வல்லிபுரப் பொற்சாசனம் : பேராசிரியர் பரணவிதான அவர்களின் வாசிப்பின் மீதான விமர்சனமும் மீள் வாசிப்பும்
Arts
17 நிமிட வாசிப்பு

வல்லிபுரப் பொற்சாசனம் : பேராசிரியர் பரணவிதான அவர்களின் வாசிப்பின் மீதான விமர்சனமும் மீள் வாசிப்பும்

June 16, 2024 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

யாழ்ப்பாணத்தில் வல்லிபுரத்திலிருக்கும் விஷ்ணு கோயிலுக்குச் சமீபமாக இருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகளைப் பற்றி அப்பகுதி மக்கள் பல தலைமுறைகளாக அறிந்திருந்தார்கள். 1916 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராக இருந்த லூயிஸ், வல்லிபுரத்தைப் பார்வையிடச் சென்ற சமயம் விஷ்ணு கோயிலின் பூசகர் அப்பகுதியிலிருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகளை அரசாங்க அதிபரைக் கூட்டிச் சென்று காண்பித்தார். இதைத் தொடர்ந்து வல்லிபுரத்திலிருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகள் இருந்த இடத்தில் 1936 இல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழ்வுகளின் போது புராதன பௌத்த விகாரம் ஒன்றின் அஸ்திவாரத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த பேழையில் வல்லிபுரப் பொற்சாசனம் கண்டுபிடிக்கப்பட்டது. 39.16 அங்குல நீளமும் ஒரு அங்குல அகலமும் கொண்ட பொற்தகடு 69.5 கிரெய்ன் நிறையைக் கொண்டிருந்தது. (Paranavitana,S.1941) 

இப்பொற்தகட்டின் நடுவில் பிராமி எழுத்துகளால் பிராகிருத மொழியில் கீழ்க்கண்ட வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

“வித்த மகரஜ வஹயா ரஜெஹி அமெதெ 

இஸிகிரயே நகதிவ புஜமெதி

படகர அதநெஹி பியகுகதிஸ

விஹர கரிதே.”

(ஸித்த – சித்தி கிடைக்கட்டும், சாசனத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் மங்களச் சொல்)

இப்பொற்சாசனத்தை முதன்முதலாக வாசித்து இச்சாசனத்தின் மொழிபெயர்ப்பையும், அதன் பொருள் விளக்கத்தையும் பேராசிரியர் பரணவிதான, எப்பிகிராபியா சிலனிக்கா (Epigraphia Zeylanica) என்ற இலங்கையின் கல்வெட்டுச் சாசன நூலின் நான்காவது பாகத்தில் வெளியிட்டிருக்கிறார். 

இப்பொற்சாசனத்தில் காணப்பட்ட பிராகிருதமொழி வாசகங்களுக்குப் பரணவிதான கீழ்வரும் இரு வகையான மொழிபெயர்ப்புகளைக் கொடுத்திருக்கிறார்.

  1. வஸப மகாராஜாவின் ஆட்சிக் காலத்தில் அவரது அமைச்சரான
  2. இஸிகிரய நாகதீவை நிர்வாகம் செய்யும் போது
  3. படகர அத்தனாவில் பியகுக திஸ்ஸ
  4. விகாரையைக் கட்டுவித்தான்.

இன்னொரு வகையான விளக்கம்:

  1. வஸப மகாராஜாவின் ஆட்சிக்காலத்தில் அவரது பிரதிநிதியான 
  2. இஸிகிரய நாகதீவை நிர்வாகம் செய்யும் போது
  3. படகர அத்தனாவில் பியகுக நிஸ்ஸ
  4. விகாரை கட்டப்பட்டது.

பரணவிதான தரும் விளக்கங்களை வரி வரியாக ஆராய்வோம்.

மகரஜ வஹயக ரஜெஹி அமெதெ

‘மகரஜ வஹயக’ என்ற பதம் ‘வஹ மகாராஜாவின்’ என்று பொருள் தரும்.  

