் ஆட்சி பெற்ற நிகழ்ச்சியும் இக் காலத்து வரலாற்றையும் வடக்கு இலங்கையின் அரசியல் நிலையையும் விளங்கிக் கொள்ள, முக்கியமானவை. ஆறாம் நூற்றாண்டின் பின்னர் தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசும் பாண்டியப் பேரரசும் எழுச்சி பெற, அவற்றுக்கு அண்மையில் இருந்த வடக்கு இலங்கை, தெற்கு இலங்கையைக் காட்டிலும், கூடுதலான தமிழ்ச் செல்வாக்குக்கு இலக்காகியது. பல்லவ அரசில் வளர்ந்த பண்பாடு வடகிழக்கு வழியாக இலங்கையில் பரவியது. தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் இருந்த கடல் மீண்டும் ஓர் ஒற்றுமைப்படுத்தும் காரணியாகச் செயற்பட்டது. முதலில் தமிழ்நாட்டின் செல்வாக்குப் பெளத்தம் சார்ந்ததாகவும், சைவம் சார்ந்ததாகவும், தமிழ் மொழி சார்ந்ததாகவும், சமஸ்கிருதம் சார்ந்ததாகவும் அமைந்தது. பின்னர் அது பெரும்பாலும் சைவமும் தமிழும் சார்ந்ததாக மாறியது. இவ்விரண்டு காரணிகளும் வடக்கிலும் கிழக்கிலும் உருவாகிய இனக் குழுவை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு பெற்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அங்கு உருப்பெற்றுக் கொண்டிருந்த இனக்குழு, பத்தாம் நூற்றாண்டளவில் உறுதி பெற்று வெளிப்பட்டது.
பத்தாம் நூற்றாண்டின் இறுதி
பத்தாம் நூற்றாண்டு முடியும் கட்டத்திலும் பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளிப்படுவது என்ன? அதாவது, சோழர் இலங்கையின் வடபாகம் முழுவதையும் கைப்பற்றியபோது தெரிய வருவது என்ன? சோழர் வருகைக்கு முற்பட்ட நூற்றாண்டுகளில் வட பகுதியில் ஏற்பட்ட மாற்றத்தை இரு வகைப்பட்ட சான்றுகள் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன. ஒன்று, பரவலாக வடபகுதியில் காணப்படும் தமிழ்க் கல்வெட்டுகள்; மற்றது, பல இடங்களில் காணப்படும் சைவக் கோயில்களின் அழிபாடுகள். இத்தமிழ்க் கல்வெட்டுகள் பெரும்பாலும் சோழ ஆட்சியாளர்களைக் குறிப்பிடுகின்றன. அதேபோல, சைவக் கோயில்கள் பெரும்பாலும் சோழ மன்னர்களுடைய பெயர்களைத் தாங்கியவை. வட பகுதியில் ஒரு சில தமிழ்ப் பௌத்த பள்ளிகள் கூடச் சோழ ஆட்சியாளர் பெயர்களைத் தாங்கியிருந்தன. மேற்கே மாதோட்டத்திலிருந்து கிழக்கே திருகோணமலை வரையுள்ள நிலப்பகுதி மேற்கூறிய சான்றுகள் பெரும்பாலும் காணப்படும் பகுதியாக, தமிழ் மக்கள் வாழும் இடங்களையும் சிங்கள மக்கள் வாழும் இடங்களையும் எல்லைப்படுத்தும் பகுதியாகத் தோன்றியிருந்தது. வட பகுதி தமிழும் சைவமும் மேலோங்கிய இடமாக மாற்றம் அடைந்ததைப் பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் தெளிவாகக் காணலாம்.
மேற்கூறிய எல்லைப் பகுதிக்கு வடக்கே பத்தாம் நூற்றாண்டுக்கு முன் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியைச் சுருக்கமாகக் கூறுவதாயின், அங்கு வாழ்ந்த நாகரும் பிற இடைக்கற்கால மக்களும் பின்னர் அங்கு சென்ற தெலுங்கர், கேரளர் மற்றும் கன்னடர் ஆகியோரும் ஹௌமக்களும் தமிழருடைய மேலோங்கிய செல்வாக்கினாலும் தமிழ் மொழியின் பரம்பலினாலும் ஓர் இனக் குழுவாக மாற்றமடையும் வழியில் சென்றனர். இவர்கள் பெரும்பாலும் பௌத்தத்தைத் தழுவியோராகத் தொடக்க நூற்றாண்டுகளில் காணப்பட்டபோதும், காலப்போக்கில் பௌத்தம் வலுவிழக்க, சைவம் அவர்களுடைய முக்கிய மதமாகியது.
வடக்கு இலங்கை 300 – 900
வடக்கு இலங்கையில் (மன்னார், வவுனியா, திருகோணமலை, முல்லைத் தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய தற்கால மாவட்டங்களையும் அநுராதபுர மாவட்டத்தின் வடபாகங்களையும் உள்ளடக்கிய பிரதேசம்) 300 இற்கும் 900 இற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சி தொடர்பாக இதுவரை ஒரு சில சான்றுகளே கிடைத்துள்ளன. சில கல்வெட்டுகள், சிற்பங்கள், நாணயங்கள், பௌத்த கட்டிடங்களின் அழிபாடுகள் ஆகியவற்றுடன் பாளி வரலாற்றேடுகளிலும் கிரேக்க-ரோம நூல்களிலும் உள்ள சில குறிப்புகளுமே இப்பிரதேசத்தின் வரலாற்றுக்கு மூலங்களாக உள்ளன. தொல்லியல் ஆய்வு முறைப்படி நடத்தப்படும் வரை இப்பிரதேசத்தின் தொடர்ச்சியான, தெளிவான வரலாற்றை அறிந்து கொள்வது கடினம்.
இச் சான்றுகளைக் கொண்டு பெறக் கூடிய மறுக்க முடியாத முடிவு ஒன்று என்னவெனில் இவ் வட பிரதேசத்தில் பௌத்தம் முக்கியமான ஒரு மதமாக இக் காலப்பகுதியில் காணப்பட்டது என்பதாகும். அநுராதபுரத்தில் வழக்கில் இருந்த பௌத்தத்தில் இருந்து வட பகுதியின் பௌத்தம் சில வேறுபட்ட பண்புகளை வெளிப்படுத்தியது என்பதும் இச் சான்றுகளால் தெரிய வருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பௌத்தம் ஆந்திரச் செல்வாக்கைக் காட்டி நிற்க, திருகோணமலை மாவட்டத்தில் பல்லவ அரசின் மஹாயான பௌத்தத்தின் செல்வாக்கு மிகுந்திருந்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தேரவாத பௌத்தமும் பாளி மொழியும் செல்வாக்குப் பெற்ற சக்திகளாக அமைய, திருகோணமலை மாவட்டத்தில் மஹாயான பௌத்தமும் சமஸ்கிருத மொழியும் செல்வாக்குப் பெற்றிருந்தன.
இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாண மாவட்டத்தில் பரவத் தொடங்கிய பௌத்தம் இலங்கையின் பிற பகுதிகளைப் போல குறிப்பிடத்தக்க வகையில் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்றுச் சென்றது. இங்கு எடுத்து ஆராயப்படும் காலப் பகுதியில் (300 – 900) யாழ்ப்பாண மாவட்டத்தின் பல இடங்களில் பௌத்தம் நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. கந்தரோடை, வல்லிபுரம், நயினாதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு, பொன்னாலை, மாகியப்பிட்டி, சுன்னாகம், நிலாவரை மற்றும் உடுவில் ஆகிய இடங்கள் இவற்றுள் அடங்கும். இத் தொல்லியல் தலங்களுள் மிகவும் பிரசித்தி பெற்றது கந்தரோடை ஆகும்.
