ஆளும் வர்க்கத்தினரால் அல்லது வசதியுள்ள வர்க்கத்தினரால் சாதாரண மக்கள் காலங்காலமாக சுரண்டப்படுவதும் அதற்கு எதிராக போராட்டங்கள் வெடிப்பதும் இயல்பே. உலகில் இதைப் போன்ற சுரண்டல்களுக்கு எதிராக பல போராட்டங்கள் மற்றும் புரட்சிகள் வெடித்திருக்கின்றன என்பது வரலாறு. இலங்கையில் பல்லின மக்கள் வாழ்ந்தாலும் இன்னும் அந்நியர்கள் போலவே நடத்தப்படுகின்ற ஒரு சமூகம் மலையகச் சமூகம். அவர்கள் இந்த நாட்டின் குடிகள் இல்லை என்று முன்னைய அரசுகளினால் நாடு கடத்தப்பட்ட துயர்மிகு வரலாறுகளை மறக்கமுடியாது.
உறவுகள் தாய்நாட்டிற்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் எஞ்சிய மக்கள் இந்த நாட்டில் வேர்பிடித்து துயரத்துடனே வாழத்தொடங்கினர். அரச நிர்வாகத்திற்கு பதிலாக தோட்டக் கம்பனிகளின் நிர்வாகத்திற்கு கீழேயே இன்றும் வாழ்கின்றனர். அங்கு தோட்ட நிர்வாகம்தான் அனைத்தும்; அரசாங்கம் கண்டுகொள்வதில்லை. அவர்களது வாக்குகளால் சுகபோகங்களை அனுபவிப்பவர்களும் இவர்களை கண்டுகொள்வதில்லை. அதனால்தான் மலையகம் தொடர்பான தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நாட்டிற்கு வெள்ளைக்காரர்களின் அடிமைகளாக கூலி வேலைக்கு வந்த பரம்பரையினர் என்றாலும் இந்த நாட்டின் பொருளாதார முதுகெலும்பே இந்த மக்கள்தான். உலகளவில் தேயிலைக்கு என்று தனிக் கேள்வி உள்ளது. சீனா, இந்தியா தொட்டுப் பல நாடுகளிலும் நாட்டின் பொருளாதாரத் தூணாகத் தேயிலை உண்டு. இலங்கைக்கும் அப்படிதான். இந்த நாட்டின் பொருளாதாரத்தை தூக்கிச் சுமப்பதாக தேயிலைத்துறை இருக்கின்றது. சுதந்திரத்திற்கு பின்பு இருந்து இன்றுவரை இலங்கைக்கு வருமானம் ஈட்டித்தருகின்ற முக்கிய துறையிது. ஆனால் அந்தத் துறையின் வளர்ச்சிக்கு காரணமான மலையகத் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசோ அல்லது அதனை நிர்வகிக்கின்ற கம்பனிகளோ உரிய நடைமுறைகளைச் செய்வதில்லை.
இதனால்தான் இன்று பல தேயிலை தோட்டங்கள் காடுகளாக்கப்பட்டுள்ளன. குளவிகள் தொட்டு சிறுத்தைகள் வரை பல வனவிலங்குகளின் தாக்குதல்களுக்கு தோட்டத் தொழிலாளர்கள் இலக்காகிக் கொண்டிருக்கிறார்கள். ‘கொரோனா’ என்ற ஆட்கொல்லி உலகளவில் பரவி உயிர்களை காவிக்கொண்டிருந்த வேளையில் வேறு தொழில் செய்பவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். சில தளர்வுகளின் போது மட்டும் வேலைக்குச் சென்றனர். ஆனால் கொரோனாவையும் பொருட்படுத்தாது தொடர்ந்து வேலைக்குச் சென்று நாட்டின் வருமானத்திற்காக உழைத்துக்கொண்டிருந்தது மலையகத் தோட்ட தொழிலாளர்கள் மட்டுமே. அவர்களை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.
வாக்குகளை வாங்கும் அரசியல்வாதிகள் திடீர் பணக்காரர்களாகி உலகம் சுற்றி வருவதைக் காணலாம். ஆனால் மக்கள் அதே நிலையில்தான் மாற்றமின்றி இருக்கின்றனர். இவர்களின் நாட்சம்பளம் இவர்களது வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு போதாமல் உள்ளது. உழைப்பதற்கு மிகக் குறுகிய அளவிலேயே ஊதியம் கிடைக்கின்றது என்ற குரல் காலங்காலமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் இந்தக் குரல் சற்றுப் பலமாக ஒலித்தது. விலைவாசி ஏற்றத்திற்கு இவர்களின் வருமானம் போதாது என்பதால் சம்பள உயர்வுகளை வேண்டி போராட்டம் நடைபெற்றது. ஆனால் அந்தப் போராட்டத்தி்ற்கு தீர்வு கிடைக்க ஆறு வருடங்கள் போராட வேண்டியிருந்தது. அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலத்தில் 1000 ரூபாய் பெற்றுக்கொடுக்க எடுத்த முயற்சிகள் இறுதிவரை முற்றுப் பெறாமல் இருந்தது. அவர் எத்தனை முயற்சி்த்தும் இறுதியில் அவரது எதிர்பாராத மரணத்தோடு ஆயிரமும் மடிந்ததாகவே பலரும் நினைத்தனர். ஆனால் அவருக்குப் பிறகு அவரது மகன் ஜீவன் ஆயிரம் ரூபாவை தனது வாக்குறுதியாக அளித்தார். பல கட்ட போராட்டங்களின் பின்னர் அது கிடைத்ததில் மகிழ்ச்சி என்றாலும் அது காலம் தாழ்த்திக் கிடைத்தது என்பதே உண்மை. இந்நிலையில் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு அறிவிக்கப்பட்ட நாள் முதல் மேலதிகமாக கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் நிபந்தனைகளை விதிப்பதாக மலையகம் முழுவதுமே மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மலையகத் தோட்ட தொழிளாலர்களுக்கு நியாயமான சம்பளம் பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ‘கூட்டு ஒப்பந்தம்’ தொழிற்சங்கத்தினரதும் முதலாளிமார் சம்மேளத்தினதும் நலன்களை மாத்திரமே நிறைவேற்றியுள்ளது. இதற்காக அப்பாவி மக்களின் கடுமையான உழைப்பு தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளால் சுரண்டப்பட்டுள்ளது. இன்றும் சுரண்டப்படுகிறது. தேசிய அரசாங்கம் தோற்றம் பெற மலையக மக்கள் பிரதான பங்கு வகித்தனர். ஆனால் இன்று அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் பின்வாங்குகிறது. மலையக மக்களுக்கு நன்மை விளைவிப்பதாக காட்டிக்கொண்டு அவர்களின் பொருளாதாரத்தைச் சிதைக்கும் வேலைகள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் நடைபெற்று வருகின்றன. அரசியல் தலைவர்களை நம்பி மக்கள் வாக்களித்தனர். ஆனால் மலையகத் தலைவர்கள் அரசுகளுடன் சமரசங்களை உருவாக்கிவிட்டு மக்களை கைவிட்டு விடுகின்றனர்.
