தாய்வழிக்குடிமரபு
கிழக்கிலங்கை என்ற நிலப்பரப்பு பற்றி நோக்கும் போது கிழக்கிலங்கை என்ற தரைத்தோற்றத்தைவிட பண்பாடு சார்ந்த பரப்பை இக்கட்டுரை கவனத்திற்கொள்கின்றது. ஆய்வாளர் துலாஞ்சனன் ‘கொட்டியாரக்குடாவுக்கும் குமுக்கனாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் பிரதானமாக தமிழ் பேசும் சமூகங்களாலானதும், தாய்வழிக்குடிமரபைப் பின்பற்றும் சைவ மற்றும் இஸ்லாமியப் பண்பாட்டு நுண்பிராந்தியங்களால் ஆனதும் கிறிஸ்தவர்களதும் வேடர்களதும் பண்பாட்டுப் பங்களிப்பால் செழுமையூட்டப்பட்டதும் அவ்வப்போதான சிங்களவர்களது ஊடாட்டத்தைக் கொண்டதுமான ஊர்களின் கொத்தணிகள் அடங்கும் நிலப்பரப்பு’ (துலாஞ்சனன் 2022) என்ற ஈழத்துக் கீழைக்கரையைக் குறிப்பிடுகின்ற எல்லைக்குள் வருகின்ற முஸ்லிம்களின் பண்பாடுகள் தொடர்பிலேயே இங்கு பேசப்படுகின்றது.
கிழக்கிலங்கையில் வாழும் முஸ்லிம்களிடையேயும் ஊருக்கு ஊர் சில நுண்ணிய கலாசார வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதேபோல் இலங்கைச் சோனகர்களினுள் அடங்குகின்ற பக்கீர் சமூகம், மௌலானா குடும்பங்கள், புதிய சிந்தனைப்பள்ளிகளினைப் பின்பற்றுகின்ற குழுமங்கள் எனப் பல்வகைமை காணப்படுகின்றது.
பண்பாடு
பண்பாடு என்பது Culture என்ற ஆங்கிலப் பதத்திற்கான தமிழ்ப்பிரதியீடாகப் பயன்படுத்தப்படுகின்றது. பண்பாடு பற்றி காலத்திற்குக்காலம் அறிஞர்களிடையே அறிவார்ந்த கலந்துரையாடல்கள் நிகழ்ந்துவருகின்றன. பண்பாடு தொடர்பில் பல்வேறு வரைவிலக்கணங்களும் காணப்படுகின்றன.
‘பண்பாடு என்பது அறிவு நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும் மனிதன் ஒரு சமூகத்தின் அங்கத்தவனாக இருந்துகொண்டு கற்கும் பிற திறன்களும், பழக்கங்களும் அனைத்தும் அடங்கிய முழுத்தொகுதியாகும் (Complex).’ (Taylor E.B. 1889:01) என்ற பண்பாடு பற்றிய வரைவிலக்கணத்தை பிரித்தானிய மானுடவியலாளர் எட்வேட் பேர்னாட் டெய்லர் அவர்கள் ஆரம்பத்தில் முன்வைத்தார். இது பண்பாட்டின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளப் போதுமானது எனலாம்.
பண்பாட்டு அசைவுகள் என்ற தொடர் பண்பாட்டின் இயங்குநிலையைக் குறிக்கப்பயன்படுகின்றது. பண்பாடு மனித விருத்திற்கேற்ப படிமலர்ச்சியடைகின்றது. மனிதர்கள் வாழும் சூழல், காலநிலை, தரைத்தோற்றம், ஊடாடுகின்ற அயற்குழுக்கள் என்பனவும் பண்பாட்டில் தாக்கம் செலுத்துகின்றன.
மனித சமூகங்களின் விருத்திபற்றியும் சமூக கட்டமைப்பு பற்றியும் குறிப்பிடும் போது ஆரம்பகால மனித சமூகங்கள் தாய்வழி உறவுக்குழுக்களாவே (Matrilineal) பரிணமித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.(Murdock 1949:185) இக்கூற்று தொடர்பில் மானுடவியலாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவிவருகின்றன. அதேவேளை அண்மைய மரபணு ஆய்வுகள் இக்கூற்றுக்கு மேலும் வலுசேர்ப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர் (Knight, C 2008:61-85).