மேலே குறிப்பிடப்பட்ட இடங்கள் யாவற்றிலும் புத்தர் சிலைகள் அகழ்ந்து பெறப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரியதும் அதிகம் பழுதடையாததும் வல்லிபுரத்தில் கிடைத்த புத்தர் சிலை எனலாம். ஆந்திரத்து அமராவதிப் பாணியில் அமைந்துள்ள இச் சிலை நான்காம் நூற்றாண்டளவில் செதுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. அழகான இச் சிலையை 1906 இல் இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதியாகிய ஹென்றி பிளேக் தாய்லாந்து மன்னனுக்கு உபயமாக வழங்கினார். தற்பொழுது அது பாங்கொக் நகரில் வாட் பெஞ்ஜாப் புத்தர் கோயிலில் இருக்கின்றது. அமராவதிப் பாணியில் அமைந்த இன்னொரு புத்தர் சிலை சுன்னாகத்திலிருந்து பெறப்பட்டு அநுராதபுரத்துத் தொல்லியல் அரும்பொருளகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் நிற்கும் புத்தர் சிலைகள். அமர்ந்திருக்கும் புத்தர் சிலைகள் கந்தரோடை, பொன்னாலை மற்றும் மாகியப்பிட்டி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. இவற்றை விட உடுவில், நிலாவரை மற்றும் பருத்தித்துறை ஆகிய இடங்களில் புத்தர் சிலைப் பாகங்கள் கிடைத்துள்ளன.
யாழ்ப்பாணத்துப் பௌத்த தொல்லியல் தலங்களுள் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகிய கந்தரோடை முறையான அகழ்வாய்வு நடத்தப்பட்ட ஒரேயொரு தலமாக விளங்குகிறது. இந்த இடம் ஆதி இரும்புக் காலத்திலிருந்து குடியிருப்புகளைக் கொண்ட இடமாக வளர்ச்சியடைந்தது என்பதை 1971 இல் பென்ஸில்வேனியாப் பல்கலைக்கழகம் நடத்திய அகழ்வாய்வு உறுதிப்படுத்தியது. இவ்விடம் நகரப் பண்புகளைக் கொண்டு வளர்ச்சி பெற்றதை நோக்குமிடத்து ஆதி வரலாற்றுக் காலத்தில் அது குறுநில அரசொன்றின் ஆதிக்கத்தலமாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் ஆந்திரத்தின் செல்வாக்குப் பரவியதற்கும் வர்த்தக வளர்ச்சியில் மையமான இடத்தை இவ்விடம் பெற்றிருந்தமைக்கும் சான்றுகள் கிடைக்கின்றன.
வல்லிபுரத்தில் இன்னொரு முக்கிய பௌத்த வழிபாட்டுத் தலம் இருந்தமைக்கு முதலாம் நூற்றாண்டளவில் இருந்து சான்று கிடைக்கின்றது. இங்கு முதலாம் நூற்றாண்டளவில் கட்டப்பட்ட ஒரு பௌத்த நிறுவனத்தின் அத்திவாரத்தில் பொன்னேடு ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. இது கடந்த நூற்றாண்டில் வெளிப்பட்டதும் ஒரு முக்கியமான ஆவணமாகியது. அங்கு பெளத்த பள்ளி ஒன்று அமைக்கப்பட்ட தகவல் இப் பொன்னேட்டின் மூலம் கிடைக்கின்றது. வல்லிபுரத்தில் அமராவதிப் பாணியில் புத்தர் சிலை ஒன்றும் கிடைத்தபடியால் அவ்விடம் ஒரு பெளத்த தலமாக விளங்கியிருக்கும் என ஊகிக்கலாம்.
யாழ்ப்பாணத் தீபகற்பத்துக்கு மேற்கேயுள்ள சிறு தீவுகள் ஆதி வரலாற்றுக் காலத்தில் பௌத்தம் பரவியபோது பௌத்த சங்கத்தார் தங்குவதற்கான ஒதுக்கிடங்களாக அமைந்திருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு. இலங்கையின் தென் பாகத்தில் பௌத்த வரலாற்றின் ஆரம்பக் கட்டத்தில் பௌத்த துறவிகளாகிய சங்கத்தார் நகரங்களில் வசிக்காது வனப் பகுதிகளை நாடினர். அதேபோல, வனங்கள் இல்லாத பிரதேசமாகிய யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் ஆதிப் பெளத்த சங்கத்தார் ஒதுக்கிடங்களாகச் சில தீவுகளைப் பயன்படுத்தியிருக்கலாம். அப்படி ஒதுக்கிடங்களில் வாழ்ந்த சங்கத்தார் உயர்வாக மதிக்கப்பட்டனர் என்றும் கொள்ள முடியும். இதனால் காலப் போக்கில் நயினாதீவில் இருந்த பௌத்த பள்ளி பௌத்த யாத்திரைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஓர் இடமாகியது. இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் புங்குடுதீவில் வாழ்ந்த பெளத்த துறவிகள் பெரிதும் நாடு முழுவதும் மதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. மஹாவம்சத்தில் ‘பியங்குதீப’ எனப் பாளி மொழியிலும் பிற்பட்ட காலத்தில் சிங்கள இலக்கியத்தில் ‘புவங்குதிவயின’ எனவும் குறிப்பிடப்படும் தீவு புங்குடு தீவு என அடையாளங் காண முடியும். இத்தீவில் துட்ட காமணி மற்றும் எல்லாள மன்னர் காலத்தில் மிகவும் உயர்வாக மதிக்கப்பட்ட பௌத்த துறவிகள் வாழ்ந்தனர் என்பதும், அவர்கள் துட்ட காமணி மன்னனின் கவலையைப் போக்க உதவினர் என்பதும் மஹாவம்சத்தில் கூறப்படுகின்றது.
பிற்பட்ட காலத்தில் எழுந்த சிங்கள நூலாகிய நம்பொத (பெயர் நூல்) என்ற நூல் பௌத்தர்கள் யாத்திரை செல்ல வேண்டிய இடங்களின் பெயர்களைப் பட்டியல் படுத்தி, இலகுவில் எல்லோரும் மனதில் பதித்து வைக்கக் கூடிய வகையில் கொடுக்கின்றது. இப்பட்டியலை அண்மைக்காலம் வரை மாணவர்கள் மனப்பாடஞ் செய்வது வழக்கமாக இருந்தது. இப்பட்டியலில் யாத்திரை செல்ல வேண்டிய பிரசித்தி பெற்ற பௌத்த தலங்களுள் ஒன்றாகப் புவங்குதிவயின (புங்குடுதீவு) குறிப்பிடப்படுகின்றது. இத்தீவு மட்டுமின்றி, நாகதிவயின (நயினாதீவு), காரதிவயின (காரைதீவு) மற்றும் தனதிவயின (தனதீவு) ஆகியவை யாத்திரைத் தலங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. யாழ்ப்பாணத் தீபகற்பப் பிரதேசத்தில் (இது தெமள பட்டணம், அதாவது தமிழ்ப்பட்டினம் என நம்பொதவில் குறிப்பிடப்படுகின்றது) கொடுக்கப்பட்டுள்ள எட்டுத் தலங்களுள் நான்கு தீவுத் தலங்களாக இருப்பது கவனிக்கத்தக்கது. நம்பொத எழுதப்பட்ட காலம் வரையாவது இவை பெளத்த தலங்களாக இருந்தமையும் கவனிக்கத்தக்கது. நயினாதீவு மட்டுமே இன்று வரை ஒரு பௌத்த யாத்திரைத் தலமாக உள்ளது.
கந்தரோடை தவிர்ந்த ஏனைய யாழ்ப்பாண மாவட்டத்து இடங்களில் அகழ்வாய்வு நடத்தப்படாத காரணத்தால் அம் மாவட்டத்தில் நிலவிய பௌத்த மதம் பற்றி அதிகம் அறிய முடியாதுள்ளது. இதேபோன்று, அம்மாவட்டத்துக்குத் தெற்கே கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், மன்னார் மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் ஆகிய இடங்களில் நிலவிய பௌத்தம் பற்றியோ பிற மதங்கள் பற்றியோ அறிவதற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்படவில்லை. பௌத்தம் மட்டுமின்றிச் சமணம் மற்றும் ஆசிவகம் ஆகிய மதங்களும் சைவமும் வட பகுதியில் நிலவியிருக்கும்.