மறுபுறம் பல தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் வேலை கிடைப்பதில்லை. இரண்டு, மூன்று, நான்கு நாட்கள் என வேலைகளை வழங்குவதால் வேறு தொழில்களுக்கும் போக முடியாத நிலை. முன்னெல்லாம் 18 கிலோவுக்கு ஒரு நாள் சம்பளம் கொடுக்கப்பட்டது. இன்று ஒரு நாளைக்கு 26 கிலோ எடுத்தால்தான் சம்பளம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காலை, பகல், மதியம் என மூன்று நேரமும் 2 கிலோ வீதம் கொமிசனும் எடுத்துக்கொள்கின்றனர். ஒருவர் எத்தனை கிலோ கொழுந்து எடுத்தாலும் அதில் 6 கிலோ கழிக்கப்படும். ஒரு நாளைக்கு 20 கிலோ எடுத்தாலும் அதில் 6 கிலோ கழிப்பட்டு 14 கிலோவாக மாறும். இது அவருக்கு அரைச் சம்பளத்தையே பெற்றுக்கொடுக்கும். 16 கிலோ எடுத்தால், அதிகமாக வரும் 2 கிலோவிற்கு 40 ரூபாய் 50 ரூபாய் எனக் கொடுப்பார்கள். முழுச் சம்பளத்தை அவர் பெற வேண்டுமாயின் மேலும் 6 கிலோ அதிகம் எடுக்க வேண்டும். ஆக குறைந்தது 20 கிலோவிற்கு ஒருநாள் சம்பளம் கொடுத்தால் அதனுடன் மேலதிகமாக கொமிசன் 6 கிலோ எடுக்க வேண்டி உள்ளது. இது எவ்வளவு பெரிய சுரண்டல். இதற்கு பல தோட்டங்களில் முன்களப் பணிப்புரியும் தோட்ட அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர் என்பது வேதனை. மலையக மக்கள் என்பவர்கள் ஆடு, மாடுகளாகவோ பொதி சுமக்கும் கழுதைகளாகவோ இருக்க முடியாது. அவர்கள் உணர்வுகளைக் கொண்ட உயிரென்று யாரும் உணர்வதில்லை. ஆயிரம் ரூபா கொடுத்துவிட்டு அதன் மூலம் எவ்வளவு உறிஞ்ச முடியுமோ அவ்வளவு உழைப்பை உறிஞ்சுவது எத்தனை பெரிய கொடுமை. அதுவும் கொழுந்து இருக்கும் காலத்தில் 20 கிலோ 30 கிலோவாக மாறலாம். அவ்வளவு பறிப்பவர்களும் உள்ளனர். ஆனால் மழையின்றி வெயில் மற்றும் பனிப் பொழிவுகள் நிறைந்த காலப்பகுதியிலும் அதே 30 கிலோ எடுக்க வேண்டும் என்று வலுக்கட்டாயமாகத் துன்புறுத்துவது எத்தனை கொடுமை. இதற்கு எதிராக சரியான குரல் கொடுக்கவும் யாருமில்லை. அப்படியே குரல் கொடுத்தால் அது ஒடுக்குமுறைகளால் அடக்கப்படுகிறது என்பதே உண்மை. தங்களது அரசியல் இலாபத்திற்காக சில அரசியல்வாதிகள் இதனை எதிர்த்து அறிக்கை விடவும் செய்கின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான் தொடர்கிறது. அட்டைக் கடியில் இரத்தம் கொடுத்து உழைப்பவர்களை அட்டையை விட அதிகமாக இன்று தோட்ட நிர்வாகங்கள் உறிஞ்சி எடுக்கின்றன என்பதே உண்மை. இந்நிலைக்கு காரணம் மலையக மக்கள் இன்னும் தங்கள் உரிமைகளைப் பற்றி அறியாமையே. உலகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பூகோளமயமாக்கம் (Globalizations) முற்றிலும் புதிய நிலையை உலகத்தில் தோற்றுவித்துள்ளது. எனவே வளர்ந்து வரும் தொடர்புகளையும் சிந்தனை மாற்றங்களையும் உணர்ந்து அதை மலையகத் தமிழ் சமுதாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மனிதன் ஓர் சமூகப்பிறவி என்கிறார் சிந்தனையாளர் அரிஸ்ரோட்டில். இதன் அர்த்தம் சமூகத்துடன் இணைந்து கூட்டமாகவும் தனியாகவும் வாழ்வதே ஆகும். மனிதன் சமூகமாக வாழும் போது தன் கூட்டடையாளத்தையும் கூட்டிருப்பையும் பேணிக் கொள்ள முடியும். அதன் வழி கூட்டுரிமைக்காக போராட முடியும். ஓர் சமூகம் அதன் அடையாளத்தின் பேரால் ஒடுக்கப்படுகின்ற போது அதற்கெதிரான கூட்டுச் செயற்பாடுகள் மூலம் தன் தனிப்பட்ட நலன்களையும் கூட்டு நலன்களையும் பேணிக்கொள்ள முடியும். கூட்டுரிமைகளை போராடிப் பெற்றுக் கொள்ள முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட பொறுப்புக்கள் இருகின்ற அதேவேளை கூட்டுப்பொறுப்பும் இருக்க வேண்டும். இங்கு கூட்டுப் பொறுப்பென்பது சமூக நலனுக்கான பொறுப்பேயாகும். தன் சமூகத்தின் பொது நலனுக்காக உழைக்க வேண்டியது ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீகக் கடமையாகும். இதை மலையக வாழ் சமூகத்தினர் நன்கு விளங்கிக் கொண்டால் ஒழிய அவர்களுக்கான விமோசனம் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை. இலங்கையின் பொருளாதாரத்தில் நீண்ட காலமாக பெருந்தோட்டத்துறை முக்கிய பங்கினை அளித்து வருகின்றது. இலங்கையின் விவசாய நிலத்தில் 50 சதவீதத்திற்கும் மேலானவற்றில் பெருந்தோட்ட விவசாய நடவடிக்கைகளே செய்யப்படுகின்றன.
