ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ண
இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை அறிமுகம் செய்யப்பட்டு 46 ஆண்டுகள் கடந்து விட்டன. இந் நீண்டகால எல்லையுள் இம்முறையின் கீழ் நடந்தேறிய அனைத்து ஜனநாயக விரோதச் (Un – Democratic) செயற்பாடுகளையும் மூன்று கருத்தியல்களின் (Ideologies) துணையுடன் புரிந்து கொள்ள முடியும் எனக் கருதுகின்றோம்.
- பெரும்பான்மைவாதம் (Majoritarianism)
- நவதாராளவாதம் (Neo – Liberalism)
- தனிநபர் சர்வாதிகாரம் (Caesarism)
முதலாவதான பெரும்பான்மைவாதம் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஒடுக்கு முறைக்கான அரசியல் நிறுவனங்களை (Political Institutions) கட்டமைத்து அவற்றைப் பலப்படுத்த உதவியது. இரண்டாவது, மூன்றாவதான நவதாராளவாதம், தனிநபர் சர்வாதிகாரம் என்பன முழு நாட்டினதும் மக்களிற்குத் தீங்கானது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. ஆயினும் பெரும்பான்மைவாதத்தின் ஜனநாயக விரோதப் பண்புகளையும், அது ஏனைய இரண்டினோடும் கொண்டுள்ள பிணைப்புகளையும் பற்றிய புரிதல் எம் மத்தியில் இருப்பதாகத் தெரியவில்லை.
ஜயம்பதி விக்கிரமரட்ணவின் கட்டுரை பற்றிய இவ்வறிமுகத்தில் நாம் மேற்குறித்த மூன்று கருத்தியல்களினையும் ஒன்றிணைத்து முழுமையான விமர்சனத்தை முன்வைக்கவுள்ளோம்.
இலங்கைச் சமசமாஜக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருந்து வரும் ஜயம்பதி விக்கிரமரட்ண, நிறைவேற்று ஜனாதிபதிமுறை பற்றிய விமர்சனத்தை கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா, கலாநிதி என்.எம். பெரேரா ஆகிய இருவரின் உரைகள், அவர்களது நூல்கள் என்பனவற்றில் இருந்து மேற்கோள் காட்டி முன்வைக்கிறார்.
சிங்களத்தை மட்டும் உத்தியோக மொழியாக ஆக்க வேண்டும் என்ற முனைப்பு எழுந்த 1955 ஆம் ஆண்டில் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா புகழ்பெற்ற தீர்க்கதரிசனமான கூற்றொன்றைக் கூறினார்: “One Language, Two Nations; Two Languages, One Nation” (தமிழில் : “ஒரு மொழி இரு தேசங்கள்; இரு மொழிகள் ஒரு தேசம்.”)
இது உண்மையில் ஒரு தீர்க்கதரிசனமான கூற்று என்பதில் கருத்து வேற்றுமைக்கு இடமில்லை. இதற்கு ஒப்பான இன்னொரு தீர்க்கதரிசனமான கூற்றைக் கொல்வின் ஆர்.டி. சில்வா அவர்கள் 1988 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘SRI LANKA’S NEW CAPITALISM AND THE EROSION OF DEMOCRACY’ நூலில் பதிவிட்டுள்ளதை மேற்கோள் காட்டுகிறார் (பக். 103). அது வருமாறு:
“மனதில் கலக்கத்தை ஏற்படுத்தும் பிரகடனம் ஒன்றை (நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி) வெளியிட்டுள்ளார். ‘நான் இலங்கையின் 14 மில்லியன் மக்களின் தலைவன்!’ எனும் அவரது திகிலூட்டும் சொற்கள் மனதில் பயங்கரமான நினைவுகளைக் கிளறுகின்றன. ‘நான் ஜேர்மன் மக்களின் தலைவன்; அவர்கள் எங்கெங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கெல்லாம் தலைவன் நானே!’ இப்படிக் கூறியவர் ஹிட்லர் அல்லவா? அவர் ஜேர்மானியர்களை எவ்வழியில் கொண்டு சென்றார்; உலகத்தை எத்தகைய நரகத்திற்குள் வீழ்த்தினார் என்பதை முழு உலகமும் நன்கு அறியும்.