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இப்பிரச்சினை குறைவாகவே காணப்படுகின்றது. இங்கு 300 தொட்டு 900 வரையிலான காலப்பகுதியில் காணப்பட்ட பண்பாடு மற்றும் பொருளியல் நிலைகள் பற்றி அறியச் சில சான்றுகள் கிடைத்துள்ளன. இவை கல்வெட்டுகளாகவும், கட்டிட அழிபாடுகளாகவும் சிற்பங்களாகவும் இலக்கியக் குறிப்புகளாகவும் உள்ளன. இக்காலப் பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் பல்லவப் பேரரசின் செல்வாக்குக் குறிப்பிடத்தக்க அளவில் பரந்திருந்தது. திருகோணமலையும் அதற்கு வடக்கே பல்லவ வங்கம் என்ற துறையும் நாட்டின் முக்கிய துறைகளாக விளங்கின. இவற்றின் வழியாக வர்த்தகம் மட்டுமின்றி, சமயம், கலைகள் மற்றும் அரசியல் ஆகிய துறைகள் சார்ந்த தொடர்புகள் தென்னிந்தியாவிலிருந்தும் வேறும் பிற வெளி இடங்களிலிருந்தும் இலங்கையுடன் ஏற்பட்டன.
தென்னிந்தியாவில் வலிமையுடன் எழுந்த வணிக கணங்கள் தென்கிழக்கு ஆசியாவுடன் தூர வர்த்தகத் தொடர்புகளைத் துரிதப் படுத்தியபோது திருகோணமலை மாவட்டத்தின் துறைகள் முன்னை விடக் கூடுதலான முக்கியத்துவத்தைப் பெற்றன. இத்துறைகளில் வணிக கணங்களின் குடியிருப்புகள் மட்டுமின்றி, வணிகர்கள் நிறுவிய சமய நிறுவனங்களும் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இக் காலப் பகுதியில் மஹாயான பௌத்தம் பல்லவப் பேரரசில் மிகுந்த செல்வாக்குடன் காணப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் திரியாய் என்ற இடத்தில் இக் காலப் பகுதியில் சிறப்புடன் விளங்கிய மஹாயான பௌத்த பள்ளி ஒன்று இருந்தது. அது வணிகர்களுடைய ஆதரவைப் பெற்றுச் செழிப்புற்ற ஒரு நிறுவனம். இதன் பெயர் கிரிகண்ட சைத்தியம். ஆனால் அதற்குப் பொதுப்படத் ‘திரியாய் வட்டதாகே’ என்ற பெயர் அதன் கட்டிட அமைப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. பல்லவ அரசுக்கும் இந்நிறுவனத்துக்கும் இடையில் இருந்த நெருங்கிய தொடர்பு அங்குள்ள தொல்லியல் சான்றுகளால் உறுதிப்படுத்தப்படுகின்றது. அங்கு கிடைத்துள்ள மஹாயானக் கல்வெட்டு ஒன்று பல்லவ கிரந்த எழுத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது, அங்குள்ள கட்டிடத்தின் சிற்ப வேலைப்பாடுகள் பல்லவர்களுடைய தனித்துவமான சிற்பப்பாணியின் செல்வாக்கை வெளிப்படுத்துகின்றன. பல்லவர் தலைநகராகிய காஞ்சியிலிருந்து இலங்கைக்கு ஏழாம் நூற்றாண்டில் சென்ற வஜிரபோதி என்ற மஹாயான பௌத்த துறவி திரியாய்ப் பௌத்தப் பள்ளி போன்ற கிழக்கு இலங்கைப் பௌத்தப் பள்ளிகளில் தங்கியிருந்திருப்பார். அவர் இலங்கையிலிருந்து சீனாவுக்கும் பயணஞ் செய்தபடியால் கிழக்கிலங்கைத் துறை ஒன்றிலிருந்து சென்றிருப்பார் எனலாம். அவரைப் போன்று இன்னொரு பிரசித்தி பெற்ற மஹாயானத் துறவியாகிய குணவர்மன் என்பவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து சில காலம் தங்கியிருந்து தென்கிழக்காசியாவுக்குப் பயணம் ஆனார்.
திருகோணமலை மாவட்டத்தில் கரையோரத்தில் இருந்த இன்னொரு மஹாயான பௌத்தப் பள்ளி குச்சவெளியில் இருந்த பள்ளியாகும். குச்சவெளிக்குத் தெற்கேயும், கிழக்குக் கரையிலும் மஹாயானப் பள்ளிகள் பல்லவர் செல்வாக்கை வெளிப்படுத்தும் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டிருந்தன. ஸிதுல்பவு மற்றும் குருக்கள் மடம் ஆகிய இடங்களில் இச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. சைவ நாயன்மார் இயக்கத்தின் செல்வாக்கு காலகட்டத்தில் வட இலங்கைப் பகுதியில் நடைபெற்ற முக்கிய அபிவிருத்திகளுள் ஒன்று தமிழ்நாட்டுச் சைவ இயக்கத்தின் செல்வாக்குப் பரவிச் சைவ மதம் வலுப்பெற்றமை. தமிழ்நாட்டிலிருந்து பரவிய மஹாயான பௌத்தத்தின் செல்வாக்கைக் காட்டிலும் நீண்ட கால விளைவுகளை வட பகுதியில் நாயன்மார் இயக்கம் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் போல, இலங்கையின் வட பகுதியில் மஹாயான பௌத்தமும் தேரவாத பௌத்தமும் வீழ்ச்சியடையச் சைவ மதம் அங்கு ஆதிக்கம் பெற்றது. நாயன்மார் இயக்கம் முடிவுற்ற பின்னரும் வட பகுதியில் தமிழ்ப் பௌத்தர்கள் தொடர்ந்து காணப்பட்டாலும், பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியளவில் வட பகுதித் தமிழர்களுடைய தனி மதமாகச் சைவம் எழுச்சியுற்றதைக் காணலாம். இதனால் தமிழ் மொழியும் சைவ மதமும் இலங்கையில் ஆக்கம் பெற்ற தமிழ் இனக் குழுவின் அடையாளச் சின்னங்களாயின.
மஹிந்த மஹாதேரர் பௌத்த சங்கம் ஒன்றைத் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலத்தில் நிறுவு முன்னரே இலங்கையில் சிவ வழிபாடு நிலவி வந்தது. தேவநம்பிய திஸ்ஸனின் தந்தை பெயர் பாளி நூல்களில் ‘முடஸிவ’ எனக் கொடுக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. ஸிவ (சிவன்) என்ற பெயர் வழக்கில் இருந்தமை சிவ வழிபாடு இருந்தமைக்கு அறிகுறியாகும். மிகப் பழைய ஆவணங்களாகிய பிராமிக் கல்வெட்டுகளில் பலர் ‘ஸிவ’ என்ற பெயருடையோராய்க் காணப்படுகின்றனர். பாளி வரலாற்றேடுகளில் சிவ வழிபாடு அநுராதபுரத்திலும் வேறிடங்களிலும் நடைபெற்றதற்குச் சான்றுண்டு.
சைவ, வைணவ இயக்கங்களின் வெற்றிக்குத் தமிழ்நாட்டு ஆட்சியாளரும் வணிக கணத்தவரும் ஒரு முக்கியமான வகையில் அடிக்கல் நாட்டியிருந்தனர். உள்ளூர் ஆட்சியாளரும் உயர் குழாத்தினரும் வட இந்திய மரபுகளை வரவேற்றுப் பின்பற்றும் போக்குக் காணப்பட்ட தென்னிந்தியா – இலங்கைப் பிராந்தியத்தில் பல்லவ வம்சத்தவர் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில் ஈடுபட்டுப் பிராமணீயச் செல்வாக்கு வளர்வதற்கு உதவினர். தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்த பல்லவர், ஏற்கனவே பிராமணீய மரபுகளைக் கடைப்பிடிப்போராய் வந்தனர். வந்தபின் தொண்டைமண்டலத்தில் ஆட்சியாளராக அதிகாரம் பெற்ற இவர்கள் முன்னொரு போதும் தமிழ் அரசுகளில் காணப்படாத அளவுக்குப் பிராமணீயச் சடங்குகளை நடத்தினர். தென்னிந்தியாவில் முன்பிருந்தே பிராமணர்களுக்கு ஆட்சியாளர் ஆதரவளிக்கும் வழக்கம் காணப்பட்டாலும், பல்லவர் ஆட்சியில் பிராமணருக்குச் சிறப்பு ஆதரவு வழங்கப்பட்டது. இப்படியான ஆதரவின் ஒரு வெளிப்பாடாகப் பிரமதேயம் எனப்பட்ட பிராமணக் குடியிருப்புகள் அரசின் பல்வேறு பகுதிகளிலும் நிறுவப்பட்டன. பல்லவருடைய முன் மாதிரியைப் பாண்டியரும் பின்பற்றினர். தென்னிந்தியா முழுவதிலுமே இப் போக்குக் காணப்பட்டது எனலாம். ஆறாம் நூற்றாண்டின் பின் எழுச்சி பெற்ற புதிய அரச வம்சங்கள் கடைப்பிடித்த முக்கிய கடமைகளுள் ஒன்றாகப் பிராமணருக்கும் கோயில்களுக்கும் நிலத்தானம் வழங்குவது சிறப்பிடம் பெற்றது.