பொருளாதாரத்தை பன்முகப்படுத்த எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள், பெருந்தோட்ட உற்பத்திகளின் விலை வீழ்ச்சி என்பனவற்றின் மத்தியிலும் கூட இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாயின் கணிசமான வீதத்தினை பெருந்தோட்டத்துறையே அளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களினது வீட்டு வசதியானது நூற்றாண்டு காலமாக கவனிப்பாரற்றும் தரங்குறைந்தும் காணப்படுகின்றது. பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் தொழிலாளர் தங்குவதற்காக தற்காலிக குடிசைகளே அமைக்கப்பட்டிருந்தன. பின்னர் தேயிலைத் தோட்டம் சுபீட்சம் பெற்றதையடுத்து 1927ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கட்டப்பட்ட ‘லைன்’ வீடுகளே இன்றும் காணப்படுகின்றன. 65 வருடங்களுக்கும் மேலாக லயன் அமைப்பு முறை காணப்படுகிறது. மலையகப் பகுதிகளில் பெரும்பாலான வீடுகள் ஏறத்தாழ 150 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டவையாகும். அத்துடன் மலையகப் பகுதிகளில் 50% ஓர் அறையினைக் கொண்ட வீடுகளாகும். 83.4% இருண்ட அறைகளைக் கொண்ட வீடுகள். இதனை விட மொத்த வீடுகளில் 89% லயன் வகையான வீடுகளாகும். தொழிலாளர்களின் வசிப்பிடங்கள் பெரும்பாலும் 180 சதுர அடி இடப்பரப்பிலேயே கட்டப்பட்டுள்ளன. எனவே மிகவும் பழைமையான சிறிய வசிப்பிடங்களில் ஓர் சராசரிக் குடும்பத்தில் 5 பேர் வாழக்கூடிய துரதிஸ்ட நிலையே காணப்படுகிறது. தேசிய ரீதியில் சராசரியாக தனியொருவருக்கு சுமார் 100 சதுர அடி வாழ்விட வசதி காணப்படுகின்றது. ஆனால் தோட்டங்களில் வாழ்வோருக்கு 46 சதுர அடி வாழ்விட வசதியே காணப்படுகின்றது. மிகச்சிறிய வாழ்விடங்களே காணப்படுவதுடன் அவற்றில் ஏனைய வசதிகளும் மிகக்குறைவாகவே உள்ளன.
‘வீடு’ என்பது தனியே வெயிலிற்கும் மழைக்குமான ஓர் ஒதுக்கிடம் அல்ல. அது சமூக நிறுவனமும் கூட. அங்கேதான் சமூக நாகரீகத்தின் அஸ்திவாரம் இடப்படுகிறது. வீடு என்பது குறைந்தப்பட்ச தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். காற்றோட்டம், குடீநீர் வசதி, கழிவகற்றும் வசதிகள், சுகாதாரமான சமையல் வசதி என்பனவுடன் மின்சார வசதியும் தேவை. அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்போது பெரும்பாலான தோட்டப்புற லயன் வீடுகளின் கூரை தகரத்தினாலானது என்பதும் அவை 150 வருடங்களுக்கு மேல் பழைமையானது என்பதும் தெரியவந்துள்ளது. 150 வருடங்களுக்கு முன்பு வீடுகள் கட்டப்பட்ட பின்னர் கூரை மாற்றப்படாததால் மழைக்காலங்களில் முழு வீட்டிலும் மழைநீர் ஒழுகுவதால் குடியிருப்பாளர் பெரிதும் துன்புறுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய அடிப்படை வசதிகள் ஆடம்பரமானவையல்ல. சுகாதாரமான ஆரோக்கிய வாழ்விற்கு இவ் வசதிகள் அத்தியாவசியமானவை. குடிநீர் வசதிகள் திருப்திகரமானதாக இல்லை. 60 லயன்களுக்கு குழாய் நீர்வசதி இருப்பதாக கூறப்பட்டாலும், குழாய் மூலம் வரும் நீர் சுத்திகரிக்கப்பட்ட நீரல்ல என்பதும், கிரமமாக இதில் நீர் வருவதில்லை என்பதும் முக்கிய குறைபாடாகும். சில மலையகப் பிரதேசங்களில் கால்நடைகளின் பாவனைக்கு கூட உதவாத நீரினை மக்கள் பயன்படுத்துவதைக் காண்கிறோம்.