இச்சாசனத்தை ஆராய்ந்த பரணவிதான இதில் காணப்படும் எழுத்துகள் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, இலங்கையின் பெருநிலப்பரப்பில் காணப்பட்ட சாசனங்களை ஒத்திருப்பதாகக் கூறி, இதில் காணும் ‘வஹ’ என்ற பதம் கி.பி. 124 – 168 ஆண்டுக் காலத்தில் அநுராதபுரத்திலிருந்து ஆட்சி புரிந்த வசபனைக் குறிப்பிடுவதாகத் தீர்மானித்தார். இதன் பிரகாரம் நாகதீபம் அநுராதபுர அரசனான வசபனின் மந்திரியால் நிர்வகிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட எல்லாக் கல்வெட்டுகளிலும் வசபனின் பெயர் ‘வஸப’ அல்லது ‘வஹப’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே ஒழிய எந்தக் கல்வெட்டிலும் இந்த அரசனின் பெயர் ‘வஹ’ என எழுதப்படவில்லை.

இலங்கையிலுள்ள புராதன சாசனங்கள் யாவற்றிலும் ‘வஸப’, ‘வஹப’ எனக் குறிப்பிடப்படும் இந்த அரசன் வல்லிபுரப் பொற்சாசனத்தில் மட்டும் ஏன் ‘வஹ’ எனக் கூறப்படுகிறான் என்பதற்குப் பரணவிதான கொடுக்கும் விளக்கம் நமக்கும் பூச்சுற்றுவதாகவே இருக்கிறது.

“வசபனின் பெயர் வடபகுதியில் வல்லிபுரத்தில் ஒரு விதமாகவும், இலங்கையின் மற்றைய பகுதிகளில் இன்னொரு விதமாகவும் எழுதப்பட்டிருக்கிறது” என்கிறார் பரணவிதான.

இந்த எழுத்து வடிவத்தின் மூலத்தை விளக்க, வடமொழிப் பதமான ‘விருஷப’ என்ற சொல்லை உதாரணமாகக் காட்டுகிறார். ‘விருஷப’ என்றால் எருது அல்லது மேன்மையான பொருள் என்று கருதப்படும். வடமொழியில் ‘விருஷப’ என்ற பதம் ‘விருஷ’, ‘ருஷ’ எனச் சுருக்கப்பட்டது போல ‘வஹப’ என்பது ‘வஹ’ என சுருக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

என்ன ஏமாற்று வித்தை இது!

இலங்கையின் மற்றைய பகுதிகளில் இந்த மன்னனின் பெயரைப் பதிவு செய்த வடமொழி, பிராகிருதம் தெரிந்த பௌத்தர்கள் ஏன் இந்த மன்னனின் பெயரை ‘வஹ‘ எனச் சுருக்கவில்லை என்பதற்கு எந்த விளக்கத்தையும் அவர் தரவில்லை.

இச் சாசனத்தை எழுதியவர் கல்வியறிவுள்ள பிராகிருத மொழியில் பயிற்சி பெற்ற ஒரு பௌத்த பிக்குவாகவே இருந்திருக்க வேண்டும். அவருக்குத் தனது நாட்டை ஆட்சி புரிந்த மன்னனது பெயரைச் சரியாகப் பதிவு செய்யத் தெரியவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்.

மேலும், வசபனின் ஆட்சி வடபகுதியை உள்ளடக்கியிருந்தது என்று மகாவம்சமோ, சூளவம்சமோ உரைக்கவில்லை. இலங்கை முழுவதும் அநுராதபுரத்தின் ஒற்றை ஆட்சியின் கீழ் ஆட்சி செய்யப்பட்டது என்பதைக் கூறுவதில் மிக அக்கறை கொண்ட பாளி இலக்கியங்கள், வடபகுதி வரை வசபன் ஆட்சி புரிந்திருந்திருந்தால், அப்பகுதியில் அவன் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் பற்றி நிச்சயமாகக் குறிப்பிட்டிருக்கும்.