இன்று ஐக்கிய தேசிய கட்சியின் கோஷம் ‘ஒரு கட்சி, ஒரே கொள்கை, ஒரு தலைவன்’ என்பதாகும். இக்கோஷத்தில் ‘தலைவன்’ என்ற சொல்லிற்கு எல்லாச் சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? தேசம் முழுமைக்கும் ஒரு கட்சி, ஒரே ஒரு கொள்கை, ஒரே ஒரு தலைவன் என்பதை நோக்கி அல்லவா போகின்றோம்? (எளிமைப்படுத்திய மொழிபெயர்ப்பு)”
சொல்லாற்றலில் வல்லவரான கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா 1955 இல் கூறியதை (ஒரு மொழி இரு தேசங்கள்; இரு மொழிகள் ஒரு தேசம்) ஒத்த ‘One Party, One Policy, One Leader’ எனும் தீர்க்கதரிசனமான கூற்றை 1988 ஆம் ஆண்டிலும் கூறி வைத்தார். கொல்வின் ஆர்.டி. சில்வா இன்னொன்றையும் கூறினார்:
”ஜனாதிபதியின் இத் தொடக்கம் மனதைச் சங்கடப்படுத்துகிறது. ஜனாதிபதிக்கு இத் தருணம் மங்கலமான சுபகாரியத்தின் தொடக்கமாக இருக்கலாம். ஆனால் இத்தேசத்திற்கு இது மங்கலமான தருணம் தானா?” (பக். 104).
கொல்வின் ஆர்.டி. சில்வா அவர்களின் மேற்குறித்த ‘இலங்கையின் புதிய முதலாளித்துவமும் ஜனநாயகத்தின் அழிவும்’ (SRI LANKA’S NEW CAPITALISM AND THE EROSION OF DEMOCRACY) நூல் நிறைவேற்று ஜனாதிபதி முறை பற்றிய முக்கியமான விமர்சன நூல் என்பதை கட்டுரையாசிரியர் எமது கவனத்திற்கு கொண்டு வருகிறார். ஜனாதிபதிமுறை பற்றிய விமர்சனமாக அமையும் சிறு நூல் ஒன்றை கலாநிதி என்.எம். பெரேரா ‘A CRITICAL ANALYSIS OF THE 1978 CONSTITUTION OF SRI LANKA’ என்னும் தலைப்பில் வெளியிட்டார். இந்நூல் பாராளுமன்ற முறைக்கு நாம் ஏன் திரும்ப வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கும் நூல்; அனைவரும் படிக்க வேண்டிய நூல் என ஜயம்பதி விக்கிரமரட்ண புகழ்ந்துரைக்கிறார் (பக். 104).
என்.எம். பெரேரா அவர்கள் பாராளுமன்றமுறை பற்றிய ஆராய்வைச் செய்து லண்டன் பல்கலைக்கழகத்தில் D.SC பட்டம் பெற்ற அறிவாளி. இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக நீண்டகாலம் கடமையாற்றி அது பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தவர். பாராளுமன்ற முறையே இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு ஏற்றது என்பதை 1978 அரசியல் யாப்புப் பற்றிய விமர்சன நூலில் அவர் விளக்கிக் கூறியிருந்தார்.