மலசலகூட வசதிகள் சில இடங்களில் காணப்பட்டாலும் கூட அவை பாதுகாப்பான முறையில் அமைக்கப்படாது பல குறைபாடுகளோடு உள்ளன. அத்துடன் ஏறத்தாழ 40% தோட்ட வசிப்பிடங்களுக்கு எவ்வித மலசலகூட வசதிகளும் இல்லை. சிறார்கள் கல்வியிற் பெரிதும் பின்தங்குவதற்கு பல காரணங்கள் பொறுப்பாக இருந்தாலும் மிகவும் தாழ்நிலையில் உள்ள வீட்டு வசதியும் முக்கியமானதொரு காரணி என்பதையும் நாம் மறக்கலாகாது. 5 பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று ஒரே அறையில் வசிக்கும்போது பாடசாலை செல்லும் மாணவர் எவ்வாறு வீட்டில் தனது பாடங்களைத் தயார் செய்யமுடியும்? மின்சார வசதியோ, ஒரு சில தோட்டங்களைத் தவிர்த்து ஏனையவற்றில் கிடையாது. அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாது மாணவர்கள் சிரமப்படுகின்றனர். 2015 – 2019 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் முன்னாள் மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வீ்ட்டுத்திட்டங்களும் தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்படவிருந்த 10000 வீட்டுத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மலையக மக்களைப் பொறுத்தவரையில் மற்றொரு பாரிய பிரச்சினை அடிக்கடி லயன் வீடுகள் தீ அனர்த்தத்திற்கு உட்படுவது. ஊடக அறிக்கையிடல் மூலம் திரட்டப்பட்ட தகவல்களின் மூலம் நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களில் தலா 36,619 லயன் குடியிருப்புகள் தீ விபத்தை எதிர் கொண்டுள்ளன. இந்த வருடத்தில் (2023 ஜீலை) ஏழு மாதங்களில் மலையகத்தில் 53 லயன் வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. தீ விபத்திற்கான காரணம் வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் கூட மின்கசிவு ஓர் காரணமாகச் சொல்லப்படுகிறது. லயன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கை 1990 ஆம் ஆண்டுக்கு பின்பே ஆரம்பிக்கப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட மின் இணைப்புகளுக்கான மின் கட்டமைப்புகளே தற்போதும் பாவனையில் இருக்கின்றன. சுமார் 30 வருடங்களுக்கும் மேலான மின் கட்டமைப்புக்களில் மாற்றமின்மையே தீ பரவலுக்கு காரணமாகும். லயன் வீடுகளில் காணப்படும் ‘அட்டல்’ (வீட்டு கூரைக்கு கீழான பகுதி) எனும் விறகு சேகரித்து வைக்கும் பகுதியும் விரைவான தீ பரவலுக்கு காரணமாகிறது. பெருந்தோட்ட லயன்கள் அதிகம் தீ விபத்திற்கு உள்ளாவதற்கு நெருக்கமே பிரதான காரணமாகும். ஒரு தொடர் லயன் குடியிருப்பில் 16 -20 வரையான வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ளமையே இலகுவில் தீ பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது. அவ்வாறு தீ விபத்திற்கு உட்படும் வீடுகள் மட்டுமன்றி அங்கு வாழும் மக்களின் பெறுமதிமிக்க ஆவணங்களும தீயின் நாக்கிற்கு இரையாவாதால் மக்களின் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகுகின்றது.
வசதிகளற்றதும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தக் கூடியதுமான தோட்டப்புற வீடுகள் விருத்தி செய்யப்படுவது உடனடித் தேவைகளில் ஒன்றாகும் மலையக மக்களின் வாழ்விடப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். பெருந்தோட்டங்களின் உற்பத்திகளுக்கு விலை குறைந்துள்ளது. பெருமளவு தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. இந்நிலையில் எவ்வாறு தொழிலாளர்களது நலன்களை கவனிக்கமுடியும்? தோட்ட நிர்வாகங்கள், தொழிலாளர் நலச்சேவைகள் என மாத்திரம் இவற்றைக் கருதி வீட்டு வசதிக்கான செலவீனங்களை ஒரு செலவீனமாகக் கருதாது, வீடுகளைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். தோட்டத்தின் உள்ளமைப்பு வசதிகளைப் பெருக்கும் முதலீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தொழிலாளர்களை சுயவீடமைக்கும் முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும். ஒவ்வொரு தோட்டமும் தனது தோட்டத்தில் உள்ள 50 வீதமான குடும்பங்களுக்கு சுய முயற்சியில் வீடு கட்டிக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்பு வழங்க முடியும். இதற்காக இலவசமாகச் சிறிதளவு நிலத்தை வழங்க முடியும். இதற்கு தேவைப்படக்கூடிய நிலம் மிகக் குறைவாகும். எஞ்சிய 50 வீதமான வசதியற்ற தொழிளாலர்களுக்கு இப்போது வாழும் இரண்டு லைன் வீடுகளை ஒன்றாக்கி பழுதுபார்த்துக் கொடுக்கலாம். இவ்வாறு அவர்களுக்குச் சொந்தமான வீடுகளைக் கட்டிக்கொள்ளவும் உரிமை கொள்ளவும் செய்யும் நடவடிக்கைகளின் விளைவுகளை மிக விரைவில் காணமுடியும். வீடு அவர்களுக்குச் சொந்தமாகும் பட்சத்தில் தமது செலவீனங்களில் வீட்டு அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்து முதலிடுவார்கள். இது சராசரி மனிதரது இயல்பாகும். தனக்கெனச் சொத்திருந்தால் அதனைப் பலப்படுத்துவதில் ஏற்படும் அக்கறை பற்றிச் சந்தேகப்படத் தேவையில்லை. எனவே வீடுகளைத் தொழிலாளர்களுக்குச் சொந்தமாக்க உடனடியான நடவடிக்கை தேவை என்பது விளங்குகிறது. உணவு சமைப்பதற்கான வசதிகள் போதியதல்ல. வீட்டு வாசலில் ஒரு மூலையிலேயே அவர்கள் சமைப்பது வழக்கமாகும். சமைக்கப்பட்ட உணவு சுகாதாரமாகப் பாதுகாக்கப்படாமையால் பலவகையான நோய்கள் பரவக் காரணமாகிறது.
