பெரும் நம்பிக்கையுடன் வரவேற்கப்பட்ட புதிய அரசாங்கம் இயங்கத் தொடங்கி நான்கு மாதங்கள் கடந்துள்ளன. இந்த இடைவெளியில், முந்தைய ‘புதிய அரசாங்கம்’ ஒவ்வொன்றினதும் அரங்கேற்றங்களின் பின்னரும், இன்றும் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் கவனிப்புக்குரியன. இன்றைய கணிப்பில் அறுபது வீதத்துக்கு மேற்பட்டவர்கள் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் வலுவான நம்பிக்கையுடன் மேலும் விருத்தியை எதிர்பார்ப்பதாகவும் கருத்துரைத்துள்ளனர். பழையதன் மீது வெறுப்புற்று ஏற்படுத்தப்படும் புதிய அரசாங்கங்கள் மீது, இதே கால இடைவெளியில், முன்னர் இந்தளவிலான நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டு இருக்கவில்லை எனக் கருத்துக் கணிப்பாளர்கள் தமது ஆய்வு முடிவில் எடுத்துரைத்துள்ளனர்.
முன்னதாக 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மாற்றத்தின் போது, ராஜபக்ஷ குடும்பத்தின் கொள்ளை, ஜனநாயகமின்மை, ஊழல் நிர்வாகம் எனக் கூறி உருவாக்கிய ‘நல்லாட்சி அரசாங்கம்’ உருப்படியாக எதனையும் சாதிக்காத நிலையில் மிக வேகமாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தது. நான்கு வருடங்களில், அதனை வீழ்த்தி, மீண்டும் கொள்ளையடித்ததாக விரட்டப்பட்ட அதே குடும்பத்தைச் சேர்ந்த புதிய முகமொன்றிடம் ஆட்சிப் பொறுப்பைக் கையளிக்க வேண்டி இருந்தது. அரசியலாளர்கள் மீதான நம்பிக்கையீனம் அப்போதும் முனைப்பாக இருந்ததில் முன்னாள் இராணுவத் தளபதியான கோத்தபாய ராஜபக்ஷ திறன்மிக்க நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை பலரிடமும் இருந்தது. அவ்வாறு மக்கள் எதிர்பார்த்து 2019 இல் அந்தப் ‘புதிய அரசாங்கம்’ ஆட்சியில் அமர்த்தப்பட்ட போதிலும் இரண்டு வருடங்களில் நிர்வாகச் சீர்கேடுகளும் முன்னைய ‘ஜனநாயக மறுப்புடன் கொள்ளையடிப்பதான’ பழைய பல்லவி மீண்டெழுந்த உக்கிரம் காரணமாகவும் ராஜபக்ஷ குடும்பமே சில வருடங்களுக்கு அரசியல் வனவாசம் அனுப்பப்படும் நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டின் கடைக்கூறில் ஒட்டுமொத்த அரசியலாளர்கள் மீதான வெறுப்புணர்வு மீண்டும் முழு அளவில் வெளிப்படும் வகையில் முற்றிலும் புதியவர்களைக் கொண்ட ஆளும் கட்சி அரங்கேறி உள்ளது. மட்டக்களப்புத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் புதிய ஆளும்கட்சி (‘தேசிய மக்கள் சக்தி’ – தே.ம.ச.) கூடுதல் ஆசனங்களைப் பெற்ற சாதனை நிலைநாட்டப்பட்டது. நாடு முழுவதற்குமான இந்த மாற்றத்தை வட மாகாணமும் அங்கீகரித்து, தே.ம.ச. எனும் சிங்களத் தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூடுதலாக அனுப்பி இருப்பது பலரது புருவங்களை உயர்த்த வழிகோலியது. இது தமிழ்த் தேசிய அரசியல் தோற்றுப்போனதன் வெளிப்பாடு என ஒரு தரப்பினர் கூறுவர்; வடக்கு மக்கள் தமிழ்த் தேசியத்தைக் கைவிடவில்லை என்பதற்கு, சிதறிய தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர் தொகையைக் காட்டுவர் இன்னொரு தரப்பினர். ‘பழையவர்கள் தமிழ்த் தேசியத்தைக் காட்டிக்கொடுப்பவர்களாக இருந்தமையால் அவர்களைத் தோற்கடித்து சிங்களத் தேசியக் கட்சிக்கு ஒரு பகுதி மக்கள் வாக்களித்ததன் வாயிலாகத் தமது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்’ எனக் கூறும் இவர்களது கணிப்புப் புறக்கணிக்கத்தக்கதல்ல.
