கோ. நடேசய்யரின் வழியில் சி.வி வேலுப்பிள்ளை எனும் இலக்கிய - அரசியல் ஆளுமை
Arts
15 நிமிட வாசிப்பு

கோ. நடேசய்யரின் வழியில் சி.வி வேலுப்பிள்ளை எனும் இலக்கிய – அரசியல் ஆளுமை

June 5, 2024 | Ezhuna

முதலாளி வர்க்கம் வசதியாக வாழ தம் வாழ்க்கையைத் தியாகம் செய்த மலையகத் தமிழ் மக்கள் தாது வருடப் பஞ்சத்தின் போது தமிழகத்திலிருந்து பல நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அண்மை நாடான இலங்கைக்கும் அழைத்துவரப்பட்ட இம் மக்கள் ஏமாற்றப்பட்டே அழைத்துவரப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. இந்த நாட்டிலே உழைத்து இந்த நாட்டின் சகல மக்களுக்காகவும் தங்களை மாய்த்துக் கொண்ட இலங்கை மலையகத் தமிழ் சமூகம் 200 வருடங்களாக அடையாளச் சிக்கலைச் சந்தித்து வருகிறது. மலையகத் தமிழர்களின் அவலங்களையும் கடந்த காலத்தின் துன்பியல் சுவடுகளையும் அனுபவங்களாகக் கொண்டு, எதிர்காலத்தில் இச் சமூகம் தனியான ஓர் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படுவதையும், சுதந்திரமான வாழ்க்கையை நோக்கி நகருவதையும் நோக்கமாகக் கொண்டு “இலங்கை மலையகத் தமிழ் மக்களின் இன அடையாளச் சர்ச்சை : 200 வருடங்கள்” என்னும் இத் தொடர் அமைகின்றது.

கோ. நடேசய்யர் தமிழ்நாடு விழுப்புரத்தைப் பிறப்பிடமாக கொண்டு (அப்போதைய தென்னாற்காடு மாவட்டம்), வளவனூர் கோதண்டராமர் ஐய்யருக்கும் பகீரதம்மாளுக்கும் மகனாக 1887.01.14 இல் பிறந்தார். அரசுப் பள்ளியில் ஆங்கில மொழி கல்வி பயின்றார். வங்கப் பிரிவினை காரணமாகவும், தேசிய சிந்தனைகள் மற்றும் சுதேசிய சிந்தனைகள் காரணமாகவும் ஆங்கிலக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சென்னை – அரசுப் பயிற்சி நிறுவனத்தில் கைத்தொழில் பயிற்சி பெற்றார். சில காலம் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு, பின் வியாபாரம் கற்றார். தஞ்சாவூர் கல்யாண சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் தொழில் கல்வி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

நடேசய்யரின் தொழிலாளர் சார்பு முன்னெடுப்புக்கள்

நடேசய்யர் ஒரு பத்திரிகையாளராக இலங்கைக்கு வந்திருந்தார். இயல்பாகவே அவரிடம் காணப்பட்ட தேசியவாதச் சிந்தனையும் சுதேசிய சிந்தனையும் அவரையும் அவருடைய எழுத்துகளையும் ஒடுக்கப்படும் மக்கள் சார்பாக தேடி எழுதும் பண்பை வளர்த்திருந்தன. ஆரம்ப காலங்களில் நடேசய்யர், கொழும்பு வாழ் தொழிலாளர்களின் அவல வாழ்வையும், துறைமுகத் தொழிலாளர்களாக இருந்த இந்திய வம்சாவளி மக்களின் துயரங்களையும் எழுதுவதற்காக பல தேடல்களைச் செய்தார். அவ்வாறான தேடல்களின் விளைவாக இலங்கையின் ஆரம்பகால தொழிற்சங்கச் செயற்பாட்டாளர் ஏ.ஈ. குணசிங்கவுடனான தொடர்பு கிடைத்தது. ஏ.ஈ. குணசிங்க அவர்கள், தொழிலாளர்களை வர்க்க ரீதியாக நோக்காமல் இனரீதியாக நோக்கி, இந்திய வம்சாவளித் தமிழ்த் தொழிலாளர்களை புறக்கணித்ததன் காரணத்தினால், நடேசய்யர் தொழிலாளர்கள் மத்தியில் களப்பணி ஆற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார். ‘தேசநேசன்’ பத்திரிகையைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இலங்கை வாழ் தொழிலாளர்களுக்காகவும், அதன்பிறகு தோட்டத்து தொழிலாளர்களுக்காகவும் தொழிலாளர் சம்மேளனத்தை ஆரம்பித்தார். நடேசய்யரின் முயற்சியில் ஸ்தாபிக்கப்பட்ட சம்மேளனம், சுய முயற்சி – கடனுதவிச் சபைகள் – கூட்டுறவுச் சங்கங்கள் என்பவற்றையும் ஸ்தாபித்து தொழிலாளர் பிரச்சினைகளைப் பேசவும் விழைந்தது.