இன்னும் வசபனின் கல்வெட்டுகள் எதிலும் வடபகுதியில் அவன் ஆட்சி பரவியிருந்தது பற்றி எதுவிதமான தகவலும் இல்லை. இவற்றை நோக்குமிடத்து வல்லிபுரப் பொற்சாசனத்தில் காணப்படும் ‘வஹ’ என்ற பதம் வசபனைக் குறிப்பதாக பரணவிதான எடுத்த முடிவு அவரது கற்பனை என்றே கருத வேண்டியிருக்கிறது. ‘வஹ’ என்ற அரசன் ஏன் கந்தரோடையிலிருந்து நாகதீபத்தை ஆட்சி புரிந்த அரசனாக  இருக்கக்கூடாது?

இச் சாசனத்தின் முதல் வரி இசிகிரயனை ‘ரஜெஹி அமெதெ’ எனக் குறிப்பிடுகிறது. இதன் பொருள் ராஜ்யத்தின் பிரதிநிதி அல்லது அரச அதிகாரி என்பதாகும்.

இஸிகிரயே நகதிவ புஜமெநி

இச்சாசனத்தின் இரண்டாவது வரியில் காணப்படும் “இஸிகிரயே நகதிவ புஜமெநி” என்பதற்கு ‘இஸிகிரயன் நாகதீபத்தை நிர்வகித்த பொழுதில்’ அல்லது ‘நிர்வகித்த தலத்தில்’ என்று பொருள்.

இச்சாசனம் எழுதப்பட்டிருக்கும் பிராகிருத மொழியை நாட்டின் பிற இடங்களில் காணப்படுவது போன்ற “பழைய சிங்கள மொழி” எனக் கூறிய பரணவிதான இச் சாசனத்திலிருக்கும் சொற்களுக்கு ‘சிங்கள மொழி மூலங்களையும்’ எடுத்துரைத்தார். 

அவர் “சிங்கள மொழி மூலங்கள்” எனக் கூறிய பதங்கள் சமஸ்கிருதமும், பிராகிருதமுமே!

அப்படியிருந்தும் அவரால் ‘இஸிகிரய’ என்ற பெயருக்கு வடமொழியிலிருந்தோ, சிங்களத்திலிருந்தோ மூலத்தைக் கண்டுபிடிக்க முடியாமையால், இப்பெயர் இந் நாட்டிற்குப் புறம்பானதொரு பெயர் என முடிவெடுத்தார்.

இஸிகிரியன் என்ற பெயர் ‘ராயன்’ என்ற பதத்திலிருந்து பெறப்பட்டிருக்கலாம் எனக்கருதிய பரணவிதானவிற்கு, இது ஒரு தமிழ்ப் பெயர் என்று ஏன் தெரியவில்லை? 

தமிழில் ராயன் என்பது ஒரு குழுத்தலைவரைக் குறிப்பிடும் பெயராகும். முடிநாகராயன், மழவராயன், பல்லவராயன், வசந்தராயன், காத்தவராயன் என்பன தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் பெயர்களாகும்.

‘இசிகிராயன் (இசிகிரய)’ என்ற தலைவன் வல்லிபுரத்திலிருந்து நாக நாட்டை நிர்வகித்த கந்தரோடை அரசனின் பிரதிநிதியாக இருந்திருக்கலாம்.

படகர அதநெஹி

பிராகிருகத மொழியில் ‘அதநெ’ என்றால் ‘ஆஸ்தானம்’ என்று பொருள், ‘அதநெஹி என்றால் ‘ஆஸ்தானத்தில்’ என்று பொருள்படும்.

யாழ்ப்பாணத்தின் வட கரையிலிருக்கும் வல்லிபுர ஆஸ்தானத்தை இது குறிப்பிடுவதால் ‘படகர’ என்பது ‘வடகரை’ என்ற தமிழ்ப் பதத்தின் பிராகிருத வடிவம் என ஏற்றுக்  கொள்வதில் தவறேதும்  இருக்க  முடியாது.

‘படகர அதநெஹி’ என்றால் ‘வடகரை ஆஸ்தானத்தில்’ என்பதே சரியான பொருள்.