பிரமதேயம் என்பது ஒரு பிராமணக் குடியிருப்பு மட்டுமின்றி, ஊர்ப் பொருளியல் அமைப்பில் ஒரு மையமான நிறுவனமாகக் காணப்பட்டது. கோயில் ஒன்றை இதயமாககக் கொண்டு, ஏற்கனவே மந்தை மேய்ப்பிலும் விவசாயத்திலும் ஈடுபட்டிருந்த குடிகளை உள்ளடக்கி, நீர்ப்பாசன வசதிகளின் பராமரிப்புக்குப் பொறுப்பேற்ற, சமூக அதிகாரமும் பொருளியல் அதிகாரமும் கொண்ட ஊர் சார்ந்த ஒரு நிறுவனமாகப் பிரமதேயம் முக்கியத்துவம் பெற்றது. பிரமதேயத்தின் நிர்வாகத்தை நடத்த ‘சபை’ என்ற குழு ஒன்று இருந்தது. இக்குழுவைச் சேர்ந்தோர் வாரியங்கள் எனப்பட்ட சிறு காரியக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றின் மூலம் நீர்ப்பாசன வசதிகளாகிய குளங்கள், கால்வாய்கள் ஆகியவற்றைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள், கோயில் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் கல்விக் கூடங்களை நடத்தும் ஏற்பாடுகள் ஆகியவை கவனிக்கப்பட்டன.
பிராமணருக்கு ஆதரவளிப்பது இந்திய மன்னர்களுடைய இலட்சியங்களுள் ஒன்றாக எப்பொழுதுமே இருந்து வந்தது. இலங்கையிலும் தென்கிழக்காசியாவிலும், சமஸ்கிருத மயமாக்கத்தின் விளைவாக இந்த இலட்சியத்தை மன்னர்கள் கடைப்பிடித்தனர். இதனால் அவர்கள் இந்தியாவில் இருந்து, சிறப்பாகத் தென்னிந்தியாவில் இருந்து பிராமணர்களை வரவழைத்துத் தம் அரசுகளில் குடியிருத்தி, பல்வேறு சந்தர்ப்பங்களில் தானங்கள் வழங்கி ஆதரித்தனர். மன்னர்கள் மட்டுமின்றி, அரசின் உயர்குழாத்தினரும் வர்த்தகர்களும் கொடுத்த ஆதரவுடன் இப் பிராமணர்கள் இலங்கையிலும் தென்கிழக்காசியாவிலும் சைவ, வைணவ வழிபாட்டைப் பரப்புவதில் பெரும்பங்கு கொண்டிருந்தனர். இலங்கையில் பிரமதேயம் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் சைவம் வளர்வதற்குத் தேவைப்பட்ட நிறுவன ரீதியான அடித்தளம் அமைக்கப்பட்டுச் சைவம் வலுப் பெறுவதற்கு வழிகோலப்பட்டது.
தென்னிந்தியாவில் சைவ, வைணவ இயக்கம் பௌத்தத்துக்கு எதிராக எழுந்த காலத்தில், அநுராதபுரத்தில் ஆட்சி நடத்திய பெளத்த மன்னர்கள் பிராமணருக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் சைவம் இலங்கையில் வலுப்பெற உதவினர் எனலாம். பல நூற்றாண்டுகளாக இவர்களுடைய முன்னோர்கள் பிராமணர்களுக்கு ஆதரவளித்து வந்தனர். குறிப்பிடத்தக்க விதிவிலக்காக ஒரு மன்னனை மட்டுமே எடுத்துக் காட்டலாம். அவன் மூன்றாம் நூற்றாண்டில் ஆட்சி நடத்திய மஹாஸேன மன்னன் ஆவான். இவன் திருகோணமலையிலிருந்த சிவன் கோயில் ஒன்றையும் பிற பிராமணீய வழிபாட்டுத் தலங்களையும் அழித்ததாக அறிகின்றோம். ஏனைய மன்னர்கள் பொதுவாகப் பிராமணர்களுக்கும் பௌத்த சங்கத்துக்கும் ஆதரவளித்தனர். ஆறாம் நூற்றாண்டு வரை பிராமணருக்கு வழங்கிய ஆதரவு பௌத்தத்தின் நிலையைப் பாதிக்கவில்லை எனலாம். பொதுவாக இந்த ஆதரவு அரச சபையில் புரோகிதர்களாகவும், சோதிடராகவும் வேறு நிர்வாகிகளாகவும், சிறப்புப் பதவி பெற்றிருந்த பிராமணர்களுக்கே வழங்கப்பட்டது எனலாம். ஆறாம் நூற்றாண்டில் பல்லவ அரசில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் இலங்கையிலும் செல்வாக்கினை உண்டு பண்ணின எனத் தோன்றுகிறது. பிராமணருக்கு மன்னர்கள் கொடுத்த ஆதரவு பாளி வரலாற்றேடுகளில் பதிவு பெறும் அளவுக்கு முக்கியத்துவம் அடைந்தது.
ஆறாம் நூற்றாண்டின் பின் அநுராதபுரத்து மன்னன் ஒருவன் ‘அங்குமிங்குமாகப் பழுதடைந்திருந்த தேவாலயங்களைப் புதுக்கியும், மன்னர்களுக்கு உகந்த உணவைப் பிராமணருக்கு வழங்கியும் ஆட்சி செலுத்தினான். இன்னொரு மன்னன் பிராமணர்களைத் தமக்குரிய கடமைகளைப் புரிந்து வாழ்க்கை நடத்துமாறு ஊக்குவித்தான். வேறொரு மன்னன் ஆயிரம் பிராமணர்களுக்கு விலையுயர்ந்த கொடைகளாகிய பொன்னையும் முத்தையும் மாணிக்கத்தையும் வழங்கினான். இவற்றைக் குறிப்பிடும் பௌத்த பாளி வரலாற்றேடு, அநுராதபுரத்து மன்னர் பிரமதேயங்களை நிறுவியது பற்றிக் கூறவில்லை. ஆனால் மன்னர்கள் பிராமணருக்கு வழங்கிய ஆதரவை நோக்குமிடத்து பிரமதேயங்களும் அமைக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. பல்லவர் செல்வாக்குக்கு உட்பட்ட இடங்களிலாவது பிரமதேயங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம்.
பல்லவர் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட பிரதேசமாக இருப்பது வடகிழக்குக் கரையோரமாகும். இக்கரையோரத்தில் வடக்கில் திரியாய் தொடக்கம் தெற்கில் குச்சவெளி வரையும், உள்நாட்டில் பதவியா மற்றும் கந்தளாய் ஆகிய இடங்கள் வரையும் பரந்துள்ள பிரதேசம் பல்லவர் செல்வாக்கு அதிகம் பரவிய பகுதி எனலாம். இதற்கு அப்பாலும் பல்லவர் செல்வாக்குப் பரவியிருந்தமைக்குச் சான்றுகளாக நாலந்தாவில் உள்ள மஹாயானக் கோயிலும் (கெடிகே) அநுராதபுரத்துக்கருகே இசுருமுனியாவில் உள்ள சிற்பங்களும் உள்ளன. திரியாயும் குச்சவெளியும் மஹாயான பௌத்த நிறுவனங்கள் இருந்த இடங்கள் என்பது முன்னர் குறிப்பிடப்பட்டது. கந்தளாயும் பதவியாயும் பிராமணீய நிறுவனங்கள் அமைந்த இடங்களாக இருந்திருக்க முடியும் என்பதை பத்தாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சோழர் ஆட்சி நடத்தியபோது இருந்த நிறுவனங்கள் பற்றிய சான்றுகளைக் கொண்டு கூறலாம்.