தொழிற்சங்க முன்னெடுப்புகள்

தொழிற்சங்கம் என்பது தொழிலாளர் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டது. கைத்தொழில் புரட்சியோடு அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்சங்க உரிமைகள், இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மலையக மக்களுக்கு மறுக்கப்பட்டு இருந்தன. கோ. நடேசய்யர் இவர்களுக்கு தொழிற்சங்க அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தார். இவரது விடாப்பிடியான முயற்சியும் இவரது துணைவியார் மீனாட்சி அம்மை அவர்களின் அளவிட முடியாத பங்கு பற்றலும் மலையக மக்களுக்கு புதிய தொழிற்சங்க வரலாற்றினை ஆரம்பித்து வைத்ததாக வரலாறு எடுத்து இயம்புகின்றது.

தோட்டத்துரைகளதும் பெரிய கங்காணிகளதும் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், நகர்ப்புறப் போலீசாரும் நடேசய்யரின் செயற்பாடுகளுக்கு தடை விதித்து வந்தனர். அக்காலகட்டத்தில் சந்தா முறை இல்லாத காரணத்தினால், தொழிலாளர்கள் முன்வந்து நடேசய்யருக்கு பல நிதி உதவிகளைச் செய்திருக்கின்றனர். பத்திரிகையூடாக தனக்கொரு இடத்தை அமைத்துக் கொண்ட நடேசய்யரின் பெயரை, பத்திரிகை மூலமாகவே தவிர்ப்பது என்ற முடிவோடு, துரைமாரும் பெரிய கங்காணிமாரும் வர்த்தகர்களும் இணைந்து, ‘ஊழியன்’ என்னும் பத்திரிகையை ஆரம்பித்து, நடேசய்யரின் தொழிற்சங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தனர்.

brace

நடேசய்யர் இடதுசாரித் தலைமைகளோடு தொடர்பு கொண்டதன் காரணத்தினால் துரைமார் அச்சமடைந்தனர். நடேசய்யர், பிரபல கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளரான மணிலால் என்பவரோடு கொண்ட தொடர்பும், காலனித்துவத்திற்கு எதிரான கிளர்ச்சியாளரான அவுஸ்திரேலியா நாட்டின் சமூகச் செயற்பாட்டாளர் பிறேஸ்கேர்டில் என்னும் ஆங்கிலேயரோடு கொண்ட தொடர்பும், ஆட்சியாளர்களுக்கும் தோட்டத்துரைமார்களுக்கும் மிகப்பெரிய அச்சத்தினை ஏற்படுத்தியது. பிறேஸ்கேர்டில் மலையக மக்களுக்காக புரட்சிகரமாகச் செயற்பட்டதால், இவரை நாடு கடத்த அரசாங்கம் உத்தரவிட்டது. இந்த நாடு கடத்தல் விவகாரம் நாடாளுமன்றத்தில் பிரதானமான ஒரு விவாதம் ஆகியது. மலைகத் தோட்டத் தொழிலாளர்கள் மீது தமது வன்மத்தை காட்டிய வலதுசாரிகள், தோட்டத் தொழிலாளர்கள் இடையே புரட்சிகரமாக உழைக்கவந்த பிறேஸ்கேர்டிலை நாடு கடத்த தம்மால் இயன்ற பலத்தைப் பயன்படுத்தினர். ஜி.ஜி. பொன்னம்பலம் பிறேஸ்கேர்டிலை நாடு கடத்துவதற்கு தனது முழு ஆதரவையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்த விடயமாகும்.

