இலங்கையின் பொருளாதாரப் பேரிடரில் மலையகப் பெண்களின் நிலை
Arts
16 நிமிட வாசிப்பு

இலங்கையின் பொருளாதாரப் பேரிடரில் மலையகப் பெண்களின் நிலை

June 7, 2024 | Ezhuna
மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதற்கேற்ப, விம்பம் அமைப்பு எழுநாவின் அனுசரணையுடன் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தியது. இப் போட்டியில் வெற்றி பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் 'மலையகம் 200' எனும் தலைப்பில் தொடராக எழுநாவில் வெளியாகின்றன.

கடந்த காலங்களில் நிலவிய உள்நாட்டுப் போர் இலங்கையை பொருளாதார அடிப்படையிலும் பின்தங்கச் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுக் குண்டு வெடிப்பு இலங்கைக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதித்தது. மீண்டும், கொரோனா கொள்ளைநோய் நாட்டை மேலும் சீர்குலைத்தது. ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரத் திட்டங்களினாலும் இலங்கை கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. இப்போது அயல் நாடுகளிடம் கையேந்தும் நிலையில், நாடு ஏராளமான கடனில் மூழ்கியிருக்கிறது. உக்ரேன் – இரஷ்யப் போர் முழு உலகினதும் பொருளாதாரத்தைப் பாதித்தது போல் இலங்கையையும் பாதித்தது. சகல பக்கமும் நெருக்கப்பட்ட சூழலில் மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடவும், அரசுக்கு எதிராகச் செயற்படவும் ஆரம்பித்தனர். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் சாதாரண மக்களுடைய வாழ்வைச் சீர்குலைத்தது. இவற்றின் தாக்கம் மலையகத்தில் மிக மோசமாக இருந்தது.

economic crisis

1972 ஆம் ஆண்டு சிறீமா அரசாங்கத்தால் உள்ளூர் உற்பத்தியினால் தன்னிறைவு எனும் தொனிப்பொருளில் ஒரு பொருளாதாரத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அது தோல்வியடைந்த ஒன்றாகவே அமைந்தது. ஒரு இறாத்தல் பாணுக்காக வரிசையில் நின்றனர். சோறு சமைக்க முடியாத அரிசியை, ஒரு கொத்து அரிசி என்ற அடிப்படையில், மலையக மக்களுக்கு வழங்கினர். மக்கள் அரைவயிற்றுக் கஞ்சியே குடித்தனர். பலர் கஞ்சியும் இன்றி வெறும் தண்ணீரைக் குடித்துப் பிழைத்தனர். என்னுடைய தோட்டத்தில் வறுமையில் மிகவும் உழன்ற ஒரு குடும்பம் இரவு உணவாகக் கரும்பைச் சாப்பிட்டது. அதே போன்றதொரு நிலையே தற்போது இந் நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.

மலையகப் பெண்களின் வாழ்வியல் சூழல்

இலங்கையின் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மிக நீண்ட காலமாக ஊதியக்குறைவு, பணிச்சுமை, போதுமான உட்கட்டுமான வசதிகள் இன்மை, தொழில் பாதுகாப்பு இன்மை, காட்டு விலங்குகள் – உயிரினங்களின் தாக்குதல், கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவு, குடியிருப்புப் பாதைகள் சேதமடைதல் முதலான அசௌகரியமான வாழ்க்கைச் சூழலை எதிர்கொள்கிறார்கள். இவற்றிற்கு நடுவில், தற்போதைய பொருளாதாரப் பேரிடர், இம் மக்களுக்கு மேலுமொரு சுமையாக அமைந்திருக்கிறது.