பதினோராம் நூற்றாண்டில் இலங்கையில் இருந்த பிரமதேயங்களுள் மிக முக்கியமான இரண்டு கந்தளாயிலும் பதவியாயிலும் இருந்தன. இவை பற்றிப் பின்னர் விரிவாகக் கூறப்படும். பதவியாவில் இரவிகுல மாணிக்க ஈஸ்வரம் என்ற சிவன் கோயிலை மையமாகக் கொண்ட பிராமணக் குடியிருப்பு ஒன்று இருந்தது. இது எப்பொழுது நிறுவப்பட்டது என்பதைத் தொல்லியல் ஆய்வு மூலமே அறியலாம். அதேபோல, கந்தளாயில் தென்கைலாசம் (பின்னர் விஜயராஜ ஈஸ்வரம்) என்ற கோயிலை மையமாகக் கொண்ட பிராமணக் குடியிருப்பு ஒன்று இருந்தது. இது எப்பொழுது நிறுவப்பட்டது என்பதையும் தற்பொழுது அறியச் சான்று இல்லை. இவை இரண்டும் ஆறாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் தோன்றிய பிரமதேயங்கள் என்று கொள்ள இடமுண்டு.
இவ்வாறு இலங்கையின் வடகிழக்கிலும், வேறு வட பகுதிகளிலும், பிராமணர் குடியிருப்புகளாகிய பிரமதேயங்கள் நிறுவப்பட்ட பின் சைவம் வலுப் பெறவும் தமிழ்நாட்டில் எழுந்த நாயன்மார் இயக்கத்தின் செல்வாக்கு இலங்கையில் பரவவும் வழிகோலப்பட்டது. ஏழாம் நூற்றாண்டிலிருந்து நாயன்மார்கள் நடத்திய இயக்கம் படிப்படியாக வலுப்பெற்றபோது அதன் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டது.
இலங்கையில் 600 இற்கும் 900 இற்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவிய சைவம் பற்றித் தொல்லியல் மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் மூலம் ஒரு சில சான்றுகளே இதுவரை கிடைத்துள்ளன. இவை சைவக் கோயில்கள் பற்றியவை. இன்று சைவம் நன்கு பேணப்பட்டுள்ள இடமாகிய யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்த கோயில்கள் பற்றிப் பிற்பட்ட நூல்களில் உள்ள சில தகவல்களை விட நம்பகமான சான்று எதுவும் தற்போது இல்லை. இவற்றின்படி அங்கு நகுலேஸ்வரம் என்ற பழைய கோயில் ஒன்று இருந்ததாக அறிகின்றோம். வடகரையில் நகுலேஸ்வரம் அமைந்திருந்தது போல, இலங்கையைச் சுற்றி ஈஸ்வரங்கள் இருந்தன என்று மரபுக் கதைகள் இலங்கைச் சைவ மக்கள் மத்தியில் வழங்கி வருகின்றன. அவ்வாறு மேற்குக் கரையில் முன்னீஸ்வரம் மற்றும் திருக்கேதீஸ்வரம், கிழக்குக் கரையில் திருக்கோணேஸ்வரம் ஆகியவையும் தெற்குக் கரையில் தொண்டீஸ்வரம் என்ற கோயிலும் இருந்தன என்பது மரபுக் கதை. இவற்றுள் தொண்டீஸ்வரம் தவிர்ந்த ஏனைய மூன்று கோயில்கள் பற்றியும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. தென் கரையில் நகரீசர் (நகரீஸ்வரம்) கோயில் என்றொரு தலம் இருந்ததாகப் பிற்பட்ட கல்வெட்டுச் சான்று ஒன்று கிடைத்துள்ளது. இக்கோயிலே தொண்டீஸ்வரம் என வழங்கியதோ தெரியவில்லை.
நாயன்மார்களுடைய இயக்கம் தொடங்கிய காலமளவில் மேலே குறிப்பிடப்பட்ட சைவத் தலங்களுள் திருக்கேதீஸ்வரமும், திருக்கோணேஸ்வரமும் பழமை வாய்ந்த முக்கிய சைவத் தலங்களாகத் தமிழ்நாட்டிலேயே கருதப்பட்டன எனலாம். இதனால் சைவ நாயன்மார் பாடிய தேவாரங்கள் இவ்விரு தலங்களை நோக்கியும் பாடப்பட்டன. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாயனாராகிய திருஞானசம்பந்தர் தமிழ்நாட்டில் பல பழைய சைவத் தலங்களுக்குச் சென்று அவற்றின் சிறப்பைத் தேவாரமாகப் பாடினார். அவர் இலங்கைக்கும் சென்றாரோ என்பது தெரியவில்லை. ஆனால் இலங்கையின் இரு சைவத் தலங்கள் மீது தேவாரங்கள் பாடி அவற்றைச் சிறப்பித்துள்ளார். அத்தலங்கள் கோணேஸ்வரமும் கேதீஸ்வரமுமாம். ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சுந்தரமூர்த்தி நாயனாரும் கேதீஸ்வரத்தின் மீது தேவாரம் பாடியுள்ளார்.
எட்டாம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவர் எனக் கருதப்படும் மாணிக்க வாசகர் இலங்கையுடன் தொடர்புடைய ஒரு சைவத் தலைவராக விளங்கினார் எனக் கருத இடமுண்டு. இவர் இலங்கைத் தலங்கள் பற்றிப் பாடல்கள் பாடாவிட்டாலும் இலங்கையுடன் தொடர்பு கொண்ட ஒருவராக சில கதைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளார். சைவ மரபுகளின்படி மாணிக்கவாசகர் மதுரையில் பாண்டிய மன்னனின் அமைச்சராகக் கடமையாற்றியபோது மன்னனுக்குக் குதிரைகள் வாங்குவதற்காகப் பெருந்துறை என்னும் துறைக்குச் சென்று வந்தார் என அறியக் கிடக்கின்றது. இவருடைய பிரசித்தி பெற்ற திருவாசகத்தில் பலமுறை ‘திருப்பெருந்துறையுறை சிவன்’ பற்றிப் பாடியுள்ளார். பெருந்துறை என்பதும் ‘மாதோட்டம்’ என்பதும் ஒரு பொருள் பெயர்கள். மாதோட்டம் குதிரை வர்த்தகத்துக்கும் வேறு தூர வர்த்தகத்துக்கும் நெடுங்காலம் பிரசித்தி பெற்ற துறையாக விளங்கியபடியால், மாணிக்க வாசகர் குதிரை வாங்கிய துறை மாதோட்டமாக இருக்கலாம் என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எவ்வாறாயினும் சைவ புராணங்களில் மாணிக்கவாசகர் இலங்கைப் பெளத்தர்களுடன் வாது செய்த ஒரு சைவத் தலைவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். திருவாதவூரர் புராணத்தில் மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் இலங்கையிலிருந்து சென்ற பௌத்தர்களுடன் வாது செய்து அவர்களை வெற்றி கொண்டதாகவும், அங்கு வந்திருந்த இலங்கை மன்னன் ஒருவனுடைய ஊமை மகளைப் பேச வைத்ததாகவும், அதன் விளைவாக இலங்கை மன்னன் சைவத்தைத் தழுவியதாகவும் கூறப்படுகின்றது. இந்நிகழ்ச்சியுடன் ஒப்பிடக் கூடிய வகையில் பிற்பட்ட காலச் சிங்கள நூலாகிய நிகாய ஸங்கிரஹய நூல், ஸேன என்ற மன்னன் ஒரு துறவியால் சைவத்துக்கு மதம் மாற்றப்பட்டான் என்று குறிப்பிடுகின்றது. இது மாணிக்கவாசகரைப் பற்றிய குறிப்பாக இருக்க முடியும்.
