வலியில் இருந்து வாழ்வு வரை : அரசியல், பொருளாதார, சமூக அபிவிருத்திக் கண்ணோட்டம் - பகுதி 2
Arts
18 நிமிட வாசிப்பு

வலியில் இருந்து வாழ்வு வரை : அரசியல், பொருளாதார, சமூக அபிவிருத்திக் கண்ணோட்டம் – பகுதி 2

February 9, 2024 | Ezhuna
மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதற்கேற்ப, விம்பம் அமைப்பு எழுநாவின் அனுசரணையுடன் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தியது. இப் போட்டியில் வெற்றி பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் 'மலையகம் 200' எனும் தலைப்பில் தொடராக எழுநாவில் வெளியாகின்றன.

மலையகப் பகுதிகளில் வாழ்க்கைக்காக பல போராட்டங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் அதற்கும் அப்பாற்பட்டு, மலையகப் பெண்களின் நாளாந்த வாழ்க்கைப் போராட்டம் சவால்கள் நிறைந்தவையாக உள்ளது. தேசிய, சர்வதேச ரீதியில் அரசியல் அரங்கில் பெண்களின் அங்கத்துவம் பற்றி பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் வாழும் மலையகப் பெண்களைப் பற்றி பேச வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகின்றது. மலையகப் பெண்களுக்கான சவால்கள் அவர்களின் சிறுவயது முதலே தொடங்கிவிடுகிறது.

பெண் பிள்ளைகளுக்கு இளமையில் ஏற்படும் போசணைக் குறைபாடானது அவர்களின் வாழ்நாள் முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. பெரும்பாலும் கோதுமை ரொட்டியும் அரிசிச் சோறுமே மலையக மக்களின் பிரதான உணவாகும். நிறையுணவில் காணப்படும் சத்துக்கள் இவ் உணவுகளில் மட்டும் கிடைத்துவிடுவதில்லை. பூப்பெய்தும் காலத்தில் கிடைக்க வேண்டிய முறையான போசணையும் பெண் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, திரிபோசா தவிர்ந்த, நாளொன்றுக்கு உட்கொள்ளும் வேளை உணவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்காலத்தில் திரிபோசா விநியோகமும் கிரமமாக நடைபெறுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. நாளொன்றிற்கு கிடைக்கும் போசணையின் அளவு குறைவடைகிறது. போசணை மட்டம் தொடர்பான தெளிவு மலையகத்தில் இல்லை. கர்ப்பக்கால போசணைக் குறைபாடானது குறை நிறையுடைய குழந்தைகள் பிறக்கக் காரணமாகின்றன. போக்குவரத்து மற்றும் வைத்திய சேவைக் குறைபாடுகள் தாய் – சேய் மரண வீதத்திலும் அதிகரிப்பை ஏற்படுத்துகின்றன.

கர்ப்பிணித் தாய்மார்கள் மகப்பேற்று காலத்திலும் பிரசவத்தின் பின்னரும் தேவையான மருத்துவ வசதிகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். தூரப் பிரதேச வைத்திய சாலையை நாடிச்செல்ல வேண்டிய நிலை உள்ளதாலும் அதிக பிரதேசங்களில் ‘நோயாளர் காவு வண்டிகளை’ பெற்றுக் கொள்வது கடினமாக உள்ளதாலும் பல சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. தோட்டத்திலுள்ள லொறிகளில் பிரசவத்தின் போதும் அவசர தேவைகளின் போதும் நோயாளிகள் கொண்டு செல்லப்படுவது இன்றளவும் மாறாமலேயே இருக்கின்றது. இக்காரணிகள் தாய் – சேய் நலன்களிலும் பாரிய ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

தோட்டப் பகுதிகளில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலை நேரங்களில் பயன்படுத்தக் கூடிய மலசலகூட வசதிகள் இல்லை. மேலும் மாதவிடாய் காலத்தில் பெரிதும் உடல், உள ரீதியான சிரமங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை உள்ளது. ஒப்பீட்டளவில் மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு மலையக பெண்களிடம் குறைவாகவே உள்ளது. மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக்கூடிய ‘துவாய்கள்’ அங்கு ஓர் ஆடம்பரப் பொருளேயாகும். அவர்கள் பெரும்பாலும் பழைய துணிகளையே பயன்படுத்துகின்றனர். தனிநபர் சுகாதாரம் தொடர்பாக சற்றும் சிந்திக்காது அநாவசியமானதொரு செலவாகவே அதை அவர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால் மலையகப் பெண்கள் தமது வருமானத்தில் 3.5 வீதம் மாதமொன்றிற்கு ‘துவாய்’க்காக செலவிட வேண்டியுள்ளது. அவர்களின் வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது ஓர் ஆடம்பரச் செலவாகும். பெண்கள் மாதவிடாய் மற்றும் மகப்பேற்று காலங்களில் சுகாதாரப் பழக்க வழக்கங்களை முறையாகப் பின்பற்றாததால் இலங்கையில் இரண்டாவதாக பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பவாய் புற்றுநோய்க்கும் ஆளாக வேண்டியுள்ளது. அதோடு சராசரியாக ஒரு பெண் தோட்ட தொழிலாளி மாதத்தில் ஒரு முறையாவது நோயால் பீடிக்கப்படுகின்றார். 