பியகுக விஹர கரிதே

இந்த வாசகத்திற்கு, இசிகிராயன் ‘பியகுகதிஸ் விகாரை’ என்ற பெயர் கொண்ட விகாரையைக் கட்டுவித்தான் அல்லது இசிகிராயனின் நிர்வாக காலத்தில் பியகுகதிஸ என்பவன் இந்த விகாரையைக் கட்டுவித்தான் என இரு விதமாகப் பொருள் கொள்ளலாம். 

யாழ்ப்பாணத் தீபகத்திற்கு அப்பால் மேற்குக் கடலில் உள்ள தீவுகளில் பௌத்தம் பரவியிருந்த முக்கியமான தீவு புங்குடுதீவாகும். இத்தீவை பாளி நூல்கள் பியங்கு தீபமெனவும், நம்பொத்த என்ற சிங்கள நூல் புவங்கு தீவு எனவும் குறிப்பிடுகிறது.

பியங்குதீபம் தூய்மையில் சிறந்த பெளத்தர்கள் வாழ்ந்த இடம் என்பது மகாவம்சம் மூலம் அறியக்கிடக்கிறது. துட்டகாமினி, போரில் எல்லாளனைக் கொன்றபின் தனது மாளிகைக்குத் திரும்பி, போரில் நடைபெற்ற கொடுமைகளை எண்ணி மனக்கவலையுற்ற நேரத்தில் பியங்குதீபத்தின் தவப்பள்ளியிலிருந்த தேரர் எண்மர், துட்டகாமினியிடம் சென்று அவனைத் தேற்றினார்கள் என்ற தகவலை மகாவம்சம் தருகிறது.

வல்லிபுர விகாரையைக் கட்டுவித்தவரின் பெயர் பியகுகதிஸ என வல்லிபுரப் பொற்சாசனம் தெரிவிப்பதிலிருந்து, இந்த திஸ்ஸன் பியங்குதீபத்தில் வாழ்ந்தவர் என்பதை அறிய முடிகிறது.

வல்லிபுர எழுத்து வடிவங்கள்

வல்லிபுரப் பொற்சாசனத்தில் காணப்படும் எழுத்துகளை ஆராய்ந்த பரணவிதான இச்சாசனத்தின் வரிவடிவம் இலங்கையின் பெருநிலப்பரப்பில் காணப்பட்ட கல்வெட்டுக்களின் பிராமி வரிவடிவமே எனக் கூறிய போதிலும், இந்த எழுத்துகளின் தண்டுகளின் கீழ்ப்பகுதியிலுள்ள நீண்ட வளைவுகளைக் கவனிக்கத் தவறவில்லை. இந்த வளைவுகளுக்கான காரணம் இச்சாசனம் கல்லிலல்லாது தங்கத் தகட்டில் எழுதப்பட்டதனால் ஏற்பட்டது எனப் பரணவிதான விளக்கமளித்தார். இச் சாசன எழுத்துகள் இரண்டாம் நூற்றாண்டுக்கு உரியவை என்றும், இச் சாசனத்தின் மொழி இலங்கையின் பிற கல்வெட்டுகளில் காணப்படுவது போன்ற ‘ஆதிச் சிங்களப் பிராகிருதம்’ எனவும் பரணவிதான  தீர்ப்பளித்தார்.

இச் சாசனத்தில் காணப்படும் எழுத்து வடிவங்களைக் கல்வெட்டியலாளரான வேலுப்பிள்ளை, இந்திய கல்வெட்டியல் நிபுணரான தானியின் உதவியுடன் மறு பரிசீலனை செய்து பின்வரும் உண்மைகளை நிறுவியுள்ளார். (Veluppillai,A., 1981;Dani,A.H 1963)

  1. வல்லிபுரப் பொற்சாசனத்தில் காணப்படும் எழுத்து வடிவங்கள் ஈழத்தின் பிற இடங்களில் காணப்படும் எழுத்து வடிவங்களை விடத் தனித்துவமானவை. இப்பொற்சாசனத்தில் காணப்படும் எழுத்துகள் ஆந்திர மாநிலத்தில், இஷ்வாகு வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அமராவதி, நாகர்ஜுனா கொண்டா ஆகிய பௌத்த நிலையங்களில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்து வடிவங்களை ஒத்திருக்கின்றன.

