ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண
உலகின் பெரும்பாலான நாடுகள் பன்மைப் பண்பாடுகளை உடைய சமூகங்களாக (Multi-cultural Societies) விளங்குகின்றன. ஒரு தேசிய இனம், ஒரு மொழி, ஒற்றைப் பண்பாடு என அழைக்கக் கூடிய நாடுகள் உலகில் வெகு அரிதாகவே காணப்படுகின்றன. பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட சமூகங்களில் பெரும்பான்மையானவை ஆழமான பிளவுகளையுடைய சமூகங்கள் (Deeply Divided Societies) என அரசியல் விஞ்ஞானிகள் சிலர் குறிப்பிடுவர். ஆழமான பிளவுகளையுடைய சமூகங்களின் சிறுபான்மைத் தேசிய இனங்களினதும் சிறிய இனக்குழுமங்களினதும் பிரச்சினைகளைத் தீர்வு செய்வதற்கு அரசியல் அதிகாரத்தைப் (Political Power) பகிர்ந்தளித்தல் அவசியமானது. அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம்,
அ) அதிகாரப் பகிர்வு (Devolution of Power),
ஆ) தன்னாட்சி (Autonomy),
என்னும் இரு வழிகளில் சிறுபான்மைத் தேசிய இனங்களினதும், சிறிய இனக்குழுமங்களினதும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதற்கு உதாரணங்கள் பல உள்ளன. இச்சமகால வரலாற்று உதாரணங்கள் பலவற்றை எடுத்துக்காட்டி விளக்கம் தரும் நீண்டதொரு கட்டுரையை ‘Constitution Making in Multi-cultural Societies’ என்ற தலைப்பில் சட்ட அறிஞர் ஜயம்பதி விக்கிரமரட்ண எழுதியுள்ளார். அவரது மேற்படி தலைப்பிலான கட்டுரை ‘Towards Democratic Governance in Sri Lanka: a Constitutional Miscellany (2014)’ என்னும் நூலில் முதலாவது அத்தியாயமாக (பக் 1 – 74) அமைந்துள்ளது. அவர் குறிப்பிடும் பல உதாரணங்களில் சிலவற்றைத் தேர்வு செய்து இத்தமிழ்க் கட்டுரையில், எளிமைப்படுத்திய விளக்கவுரையாகத் தந்துள்ளோம்.
முதலில் யுகோசிலாவியாவின் சேர்பிய பெரும்பான்மைவாதம் என்னும் உதாரணத்தைப் பார்ப்போம்.
சேர்பிய பெரும்பான்மைவாதம் – எதிர்மறை உதாரணம்
சில நாடுகளின் பெரும்பான்மை இனங்கள் சிறுபான்மைத் தேசிய இனங்களுடனும் இனக்குழுமங்களுடனும் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு தீவிர எதிர்ப்பைத் தெரிவித்து வந்தன. யுகோசிலாவியாவின் பெரும்பான்மை இனக்குழுமமான சேர்பிய இனத்தின் அரசியல்வாதிகள் தீவிர பெரும்பான்மைவாதம் (Extreme Majoritarianism) என்னும் கொள்கையைக் கடைப்பிடித்தனர். இத்தீவிர பெரும்பான்மைவாதம் அந்த நாட்டில் பேரழிவுகளை ஏற்படுத்தியது. 6 சமஷ்டி அலகுகளைக் கொண்டதான யுகோசிலாவியா சிதைவுற்று அழிந்தது; இன்று முன்னைய யுகோசிலாவியா 8 தனிநாடுகளாக மாற்றமுற்றுள்ளது. இது எதிர்மறை உதாரணமாகும். கட்டுரையின் 18 ஆம் பக்கத்தில் யுகோசிலாவியா பற்றி ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் கூறியிருப்பவற்றைச் சுருக்கமாகக் கீழே தந்துள்ளோம்.
சேர்பியப் பெரும்பான்மைவாதம் (Serbian Majoritarianism) பின்பற்றக்கூடாத ஒரு மாதிரியாகும். பன்மைப் பண்பாட்டுத் தேசமாக விளங்கிய யுகோசிலாவியாவைச் சிதைத்து அழித்ததில் சேர்பியப் பெரும்பான்மைவாதத்திற்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. யுகோசிலாவியா பின்வரும் ஆறு அலகுகளைக் கொண்ட சமஷ்டி அரசாக விளங்கியது.
