மலையகம் : கடந்து வந்த பாதையும் காலூன்றி நிற்கும் நிலமும்
Arts
13 நிமிட வாசிப்பு

மலையகம் : கடந்து வந்த பாதையும் காலூன்றி நிற்கும் நிலமும் 

August 20, 2024 | Ezhuna

வரலாறு

மலையகம் என்பதன் பொதுவான அர்த்தம் பரந்துபட்டது. மலையகத் தமிழ் சனத்தொகையின் அளவு இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் 5.6 வீதமாக அமைந்துள்ளது. இவர்கள் இலங்கையின் சில மாவட்டங்களில் செறிவாகவும் பல மாவட்டங்களில் பரவலாகவும் வாழ்ந்து வருகின்றனர். மலையக அதிகார சபைச் சட்டமானது (2018, இல. 32), பெருந்தோட்டப் பிராந்தியம் எனப்படும் பகுதியை, இலங்கையின் மத்திய – ஊவா – சப்ரகமுவ – மேல் – தென் – வடமேல் ஆகிய மாகாணங்களை ஊடறுக்கும், பொருளாதாரப் பயிர்ச்செய்கையாக தேயிலை – இறப்பர் – கோப்பி முதலான பயிர்களை நிறுவன ரீதியாக முன்னெடுக்கும் பகுதியாக அடையாளம் செய்கின்றது.

இந்தப் பெருந்தோட்ட பிராந்தியத்தில் வாழும் தோட்டத் தொழில் செய்கின்ற, தோட்டத் தொழில் செய்யாத அனைவரையும் சேர்த்ததாக, பெருந்தோட்டச் சமூகம் ஒரு அடையாளப்படுத்தலைத் தருகிறது. ஒட்டுமொத்த பதினைந்து இலட்சம் மலையகத் தமிழர்களில் சுமார் பத்து இலட்சம் அளவினர், அதாவது பெரும்பாங்கான மூன்றில் இரண்டு பங்கினர், இந்தப் பெருந்தோட்டச் சமூகம் மற்றும் பொருளாதார வலயங்களுக்குள் அடங்கி விடுகின்றனர். இவர்கள் இங்கே லயன் எனும் குடியிருப்பு முறைமைக்குள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களாகவும், கல்வி – சுகாதாரம் – போக்குவரத்து – தபால் – தொலைத் தொடர்பு முதலான சமூக உட்கட்டமைப்பு விடயங்களில் பெருந்தோட்டக் கம்பனிகளின் ஊடாகவும், அரசினால் பகுதி அளவிலும் நிர்வகிக்கப்படுகின்ற ஒரு சமூகமாகவும் உள்ளனர். 

1815 ஆம் ஆண்டு வரை இலங்கை கரையோரப் பிராந்தியத்தில் மாத்திரமே ஆட்சியுரிமை கொண்டிருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம், மலையக மன்னனாக விளங்கிய ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனைத் தோற்கடித்து கண்டியைக் கைப்பற்றியதுடன் ‘சிலோன்’ என்று அழைக்கப்பட்ட இலங்கை ஒட்டு மொத்தமாக ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. அவர்கள் இலங்கையையும் தமது மற்றுமொரு குடியேற்ற நாடாக மாற்றினர். இலங்கை மீது படையெடுக்கவும் அரசைக் கொண்டு நடத்தவும், பிரித்தானிய அரசிற்கு பெருந்தொகையான செலவேற்பட்டிருந்தது. இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்த வர்த்தகப் பொருட்களான கறுவா, யானைத்தந்தம், ஏனைய வாசனைத் திரவியங்கள், இரத்தினக்கல் மூலம் போதியளவு அந்நியச் செலாவணியை அவர்களால் உழைக்க முடியவில்லை. 1823 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் கம்பளை என்ற தோட்டத்தில் 150 ஏக்கர் கோப்பி தோட்டமொன்றை ‘ஹென்றி பேர்ட்’ மற்றும் அவரது சகோதரர் ‘ஜோர்ஜ் பேர்ட்’ ஆகியோர் இணைந்து அப்போது இலங்கையின் ஆளுநராகக் கடமையாற்றிய ‘எட்வர்ட் பாண்ஸ்’ அவர்களின் உதவியுடன் ஆரம்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து சுமார் பத்து வருட காலத்திலேயே ஆயிரக்கணக்கான ஏக்கர்களிலும், அதன் பின் இலட்சக்கணக்கான ஏக்கர்களிலும் கோப்பிச் செய்கை மலைநாட்டுப் பிரதேசத்தில் பெருக ஆரம்பித்தது. இத்தகைய தோட்டங்களில் வேலை செய்ய பெருந்தொகையான கூலியாட்கள் தேவைப்பட்டனர். உள்நாட்டு மக்கள் இதனை விரும்பாத காரணத்தினால், அருகில் உள்ள தமிழ் நாட்டிலிருந்து கூலியாட்களை கூட்டி வருவதென்று முடிவடுக்கப்பட்டது. கண்டியிலே வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டது. 