வல்லிபுரப் பொற்சாசனத்தின் பிராமி எழுத்து வடிவங்கள் இஷ்வாகு கால எழுத்துகளைப் 

போன்று, தண்டுகளின் கீழ்ப்பகுதிகள் வளைவுகள் மிகுந்து காணப்படுகின்றன.

பரணவிதான கூறியது போல இந்த வளைவுகள் பொற்தகட்டில் எழுதியமையால் ஏற்பட்டவை அல்ல! அவற்றின் உண்மையான வடிவமே அதுதான்! வல்லிபுரச்சாசனத்தில் காணப்படும் ‘அ.இ.உ.க.ம.ய.ற.ல.ள’ ஆகிய எழுத்துகள் நான்காம் நூற்றாண்டிற்குரிய அமராவதி, நாகர்ஜுனா கொண்டா சாசனங்களில் காணப்படும் அதே எழுத்து வடிவங்களாதலால், இவ் வடிவங்கள் அங்கிருந்தே யாழ்ப்பாணத்தை வந்தடைந்து வல்லிபுரச் சாசனத்தில் இடம் பெறுகின்றன. இதிலிருந்து இச் சாசனத்தின் காலம் நான்காம் நூற்றாண்டாகக் கணிக்கப்படுகிறது. 

இவ்வரி வடிவங்கள் இலங்கையின் தென் பகுதிக் கல்வெட்டுகளில் இடம்பெறவில்லை.

அநுராதபுரத்தை வசப மன்னன் ஆண்ட காலத்திற்கு இரு நூற்றாண்டுகளின் பின்னரே வல்லிபுரச்சாசனம் எழுதப்பட்டமையால் இச் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘வஹ’ மகாராஜா வசபனாக இருக்க முடியாது. 

  1. அக்காலத்தில் இந்தியாவின் எல்லாப் பிராந்திய மொழிகளும் பிராமி எழுத்துகளைக் கொண்டே எழுதப்படமையால் இவ்வரிவடிவம் ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோரின் தனிச் சொத்தாக இருக்கவில்லை.

ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் காணப்படும் பௌத்த மதக் கல்வெட்டுகளில் பிராகிருத மொழியில் பிராமி எழுத்துகளைக் கொண்டே சாசனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

பரணவிதானவின் கூற்றுப்படி இலங்கையின் பிராகிருத எழுத்துகளை ‘சிங்கப் பிராகிருதம்’ என ஏற்றுக் கொள்ளும் அறிஞர்கள், இச் ‘சிங்கள பிராகிருதம்’ எப்படி ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் வழக்கத்திலிருந்தது என்பதற்கான விளக்கத்தைத் தருவார்களா?

தென்னாசியச் சாசனங்களை ஆராய்ந்த பேராசிரியர் சிற்றம்பலம், இக் காலகட்டத்தில் தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் கல்வெட்டுகள் யாவும் பிராகிருத மொழியிலே எழுதப்பட்டிருப்பதையும், இப் பண்பைப் பின்பற்றியே அமராவதி, நாகர்ஜுனா கொண்டா பகுதிகளில் பௌத்தத்தை ஆதரித்த இஷ்வாகு அரச வம்சத்தினரும் தமது ஆட்சிக்கு உட்பட்ட, திராவிட மொழியான தெலுங்கு வழக்கிலிருந்த பிரதேசங்களில் பிராகிருத மொழியிலேயே பௌத்த மத சாசனங்களை எழுதி வைத்திருப்பதையும், எடுத்துக் காட்டினார் (சிற்றம்பலம் சி.க.1993. 119.123).

வல்லிபுரச் சாசனத்தைக் கொண்டு இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சிங்கள பிராகிருதம் பேசினார்கள் எனக் கொள்வது, ஆந்திர மாநிலத்தில் காணப்படும் கல்வெட்டுகளைக் கொண்டு இப்பகுதி மக்கள் தெலுங்கு பேசவில்லை, பிராகிருதம் பேசினார்கள் எனக் கொள்வது போன்ற தவறான கணிப்பாகும். 