இவ்வாறு இலக்கியச் சான்றுகளால் வெளிப்படும் வரலாறு என்னவெனில் ஆறாம் நூற்றாண்டின் பின் இலங்கையில் சைவ இயக்கம் சில வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி குறிப்பாகத் தமிழர் மத்தியில் அம் மதம் வலுப்பெற உதவியது என்பதே. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில் சைவம் சார்ந்த தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன. இவை கிடைக்கும் இடங்களில் அகழ்வாய்வு நடத்தினால் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னரே அவ்விடங்களில் சைவ நிறுவனங்கள் இருந்ததை வெளிப்படுத்தும் சான்றுகள் கிடைக்கலாம்.
பெருமளவிலான அகழ்வாய்வுகள் அநுராதபுரத்தில் நீண்டகாலமாக நடத்தப்பட்ட காரணத்தினால், இங்குதான் மிகப் பழைய சைவ சமயத் தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றுள் சில பௌத்த நிறுவனங்கள் உள்ள இடங்களில் கிடைத்திருப்பதால், இவற்றுள் சிலவற்றை மஹாயான பௌத்தத் தொடர்புடையவையாகவும் கொள்ள இடமுண்டு. எடுத்துக்காட்டாக, பௌத்த பெரும்பள்ளியாகிய ஜேதவனாராம அமைந்துள்ள இடத்தில் அண்மையில் கிடைத்த அர்த்த நாரீஸ்வரர் சிலையைக் குறிப்பிடலாம். ஆனால் இப்படியான சமயஞ் சார்ந்த தனிப்பட்ட பொருள்களை விடக் கோயில்களின் அழிபாடுகளாகவும் கல்வெட்டுகளாகவும் அநுராதபுரத்தில் நிலவிய சைவ மதம் பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அநுராதபுரத்தில் பல சைவக் கோயில்களின் அழிபாடுகளும் அவற்றுடன் தொடர்புடைய சில தமிழ்க் கல்வெட்டுகளும் சிவலிங்கங்களும் வெளிப்படுத்தப்பட்டன. இவை சோழர் காலத்துக்கு முற்பட்ட கலைப் பாணியில் அமைந்துள்ளன. இவை இலங்கையில் காணப்படும் மிகப் பழைய சைவ அழிபாடுகளுள் அடங்கும். இங்குள்ள கோயில்கள் சிறியவையாகவும் முக்கிய பாகங்களாகிய கர்ப்பக் கிருகம், அந்தராளம் மற்றும் அர்த்த மண்டபம் ஆகியவற்றை மட்டும் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.
இந்த அழிபாடுகளிடையே தமிழ்க் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. இவை சைவக் கோயில்களில் நந்தா விளக்கு எரிப்பதற்கு வழங்கப்பட்ட பணம் பற்றிய தகவல்களைத் தருகின்றன. இவற்றைக் கொண்டு இலங்கையில் அக்காலத்தில் இருந்த சைவக் கோயில்கள் தமிழ்நாட்டுக் கோயில்களைப் போன்று பராமரிக்கப்பட்டதை அறியலாம்.
இக் காலப்பகுதியில் மாதோட்டத்திலிருந்த திருக்கேதீஸ்வரம் ஒரு புனிதத்தலமாக நாட்டில் பலராலும் கருதப்பட்டது. சைவர்கள் மட்டுமல்லாது சிங்கள பெளத்தர்களும் அவ்வாறு கருதினர். இது பத்தாம் நூற்றாண்டுச் சிங்களக் கல்வெட்டுகளிலிருந்து தெரிய வருகின்றது. புனித நதி என இந்துக்களால் கருதப்படும் கங்கை நதியின் கரையில் உயிர்க் கொலை புரிவது பெரும் பாதகமாகக் கருதப்பட்டதால், இடைக் காலக் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட தானங்களைப் பாதுகாப்பதற்கு அல்லது விதிகள் மீறப்படாது இருப்பதற்குக் கல்வெட்டின் இறுதியில் கங்கை நதி சார்ந்த ஓர் ஒம்படைக்கிளவி எனப்பட்ட காப்பு வசனம் சேர்க்கப்பட்டது. அது பொதுவாக, “தெற்குப் பிழைப்பார் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தைப் பெறுவார்களாக அல்லது கங்கைக் கரையில் பிராமணரைக் கொன்ற பாவத்தைப் பெறுவார்களாக” என்று பொருள்பட அமைந்தது. அதேபோல, இலங்கையில் சிங்களக் கல்வெட்டுகளில் “மாதோட்டத்தில் பசுக் கொலை புரிந்த பாவத்தைப் பெறுவார்களாக” என்று பொருள்படும் வாசகம் காணப்படுகின்றது. இது மாதோட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட புனித நிலையைக் காட்டுகின்றது. இதற்குக் காரணம் அங்கு இருந்த திருக்கேதீஸ்வரர் கோயில் என்பதில் ஐயமில்லை.
திருகோணமலையிலும் மாதோட்டத்திலும் இருந்த பிரசித்தி பெற்ற ஈசுவரர் கோயில்களை விட மேலும் பல கோயில்கள் வட பகுதியில் இருந்திருக்கும் எனலாம். திருகோணமலைக்கு வடக்கே நிலாவெளியில் பத்தாம் நூற்றாண்டளவில் பொறிக்கப்பட்ட ஒரு தமிழ்க் கல்வெட்டில் ‘மற்சியேஸ்வரம்’ என்ற ஒரு கோயில் குறிப்பிடப்படுகின்றது. இது கோணேஸ்வரத்துக்குரிய இன்னொரு பெயராக இருந்தாலும், அதிலிருந்து வேறுபடும் ஒரு கோயிலாகவும் இருந்திருக்கலாம். கந்தளாயிலும் பதவியாவிலும் சோழராட்சியின் போது கல்வெட்டுகள் மூலம் தெரிய வரும் கோயில்களுள் சில, பத்தாம் நூற்றாண்டு முன்னரே நிறுவப்பட்டவையாக இருக்கலாம்.
இவ்வாறாக, சைவ சமயம் தொடர்பாகக் கிடைக்கும் சான்றுகள் நாயன்மாருடைய பக்தி இயக்கம் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் பரவிய சைவ மதச் செல்வாக்கை வெளிப்படுத்தும் சான்றுகள் எனலாம். இவற்றை விடக் கூடுதலான சான்றுகள் மேலும் அகழ்வாய்வுகள் நடத்தப்படும்போது வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.
வணிக கணங்களின் செல்வாக்கு
வடக்கிலும் கிழக்கிலும் இக் இக் காலப்பகுதியில் தமிழர் குடியிருப்புகள் மேலும் வலுப்பெற்றமைக்கு இன்னொரு முக்கிய காரணி வணிக கணங்களின் வளர்ச்சியும் செல்வாக்குமாகும். வேறு காரணிகளை விட வர்த்தகமே இலங்கையின் இப்பாகத்துக்கும் தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிக்கும் இடையில் நெருங்கிய உறவு வளர்வதற்கும், பொருளியல், அரசியல் மற்றும் பண்பாட்டுச் செல்வாக்கு இரண்டு இடங்களுக்கும் இடையில் பரவுவதற்கும் உந்து சக்தியாக அமைந்தது. தென்னிந்தியாவிலிருந்து வலிமை வாய்ந்த வணிக கணங்களின் வருகை பல வணிக நகரங்கள் தோன்றுவதற்கும் அவ்விடங்கள் சைவ வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட மையங்களாக மாறுவதற்கும் உதவியது. அத்துடன் சிற்பிகள், பிற கலைஞர்கள் மற்றும் பல வகைத் தொழில் புரிவோர் தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறுவதற்கும் வர்த்தக வளர்ச்சி வழிவகுத்தது.
