கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள் : தாய்வழிக் குடிவழிமுறை
Arts
7 நிமிட வாசிப்பு

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள் : தாய்வழிக் குடிவழிமுறை

February 10, 2023 | Ezhuna

கிழக்கிலங்கை இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுப்பட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரகூறுகளிலிருந்தும் தனித்துவமாகக் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கிழக்கின் பூர்வ பண்பாட்டுக்கூறுகளினை தமது மத நம்பிக்கைக்கு ஏற்ப மதத்தின் அடிப்படைக்கூறுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பண்பாட்டுக்கட்டமைப்பை தகவமைத்துக் கொண்டனர். இப்பண்பாட்டுப் மறுமலர்ச்சியின் கூறுகளினை கலந்துரையாடுவதாக ‘கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள்’ என்ற இக்கட்டுரைத்தொடர் அமையும். இதன்படி, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தாய்வழி குடிமரபு முறை, முஸ்லிம் குடிவழிமரபில் உள்ள மாற்றங்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் அவற்றில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாரம்பரிய பரிகார முறைகள், உறவுமுறைகள் மற்றும் குடும்ப அமைப்புகள், உணவுமுறைகள், ஆடை அணிகலன்களும் மரபுகள், வீடுகள் மற்றும் கட்டடக்கலை மரபுகள், பாரம்பரிய அனுஷ்டானங்கள், கலைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தத் தொடர் பேசவுள்ளது.

கிழக்கிலங்கை, இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்த வாழ்கின்ற பிரதேசமாகும். 2012 ஆண்டு சனத்தொகைக்கணக்கெடுப்பின் பிரகாரம் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே அதிக முஸ்லிம் சனத்தொகை சதவீதம் காணப்படுகின்றது[i].  இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுபட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரக்கூறுகளிலிருந்தும் தனித்துவமானதாக  காணப்படுகின்றது.

origin-of-Sri-Lankan-sinhala-tamil-moors-family-1

கிழக்கில் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் தமிழர்களோடு இஸ்லாமிய மதநம்பிக்கை கொண்ட மக்கள் ஆரம்பகாலங்களில் கொண்ட திருமணபந்த உறவினாலும், வங்காள விரிகுடாவின் வர்த்தக மொழியாகத் தமிழ் மொழி காணப்பட்டமையினாலும், சேரமண்டலக்கரையிலும, தென்னிந்தியக் கடற்துறைகளில் வர்த்தகத்தை மேற்கொண்ட பாரசீக அராபிய மற்றும் வர்த்தக உறவுகளினாலும் இஸ்லாத்தின் அறிமுகம் கிழக்கிலங்கையில் புதியதொரு பண்பாட்டுக்குழுமத்தின் தோற்றத்திற்கு ஏதுவாய் அமைந்தது.  

இஸ்லாமிய மார்க்கத்தின் மத்ஹப் சிந்தனைப்பிரிவுகள் தோன்றுவதற்கு முன்பே இஸ்லாத்தை பின்பற்றும் மக்கள் குழுமம் இங்கு நிலவத் தொடங்கியிருந்தமையினால் காலத்திற்குக் காலம் ஏற்பட்ட புதிய மக்கள் குடிவரவுகளும் இந்தப்பிராந்தியக் கலாசாரத்தினுள் தங்களை இசைவாக்கிக் கொண்டனர்.  

கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கிழக்கின் பூர்வ பண்பாட்டுக்கூறுகளினை தமது மதநம்பிக்கைக்கு ஏற்ப மதத்தின் அடிப்படைக்கூறுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பண்பாட்டுக்கட்டமைப்பைத் தகவமைத்துக் கொண்டனர்.  இந்தப்பண்பாட்டுப் படிமலர்ச்சிக் கூறுகளினை கலந்துரையாடுவதாக இந்தக்கட்டுரைத் தொடர் அமையும்.

கிழக்கிலங்கையைப் பொறுத்தவரை முஸ்லிம் மக்களிடம் ஏனைய பிரதேசங்களைப் போன்றே கலாசாரக்கூறுகளில் ஊருக்குஊர் நுண்ணிய வேறுபாடுகள் நிலவி வருகின்றன.  இந்தக்கட்டுரை தென்கிழக்குப்பிராந்திய முஸ்லிம் மக்களின் பண்பாட்டுக்கூறுகள் தொடர்பாகவே கலந்துரையாடவுள்ளது.

கிழக்கிலங்கை முஸ்லிம்களிடையே நிலவிவருகின்ற தனித்துவமான பண்பாட்டுக்கூறுகளிலொன்றாக தாய்வழிக்குடிவழிமுறை  (Matrilineal Clan System) காணப்படுகின்றது. இது இலங்கையின் ஏனைய பிரதேச முஸ்லிம்களிடம் காணப்படாத தனிச்சிறப்பியல்பாகும்.