வல்லிபுரப் பொன்னேட்டு மொழி பௌத்தர்களின் சமயப் பதிவேட்டு மொழியே ஒழிய, ஓர் இனத்தின் பேச்சு மொழியே அல்ல! பௌத்த மதத்தின் சாசன மொழியான பிராகிருதத்தை மக்களின் பேச்சு மொழியாக பரணவிதான இனம் கண்டது மாபெரும் தவறாகும். பரணவிதான வல்லிபுரச் சாசனத்தை ஒரு புறச்சார்வான, பாரபட்சமான கண்களுடனே அணுகியிருக்கிறார் என்பதில் எதுவிதமான சந்தேகமும் இல்லை. இவரது தவறான முடிபுகள் பல வரலாற்றாசிரியர்களைப் புராதன யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் என்றும், யாழ்ப்பாண அரசு (நாகதீப அரசு) அநுராதபுர அரசின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது என்றும் எழுதுவதற்கு ஏதுவாயிற்று.

சாசனம் சாற்றும் சரித்திரச் சான்றுகள்

நாகதீபம்

இலங்கையின் பௌத்தமத வரலாற்று நூல்களான மகாவம்சம், தீபவம்சம் ஆகிய இலங்கையின் வடபகுதியை ‘நாகதீப’, ‘நாகதீவ’ ஆகிய பதங்களால் குறிப்பிட்டுச் சொல்கின்றன. மணிமேகலை இந் நிலப்பகுதியை ‘நாகநாடு’ எனக் கூறுகிறது. இலங்கையின் மேற்குக் கரையோரமாகக் கதம்ப நதியின் (அருவியாறு) முகத்துவாரத்திலுள்ள அரிப்பு என்ற இடத்திலிருந்து, அவ்வாற்றுப் படுக்கை நிலங்கள் வழியாக நாபொக்கனை வரைக்கும், நாகபொக்கனையிலிருந்து கிழக்குக் கரையோரமாக கூடத்தை (திருகோணமலை) உள்ளடக்கிய ஒரு கோட்டுக்கு வடக்கேயுள்ள பிரதேசம் யாவும் நாகதீபம் என அழைக்கப்பட்டது (Parker,H.1909:p.14;Geiger,W.1960;p 108). 

நாகதீபத்தில் இன்றைய யாழ்ப்பாணக் குடாநாடு, அதைச் சுற்றியுள்ள தீவுகள், திருகோணமலை, முல்லைத்தீவு, பூநகரி, மாந்தை, மன்னார், மதவாச்சி (மகாவில்லாச்சி), வவுனியா ஆகிய பகுதிகள் அடங்கியிருந்தன. இருந்த போதிலும் தமிழில் பாண்டித்தியம் பெற்றதாகக் கூறிக்கொள்ளும் சில அறிஞர்கள் நாகதீபம் என்ற பெயர் நயினாதீவைக் குறிப்பிடுவதாகத் தீர்மானித்துள்ளார்கள். ‘வையா’ என்ற யாழ்ப்பாண வரலாற்று நூல் நயினாதீவை ‘நாக நயினாதீவு’ எனக் கூறுவதால் ஏற்பட்ட மயக்கமாக இது இருக்கலாம்.

இசிகிராயன் (இஸிகிரய) என்ற தமிழ்ப் பெயர் கொண்ட தலைவன் வல்லிபுரத்திலிருந்து நாகதீபத்தை நிர்வாகம் செய்தான் என்ற சாசனக்கூற்று, நாகதீபம் என்பது நயினாதீவு என்ற சிறிய தீவாக இருக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் புங்குடுதீவு (பியங்கு தீப) இந்த நாகதீபத்தின் ஒரு பகுதியே என்பதையும் இச்சாசனம் சுட்டி நிற்கிறது.