நடேசய்யரின் முயற்சிகள் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டாலும், அவரின் தீர்க்கதரிசனமான பல முயற்சிகள் இன்று நிதர்சனமாகியுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. நடேசய்யரின் காலம், மலையக மக்களின் பொற்காலம் என்றால் மிகையாகாது. அவரைத் தொடர்ந்து அவருடைய பணிகளைச் செவ்வனே முன்னெடுக்க, அந்த அளவுக்கு தியாகத்துடன் ஒரு சிறந்த தலைமை மலையகத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை.

c.v

மலையக மக்களுக்காகப் பாடுபட்ட சி.வி வேலுப்பிள்ளையை நிராகரித்துவிட்டு மலையக மக்களின் வாழ்வியல் தொடர்பான ஆய்வினை பதிவிடுதலும் முறையற்றதாகும். அதன் அடிப்படையில், கோ. நடேசய்யரின் பாதையிலே இலக்கியத்தையும் அரசியலையும் தன் கையில் ஏந்தி, மலையக மக்களின் விடுதலைக்காகச் செயற்பட்ட மற்றும் ஒரு சிறந்த ஆளுமையாக சி.வி வேலுப்பிள்ளை அவர்களை நோக்கலாம். 1956 ஆம் ஆண்டில் மலையக மக்களின் அடையாளங்களை உலகத்திற்கு எடுத்தியம்புவதற்காய் ‘In Ceylon Tea Garden’ என்னும் புத்தகத்தை சி.வி எழுதினார். 

ரஸ்யக் கவிஞனும் போராளியுமான மாயாகோவ்ஸ்கி “நான் எனது இலக்கியங்களை படைத்ததன் பின் அவற்றை ஆயுதங்களாகவே நோக்குகின்றேன்” என்கின்றார். ஏனெனில் அவரின் செயற்பாடுகள் அனைத்துமே வர்க்கக் கட்டமைப்பினை தகர்ப்பதற்கான ஆயுதங்களாகவே காணப்படுகின்றன. மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளையின் கவிதைகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை மாற்றுவதற்கான ஆயுதங்களாகவே காணப்படுகின்றன. 

“பூக்குமேயந்தபுண்ணிய நாள்தனில் 

ஆக்கம்புரிந்தவர் அமைதி இழந்தவர் 

மூச்சிலே சுதந்திரத் திரு கலந்திடுமே 

மூச்சிலே விடுதலைச் சுகம் மலர்ந்திடுமே”

என்னும் வரிகள் மலையக தோட்டத் தொழிலாளர்களின்ன் துயரங்களுக்கான முடிவு வெகு தொலைவில் இல்லை என்று கூறுவதாகவே அமைகின்றன. கண்ணப்பன் வேல்சிங்கம் வேலுப்பிள்ளை எனும் இயற்பெயர் கொண்ட இவர், வட்டகொடை – மடக்கும்புர தோட்டத்தில் பிறந்து மலையக மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர். 