இலங்கையின் மத்திய மலைநாடு இரசிக்கத்தக்க, இயற்கைச் செழிப்புமிக்கதொரு இடம். ஆனால் இங்கே வாழும் பத்து இலட்சம் மக்களின் நிலை எப்போதும் அவலம் நிறைந்ததாகவே இருக்கின்றது. பலர் தினசரிக் கூலிகளாகப் பணியாற்றுகிறார்கள். அவர்களால் சொந்தமாக ஒரு சிறிய வீட்டையேனும் கட்டுவது இயலாத காரியமாக ஆகியிருக்கின்றது. பெண்கள் கொழுந்து பறித்தல், இறப்பர் தோட்டங்களில் பால் வெட்டுதல் ஆகிய வேலைகளைச் செய்து வந்தனர். இவ் வேலைகளுக்கு 30 நாட்களும்  வேலை கிடைத்தது. ஆனால் தற்போது வெறும் 20 – 23 நாட்களே வேலை கிடைக்கின்றது. இப் பொருளாதாரச் சிக்கலில், 20 நாட்கள் வேலையும், இருபது ஆயிரம் ரூபா சம்பளமும் நாட்கூலியாகக் கிடைப்பது அம்மக்களுக்கு எம் முன்னேற்றத்தையும் தரப்போவதில்லை.

மலையகத்தில் சுமார் இரண்டு இலட்சம் பேர் தேயிலைத் தோட்டங்களிலும், இறப்பர் தோட்டங்களிலும் வேலை செய்கின்றனர். இப் பெருந்தோட்டத்துறை மூலமாக சுமார் 1.5 மில்லியன் அந்நியச் செலாவணி நாட்டுக்கு கிடைக்கிறது. தேயிலை, இறப்பர் தொழிற்துறையில் அதிகளவில் பெண் தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல ஆண்டுகள் நடாத்திய போராட்டங்களின் வெற்றியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 1000/- சம்பளமாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட பின்னரும், இன்றுவரை அது அவர்களுக்கு  வழங்கப்படவில்லை.

tea plantation

மலையகப் பெண்களின் நாளாந்த வாழ்க்கையில் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படும் நிலையில், தற்போதைய பொருளாதார இழப்பினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ள இவர்கள், தேயிலைத் தோட்டங்களின் ஓய்வற்ற நீண்ட வேலை நேரத்தினாலும், கடினமான மலைகளில் ஏறி மோசமான பாதைகளில் பயணம் செய்தும் பல்வேறு சிரமங்களை அடைந்து குறைந்த கூலிக்கு வேலை செய்கின்றனர். இது மிகப்பெரும் வாழ்க்கைச் சவாலாகவே உள்ளது. இறப்பர் தோட்டத்தில் பெண்கள் அதிகாலை 3 மணிக்கு பால் வெட்டச் செல்கிறார்கள். பெண்கள் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறிக்க, எட்டு மணித்தியாலத்துக்கும் மேல் செலவிடுகிறார்கள். மலம் – சலம் கழிக்க வசதி இன்றி மாதவிடாய் நாட்களிலும் வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுவதால், பெரும்பாலான பெண்கள் உடல் – உள ரீதியாக வேதனையை அனுபவிக்கிறார்கள். கடும் வலியையும் வேதனையையும் அனுபவித்துக்கொண்டு கடும் மழை நாட்களிலும் குளிரிலும் பெரிதும் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கு போசாக்கான உணவு கிடைப்பதில்லை. மலையகத்தின் பிரசித்தமான மக்களின் உணவு ரொட்டிதான். ரொட்டி உண்பதால் மாவுச்சத்து அதிகமாக கிடைப்பதுடன் நீண்ட நேரம் வேலைசெய்யும் போது பசியும் எடுப்பதில்லை. என்னுடைய வீட்டில் வாரத்தில் ஒரு தடவைதான் என்னுடைய அம்மாயி சோறு சமைப்பார். குளிர்காலத்தில் சோறு சமைப்பது கடினம் என்பதனாலும் அவர்கள் அதிகமாக சோற்றைத் தவிர்த்து மாப்பொருளான கோதுமையை அதிகமாக எடுத்துக் கொள்கின்றார்கள். ஆனால் ரொட்டியில் உடலுக்குத் தேவையான ஏனைய ஊட்டச்சத்துகள் இருப்பதில்லை.