வருமானமின்மை காரணமாக மலையகப் பெண்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. குடும்பத்தைப் பிரிந்து பணத் தேவைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் அவர்கள் அடையும் வேதனைகளோ ஏராளம். பாலியல் மற்றும் உடல், உள ரீதியாக அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் என்றுமே மாறாத வலிகள். மற்றவர்களின்  உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது அவர்கள் மீது அதிகாரத்தை கட்டவிழ்த்து விட்டு அவர்களது துன்பத்தில் ஒருவித பெருமிதம் அடையும் கொடூர மனோபாவம் உள்ளவர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆசியாவிற்கான தந்திரோபாய பகுப்பாய்வு அமைப்பான ‘வெரைட் ரிசேர்’ ஆல் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வின்படி பணிப்பெண்கள் அபாயகரமான மோசமான சூழ்நிலையில் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படல், கல்வி கற்பதற்கானதும், சுகாதார வசதிகளை பெறுவதற்குமான உரிமைகள் நிராகரிக்கப்படல், வன்முறைகளுக்குள்ளாகுதல் அடிப்படை வசதிகள்  மறுக்கப்பட்ட நிலையில் தங்கவைக்கப்படல், சமூக சேவைகள் பெறுவது வரையறுக்கப்படல், சுதந்திரமான நடமாட்டத்திற்கான தடை, ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட ஊதியம் வழங்கப்படாமை, தொழில் உடன்படிக்கை தொடர்பான மீறல், சொந்த நாட்டிலுள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை மறுக்கப்படல், பாரபட்சம், தொழில் உடன்படிக்கை முடிவுறும் முன்பே தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படல், ஆட்கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், விபசாரத்தில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றமை போன்ற  மனித உரிமை மீறல்களை மலையகப் பெண்கள் எதிர்கொள்கின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளின் பிரகாரம் 2021ம் ஆண்டில் வெளிநாடுகளில் பணியாற்றும் வீட்டுப் பணிப்பெண்கள் தெடர்பான தொழில் உடன்படிக்கை மீறல்கள் குறித்து 175 முறைப்பாடுகளும் தொழிலாளர்கள் காணாமல் போனமை குறித்து 51 முறைப்பாடுகளும் தாக்குதல் குறித்து 170 முறைப்பாடுகளும் தொடர்பாடல் வசதிக் குறைவு குறித்து 170 முறைப்பாடுகளும் இணக்கம் காணப்பட்ட ஊதியத்தை வழங்கத் தவறியமை குறித்து 11 முறைப்பாடுகளும் ஊதியம் வழங்கப்படாமை குறித்து 149 முறைப்பாடுகளும் உடன்படிக்கை பூர்த்தியடைந்த பின்னரும் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பாமை குறித்து 1044 முறைப்பாடுகளும் அளவுக்கு அதிகமான வேலைகள் குறித்து 32 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதோடு 150 இற்கும் மேற்பட்டவர்கள் இயற்கையாகவோ அன்றி வேறு எதாவது ஒரு காரணத்திற்காகவோ உயிரிழந்துள்ளனர். பிறிதொருவரின் ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைக்கும் தனது சொல், செயல் மற்றும் சிந்தனை என்பன கட்டுப்படாது சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே உலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரதும் அடிமனதின் ஆழத்தில் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் இலட்சிய கனவாக உள்ளது. எனவே அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு வகிக்கும் மலையகப் பணிப் பெண்களது தனிப்பட்ட மற்றும் பொருளாதார நலன்களையும் பாதுகாப்பையும் சட்ட ரீதியில் உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகும். பெண் பிள்ளைகளும் கல்வியை இடைவிட்டு நகர்ப்பகுதிகளுக்கு வேலைக்காகச் செல்வதும் பின்னர் தமது சுய பாதுகாப்பைக்கூட உறுதி செய்ய முடியாமல் முடிவு எடுப்பதில் பக்குவம் இல்லாமல் இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இன்னும் தொடருகின்றது. மிகச்சிறிய அமைப்பான குடும்பத்திற்குள்ளும் பெண்கள் நிம்மதியாக வாழ்வது கேள்விக் குறியாகவே உள்ளது.

upcountry woman

மலையக ஆண்களின் மதுப் பாவனையானது இறுதியில் வீட்டு வன்முறையில் வந்து முடிகிறது. அதில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். வறுமைக்கு மத்தியில் குடும்பத்தைக் கொண்டு செல்ல வேண்டிய தேவையால் பெண்கள் வீட்டு வன்முறைக்கு எதிராக வாய் திறப்பதே இல்லை. மீறி பெண்கள் வாய் திறந்தாலும் பாதிக்கப்பட்டவரை நோக்கியே விரல்கள் நீளுகின்றன.

பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரம், மருத்துவம் போன்ற அத்தியாவசியமான காரணிகளில் ஏற்படும் குறைபாடானது பெண்களின் வாழ்க்கையில் பாரிய விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. உளவியல் ரீதியான மற்றும் கலாசார ரீதியான மாற்றத்தை குடும்ப வன்முறை ஏற்படுத்திவிடுகின்றது. இவ்விளைவுகள் ஒரு பூரணமான சமூகத்தின் போக்கில் தாக்கத்தைச் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. வெறுமனே உழைக்கும் இயந்திரங்கள் அல்ல; பெண்கள் உணர்வுகளாலும் உரிமைகளாலும் என்றுமே பூரணத்துவத்தை அடைய வேண்டியவர்கள். கல்வியிலும் அரசியலிலும் பெண்கள் பிரகாசிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதுபோன்றே அடிப்படை உடல், உடை, சுகாதாரத் தேவைகளை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டியதும் முக்கியமானதாகும். குடும்பம் என்ற ரீதியில் ஆணும் அவனது சமூகமும் பொருளாதார ரீதியில் நிர்வாகமும் தன்னை சுற்றியுள்ள சகல பெண்களினதும் தேவைகள் பற்றி அக்கறை காட்ட வேண்டியது அவசியம். சமூகமும் பிரதேசமும் அமைவிடமும் மாறுபடலாம். ஆனால் சகல பெண்களுக்கும் தேவை என்பது சமமானதே. எங்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றதோ அங்குதான் எதிர்க்காலம் பற்றிய சிந்தனையும் மற்றைய சமூகங்களோடு போட்டி போடக் கூடிய வல்லமையும் பிறக்கிறது.

மலையக மக்களுக்கு அடிப்படைச் சுகாதார வசதிகள் கூட முறையாக வழங்கப்படவில்லை. நாட்டில் பிற சமூகங்கள் அனுபவிக்கும் அடிப்படை சுகாதார வசதிகள், பொதுச் சுகாதார வாய்ப்புக்கள் கூட தோட்ட மக்களுக்கு கிடைப்பதில்லை. பல்வேறு சிக்கல்கள் தடைகளே இதற்குக் காரணம். மலையக மக்கள் தமது சகல தேவைகளுக்கும் தோட்ட நிர்வாகங்களை நம்பி இருக்கின்றார்கள். தோட்ட முகாமைத்துவத்தின் கீழிருந்து முற்றாக விடுபட்டு தேசிய நீரோட்டத்தில் கலக்கும் சந்தர்ப்பம் இன்னும் வந்தபாடில்லை. பெருந்தோட்டத் துறையைச் சார்ந்த 50 மருத்துவமனைகள் காணப்படுகின்றன. இவற்றுள் 27 மருத்துவமனைகள் அரசுப் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மொத்தமாக 179 பிரசவ விடுதிகளும் 266 மருந்தகங்களும் இங்கு உள்ளன. ஆனால் தேவையான அளவு மருத்துவர்கள் இல்லை. 

இன்று மலையகத்தில் இரத்தச்சோகை, மூளைக்காய்ச்சல், கர்ப்பிணி மரணம், சிசு மரணம் போன்றன அதிகரித்துச் செல்லும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. நாட்டில் ஏனைய பகுதிகளை விட மந்தபோஷணயில் அதிக பாதிப்பினை அடையும் மாவட்டமாக நுவரெலியாவே காணப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின்படி நுவரெலியா மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட  ஒட்டுமொத்த குழந்தைகளில் 40 வீதமானவை வளர்ச்சியின்மை பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளன. 25.3 வீத குழந்தைகள் எடைகுறையுடனும் 10.5 வீத குழந்தைகள் உயரத்திற்கேற்ப நிறையின்றியும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமின்றி முழு மலையகத்தையும் சத்துக் குறைபாடு ஆக்கிரமித்துள்ளதை அறியமுடிகின்றது. குறைந்த ஆயுட்காலம் கொண்ட ஒரு சமூகமாக மலையகச் சமூகம் மாறி வருகின்றது. 

இங்கு சத்தான உணவுக்கான அவசியம் பற்றிய விழிப்புணர்வு கிடையாது. தோட்ட மக்களுக்கான சுகாதார சேவை வழங்கும் நிகழ்ச்சி நிரல் தேசிய சுகாதார நெறிமுறைகளோடு இணைந்ததாக இல்லை. பாதுகாப்பு, சுத்தமான குடிநீர் வசதிகள், தனித்தனி வீட்டு வசதிகள் இங்கு அவசியத் தேவைகளாகவுள்ளன. தேர்ச்சி பெற்ற மருத்துவர் சேவை வழங்கப்படுவது அவசியம். இத்துடன் கடின உழைப்பின் காரணமாக தடிமன், இருமல் தோள்பட்டை வலி, முதுகெலும்பு பாதிப்பு, இரத்த அழுத்தம், இரும்புச் சத்து குறைபாடு, இளைப்பு போன்ற பாதிப்புகளுக்கும் தாய்மார் ஆளாகின்றனர். இதனால் தாய்ப்பாலூட்டல் இங்கு முழுமையாக நடைபெறுவதில்லை.

இன்றும்கூட தோட்டங்களில் பலர் கழிவறை வசதிகள் இன்றிக் கஷ்டப்படுகின்றனர். வீட்டு முற்றத்தில் இருக்கும் வடிகான்கள் உடைந்து காணப்படுகின்றன. போதாக்குறைக்கு லயங்களைச் சுற்றி தேயிலை மலைகள் காடுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. சுத்தமான காற்றோ குடிநீரோ கிடையாது. நெருக்கமான லயக் காம்பிராக்களையொட்டி முன்பக்கமாகவோ பின்பக்கமாகவோ அதனைப் பெருப்பித்து கட்டுவதும் சமையல் போன்ற தேவைகளுக்காக குடிசைக் காம்பிராக்களை அமைப்பதும் நடைபெறுவதால் மேலும் நெருக்கடி அதிகரிக்கின்றது. சுகாதாரத்திற்கு பங்கம் ஏற்படுகின்றது.