பல்லவப் பேரரசின் எழுச்சியுடன் வணிக கணங்கள் தமிழ்நாட்டுத் துறைகளிலிருந்து இலங்கைக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் சென்று பெருமளவு வர்த்தக முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்கள் சென்ற இடங்களில் ஆட்சியாளரும் உயர்குழாத்தினரும் அவர்களுடைய செல்வாக்கிற்கு உட்பட்டனர். வணிக கணங்கனின் உதவியுடன் பௌத்த நிறுவனங்களும் சைவ, வைணவ நிறுவனங்களும் அமைக்கப்பட்டன. இவற்றில் செயலாற்றப் பிராமணர்களும் பௌத்த சங்கத்தாரும் வணிகர்களால் கூட்டிச் செல்லப்பட்டனர். சிற்பங்களையும் கட்டிடங்களையும் அமைக்கச் சிற்பிகளும் கூட்டிச் செல்லப்பட்டனர். இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து கடல் கடந்து சென்றோருடைய முயற்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இன்று இலங்கை, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் பல்லவ பாணியில் அமைக்கப்பட்ட சிற்பங்கள், மற்றும் பல்லவ கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருதக் கல்வெட்டுகள், பல்லவர் காலத் தமிழில் எழுதப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் ஆகியவை கிடைத்துள்ளன.
வணிக கணங்களின் செல்வாக்குத் தமிழ்நாட்டிலிருந்து சிற்பிகள், பிராமணர் மற்றும் நீர்ப்பாசன அமைப்புத் தொழிலாளர் ஆகியோரும் பிற தொழில்சார் குழுக்களும் இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் வந்து குடியிருப்புகளை அமைக்க உதவியது. பாதுகாப்பு வழங்கும் போராளிக் குழுக்களும் வணிக கணங்களால் கொண்டு வரப்பட்டன எனலாம்.
ஆறாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் பல்லவர் பாணியில் சிற்பிகள் உருவாக்கிய பல்வகைச் சிற்பங்கள் அநுராதபுரத்துக்கு அருகாமையிலுள்ள இசுருமுனிய என்ற இடத்திலும், திரியாய், குச்சவெளி மற்றும் குருக்கள் மடம் ஆகிய இடங்களிலும் காணப்பட்டமை முன்னர் குறிப்பிடப்பட்டது. பல்லவர் பாணியில் நாலந்தா என்ற இடத்தில் மஹாயானக் கோயில் ஒன்று உள்ளது. அதேபோலப் பல்லவர் பாணியில் தெலிநுவர என்ற தென் முனையில் இன்னொரு கோயில் உள்ளது. இவை போன்ற சிற்பங்களையும், கட்டிடங்களையும் அமைப்பதற்குத் தமிழ்நாட்டுச் சிற்பிகள் வந்திருப்பர் என்பதில் ஐயமில்லை. இவர்கள் பல்லவ கிரந்த எழுத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகளைப் பொறிப்பதற்கும் உதவியிருப்பர்.
இக் காலப்பகுதியில் தமிழ்நாட்டுக்கும் இலங்கையின் வடகிழக்குப் பகுதிக்கும் இடையில் இருந்த நெருங்கிய உறவினை விளங்கிக் கொள்ளத் தென்கிழக்காசியப் பின்னணியை நோக்க வேண்டும். வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளில் தென்னிந்திய வணிக கணங்கள் பெருமளவு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டபோது கூடவே பல்லவப் பேரரசின் பண்பாடும் பரவியது. அரசியலில் காணப்பட்ட செல்வாக்கை வெளிப்படுத்தும் ஒரு கூறாக, மன்னர் பெயர்கள் பல அரசுகளில் பல்லவ மன்னர் பெயர்கள் போன்று ‘வர்மன்’ என்ற இறுதிச் சொல்லைக் கொண்டிருந்தன. தென்கிழக்காசிய அரசுகளில் இந்திரவர்மன், ஜயவர்மன், ஈசானவர்மன், யஸோவர்மன், பூர்ணவர்மன் போன்ற பெயர்கள் ஐந்தாம் நூற்றாண்டில் பரவலாக வழக்கில் இருந்தன. சமயத்தைப் பொறுத்தமட்டில், சைவ வைணவ மதங்களுடன் பௌத்த மதமும் பெருமளவு செல்வாக்கைப் பெற்றிருந்தன. இலங்கையில் மணிக்கிராமம் மற்றும் தாங்குநாடு போன்ற வணிக கணங்கள் இச் செல்வாக்கைப் பரப்புவதில் முக்கிய பங்கு கொண்டிருந்தன எனலாம்.
தென்கிழக்காசிய அரசுகளில் ஆட்சியாளராக இருந்தோர் மஹாயான பௌத்தத்தையும் சைவ, வைணவ மதங்களையும் ஆதரித்துப் பல்லவப் பேரரசிலிருந்து பரவிய செல்வாக்கு வளர்வதற்கு உதவினர். ஆனால் இலங்கையில் நிலைமை வேறாகக் காணப்பட்டது. அநுராதபுரத்தின் ஆட்சியாளர் தேரவாத பௌத்தத்தை ஆதரிக்கும் கடமையைப் பெற்றிருந்தனர். இதனால் மஹாயான பௌத்தத்தையும் சைவ, வைணவ மதத்தையும் அவர்கள் ஆதரிக்க முன்வரவில்லை. அப்படியிருந்தும் வடகிழக்கில் மஹாயான நிறுவனங்கள் அமைக்கப்பட்டுச் செழிப்புற்றிருந்தன எனின் அதற்குக் காரணம் வணிக கணங்களும் அவ்விடங்களில் வாழ்ந்த உயர் குழாத்தினரும் என்று ஊகிக்க இடமூண்டு, வடகிழக்கில் அநுராதபுரத்தின் ஆதிக்கத்தைக் காட்டிலும் பல்லவப் பேரரசின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது என்று கொள்ள இடமுண்டு. மஹாயான நிறுவனங்களுக்கும் சைவ, வைணவ நிறுவனங்களுக்கும் ஆதரவு வழங்கிய இக்குழுக்கள், வடகிழக்கில் இக்காலத்தில் நீர்ப்பாசன வசதிகள் அமைப்பதற்கும் காரணமாயிருந்திருப்பர்.
நீர்ப்பாசனம்
வடகிழக்குக் கரையோரம், சிறப்பாகக் கொக்கிளாய் தொடங்கித் திருகோணமலை வரையுள்ள பிரதேசம், ஏழாம் நூற்றாண்டு தொட்டு வணிக கணங்களின் செயல்கள் கூடுதலாக இடம் பெற்ற பிரதேசமாகத் தோன்றுகிறது. இக் காலத்திலே அமைக்கப்பட்ட இரு பெருங் குளங்கள் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. ஆனால் இவற்றை அநுராதபுரத்து ஆட்சியாளர் கட்டியதாகப் பாளி வரலாற்றேட்டில் குறிப்பு எதுவும் இல்லை. இக்குளங்கள் இன்று பதவியாக்குளம் எனவும் வாஹல்கடக் குளம் எனவும் பெயர் பெற்றுள்ளன. இப் பெரிய குளங்களை அமைப்பதற்கு வணிக கணங்கள் உதவியிருக்க முடியும்.
பதவியாக்குளம் இப்பிரதேசத்திலுள்ள பெரிய குளங்களுள் ஒன்று. ஏறத்தாழ 10,000 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்குளம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் முதலாம் பராக்கிரமபாகு பெருப்பித்துக் புதுக்கியமைத்த குளங்களுள் ஒன்றாகும். இதற்கு அருகேயிருந்த பழைய குடியிருப்புப் பகுதியில் பல சைவக் கோயில்களின் அழிபாடுகள் தமிழ்க் கல்வெட்டுடன் காணப்படுகின்றன. இக் கோயில்களுள் ஒன்று சோழர் ஆட்சியின் போது இரவிகுலமாணிக்க ஈஸ்வரம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. இது பொலன்னறுவையில் காணப்படும் சோழர் காலச் சைவக் கோயில்களுக்கு முன்னர் கட்டப்பட்டது. இக் கோயிலை ஆதரித்தோருள் ஒருவராக நானாதேசி வணிக கணத்தைச் சேர்ந்த ஒருவர் இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளார். இவ்விடத்தில் வீரக்கொடியர் போன்ற வணிக கணங்களுடன் இணைந்த குழுக்களும் பிற வணிக கணங்களும் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை செழிப்புடன் விளங்கின.