மலையகப் பொருளாதாரத்தில் மதுப்பாவனை

இலங்கையில் ஏனைய பிரதேசங்களைவிட மலையகத்தில் அதிகமான மதுபானக் கடைகள் உள்ளன. அட்டனிலிருந்து என்னுடைய தோட்டத்துக்கு பஸ் எடுக்கும்போது, அட்டன் நகரிலேயே 5 கடைகளைப் பார்க்க முடியும். டிக்கோயாவில் 2 கடைகள் உள்ளன. அதைக் கடந்து புளியாவத்தையில் ஒரு மதுபானக் கடையையும், புளியாவத்தைக்கும் விலாங்கிப்பனைக்கும் இடையில் இன்னுமொரு மதுபானக் கடையையும் பார்க்க முடியும்.

இவ் மதுபானக் கடைகளைச் சுற்றியுள்ள தோட்டத்து மக்கள் இங்கு மது அருந்த வருகிறார்கள். முன்னர் சாஞ்சிமலையிலிருந்து 200/- ரூபாய் கொடுத்து முச்சக்கரவண்டியில் சென்று குடித்தவர்கள், தற்போது எரிபொருள் தட்டுப்பாட்டால், ஊரிலிருந்து கிட்டத்தட்ட 5 கிலோமீற்றர் தொலைவு நடந்தே சென்று குடித்துவிட்டு, நடந்தே வீடு திரும்புகிறார்கள். கடும் மழை, குளிர், கடுமையான வேலைப்பளு, வேலைச் சூழல், குடும்பச்சுமை உட்பட்ட பல துயரங்களை மறப்பதற்குக் குடிப்பதாகக் கூறுகிறார்கள்.

மிகவும் கஷ்டப்பட்டு கடின உழைப்பில் உழைக்கும் பணத்தை பெரும்பாலும் மதுபானக் கடைகளே உறிஞ்சுகின்றன. சில மதுபானக்கடைகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு கடனுக்கும் மதுபானம் வழங்குகிறார்கள். சம்பளம் போட்டதும், ஆண்கள் அப்படியே மதுபானக் கடைக்குப் போய் கடன் பணத்தை உண்டியலில் போட்டுவிட்டு வருகிறார்கள். மதுபானக் கடையில் கடனை அடைத்துவிட்டு மேலும் குடித்துவிட்டு வருகிறார்கள். பெண்களின் மிகக்குறைந்த கூலியினால் வறுமையில் தள்ளப்பட்டுள்ள குடும்பங்கள், தொடர் கடனாலும் உணவுப் பற்றாக்குறையினாலும் மன அழுத்தங்களினாலும் பாதிக்கப்படுகின்றன. பிள்ளைகளின் கல்வியும் சீர்குலைகிறது. 

ஆண்கள் மதுபானத்துக்கு அடிமைப்படும்போது பெண்களே குடும்பத்தின் சுமையைச் சுமக்கும் துயர நிலை ஏற்படுகிறது. இதனால் குடும்ப வன்முறைகள் ஏற்படுவதோடு குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. இதனால் மீண்டும், பிள்ளைகளின் பசிபோக்க கூடையைச் சுமந்து, மோசமான பாதையூடாகத் தேயிலைத் தோட்டங்களுக்கும் இறப்பர் தோட்டங்களுக்கும் நடக்கிறார்கள். தொடர்ச்சியான வறுமையினால் வீட்டிலுள்ள பிள்ளைகளும் தம்முடைய கல்வியைத் தொடர விருப்பம் அற்று, பணத்தைத் தேடி கொழும்பு மற்றும் பிற வளர்ச்சியடைந்த நகரங்களைத் தேடிச் செல்கிறார்கள்.

கடந்த வருடம் இவ்வாறு குடும்ப வறுமை நிமித்தம் மலையகச் சிறுமியொருத்தி கொழும்பிலுள்ள அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் வேலைக்குச் சென்ற நிலையில் தீவைத்து எரிக்கப்பட்டமை இங்கே குறிப்பிட வேண்டிய விடயமாகும். இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் உண்டு. கொழும்பு – வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி பகுதிகளில் உள்ள உணவகங்களில் குறைந்த கூலியில் வேலை செய்யும் வேலையாட்கள் மலையகத்தில் இருந்தே செல்கின்றார்கள்.