- பொஸ்னியாவும் ஹெர்சகோவினியாவும்
- குறோசியா
- சிலோவினியா
- மசிடோனியா
- சேர்பியா
- மொன்டி நிகிறோ
மேற்படி ஆறு அலகுகளிற்குள்ளேயும் சேர்பியப் பெரும்பான்மைவாதத்தின் தாக்கத்தினால் பேரளவு வன்முறைக் கலகங்கள் வெடித்தன. யுகோசிலாவியா சிதைவுற்று அழிந்தது. 6 சமஷ்டி அலகுக்குள் இருந்த புவியியல் பரப்புக்குள் இன்று 8 தனிநாடுகள் தோன்றிவிட்டன. சேர்பியாவின் சேர்பியர் பெரும்பான்மையாக உள்ள பகுதியில் இருந்து பிரிந்து கொசோவே (Kosovo) என்ற தனிநாடு தோன்றியது. மொன்டி நிகிறோவும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. பல்லின, பன்மொழி, பல்மதக் கலாசாரமுடைய யுகோசிலாவியா பெரும்பான்மைவாதத்தினால் சீரழிந்தது.
அரசை மறுகட்டமைப்புச் செய்தல்
சிறுபான்மைத் தேசியங்களின் அரசியல் அபிலாசைகளைப் புரிந்து கொண்டு அவற்றின் உரிமைகளை வழங்குதல் (Political Accommodation) என்னும் கொள்கையைச் சில நாடுகள், காலம் தாமதித்தேனும் பின்பற்றும் அவசியத்தை உணர்ந்தன. இக்கொள்கை நடைமுறையில் அரச அதிகாரத்தைப் பகிர்தல் (Sharing of State Power) என்பதாகவே அமைகிறது. அரச அதிகாரத்தைப் பகிர்வதற்காக இருந்து வரும் அரசுக் கட்டமைப்பை மாற்ற வேண்டும். இவ்வாறு மாற்றுதல் அரசுக் கட்டமைப்பு மாற்றம் (Restructuring of the State) எனப் பொருள் கொள்ளப்படும்.
ஸ்பானியா தேசம் அரச மறுகட்டமைப்புச் செய்தல் மூலம் சிறுபான்மைத் தேசியங்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்வந்த நாடு என்ற வகையில் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. அந்நாட்டில் பஸ்க் பிராந்தியம் (Basque Region), கற்றலோனியா (Catalonia), கலிசியா (Galicia) என்பன பெரும்பான்மையினரான ஸ்பானியர்களில் இருந்து வேறுபட்ட தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களுடைய மக்கள் வாழும் பிராந்தியங்களாக இருந்து வந்துள்ளன. பஸ்க் பிராந்தியத்தில் தனியாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற பிரிவினைவாத இயக்கம் பலம் பொருந்தியதாக எழுச்சி பெற்றது. இந்த இயக்கத்தின் எழுச்சியால் அங்கு வன்முறைகள் இடம்பெற்றன. ஸ்பானியா, பஸ்க் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அசமத்துவ அதிகாரப் பகிர்வு (Asymmetrical Devolution) என்னும் அதிகாரப் பகிர்வு முறை மூலம் பஸ்க் பிராந்தியத்திற்கு தன்னாட்சியை (Autonomy) வழங்கியது. அசமத்துவ அதிகாரப் பகிர்வு முறை பஸ்க் பிராந்தியத்திற்கு மட்டுமல்லாமல் ஸ்பானியாவின் எல்லா பகுதிகளினதும் தேசிய இனங்களின் தேவைகளிற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பிராந்தியமும் தனது தேவைக்கேற்ற அளவில் அதிகாரப் பகிர்வைப் பெற்றுக் கொள்ள வழி செய்யப்பட்டது. தன்னாட்சியை வேண்டிப் போராட்டம் நடத்தி வந்த பஸ்க், கற்றலோனியா, கலிசியா ஆகிய பிராந்தியங்கள் ஏனைய பிராந்தியங்களை விட உச்ச அளவான அதிகாரப் பகிர்வை (Ultimate Degree of Devolution) பெற்றுக் கொண்டன. ஸ்பானியாவின் இந்த முன்னுதாரணத்தை பேராசிரியர் ரஞ்சித் அமரசிங்க ‘Fast Tract Process’ (துரித வழிச்செயல் முறை) எனக் குறிப்பிட்டார்.