line houses

ஆய்வொன்றின்படி பெருந்தோட்ட மக்கள் வாழும் லயன்கள் மனித வாழ்வுக்கு ஏற்புடையதல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதர்களோடு ஆடு, மாடு, நாய், கோழி, பூனை போன்ற விலங்கி்னங்களும் வாழும் சூழலில் சுகாதார நலன்கள் கேள்விக் குறியாகின்றன. இம்மக்களின் சுகாதார நலனைக் கவனிக்க தகுதி வாய்ந்த சுகாதார அதிகாரிகளில்லை. தோட்ட நலன்புரி உத்தியோகத்தர் எனும் பதவியிலிருக்கும் ஆட்களும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட அனுபவசாலிகள் அல்ல. எனவே இவர்களால் முறையான சுகாதார சேவைகளை வழங்க முடியாது. பாதுகாப்பற்ற குடிநீர், கழிவுநீர்த்தேக்கம், இரசாயனப் பாவனை, முறையாக அகற்றப்படாத குப்பைக் கூழங்கள், ஒழுகி வழியும் கூரைகள் என்பன இங்கு சுகாதார நலன்களுக்கு சவால் விடுக்கும் சங்கதிகளாகும்.

இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது பெருந்தோட்ட மக்கள் இன்றும் பிறரில் தங்கி வாழும் மனோபாவமாகும். அதனை நீட்சி செய்வது தோட்டக் கட்டமைப்பு முறைமையாகும். ஏனெனில் எதற்கெடுத்தாலும் அதை தோட்ட நிர்வாகம் செய்யட்டும் என்று வாழ்ந்து பழகிவிட்டனர். நகரத்தில் வாழ்வோரது சுகாதார சேவைகள் கிரமமாக நடைபெற பிரதேச சபைகள் பொறுப்பேற்கின்றன. வாழ்விட சூழல் இங்கு விரிவாக அமைவதால் சனநெருக்கடி ஏற்படுவதில்லை. இங்கு வாழும் மக்களது சுகாதார சேவைகள் யாவும் தேசிய ரீதியில் ஒருங்கிணைக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் பிரதேச சபைக்கூடான வரப்பிரசாதங்களை தோட்ட மக்களும் பெறும் வாய்ப்பு ஏற்படவேண்டும். அதனைப் பெற இம் மக்கள் தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. பல்வேறு காரணிகளால் பெருந்தோட்டங்கள் காடுகளாகி வருகின்றது. சிறுத்தைகளும் விஷ ஜந்துகளும் குளவிகளும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதோடு மரணத்தையும் ஏற்படுத்துகின்றன. இவைகளின்  தொல்லைகளிலிருந்து மக்களை பாதுகாக்க தோட்ட நிர்வாகங்கள் அக்கறை காட்டுவதில்லை. தற்போதைய நிலையில் தோட்ட மக்களின் குடிநீர் வசதி, மலசலகூடம், குப்பை கூழங்கள் அகற்றல், பாதையமைத்தல், பாதை செப்பனிடல் போன்ற தேவைகளை தோட்ட நிர்வாகங்கள் செய்யப்போவதில்லை எனவே தமது தேவைகளை தாமே நிறைவேற்றிக்கொள்ள வேண்டியதொரு கட்டாயம் ஏற்பட்டு வருகின்றது. இதற்காக பிரதேச சபைகளின் சேவைகளைப் பெறவேண்டிய நிலை தோன்றியுள்ளது. உண்மையில் தோட்ட மக்களின் சுகாதார மேம்பாடு ஒரு நீண்ட கால வேலைத்திட்டமாகவே இருக்கப் போகின்றது.

up country workers

குடியிருப்பு திட்டங்கள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. அதுவரை மக்களினது சுகாதார சேவைகள் கவனிக்கப்பட வேண்டுமாயின் தேசிய ரீதியிலான சுகாதாரக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படுவது அவசியமானதொன்று. இதே நேரம் பிரதேச சபைகளுக்கூடான பயன்பாடுகள் பாரபட்சமின்றி பெருந்தோட்டப் பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் சகல தடைகளையும் தகர்த்தெறிய வேண்டிய அவசியம் உள்ளது. இலங்கை அரசியலில் இனப் பாரபட்சமும் இன ஒடுக்கு முறைகளும் சுதந்தித்திற்கு முன்பிருந்து தோன்றி வளர்ந்தன என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளும் ஆவணங்களும் அதிகமாக உள்ளன. இன்றைய இனவாதத்தின் அடி ஆணிவேரைக் கண்டுபிடிப்பதென்பது சிக்கலான ஒன்றாகும். மலையக மக்களின் வரலாறு சுவடு தெரியாமல் தேய்ந்து போய்க் கொண்டிருப்பதன் காரணத்தைக் கூட சரியாக அடையாளம் காட்ட முடியாதுள்ளது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் அடர் காடுகளாக இருந்த இப்பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டு அடிமைக் கூட்டமாக குடியேற்றப்பட்டவர்கள் இன்று வரை சோற்றுக் கூலிகளாகவே ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தமது சமூக பலத்தையும் அரசியல் வாய்ப்பையும் இழந்து இந்நாட்டின் அரசியல் இயந்திரத்திலிருந்து அந்நியமாக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் எதிர்காலப் பாதுகாப்பும் கேள்விக் குறியாக்கப்பட்டு வருகின்றன. தேசியக் கட்சிகளினால் கிடைக்கும் பாராளுமன்ற அமைச்சரவை அந்தஸ்தும் இந்தச் சமூகத்தை ஒருபோதும் பாதுகாக்கப் போவதில்லை. பல இன மக்களைக் கொண்ட தேசமான இலங்கை அனைவருக்கும் சமத்துவத்தையும் சமமான வாய்ப்பையும் உறுதிப்படுத்தி இனங்களின் தனித்துவங்களைப் பேணும் ஆட்சிமுறைமையை கொண்டிருக்கவில்லை என்பது கண்கூடு.

ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் கொண்டுவரப்படும் வரை இது இந்தியா – இலங்கை அரசினது பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. அதாவது தோட்ட தொழிளாளர்கள் தொடர்பான அரசியல் பிரச்சனை அறுபதுகள் வரை இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான  இராச்சிய உறவுகள் தொடர்பான பிரச்சனையின் உப பிரச்சனையாகவே கருதபட்டது. அல்லது வெறுமனே கூலிக்காக கொண்டுவரப்பட்ட ஒரு சமூகத்தினது பிரச்சனையாகவே பார்க்கப்பட்டது. அதனால்தான் மலையகத் தமிழ் மக்களின் பிரச்சனையை பிரித்தானியக் குடியேற்றவாதம் இலங்கையில் தோற்றுவித்த இனப்பிரச்சனையாக வரலாற்றாய்வாளர்களும் சமூக விஞ்ஞானிகளும் நோக்குகின்றனர்.

குடியேற்றவாதத்தின் ஓர் விளைவாக இம்மக்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டாலும் 1900 ஆண்டுகளின் பின் படிப்படியாக இம் மக்களின் வாழ்க்கையில்  ஒரு சில மாற்றங்கள் ஏற்ப்பட்டன. 1947ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு இந்தியத் தமிழர்கள் சார்பாக பிரதிநிதிகள் தெரிவாகக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இருப்பினும் அதற்குப் பிறகு இலங்கையின் முதலாவது பாராளுமன்றம் கொண்டு வந்த இரண்டு பிரதான சட்டங்கள் இம் மக்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றியதோடல்லாமல் இம் மக்களை 30 வருடங்கள் இந்நாட்டின் அரசியலில் இருந்து அந்நியமாக்கின. 

  • 1948ம் ஆண்டு பிரஜாவுரிமை சட்டம்
  • 1949ம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தல் சட்டம்

ஆகிய இரண்டுமே அச் சட்டங்கள்.

இந்தச் சட்டங்களின் பாரதூரம் அன்று அவ்வளவாகத் தெரியவில்லை. மலையக தமிழ் மக்கள் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேல் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டு அனுபவித்த மிக மோசமான அடக்கமுறைகளுக்கு இந்த சட்டங்களின் கொடூரத்தன்மை சான்று பகர்வதாக உள்ளது. 