இலங்கையில் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் தேசிய விவசாயக் கொள்கை ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கங்களாவன:
- நாட்டின் உணவுத்தேவையில் தன்னிறைவு காண்பது.
- குடியடர்த்தி கூடிய பகுதிகளில் உள்ள மக்களை அடர்த்தி குறைந்த வரண்ட வலயப்பகுதிகளில் மீளக்குடியமர்த்தல்.
- நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தைக் கொடுத்து நிலச்சொந்தக்காரர்களாக்கி சமூக அந்தஸ்து, தன்னம்பிக்கை என்பவற்றை அவர்கள் மத்தியில் ஏற்படச்செய்து அதன்மூலம் அவர்களை பொறுப்புள்ள பிரஜையாக நாட்டின் அபிவிருத்தியிற் பங்கேற்க செய்வது.
ஆனால் இத்தகைய உயர்ந்ததும் பரந்ததுமான நோக்கங்களின் நன்மைகள் மலையகத் தமிழ் மக்களை சென்றடைவதில்லை. மலையக மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தின் கீழும் நிலம் வழங்கப்படவில்லை. உதாரணமாக 105 ஆற்று வடிநில அபிவிருத்தி திட்டம், மகாவலி அபிவிருத்தி திட்டம் போன்றவற்றின் மூலம் நான்கு இலட்சம் ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் மலையக தமிழ் மக்களுக்கு எந்தவொரு தி்ட்டத்தின் கீழும் நிலம் வழங்கப்படவில்லை. மலையக மக்களுக்கு வேதன அதிகரிப்பு மட்டும் விமோசனம் தந்துவிடாது. வேதனம் அதிகரித்தால், உணவுப் பொருட்களும் அத்தியாவசியப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படும் நாட்டில் அவற்றின் விலைகளும் அதிகரிக்கும். இதனால் பணத்தின் கொள்வனவுத் திறன் வீழ்ச்சியடைகிறது. இந்நிலையில் தொழிலாளரது சுபீட்சத்திற்கு நிலவுரிமை அல்லது உணவினை உற்பத்தி செய்து கொள்ளத் தேவையான விவசாயம் செய்யும் உரிமை அவர்களுக்கு அத்தியாவசியமாகும். ஏற்றுமதிக்கான பொருளை உற்பத்தி செய்யும் மலையக மக்களுக்கு தமது அன்றாட உணவுத் தேவையில் ஒரு பங்கினை தாமே உற்பத்தி செய்து கொள்ள வாய்ப்பினை அளிக்கவேண்டும். குறைந்த பட்சம் தாம் வாழும் வீட்டிற்காவது அவர்கள் உரிமையாளர்களாக இருக்கவேண்டும். அத்தகைய உரிமைகள் அவர்களை பொறுப்புள்ள பிரஜையாக்குவதுடன் இந்நாட்டு மக்கள் என்ற அந்தஸ்தினை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகவும் அது அமையும்.