“ஆழப்புதைந்த தேயிலைச் செடியின் அடியில் 

புதைந்த அப்பனின் சிதை மேல் 

ஏழைமகனும் ஏறி மிதித்து 

இங்கெவர் வாழவோ தன்னுயிர் தருவான்”

என்னும் கவி வரிகளைப் படிக்கும் போது மனித நேயம் கொண்ட எவருக்கும் மேனி சிலிர்க்காதிருக்காது. மலை வாழ் மக்கள் படும் துன்பங்களை, எம்மை அடிமைப்படுத்தி கொண்டு வந்த ஆங்கிலேயர்கள் மாத்திரமன்றி, எம்மால் நன்மையடைந்து கொண்டு, பிழைக்க வந்த கூலிகள் என்று எம்மைச் சிறுமையோடு நோக்குபவர்களும் உழைப்பின் பெறுமதியை உணர வேண்டும் என்பதற்காகவே இந்தக் கவிதையினை சி.வி எழுதினார்.

“வியர்வை வடித்து

கூலியாய் உழைத்து

வெறுமையுள் நலிந்து

வீழுவது எல்லாம்

துயரக்கதையினும்

துன்பக்கதை. அதைத்

தொனிக்குதே பேரிகைத் (தப்பொலி)

துடி ஒலிக்குமுறல்”

என்ற வரிகள், அன்றைய மலையக மக்களின் வாழ்க்கை நிலையினை மனதுக்குள் ஓட்டிப் பார்க்கக் கூடியதான அனுபவத்தினை காட்டி நிற்பதாக அமைகின்றது.

cv with family

சி.வி வாழ்ந்த காலத்தின் அரசியல் நெருக்கடிகளும், அந்நெருக்கடிகளின் காரணத்தால் முகம் கொடுத்த கொடுமைகளுமே சி.வி இன் படைப்புகளின் அடிநாதமாக அமைவதனைக் காணலாம். மக்கள் போராட்டங்களை தலைமை தாங்கியதனால் அரச இயந்திரம் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகளுக்கு முகம் கொடுத்த சி.வி, 1949 ஆம் ஆண்டு நடைபெற்ற மலையகத் தமிழ் மக்களுக்கு எதிரான பிரஜா உரிமைச் சட்டத்தினை எதிர்த்து, 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தினை தலைமை தாங்கி நடத்திய முக்கிய தலைவர்களில் ஒருவராக அடையளப்படுத்தப்படுகின்றார். மக்கள் பங்கெடுக்கும் போராட்டங்களில் இன்றைய (மலையக) படைப்பாளிகள் வெறும் பார்வையாளர்களாகவும் அதற்கு எதிரான விமர்சனங்களை முன் வைப்பவர்களாகவும் மாத்திரமே தங்களின் பங்களிப்பினைச் செய்துள்ளனர். பிரஜா உரிமைச் சட்டத்தின் விளைவாக மலையக மக்கள் அடைந்த சொல்லொணாத் துயரங்களை உலகிற்கு காட்டிய கண்ணாடியாக சி.வி எழுதிய ‘தேயிலைத் தோட்டத்திலே’ நூலின் கவிதைகள் அமைந்திருக்கின்றன. இந்தக் கவிதைகள் மக்களின் உயிர் மூச்சாகவும், மக்களின் வேதனைகளை அனைவரையும் உணரச் செய்யும் கலைப்படைப்பாகவும், ஏங்கும் மக்களின் இதய ஒலியாகவும் அமைந்தன என்றால் மிகையாகாது.

“புழுதிப் படுக்கையில் புதைந்த 

என் மக்களைப் போற்றும் 

இரங்கற் புகழ் மொழி இல்லை 

புரிந்தவர் நினைவுநாள் பகருவர் இல்லை”

எனும் வரிகளின் மூலம் உழைப்பு உறிஞ்சப்பட்ட பின், சக்கையாக எறியப்பட்ட மலையகத் தொழிலாளர்களின் ஏக்கங்கள் பாடப்பட்டுள்ளது.

தன்னை மக்கள் இலக்கியவாதியாய் அடையாளப்படுத்திய சி.வி, மக்களுக்காக மக்களுடன் மக்களின் தேவையறிந்து வாழ்ந்தவர் எனும் பெருமையினைப் பெறுகின்றார். வேலுப்பிள்ளையின் படைப்புகளை வெறுமனே இலக்கியங்களாக மட்டும் நோக்காது, அவற்றில் பொதிந்திருக்கும் வர்க்க விடுதலைக்கான வேட்கையையும் புரிந்து கொள்வது அவசியம். 

