இலங்கையில் மாடறுப்புத் தடை – பொருளாதாரத் தாக்கங்கள், சவால்கள், தீர்வுகள்
Arts
10 நிமிட வாசிப்பு

இலங்கையில் மாடறுப்புத் தடை – பொருளாதாரத் தாக்கங்கள், சவால்கள், தீர்வுகள்

May 30, 2023 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதனை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

சில வருடங்களுக்கு முன் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபோது  நடைமுறையிலுள்ள ஐந்து சட்டங்களைத் திருத்தம் செய்வதன்  [Amendment] மூலம் சட்ட ரீதியாக மாடறுப்பைத் தடை செய்ய முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஒரு  அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்குரிய அனுமதியையும் அவர்  பெற்றதோடு சட்ட திருத்த நடவடிக்கைகளும் முழு வீச்சில் இடம்பெற்று, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில்  ஆட்சி மாற்றம் இடம்பெற்ற காரணத்தால் அந்தத்திட்டம் சற்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒரு பொதுத் தேர்தலில் ஆளும் பொதுஜன பெரமுன வெற்றி பெற்ற பின் இடம்பெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில் அன்றைய  பிரதமர் இது தொடர்பாக முதன்முதலில் கருத்தை வெளியிட்டு அங்கு சம்மதத்தை பெற்றிருந்த போது நாடளாவிய ரீதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் மத்தியில் ஒருவித சலசலப்புத் தோன்றியிருந்தது. இந்தியாவைப் போல  மாடறுப்பை அரசியலாக்கும் செயற்பாடாகவே இதனை கருத முடியும். குறிப்பாக மத ரீதியான விடயமாக இதனை அரசியல்வாதிகளும் சில சமயக்குருக்களும்  நகர்த்துவதைக் காணமுடியும். தற்போது இது கிடப்பில் இருக்கிறதே தவிர முற்றிலும் கைவிடப்படவில்லை.

இலங்கையில் மாடறுப்புத் தொடர்பாக பின்வரும் சட்டங்கள் உள்ளன.

• 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்கு சட்டம் [Animal act]
• 1893 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இறைச்சி வெட்டுநர்களின் சட்டம் [Butchers ordinance]  
• மாநகர, நகர சபை மற்றும் பிரதேச சபை சட்டங்கள்

இவற்றில் உள்ள மாடறுப்பு [Cattle Slaughtering] தொடர்பான விடயங்கள் திருத்தியமைக்கப்படவுள்ளன.

பசுவதைக்கு-எதிரான-போராட்டம்

இலங்கையில் மாடறுப்பு தொடர்பாக தொடர்ச்சியான எதிர்ப்புக்களை  பெளத்த மற்றும் இந்து அமைப்புக்கள் எழுப்பி  வந்த  நிலையில் மறைந்த முன்னாள்  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிடம் கூட முன்பு ஒருமுறை, மாடறுப்பைத்  தடை செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு,  ‘’ஏனைய விலங்குகளை கொலை செய்வதை நிறுத்தினால் உடனடியாக இதனையும் (மாடறுப்பையும்)  நிறுத்தலாம்‘’ என அவர்  கூறி, அந்த யோசனையை  நிராகரித்திருந்தாரென  ஒரு தகவல் உள்ளது. 2009 ஆம் ஆண்டில் விஜயதாச ராஜபக்சவால் முதன் முதலில் நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணையாக மாடறுப்பு தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போதும் போதிய ஆதரவு இன்மையால் அன்று அது சாத்தியப்படவில்லை.