‘இணக்க அரசியல் துரோகிகளுக்கு’ எதிராக மக்கள் இந்தத் தடவை தே.ம.ச. க்கு வாக்களித்ததாகச் சமாதானம் காணும் போக்கும் ஏற்கனவே நிலவுகிறது. இங்குள்ள பண்பு ரீதியான மாற்றத்தை இவர்கள் கவனங்கொள்ளாத போதிலும் ஏற்பட்டுவரும் மக்களது மனநிலைத் தெளிவை இந்த முடிவு பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி இருக்கிறது என்பதே மெய். முன்னர் வெவ்வேறு சிங்களத் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கப்பட்டு உதிரிகளான ‘இணக்க அரசியலாளர்கள்’ தெரிவு செய்யப்பட்டு இருந்தனர். இத்தகைய உதிரிகளாக இம்முறை வெவ்வேறு தமிழ்த் தேசியக் கட்சியினர் பாராளுமன்றத்துக்குப் போக, ஒரே அமைப்பில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பெரும்பான்மை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பெறுபேற்றை தே.ம.ச. அடைந்துள்ளது!
இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அரசியலுக்குப் புதியவர்கள். இந்தப் புதிய முகங்கள் ‘அரசியலே அறியாத கற்றுக் குட்டிகள்’ என எல்லாமறிந்த மேதாவித் தனத்துடன் முரசறைகின்ற இன்னொரு புதிய முகம் சுயேட்சையாக வெல்லவைக்கப்பட்டுள்ளார் என்பதும் மிகுந்த முக்கியத்துவம் உடையது. தனது பொறுப்பிலுள்ள நிர்வாகத்தைச் சரியாக நடாத்த இயலாமல் மக்களிடம் ‘அம்பலப்படுத்திக்’ குறுக்கு வழிப் பிரபலம் பெற்றிருந்த ஒரு வைத்தியரை ஏன் மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள்? பெரும்பான்மை மக்கள் தே.ம.ச. இன் புதிய உறுப்பினர்கள் அமைப்பாக்கப் பலத்துடன் சாதிப்பார்கள் என்று நம்பிக்கையைத் தெரிவித்த போதிலும் ஒரு கிலுகிலுப்பைப் பேர்வழியை அறிவாளியென்று கருதும் முட்டாள்தனமான நம்பிக்கைகொண்ட சிறுபான்மை உதிரிச் சிந்தனை உருவாக இயலுமானது ஏன்?
தேசம் பெற்ற தோல்விகளும் அதற்குக் காரணமாக அமைந்த அரசியல் பண்ணுவோரும் மக்களால் நிராகரிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை இந்தச் செல்நெறி எடுத்துக்காட்டுகின்றது. இது தனியே இலங்கைக்கு உரியது மட்டுமல்ல. தொழில் தேர்ச்சிமிக்க அரசியல் பண்ணுவோரை நிராகரித்து வெவ்வேறு தளங்களில் இயங்கிப் புதிதாக அரசியலுக்கு வருகின்றவர்களை அரியாசனம் ஏற்றும் போக்கு அண்மைக் காலத்தில் பல நாடுகளிலும் அரங்கேறி உள்ளது. இதுவரை உலகை ஆண்டு வந்த முதல்நிலை வல்லரசான ஐக்கிய அமெரிக்கா இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. முதலாந்தர வல்லாதிக்க நாடெனும் அதிகாரத்தை இழந்து இரண்டாம் நிலைக்கு நாடு சரிவதனைத் தடுக்கவியலாத தேர்ச்சி பெற்ற தலைவர்களை விட வர்த்தகத் திறன் மிக்க ஒருவரை ஜனாதிபதி ஆக்கிப் பார்த்து அமைதி காண வேண்டிய நிலையில் ஐக்கிய அமெரிக்கா!