ஜே.ஆர். ஜெயவர்த்தன 1972 அரசியல் யாப்புக்கு 2 ஆவது திருத்தத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்து, பிரதமராக தெரிவு செய்யப்பட்ட தம்மை, ஜனாதிபதியாக உருமாற்றிக் கொள்ள முயற்சித்த வேளையில், அவர் பாராளுமன்ற முறை ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு போலியான பல நியாயங்களை முன்வைத்தார். உறுதியான நிலையான அரசாங்கம் (Stable Government) ஒன்றை அமைப்பதற்கு பாராளுமன்றமுறை தடையாக அமைகிறது என்பது அவர் முன்வைத்த வாதங்களில் ஒன்று. இலங்கையின் வரலாற்றில் இருந்து இரண்டு உதாரணங்களை இதற்குச் சான்றாக அவர் எடுத்துக் காட்டினார்.
1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி டட்லி சேனநாயக்க பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவியேற்றார். அவ்வாறு பதவியேற்ற பின் நடைபெற்ற கொள்கைப் பிரகடன அறிக்கை அல்லது சிம்மாசனப் பிரசங்கத்தை (Throne Speech) அடுத்த விவாதத்தின் போது, அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு டட்லி சேனநாயக்க பதவியை இராஜினாமாச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். 1960 யூலையில் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. சிறிமா பண்டாரநாயக்க பதவிக்கு வந்தார். சிறிமா பண்டாரநாயக்கவும் 1964 டிசம்பர் மாதம் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பதவியிழந்தார். ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இவை பாராளுமன்ற முறையின் ஸ்திரமின்மைக்கு உதாரணங்களாக ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களால் எடுத்துக்காட்டப்பட்டன. இதற்குப் பதிலளிக்கும் வகையில் என்.எம். பெரேரா பின்வருமாறு குறிப்பிட்டார். அவர் காட்டிய இந்த இரண்டு உதாரணங்களும் பாராளுமன்ற முறையின் பலத்தை நிரூபிப்பன என்றே கூற முடியும். இவை ஜனநாயகத்தின் சக்தியை (The Power of Democracy) எடுத்துக் காட்டுவன. இரண்டு சந்தர்ப்பங்களிலும் அரசாங்கங்களின் தோல்வியை அடுத்து வந்த தேர்தல்கள் புதிதாகப் பதவிக்கு வந்த அரசாங்கங்களின் இயல்பிலும், தன்மையிலும் மாற்றத்தை ஏற்படுத்தின. உண்மையில் இப்படியான முக்கிய தருணங்களில் தான் ஜனநாயகத்தின் வீரியமும் சிறப்பும் வெளிப்பட்டுத் தெரிகின்றன. அவர் காட்டும் உதாரணங்கள் எந்த அளவு கோல்களைக் கொண்டு மதிப்பிட்டாலும் பாராளுமன்ற முறை மேலானது; உயர்ந்தது என்பதற்குச் சான்றாக அமைகின்றன. (பக். 105).
ஜனாதிபதியின் அதிகாரங்கள்
1978 அரசியல் யாப்பு ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள எல்லையற்ற அதிகாரங்களை ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் ஏறக்குறைய ஆறு பக்கங்களில் (105 – 111) உதாரணங்கள் பலவற்றைக் காட்டி விபரிக்கிறார்.