தாய்வழி உறவுமுறைக் குழுக்கள்
ஒரு குழந்தையினது உறவுமுறைகளை தீர்மானிப்பதில் அல்லது அவர்களது பரம்பரையைக் கண்டுகொள்வதில் தாயின் தொடர்ச்சியைப் பின்பற்றும் முறையைக் கொண்ட சமூகங்கள் தாய்வழி உறவுமுறை குழுக்கள் எனப்படுகின்றன. இவ்வாறான சமுதாயங்களுக்கு உதாரணமாக தென்னிந்திய இல்லத்துப்பிள்ளைமார்1, கேரளத்து ஈழவர்கள்2, ஆப்பநாடு கொண்டையங்கோட்டை மறவர்கள்3, கேரளத்து மரைக்காயர்கள், மாப்பிள்ளா முஸ்லிம்கள் 4,5போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தாய்வழிக் குடிமரபு
முன்னர் குறிப்பிட்டது போன்றே கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தாய்வழிக் குடிமரபு பற்றிய வாய்மொழி வழக்காறுகளைப் பற்றி நோக்கலாம். முஸ்லிம்களிடையேயும், தமிழர்களிடையேயும் பொதுவாக ஒரே கருவைக்கொண்ட சிறிது வித்தியாசமான கர்ணபரம்பரைக் கதைகள் பயிலப்பட்டு வருகின்றன. பட்டாணியர்கள் எனப்படும் ஆப்கானிய முஸ்லிம்கள் முக்குவர் குடியேற்றத்திற்கு தடையாயிருந்த திமிலரை போரில் வீழ்த்த உதவியமையால் தங்களுக்கு பொன், மண் அல்லது பெண் இவற்றில் எது வேண்டும் எனக் கேட்ட போது பட்டாணியர்கள் பெண்களைத் தேர்வு செய்து கொண்டனர். ஆதலால் தம்குலத்தில் ஏழு குடிகளிலுமுள்ள பெண்களை பட்டாணியர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். இதனால் தாய்வழிக் குடிமரபு முஸ்லிம்களிடையேயும் பின்பற்றப்பட்டு வருகின்றது. (நடராசா, எப்.எக்ஸ்சி. 1962:08) ( Yalman, N. 1971: 283) (காசிம் ஜீ 2002:20)
முஸ்லிம்களிடையே உள்ள குடிகள்
சம்மாந்துறை, அக்கரைப்பற்று, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, ஒலுவில், இறக்காமம், அட்டாளைச்சேனை, பாலமுனை, மருதமுனை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலின் அடிப்படையில் 74 குடிகள் முஸ்லிம்களிடையே காணப்படுவது அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
- வட்டுக்கத்தறகுடி
- வட்டுநாச்சி குடி
- வம்மிக்கத்தறகுடி
- கணக்கன்கத்தறகுடி
- வடக்கனாகுடி
- பணியவீட்டுகுடி
- படையான்ட குடி
- ஆதம்பட்டாணிகுடி
- சுல்தான்குடி
- பணிக்கணார்குடி
- சின்னப்படையாண்டகுடி
- மூத்தநாச்சிகுடி
- பொன்னாச்சிகுடி
- அம்மாநாச்சிகுடி
- ஓடா நச்சி குடி
- தவிட்டுக்குடி
- ஆலங்குடி
- சங்கதிகுடி
- அல்லிப்பூகுடி
- உலுவாகுடி
- முன்னாகுடி
- சில்லறைக்குடி
- களனிகுடி
- கட்டடிகுடி
- லெப்பைகுடி
- மோதின்குடி
- ஆலிம்குடி
- பாணகக்குடி/ பாணமைக்குடி
- வெல்லஸ்லக்குடி
- கொஸ்கட்ட குடி
- மாந்தறாகுடி
- யாகுவாக்குடி
- கம்பாராச்சிகுடி
- வெத்தசிங்க ஆராய்ச்சி குடி