முன்னைய ஜனாதிபதியான பைடனின் குடும்பத்துக்கு உக்ரேனில் பொருளாதார நலன் இருந்ததா, இன்றைய ஜனாதிபதிக்கு ருஷ்யாவுடன் வர்த்தக ஆதாயம் கிடைக்குமா என்பதல்ல விவகாரம்; அன்று தொடங்கிய உக்ரேன் யுத்தம் எதிர்பார்த்த அரசியல் ஆதாயத்தைத் தரவில்லை என்பதை ஐக்கிய அமெரிக்க ஆளும் வர்க்கம் கண்டுணர்ந்ததால் ‘அரசியல் பண்ணத் தெரியாத’ ட்ரம்ப் அதிகாரத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்பதே பிரதானமானது. நட்பு நாடுகளின் மீது இவர் விதிக்கும் வரிகளும் திறந்த பொருளாதாரத்துக்கு நெருக்கடி கொடுப்பதும் வீழ்ந்து வரும் ஐக்கிய அமெரிக்க நிலவரத்தைக் காவாந்து பண்ணுமா எனப் பரீட்சிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் அதிமேதாவி போலவே ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியும் பல தடவைகளில் ‘பைத்தியக்காரத் தனமாக உளறுவதாக’ கருத்துரைக்கப்படுவதனைக் காண்கிறோம். கற்றறிந்த சமூகங்கள் இத்தகைய உரைகளுக்கு இடமளிப்பது ஏன்?
சென்றதினி மீளாது
ஏற்கனவே பொருளாதாரச் சரிவை எட்டி, அந்தத் திசை மார்க்கத்தில் வேகங்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் சரிவைத் தான் உக்ரேன் நிலவரம் எடுத்துக் காட்டுகிறது. இங்கு சந்திக்கும் பின்னடைவை மறைப்பதற்கு, ‘நான் இன்னமும் சண்டியன் தான்’ என்ற வீறாப்பை வேறிடங்களில் புதிய வடிவம் தாங்கி வெளிப்படுத்த வேண்டி உள்ளது. அத்தகைய தனியொரு வல்லாதிக்க நாட்டின் நலனுக்காகத் தத்தமது நாடுகளின் வளங்களைத் தாரை வார்க்க விரும்பாத ஏனைய நாடுகள் சுயபொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்தி விருத்தி செய்ய இயலாத நிலையைக் காப்பிரேட் மூலதனத்துக்கு விலைபோன ஊடகத்துறை கையாள்கிறது.
அரசியல், பொருளாதாரத் தளங்களில் ஏகாதிபத்திய அணி பின்னடைந்து வீழ்ச்சி கண்டு வந்தபோதிலும் பண்பாட்டுத் தளத்தில் காப்பிரேட் ஏகாதிபத்திய ஊடக ஊடறுப்பு அதனைத் தாங்கி நிற்கிறது. அதற்கு உதவும் வகையில் விஞ்ஞான, தொழி்ல்நுட்ப விருத்தியின் புதிய பரிணாமமாக செயற்கை நுண்ணறிவுப் (AI) பிரயோகம் அமைந்திருந்தது. இப்போது அந்தத் தளத்திலும் மக்கள் சீனம் ‘DeepSeek’ எனும் மாற்றுச் செயற்கை நுண்ணறிவுப் பிரயோகம் வாயிலாக பலமான அடியை ஏகாதிபத்தியத் திணைக்கு வழங்கியுள்ளது. விலை அதிகமான உற்பத்திப் பொருளைப் பயன்படுத்தி, அதற்குரிய நுட்பங்களை மறைத்து வைத்தவாறு ஏகபோக அதிகாரத்தைக் கொண்டிருந்த காப்பிரேட் நிறுவனத்துக்கு மாறாக மலிவான உற்பத்திப் பொருள்களை மக்கள் சீனா அறிமுகப்படுத்தி, செயற்கை நுண்ணறிவுக்குரிய தயாரிப்பு நுட்பங்களையும் பரவலாக்கி உள்ளது. ஒரு நாடு ஏகபோக மேலாதிக்கம் கொள்ள இயலாமல் பரவலாக்கப்படும் இத்தகைய அறிவுப் பிரயோகம் ஒவ்வொரு நாட்டையும் சொந்தக் கால்களில் தங்கி நிற்க வழிகோலும் (புதிய செயற்கை நுண்ணறிவுப் பரிமாணம் பற்றி, கே.ஏ.எஸ். சத்தியமனை நூலக வெளியீடான சிறுபொறி ஏழாவது இதழில் மு. மயூரனால் எழுதப்பட்ட ‘மேற்குலகின் AI மேலாதிக்கத்தின் மேல் சீனாவின் DeepSeek எறிந்திருக்கும் கலகக் கல்’ எனும் கட்டுரை தெளிவாக இதனை எடுத்துக்காட்டி உள்ளது. கட்டுரையின் நிறைவு வாசகம் ‘எல்லோரும் வெல்வோம்!’ என மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது).