200 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து பெருந்தோட்டங்களில் வேலை செய்ய அழைத்துவரப்பட்ட தொழிலாளர்கள் கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார மட்டத்தில் மிகவும் பின்தள்ளப்பட்டே காணப்படுகின்றனர். 21 ஆம் நூற்றாண்டிலும், பெண்ணுரிமை தொடர்பான நியதிகளில் இருந்து மலையகப் பெண்கள் புறந்தள்ளப்பட்டே காணப்படுகின்றனர். இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் பெருந்தோட்டத்துறையின் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் மலையகப் பெண்களை ஏனைய சமூகப் பெண்களோடு ஒப்பிடும்போது இவர்களது முன்னேற்றம் திருப்திகரமானதாக இல்லை. வளர்ந்து வரும் நாடுகளில், ஆண்களை விட பெண்கள், குறைந்த வேதனத்தைப் பெறுகின்ற தொழில்களிலேயே ஈடுபடுகின்றனர். நலிந்தும் உரிமையற்றும் வாழ்கின்ற மலையகத் தமிழ்ப் பெண்கள் உலகமயமாக்குதலின் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

women

ஆணாதிக்கச் சூழலில், கங்காணி – துரைமார் – கணக்குப்பிள்ளை ஆகியோரின் அதிகாரத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட பெருந்தோட்டத்துறைச் சமூகம், பெண்களை தொழில் செய்யும் ஓர் இயந்திரப் பொருளாகவே உருவாக்கியுள்ளது. அதிகாலை 5 மணிக்கு எழுந்து, உணவு தயாரித்து, பிள்ளைகளை பாடசாலைக்கு ஆயத்தப்படுத்தி, குழந்தையை பிள்ளை மடுவத்தில் கையளித்துவிட்டு, 7.30 மணிக்குத் தேயிலை மலைக்கு ஏறி, 11 மணி வரை தேயிலையைப் பறித்து, அதன் பின்னர் சிறு தேநீர் இடைவேளை பெற்று, மதியம் வீடு திரும்பி, பிள்ளை மடுவத்தில் குழந்தையை எடுத்து உணவு ஊட்டி, வீட்டாருக்கும் உணவு தந்து, சரியாகச் சாப்பிடாமல் மீண்டும் பிள்ளைமடுவத்தில் குழந்தையைக் கையளித்து விட்டு, பின்னர் 2 மணி முதல் 5 மணிவரை தேயிலை மலையில் வேலை செய்கிறார்கள் மலையகப் பெண்கள். வேலைக்குப் பின்னால் ஓய்வு, கொண்டாட்டம், பொழுதுபோக்கு என எதுவுமேயில்லை. பெண்களும் அதை உணர்வதும் இல்லை.

2020 இல் 867.70 ரூபாய் கொண்ட ஒரு கிலோ கிராம் தேயிலை விலை 2021 ஆம் ஆண்டு இறுதியில் 926.76 ரூபாயாக அதிகரித்தது என 24.822 மில்லியன் ரூபாய் வருமானம் பெறும் இலங்கை தேயிலைச் சபையின் தலைவர் ஜெய முல்லி சொய்சா தெரிவித்திருந்தார். ஆனால் மலையக மக்களின் 1000 ரூபாய் என்ற ஒருநாட்கூலி இன்னமும் எட்டமுடியாத உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. 24.822 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் மலையக மக்களுடைய வாழ்க்கைத்தரம் இதனால் சிறிதும் உயரவில்லை. மலையக மக்களின் உழைப்பை மட்டுமே எடுத்துக்கொள்ளும் இலங்கை அரசும், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக அரசியல் கட்சிகளும் அவர்களை வெறும் வாக்கு வங்கிகளாகவே வைத்திருக்கின்றன. 