பதவியா மற்றும் வாஹல்கடக் குளங்கள் வணிக கணங்களின் உதவியுடன் உள்ளூர்த் தலைவர்களால் அமைக்கப்பட்டன என்றே தோன்றுகிறது. இலங்கையில் அமைக்கப்பட்ட குளங்கள் அனைத்தும் அநுராதபுரத்து மன்னர்களால் மட்டுமே அமைக்கப்பட்டன என்று கூற முடியாது. அந்த அளவுக்கு அம் மன்னர்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை நாடு முழுவதிலும் ஏற்படுத்தியிருந்தனர் என்று கூறுவதற்கில்லை. சிறப்பாக, ஆறாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் அடிக்கடி அரசியற் குழப்ப நிலை காணப்பட்ட போதிலும், பெருங் குளங்கள் பல அமைக்கப்பட்டன. அநுராதபுரத்து மன்னர்கள் அல்லாது செல்வம் பெற்ற வணிக கணத்தவரும் வேறு உயர் குழாத்தினரும் இவற்றை அமைப்பதற்குக் காரணமாக இருந்திருப்பர் எனலாம். முன்னர் குறிப்பிட்டது போல, பிராமணக் குடியிருப்புகளாகிய பிரமதேயங்களும் குளங்கள் மற்றும் கால்வாய்கள் போன்ற நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றை அமைக்கும் கடமைகளில் ஈடுபட்டன. அவற்றுக்கு வணிக கணங்களின் உதவி கிடைத்திருக்கும்.
வணிக கணங்கள் தீர்ப்பாசன வசதிகள் தொடர்பாகவும் செயல்களில் ஈடுபட்டனர் என்பதற்கு ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டுச் சான்று கிடைக்கின்றது. தாய்லாந்தில் மணிக்கிராமம் என்ற வணிக கணம் அவனிநாரணம் என்ற குளம் தொடர்பாகச் சில பொறுப்புகளைப் பெற்றிருந்தது. தமிழ்நாட்டில் முனசந்தல் என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு அஞ்ஞூற்றுவப் பேரேரி என்ற ஒரு குளத்தைக் குறிப்பிடுகின்றது. அஞ்ஞூற்றுவர் என்ற வணிக கணம் இதனை அமைத்திருக்கக் கூடும். இலங்கையில் இவ்வாறு நேரடியாக வணிக கணங்களை நீர்ப்பாசன வசதிகளுடன் தொடர்புபடுத்தும் சான்று கிடைக்காவிட்டாலும், வடகிழக்கில் பல்லவர் செல்வாக்கு நீர்ப்பானம் தொடர்பாகவும் இருந்தமைக்குச் சான்று காணப்படுகின்றது. இதற்கு வணிக கணங்களின் செயல்கள் காரணமாக இருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு.
வடகிழக்குப் பகுதியிலுள்ள சில குளங்களின் பெயர்கள் இது தொடர்பாகக் கவனிக்கத்தக்கவை. பொதுவாக, பிராமிக் கல்வெட்டுகளின் காலத்திலிருந்து வபி என்ற பெயர் கல்வெட்டுகளிலும் வாபி என்ற சொல் பாளி வரலாற்றேடுகளிலும் குளங்களைக் குறிக்கப் பயன்பட்டன. இச் சொற்களின் வழியாகப் பிற்பட்ட சிங்களத்தில் வவ என்ற சொல் பெறப்பட்டது. இவற்றுக்கும் தமிழில் வாவி என வரும் சொல்லுக்கும் உறவு உண்டு. தமிழ்நாட்டில் சங்க நூல்களில் குளம் என்ற சொல் பரவலாக இடம் பெறுவதைக் காணலாம். ஆனால் பிற்பட்ட காலத்தில், குறிப்பாகப் பல்லவர் ஆட்சியின் போது, ஏரி மற்றும் தடாகம் ஆகிய சொற்கள் குளங்களின் பெயர்களில் முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றன. பல்லவர் செல்வாக்குப் பரவிய தென்கிழக்காசிய அரசுகளிலும், இப்படியான பெயர்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மகேந்திர தடாகம், வைர மேக தடாகம் மற்றும் பரமேஸ்வர தடாகம் ஆகிய குளப் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அவ்வாறே தென்கிழக்காசிய அரசுகளில் இதே காலமளவில் சங்கர தடாகம், யஸோதர தடாகம் மற்றும் இந்திர தடாகம் ஆகிய குளப் பெயர்கள் இருந்தன. இவ்வாறே இலங்கையிலும் வடகிழக்கில் அமைக்கப்பட்ட சில குளங்கள் தடாகம் என்ற பெயரைப் பெற்றன. கந்தளாயில் அமைக்கப்பட்ட பெருங்குளம் ‘கங்கா தடாகம்’ என்ற பெயரைப் பெற்றிருந்தது. இதுவே பின்னர் கந்தளாய் எனத் திரிபடைந்திருந்தது. இதுபோன்று இன்னொரு குளம் ‘கிரிதடாகம்’ எனப் பெயர் பெற்றுப் பின்னர் கிரித்தளே என்று திரிபடைந்தது. தடாகம் என்ற ஈற்றுப் பெயர் இலங்கையின் வேறு பாகங்களில் அமைக்கப்பட்ட குளங்களுக்கு இல்லை. வடகிழக்கில் அமைக்கப்பட்ட இன்னொரு குளம் இன்று வாஹல்கடக் குளம் என்று அழைக்கப்பட்டாலும், இதற்குக் காட்டன் ஏரி என்ற பெயர் தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் காணப்படுகின்றது. வடகிழக்கில் உள்ள இன்னொரு குளம் இன்றும் மின்னேரி என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதில் வரும் ஏரி, குளத்தைக் குறிக்கும் சொல்லா என்பது ஆய்வுக்குரியது. தடாகம் மற்றும் எரி என்ற விகுதிப் பெயர் இலங்கையின் வேறு பாகங்களில் உள்ள குளங்களுக்கு இல்லையாகையால், வடகிழக்கில் பரவிய பல்லவர் செல்வாக்கை இவை பிரதிபலிக்கின்றன என்றும் இக் காலத்தில் இவற்றை அமைப்பதில் பல்லவ அரசிலிருந்து வந்த வணிக கணங்கள் பங்கு கொண்டிருந்தன என்றும் ஊகிக்க இடமுண்டு.
இவ்வாறு வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டிலிருந்து பரவிய செல்வாக்கு இப்பகுதிகளில் தமிழர் வலுவினைக் கூட்டி, ஏனைய இனக் குழுக்களை விட மேலோங்கிய குழுவாக அப்பிரதேசத்தில் தமிழ் இனக் குழு எழுச்சி பெற உதவியது. ஆனால் இலங்கையின் மத்திய பகுதியிலும் தென்பகுதியிலும் ஹெள இனக்குழு ஏனையவற்றை உள்ளடக்கி ஆதிக்கம் பெற்ற நிலையில் இருந்தது. அநுராதபுரத்தில் தனது ஆதிக்க மையத்தை அமைத்திருந்த ஹௌ இனக் குழு வடக்கிலும் தன் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்யக் கூடிய நிலையில் இருந்தது எனலாம். ஆதி வரலாற்றுக் காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து வந்த தாக்கத்தால் வலுவிழக்காது எழுச்சி பெற்ற ஹௌ இனக்குழு, இலங்கை முழுவதிலும் ஆதிக்கம் பெறுமோ என்பது நிச்சயிக்கப்படாத நிலை இக்காலத்தில் காணப்பட்டது. இதனை இறுதியில் நிச்சயிக்கும் சக்திகள் இக்காலத்தில் துரிதமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டில் பேரரசுகளின் எழுச்சியும் சைவ இயக்கத்தின் வெற்றியும் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர் ஆதிக்கம் பெறுவதற்கும் ஹௌ இனக் குழுவின் ஆதிக்கப் பரம்பலைத் தடுத்து நிறுத்துவதற்கும் உதவின. இதனால் பத்தாம் நூற்றாண்டளவில் இலங்கையின் வட பாகத்தில் தமிழ் இனக் குழுவும் நடுப்பாகத்திலும் தென் பாகத்திலும் ஹௌ இனக் குழுவும் ஆதிக்கம் பெறுவது பெருமளவு நிச்சயமாகிறது. சோழர் ஆட்சியுடன் பதினோராம் நூற்றாண்டில் இந்நிலை உறுதி பெற்றது.