இந்த அம்சம் மிகுந்த கவனிப்புக்கு உரியது. இப்போது ஏற்பட்டு வரும் மாறு நிலைக் காலத் தளம்பல்கள் தான் “நான் சண்டியன் தான்” என ஐக்கிய அமெரிக்காவைச் சொல்ல வைக்கிறது. இதன் பின்னர் இன்னொரு மேலாதிக்கச் சண்டியனாக மக்கள் சீனம் மேலெழுந்து வருவதான அச்சம் சிலரிடம் உள்ளது. ஐக்கிய அமெரிக்க ஊடகப் பரப்புரை அவ்வாறு தான் அமைந்துள்ளது. அதற்கு மாறாக மக்கள் சீனமோ, இரு தரப்பும் வெற்றிபெறும் “win win theory” ஐ முன்னிறுத்துவதான வர்த்தகப் பரிமாற்றத்தைக் கையாள்கிறது. பண்டங்களுக்கானதாக மட்டுமன்றி அறிவுப் பரவலிலும் அனைத்துத் தரப்பினரது வெற்றிக்கானதாக அதனைக் கையாள வழிகாட்டி நிற்கிறது மக்கள் சீனம்!
இது இலகுவில் நிறைவேறிவிடுகிற சங்கதி அல்ல. ஒடுக்கப்பட்டு இருந்த எமது தேசங்கள் சொந்தக் கால்களில் தங்கி நின்று மீண்டெழுந்து விட்டால், உலக வளங்களை வற்றடித்துத் தங்களை வளர்த்த ஏகாதிபத்தியத் திணையின் ஆளும் தரப்பு அனுபவிக்கும் பல சுகபோகங்கள் கைநழுவிப்போக இடமேற்படும். அவ்வாறு ஆகிவிடாமல் தடுக்கும் மேலாதிக்க அரசியல் முன்னெடுப்பு இன்னமும் தொடர்கிறது. ஏகாதிபத்தியத் திணைக்கு முண்டு கொடுக்கும் சக்தியாக இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் ஏகாதிபத்தியத்தால் பல வடிவங்களில் பதியமிடப்பட்டு வளர்க்கப்படுகிறது.
சுதந்திரத்துக்குப் பிந்திய இந்தியா, முன்னதாக, சுயசார்புப் பொருளாதாரக் கொள்கையுடன் சொந்தக் கால்களில் முன்னேறி வந்தது. அணிசேராக் கொள்கையுடன் இயங்கிய இந்தியாவுக்கு சோசலிச முன்னெடுப்புடன் இருந்த சோவியத் யூனியன் ஆதரவுக் கரம் நீட்டி இருந்தது. வர்க்க வாத அரசியல் முன்னெடுப்பினால் சோவியத் யூனியன் வீழ்ந்த பின்னர் ஐக்கிய அமெரிக்காவால் இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படலாயிற்று. மக்கள் சீனா முன்னெடுக்கும் ‘தேசங்களிடையே சமத்துவம்’ என்ற நடைமுறைப் பிரயோகத்தைத் தகர்ப்பதற்கு இந்தியா உதவ இயலும் என்பது ஏகாதிபத்தியத் திணையின் எதிர்பார்ப்பு.