 2013 ஆம் ஆண்டில் கண்டி தலதா மாளிகையின் முன் புத்த துறவியொருவர் மாடறுப்பை நிறுத்தக் கோரி தனக்கு தானே தீமூட்டியும் இறந்திருந்தார். கண்டி உள்ளிட்ட, பல பெளத்த புனித நகரங்களில் மாடறுப்புக்குத் தடை உள்ளது. [கண்டிக்கு  வெளியே மாடுகள் அறுக்கப்பட்டே மாட்டிறைச்சி அங்கு கொண்டுவரப்படுகிறது. இத்தனைக்கும் உலகத் தரம் வாய்ந்த விலங்கு கொல்களம் ஒன்று கண்டியில் அமைக்கப்பட்டு இற்றை வரை மத பீடங்களின் எதிர்ப்பு காரணமாக அது திறக்கப்படவே இல்லை]. மாடுகளை இறைச்சிக்கு கொல்வது தொடர்பாக சமய அமைப்புக்களும் விலங்குகள்நல தன்னார்வ அமைப்புகளும் எதிர்ப்புப் பேரணிகளையும்  ஆர்ப்பாட்டங்களையும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளையும்  தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதையும் காணமுடிகிறது.  சில விலங்குகள் கொல்களங்களுக்கு கொண்டுவரப்படும் மாடுகளை பல புத்த துறவிகள் மக்களுடன் புகுந்து பலவந்தமாக மீட்டு மக்களுக்கு பகிர்ந்தளிப்பதும் அவதானிக்கப்படுகிறது. அதாவது மாடறுப்பு ஒரு குறித்த சமயத்தவருக்கு மட்டும் உரித்தானது என்பது போலவும் அவர்கள் மாத்திரம் தான் மாட்டிறைச்சி உண்பது போலவும் ஒரு வகை விம்பமும் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், மாடறுப்பை மீட்கும் பொறுப்பு புத்த துறவிகளின் தலையாய கடமைகளில் ஒன்றாகக் காட்டப்படுகிறது. அதாவது சிங்கள பௌத்த எண்ணக்கருவில் இதுவும் ஒரு விடயமே. இஸ்லாம் கிறிஸ்தவ மக்கள் மட்டுமே மாட்டிறைச்சி உண்கின்றனர் என்பது தவறானது, கணிசமான இந்து மற்றும் பௌத்த மக்களும் மாட்டிறைச்சியை  உண்கின்றனர். மேற்படி இந்து பௌத்த மாட்டிறைச்சி நுகர்வோர் எதிர்ப்புகளின் காரணமாகவும், சமூகத்தில் வெளிப்படையாக உண்பதால் ஏற்படும் அவப்பெயருக்குப் பயந்தும் மாட்டிறைச்சி உண்பதைத் தவிர்த்துள்ளதோடு பலர் ஒளித்தே மாட்டிறைச்சியை உண்கின்றனர்.

Stray-cattle-hamper-movement-of-people-and-vehicles-in-Puttalam

அண்மைக் காலமாக இலங்கையின் பாலுற்பத்தியில் தன்னிறைவு காண எடுக்கப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் முட்டுகட்டை போடக் கூடிய ஒரு நகர்வாகவே இதனைப் பார்க்க முடிகிறது. கால்நடை வளர்ப்புத் தொடர்பான விற்பன்னர்கள் யாரும் இந்த நகர்வை விரும்ப மாட்டார்கள். எந்த நாட்டிலும் பண்ணைகளில் உள்ள தேவையற்ற மாடுகளைக் கழிக்காது போனால்  பாலுற்பத்தியில் தன்னிறைவு காண முடியாது. யார் இந்த மாதிரியான முடிவை எடுக்கத் தூண்டினார்கள் என்னும் ஐயம் எனக்குள் எழுகிறது. கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் மற்றும் பால் உற்பத்தித் துறையின் எதிர்காலத்தை கருத்திற் கொள்ளாமல் வெறுமனே  உணர்வு ரீதியான குறிப்பாக ’சமய அரசியல்’ இந்த முடிவில் இருப்பதாக கால்நடை வளர்ப்பின் விற்பன்னர்கள் கருதுகின்றனர். இந்தியாவிலும் இதே போன்ற  நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு மாடறுப்பு பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டு அரசியல் நகர்வுகளையும் ஒப்பு நோக்க முடியும். அங்கு வட இந்தியாவில் இந்தத் தடை ஓரளவுக்கு சாத்தியமான போதும் கல்வியறிவு கூடிய தென்னிந்தியப் பகுதிகளில் சாத்தியப்படவில்லை.

சில வருடங்களுக்கு  முன் இந்த விடயம் உச்சம் பெற்றிருந்த போது இலங்கை கால்நடை வைத்தியசபையினால் [Sri Lanka Veterinary Association- SLVA]  ஒழுங்கு செய்யப்பட்ட இணைய வழிக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. இலங்கையின் கால்நடை வளர்ப்புத் தொடர்பான அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், இலங்கையின் ஒரே ஒரு கால்நடை வைத்திய பீடமான  பேராதனை பல்கலைக்கழக விலங்கு விஞ்ஞான பீடாதிபதி, அமைச்சு செயலாளர்களாக உள்ள கால்நடை  வைத்தியர்கள், மத்திய மாகாண அரச பணிப்பாளர்கள், கால்நடை வைத்தியர்கள், இலங்கையின் பெரும் கால்நடை பண்ணைகளின் முகாமையாளர்கள்  என பல கால்நடை உற்பத்தி தொடர்பான முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இங்கு கலந்து கொண்டிருந்த அனைவரும் இந்தத் தடை தொடர்பாக எதிர்ப்பை வெளியிட்டிருந்ததோடு இந்த முடிவு கால்நடை  உற்பத்தி மற்றும் பால் வளத் துறையைக் கடுமையாகப் பாதிக்கும் என தமது கருத்துகளையும்  வெளியிட்டிருந்தனர். இது தொடர்பாக இறுதி முடிவை எடுக்கு முன் அரசின் உயர் மட்டத்துக்கு இதன் ஆபத்தை புரிய வைக்க கடும் பிரயத்தனங்களை எடுப்பதாகவும் சொல்லியிருந்தனர்.