1978 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட 1972 அரசியல் யாப்பு, 1947 சோல்பரி அரசியல் யாப்பு என்ற இரு அரசியல் யாப்புகளிலும் அரசுத் தலைவர் (Head of State), அரசாங்கத் தலைவர் (Head of Government) என்ற இரு நபர்கள் பதவி வகித்தனர். உதாரணமாக 1972 – 77 காலத்தில் வில்லியம் கோபல்லவ ஜனாதிபதியாக நாட்டின் அரசுத் தலைவராக இருந்தார். சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தின் தலைவராக (பிரதமராக) இருந்தார். ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஒரே சமயத்தில் அரசின் தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் தன்னை மாற்றிக் கொண்டார். அது மட்டுமல்லாமல் அவர் ஆயுதப் படைகளின் தலைவராகவும் (Head of the Armed Forces) தன்னை உயர்த்திக் கொண்டார். அமைச்சர்கள் அனைவரையும் அவரே நியமனம் செய்வார்; அந் நியமனங்கள் பற்றிப் பிரதமரின் ஆலோசனையைப் பெறும் தேவை அவருக்கு இல்லை. தேவையேற்பட்டால் ஆலோசனை பெறலாம்; பெறாமலும் விடலாம். ஜனாதிபதி தமது விருப்பின்படி அமைச்சர் ஒருவரைப் பதவியில் இருந்து நீக்கலாம். பிரதமரையும் தமது விருப்பின்படி நியமனம் செய்யும் ஜனாதிபதி அவரை எந்த வேளையிலும் பதவியில் இருந்து நீக்கவும் முடியும். தனது கட்சியைச் சேராத ஒருவர் பிரதமராக இருக்கும் வேளையிலும் குறித்த பிரதமரைப் பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கி விடலாம். இவை அமைச்சர்கள், பிரதமர் என்போரது நியமனம், பதவி நீக்கம் தொடர்பான எல்லையற்ற அதிகாரங்களாகும். இந்த எல்லையற்ற அதிகாரங்களை 1978 இற்குப் பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதிகள் பிரயோகித்து வந்தனர். இவ்விடத்தில் V.K. நாணயக்கார அவர்களின் நூலின் 128 ஆம் பக்கத்தில் தரப்பட்டுள்ள சுவாரசியமான குறிப்பு ஒன்றை மேற்கோள் காட்ட விரும்புகிறோம். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகப் பதவி வகித்த சந்திரிகா குமாரதுங்க அவர்கள் இரு தடவைகள் பாராளுமன்றத்தைக் கலைத்து பிரதமர்களையும் அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்தார். அவர் ஒரு தடவை பின்வருமாறு குறிப்பிட்டாராம்:
“Under our constitution the prime minister is merely a glorified minister. It takes just a one sentence letter from me to dismiss the prime minister and his entire cabinet”
இக்கூற்று International Herald Tribune, October 15, 2003 இல் பதிவானது என V.K. நாணயக்கார நூலின் அடிக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இக்கூற்றின் பொருள்: “எமது அரசியல் யாப்பின்படி பிரதமர் என்பவர் வெறுமனே புகழேற்றப்படும் அமைச்சர் தான். பிரதமரையும் அவரது அமைச்சரவையையும் என்னால் வெறும் ஒரு வசனக் கடிதத்தை அனுப்புவதன் மூலமே பதவி நீக்கி விட முடியும். (V.K. NANAYAKKARA, IN SEARCH OF A NEW SRI LANKAN CONSTITUTION : 2016 : 128)
பாராளுமன்றத்தின் மீதான ஜனாதிபதியின் அதிகாரங்கள் எல்லையற்றனவாக உள்ளன என ஜயம்பதி விக்கிரமரட்ண குறிப்பிடுகிறார். இவ்வாறு எல்லையற்ற அதிகாரமுடைய ஜனாதிபதி முறைக்கு பிற நாடுகளில் இருந்தும் உதாரணம் காட்ட முடியாதென அவர் அபிப்பிராயப்படுகிறார். ஜனாதிபதி முறையின் இயல்புகளை நடைமுறையில் பரீட்சிப்பதற்கு இலங்கை வரலாற்றில் 2001 – 2004 காலத்தில் அரிய வாய்ப்பு ஒன்று கிட்டியது. அவ்வேளை சந்திரிகா பண்டாரநாயக்க அவர்கள் ஜனாதிபதியாகவும், அவரது கட்சியைச் சாராதவரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவருமான ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் பதவி வகித்தனர். தொடக்கத்தில் ஜனாதிபதி விட்டுக்கொடுப்போடு நடந்து கொண்டார். ‘Cohabitation Period’ (இணக்கமான வாழ்க்கைக் காலம்) என அழைக்கப்பட்ட இக்காலத்தின் தொடக்கத்தில் ரணில் விக்கிரமசிங்க, தனது மாமனார் ஜே.