- ரணசிங்கமுதலி குடி /முதலி குடி
- பட்டுப்பவளஆராய்சி குடி
- ஓடாவிகுடி தச்சனார்குடி
- கச்சனாகுடி
- காலிங்க குடி
- நெய்னாஓடாவிகுடி
- கச்சனா ஓடாவிகுடி
- காலிங்க ஓடாவிகுடி
- ராசாம்பிள்ளை குடி
- மாமனாப்புள்ளகுடி
- அசன்பிள்ளைகுடி
- தொட்டிற்பிள்ளைகுடி
- உதுமான்பிள்ளை குடி
- உத்துப்பிள்ளைகுடி
- சுல்தான்புள்ளகுடி
- செட்டிப்பிள்ளைகுடி
- மலையாளத்து லெவ்வைகுடி, (அழகுவெத்திலைகுடி)
- கைமலயார்கடி
- கோசப்பாகுடி
- மடத்தடிகுடி
- சேர்மதி ஹாஜிக்குடி
- சேர்மாது ஹாஜிக்குடி
- சம்பானோட்டிகுடி
- சேனைக்குடி
- சேனன்குடி
- சின்னக்கதிரன்குடி
- காளிக்குடி
- மழுவரசன்குடி
- சங்கரப்பத்தான்குடி
- வெள்ளரசன்குடி
- சின்னவெள்ளரசன்குடி
- உலகிப்போடிகுடி
- அலியார்லெவ்வைப்போடி குடி
- வண்ணநாயக்கலெவ்வை குடி
- அல்லகைத்துரைகுடி
- மாமனாப்போடிகுடி
- மாப்பிள்ளை மரைக்கார்குடி
- மரைக்காநெய்த குடி
- பாஞ்சநெய்த குடி
- மரைக்கான்டி குடி
இவற்றினை பெயரின் அடிப்படையில் பின்வருமாறு பகுக்கலாம்.
1. பிரதேசங்களின் பெயர்களைக் கொண்ட குடிகளாக பாணகக்குடி/ பாணமைக்குடி, வெல்லஸ்லக்குடி, கொஸ்கொட குடி, மாந்தறாகுடி, யாகுவாக்குடி என்பவற்றைக் குறிப்பிடலாம்.
2. சிங்களப் பெயர்கள் கொண்ட குடிகளாக கம்பாராச்சிகுடி, வெத்தசிங்க ஆராய்ச்சி குடி, ரணசிங்கமுதலி குடி ( முதலி குடி), பட்டுப்பவளஆராய்ச்சி குடி என்பவற்றைக் குறிப்பிடலாம்.
3. பிள்ளையீற்று பெயர்கொண்ட குடிகளாக ராசாம்பிள்ளை குடி, மாமனாப்புள்ளகுடி, அசன்பிள்ளைகுடி, தொட்டிற்பிள்ளைகுடி, உதுமான்பிள்ளை குடி, உத்துப்பிள்ளைகுடி, சுல்தான்புள்ளகுடி, செட்டிப்பிள்ளைகுடி என்பவற்றைக் குறிப்பிடலாம்.
4. நாச்சி என்ற பெண்பெயரீற்று குடிகளாக மூத்தநாச்சிகுடி, பொன்னாச்சிகுடி, அம்மாநாச்சிகுடி, ஓடா நச்சி குடி என்பவற்றைக் குறிப்பிடலாம்.
5. போடி, லெவ்வை, மரைக்கார், ஹாஜி போன்ற ஈற்றுப்பெயர்களைக் கொண்ட குடிகளாக உலகிப்போடிகுடி, அலியார்லெவ்வைப்போடி குடி, வண்ணநாயக்கலெவ்வை குடி, லெவ்வைக்குடி, மோதின்குடி, ஆலிம்குடி, அல்லகைத்துரைகுடி, மாமனாப்போடிகுடி, மாப்பிள்ளை மரைக்கார்குடி, மரைக்காநெய்த குடி, பாஞ்சநெய்த குடி, மரைக்கான்டி குடி போன்ற குடிகளைக் குறிப்பிடலாம்.
6. ஓடாவிகுடிகளாக ஓடாவிகுடி, தச்சனார்குடி, கச்சனாகுடி, காலிங்க குடி, நெய்னா ஓடாவிகுடி, கச்சனா ஓடாவிகுடி, காலிங்க ஓடாவிகுடி என காணப்படுகின்றன.
முஸ்லிம் குடிகளின் சிறப்பம்சங்கள்
1. முஸ்லிம்களிடையே காணப்படும் குடிகள், குலங்கள் வாரியாக பகுக்கப்படவில்லை.
2. இந்தக்குடிகளின் சமூக அந்தஸ்து சமமாகவே கணிக்கப்படுகின்றது.