1948ம் ஆண்டு பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதன் விளைவாக 1977ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 3 தசாப்தங்கள், 30 ஆண்டுகள், எமது பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாதொழிக்கப்பட்டது. அதன் பிறகு எமது மக்களினதும் தலைவர்களினதும் முழுச் சக்தியுமே பிரஜாவுரிமையை மீளப்பெறுவதிலேயே கழிந்தது. போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் மலையகத் தமிழ் மக்களின் பிரச்சனை – 2003ம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரஜா உரிமை சட்டத்தின் வரைக்கும் – பிரஜா உரிமை மட்டுமே சம்மந்தப்பட்ட பிரச்சனை என்றே பார்க்கப்பட்டதே ஒழிய, அம் மக்களின் தேசிய இன அடையாளத்தையும் தேசிய இன உரிமையையும் நிலைநாட்டுவதன் மூலம் இந்த நாட்டின் ஏனைய இனங்களுக்கு உள்ளது போல தேசிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் பார்க்கப்படவில்லை. தேசியக் கட்சிகள், இந்த மக்களின்  வாக்கு வங்கியை தமது ஆட்சியதிகாரத்திற்கும் இருப்பிற்கும் பயன்படுத்திக் கொள்ளவே பார்த்தது. இன்று குடியுரிமைப் பிரச்சனை சட்ட ரீதியாக தீர்க்கப்பட்ட போதும் இலங்கையின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகளுக்கு  உரித்தற்றவர்களாகவே மலையக மக்கள் காணப்படுகின்றனர். பிரதேச சபைக்கும் மாகாண  சபைக்கும் வாக்களித்தாலும் அதிலிருந்து அபிவிருத்திகளை பெறுவதில் சட்ட ரீதியான தடை என உரிமை மறுப்புக்கு உட்பட்டே மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தேசிய அரச நிருவாகத்தில் முழுமையாக இணைய முடியாத நிலையே உள்ளது. இலங்கையில் உள்ள ஏனைய இனக் குழுக்களையும் விட தனி்த்துவமான அரசியல் வரலாற்றைக் கொண்ட இனக்குழுவாக மலையக மக்கள் காணப்படுகின்றனர். இன்று அரசியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டவர்களாகவும் மலையக மக்களே உள்ளனர். 19ம் நூற்றாண்டின் ஏகாதிபத்திய வடிவமான காலனித்துவத்தினால் இலங்கைக்கு தொழிலாளர்களாக குடியேறி தோட்ட இராச்சியத்திற்குள் தீவிர உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி காலனித்துவவாதிகள் வழங்கிய சொற்ப அரசியல் உரிமையைப் பெற்று வாழ ஆரம்பித்த நிலையில், சிவில் அரசியல் உரிமைகள் இனத்துவ நோக்குடன் சுதேச ஆட்சியாளர்களினால் பறிக்கப்பட்டது. குடியுரிமை மீட்பு போராட்டம், தொழிலாளர் வர்க்க ஒடுக்குதலுடன் பேரினவாத ஒடுக்குமுறைகளின் தொடர்ச்சி, இலங்கைத் தமிழரின் இன விடுதலை போராட்ட முன்னெடுப்புகள் ஆகியவற்றின் விளைவாகவும் மலையக மரபுரீதியான தொழிற்சங்க அரசியலின் புறநடையாகவும் மலையகத் ‘தேசியம்’ என்ற கருத்துருவாக்கத்தின் செயல் வடிவம் முனைப்புப் பெற்றது. இதனை கருத்திற்கொண்டு அவற்றில் இழையோடும் அகக்காரணியான மலையக மைய நீரோட்ட (தொழிற்சங்கவாதம், பாராளுமன்றவாதம்) அரசியல் பயணமும் அதன் பங்களிப்பும் தோல்வியும் பற்றி உரையாடி மலையக அரசியலை அணுகுவதே அதன் முழுமையான பிம்பத்தை தரும். ஏனெனில் இதுவரை பேசப்பட்டுள்ள மலையக மக்களின் அரசியல் செல்செறி முழுமை பெற்ற ஒன்று அல்ல. இலங்கைச் சமூகம் பல்லின, பல் மத, பல் கலாச்சாரப் பண்புகளைக் கொண்ட ஒரு சமூகமாக இருக்கின்றமையால் ஆட்சியில் சகலரும் பங்குபற்ற வேண்டிய தேவை உள்ளது. சகல கருத்துகளும் உள்வாங்கப்பட்டு பன்முகத்தன்மை, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகளை  நிலைநாட்டல் என்பவற்று முக்கியத்துவம் கொடுக்கப்படல் அவசியம். இந்நிலை மலையகத்திற்கும் பொருந்தும்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்  இலங்கையிலிருந்து அனைத்து சமூகத் தலைவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இலங்கை நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணம் எழுந்த பிறகு இந்த நாட்டை  கட்டியெழுப்பும் பணியில் மலையகத் தமிழ் மக்களும் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முதல் பாராளுமன்றத்திலேயே கிட்டத்தட்ட 6 இலட்சம் மக்களின்  வாக்குரிமை பறிக்கப்பட்டமை 20ம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் உரிமை மீறலாகும்.

1948ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமை சாசனத்தின் 15 ஆவது உறுப்புரை :

  •  தேசிய இனத்தவராக இருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
  • எவரேனும் ஒருவரின் தேசிய இனத்துவம் மனப்போக்கனான வகையில்    பறிக்கப்படவோ தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை  மறுக்கப்படுவதோ ஆகாது  

என வலியுறுத்துகின்றது. சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் பிரகடனப்படுத்தப்பட்ட அதே ஆண்டில் எமது பிரஜா உரிமையும் பறிக்கப்பட்டது. இதனைவிட உரிமை மீறல் இருக்க முடியுமோ? 