வர்க்க வாத அரசியலுடன் இயங்கிய மேலைத்தேச ஏகாதிபத்தியத்துக்கு, திணை அரசியலின் மேலாதிக்கப் பிரயோகம், இருநூறு வருடங்களுக்கு உட்பட்ட புதிய அனுபவம். இந்தியா இரண்டாயிரத்தைநூறு வருடங்களாக அதனைப் பிரயோகித்த அனுபவம் உடையது. சீனாவை வீழ்த்த வேண்டும், சீனாவுக்கு நட்புக்கரம் நீட்டும் ருஷ்யாவைப் பகைக்க வேண்டும் என்று ஐக்கிய அமெரிக்கா வலியுறுத்திய போதிலும் இந்தியா அவ்விரு நாடுகளுடனும் நட்பைப்பேணிப் பொருளாதார ஊடாட்டத்தை முன்னெடுத்து வருகிறது. தனது முதல் பதவிக் காலத்தில் இதனைக் கண்டுகொள்ளாமல் இயங்கிய ட்ரம்ப் அவர்களால் இந்தப் பயணத்தில் இந்தியப் பிரதமரை அவமதிக்காமல் இருக்க இயலவில்லை. அடுத்த நகர்வில் ஏகாதிபத்தியத் திணைக்குத் தானே தலைமை ஏற்பதாயினும், முத்தரப்பு ஊடாட்டத்தின் வாயிலாகவே ஐக்கிய அமெரிக்காவையும் மேவிய மேலாதிக்க வல்லரசாக இந்தியாவால் வர இயலுமாக அமையும். தற்காலிகமாகச் சில விட்டுக்கொடுப்புகளைத் தனக்குரிய அணியான மேலாதிக்கத் திணைக்கு இந்தியா வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
எவ்வாறெனினும், திணை அரசியல் அனுபவம்மிக்க சீனாவும் இந்தியாவும் புதிய உலக ஒழுங்கில் வர்க்க வாத அரசியலில் முட்டிமோதிய ஐக்கிய அமெரிக்க – சோவியத் யூனியன் இடையேயான பனிப் போர் போலச் செயற்பட அவசியமிருக்காது. மேலாதிக்கத் திணை அரசியலை முன்னெடுக்கும் இந்தியா, அதற்குரிய பண்பான “எதிரியுடன் கூடி உறவாடி அதிகாரத்தை வென்றெடுக்கும்” வழிமுறையைத் தேட வேண்டி இருக்கும். நடைமுறை அனுபவத்தின் வாயிலாகத் திணை அரசியல் செயலொழுங்குக்குரிய மார்க்சியப் பிரயோகத்தை மக்கள் சீனம் கையாளுவதனால் மாஓ சேதுங் சிந்தனை சோசலிச நிர்மாணத்துக்கும் நீடித்து வருகிறது. “எதிரியை அழித்தொழிப்பது” எனும் வர்க்க அடிப்படைக்குரிய அரசியல் வடிவமாக இயங்கிய மார்க்ஸ், லெனின் ஆகியோரது பிரயோகங்களில் இருந்து வேறுபட்ட வரலாற்றுச் செல்நெறிக்கு உரியது மாஓ சேதுங் சிந்தனை என்பதைத் தெளிவுற மக்கள் சீனத்தால் எடுத்துக்காட்ட இயலவில்லை. தேசிய விடுதலைக்குப் பின்னரான சோசலிச நிர்மாணத்துக்குப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை மாஓ சேதுங் கையேற்க நேர்ந்த இடர்பாடு தொடர்கிறது; பூரண சமத்துவத்தை எட்டும் வரை வர்க்க அரசியலில் இருந்து வேறுபட்ட ஓர் அரசியல் வடிவம் அவசியப்படுவதனை உணர்ந்து மாஓ சேதுங் சிந்தனையைச் சோசலிச நிர்மாண விருத்திக்கு உரிய இன்றைய பிரயோகமாகக் கொள்வது, ‘சீனாவுக்கான பிரத்தியேகப் பிரயோகம்’ என்றுதான் மக்கள் சீனத்தால் சொல்ல இயலுமாகி உள்ளது; இதனைப் புத்தகவாத (வறட்டுவாத) மார்க்சியர்கள் திரிபுவாதம் என அடையாளப்படுத்துவதும் நடந்து வருகிறது.