3. குடிகளின் பெயர்கள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுவது போன்று, காலத்திற்கு காலம் சில குடிகளின் பெயர்கள் புதிய பெயர்களாக பிரதியிடப்படுகின்றன. உதாரணமாக கொஸ்கொட ராஜபாஸாவ முதலியாரின் வழிவந்த கொஸ்கொட குடியானது கொச்சிக்கொட்ட குடி, கொசுக்குட்டான் குடி, கொஸ்கொட குடி என வித்தியாசமான வடிவங்களில் அழைக்கப்படும் அதேவேளை இந்தக்குடி தேன்முதலிகுடி என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது.
4. முஸ்லிம்களிடையே காணப்படும் குடிவிருதுச்சின்னங்களும் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுகின்றன.
5. குடிவழிமுறையானது கிழக்கிலங்கையின் தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி செல்லச்செல்ல குறைவடைந்து செல்கின்றது.
குடிமரைக்காயர் அமைப்பு பற்றியும் குடிகள் ஒவ்வொன்றினது வரலாறுகள் பற்றியும் அடுத்த பகுதியில் நோக்கலாம்.
அடிகுறிப்பு
- மூட்டு இல்லம், மஞ்சநாட்டு இல்லம், பளிங்குநாட்டு இல்லம், சோழிய இல்லம், தோரணத்து இல்லம் என இவர்களிடையே ஐந்து இல்லங்கள் என்ற பிரிவு காணப்படுகின்றது. இவர்களின் வாரிசுகளின் தாயினுடைய இல்லத்தின் பெரைக்கொண்டே அழைக்கப்படுகின்றனர்
- Abishek Pdssing (2010) History of Illathu Pilliai community,
- இவர்களிடையே எட்டு கொத்துகளும் 18 கிளைகளுமாக பிரிவுகள் காணப்படுகின்றன. ஒரு கிளைக்குள்ளோ, ஒரே கொத்துக்குள்ளாகவோ திருமணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
- கேரளத்தின் தென்மலபார் பகுதி மாப்பிள்ளா முஸ்லிம்கள் தந்தைவழியைப் பின்பற்றும் அதேவேளை தென் மலபாரிலிநுந்து வடக்கு வரை கரையோரங்களில் வாழும் முஸ்லிம்கள் மருமக்கள்தாயம் எனும் தாய்வழி உறவைப் பின்பற்றுகின்றனர்.
- Kottakkunnummal.M (2014), Indigenious Customs and Colonial law: Contestations in Religion, Gender and Family among Matrilineal Mappila Muslims in Colonial Malabar, Kerala c.1910-1928, SaGE.
உசாத்துணை நூல்கள்
- ஈழத்துக் கீழைக்கரை – ஓர் வரைலவிலக்கணம், 2022.07.19, எழுநா மின்னிதழ்
- காசீம் ஜீ, எம்.எம்., 2002. காசிம் ஜீ கண்ட : கரவாகு வரலாறு, பரவாகு வெளியீட்டுப் பணியகம் : கல்முனை
- கிருஷ்ணராஜா, சோ., 2010. பண்பாடு : சமூகவியல் நோக்கு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு
- சலீம், ஏ.ஆர்.எம்., 1990 அக்கரைப்பற்று வரலாறு. ஹிறா பப்ளிகேசன்ஸ்
- மௌனகுரு, சி., 2005. தமிழர் வரலாறும் பண்பாடும்
- Abishek Pdssing (2010) History of Illathu Pilliai community,
- Knight, C. 2008. Early Human Kinship Was Matrilineal. In N. J. Allen, H. Callan, R. Dunbar and W. James (eds.),Early Human Kinship. Oxford: Blackwell, pp.
- Kottakkunnummal.M (2014), Indigenious Customs and Colonial law: Contestations in Religion, Gender and Family among Matrilineal Mappila Muslims in Colonial Malabar, Kerala c.1910-1928, SAGE Journal
- Murdock, G.P. 1949, Social Structure, The Free Press NewYork : Markmillon
- Nadarajah, F.X.C., 1962. MattakkaLappu Maanmiyam (The Glory of Batticaloa). Colombo: Kalanilayam.
- Tylor, E.B., 1891. Primitive Culture: Research into the development of mythology, philosophy, religion, language, art and custom, Vol 1.
- Ylaman,N., 1971, Under the Bo tree. Univ of California Press.