1960களில் ஒற்றையாட்சி அரசாக (Unitary State) விளங்கிய பெல்ஜியம் இன்று முழுமையான சமஷ்டிமுறை நாடாக மாற்றம் பெற்றுள்ளது. அங்கு டச்சு மொழி பேசுவோர் பிராந்தியம், பிரஞ்சு மொழி பேசுவோரான வலூன்களின் வலோனியா (Wallonia), பிரஸ்ஸல்ஸ் தலைநகரம் என்ற பிராந்திய அடிப்படையில் மட்டுமல்லாது, பண்பாட்டுச் சமுதாயங்கள் (Cultural Communities) என்ற அடிப்படையிலும் அதிகாரம் பகிரப்பட்டுள்ளது. அங்கு இருவகைச் சமஷ்டி நடைமுறையில் உள்ளதெனலாம்.
அ) தனிநபர் சமஷ்டி (Personal Federalism)
மொழி, கல்வி, பண்பாடு சார்ந்த உரிமைகளை தாம் சார்ந்த பண்பாட்டுச் சமுதாயம் (Cultural Community) ஊடாகத் தனிநபர்கள் பெற்றுக் கொள்ளுதல் தனிநபர் சமஷ்டி எனப்படும். இப்பண்பாட்டுச் சமுதாயங்கள் பிரதேசம் சாராத சமஷ்டி முறையை (Non Territorial Federalism) நடைமுறைப்படுத்தியுள்ளன.
ஆ) டச்சு, பிரஞ்சு, ஜேர்மன் ஆகிய மொழிகளைப் பேசும் மக்கள் தத்தமக்குரிய பிராந்தியங்களில் தன்னாட்சி உரிமையைப் பெற்றவர்களாய் உள்ளனர்.
ஒற்றையாட்சி நாடான பிரித்தானியாவில் சமஷ்டி மாதிரியிலான அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதிகாரப் பகிர்வு, சமஷ்டி முறையிலான தன்னாட்சி ஆகிய உபாயங்கள் மூலம் ஸ்பானியா, பெல்ஜியம், ஐக்கிய இராச்சியம் என்பன தமது நாடுகளின் இனத்துவ அரசியல் பிரச்சினைகளை (Ethno-Political Issues) முழுமையாகத் தீர்வு செய்துவிட்டன என்று கருதுவது தவறு. இந்நாடுகளில் புதிய பிரச்சினைகள் தோன்றிய வண்ணம் உள்ளன. அவ்வாறு தோன்றும் புதிய பிரச்சினைகளையும் நிர்வகிக்கும் தந்திரோபாயங்களை இந்நாடுகள் கையாண்டு வருகின்றன.
கற்றலோனியா, பெல்ஜியத்தின் ‘Flanders’, ஸ்கொட்லாந்து ஆகியவற்றில் பிரிவினைவாத இயக்கங்கள் இன்றும் உயிர்ப்போடு செயற்படுகின்றன. இம்மூன்றையும் நாடுகள் இல்லாத தேசியங்களிற்கு மாதிரி உதாரணங்கள் (Paradigmatic Examples of Stateless Nations) என ஜயம்பதி விக்கிரமரட்ண குறிப்பிடுகிறார் (பக். 20). இவை தெளிவான வரையறையை உடைய பிரதேசங்களை (Well – Define Territories) தமது வாழிடங்களாகக் கொண்ட தேசிய இனங்கள்; இவற்றிற்கு தனித்துவமான வரலாறு, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் ஆகிய அடையாளங்கள் உள்ளன. இவை பெரிய அரசுகளின் எல்லைக்குள் நீண்ட காலமாக இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளாக இருந்த போதும் தமது தனித்துவத்தை இழக்காமல் இருந்து வந்துள்ளன.