எனக்கு தெரிந்த வரை இலங்கையில் கால்நடை உற்பத்தித் துறையின் எந்த முடிவுகளையும் இந்தக் குழாத்தின் ஆலோசனை இன்றிச் செய்யவே முடியாது. இவர்களைத் தாண்டி இலங்கையில் யாருமே கிடையாது. பெரும்பாலான அரச மற்றும் தனியார் கால்நடை வைத்தியர்கள் இதற்குள் அடங்குகிறார்கள். என்னுடைய இந்தக் கட்டுரை  அந்த இணையவழிக் கருத்துப் பகிர்வையும் கடந்த சில வருடங்களாக இந்த விடயம் தொடர்பாக தென்னிலங்கை ஊடகங்களில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களையும் இந்தியாவில் பல மாநிலங்களில்  நடைமுறையிலுள்ள மாடறுப்புத் தடை தொடர்பான விடயங்களையும் கள மட்டத்தில் நான் பார்க்கும் விடயங்களையும்  அடிப்படையாக கொண்டது.

இலங்கையில் தற்போதுள்ள  உள்ள மாடறுப்புத் தொடர்பான  சட்டங்கள் சொல்வது என்ன?

விலங்குச் சட்டம்

  • 12 வயதுக்கு உட்பட்ட பசு மாடுகளைக் கொல்ல முடியாது.
  • இனப்பெருக்க ஆற்றலுடைய மாடுகளைக் கொல்ல முடியாது.
  • விவசாயத் தேவைக்குப் பயன்படுத்தப்படும் மாடுகளைக் கொல்ல முடியாது.

இந்த விடயங்களை அரச கால்நடை வைத்தியர், நகர, மாநகர, பிரதேச சபைகள் நியமித்துள்ள கால்நடை வைத்தியர், அல்லது அந்த நகர மாநகர மற்றும் பிரதேச சபைகள் நியமித்துள்ள அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும். மாடுகள் என்னும் போது பசு மற்றும் எருமை மாடுகள் இதற்குள் அடங்குகின்றன. இந்தச் சட்டம் 1958  ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்பதோடு அடிக்கடி பல  சட்டத்திருத்தங்களுக்கும் உட்பட்டது.

இறைச்சி வெட்டுவோர் சட்டம் [Butchers ordinance]

மாடு/விலங்குகளை உணவுக்காக வெட்டுபவர் மற்றும் மாடுகளைக்  கொல்லும் கொல்களம் தொடர்பான சட்டம். இந்தச் சட்டம் சுதந்திரத்துக்கு முன் அதாவது பிரிட்டிஷ் ஆட்சியில் 1893 உருவாக்கப்பட்டதோடு காலத்துக்கு காலம் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

விலங்குகளைக் கொல்லும் கொல்களம் மற்றும் இறைச்சிக் கடைகளை நடாத்தும் மாநகர, நகர மற்றும் பிரதேசசபைச் சட்டங்கள்

கொல்களங்களின் மீது மேற்படி சபைகளின் அதிகாரம், விற்பனை செய்வதன் அதிகாரம் தொடர்பான சட்டங்கள் இதற்குள் அடங்குகிறது.

இது தொடர்பான சுற்று நிருபங்கள் – மாடுகளைக் கொண்டு செல்லுதல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானிகள் [விலங்குச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களோடு தொடர்புடையவை  ex – 2009 ஆம் ஆண்டு 1629/17 இலக்க அதிவிசேட வர்த்தமானி] போன்றன. இவை  ஒரு மாடு, வளர்ப்பு இடத்திலிருந்து எப்படி  இன்னொரு இடத்துக்கு செல்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இந்தச் சட்டங்களைத் திருத்தி  அதாவது மாடறுப்பு விடயங்கள் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டு இலங்கையில் மாடறுப்பது என்பதை சட்ட விரோதமாக்க முயன்றிருந்தனர். அதாவது இந்தச் சட்டங்களை  மீறி யாரும் இதனை செய்தால் அது சட்ட விரோதம், தண்டனைக்குரியது.

அத்துடன் மேலதிகமாக விலங்கு நலச் சட்டம் [Animal Welfare Act] ஒன்று உருவாக்கப்பட்டு அதுவும் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது. அந்தச் சட்டமும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்படவிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக கிடப்பில் உள்ளது. விலங்குகளைத் துன்புறுத்தல், முறையற்ற விதத்தில் அவற்றை  வளர்த்தல் போன்ற பல விடயங்களுக்குத் தண்டனை தரும் வகையில் இந்தச் சட்டம் அமையவுள்ள நிலையில் இந்தச் சட்டத்தின் மூலமும் இலங்கை  கால்நடை வளர்ப்புத் துறை பாரிய சவால்களைச் சந்திக்கும் என்பது வெளிப்படை.