குடிவழிமுறை

குடிவழிமுறை எனப்படுவது மக்கள் தங்களைத் தமது தாய்வழிப் பரம்பரையின் இரத்த உறவுள்ள குழுக்களாக பகுத்துக் கொண்டுள்ள ஒரு வகை மக்கட்குழும முறையாகும். இம்முறை தொன்றுதொட்டு இலங்கையின் கிழக்குப் பகுதியில் நிலவி வருகின்றது. இந்தக்குடிகளின் தலைமையும் இவர்களது அதிகாரமும் செல்வாக்கும் காலத்துக்குக்காலம் மாறுபட்டு வந்துள்ளன. இதே போன்றதொரு தாய்வழிப்பண்பாடு கேரளத்தின் வடக்குப் பகுதியில் மாப்பிள்ளா முஸ்லிம்களிடம் வழக்கில் உள்ளது.[ii]

 கிழக்கிலங்கையைப் பொறுத்தவரை வேட்டுவ சமூகங்களிலும் குடிவழிமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. அவர்களிடம்  உள்ள குடிகள் ஆண்மூதாதையரின் பெயர்களிலேயே தொடர்ந்து வருகின்றன. இவர்களின் மத்தியில்

  1. பழுவளசீயா
  2. ஆக்கமுத்துசீயா
  3. செல்லாப்பத்துசீயா
  4. கற்கோடாசீயா
  5. கிரிமடிசீயா
  6. திருக்காக்கனி சீயா
  7. வெருக சீயா – ஆகிய ஏழு குடிகள் வழக்கில் உள்ளதாக தில்லைநாதன் குறிப்பிடுகின்றார் (தில்லைநாதன் 2015.38)[iii]

மட்டக்களப்புத்தமிழர் குடிகளைப் பொறுத்த வரையில் மட்டக்களப்பில் காணப்படும் மரபுவழியான குலங்களினுள்  பல்வேறு குடிகள் காணப்படுகின்றன. இவை தாய்வழியாகப் பேணப்பட்டு வருகின்றன. அதாவது ஒருவரது குடி அவரின் தாயின் குடியாகவே கருதப்படும். இதனால் குடி விருத்தியடைவது பெண்பிள்ளைகளின் பொருட்டேயாகும்.

திமிலர், முக்குவர், வன்னியர், வேளாளர், சீர்பாதர், கரையார், கோவிலார் போன்ற ஒவ்வொரு குலங்களினுள்ளும் குடிகள் காணப்படுகின்றன. இதே போல் கிழக்கிலங்கைச் சோனகர்களிடையே குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் மத்தியில் குடிவழிமுறை இன்றும் வழக்கில் உள்ளது. இவற்றை சோனகக்குடிகள் என வகைப்படுத்துவதுண்டு.

முஸ்லிம்களின் குடிவழிமுறை

இலங்கையில் முஸ்லிம்கள் தங்களை சமய இனக்குழுமமாக (Ethnoreligious Group) வரையறுத்துக் கொண்டுள்ளனர். அதேவேளை இலங்கையில் வாழ்கின்ற இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்களிடையே கலாசாரப் பல்வகைமையும் காணப்படுகின்றது. இது இஸ்லாத்தின் நெகிழ்வுத்தன்மையினாலேயே சாத்தியப்பட்டிருக்கின்றது எனலாம். அந்தவகையில் கிழக்கிலங்கை முஸ்லிம்களிடம் காணப்படுகின்ற சிறப்பியல்புகளிலொன்றாக அவர்களிடம் நிலவி வருகின்ற தாய்வழிக் குடிவழிமுறையைக் குறிப்பிடலாம்.

கிழக்கிலங்கை முஸ்லிம்களிடையே குடிவழிமுறை தோற்றம்பெற்ற முறை குறித்து பிரபல்யமான கர்ணபரம்பரைக்கதைகள் காணப்படுகின்றன.