தமிழகத்தில் உருவாக்கம் பெற்று நிலவியிருந்த திணை மேலாதிக்கத்தின் முந்தைய உறவை மாற்றுவதில் பக்திப் பேரியக்கம் காட்டியிருந்த வழிமுறை விடுதலைத் திணை அரசியலுக்குரிய கோட்பாட்டைக் கண்டடைய உதவியுள்ளது. பழைய பாணியில் இயங்கும் பழக்கதோசம் காரணமாகப் பின்னடைந்துள்ள மார்க்சிய அரசியலானது விடுதலைத் தேசியம் எனும் புதிய கோட்பாட்டு விருத்தியைக் கையேற்கும் போது மட்டுமே மார்க்சிஸ – லெனினிஸ – மாஓ சேதுங் சிந்தனையால் மீண்டும் வையத் தலைமை கொள்ள இயலும்!
வர்க்கமும் திணையும்
‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுக்களும் ஓட்டங்களும்’ எனும் இந்தத் தொடரில் இவை குறித்துப் பேசி வந்துள்ளோம். கிரேக்க – ரோம் தொடக்கிவைத்த வர்க்க அரசியல் செல்நெறியிலிருந்து வேறுபட்டதான ஏற்றத்தாழ்வுச் சமூக முறைமை சாதி அமைப்பில் காணப்பட்டுள்ளது. வர்க்க ஒழிப்புக்கான கடமையைக் காண இடந்தராத தவறான வாழ்முறையாகச் சாதிகளின் இருப்புப் பார்க்கப்பட்டு வந்தமையால் எமக்கான மார்க்சியப் பிரயோகக் கோட்பாடு வகுக்கப்படாமல் போனது. முதலாளித்துவ நிலைப்பாட்டில் ‘சாதி ஒழிப்புக்’ கோட்பாட்டை முன்வைத்த பெரியாரியமும் அம்பேத்கரியமும், தொடர்ந்து சாதிகளிடையே மோதலைத் தவிர்க்கப் போதுமானதாக இல்லை. இந்திய மக்கள் விடுதலையைத் தூரப்படுத்தி இந்தியாவை ஏகாதிபத்தியமாக வளர்ப்பதில் முதலாளித்துவக் கருத்தியல்களான பெரியாரியமும் அம்பேத்கரியமும் பங்களிப்புச் செய்வதனைக் கண்டுகொள்ளாமல் இன்றைய எதிர்ப்பு அரசியல் வாதிகள் இயங்கி வருகின்றனர்.
அன்றைய மார்க்சியர்கள் சரியான கோட்பாட்டை வகுக்கத் தவறியமையால் பெரியாரும் அம்பேத்கரும் தத்தமது முதலாளித்துவச் சிந்தனை வரையறைக்கு ஆட்பட்டு ‘சாதி ஒழிப்பை’ முன்னிறுத்தினர். பிராமணிய மேலாதிக்கத்தைத் தகர்க்க வேண்டிய பணி காரணமாக அன்றைய அவர்களது அந்தத் தவறை மன்னிக்க இயலும். தாராளவாத அரைப் பிராமணியத் தலைமையை வழங்கிய காந்தியின் முதலாளித்துவ நிலைப்பாடு கூட சுதந்திரம் பெற உதவிய அளவில் ஏற்றாக வேண்டிய ஒன்றே. பெறப்பட்ட சுதந்திரத்தை மக்கள் விடுதலைக்கானதாக மாற்றி வளர்த்தெடுக்கும் சரியான கோட்பாட்டுடன் மார்க்சியர்கள் செயற்படத் தவறியிருந்தனர் என்பதனைச் சுயவிமரிசன ரீதியாக ஏற்பது அவசியம்.