அபிவிருத்தி என்பது குறிப்பிடப்பட்ட ஒரு நிலையிலுள்ள ஒன்றை சிறந்த ஒரு நிலை நோக்கி மாற்றத்திற்கு உட்படுத்தும் ஒரு செயன்முறையாகும். இத்தகைய சமூக, பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் மலையகத்தை சார்ந்த இளைஞர்கள் எத்தகைய பங்கினை வகிக்கின்றனர் என்பதை பற்றி இக்காலக் கட்டத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவை உள்ளது. ஓர் சமூகத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கையோ அல்லது இயற்கை மூலவளமோ மாத்திரம் மக்களின் முன்னேற்றத்திலும் அபிவிருத்தியிலும் அக்கறை செலுத்தாது. மக்கள் கல்வியிற் சிறந்து தொழிற்பயிற்ச்சி மிக்கவர்களாக மாறும்போதே அச்சமூகம் அபிவிருத்தி எனும் இலக்கை அடைய முடியும். நமது மலையக சமுதாயம் அபிவிருத்தி எனும் இலக்கை அடைய வேண்டுமானால் எமது நாட்டிலுள்ள இயற்கை வளங்களை சிறந்த வகையில் பயன்படுத்தும் முறையை இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வேண்டும். தொண்டர்களும் பொது நல ஊழியர்களும் ஆற்றும் பணிகளினால் மட்டும் ஓர் சமூகம் வளர்ந்திட முடியாது. அச் சமூகத்தில் மனித வளம் திறமையாகப் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே சமூகம் சுபீட்சத்தை அடைய முடியும். பால்ய வயது முதல் 18 வயது வரையுள்ள இளம் பிராயத்தில் உடல் ஆரோக்கியம், மனவளர்ச்சி, கல்விப்பயிற்சி, தொழில்பயிற்சி என்பனவற்றை சிறந்த முறையிற் பெற்றுக்கொள்ள வழி செய்யவேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். அதன் பிறகு வளர்ச்சியடைந்த ஆண்கள், பெண்கள் இரு பாலாரும் 55 வயது வரை தொழில்புரிய தகுதியுடையவராகின்றனர். இந்நிலையில் முதலில் தொழிலில் தகுதிபெறுகின்றனர். சில வருடங்களில் தான் புரியும் தொழிலில் நிபுணத்துவம் அடைகின்றார்கள். இக்காலத்தில் சமூகப் பொறுப்புகளையும் ஏற்கவேண்டிய நிலைக்கு இளைஞர்கள் தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். முதியோர்களை விட நாட்டின் அபிவிருத்திக்கு ஆற்றக்கூடிய பணிகள் இளைஞர்களுக்கே அதிகம் உண்டு. முதலில் தம்மை தாமே விருத்தி செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு இளைஞரும் தன்னைக் கல்வியில், பொது அறிவில், உடல் ஆரோக்கியத்தில் தொழிற்பயிற்சியில் விருத்தி செய்து கொள்வாராயின் சமூகத்தின் வளர்ச்சியும் விரைவில் ஏற்பட்டுவிடும். படித்த இளைஞர்கள் கட்டாயம் எதாவதொரு தொழிற்பயிற்சியை கற்றுக்கொள்ள வேண்டும். மலையகச் சமூகத்தின் இளைஞர்கள் முழுமையாக தமது சமூகத்தின் பிரச்சனைகளை இனம்கண்டு முழு மூச்சுடன் சீரிய முறையில் தம்மை வளர்த்துக் கொள்வதன் மூலம் சமூகத்தின் அபிவிருத்திற்கும் வழிகோல முடியும். தன்னை சீரிய முறையில் வளர்த்துக்கொண்ட ஒருவனால்தான் தனது சமூகத்தில் உள்ள மற்றோருக்கும் வழிகாட்ட தகுதிபெற முடியும். அதுமட்டுமின்றி மலையகப் பகுதிகளில் ஏற்படும் அரச – தனியார் வேலை வாய்ப்புகளுக்கும் தம்மை தகுதியானவராக மாற்றிக்கொள்ள வேண்டும். மலையக தமிழ்ச் சமூகத்தினரது சமூக, கலை, கலாச்சார பாரம்பரியங்களின் செல்வாக்கினைப் புரிந்து, மருவி வரும் மலையகத்திற்குரிய கலைகளை புத்துணர்வூட்டி வளரச்செய்ய இளைய தலைமுறையினர் முன்வர வேண்டும். மலையக மக்களின் கலாச்சாரப் பின்னணி பற்றியும் அவற்றின் அடிப்படையில் கலாச்சாரம் சுபீட்சம் பெறச்சாதகமான ஏனைய சூழ்நிலைகள் பற்றியும் இளைஞர்கள் அவதானிக்க வேண்டியுள்ளது. அதன் மூலமே மலையகத் தமிழ் மக்களது கலாச்சார மேம்பாட்டிற்கான பொருத்தமான அனுமானங்களை நாம் வளர்த்துக் கொள்ள முடியும். வேறொரு வகையாக கூறுவதனால் நம் கலாச்சாரத்தின் சாராம்சம் கெடாமல் அதன் இயல்பினைப் பேணும் அதே நேரத்தில் கலாச்சாரத்தின் சிறப்பினைச் சிதைக்கும் குறைபாடுகளை அகற்றவேண்டும். மலையகத்தின் தமிழ் மக்களில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களே பெருமளவு வாழ்கின்றமையால் சமூகத்தின் உயர்மட்டம் நோக்கி இச் சமூகம் அசைய முடியாதுள்ளது. இவ்வாறான சமூகம் முன்னேற வேண்டுமானால், படிமுறை வளர்ச்சியில் இச்சமூக மக்கள் மத்திய தர வகுப்பினராக வளரவேண்டும். விவசாய தொழிலாளராக உள்ள நிலை மாறி ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் உருவாக வேண்டும். இன்று நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு நவீன அறிவியல் துறை வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ரொபோடிக் தொழிlநுட்ப நுண்ணறிவு, ஆற்றல் சேமிப்பு, எரி சக்தி சேமிப்பு உள்ளிட்ட துறைகளில் உலகம் முன்னேறிச் செல்கிறது. தொழில்நுட்ப மாற்றங்களால் எமது பொருளாதாரமும் வாழ்க்கை முறையும் மாற்றமடையும். அதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும். அந்த இலக்கை அடைய ஆங்கில மொழியில் தேர்ச்சியை அதிகரித்து கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும். இயற்கை வளமும் மனித வளமும் நிறைந்த மலையகத்திலிருந்து பல்வேறு தொழில் வல்லுநர்களும் புத்திஜீவிகளும் வெளியேறியுள்ளனர். கடந்த ஆண்டு திறைசேரி எதிர் கொண்ட அந்நிய செலாவணித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அரச உத்தியோகத்தர்களுக்கு வெளிநாடுகளில் சென்று தொழில்புரிவதற்காக சம்பளமற்ற 5 ஆண்டு விடுமுறையை வழங்க அரசாங்கம் தீர்மானித்தது. அதன் பின்னர் மலையகத்திலிருந்து சகல அரச துறைகளிலுமுள்ள உத்தியோகத்தர்கள் வெளிநாடு செல்லும் வீதம் அதிகரித்து உள்ளது.