தலைமன்னாரிலிருந்து கண்டிக்கு வரும் 181 மைல் பாதை இலகுவாக நடந்து வரக் கூடிய பாதை அல்ல. அடர்ந்த காட்டிலும் மலைகளிலும் ஏறியும் பள்ளங்களில் இறங்கியும் நடக்கும் பாதையில் பாதி உயிர் போய்விடும். எஞ்சியிருப்போர் மிருகங்களினால் தாக்குதலுக்கு உள்ளாவார்கள். கொலரா, மலேரியா போன்ற நோய்களும், வேறு வகைக் காய்ச்சல்களும் உயிரைக்காவு கொள்ளும். மேலும் கடும் மழை, வெயில், குளிர், இரத்தம் குடிக்கும் அட்டைகள் என அவர்கள் சந்தித்த இன்னல்கள் அதிகம். இப்படி அவர்கள் கண்டியை அடையும்போது பாதிப்பேர் இறந்திருப்பார்கள். இதனை அறிந்து வைத்திருந்த கங்காணிகளும் தரகர்களும், தேவைப்பட்டது 150 பேர்களாயின் 300 பேரை அழைத்துப் போவார்கள். மிகுதி 150 பேரை செல்லும் வழியில் பலி கொடுப்பார்கள். இவர்கள் எங்கு சென்றபோதும் மரணமும் பத்தடி தள்ளிப் பின்னாலேயே சென்றது.

தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து அவர்கள் செய்த வேலைக்குக் கூலியாக சொற்ப பணத்தினையே கொடுத்தார்கள். இந்தச் சொற்ப பணத்திற்காக, மலையக மக்கள் ஏன் இத்தனை தூரம் கால்நடையாக வந்து, பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் துன்ப துயரங்களைச் சகித்துக்கொண்டு தம் உழைப்பை விற்றனர் என்பதற்கு ஆய்வாளர்கள் பல காரணங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் முக்கியமானது, தமிழ் நாட்டில் ஏற்பட்ட வரட்சியும், பஞ்சமும், பட்டினியும்; அதனால் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக மாண்டொழிந்து போனமை. அடுத்து, சாதிக் கொடுமை – அடக்குமுறை – தீண்டாமை என்பன தலைவிரித்தாடி மக்களைக் கொடுமைப்படுத்தியமை. இவற்றில் இருந்து தப்புவதற்கும், தாம் அடகு வைத்த நிலபுலன்களை மீட்கவும் பலரும் கண்டிச் சீமைக்கு வந்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த புகழ்பெற்ற அமெரிக்கரான ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் “கூலிகள் டின்னில் அடைக்கப்பட்ட புழுக்களைப் போல் கொண்டுவரப்பட்டனர்.” என்று ஒருமுறை குறிப்பிட்டார். டொனோவன் மொல்ட்ரிச் என்பவரின் ‘பிட்டர் பெர்ரி பொண்டேஜ்’ என்ற ஆய்வு நூலில், “கோப்பிக் காலமான மேற்படி 70 ஆண்டுகளில் இயற்கை மரணத்துக்கு அப்பால், பிரதானமாக கொலாரா நோயாலும் மற்றும் வேறு நோய்களாலும் பசி, பட்டினி, தாங்க முடியாத குளிர் காரணமாகவும் சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேர் தம்முயிரை இழந்தனர்” எனப் பதிவிடப்பட்டுள்ளது. இறுக்கமான நடவடிக்கைகள் மூலம் இவர்கள் ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலைக்குள் இருப்பதைப் போலவே வாழ்ந்தனர். இத்தகைய காவல், கட்டுக்கோப்புக் காரணமாக இவர்கள் ஏனைய சமூகங்களிடமிருந்து தனிமைப்பட்டிருந்தனர்.