குடிமக்கள்-வரவு-ஓலை-24

தொன்று தொட்டு இலங்கையின் கிழக்குக்கரை நாகரிகம் பிறநாடுகளுடன் துறைமுகத் தொடர்புகளைப் பேணி வந்தள்ளது. மட்டக்களப்பு பூர்வசரித்திரத்தின்  தகவல்களிலிருந்து காட்டான், சுல்தான், பட்டாணியர், சிக்கந்தர், துலுக்கர் போன்ற வகுப்பினர் கிழக்கிலங்கையில் வர்த்தகத்தின் பொருட்டு துறைமுகத்திற்கு வந்த சென்றுள்ளமையினை அறியமுடிகின்றது. அந்த வகையில் முக்குவர்கள் வாவியின் தென்பாகத்தில் குடியேற முயற்சித்த வேளை  திமிலர்களால் ஏற்பட்ட தடைகளையும், சச்சரவுகளையும் நீக்கிக் கொள்ள அவர்களுடன் படைதிரட்டிப் போரிட்டனர். இந்தப்போரில் இவர்கள் பட்டாணியரின் உதவியினைப் பெற்று போரில் வெற்றி பெற்றனர் என்றும், தங்களுக்குத் துணையாக  பட்டாணியரை நிலைநிறுத்துவதற்காக தம்முடைய குடிகளைச் சேர்ந்த பெண்டிரை படைவீரர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தமையினால் முஸ்லிம்களிடையே குடிவழிமுறை தோன்றக் காரணமானது என்ற கருத்து நிலவிவருகின்றது. இதனைக் “குடிமக்கள் வரவு“ என்ற ஏட்டுப்பிரதியின் சுவடிகளிலும் காணலாம்[iv].

“…பட்டாணிமாருக்குப் பரிமணமுடித்து
இட்டமா யவர்களுக்கிடமது கொடுத்துப்பின்
படைதனக்கஞ்சி யொதுங்கிய திமிலரை
நடவெனத்துரத்தி நாட்டினாரெல்லை ….“

(குடிமக்கள் வரவு ஓலைப்பக்கம் ,24)

இதன்போது திருமணமுடித்துக் கொடுக்கப்பட்ட முக்குவர்குலத்தின் ஏழு குடிகளும் முஸ்லிம்களிடையே வழக்கில் இருந்துள்ளன.

ஆயினும் இந்தச்சம்பவத்திற்கு முன்னரும் முஸ்லிம்களிடையேயும் தமிழர்களிடை்யேயும் திருமணக்கலப்புகள் நடைபெற்றுள்ளன. ஏனெனில் முஸ்லிம்களிடையே வழக்கிலுள்ள குடிகளின் பட்டியலில் முக்குவகுடிகள் தவிர்த்து  வேளாளகுடிகள்,  கரையார் குடிகள் என்பன காணப்படுகின்றன. அதேவேளை பிற்காலத்தில் புதிய குடிகளும் தோற்றம் பெற்றுள்ளன.

குலவிருதுகளும் குடிவிருதுகளும்

குலவிருதுகள் எனப்படுபவை ஒவ்வொரு குலங்களுக்கும் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வழங்கப்பட்டுள்ள சின்னங்களைக் குறிப்பனவாகும். பின்வரும் பாடல் மட்டக்களப்பு மான்மியத்தில் குறிப்பிடப்படுகின்ற பாண்டி மன்னன் வகுத்த குல விருதுகளைக் குறிப்பதாக காணப்படுகின்றது.

தோணி கரையார்க்குத் தொப்பி துலுக்கருக்கு
காணி யுழுமேழிசுளி காராளருக்கு
நாணி வில்லம்பு நாட்டிலுள்ள வேடுவர்க்கு
எழுத்தாணி சுளிமுற்குகர்க்கு கமலமலர் கோயிலார்க்கு
கைப்பிரம்பு பண்டாரப்பிள்ளைக்கு திமிலர்க்குப் பால்முட்டி
சேணியர்க்கு நூலச்சு அமலருக்குத் தேர்க்கொடிகள்
அம்பட்டருக்குக் கத்தரிக்கோல் விமலருக்குமத்துலகில்
வேதியர்க்கும் பூணுலாம்
வண்ணார்க்குக்கல்லு வாணிபர்க்குச் செக்கு
சுண்ணாம்புசுடும் கடையர்க்குக் கூடையாம் தொல்லு
வேந்தர்க்குச் செங்கோல் மேளமது வள்ளுவர்க்கு
சேர்ந்தகுயவருக்குக் கும்பகுடம் செப்புவேன் இன்னும்
தட்டார்க்குக் குறடு சாணார்க்குக்கத்தி செட்டிகுலத்தோர்க்குத் தோடு தராசுபடி
இட்டமுடன் இந்த விதிப்படிக்கு எல்லாம் விருதெனவே
பட்டமது கட்டிவைத்தான் பாண்டிமன்னன்.

(மட்டக்களப்பு மான்மியம்)

இந்தக்குல விருதுச்சின்னங்களின் துலுக்கர் என்றழைக்கப்படுகின்ற முஸ்லிம்களுக்கு தொப்பிச்சின்னம் வழங்கப்பட்டாலும், முஸ்லிம்களிடையே வழக்கிலுள்ள ஒவ்வொரு குடிகளும் தங்களுக்கென பிரத்தியேகமான குடிவிருதுச்சின்னங்களைக் கொண்டுள்ளனர்.