கற்றலோனியா தனித்துப் பிரிந்து போவதற்கான கோரிக்கையை முன்வைப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. கற்றலோனியாவிற்கு வரிகளை அறவிடும் அதிகாரம் கிடையாது. மட்றிட்டில் உள்ள ஸ்பானியாவின் மத்திய அரசே வரிகளை அறவிட்டுக் கொள்கிறது. ஸ்பானியாவின் மொத்த வரி வருவாயில் 20% கற்றலோனியாவில் இருந்து கிடைக்கிறது. ஆனால் மட்றிட் அரசாங்கம் கற்றலோனியாவிற்குத் திருப்பி கொடுப்பதோ அற்பச் சிறிய தொகைதான். இதே போன்றுதான் ஸ்பானியாவின் வறிய பிராந்தியங்கள் மத்திய அரசிடம் தம் செல்வத்தை இழந்து வருகின்றன. ஆனால் மட்றிட் அரசாங்கம் இவ்விடயத்தை மீள்பரிசீலனை செய்வதற்குத் தயாராகவில்லை. பஸ்க் பிராந்தியத்திற்கு வரிவிதிப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆயினும் இதற்கு வரலாற்றுக் காரணங்கள் துணையாக அமைந்தன என்பதைக் கவனித்தல் வேண்டும். 2010ஆம் ஆண்டில் ஸ்பானியாவின் அரசியல் யாப்பு நீதிமன்றம் கற்றலோனியாவின் தன்னாட்சிச் சட்டத்தில் (Catalan Autonomy Statute) குறிப்பிடப்பட்டுள்ள ‘நேஷன்’ (Nation) என்ற சொல்லிற்கு கொடுத்த விளக்கம் கவனிப்புக்குரியது. கற்றலோனியாவின் வரலாற்றையும் பண்பாட்டையும் அடையாளப்படுத்துவதற்காக நேஷன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர அச்சொல்லிற்கு சட்டவலு (Legal Weight) எதுவும் கிடையாது. அரசியல் யாப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே ஒரு ‘நேஷன்’ என்றால் அது ஸ்பானியா தேசம் (Spanish Nation) மட்டுமே என அரசியல் யாப்பு நீதிமன்றம் கூறியது. இது ஸ்பானிய அரசு, அதிகாரப் பகிர்வு என்ற விடயத்தை எப்படிப் பார்க்கிறது என்பதற்கு உதாரணமாகும். ஸ்பானியா அதிகாரப் பகிர்வைச் சாதகமாகப் பார்க்கவில்லை; சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமக்குப் போதியளவு அதிகாரப் பகிர்வு வழங்கப்படவில்லை என்ற கருத்துடையனவாக உள்ளன.
பெல்ஜியத்தில் பிளாண்டர்ஸ் (Flanders), வலோனியா (Wallonia) என்பனவற்றிற்கிடையேயான பொருளாதார ஏற்றத் தாழ்வுகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பு பிளாண்டர்ஸ் பகுதி துரிதமாகக் கைத்தொழில் வளர்ச்சியை அடைந்தது. இன்று அப்பகுதி ஐரோப்பாவின் செல்வச் செழிப்புமிக்க பிரதேசங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு மாறாக வலோனியாவில் கைத்தொழில் வளர்ச்சியின் பின்பான வீழ்ச்சிநிலை (Post-Industrial Decline) காணப்பட்டது. இதனால் அரசாங்கத்தின் மானியங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை வலோனியாவிற்கு ஏற்பட்டது. பிளாண்டர்ஸ் பகுதியின் பிளமிஷ் மக்கள் தமது உழைப்பின் பயன்கள் வலூன் பகுதியினருக்கு மானியமாகப் பங்கிடப்படுகின்றதே எனக் குறை கூறுவதை அவதானிக்க முடிகிறது. ஆய்வாளர்கள் இதனைத் தொடரும் வன்முறையில்லாத முரண்பாடுகள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
‘தன்னாட்சிப் பிரதேசங்கள்’ (Autonomous Areas) எனப்படும் பகுதிகள் பல நாடுகளில் இருப்பதை ஜயம்பதி விக்கிரமரட்ண குறிப்பிடுகிறார். இவை சமஷ்டி நாடுகளில் மட்டுமன்றி ஒற்றையாட்சி நாடுகளிலும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் மக்கள் சமூகங்களிற்கும் சுயாட்சியை (Self-Rule) வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. தன்னாட்சிப் பிரதேசங்கள், இனத்துவ அரசியல் முரண்பாடுகளைத் தவிர்க்கவும், ஜனநாயக முறையிலான பங்கேற்பை (Democratic Participation) உறுதி செய்யவும் பொருத்தமான நிர்வாக ஒழுங்கமைப்பாக விளங்குகின்றன. தன்னாட்சிப் பகுதிகள் பிரதேச ரீதியான அலகுகளாகவும், ஒரு பிராந்தியத்திற்குள் ஓர் உப பிராந்தியமாகவோ அல்லது உள்ளூர்ப் பகுதியாகவோ (Territorial, Sub – Regional or Local) அமைவதுண்டு.