ஆர். ஜெயவர்த்தன உருவாக்கிய ஜனாதிபதி என்ற பதவிக்குரியவரின் அதிகாரங்களைப் பற்றித் தப்புக் கணக்கு போட்டிருக்க வேண்டும் என ஜயம்பதி விக்கிரமரட்ண அபிப்பிராயப்படுகிறார். ரணில் விக்கிரமசிங்க சிபாரிசு செய்த அமைச்சர்களை குமாரதுங்க அவர்கள் எவ்வித மறுப்பும் இன்றி நியமித்தார். பாதுகாப்பு அமைச்சுப் பதவியையும் தாமே எடுத்துக் கொள்ளாமல் விட்டுக் கொடுத்தார். ரணில் விக்கிரமசிங்க, குமாரதுங்க அவர்களை ஓரங்கட்டி விட்டு தாமாகவே கருமங்களை ஆற்றத் தொடங்கினார். “சமாதானப் பேச்சு வார்த்தைகளை மீளத் தொடங்கிய விக்கிரமசிங்க, ஜனாதிபதியை அதிலிருந்து விலக்கி வைத்தார். அவரது அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் முறையில் நடந்து கொண்டனர். அரசியல் யாப்பின்படி அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டங்களிற்குச் சமூகமளிக்காமல் ஒதுங்கிக் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது.” (பக். 106).
2003 மே மாதம் சந்திரிகா குமாரதுங்க அவர்கள் அபிவிருத்தி லொத்தர் சபையைத் தனது அதிகாரத்திற்கு உட்பட்டதாக மாற்றுவதற்கு விரும்பினார்.
இந் நோக்கத்தோடு அவரால் தயாரித்து அனுப்பப்பட்ட ‘கசற்’ அறிவித்தலை அரசாங்க அச்சகத்தில் அச்சிடுவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது; ஜனாதிபதி அவமதிக்கப்பட்டார். இதனால் உறவுகள் பாதிக்கப்பட்டன. தருணம் பார்த்துக் காத்திருந்த ஜனாதிபதி, பிரதமர் விக்கிரமசிங்க வெளிநாடொன்றுக்குச் சென்றிருந்த வேளையில் 2003 நவம்பர் மாதத்தில் பாதுகாப்பு அமைச்சரையும், வெளிநாட்டு அலுவல்களுக்கும் ஊடகங்களுக்கும் பொறுப்பான அமைச்சரையும் பதவி நீக்கம் செய்தார். பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தம் பொறுப்பில் வைத்துக் கொண்டார். அவர் தமது கட்சியைச் சேர்ந்த இருவரை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, ஊடகத்துறைகள் அமைச்சு ஆகியவற்றிற்கு நியமனம் செய்தார். அது மட்டுமன்றி 2004 பெப்ரவரி மாதம் ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவையும் அவரது 39 அமைச்சர்களையும் பிரதி அமைச்சர்களையும் பதவி இழக்கச் செய்தார்.
ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் நூலின் (2014 இல் பிரசுரமானது) 3 ஆம் அத்தியாயாம், 1978 முதல் 2003 வரையான 35 ஆண்டுகால ஜனாதிபதி முறையின் செயற்பாடுகளை மட்டுமே விபரிப்பதாக அமைந்துள்ளதால் கடந்த 21 ஆண்டுகால நிகழ்வுகள் பற்றிய விபரங்களை அவர்களின் கட்டுரை வாயிலாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை.
விக்கிரமரட்ண அவர்கள் ஜனாதிபதிமுறை பற்றிய விமர்சனத்தை கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா, கலாநிதி என்.எம். பெரேரா ஆகியவர்களின் உரைகளில் இருந்தும், அவ்விருவரது நூல்களில் இருந்தும், மேற்கோள்கள் பலவற்றைத் தருவதன் மூலம் சுவாரசியமுடையதாக ஆக்கியுள்ளார். இவ்விருவரதும் கருத்துகள் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் ஜனாதிபதி முறையைப் புகுத்திய சமயத்திலும், அதற்கு அண்மிய காலத்திலும் வெளியிடப்பட்ட எதிர்வினைகளாக அமைந்தவை. பல்லாண்டுகள் கழிந்த பின் இவ்விருவரதும் ஆக்கங்களைப் பின்னோக்கிப் பார்க்கும் போது, அவர்கள் இருவரும் தீர்க்கதரிசனத்துடன் பல கருத்துகளைக் கூறியிருப்பதைக் காண முடிகிறது.
ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்தல்
1978 இன் அரசியல் யாப்பின் உறுப்புரை 38 பின்வரும் காரணங்களுக்காக ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது. ‘Impeachment’ என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இப் பதவி நீக்க நடைமுறை மிக மிகச் சிக்கலானது. அந் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் பற்றி நோக்குவதற்கு முன்னர் என்ன காரணங்களுக்காக ஒரு ஜனாதிபதி குற்றம் சாட்டப்பட்டுப் பதவி நீக்கப்படலாம் என்பதைப் பார்ப்போம். V.K. நாணயக்கார அவர்கள் 5 காரணங்களுக்காக அவர் மீது குற்றம் சாட்டப்படலாம் எனக் குறிப்பிடுகிறார் (அவரது 2016 ஆம் ஆண்டு நூல், பக். 136).
- வேண்டுமென்றே அரசியல் யாப்பினை மீறிச் செயற்படுதல் (Intentional Violation of the Constitution)
- தேசத் துரோகம்
- இலஞ்ச ஊழல் (Bribery)
- தனது அதிகாரங்களைத் துஸ்பிரயோகம் செய்து முறைகேடான அல்லது ஊழல் புரிவதான நடவடிக்கையில் ஈடுபடுதல்
- ஏதாவதொரு இயற்றப்பட்ட சட்டத்திற்கு மாறான ஒழுக்கமற்ற குற்றத்தைச் செய்தல் (இக் குற்றச்சாட்டு உயர் நீதிமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டு, உயர் நீதிமன்ற விசாரணையறிக்கை சபாநாயகருக்கு அறிவிக்கப்படும். அதன் பின்னர் பாராளுமன்றம் நடவடிக்கையை ஆரம்பிக்கும்.)
மேற்குறித்த குற்றஞ் சாட்டுதல் நடவடிக்கை நடைமுறையில் சாத்தியமற்றது என்பதை 1991 இல் ஜனாதிபதி பிரேமதாச அவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட நடவடிக்கையின் தோல்வி எடுத்துக் காட்டுகிறது. அப்போது அவர் மீதான குற்றச்சாட்டுப் பிரேரணை (Impeachment Motion) 120 பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒப்பமிடப்பட்டு எதிர்க் கட்சியினரால் சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் அப்பிரேரணை அடுத்த கட்டத்திற்கு நகர முடியவில்லை. இவ் வரலாற்று முக்கியத்துவம் உடைய சம்பவம் பற்றி இத் தமிழ்க் கட்டுரையில் நாம் மேலதிக விபரங்களைத் தருவதையோ அவ்விடயம் தொடர்பான சாதக, பாதகமான கருத்துகளைக் கூறுவதையோ விரும்பவில்லை. இவ்வரலாற்று முக்கியத்துவம் உடைய சம்பவம் இங்கே எடுத்துக் காட்டப்பட்டதன் நோக்கம், இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனாதிபதி மீது குற்றஞ் சாட்டிப் பதவி நீக்கம் செய்தல் நடைமுறையில் சாத்தியமற்றது என்பதை எடுத்துக் காட்டுவதற்கேயாகும்.
ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களால் புகுத்தப்பட்ட ஜனாதிபதிமுறை ஒரு சர்வாதிகார முறை. அம்முறையின் கீழ் பதவிக்கு வரும் ஒருவரை அவர் இழைக்கும் குற்றங்களுக்காகப் பதவியில் இருந்து நீக்குதல் சாத்தியமற்றது என்பதை கூர்ந்த மதியுடைய கலாநிதி என்.எம். பெரேரா அவர்கள் தமது நூலின் 30 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதை ஜயம்பதி விக்கிரமரட்ண மேற்கோள் காட்டுகின்றார் (பக். 108). அத் தீர்க்கதரிசனம் மிக்க கூற்று வருமாறு:
“Can the president be removed from office before the expiration of his allotted time – spans? Yes, certainly but the process is so complicated and will entail such delay that ‘One can safely predict that such an event will never arise’
இக் கூற்றின் பொருள் வருமாறு: “ஜனாதிபதி ஒருவரை அவரது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் பதவியில் இருந்து நீக்க முடியுமா? ஆம் என்றே அரசியல் யாப்பு உறுப்புரை கூறுகிறது. ஆயினும் பதவி நீக்கச் செயல்முறை மிக மிகச் சிக்கலானது. அது நீண்ட கால விரயம் கொண்ட நடைமுறை. இறுதியில் அது சாத்தியமற்றதாகத் தோல்வியில் முடியும் நடவடிக்கையாகவே அமையும் என்பதை நாம் துணிந்து எதிர்வு கூறலாம்.”
கலாநிதி V.K. நாணயக்கார விபரித்துக் கூறிய 5 வகைக் குற்றங்களுக்காக ஒரு ஜனாதிபதி மீது பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதை மேலே குறிப்பிட்டோம். இதனை விட ஜனாதிபதி ஒருவர் திறமையற்றவராகச் செயற்படுகிறார்; அவர் செயல் திறனற்றவராக உள்ளார் என்பதற்காக பதவி நீக்கம் செய்யப்பட முடியுமா என்ற கேள்வி வாசகர் மனதில் எழலாம். அக் கேள்விக்கான பதில்; திறமையற்றவர், செயல் திறன் அற்றவர் என்பன (Incompetence and Inefficiency) பதவி நீக்கம் செய்வதற்கான காரணங்களாகா என்பதாகும். இன்னொரு கேள்விக்கும் இவ்விடத்தில் பதில் கூறியே ஆக வேண்டும். ஒரு ஜனாதிபதி நிரந்தரமான உள, உடல் ஊனமுற்றவராய் தமது கடமையை ஆற்ற முடியாதவராய் உள்ள நிலை ஏற்படக் கூடுமல்லவா? அவ்வாறான நிலை எழுந்தால் அவரைப் பதவியில் இருந்து நீக்கலாமா? இலங்கையின் அரசியல் யாப்புச் சட்டம் அவ்வாறான நிலை ஏற்படும் போது பதவியில் இருக்கும் ஜனாதிபதியை அவரது பதவிக் காலம் முடியும் முன்பே பதவி நீக்கம் செய்யலாம் என்றே கூறுகிறது. இது பற்றி ஆங்கிலத்தில் ‘Rhetoric’ (றிற்றோறிக்) எனக் கூறப்படும் பேச்சுக் கலையில் வல்லவரான நாவன்மை மிக்க கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா கூறியிருப்பவற்றை ஜயம்பதி விக்கரமரட்ண அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்.
“Even in the case of the president being permanently in capable of performing the functions of his office by reason of mental or physical infirmity, The same procedure has to be restored to : so that we can be ruled by a mad president for quite a time” (பக். 108 – 109).
இதன் பொருள் : அவ்வாறான நிலை ஒன்று தோன்றும் போது பதவி நீக்க நடைமுறையானது, குற்றம் இழைத்தமைக்கான (Wrong Doing) பதவி நீக்க நடைமுறை போல் சிக்கலானதும் நீண்ட காலம் தேவைப்படுவதுமாகவே அமையும். ஆகையால் நாட்டை மனநோயாளியான ஒரு ஜனாதிபதி குறிப்பிட்டளவு காலம் ஆட்சி செய்யும் சாத்தியப்பாடு உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை!
தொடரும்.