பசு ,எருமை மாடுகள் வைத்திருப்பவர்கள் தங்களின் குடிக்குரிய சின்னத்தையும் உரிமையாளரின் குறியையும் சேர்த்து குறிசுடுவார்கள். இது மாடுகளை இனங்காண்பதற்காக பயன்பட்டுள்ளது. அதேவேளை பள்ளிவாசலுக்கு காணிக்கையாக கொடுக்க விரும்புகின்ற மாடுகளுக்கு பிறை வடிவக் குறியை மட்டுமே இடுவது வழக்கமாக இருந்துள்ளது. (றாஸிக்,ஏ 2012. 19).[v]

முஸ்லிம் குடிகள்

கிழக்கிலங்கையைப் பொறுத்தவரை ஏறத்தாழ நாற்பதுக்கும் மேற்பட்ட குடிகள் வழக்கில் உள்ளன. இவற்றுள் அதிக எண்ணிக்கையான குடிகள் சம்மாந்துறையில் காணப்படுகின்றன.

குடிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் சம்மாந்துறையில் 32 குடிகளும், அக்கரைப்பற்றிலும் சாய்ந்தமருதிலும் 18 இற்கு மேற்பட்ட குடிகளும், இறக்காமம், நிந்தவூர், ஒலுவில் ஆகிய கிராமங்களில் 12 இற்கு மேற்பட்ட குடிகளும் மருதமுனையில் 10 இற்கு மேற்பட்ட குடிகளும் காணப்படுகின்றன.

இக்குடிகளுள் 16 குடிகள் முஸ்லிம் மக்களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் பொதுவான குடிகளாக காணப்படுவதாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு குறிப்பிடுகின்றது. [vi]

  1. பொன்னாச்சி குடி
  2. மூத்தநாச்சிகுடி
  3. இளையநாச்சிகுடி
  4. வரிசை நாச்சி குடி
  5. உலகிப்போடி குடி
  6. படையாண்ட குடி
  7. பெத்தாண்ட குடி
  8. பணிக்கனா குடி
  9. வடக்கனா குடி
  10. கச்சியான் குடி
  11. கோப்பிகுடி
  12. செட்டிகுடி
  13. கலிங்கனார்குடி
  14. உசவீடு குடி
  15. ராசாம்பிள்ளைகுடி
  16. சின்னக்கதிரன் குடி

அதே வேளை முஸ்லிம்களிடையே மட்டும் வழக்கிலுள்ள குடிகளும் உண்டு. இவை தொடர்பில் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

அடிக்குறிப்புகள்

[i]. இலங்கைத் தொகைமதிப்புத் திணைக்களம் 2011 தரவுகள்

[ii] Koya, S.M., (1979), January. Matriliny and Malabar Muslims. In Proceedings of the Indian History Congress (Vol. 40, pp. 419-431). Indian History Congress.

[iii] தில்லைநாதன், சா. (2005) மட்டக்களப்புத்தமிழர் பண்பாட்டு மரபுகள். குமரன் அச்சகம், கொழும்பு

[iv] குடிமக்கள் வரவு ஏடு எண்ணிமப்பிரதி. நூலகம் நிறுவணம் நூலக எண் S0163

[v] றாஸிக். ஏ. (2012) முஸ்லிம்கள் மத்தியில் குடிவழிமுறை, குடிமரைக்காயர் சம்மேளனம், சம்மாந்துறை.

[vi] ஷம்சுத்தீன் மௌலானா, ஜே.எம், (1997) வாழ்வியலும் பண்பாடும் , அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் , கலாசார சமய அலுவல்கள் அமைச்சு


ஒலிவடிவில் கேட்க


About the Author

எம். ஐ. எம். சாக்கீர்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த முஹம்மட் சாக்கீர் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டம் பெற்றவர் தற்போது மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக பணிபுரிகிறார்.

வரலாறு, பண்பாட்டு ஆய்வு, நாட்டாரியல், ஆவணப்படுத்தல் போன்ற துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். இவரது 21வது வயதில் 'சம்மாந்துறை பெயர் வரலாறு' என்ற ஆய்வு நூலை வெளியிட்டார், சம்மாந்துறை பெரியபள்ளிவாசல் வரலாற்று ஆவணப்படம் போன்றவற்றிற்கு வசனம் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் இன்கிலாப் சஞ்சிகை மீளுருவாக்க குழுவின் முன்னோடியான செயற்பாட்டாளரான இவர் 2019 இல் வெளியான சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் எனும் நூலின் பதிப்பாசிரியர்களிலொருவரும் கட்டுரையாசிரியருமாவார். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, கலை, பண்பாடு, முதலான கருபொருள்களில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்