நகர்ப்புறங்களில் அளவுக்கதிகமாக ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். ஆனால் மலையகத்தில் இருக்கும் தோட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை கடுமையாக நிலவுகிறது. இதனால் மலையகம் இன்று கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு உள்ளது. மலையகத்திலிருந்து திறமைசாலிகள் வெளியேறுவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக நாட்டின் ஆட்சி முறையில் நம்பிக்கை இழப்பு, பொருளாதார முறையில் நம்பிக்கை இழப்பு, தங்களது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப தொழில் வாய்ப்புகளை பெறுவதில் நம்பிக்கை இழப்பு, தொழிலுக்குரிய ஊதியமும் வசதி வாய்ப்புகளும் கிடைக்குமா என்பதில் நம்பிக்கையின்மை, ஆட்சியாளர்கள் செய்த தவறுகளால் நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நியாயமற்ற வரிச் சுமைகள் என்பன காணப்படுகின்றன. இவ்வாறு மனித மூலதனம் மலையகத்திலிருந்து வெளியேறுவது மேலும் மலையக மக்களின் வாழ்க்கை தளத்தில் வீழ்ச்சியினை ஏற்படுத்துகின்றது. மலையகம் வளமான ஓர் பிரதேசம். பெருந்தோட்டத்துறை பொருளாதாரம் என்பது அவர்கள் உருவாக்கிய பொருளாதாரம். அதனை விட இரத்தினக்கல் தொழிற்துறை, சுற்றுலாத்துறை என்பவையும் காணப்படுகின்றன. உப உணவுப் பயிர்ச்செய்கைகளும் உள்ளன. ஓர் வளமான பொருளாதாரத்தைக் கொண்ட மக்கள் எவரிலும் தங்கி நிற்கத் தேவையில்லை. மலையக மக்கள் குடியேறி 200 வருடங்களாகிவிட்டன. எங்களுக்கு உரிமை இல்லை என ஒப்பாரி வைப்பதை விடுத்து எங்களையும் ஒரு தனித் தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள அறவழியில் போராடவேண்டும். வரலாறு சவால்களை மட்டும் வழங்குவதில்லை. மாறாக வெற்றி கொள்வதற்கான மார்க்கங்களையும் வழங்குகிறது.
மக்களின் அடிப்படை உரிமைகளையும் அபிலாசைகளையும் துண்டாடும் கைங்கரியங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவை மலையகச் சமூகங்களுக்கு எதிராக திரும்புகின்றன. மலையக மக்களின் எந்தவொரு அடிப்படை உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் தீர்வுக்காக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும். ஆனாலும் பெரும்பாலும் ஆதிக்க முறைமைகளே நடைமுறையில் இருப்பதால் மலையகச் சமூகம் பின்தங்கிய நிலையில் இருப்பதுடன் நீடித்த நிலையான வாழ்க்கைக்கான சாத்தியப்பாடுகளும் அருகியே காணப்படுகின்றன. ‘பிளவுபட்டு நிற்றல்’ என்ற கொடிய தொற்றுநோய், அரசியல் கட்சிகளை ஆட்கொண்டுள்ளதுடன் அது நிச்சயமற்ற தன்மையையும் உணர்ச்சிகரமான நிலையையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் துண்டு துண்டாகச் சிதறிக்கிடக்கின்றன. அதிகரித்து வரும் உணவு நெருக்கடி, பட்டினி, பணவீக்கம் ஆகியவற்றால் மலைய மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகிறது. மலையக மக்களின் வாழ்வு மாற்றமின்றி இருப்பதை உள்ளூர் முறைமை மூலம் அனுபவரீதியாக உணர்ந்து கொள்ளமுடியும். மலையக மக்களின் அறவழிக் கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது. அதனால் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் எமது பிரச்சனையை பேசுபொருளாக்க வேண்டும். ஒரு தரப்பின் அரசியலை மற்றையத் தரப்பு புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்த வகையிலும் திணிப்புகள் இருக்கக் கூடாது. ஒரு தரப்புக்கு மற்றைய தரப்பு துணையாக இருந்தால் மட்டுமே ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்க முடியும். அரசியல், பொருளாதாம், சமூகம் என இந்த ஒருங்கிணைவுகள் பரிணமிக்க வேண்டும்.
கணித விஞ்ஞான துறைகள் மலையகத்தில் பலவீனமாக உள்ளன. இது விடயத்தில் பொது நிதியம் ஒன்றை உருவாக்கி, கற்றலை மேற்கொள்ள நிதி வளமின்றி மிகவும் சிரமப்படும் மாணவர்களை இணங்கண்டு அவர்களின் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க உதவலாம். மலையக அரசியல் மட்டத்தில் இளைஞர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படல் வேண்டும். அதற்காக மலையக அரசியல் சக்திகள், துணைச் சக்திகள் செயலாற்றுவதற்கான சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும். மலையக மக்கள் தங்களுக்கான அரசியல் இலக்கையும் அதனை அடைவதற்கான வழி வரைபடத்தையும் தெளிவாக முன்வைக்க வேண்டும். அரசியல் இலக்கிற்கான நியாயப்பாடுகளை தர்க்க நிலையிலும் புலமை நிலையிலும் தொகுத்து மலையகத்தை இலங்கை தொடக்கம் சர்வதேச மட்டத்தில் பேசு பொருளாக்கல், மலையக அரசியல் கட்சிகள் – தொழிற்சங்கங்கள் – பொது அமைப்புகள் என்பவற்றை இணைத்து மலையகத் தேசிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புதல், அடிப்படைச் சக்திகளையும் துணைச் சக்திகளையும் நட்புச் சக்திகளையும் ஒருங்கிணைத்தல், புவிசார் அரசியலை புரிந்து கொண்டு பங்காளிகளாதல், சமூகமாற்ற அரசியலோடு இணைந்த மலையகத் தேசிய அரசியலை கட்டியெழுப்புதல், மலையக ஆக்கிரமிப்புக்களை தடுக்க சர்வதேச மட்டத்திலான பொறிமுறையை உருவாக்குதல், நிலப்பிரச்சனை – வீட்டுப் பிரச்சனை – கல்விப் பிரச்சனை – பொருளாதாரப் பிரச்சனை போன்ற உடனடிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல், மலையகத்திற்கான உத்தியோகபூர்வமற்ற அதிகாரக் கட்டமைப்பை கட்டியெழுப்புதல் போன்றன வழிவரைபடத்தில் உள்ளடங்கியிருத்தல் வேண்டும்.