1870 களை அடுத்த தசாப்தத்தில் கோப்பிப் பயிர்ச்செய்கையில் பங்கசு நோய் பரவி, பயிர்ச் செய்கையை முற்றாகத் தாக்கி, கோப்பிப் பயிர் படிப்படியாக அற்றுப் போனது. கோப்பி படிப்படியாக அழிந்துபோகும் என்பதை அறிந்த மாத்திரத்தில் தேயிலைப் பயிர்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்களில், சுமார் 30 இலட்சம் பேர் கூலிகளாக தமிழ் நாட்டுப் பிரதேங்களில் இருந்து வந்து வேலை செய்து விட்டு திரும்பிப் போயிள்ளனரென ‘சிலோன் ஒப்சேவர்’ பத்திரிகைளின் ஆசிரியர் ஜோன் பெர்குசன் தனது பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தேயிலைக் காலமும் மலையக மக்களுக்கு கோப்பிக் காலத்தைப் போலவே அமைந்தது. கோப்பிப் பயிர்ச்செய்கைக்குப் பதிலாக தேயிலை என்பது பதிலீடு செய்யப்பட்டதே அன்றி மக்களின் வாழ்க்கை அம்சங்களில் எந்தவித முன்னேற்றகரமான மாற்றங்களையும் அது கொண்டுவரவில்லை. 

இவர்கள் மேலும் துன்பப்படுத்திய அம்சங்களாக தோட்டங்களில் காணப்பட்ட மோசமான சுகாதார நிலைமை, காலை ஐந்து மணி முதல் மாலை வரையிலான நீண்ட நேர வேலை, கல்வி மற்றும் ஏனைய எந்த வாழ்க்கை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமை போன்றன காணப்பட்டன. அடுத்து வந்த தசாப்தத்தில் இலங்கையில் ஒரு பலமான தொழிற்சங்க இயக்கம் உருவானது. இதன் முன்னோடியான கோ. நடேசய்யர், தொழிலாளர்கள் அடிமைப்படுத்தப்பட்டு பல்வேறு அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்படுவதை அவதானித்தார். முதற் தடவையாக வேலை நேரத்தை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டார். மற்றும் பல்வேறு சட்டதிட்டங்களில் தொழிலாளர் நலன் கருதி மாற்றங்களை உருவாக்கினார்.  பல போராட்டங்கள் மூலம், அவர் தொடக்கி வைத்த வரலாறு, ஓரளவு உரிமைகளை அனுபவிக்கக்கூடிய மலையக மக்களது வாழ்க்கைக்கு வித்திட்டது எனலாம். 

இன்றைய நிலை

இன்றுவரை மலையக மக்களுக்கான விவசாய மற்றும் தொழில் முயற்சிகளுக்கான காணிகள் வழங்கப்படவில்லை. பெருந்தோட்டக் காணிகளை பெருந்தோட்டங்களுக்கு வெளியில் உள்ளவர்களுக்கு வழங்குவதற்கான கொள்கையே ஆட்சியாளர்களால் முன் வைக்கப்பட்டது. நாட்டில் பிரஜைகளுக்காக குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு புதிய கிராமங்கள் அமைக்கப்படும் போது, பிரஜைகளின் குடும்ப நலன், பொருளாதாரச் சுபீட்சம் என்பனவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால் மலையக மக்களுக்கு குடியிருப்புக்கான காணி வழங்கப்படும் போது மாத்திரம், தேயிலைச் செடிகளுக்கும் இறப்பர் மரங்களுக்கும் அம் மக்களை விட அதிக மதிப்பு வழங்கப்பட்டு, அவை காப்பற்றப்படுவதற்காக மக்கள் தொடர்ந்தும் லயங்களிலேயே வாழ்வது உறுதி செய்யப்படுகிறது. அல்லது மனிதர்கள் வாழ பொருத்தமற்ற காணிகளில் குடியேற்றப்படுதல் இடம்பெற்று வருகிறது. காணி ஒன்றை தனது சொந்த வருமானத்தில் கொள்வனவு செய்ய முடியாத நிலையிலேயே மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மலையகத்தில் வீடுகள் அமைந்துள்ள காணிக்கு சட்டரீதியான உரித்துக் கொண்டவர்கள் வெறும் 10.2 சதவீதத்தினர் மாத்திரமே. எனினும் மலையகத்தில் 1981 ஆம் ஆண்டு 217,193 கட்டிடங்கள் (ஒரு லயன் வீடு ஒரு கட்டிடமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.) இருந்த நிலையில், 2012 ஆண்டில் இது 225,099 ஆக அதிகரித்துள்ளது. அதாவது வெறும் 7906 கட்டிடங்களே புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. அது வெறும் 9.64 சதவீத அதிகரிப்பாகும்.