இதனை வைத்துக் காந்தி, பெரியார், அம்பேத்கர் எனும் முப்பெரும் தலைவர்கள் மட்டுமே கூடுதல் சரியுடன் இருந்ததாகவும் அன்றைய மார்க்சியர்கள் முற்றிலும் தவறுகளுடன் செயற்பட்டனர் என்னும் கூறுகின்றவர்கள் இன்று மேற்கிளம்பி வருகின்றனர். பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் சாதியத்தைப் புரிந்து கொள்ளத் தவறிய குற்றச்சாட்டுக்கு அப்பால் மக்கள் விடுதலைக்கான பங்களிப்பில் மார்க்சியர்களே அன்று முக்கால்பங்கு சரியுடன் இயங்கியவர்களாகக் கணிக்கத்தக்கவர்கள். இன்றைய முதலாளித்துவச் சீர்கேடுகளுக்கு இடமளித்த காந்தி, பெரியார், அம்பேத்கர் போன்றோர் கால்பங்கு மட்டும் சரியாக அமையும் வண்ணம் எமக்கான பிரத்தியேக வரலாற்று இயங்குமுறையைப் பிரயோகித்திருந்தனர் எனக் கணிக்க இயலும்!

இந்திய மக்களின் விடுதலைப் போராட்ட அனுபவங்களையும் அதன் மீது இந்தியக் கொம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்புகளையும் கற்றுணர்ந்த இலங்கைக் கொம்யூனிஸ்ட கட்சி எமக்கான மார்க்சியக் கோட்பாட்டை உருவாக்க வழிசமைத்தனர். ஏ.கே. கோபாலன், நம்பூதிரிபாட் போன்ற இந்திய மார்க்சியர்கள் சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை முனைப்புடன் முன்னெடுத்தவர்கள். முழுமையாக அவர்கள் மார்க்சிய அரசியல் செயற்பாட்டுப் பரிணமிப்பை எட்டிய பின்னர் அந்த முனைப்பைக் கைவிட்டிருந்தனர் (பலரையும்போல வர்க்கவாதமாக மார்க்சியம் கருதப்பட்டதன் பேறு இந்தப் பின்னடைவு). வர்க்க அரசியல் களம் அவர்கள் முன்னே பரந்திருந்தது.
சாதி அமைப்புக்கு எதிரான போராட்டம் முன்னுரிமைக்கு உரியதாக இருந்த யாழ்ப்பாணத்தில் இந்திய மார்க்சியர்கள் முன்னதாக கையேற்றிருந்த சாதியத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வளர்க்கப்பட்டது. பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டுடன் மாஓ சேதுங் சிந்தனைப் பிரயோகமான “சாதி அமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்” என்ற பதாகையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம் எமக்கான மார்க்சியக் கோட்பாடுகளை வழங்கியது.
இலக்கியத் தளத்தில் க. கைலாசபதியின் மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்தார். அரசியல் தளத்தில் கே.ஏ. சுப்பிரமணியம் இனப் பிரச்சினைத் தீர்வில் நாலாம் கட்டப் போராட்டம் (சாதியத் தகர்ப்பில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களை அணி திரட்டியதைப் போல, இன ஒடுக்குமுறையைத் தகர்ப்பதில் பேரினத்துக்குட்பட்ட உழைக்கும் மக்களை ஒன்றிணைப்பதான ‘விடுதலைத் தேசிய’ மார்க்கம்) என்பதனை முன்வைத்தார்!

புதிய பாதை
இந்தத் தொடருக்கான விடயத்தை நிறைவு செய்தாலும் மற்றொரு ஆளுமை குறித்தும் பரிசீலனையை மேற்கொண்ட பின்னரே இனி அவசியப்படும் புதிய பாதை பற்றிய முடிவுக்கு வர இயலும். ஆறுமுக நாவலர் இன்று விவாதக் களத்துக்கு உரியவராக உள்ளார். அது குறித்த புதிய தொடர் ஒன்றில் சந்தித்துப் புதிய பாதையை வடிவப்படுத்த முயல்வோம்!