இலங்கையின் பசு மாடுகள் 1.52 மில்லியன் அளவிலும் எருமை மாடுகள் 4.72 மில்லியன் அளவிலும் [மொத்தம் 2 மில்லியன்] காணப்படுகின்றன [கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள புள்ளி விபரம் 2019]. வருடாந்தம் இலங்கையில் உத்தியோக பூர்வமாக 140,000 – 160,000 வரை இறைச்சிக்காக  மாடுகள் வெட்டப்படுகின்றன. அதாவது மொத்த மாடுகளின் 10 சதவீதம் வரை இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. இந்தக் கணிப்பீட்டில் உத்தியோக பூர்வமற்ற வகையில் வெட்டப்படும் மாடுகள் கருத்தில் கொள்ளப்படவில்லை. மாடறுப்பு  நிறுத்தப்பட்டால் வருடாந்தம் 160,000 – 200,000 வரையான மாடுகள், மொத்த மாடுகளின்  தொகையில் சேரப்போகின்றன. எண்ணிக்கை ரீதியில் பார்த்தால் ஐந்து வருடங்களில் 1 மில்லியன் அளவும் பத்து வருடங்களில் 2 மில்லியன் அளவும் அதாவது தற்போது உள்ள மாடுகளின் இரண்டு மடங்கு மாடுகள் கணக்கில் சேரப் போகின்றன. உத்தியோக பூர்வமற்று வெட்டப்படும் மாடுகளும் சேர்க்கப்பட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

தெருவோரங்களில் பொலீத்தீன்களை உட்கொள்ளும் மாடுகள்

இலங்கையில் உள்ள அதிகளவான மாடுகள் உள்ளூர் வகையைச் சேர்ந்தவை. மேய்ச்சலை நம்பியவை. அதாவது புல்வெளிகளிலும் வயல்களிலும் வீதிகளிலும் காடுகளிலும் மலையடிவாரங்களிலும் குளக்கரைகளில் உள்ள புற்களை நம்பியவை. மாடுகள் பல மடங்காக அதிகரிக்கும் போது மாடுகள் உண்ணத்தக்க மேற்படி புல் வகை உணவுகளுக்கும் ஏனைய உணவுகள் மற்றும் தண்ணீருக்கான போட்டி உருவாகும். வருடாந்தம் கணிசமான   மாடுகள் வெட்டப்பட்டு ஒரு சமநிலை ஏற்பட்டுள்ள இந்த நிலையிலேயே பல பருவங்களில்  மேய்ச்சல் தரை இல்லாமல், மாடுகளுக்கு உணவூட்ட முடியாமல்  பண்ணையாளர்கள்   திண்டாடுவதைக் காண முடிகிறது. வறட்சிக் காலத்தில்  தண்ணீர், சரியான புற்கள்  என்பன இல்லாமலும், மழை காலத்தில் வயல்கள் பயிர் செய்யப்படுவதாலும் குளங்கள் நீரால் நிரம்பியதாலும்  மேய இடமின்றியும்  அவை மெலிந்து நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து மடிகின்றன. தினமும் ஒருமாடு தனது உடல் நிறையில் குறைந்த பட்சம் 1௦ வீதம் புற்களை உண்ண வேண்டும். இருநூறு கிலோ மாடு, இருபது கிலோ வரை புற்களை உண்ண வேண்டும். இன்றைய  நிலையில் ஒரு மாடு வறட்சிக் காலத்திலும் வயல் செய்யப் படும் மாரிகாலத்திலும் பத்து கிலோ வரையிலேயே புற்களை உண்ணுகிறது. அதுவும் கூட கடுமையாக பாடுபட்டு, இடத்துக்கு இடம் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றே மாடுகளுக்கு மேய்ச்சல் புற்களை வழங்கக்கூடிய நிலையே தொடர்கின்றது. ஆகவே மாடுகள் இப்போதிருப்பதைக்காட்டிலும், இரண்டு மடங்கு  அதிகரித்தால் என்ன நடக்கும் என நினைத்து பாருங்கள். போதிய மேய்ச்சலுக்குரிய  நிலம் இல்லாமல்  இப்பொழுதே  மக்கள் சண்டை பிடிக்கும் நிலையில் எதிர்காலத்தில் மாடுகள் அதிகரிப்பதால் உணவின்றி அவை அழிவடைய வாய்ப்பு உள்ளது. பலர் கால்நடை வளர்ப்பைக் கைவிட நேரலாம்.

உற்பத்தியற்ற மாடுகள்  எதிர் உற்பத்தி மாடுகள்

பொதுவாக இறைச்சிக்காக ஆண் மாடுகளையும் இனப்பெருக்கத்துக்கு உகந்ததல்லாத, வயதான பசு மாடுகளையும் தான் வெட்டுவார்கள். பால் உற்பத்திக்கு உதவும் பசு மாடுகளை வெட்டுவது சட்ட விரோதம். ஒரு மாடு இருபது வயது வரை வாழக் கூடியது. மாடுகளின் பால் உற்பத்தி 12 வயதின் பின், அதாவது மூன்று நான்கு கன்றுகள் போட்ட பின் கணிசமாகக் குறைவடையும். இலங்கையின் விலங்குச் சட்டம் கூட இதனைக் கருத்திற் கொண்டு தான் பன்னிரண்டு வயதுக்கும் மேற்பட்ட மாடுகளை அறுக்கலாம் என அனுமதிக்கிறது. வயது கூடிய மாடுகளைப் பண்ணைகளில் வைத்திருக்கும் போது அந்தப் பண்ணையின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது. செலவு கூடுகிறது.  