மலையகத்தமிழ் மக்கள் முன்னர் இழந்து இப்போது பெற்றுள்ள குடியுரிமையினால் ஏற்படக்கூடிய நன்மைகள் யாதென சற்று விபரமாக அவதானித்தல் பொருத்தமானதாகும். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதியுடையவராக ஆகியுள்ளமை முதலாவது நன்மை ஆகும். நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பது ஒவ்வொரு பொறுப்புள்ள நாட்டுப்பற்றுடைய பிரஜையினதும் தலையாய கடமையாகும். அவ்வாறு வாக்களிப்பது ஜனநாயக ஆட்சியினை நிலைபெறச் செய்வதற்கான ஒரு வழிமுறை என்ற ஒரு பொதுவான நோக்கத்தின் பின்னணியில் வேறுபல நோக்கங்களும் உள்ளடங்கி உள்ளன. அதிலும் குறிப்பாக மலையக மக்கள் தேர்தல்களில் பங்கெடுப்பதன் மூலமே தனது அபிலாஷைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்துக்கொள்ள முடிவதுடன் தமது பலத்தினையும் ஏனைய குழுக்களுக்கு எடுத்துக்காட்ட முடிகிறது. இத்தகைய நோக்கங்களை மனதில் கொண்டு மலையக தமிழ் மக்கள் தேர்தல்களில் ஆர்வம் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் ஜூன் மாதத்திற்குள் வாக்காளராகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவம் அவ்வப்பகுதிகளுக்குரிய கிராம சேவகரால் வழங்கப்படும் போது அதனை அவதானமாக விழிப்புடன் பூர்த்தி செய்து வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மலையக மக்கள் தமது வாக்குகளை முதலீடு செய்து பிரதான அரசியல் கட்சிகளிடம் செல்வாக்கு பெறுவதென்பது முக்கியமானதாகும். தேர்தலின்போது வாக்கு வேட்டையில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மலையகத் தழிழ் மக்களின் வாக்குகளை உதாசீனம் செய்யமுடியாது. ஏனெனில் கிட்டத்தட்ட 7 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் மலையக மக்களின் வாக்குகள். இவ்வாக்குகள் மலையகத் தமிழ் மக்களை இலங்கையின் அரசியலில் செல்வாக்கிற்கு உட்படுத்தும் ஒரு சக்தி. மலையகத் தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகளை தீர்க்க முன்வரும் கட்சி ஒன்றினை ஆதரிக்க, பேரம் பேசும் வகையில் இவர்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டிருக்க வேண்டும். அவ்வாறு ஒன்றுபட்டிருந்தால் மலையகத் தழிழ் மக்கள் இந்நாட்டின் அரசியலில் பெறக்கூடிய அரசியல் அதிகாரங்களும் செல்வாக்குகளும் அதிகமாவதுடன் அது இச்சமூகத்தின் அரசியல் ரீதியான முன்னேற்றத்திற்கு பெரும் பயனுடையதாக அமையும்.
மலையக மக்கள் தமது பிறப்பு, விவாகம், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை, பாடசாலைச் சான்றிதழ்கள், தொழில் தொடர்பான ஆவணங்கள் என்பவற்றை பேணிப்பாதுகாப்பதில் கூடிய அக்கறையும் கவனமும் செலுத்தவேண்டி உள்ளது. இந்த ஆவணங்களுடன் எமக்கு வழங்கப்பட்ட குடியுரிமையானது மலையக மக்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கான அனுமதிப் பத்திரமாக பயன்படும். அதே வேளையில் பல பொருளாதாரத் தேவைகளுக்குமான அரச அனுமதியாகவும் இவை அமையும். நிலங்களைக் கொள்வனவு செய்வதற்கும், அரசு நிலம் வழங்கும்போது விண்ணப்பிப்பதற்கும், இலங்கையருக்கு மாத்திரம் என ஒதுக்கப்படும் தொழில்களில் ஈடுபடவும், பிற நாடுகளுக்குச் சென்று வருவதற்கான கடவுச்சீட்டுக்களைப் பெறவும் இக் குடியுரிமையை தொடர்பான ஆவணங்கள் அவசியமாகின்றன.
அரசியலில் ஒற்றுமைப்படும் சமகாலத்தில் மலையகத் தமிழ் மக்கள் தம்மை மத்திய தர வகுப்பினராக உயர்த்திக்கொள்ள கல்வி துறையில் முழு ஆர்வத்தினைச் செலுத்துவதே எதிர்கால சுபீட்சத்திற்கான ஒரே வழியாகும். ‘மலையகம் 200’ என்ற தொனிப்பொருளை அடிப்படையாக கொண்டு ‘மலையகத்தை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும். உலகத்தை மலையகத்திற்குள் கொண்டுவர வேண்டும்’ என்று திட சங்கற்பம் கொள்வதோடு அதற்கான செயற்திட்டங்களை உடனடியாக அமுல்படுத்த தயாராகுவோம்.
தொடரும்.