தேயிலைத் தோட்டங்கள் சிதைந்து வரும் நிலையில், தற்போது சம்பளமென்பது மாறி பறிக்கும் தேயிலையின் அளவுக்கேற்ப கூலியே வழங்கப்படுகின்றது. போதிய உரமின்மை, பராமரிப்பின்மை ஆகிய பிரச்சினைகளால் தேயிலைக் கொழுந்தையும் போதியளவிற்கு எடுக்க முடிவதில்லை. இந்நிலையில் இத்தொழிலாளர்கள் பறிக்கும் தேயிலையின் அளவும், கிடைக்கும் கூலியும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இலங்கையின் மந்தமடைந்து வரும் பொருளாதாரமும் இம் மக்களைக் கடுமையாகத் தாக்குகின்றது. அதிலும் மலையக பெண்களின் நிலை மிகவும் மோசமான பேரிடரை நோக்கிச் செல்லத் தொடங்கியிருக்கிறது.

ஒரு நாளில், பெண் ஒருவர் 20 கிலோ கிராம் தேயிலை பறிக்க வேண்டும். ஒரு கிலோ தேயிலை 45/- ரூபாயாகும். இந் நிலையில் ஒரு நாளில் 500 – 600 ரூபாய்தான் சம்பளமாகக் கிடைத்து வருகிறது. இச்சம்பளம், இலங்கையின் இக்கட்டான பொருளாதாரச் சூழலில், ஒரு வேளை உணவிற்கும் போதுமானதாக இல்லை. பாண் இறாத்தல் ஒன்று 290/- ரூபாய். கோதுமை கிலோ 400/- ரூபாய். இதனால் பல அங்கத்தவர்கள் கொண்ட குடும்பத்தில் மட்டுமல்ல, சில அங்கத்தவர்கள் கொண்ட குடும்பத்திலும் பசி ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மலையகப் பெண்கள் தொழில் தேடி வெளியேறுதல்

இப் பொருளாதார நெருக்கடி நிலையில் பெருந்தோட்டப் பெண்கள்  தொழில் தேடித் தொலைவிலுள்ள நகரங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் வெளியேற ஆரம்பித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிற்சங்கங்கள், கம்பனிகள் இடையில் கூட்டு ஒப்பந்தம் செய்யப்படும். இவ் ஒப்பந்தத்தில், எத்தனை நாள் வேலை, எப்படி சம்பளம் கொடுப்பது, எத்தனை நாள் விடுமுறை, புதிதாக தேயிலை பறிக்க ஆட்களை எவ்வாறு சேர்ப்பது, சம்பளப் படிகளை எவ்வாறு இணைப்பது என்பன உள்ளடங்கலாக 21 அம்சங்கள் முடிவு செய்யப்படும். ஆனால் இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் இது நடக்கவில்லை. அரசாங்கம் தினக்கூலியை 1000/- ரூபாயாக உயர்த்த  அரசு ஆணை (Gazette) வெளியிட்டாலும், தோட்டக்கம்பனிகள் இவ் உத்தரவுக்குச் செவி சாய்ப்பதாக இல்லை. 

ஆரம்பத்தில் தேயிலைத் தோட்ட வேலையை விடுத்து ஆடைத் தொழிற்சாலைகளில் ஈடுபட்ட மலையகப் பெண்கள், இப்போது ஆடைத்தொழிற்சாலையின் வருமானமும் போதாத காரணத்தினால் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லுகின்றனர். குழந்தைகள், கணவன், பெற்றோர், உற்றாரை விட்டுவிட்டு வறுமையின் கைவிலங்கை உடைக்கும் நோக்கில் தூரதேசம் செல்கின்றனர். அங்கே செல்லும் பெண்கள் எல்லோரும் நல்ல வேலை கிடைத்து, நல்ல சம்பளம் பெற்று உயர் நிலைக்குச் செல்ல முடிவதில்லை. அங்கேயும் அவர்கள் துன்பத்திலேயே அகப்படுகிறார்கள். 