கிறீன்லாந்து (Green Land) புவியியல் தனித்துவம் மிக்க தன்னாட்சிப் பிரதேசத்திற்கு உதாரணமாகும். டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் கிறீன்லாந்து அந்நாட்டில் இருந்து 2900 கி.மீற்றருக்கு அப்பால் உள்ளது. கிறீன்லாந்தின் சனத்தொகையின் 80 வீதத்தினர் இனூய்ட் (Inuit) பழங்குடியினராவர். ஆலந்து தீவுகள் (Aland Islands) பின்லாந்து நாட்டின் பகுதியாக உள்ள சுயாட்சிப் பகுதியாகும். பின்னிஷ் மொழி பேசும் பின்லாந்தியர்களில் இருந்து மொழியால் வேறுபட்ட சுவீடிஷ் மொழி பேசுவோர் பகுதியாக ஆலந்து விளங்கி வருகிறது. கொரியக் குடியரசு (Republic Korea) ஒற்றையாட்சி முறை நாடாகும். அந்நாட்டின் தரைப் பகுதிக்கு அப்பால் கடலின் மத்தியில் அமைந்துள்ள யெயு-டோ (Jeju-Do) தீவு சுயாட்சி மாநிலமாக விளங்கி வருகிறது. இச்சுயாட்சிப் பிரதேசம் ஒரு மொழி, ஒருமைப் பண்பாட்டையுடைய (Mono – Lingual Mono Cultural) கொரியாவில் இருந்து மொழியாலும் பண்பாட்டாலும் வேறுபட்ட மக்கள் வாழும் பகுதியாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. யெயு-டோ மக்கள் தாய் வழிச் சமூக அமைப்பையுடைய சமூகம் (Matriarchal Society) எனவும் ஜயம்பதி விக்கிரமரட்ண குறிப்பிடுகிறார்.
பிரஞ்சு நாட்டிற்குரிய தீவாக விளங்கும் கோர்சிக்கா, பிரான்சை விட இத்தாலிக்குக் கிட்டிய தூரத்தில் உள்ளது. கோர்சிக்கா தீவு தனித்துவமான பண்பாட்டையும் மொழியையும் கொண்டது. கோர்சிக்கா ஒரு ‘Territorial Collectivity’. பிரான்சின் ஏனைய பிராந்தியங்களை விடக்கூடிய அதிகாரங்கள் உடைய சுயாட்சிப் பகுதி என்னும் தனித்துவமான அந்தஸ்து அதற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் அரசியல் யாப்பு இந்தோனேசியாவை ஒற்றையாட்சிக் குடியரசு (Unitary Republic) எனப் பிரகடனம் செய்துள்ளது. ஆயினும் அரசியல் யாப்பின் உறுப்புரை அந்நாட்டிற்குள் மாநிலங்கள், றீஜென்சி (Regency) எனப்படும் நிர்வாக அலகுகள், முனிசிப்பல் சபைகள் என்பனவற்றிற்குத் தன்னாட்சி அந்தஸ்தை வழங்குவதற்கு இடமளித்துள்ளது. அத்தோடு அஷே (Aceh), யொக்யகார்ட்டா (Yogyakarta), பப்புவாவும் மேற்கு பப்புவாவும் (Papua and West Papua) ஆகிய மாநிலங்கள் சுயாட்சி அந்தஸ்துடையனவாக (Autonomous Status) விளங்குகின்றன. பன்மைப் பண்பாட்டு நாடான இந்தோனேசியாவின் தேர்தல் விதிமுறைகளும் சட்டங்களும் பிராந்திய நலன்களின் பிரதிநிதித்துவதற்குச் சாதகமானதாக இல்லை. தேசிய கட்சிகள் மட்டுமே தேசிய சட்ட சபைக்கும், பிராந்தியச் சட்ட சபைகளுக்கும் (National Legislature and Regional Legislatures) பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் மிகுந்த செல்வாக்குள்ளதாக ஒரு பிராந்தியக் கட்சி விளங்கிய போதும் அக்கட்சி பிராந்தியச் சட்ட சபைக்கான தேர்தலில் போட்டியிட முடியாது. ஒரு கட்சி, தேசிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு,
- மாநிலங்களின் மாவட்டங்களில் 75 வீதமானவற்றில் கட்சி கிளைகளைக் கொண்டிருக்க வேண்டும்,
- மாவட்டங்களின் உப அலகுகளான உப மாவட்டங்களில் (Sub Districts) 50 வீதமானவற்றில் கட்சி கிளைகளைக் கொண்டிருக்க வேண்டும்,
ஆகிய விதிமுறைகள் உள்ளன. இந்த விதமான கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மேலாக இன்னொரு விதியும் உள்ளது. ஒரு பிராந்தியக் கட்சி தேர்தலின் போது தேசிய மட்டத்தில் மொத்த வாக்குகளில் 3.5% மேற்பட்ட எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றால் அல்லாது பிராந்திய சட்ட சபையில் பிரதிநிதித்துவம் பெறும் தகுதியைப் பெற முடியாது. குறித்த பிராந்தியத்தில் போதியளவு பெரும்பான்மை இருந்தாலும் கூட பிரதிநிதித்துவத்திற்குத் தகுதியைப் பெறுதல் முடியாது. உள்ளூர் மட்ட சட்டமன்றங்களில் உள்ளூர்க் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தைக் கட்டுப்படுத்தும் தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பல்கட்சி ஜனநாயகம் (Multi Party Democracy) இந்தோனேசியா தவிர்ந்த வேறு எந்த நாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை.