ஆண் மாடுகள்

மாடுகளைப் பொறுத்தவரையில் பிறப்பில் ஆணும் பெண்ணும் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் தான் பிறக்கின்றன. பொதுவாக  இனப் பெருக்கத்துக்குத் தேவையான பொருத்தமான ஆண் மாடுகளை மாத்திரம் வைத்துக் கொண்டு குறித்த வயதுடைய ஆண் மாடுகளை மக்கள் இறைச்சிக்காக விற்று விடுவார்கள். இதன் மூலம் கணிசமான வருமானம் அந்தந்த பண்ணைகளுக்குக் கிடைக்கிறது. மேலும் ஒரு வயதுக்கு பிறகு அதிகளவு ஆண் மாடுகளைப் பண்ணையில் வைத்திருப்பது பொருளாதார ரீதியில் பயனற்றது. அவை ஆக்ரோஷமானவை என்பதுடன்  பண்ணையாளருக்கும்  ஏனைய பெண் மாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியன. பெண் மாடுகளுக்கு இனப்பெருக்க வேட்கை காணப்படும் நேரத்தில் ஏனைய ஆண் மாடுகளுடன் சண்டை செய்யக் கூடும். பண்ணையில் பொருத்தமற்ற உற்பத்தி குறைந்த சிறிய உள்ளூர்  ஆண் மாடுகள், பெண் மாடுகளுடன் சேர்ந்தால் உற்பத்தியற்ற கன்றுகளே பிறக்கும். அவை வயதாக வயதாக அதிகளவு உணவை   உண்ணக் கூடியன. அவற்றுக்கு வழங்கும் உணவு செலவைக் கூட்டும். நடைமுறையிலுள்ள இலங்கைச் சட்டங்களின்  அடிப்படையில்  சுகதேகியான ஆண் மாடுகளை அறுப்பது தடை செய்யப்படவில்லை.

விந்தணுக்களை [sex semen]  பாவிக்கும் முறை மற்றும் செயற்கை முறை சினைப்படுத்தல்

பெண் மாடுகளை மாத்திரம் உருவாக்கும் விந்தணுக்களை [sex semen]  பாவிக்கும் முறை தொடர்பாக கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பாலான மாடுகள் குறிப்பாக உள்ளூர் மாடுகள் இயற்கை முறையாகவே சினைப்படுகின்றன. ஓரளவுக்கு வெளிநாட்டு கலப்பு மாடுகளுக்கே செயற்கைமுறை பாவிக்கப்படுகிறது. அதற்கே போதிய சினைப்படுத்துநர்கள் இல்லாத நிலையில் முழு மாடுகளுக்கும்  இந்த முறை சாத்தியமில்லை. அத்துடன் sex semen விந்தணுக்கள் அதிக விலையுடையன என்பதால் அதனை பண்ணையாளர்களும் விரும்ப மாட்டார்கள். அத்துடன் அந்த முறை மூலம் 100 வீதம் பெண் மாடுகள் பிறக்கும் எனச் சொல்ல முடியாது. அம்பேவல போன்ற sex semen பாவிக்கும் பண்ணைகளிலும் 20-30 வீதம் வரை ஆண் கன்றுகள் பிறக்கின்றன.