மலையக தமிழர்களின் பிரஜா உரிமை பறிப்பு சமகால அரசியலில் மலையக் தமிழ் மக்கள் மிகப் பின்தங்கிய நிலைக்கு ஓர் காரணமாக உள்ளது. சுதந்திர இலங்கையின் அரசக் கொள்கைகளில் தோட்டத் தொழிலாளர்கள் அல்லது மலையக தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்த விடயங்களிலும் மலையக தமிழ் மக்களுக்கு உரிய பங்களிப்பு வழங்கப்படுவதில்லை. காணி வழங்குவதில் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வரவு – செலவு திட்டங்கள், நிதி ஒதுக்கல், அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தல், அரச நிர்வாக அமைப்புக்களை உருவாக்கல், மாவட்டச் செயலகங்கள் – பிரதேச செயலகங்கள் – கிராம சேவகர் பிரிவு என்பவற்றை உருவாக்கல், கல்விக் கொள்கை போன்ற இவ்விதம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை வகுக்கும் விடயங்களில், எக்கட்சி ஆட்சியிலிருந்தாலும் அதில் மலையக தமிழ் மக்கள் இனவாதக் கண்னோட்டத்தில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர். மலையகத் தமிழ் மக்களில் 80 வீதமானோர் தொழிலாளர்களாக இருந்தபடியால், இம் மக்களின் பிரச்சனைகளை தொழிலாளர்களின் பிரச்சனையாக, தொழிற்சங்கப் போராட்டத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தி விட்டனர். அவர்கள் ஓர் தேசிய இனம் என்ற அடிப்படையில் ஏனைய சமூகங்களை விட மோசமான அடக்குமுறைக்கு முகம் கொடுக்கின்றனர் என்பதைப் பார்க்க மறந்து விட்டனர். அதன் பிரதிபலன் சமகால அரசியலில் சிறுபான்மைச் சமூகங்களில், இன்றுமொரு சிறுபான்மைச் சமூகமாகவே  இருக்க வேண்டிய சூழல் மலையக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. வடக்குக் கிழக்குத்  தமிழ் மக்கள் ஓர் தேசியம் என்பதில் அங்கு செயற்பட்ட அரசியல் தலைமைகளிடையே கருத்து வேறுபாடு இல்லை. அதே போல தென்கிழக்கு மாகாணத்தின் கோரிக்கை முஸ்லிம் மக்களால் முன்னெடுக்கப்படுகிறது. 1950 களில் ஏற்பட்ட இந்தக் கோரிக்கை படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்றைய வடிவத்தைப் பெற்று மற்ற சமூகங்களுள் ஓரளவேனும் சமகால அரசியலில் அவர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஆனால் மலையகத் தமி்ழ் மக்களையும் மலையகத் தலைவர்களையும் பொறுத்தவரையி்ல் சிறு சிறு விவகாரங்களில் கூட கருத்தொற்றுமை கிடையாது. பெற்றுக் கொள்வதாகக் கூறும் அற்ப சொற்ப விடயங்களுக்குக் கூட போட்டி போட்டுக் கொண்டு உரிமை கோருகின்றனர். 2000 அடிக்கு மேற்பட்ட உயரத்திலுள்ள மத்திய மலைப்பகுதிகளில் காடாயிருந்த பூமியை வளம் கொழிக்கும் தேயிலை, இறப்பர் பயிரிடும் பெருந்தோட்டங்களாக மாற்றி இன்று வரையிலும் அந்நியச் செலாவணியில் பெரும் பகுதியை பெற்றுத் தரும் இம் மக்கள் இந்நாட்டின் முழுமையான பிரஜையாகளாகக் கணிக்கப்பட்டு தேசிய நீரோட்டத்தில்  இணைத்துக் கொள்ளப்படாமல் ஓரம் கட்டப்படுவது மனித நாகரீகத்திற்கே அவக்கேடான விடயமாகும். மலையக மக்கள் எனும் சொற்பதம் வரலாற்றின் ஓர் உருவாக்கம். இந்த நாட்டின் முதலாளித்துவ பொருளாதாரத்தின் தோற்றத்துடன் தோற்றுவிக்கப்பட்ட பொருளாதாரத்தின் விளைவு. இன்று இந்தியத் தமிழன் என்பதை விட  மலையகத் தமிழன் என்றழைப்பது சர்வ சாதாரணமான வழக்காகி விட்டது. தோட்டத் தொழிலுக்காக இங்கு வந்து மலையகப் பகுதிகளில் 2 நூற்றாண்டுகளுக்கு மேல் ஒன்றாக வாழ்வதன் பயனாக ஏற்பட்ட உணர்வே மலையகத் தமிழர் என்ற உணர்வாகும்.

up country protest

இலங்கையைப் பொறுத்த வரையில் ஆகக் குறைந்தமட்ட ஊழியத்தை பெறுவது தோட்டத் தொழிலாளர்களே. ஒப்பீட்டு ரீதியில் ஏனைய துறைகளை விட முறைசாரா தொழிலாளர் பெறும் வேதனத்தைவிட குறைந்த நாளாந்த ஊழியத்தைப் பெறுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதார உரிமை கேள்விக் குறியாகின்றது. மலையகத் தோட்ட  தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்த அடிப்படையில் நாட் சம்பளம் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தச் சம்பள ஒப்பந்தம், ஐ.நா வர்த்தக ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விகுறியே.

உலகில் செயற்பட்டுவரும் ஏறக்குறைய அனைத்து விவசாயத் துறைகளுமே தமது ஊழியர்களுக்கு நாளாந்த வேதனங்களை செலுத்தும் முறைகளை பின்பற்றிவருகின்றன. பெருந்தோட்ட விவசாயத்ததில் ஈடுபட்டுவரும் பெருந்தோட்டக் கம்பனிகளும் இதற்கு  விதிவிலக்கன்று. இந்தக் கம்பனிகள் எங்கெங்கு உருவாக்கப்பட்டனவோ அங்கெல்லாம்  ஊழியருக்கு அவை நாளாந்த வேதனங்களையே செலுத்தி வருவதோடு மலிவான ஊதியம் அவற்றின் விசேட பண்பாக உள்ளது. அதாவது தொழிலாளர்களுக்கு செலுத்தப்படும்  வேதனங்கள் குறைந்த மட்டத்திலேயே பராமரிக்கப்படுவதோடு நெடுங்காலத்திற்கு அவை  தேக்க நிலையிலும் வைக்கப்பட்டன. இலங்கையின் தேயிலைத் தோட்டத்திற்கும் இந்த  நிலைமை பொருந்தும். 1980ம் ஆண்டு வரையிலும் வேதனங்கள் ஏனைய துறைகளின் தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட்ட வேதனங்களிலும் பார்க்க குறைவாகவே இருந்தன. வேதனங்கள் இவ்வாறு குறைந்த மட்டத்திலும் நீண்ட கால தேக்க நிலையிலும் காணப்பட்டபோதும் பெருந்தோட்ட வேதனங்களும் தொழில் நிலைமைகளும் பெரிதும் ஒழுங்குபடுத்தப்பட்டவையாக இருந்து வந்துள்ளமை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்.