“I SING OF LANKAS MEN 

BORN OF THE PADDY FIELD 

THE PATANAS

THE TEA AND RUBBER LAND 

YES, THE MEN I LOVE” 

என எழுதிய சி.வி, மலையக மக்களுக்கான இலக்கியங்களை மாத்திரம் படைக்கவில்லை; அனைத்து உழைக்கும் மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர்.

book

சக்திபாலைய்யா, மலையான் ஆகியோர் சி.வி இன் கவிதைகளை தமிழாக்கம் செய்துள்ளமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இந்த முயற்சியில், இதற்கு முன்னும் பின்னும் பலர் ஈடுபட்டு வந்திருப்பது, சி.வி இன் இலக்கிய ஆளுமையினை புதிய தலைமுறையினருக்கு அனுபவிக்கச் சந்தர்ப்பத்தினை வழங்குவதாகவும் அமைந்தது. சி.வி இன் ஆங்கில மொழி மூலமான விதைகளில் காணப்படும், இதயத்தினை வலிக்கச் செய்யும் உணர்ச்சியினை வழங்கக் கூடியதான எளிமையான பல மொழிபெயர்ப்புக்கள் மிக நிதானமாகச் செய்யப்பட வேண்டும். ‘In Ceylon Tea Garden’ புத்தகத்தினை நவீன வடிவில் வழங்கிய பாக்கியா பதிப்பகத்தாருக்கும், நண்பர் திலகருக்கும் நன்றிகூற வேண்டியது மலையக இலக்கிய நேயர்களின் கடப்பாடாகும். காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்துள்ள சி.வி. வேலுப்பிள்ளை, பேராசிரியர் கைலாசபதியின் நேசத்திற்குப் பாத்திரமானவராகவும் இருந்தார். அவர் மலையக மக்கள் கண்ட இலக்கியப் படைப்பாளிகளில் போற்றத்தக்க படைப்பாளி என்றால் மிகையாகாது. 1950 களில் படைக்கப்பட்ட அவரது இலக்கியங்கள், இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தக் கூடியதான காத்திரமான படைப்புகளாக இருக்கின்றன.

இதன் அடிப்படையில் கோ. நடேசய்யர், மீனாட்சி அம்மாள் என்பவர்களோடு போற்றப்பட வேண்டிய சி.வி வேலுப்பிள்ளை என்னும் மலையக இலக்கிய – அரசியல் ஆளுமையையும், மலையக மக்களின் இரு நூற்றாண்டு துன்பியல் வாழ்வியலோடு பின்னிப் பிணைத்து நோக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

3731 பார்வைகள்

About the Author

சை. கிங்ஸ்லி கோமஸ்

அரச உத்தியோகத்தராகப் பணியாற்றும் சை. கிங்ஸ்லி கோமஸ் வீரகேசரி, தினக்குரல், தாயகம் (யாழ்பாணம்), புது வசந்தம் (யாழ்ப்பாணம்) ஆகிய பத்திரிகைகளின் கொட்டகலைக்கான மேலதிக நிருபருமாவார். கட்டுரையாளர், விமர்சகர், சிறுகதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், குறும்பட இயக்குனர் என பன்முக ஆளுமை கொண்டவர். ‘The Dark Nest’ எனும் இவரது குறுந்திரைப்படத்திற்கு பெண்கள் ஊடக மைய்யத்தின் (இலங்கை) 2023 ஆம் ஆண்டிற்கான விஷேட விருது கிடைத்திருக்கின்றது. ஊடறு, பெண்ணியா, காக்கைச் சிறகினிலே (தமிழ்நாடு), ஜித்தன் (தமிழ் நாடு) போன்ற பிற நாட்டுப் பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார். மலையக வரலாறு, சமூகவியல், அரசியல் சார்ந்த இவரது எழுத்துகள் குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (2)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)