நோய் மாடுகளும் மலட்டு மாடுகளும்

சில வேளைகளில் மாடுகள் நோய்ப்பட்டும் சினைப்பட முடியாத நிலையிலும் விபத்துக்கு உள்ளாகியும் காணப்படும். அவற்றைப் பண்ணையில் இருந்து கழிப்பதே சாலச் சிறந்தது. இது பண்ணையாளருக்கு தேவையற்ற செலவை மட்டுப்படுத்துவதோடு  நோய் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்ட மாடுகளின் வேதனையைக் குறைக்க உதவும். இந்த மாதிரி நிலை ஏற்படும் போது இறைச்சிக்கு வெட்டவோ  கருணைக் கொலை செய்யவோ கால்நடை  வைத்தியராக  பரிந்துரை செய்வோம். இந்த நிலையில் பொருளாதார ரீதியில் நலிவான  மக்கள் அந்த வகை மாடுகளை இறைச்சிக்கு அனுப்புவார்கள். மிக மிக குறைவாக கருணைக் கொலை செய்வார்கள். அதுதான் நடைமுறை. எங்களைப் பொறுத்தவரை வேதனையில் இருந்து தடுக்கும் சிகிச்சையாகவே இதனைப் பார்ப்போம். இலங்கையில் அறுக்கப்படும் பெரும்பாலான மாடுகள் இந்த ஏதாவது வகைகளுக்குள் அடங்குவதால் அறுப்பு நிறுத்தப்பட்டால் வயதான, நோயுற்ற மற்றும் ஆண் மாடுகள் அதிகரித்து உற்பத்தி மாடுகளுக்கும்  உற்பத்தியற்ற மாடுகளுக்கும் உணவு, இருப்பிடம், இனப்பெருக்கம் என போட்டி ஏற்பட்டு மொத்த மாடுகளும்  அழியும் நிலை ஏற்படும். மேற்படி மாடுகளை வைத்துப் பராமரிக்கும் போது உணவு, இருப்பிடம் மற்றும் வைத்தியச் செலவு அதிகரிப்பதால் அப்படியான மாடுகளை வளர்க்க பண்ணையாளர்கள் விரும்பாது அவற்றை வெளியே விட்டு விடுவார்கள். அதாவது அந்த மாடுகள் கட்டாக்காலிகளாக மாறி பல விபத்துகளுக்கும் விரும்பத்தகாத விடயங்களும் ஏற்பட வழி ஏற்படும். வயல்கள் தோட்டங்களில் மேய்ந்து பயிர் அழிவு ஏற்படும். நீர் நிலைகள் மாசுபடுவதுடன் அதிகளவு தண்ணீர்ப்  பற்றாக்குறையும் தோன்றும்.

கோசாலைகள்

இன்று இந்தியாவின் சில பகுதிகளில் உள்ளது போல் கோசாலைகள் /மாடுகள் பராமரிப்பு இல்லங்கள் [salvage farms] அமைக்க ஆலோசனை முன் வைக்கப்படுகிறது. இது தேவையற்ற செலவை உண்டு பண்ணுவதோடு மாடுகளின் நலன் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் கோசாலைகளின் மீதும் அவற்றின் தரம், பராமரிப்பு தொடர்பாகவும் விலங்கு நல ஆர்வலர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதைக் காணமுடியும். அங்குள்ள விலங்குகள் உணவின்றி, நோய்ப்பட்டு, சரியான பராமரிப்பின்றி இறந்து கிடக்கும் பல செய்திகளை ஊடகங்கள் மூலம் அறியலாம்.

தொழில்கள் பாதிப்படைதல்

இன்று  மாடு வளர்ப்பு சிறிய அளவு இலாபம் தரத்தக்க தொழிலாகவே உள்ளது. கன்றுகளை விற்பதால்தான் ஓரளவு இலாபம் ஏற்படுகிறது. அதுவும் நிறுத்தப்பட்டால் மாடு வளர்ப்பதில் பயன் இல்லை. அம்பேவல போன்ற பெரிய பண்ணைகள் கூட பிறக்கும் நாம்பன் கன்றுகளை குறிப்பிட்ட வயதிலும் மலட்டு,  உற்பத்தி குறைந்த பசு மாடுகளையும்  இறைச்சிக்காக விற்று விடுகின்றன. அவற்றை வைத்திருப்பது பொருளாதார ரீதியில் பயனற்றது. இலங்கையில் பாலுற்பத்தியை அதிகரிக்க உருவாக்கப்படும் பாரிய பண்ணைத்திட்டங்கள் கூட பாதிக்கப்படும். இலாபமற்ற பண்ணைத் தொழிலை யாரும் விரும்ப மாட்டார்கள். முதலீட்டாளர்கள் யாரும் இங்கு   முதலிடமாட்டார்கள்.

மாடுகளின் மூலம்  செய்யப்படும் பல தொழில்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இன்றைய திகதிக்கு 25-30 பில்லியன் ரூபா வரை தோல் உற்பத்தியால்   நாட்டுக்கு வருமானம் வருகிறது. இது நிறுத்தப்பட்டால் அந்த தொழிலை செய்பவர்கள் பாதிக்கப்படுவதோடு அந்த வருமானமும் இழக்கப்படும். பால் பண்ணை தொழில், மாட்டிறைச்சி தொழில், தோல் உற்பத்தில் என மாடுகளை நம்பியுள்ள இலட்சக் கணக்கானவர்கள் தொழில்களை இழப்பார்கள். இன்றைய பொருளாதார நெருக்கடியில் இது தேவையற்ற முயற்சி. நாட்டின் பொருளாதாரச் சிக்கலை இது மேலும் கடினமாக்கும்.

