மே 2009 என்பது மிக முக்கியமான ஒரு காலப்புள்ளி; தமிழர்கள் எல்லோருக்கும். ஒரு யுத்த காலத்தின் முடிவையும், பல சகாப்தங்களாக யுத்தம் விதைத்த அளவிட முடியாத மொத்த அழிவுகளையும் கணக்கில் எடுக்கும் காலம்; பலருக்கு கனவுகளில் இருந்து விழித்தெழும் காலம். சிலருக்கு, எதிர்பார்க்காத ஒரு தோல்வியின் முழு வீச்சையும் ஆரத்தழுவி கால அசைவின் போக்கில் கரைந்து போகும் காலம்; அது முழு நம்பிக்கையும் புதைக்கப்பட்ட அசைவற்ற மனநிலை. ஆனால், கடந்த பதின்நான்கு ஆண்டுகால மொத்த சமூக அசைவியக்கத்தை எந்தவித உள்நோக்கம் இன்றி மிகக் கவனமாக நோக்கும் போது முக்கியமான ஒரு முடிவை நிதானமாக அடையக்கூடியதாக உள்ளது. அது யாதெனில், போரின் உச்சம் காரணமாக ‘பிடுங்கப்பட்ட பூசணிச் செடியாக’ இருந்த தேசம் நிதானமாக, உயிர் பெறும் ஒரு வனமாக மீள் உருவாக்கம் கொள்ளும் ஒரு நிலையே. இந் நிலையை மூன்றாக நோக்கலாம்.

- சளைக்காது : தனது அடையாளம், தமிழ் தேசம் மற்றும் தன் இருப்பு மீதான வலுவான பிரியம்.
- சிதைக்கப்பட்ட தேசத்தின் மீள்கட்டுமானம்.
- பல்பரிமான உணர்வு நிலை : எல்லோரும் இணைந்து தேர் இழுக்கும் பொது மனநிலை. களமும் புலமும் இணைந்து, கலந்து, சில வேளைகளில் முரண்பட்டாலும், தமிழர் தேசம் தொடர்பான கரிசனையை தொடர்ந்து பிணைத்து நிற்கும் செல்நெறி.
குறிப்பாக 2020 பின்பான காலத்தில், மிகவும் துல்லியமான கவனிப்பு யாதெனில்:
- வடக்கு கிழக்கு மற்றும் மலையக மீள்கொள்-களநிலை மற்றும் இணைகொள்-மன நிலை. கடந்த காலத்தைவிட மிகவும் நெருங்கி இணையும் அசைவு நிலை. காலம் தந்த படிப்பினையாக இருந்தாலும், ஒரு அசைக்க முடியாத, பலமான சேதன உயிர்ப்பு. ஒரு வலுவாக வேர்கொள்ளும் தேசத்தின் அசைநிலை.
- தனி நிலை, குடும்ப, ஊர் சிந்தனை நிலையில் இருந்து தேசமாகச் சிந்திக்கும் மனநிலை. வடக்கின் பால் நிலைகொண்ட புலம்பெயர் நிதிப் பெயர்ச்சி.
- தமிழர் தேசத்தின் நிலையான, நீடிக்கக்கூடிய அபிவிருத்திக்கு சமூக நிறுவனங்களின் மீதான பற்றுதல். திடமான ஒரு பேண்தகு அபிவிருத்திக்கு, சமூக நிறுவனங்களின் பலமான ஈடுபாடு மிக அவசியம். சமூக நிறுவனங்களுக்கு இடையேயான பலமான கட்டமைப்பும், சிறந்த தலைமைத்துவமும் பிரிக்க முடியாத நாணயத்தின் இரு பக்கங்கள் போல கட்டமைக்கப்பட்ட ஒரு அபிவிருத்தி மையம் மீதான உச்சமட்ட கவனமும் அதற்கான மூலதன மற்றும் மனித வள அபிருத்திக்கான கரிசனையும்.