மனிதர்களின் காலடிச் சுவடுகள் படாத காடுகளை அழித்து, பெருந்தோட்டங்களை உருவாக்கி, இந்நாட்டின் நவீன பொருளாதாரத்திற்கு தமது உழைப்பை வழங்கிய மக்களுக்கும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கும், ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் காணியை சட்டரீதியான உரித்துடன் வழங்கி, இதர உரிய வசதிகளுடனான குடியேற்றங்களை அமைத்து, கிராமங்களை உருவாக்கும்படி அரசாங்கத்தைக் கோருவதற்கு மலையகத் தலைமகளுக்கு ஏன் இத்தனை தயக்கம்? காடுகளை அழித்து மனிதர்கள் வாழக்கூடிய பல ஆயிரம் ஹெக்டயர் காணிகளை உருவாக்கிய மலையக மக்களுக்கு வீட்டுரிமைக்காகவும், தொழில் உரிமைக்காகவும் காணி உரிமையை பாரபட்சமின்றி வழங்க அரசாங்கத்தை கோருவதற்கு மலையகத் தலைமைகளுக்கு எது தடையாக உள்ளது? 200 வருடங்கள் கடந்தும் இந்தப் பாரபட்சங்கள் ஓரங்கட்டல்கள் தொடர வேண்டுமா?

மாத்தளை – ரத்வத்த தோட்டம், இரத்தினபுரி – காவத்தை, வெள்ளந்துரை தோட்டம் என தொழிலாளர்களின் குடியிருப்புகளை உடைத்துச் சேதமாக்கி, அழித்து ஒழிக்கும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இவர்களுக்கு காணி உரிமை கிடைக்கும் வரை இப்படியான சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தேசிய நிகழ்வுகள், ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதில் காணி உரிமையையும் பேசு பொருளாக மாற்றவேண்டும். மலையக மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்படும் அதேவேளை, சொந்த மண்ணில் முகவரியின்றி வாழும் அம்மக்களுக்கு நிரந்தர முகவரியை வழங்கி காணி உரிமமும் வழங்கப்படுவது அவர்களுக்கான கௌரவத்தைக் கொடுக்கும்.

தொழிற்சங்க அரசியலோடு கட்டுப்பட்டிருந்த மலையக அரசியல் அதிலிருந்து விடுபட்டு தேசிய இன அரசியல் என்றதொரு களத்திற்கு வந்திருக்கிறது. அதிகாரப் பரவலாக்கம், நில உடைமை போன்ற கருத்துகளோடு இளைஞர்கள் மத்தியில் எமது மலையகம் என்ற கோசங்கள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன. மலையக மக்கள் இலங்கைத் தீவில் வசிக்கத் தொடங்கி 200 வருடங்களாயும் காணியற்ற, வீடற்ற சமூகமாகவுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கானவர்கள் மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மொறிசியஸ், பிஜித் தீவுகள் போன்றவற்றுக்கும் இடம்பெயர்ந்திருந்தனர். அவர்கள் அந்நாட்டுப் பிரஜைகளாக உள்வாங்கப்பட்டு உரிமைகளைப் பெற்று வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளனர். ஆனால் இலங்கையில் மட்டும் இந் நிலமை தலைகீழாகவுள்ளது. வெறுமனே வீடுகளை நிர்மாணிப்பதிலோ அல்லது வேறு பல கட்டிடங்களை நிர்மாணிப்பதிலோ பயன் கிடையாது. அவற்றினூடாக மட்டுமே நமக்கான அடைவு மட்டத்தை எட்டிவிட முடியாது. இது ஒரு நிரந்தரமான வேலைத் திட்டமாக அமைய வேண்டியது அவசியம். அதற்கான ஒரு சூழலை உருவாக்க வேண்டியது முதற்கட்ட கட்டாயப் பணியாகும். 

மலையகப் பண்பாட்டுத் தளத்தில் சமூக அசைவுகளை மேற்கொள்ளும் புத்திஜீவிகள் மலையக மக்களின் இருப்பு, வாழ்வியல் பண்பாட்டு அடையாளங்களை ஒழுங்குபடுத்தி பாதுகாத்து அதனை அடுத்த தலைமுறைக்குக் கையளித்து முற்போக்கான சமூகமாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் கல்வியினைப் பயன்படுத்த வேண்டும். மலையக மக்களின் சமூக, பொருளாதார அரசியல் நிலைமைகளை முறையாக ஆவணப்படுத்தும் நடவடிக்கைகள் முறையாகப் பேணப்படவில்லை. மலையக சமூகத்தவர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு உயர் பதவிகளில் இருப்பவர்களும், இலங்கை அரசியல் அமைப்பில் மலையக மக்களின் நிலை தொடர்பாக பொதுக் கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதில் கவனம் கொள்ளாதவர்களாகவே உள்ளதை அவதானிக்கலாம். மலையகப் பல்கலைக்கழகம் தேவைப்படுவதற்கான அவசியமான கள நிலைமைகள் உள்ளன. அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பதை உணர வேண்டும். வர்க்க ரீதியான அடையாளத்தை எடுக்க வேண்டும். 