  1. மலையகத் தோட்டங்கள் பெருமளவிலான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியமை 
  2. மலையக தோட்டங்களின் ஊழியச் சந்தைகள், தொழிலாளர் வேலை செய்யுமிடங்கள், ஊழியப்படைகள் என்பன பெரிதும் ஒழுங்குபடுத்தப்பட்டவையாக இருந்தமை

போன்றன காரணமாக பெருந்தோட்டத் துறையில் வேதனங்கள், தொழில் நிலைமைகள், தொழில் நிபந்தனைகள் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக காலத்திற்கு காலம் இலங்கையில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன. அவ்வாறு இயற்றப்பட்ட சட்டங்களுள் பல இன்றும் எமது சட்ட நூல்களில் இடம் பிடித்துள்ளன. ஆனாலுங்கூட தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மை பயப்பதற்கென உருவாக்கப்பட்ட இச்சட்டங்கள் அண்மைக் காலம் வரை, அந்நியராகவும் வந்தேறு குடிகளாகவும் கருதப்பட்டு வந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆகக் குறைந்த சேவைகளையேனும் வழங்கவேண்டிய பொறுப்பிலிருந்து அரசாங்கத்திற்கு விலக்கு அளித்தன என்பதை இங்கு குறிப்பிடாதிருக்க முடியாது. அரசாங்கச் சேவைகளினூடாக தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்கத்திடமிருந்து ஆகக்குறைந்த நன்மைகளையாவது பெற்றுக் கொள்வதற்கு இச்சட்டங்கள் தடையாக இருந்தன எனக் கூறின் அது மிகையானது. 70ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தோட்டங்கள் தேசியமயமாக்கப்படும் வரை அவை தனியார் கம்பனிகளுக்கே உரித்தானவையாக இருந்த நிலையில், 1941ம் ஆண்டு வேதனங்கள் சட்டத்தின் கீழ் வேதனசபைகள் உருவாக்கப்பட்டன. இந்த வேதனச் சபைகளில் அரசாங்கம்,  தொழில் வழங்குநர், தொழிற்சங்கங்கள் ஆகிய மூன்று பிரிவினர் பிரதிநிதித்துவம் வகித்தனர். இருப்பினும் தோட்டத் தொழிலாளரின்  வேதனங்கள் வேதன சபைச் தீர்மானங்களுக்கு உட்பட்டதாக மாறியதால் பெருந்தோட்ட கம்பனிகள் தமது தொழிலாளர்களுக்கு வாழ்க்கை செலவுப்படியை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின. ஏனைய துறைகளைச் சார்ந்த தொழிலாளரைப் போன்று தோட்டத் தொழிலாளருக்கும் செலவுப்படியை செலுத்துவது தொடர்பாக தோட்டத் தொழிற்சங்கங்களுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக 1996ம் ஆண்டு வேதன சபைக் கூட்டத்தில் வாழ்க்கை செலவுப்படியை செலுத்துவதனின்று தோட்ட கம்பனிகள் தம்மை முற்றாக விடுவித்துக் கொண்டன. இந்தப் படியை செலுத்துவது முற்றாக கைவிடப்பட்ட பின்னர் வாழ்க்கை செலவு அதிகரிப்பினின்றும் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான எவ்வித ஏற்பாடுகளும் இல்லாதொரு நிலைக்கு மலையக மக்கள் தள்ளப்பட்டனர். மேலும் தேயிலையின் விலையானது பூகோள மட்டத்தில் தங்கியிருக்கும் ஒன்றாகும். காலந்தோறும் ஏற்பட்டு வந்த மாற்றங்கள் காரணமாக தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர் வேதனங்களை நிர்ணயிப்பதில் வேதன சபை செயலிழந்தது. அதேவேளை 1990ம் ஆண்டுகளின் பிற்பகுதி முதல் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே காலத்திற்கு காலம் கைச்சாத்திடப்பட்டு வந்த கூட்டு ஒப்பந்தங்கள் வேதனங்களை நிர்ணயிப்பதற்கான பிரதான வழியாக மாறின. இருப்பினும் 2004ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றின் ஆதாரத்தின்படி, வேலை வழங்கப்படும் நாட்களில், 90 இற்கு மேலான நாட்களில் வேலைக்குச் சமூகமளிப்போருக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் உள்ளடக்கப்பட்டன. இவ்வாறு காலத்திற்கு காலம் கூட்டு ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றாலும் கூட, அதனை பற்றி மேலும் விரிவாக ஆராய்வதை விடுத்து மலையக மக்களின் வேதன நிலையினைப் பற்றி சற்று ஆராய்வது உசிதமானதாகும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உள்ள உரிமையாகும். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த உரிமை எல்லா மக்களையும் சென்றடைவதில்லை.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7631 பார்வைகள்

About the Author

சந்திரகுமார் தமயந்தி

‘மலையம் 200’ நிகழ்வுகளை முன்னிட்டு, விம்பம் அமைப்பினரால் எழுநாவின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சந்திரகுமார் தமயந்தி அவர்களால் எழுதப்பட்ட ‘வலியில் இருந்து வாழ்வு வரை : அரசியல், பொருளாதார, சமூக அபிவிருத்திக் கண்ணோட்டம்’ எனும் இக் கட்டுரை இரண்டாம் பரிசைப் பெற்றது. இக் கட்டுரை எழுநாவில் மூன்று பகுதிகளாக வெளியாகின்றது.