மேற்கூறிய அசைவு நிலையில், எம்மிடையே இணைந்த, ஆனால், கவனம் கொள்ளப்படாத ஒரு மிக முக்கியமான ஒரு சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு, மக்கள் அமைப்பு கூட்டுறவு இயக்கம் ஆகும். கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் பற்றிய உணர்வு நிலை – பொதுப் புத்தி என்பது கிணற்றில் போட்ட கல்லாக, சேற்றில் மறைந்திருக்கும் வைரமாக உள்ளது மிகவும் யதார்த்தமாகும். எந் நிலையில், ஒரு ஆரோக்கியமான ஒரு கருத்துப் பகிர்வை செயற்படுத்தக் கூடிய ஒரு கள நிலையின் பால் அசைவைத் தூண்டும் முகமாக, ‘போரின் பின்னரான மீள்கட்டுமானத் திட்டங்களுக்கும் நிலையான அபிவிருத்திக்குமான கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : எங்கிருந்து தொடங்குவது?’ என்னும் தலைப்பில் இக் கட்டுரை உங்கள் முன் வருகிறது? ஒரு வலுவான, நீடிக்கக்கூடிய சமூகப் பொருளாதார கலாசாரக் கட்டமைப்பு எம்மிடம் தவழும் பொழுது, அதன் மீதான இருப்பை இன்றைய நிலைகொள் காலக் கள நிலைக்கும் தற்போதைய தட்பவெப்ப நிலைக்கும் பொருந்துவது போல், கூட்டுறவின் வகிபாக மீட்பாகத்துக்குரிய கருத்துக்களோடு முன்வைத்து வலுவான கலந்துரையாடலை நோக்கிய பாதையைத் திறப்பதே இக் கட்டுரைத் தொடரின் மிக முக்கிய ஆவல் மற்றும் மிக்க ஆசையும் ஆகும்.

தமிழர் தேசம், தமிழ் தாயகம் என்பது ஒரு பரந்த, திரண்ட பூலோக ரீதியான சிந்திச் சிதறிய தமிழர்களின் சமரசம் செய்ய முடியாத தேச உணர்வு ஆகும். ஈழத்தில் அது புவிசார் மையம் கொண்டாலும் அது நீண்ட காலமாக அடைய முடியாத, ஆனால் அடைய வேண்டும் என்ற உளவியல் மனோநிலை, தாகம், கனவு மற்றும் மீள் திரும்ப முடியாத ஒரு ஒரு வழிப் பாதையாகவும் இருக்கிறது. காலனித்துவம் தமிழர் மீது வலுவாகச் செலுத்திய வலியும் அதற்கு மேலாக பௌத்த சிங்கள உயர் வர்க்கம் தந்த மிகக் கொடுமையான வதையும் தமிழரின் பாரம்பரிய தேசத்தின் திட்டமிட்ட, தொடர்ச்சியான சிதைவாகும். காலம் ஒரு அளவு மட்டும் அல்ல; அது ஒரு நினைவு; அழிக்க முடியாத, காற்றில், வெளியில், ஆழமாக படிந்த வடு. எம் மீதானா ஒரு இன வதையின், இன அழிப்பின் படிமங்களை சதா நினைவூட்டும் ஒரு கண்ணாடி. சதா நினைவு கொள்ளும் ஒரு மனநிலை; துரத்த முடியாத, துறக்க முடியாத ஒரு வதை மற்றும் மனநிலைச் சிறை.
அனுபவித்த, நாளாந்தம் தலையில் தாங்கிய முள்கிரீடங்கள் தான், தேசம் மீதான அளவிட முடியாத அவாவையும் விடாப்பிடியையும் ஒவ்வொரு கணமும் அதிகரிக்கும். ஆனால், இந்த மனோவலிக்கு மருந்தாகும், மன நிம்மதி தரக்கூடிய தேச நிர்மாணம் என்பது இலகு அல்ல. அது ஒரு தவநிலை; எல்லோருக்குமான பொறுப்பு. சகலரும் ஒத்த மனநிலையில் இடையறாது தொடர்ந்து யாகம் செய்யும் ஒரு யாத்திரை; நீண்டகால வலியான பயணம். நினைவுகொள் காலம் தொடர்பாக மீள் சிந்தனையும் ஒரு அகண்ட விரிவான கண்ணோட்டமும் மிக அவசியமாகும். சிதைவுகளின் பல வடிவங்களைக் கண்டறிந்து மீள் உருவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதில் மிக முக்கியமாக வர வேண்டிய விடயம் போர் சிதைத்த எமது நிறுவன நினைவு வளம் (Institutional Memory) ஆகும். மனித இழப்புகளுக்குப் பிறகு, பின்தொடரும் எம்மால் முக்கியமாகப் பார்க்கப்படாத விடயம், நாம் கட்டமைத்த நிறுவனங்களின் பெயர்வும் சிதைவுமே. நிறுவனங்களின் சிதைவுகளில் மிக முக்கியமானதும் மிகவும் பாதிக்கப்பட்டது கூட்டுறவு இயக்கமும் அதன் கட்டமைப்புகளும் ஆகும். கூட்டுறவுத் துறையின் கணிசமான வெற்றிக்கு மிகவும் அச்சாணியாக விளங்கிய பொருளாதாரக் கட்டமைப்பு கூட்டுறவு மையங்கள் ஆகும். எல்லாம் சிதைந்து போயின. அத்துடன், மிகவும் சிறப்பாக இயங்கிய, மிகச் சிறப்பாக ஈடுபட்ட சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கங்களும் அழிந்தன.