ஏனைய சமூகத்திற்கு கிடைக்கின்ற சலுகைகள் தமக்கும் கிடைக்க வேண்டும் என்றே இந்தச் சமூகம் எதிர்பார்க்கின்றது. சராசரியாக ஒரு வாரத்திற்கு ஏழு மில்லியன் தேயிலையை இலங்கை ஏற்றுமதி செய்கிறது. இது அதனைப் பறிப்பவர்களின் கைகளில் இருந்தே தொடங்குகிறது. ஆனால், தேனீர் பற்றிப் பேசும் போது யாருக்கும் அவர்களின் வாழ்க்கைப் போராட்டம் ஞாபகம் வருவதில்லை. மலையகம் 200 இல் மலையக மக்களை கௌரவிப்பதை விட, அவர்களின் தியாகத்துக்கான வெகுமதியாக அவர்களுக்கு காணி உரிமம் வழங்குவது குறித்து யோசிக்க வேண்டும். மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர் கதையாகிவரும் நிலையில் இவற்றுக்கான தீர்வுகளை உரியவாறு பெற்றுக்கொடுப்பதற்கு மலையக அரசியல் கட்சிகளிடையே பொது இணக்கப்பாடு, ஐக்கியம் என்பன அவசியமாகும். நாம் எமக்குள் முரண்பட்டுக்கொண்டிருப்பது, முழு மலையகச் சமூகத்தையே பாதிப்புக்குள்ளாக்கும். 

மலையகச் சமூகத்தை ஏனைய சமூகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த 200 ஆண்டுகளில் நாம் பெரிதாக எதனையும் சாதித்துவிடவில்லை. எமது சமூகத்துக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, நாம் பல தசாப்தங்களை வீணடித்து விட்டோம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அந்தக் காலம் இறந்தகாலம்; அதைப் பற்றிக் கனவு காண்பதில் பயன் இல்லை. வருங்காலத்தை ஆக்க முயல்வதே கடமையாகும். சமுதாய நோய் இன்னது என்று இப்போதாவது எண்ணிப் பார்க்க வேண்டும். 

1830 முதல் இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்கள் தமது சமூகத்தை மேம்படுத்திக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கொள்கைகள், கருத்தாக்கங்கள் யாவை என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். 200 ஆண்டுகளாகப் பெருந்தோட்ட வட்டத்துக்குள், குறைந்த எழுத்தறிவு – வாழ்க்கைத் தரம் – கல்வி நிலையோடு வாழ்ந்து வரும் மக்களால் புதிய இருபத்தியோராம் நூற்றாண்டின் அறிவுசார் சவால்களையும் தேவைகளையும் எதிர்கொள்ள முடியாதுள்ளது. எனவே, மலையகம் 200 நிகழ்வை நடத்துவது என்பது மலையகத்தின் கடந்தகால வளர்ச்சியை மறுபரிசீலனை செய்வதுடன் எதிர்கால வளர்ச்சிக்கு திட்டமிடுவதாகவும் இருக்க வேண்டும். 

இந் நீண்ட காலத்தில் பாரிய மாற்றங்கள் நடத்திருக்க வேண்டும். ஆனால் மலையகத்தை பொறுத்தவரை சொற்பமான மாற்றங்களே இடம்பெற்றுள்ளன. கற்றோர் சமூகமொன்று அங்கு ஒரு சமூக சக்தியாக எழுச்சியடைந்திருக்கின்றது. இது, கீழ்மட்ட நடுத்தர வர்க்கம் ஒன்று உருவாகுவதைச் சாத்தியப்படுத்தியுள்ளது. இதனை ஒரு நல்வாய்ப்பாகக் கருதிக் கொண்டு, சமூக வளர்ச்சிக்கு மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சிக்காகவும் நாம் உழைக்க வேண்டும். இது நம் இளைஞர்களின் கையிலேயே தங்கியுள்ளது. 


ஒலிவடிவில் கேட்க

5525 பார்வைகள்

About the Author

யோகராசா மோகதாசன்

‘மலையம் 200’ நிகழ்வுகளை முன்னிட்டு, விம்பம் அமைப்பினரால் எழுநாவின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் யோகராசா மோகதாசன் அவர்களால் எழுதப்பட்ட ‘மலையகம் : கடந்து வந்த பாதையும் காலூன்றி நிற்கும் நிலமும்' எனும் இக் கட்டுரை ஆறுதல் பரிசைப் பெற்றது.