மொத்தத்தில் மகாவம்சம், தீபவம்சம் ஆகிய நூல்கள் இலங்கையின் வடபகுதி முழுவதையும் நாகதீபம் எனக் குறிப்பிடுவதையே வல்லிபுரப் பொற்சாசனமும் ஊர்ஜிதம்  செய்கிறது.

நாகதீப அரசு

கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் மகோதரன், சூளோதரன் ஆகிய நாக மன்னர்கள் நாகதீபத்தின் அரசுரிமைக்காகப் போர் புரிந்த வரலாற்றை மகாவம்சம் எடுத்துரைக்கிறது (Mahavamsa,Ch I:46). கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் வளைவாணன் என்னும் தமிழ் நாக அரசன் நாக நாட்டை ஆட்சிபுரிந்த செய்தியை மணிமேகலை கூறுகிறது (மணிமேகலை xxiv : 54). இவற்றின் தொடர்ச்சியாக கி.பி. நான்காம் நூற்றாண்டில் இசிகிராயன் என்ற தமிழ்த் தலைவன் வல்லிபுரத்திலிருந்து நாகதீபத்தை நிர்வாகம் செய்த தகவலை இப் பொற் சாசனம் தருகிறது. கி.பி.எட்டாம் நூற்றாண்டில் உக்கிரசிங்கன், சிங்கை நகரை அரச மையமாகக் கொண்ட யாழ்ப்பாண அரசை ஆரம்பிப்பதற்கு முன்னரே, நாகதீபத்தைத் தமிழ் அரசர்கள் நிர்வாகம் செய்து வந்திருக்கிறார்கள் என்பதை உறுதுணை செய்யும் சான்றுகளில் இச்சாசனமும் ஒன்று. 

யாழ்ப்பாண மண்ணின் ஆதிச்சரித்திரத்தைப் பதிவு செய்த நூல்கள் ஏதும் இன்று இல்லாத போதும், அநுராதபுரத்தை அரச பீடமாகக் கொண்ட இலங்கையின் ஆட்சி அமைப்புக்கு வெளியே, நாகதீபத்தில் தனித்தன்மையான சுதந்திரத் தமிழ் மன்னர்களின் அரசாட்சி நடைபெற்று வந்திருப்பதற்கான சான்றுகளுக்கு வல்லிபுரச் சாசனம் வலுச் சேர்க்கிறது. 

நாக தீபக் கலாசாரச் சின்னம்

வல்லிபுரச் சாசனத்தில் காணப்படும் ‘அ, உ, க, ம, ய, ற, ல, ள’ ஆகிய எழுத்து  வடிவங்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குரிய அமராவதி, நாகர்ஜுனாகொண்டா சாசனங்களில் காணப்படும் பிராகிருத பிராமி எழுத்து வடிவங்களாகும். இவ்வெழுத்து வடிவங்களின் பாணி (Style) இலங்கையின் தென்பகுதிக் கல்வெட்டுகளில் காணப்படவில்லை.

இதிலிருந்து இவ்வெழுத்து வடிவங்கள் ஆந்திராவிலிருந்து (தமிழகத்தினூடாக) கடல் வழியாகவே யாழ்ப்பாணத்தை வந்தடைந்து வல்லிபுரச் சாசனத்தில் இடம்பெறுகின்றன என்பது தெளிவாகிறது.

இவ்வரி வடிவங்கள் கிறிஸ்தாப்தத்திற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே வட ஈழத்தில் வியாபித்துப் பரவிக்கிடந்த ஆதித் தமிழரின் நீர்ப்பாசன, சமுத்திர, வர்த்தக நாகரிகப் பின்னணியில், வட யாழ்ப்பாணத்தின் துறைகளினூடாகக் கசிந்து வந்த கலாசாரப் பரிமாறலின் சின்னங்களாகும்!

ஆந்திர – யாழ்ப்பாண பௌத்த கலாசாரத் தொடர்புகள்

ஆந்திர மாநிலத்தில் உருவான அமராவதி கலைப்பாணியின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையாகக் கொள்ளப்படுகிறது. இக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கும் ஆந்திர தேசத்திற்குமிடையே நடைபெற்ற வர்த்தக, கலாசாரத் தொடர்புகளினால் இக் கலைமரபு அங்கிருந்து ஈழத்தை வந்தடைந்தது.