சூழலியல் தாக்கம்

அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் மாடுகள் மெதேன் எனப்படும் பச்சை வீட்டு வாயுவை [Greenhouse gas] அதிகளவு வெளியேற்றுகின்றன. புவி வெப்பமாதலின்  முக்கியமான பங்களிப்பை  இந்த மாடுகள் மூலம்  வெளியேறும் மெதேன் உண்டு பண்ணுகிறது. மாடுகள் வெளியேற்றும் அதிகளவு எருவும் நிலத்தின்  தாங்கு திறனைப் பாதிக்கிறது. மண்ணும், நீர் நிலைகளும் பாதிப்படையும். அதிகளவு வயதான மற்றும் நோயுற்ற மாடுகள் காரணமாக அதிக நுண்ணுயிர்க் கொல்லிகள் பாவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு அவை மாடுகளின் கழிவுகள் மூலம் நீர்நிலைகளையும்,   மனிதர்களையும் சென்றைடைய மனிதர்களில் ஆபத்தான நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு நிலை [Antibiotic resistance] தோன்றும். இலங்கையிலுள்ள பெரும்பாலான மாடுகள் மேய்ச்சலை நம்பியதால் அவற்றின் எருவும் அவை மேயும் இடத்திலேயே இடப்படும். இதனைச் சேகரித்து சேதன உரமாகப் பாவிப்பதும் எந்தளவுக்கு சாத்தியமோ தெரியாது.

பாலுற்பத்தியும் மாடறுப்பும்

அதிகளவு உள்ளூர் மாடுகளைக் கொண்டு பாலுற்பத்தியை அதிகரிக்க முடியாது. அண்மைய மாடுகளின் கணக்கெடுப்பின்படி நாட்டில் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் பாலுற்பத்தி குறைந்துள்ளது. அதிக பால் தரும் மாடுகளை அதிகரித்தால் தான் பால் கூடுமே தவிர உற்பத்தி குறைந்த உள்ளூர் மாடுகளை வைத்து பாலுற்பத்தியைக் கூட்ட முடியாது.

மாட்டிறைச்சி இறக்குமதி?

இலங்கையில் மாடு அறுப்பதைத்தான் சட்டத்தின் மூலம்  நிறுத்த முயன்றார்களே தவிர மாட்டிறைச்சி உண்பது தடை செய்யப்படாது எனும் உறுதி மொழி கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாகச் சொல்லியிருந்தார்கள். இலங்கையில் வருடாந்தம் 30 மில்லியன் கிலோகிராம் அளவு மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது. உள்ளூர் உற்பத்தி நிறுத்தப்பட்டால் இறக்குமதி செய்யப்படும் மேற்படி இறைச்சிக்கு அதிக பணம்  செலவாகும். இதுவும்  பால் பவுடரைப்  போல வெளிநாடுகளுக்கு அதிக அந்நியச் செலாவணியை வழங்க வேண்டி வரும். அத்துடன் இறக்கும் நாடுகளில்  இருந்து இலங்கையில் இல்லாத மாட்டிறைச்சி மூலம் பரவும் பல நோய்கள் ஏற்பட வழியும் தோன்றும் [Mad cow disease]. இவற்றின் மூலம் மனித சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு இலங்கையிலுள்ள மாடுகளும் புதிய நோய்களுக்கு உள்ளாகலாம். உண்மையில் வெளிநாடுகளில்  வளர்க்கப்படும் மாடுகளில்  அதிகளவில்  நுண்ணுயிர்க் கொல்லிகள் பாவிக்கப்பட்டிருந்தால் அது  இங்குள்ள மக்களைப் பாதிக்கும். இலங்கையில் பொதுவாக மாடுகளில் அதிகளவு நுண்ணுயிர்க் கொல்லிகள் பாவிப்பது குறைவு. ஏனைய இறைச்சிகளுடன் ஒப்பிடும்போது மாட்டிறைச்சி குறைந்த விலையில் கிடைக்கும் தரமான புரத உணவாகும். ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்கள் உண்ணும் உணவாகவும் இது காணப்படுகிறது. உள்ளூர் உற்பத்தி நிறுத்தப்பட்டு இறக்குமதி செய்யப்படும் போது விலை அதிகரிப்பதோடு தரமும் குறையலாம்.

மாடுகளை ஏற்றுமதி செய்தல் ?