இசுரேலியர்களை விட, வலிகளையும் சிதைவுகளையும் தங்கள் பொருளாதாரக் கட்டமைப்புக்கு மிகக் கவனமாக, கள நிலையின் தரம் அறிந்து உரமாக இட்டவர்கள் பங்சமோரோ மக்கள் (Bangsamoro). அவர்களுக்கு கை கொடுத்தது கூட்டுறவு இயக்கம். இரவில் போராடுவதும் பகலில் கூட்டுறவு மையங்கள் இயங்குவதும் நேரில் கண்ட அனுபவம். பெண்களின் வலுவான பங்களிப்பு, திட்டமிட்ட உள்ளூர் பொருளாதார மையங்களை சந்தையுடன் இணைத்து தங்களுக்குமான சந்தையாகவும், அதே பொழுது எல்லோருக்குமான, தவிர்க்க முடியாத விநியோக மையங்களாகவும் இயக்கியமை போராடும் வலுவுக்கு மேலும் சக்தியூட்டியது; பலமான பொருளாதார மையமாக வலுப் பெறுவதுக்கு அடித்தளம் இட்டது. போரின் பின், சமாதான காலப் பொருளாதார மீள் கட்டமைப்பில் மிகப் பெரிய கூட்டுறவுச் சம்மேளனங்கள் மலர்ந்தன. வேலை வாய்ப்புகள், புதிய சந்தைகள் திறந்தன. போராடிய மக்கள் பொருளாதாரப் போராளிகளாக மாறினார்கள். சர்வதேசம் இறக்கப்பட்டது; எல்லாம் வலுவாக மாறின. கூட்டுறவு இயக்கங்கள் பெரும் காடாக மாறின. இதனால் பேரம் பேசும் சக்தி அதிகரித்தது. பங்சமோரோ தேசம் வேர்விட ஆரம்பித்தது.

கூட்டுறவு இயக்கம் அதன் கட்டமைப்புக்கள் ஆகியன ‘எங்கள் அமைப்பு, எங்களுக்கானவை’ என்பது கூட்டுறவு மையப்படுத்தும் பெரும் வாய்மொழி வாக்கியம் ஆகும். எங்கள் அமைப்பு, எங்களுக்கானவை என்பது உணர்த்தும் பொருள் என்ன? அது மக்கள் அமைப்புக்கள் என்பதே ஒரு பொதுவான விளக்கம். மிக முக்கியமான விடயம், கூட்டுறவு இயக்கத்தை புரிந்து கொள்வது; தரிசனம் செய்வது, கையாள்வது. எதையும் மிகக் கவனமாக விளங்காவிட்டால்; கையாளத் தெரியாவிட்டால் பெரும் சீரழிவே உண்டாகும்.
கூட்டுறவு இயக்கம் என்பது எமக்கு மிகவும் பழகிய கூட்டுறவுச் சங்கம் இல்லை. கூட்டுறவு ஒரு பெரிய வன இராச்சியம்; வலுவான சர்வதேசப் பரிமாணத்தை உள் வாங்கிய ஒரு பூதம்; ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம்; பல தளங்களில் பல நிலைகளில் வேர்விடும் ஒரு மக்கள் மையம். இலங்கையில், குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் (கூட்டுறவு இயக்கம் பெரிதாக இல்லை) கூட்டுறவு இயக்கம் பற்றி பலர் அறிந்திருந்தும் அது மதிக்கப்படாமல் இயங்கும் கட்டமைப்பாகவே இருந்து வருகிறது. குறிப்பாக வடக்கில், சாதி உணர்வை தக்கவைப்பதற்கு, பொருளாதார விடயமாக கூட்டுறவு இயக்கத்தைக் காட்டி அதை மறைப்பது உண்மையான கூட்டுறவு இயக்கம் இல்லை; கூட்டுறவு இயக்கம் ஒரு சமூகப் பொருளாதார, கலாசார மற்றும் ஆத்மீக இயக்கம்.
கட்டுரை 2, கூட்டுறவின் அடையாளம், அதன் அரசியல் பற்றி விரிவாக ஆராயும். அத்துடன், ஏன் கூட்டுறவு அரசியல் கருவியாக திசை மாறி வலுவிழந்தது என்பது பற்றியும் விரிவாக ஆராயும்.
தொடரும்.