வல்லிபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் ஆந்திர மாநிலத்தை ஆட்சி புரிந்த சத்வாகன, இஷ்வாகு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வெளியிட்ட நாணயங்களும் கிடைத்திருக்கின்றன. இக்காலகட்டத்தில் வல்லிபுரம் துறைமுகத்தைக் கொண்ட புகழ்பெற்ற ஒரு நகரமாகவும், பௌத்த மத வழிபாட்டுத்தலமாகவும் விளங்கியமையால் ஆந்திர மாநிலத்திலிருந்து வர்த்தகர்களும், பௌத்த யாத்திரிகர்களும் இங்கே வருகை தந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

வல்லிபுரத்தைப் போன்றே கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆந்திர நாணயங்களும், அமராவதி கலைப்பாணியில் அமைந்த புத்தபிரானின் சிலைகளும், பௌத்த ஸ்தூபங்களும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கும் நான்காம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும், ஆந்திரமாநிலத்திற்குமிடையே நிலவி வந்த கலாசார பரிமாற்றங்களை எடுத்தியம்பி நிற்கின்றன.

ஆந்திர மாநிலத்தின் நாகர்ஜுனா கொண்டாவில் பிறநாட்டுப் பௌத்தர்கள் வசிப்பதற்காகக் கட்டப்பட்ட பள்ளிகளில், சீகள விகாரை என்பது ஈழத்துப் பௌத்தர்கள் தங்கி பௌத்த மதக் கல்விகளை மேற்கொள்ளுவதற்காகப் பிரத்தியேகமாகக் கட்டப்பட்டிருந்ததை, மூன்றாம் நூற்றாண்டின் நாகர்ஜுனாகொண்டா கல்வெட்டு எடுத்துரைக்கிறது.

உசாத்துணை

  1. இந்திரபாலா, கா (1973): ‘வல்லிபுரம் தாழிப்புதையல்’; வீரகேசரி வாரப்பதிப்பு, 18 பெப்ரவரி 1871, கொழும்பு.
  2. Archaeological Report(1846): ‘A Burial at vallipuram’, Journal of the Roya; Asiatic Society, Ceylon Branch, Vol.1, No.1, p.156.
  3. சிற்றம்பலம், சி.க, (1993), யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், திருநெல்வேலி
  4. மணிமேகலை (1965), உ.வே சாமிநாதையர் பதிப்பு, அறம் பதிப்பகம், சென்னை. 
  5. Geiger, Wilhelm (1960), Culture of Ceylon in Medieval Times (Ed) Heinz Bechert, Harrassowitz Publishing House, Germany:
  6. Dani A.H. (1963) Indian Paleography, Oxford University Press, Oxford
  7. Paranavitana, S.(1934 – 1941) vallupuram Gold Plate Inscription of the Reign of Vasabha: Epigraphia Zeylanica, Vol. IV PP 229-237.”
  8. Lewis,J.P  (1916): “Some Notes on Archaeological Matters in the Northern Province of Ceylon, in The Ceylon Antiquary and Literary Register, 1916 – 17, Vol II Part 2,Colombo
  9. Lewis, J.P (1895) Manual of the Vanni Districts, Govt, Press, Colombo
  10. Paranavitana,S. (1983), Vallupuram gold – Plate Inscription of Ceylon, Vol.2, Part 1, Dept of Archaeology, Moratuwa.
  11. Parker, Henry (1909), Ancient Ceylon, Luzac & Company, London.
  12. Schalk, Peter (1994) “The Vallipuram Buddha Image, Proceedings of the Symposium on Dance Music and Art in Religions, 16th  – 18th August 1994, Abo Finland.
  13. Veluppillai,A (1990); “Tamil in Ancient Jaffna and the Vallipuram Gold Plate, Journal of Tamil Studies; 19 : 1-14

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9815 பார்வைகள்

About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார்.