இலங்கையில் இருந்து மாடுகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும்  கருத்து முன் வைக்கப்படுகிறது. உண்மையில் மாடுகளை ஏற்றுமதி செய்வது மிகக் கடினமான செயற்பாடு. இறைச்சிக்கு யாரும் நோயுற்ற வயதான மாடுகளை விரும்ப மாட்டார்கள். சுகதேகியான மாடுகளைத் தான் அதிகம் விரும்புவார்கள். பொதுவாக இறைச்சிக்கு அறுக்கப்படும் மாடுகள் 600 – 700 கிலோ வரை இருக்கும். இந்தியா ஏற்றுமதி செய்யும் எருமை மாடுகள் கூட 400 கிலோவுக்கு அதிக நிறையைக் கொண்டவை. இலங்கை உள்ளூர்  மாடுகள் 150 – 200 கிலோ வரை இருப்பதோடு இறைச்சியும்  மிகக் குறைவாகவே கிடைக்கும். இலங்கையில் கால்வாய் நோய் [FMD] போன்ற தொற்று நோய்கள் உள்ளதால் பெரும்பாலான வெளிநாடுகள் மாடுகளை இறக்குமதி செய்ய விரும்பாது. பால்மாவைப் போல உலகிலுள்ள பல நாடுகளுடன் போட்டி போட்டே ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிவரும். இதற்காகத் தேவையற்ற விதத்தில் ஏற்றுமதிக் கட்டமைப்பு, கப்பல் கட்டமைப்பை உருவாக்க வேண்டி வரும். அத்துடன் எப்படியும் இறைச்சிக்குதான் அந்த மாடுகள் கொண்டு செல்லப்படும். அப்படி உள்ள நிலையில் கருணை அன்பு ஜீவ காருண்யம் பற்றி இங்கு கதைக்க முடியாது. அப்படிப் பார்த்தால் மாடு மட்டுமல்ல ஆடு, கோழி, பன்றி ஏன் மீன் உண்பதைக் கூட தடுக்க வேண்டும். அவையும் உயிர்களே. இன்று பல இடங்களில் ஜீவகாருண்யம் மற்றும்  மிருக நலம் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. சகல விடயங்களும் சமயத்தோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. தத்தமது நம்பிக்கைகளை, உணவு வழக்கங்களை ஏனையவர் மீது திணிக்க முயல்வது நாட்டின் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கும்.

சட்டவிரோதமாக  மாடுகளை கொல்லுதல்

மாடறுப்பு

என்னதான் சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் அதன் குறைபாடுகளைப் பயன்படுத்தி சட்ட விரோதமான முறையில் மாடுகளைக் கொல்லும் நிலையை இலங்கையில் அவதானிக்க முடிகிறது. மாடுகள் களவாடப்பட்டு அறுக்கப்படுகின்றன. முறையான கொல்களம் இல்லாமல், மாடுகள் விரும்பிய இடத்தில் கொல்லப்படுகின்றன. சுகாதாரம் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அறுக்கப்படும் மாடுகளின் நலன், உரிமைகள் முறையாகப் பேணப்படுவதில்லை. ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு கொண்டு செல்லும் போது நெருக்கமாகவும் அதிக தொகையிலும் மாடுகள் சிரமப்படும் வகையில்   கொண்டு செல்லப்படுகின்றன. மாடுகளை அறுக்கும் போது, மாடுகளைக் கொண்டு செல்லும் போது, வாகனத்தில் ஏற்றும் போது என பல சட்ட ரீதியான நடைமுறைகள் எழுத்தில் உள்ள போதும் அவை சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. முறையான உரிமம், மாட்டின் சுகாதார நிலை தொடர்பான  சான்றிதழ்கள் இல்லாமல் மாடுகளை அறுக்க முடியாது. எனினும் அவை மீறப்படுகின்றன. வெளிநாடுகளில் உள்ளது போல மாடுகளின் முக்கியமான விடயங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மாடறுப்புத் தொடர்பான பல சிக்கல்கள் தீர்க்கப்படும்.

இப்படியாக பல பொருளாதார, மற்றும்  நடைமுறைச்  சிக்கல்கள்  உள்ள நிலையில் சமய உணர்வை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் இந்த மாட்டிறைச்சி அரசியல் இலங்கை மக்களின் பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும்.  இலங்கையில் வருடாந்தம் உண்ணப்படும் 30 மில்லியன் கிலோ கிராம் மாட்டிறைச்சி ஒரு சமூகத்தால் மட்டும் நுகரப் படவில்லை. சகலரும் உண்கின்றனர். மாடு வளர்ப்பில் தொடங்கி அறுப்பு வரை உள்ள இந்த வியாபாரத்தில் சகல சமூகத்தவரும் பயனடைகின்றனர். அதாவது இந்துக்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என சகலரும் மாடு வளர்ப்பால் பயன்பெற்றே வருகின்றனர். மிகப் பெரிய கிராமிய பொருளாதாரக் கூறே இந்த மாடு வளர்ப்பும் மாட்டிறைச்சியும். இது நிறுத்தப்பட்டால் அனைவரும் பாதிப்படைவார்கள். எதிர்காலத்தில் இப்படியான கடினமான முடிவுகளை எடுக்கும் போது பொருத்தமான துறை சார் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒருவிடயத்தை நிறுத்தினாலோ புதிய விடயத்தைப் புகுத்தும் போதோ  ஏற்படும் சாதக, பாதகங்களை ஆராய வேண்டும். சமய உணர்வு ரீதியாக மட்டும் முடிவுகளை எடுக்காமல் பொருளாதாரப் பயன்களையும் ஆராய வேண்டும். ஏனைய துறைக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில்கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்த வரை இலங்கையில் நடைமுறையிலுள்ள மாடறுப்புத் தொடர்பான சட்டங்களை சரியான முறையில் பொருத்தமான உத்தியோகத்தர்களைக் கொண்டு  நடைமுறைப்படுத்தினாலே மாடறுப்புத் தொடர்பாக ஏற்படும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10192 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)