மலையகப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்வதால், வெளிநாட்டு வருவாயில் இலாபமடைவது அரசியல்வாதியும், அதனை அண்டிப் பிழைப்பவர்களுமே. மத்திய கிழக்கைத் தேடிப்பயணிக்கும் அவர்களைத் தடுத்து, உள்ளூரிலே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டங்களை அவர்களால் செய்ய முடியவில்லை. எமக்கு அந்நியச் செலாவணி தேவை, ஆகவே வெளிநாட்டுக்குப் போய் உழைத்து வாருங்கள் எனப் பகிரங்கமாக அழைப்பும் வேண்டுகோளும் விடுகிறார்கள். அங்கே இடம்பெறும் சட்டக்கொலைகள் (சவுதி அரேபியாவில் தலையை வெட்டுதல், கைகால்களைத் துண்டித்தல்), வன்முறைகள், பாலியல் கொடுமைகள் முதலான அத்தனை துன்பத்தினையும் இலங்கை அரசு கண்டும் காணாது இருந்துவருகிறது. இலங்கை அரசு பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்ற வரலாறு இல்லை. பெண்கள் வேலைக்குச் சென்றதும் இங்கே வாழும் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை இடையில் கைவிடுகிறார்கள். ஆண்கள் அவர்கள் அனுப்பும் பணத்தை ஊதாரியாகச் செலவழிக்கிறார்கள். கடைசியில் நீண்ட காலமாக உழைத்த பெண்கள் நாடு திரும்பும் போது, மீண்டும் வறுமை நிலையையே சந்திக்கின்றனர். 

தேயிலை, இறப்பர் என்பவற்றின் உற்பத்தி, ஏற்றுமதி மூலம் தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டின் செல்வ வளத்திற்கு கணிசமாகப் பங்களித்து வருகின்றனர். கடந்த காலங்களில் அவர்களது கடும் உழைப்பே நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தினர் அடைந்துள்ள வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் ஆதாரமாகவிருந்தது. இன்றுங்கூட, அவர்களது கடுமையான உழைப்பே நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டுச் செலாவணியில் கணிசமான பகுதியை ஈட்டிக்கொடுக்கின்றது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், அண்மைக்காலம் வரை அரசாங்க வரி வருமானத்திற்கும் கூட அவர்களது உழைப்பு பெரும் பங்களித்து வந்தது. ஆனால் இதற்கு மாறாக, பொருளாதார அடிப்படையிலும், கல்வி, சுகாதாரம், சமூக ஏற்புடமை, சமூக-கலாசார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் என்பவற்றிலும் அவர்களது நிலை அவலம் நிறைந்த ஒன்றாகவே இருந்து வருகின்றது. சுகாதாரமான இருப்பிட வசதிகள், கல்வி, சிசு மரண விகிதம், போஷாக்கு போன்ற பல்வேறு சமூக அபிவிருத்திக் குறிகாட்டிகளின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர் இன்றும் மோசமான நிலையிலேயே உள்ளனர்.

protest

ஆய்வுகள், மலையக மக்கள் இந்த நிலையைக் கடந்து வர நீண்ட நாட்களாகும் என்கிறது. இந்தப் பொருளாதாரச் சிக்கலில் மலையகப் பெண்கள், என்ன செய்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். தங்களால் தம் பிள்ளைகளுக்கு மூன்று வேளை முழுமையான உணவைத் தந்துவிட முடியாத அவலநிலையில் உழல்கின்றனர். அரசாங்கத்திடம் கோதுமை மாவுக்கும் இன்னும் பிறதேவைக்கும் அவர்கள் மானியங்களை கோரிக்கையாக வைத்துள்ளார்கள். இந்தப் பொருளாதார இடரிலிருந்து மீள அரசும், அரசுசாரா நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் அவர்களுக்குப் பொருத்தமான அரசியல், பொருளாதார, சமூக நலத் திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும். 

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

5278 பார்வைகள்

About the Author

வி. எஸ்தர்

‘மலையம் 200’ நிகழ்வுகளை முன்னிட்டு, விம்பம் அமைப்பினரால் எழுநாவின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வி. எஸ்தர் அவர்களால் எழுதப்பட்ட ‘இலங்கையின் பொருளாதாரப் பேரிடரில் மலையகப் பெண்களின் நிலை’ எனும் இக் கட்டுரை ஆறுதல் பரிசைப் பெற்றது.