அஷே (Aceh) மாநிலத்தின் அரசியல் தீர்வு விடயத்தில் மட்டும் இந்தோனேசியா விதிவிலக்காக உள்ளூர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை அங்கீகரித்துள்ளது.
இந்தோனேசிய அரசியல் யாப்பு ஏற்றுக் கொண்டுள்ள பிரதேச சுயாட்சி என்னும் கொள்கையை அந்நாட்டின் தேர்தல் சட்டங்கள் அர்த்தமற்றதாக்கியுள்ளதை எடுத்துக் காட்டும் ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள், டொனால்ட்.எல். ஹொறொவிற்ஸ் (Donald.L. Horowitz) என்னும் அரசியல் அறிஞரின் கூற்று ஒன்றை மேற்கோளாகத் தந்துள்ளார். அக்கூற்றின் சாராம்சம் வருமாறு:
”பப்புவன்கள் (Papuans), டயக்குகள் (Dayaks), பாலித்தீவு மக்கள் போன்ற மக்கள் குழுமங்களின் பிராந்தியக் கட்சிகள் இத்தேர்தல் முறையூடாக தம் பிரதிநிதிகளைத் தேர்வு செய்து சட்டமன்றங்களுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. ‘PDS’ என்ற சிறிய கிறிஸ்தவக் கட்சி, கிறிஸ்தவர்கள் வாழும் பகுதிகளில் மிகுந்த செல்வாக்கு உடையதாக இருந்தபோதும், அதனால் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ‘MSJUMI’ என்ற உள்ளூர் சார்ந்த சமூகத்தின் ‘PBB’ கட்சி அச்சமூகத்தில் மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளது. ஆயினும் இக்கட்சி பிரதிநிதித்துவம் பெறுவதற்கு தேர்தல் சட்டங்கள் தடையாக உள்ளன. இந்தோனேசிய தேர்தல் முறையில் ஜனநாயக வழியில் பிராந்திய நலன்களைப் பிரதிபலிக்கும் கட்சிகளிற்கு பங்கேற்புக்கான இடம் மறுக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும் (பக். 22).
சுயாட்சிப் பிரதேசங்கள் (Autonomous Regions) எனப்படும் பிரதேசங்களை உருவாக்கி சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யும் நாடுகளுக்கு இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. பப்புவா நியுகினியாவில் போகன்வில்லே (Bougainville) ஒரு சுயாட்சிப் பிரதேசமாக உள்ளது; பிலிப்பைன்ஸ் நாட்டில் முஸ்லிம்கள் வாழும் மின்டானோ பகுதி சுயாட்சிப் பிரதேசமாகும். தாஜிக்ஸ்தானில் Gorno-Badakhshan என்ற பகுதியும், உஸ்பெக்கிஸ்தானில் காரகல்பக்ஸ்டான் (Karakalpakstan) என்ற பகுதியும் சுயாட்சிப் பிராந்தியங்களாக உள்ளன.
முடிவுரை
ஜயம்பதி விக்கிரமரட்ண அதிகாரப் பகிர்வு, சுயாட்சி என்ற இரு வழிகளில் சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளைத் தீர்வு செய்வதற்கு உலக அளவில் வெவ்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்படும் அரசியல் தீர்வு முயற்சிகளை உதாரணங்களாகக் காட்டுகிறார். இக்கட்டுரையில் ஆழமான பிளவுகளை உடைய சமூகங்கள் (Deeply Divided Societies) பலவற்றையும், அச்சமூகங்கள் அதிகாரப் பகிர்வு (Devolution of Power), தன்னாட்சி (Autonomy) என்ற இருவழிகளில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுத்த முயற்சிகள் பற்றியும், எதிர்கொண்ட சவால்கள், வெற்றிகள், தோல்விகள் என்பன பற்றியும் ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.
