Arts
14 நிமிட வாசிப்பு

வணிக நகர்வுகளில் துணிவுடமையின் வகிபாகம் 

May 25, 2024 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு”

-திருக்குறள் (383)-

மு. வரதராசனார் விளக்கம் : காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

எமது வாழ்க்கையின் இன்றைய நிலையை இரண்டு விதமான நிகழ்வுகள் வடிவமைத்திருக்கும். முதலாவது, நுண் (Micro) அளவில் நாம் ஒவ்வொரு நாளும் செய்யும் செயல்கள், முடிவுகள், அதனால் வரும் விளைவுகள். இரண்டாவது, பெரிய (Macro) அளவில் நாம் எப்போதாவது செய்யும் விடயங்கள். இது எம்மையும் எமது சூழலையும் பெரியளவில் மாற்றி, வாழ்க்கையின் பாதையையும் மாற்றக் கூடியது.

இலங்கையில் 1950 – 1960 களில் நடந்த கல்வி முன்னேற்றம் இதற்குச் சிறந்த உதாரணம். 1970 களில், எனது ஆரம்பக் கல்வியை புற்றளை மகா வித்தியாலத்தில் படித்தேன். இது ஆரம்ப காலத்தில் ஓர் திண்ணைப் பள்ளிக்கூடமாகவே இருந்தது. முன்னைய காலத்தில் விவசாயம் மற்றும் வர்த்தகமே முக்கியமான தொழிலாக இருந்ததால், இப்படியான பள்ளிகளில் ஆரம்ப வாசிப்பும், சிறிது எழுத்துப் பயிற்சியும், கணக்குப் பாடமும், சமய நெறியும் கற்றுக்கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில், மிசனறிப் பாடசாலைகள் சிறப்பான கல்வியைப் போதித்ததால், அங்கு படித்தவர்கள் பல்கலைக்கழகம் போகும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. அதனை உணர்ந்த எமது முன்னோர்கள் புற்றளை மாதிரியான திண்ணைப் பள்ளிகளின் தரத்தை அதிகரிக்க வேண்டுமென்று, எதிர்கால முன்னேற்றத்திற்குத் தேவையான பல பாடங்களை அறிமுகப்படுத்தினார்கள். அதன் மூலம் கிராமங்களிலிருந்த திறமையுள்ள பலர் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. அந்தச் சிறிய சிந்தனை மாற்றம், பிற்காலத்தில் பல விஞ்ஞானிகள், வைத்தியர்கள் மற்றும் என்னைப் போன்ற தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க உதவியது. அன்று எமது முன்னோர்கள் எடுத்த துணிகரமான நகர்வுகள், இன்று எமது வாழ்க்கைத்தரத்தை உலகளாவிய அளவில் உயர்த்த உதவியாக இருந்தது.

எனது ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி’ வரையான பயணத்தை யோசித்துப் பார்த்தால், இப்படியான சில நிகழ்வுகளும், நான் அப்போது எடுத்த முடிவுகளும் எனது ஆரம்ப நிறுவனங்களை அமைக்கவும் அதனை வளர்த்து வெற்றிகரமாக மேம்படுத்தவும் உதவியாக இருந்தது என்பதை அறிய முடிகிறது. அல்லது, அப்படியான செயல்முறையே எனக்குத் தேவையானதாக இருந்திருக்கிறது. அவற்றுள் ஒரு துணிகரமான முடிவையாவது நான் எடுக்காமல் இருந்திருந்தால், நான் இந்த நிலைக்கு வந்திருப்பேனா என்பது சந்தேகமே. 

எனது வாழ்க்கையில் நான் எடுத்த சில துணிகரமான முடிவுகளையும், அவை எவ்வாறு எனது பிற்காலத்தை வடிவமைத்தது என்றும் இங்கு மேலும் கூறுகிறேன்.

ஆபிரிக்கப் பயணம்: 1989 ஆண்டு, ஈழத்திற்கு மிகக் கொடிய ஓர் காலமாக அமைந்தது. அப்போது பல முனைகளில் போர்களும், அதனால் இளைய பருவத்தினரின் எதிர்காலமும் திசையின்றிப் போய்க்கொண்டிருந்தது. நான் எடுக்க வேண்டிய உயர்தரப் பரீட்சை தள்ளிப்போடப்பட்டது. மீண்டும் பரீட்சை நடக்குமா என்ற சந்தேகமே இருந்தது. ஆனால் நான் பரீட்சைக்குத் தேவையான பாடங்களை முழுமையாகப் படித்து விட்டிருந்தேன். அப்போது ஆபிரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்த எனது அண்ணாவின் அறிவுரையின்படி, உயர்தரப் பரீட்சைக்குக் காத்திராமல் ஈழத்தை விட்டு வெளியேறி ஆபிரிக்கா சென்றேன். அப்படியான ஓர் முடிவு எனது வாழ்க்கையின் பாதையை முற்றாக மாற்றியது. அப்போது அந்த மாற்றம் பெரிய சுமையாகத் தெரிந்தது. நான் ஈழத்தில் தமிழில் உயர்தரம் படித்து, ஆபிரிக்காவில் ஆங்கிலத்தில் பரீட்சை செய்ய வேண்டியிருந்தது. ஆனாலும் துணிவாக அன்று எடுத்த முடிவு, அதன் பின் ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்று, பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் எடுக்க உதவியதுடன், அமெரிக்காவில் ஆரம்ப நிறுவனங்களை உருவாக்கவும் அடிக்கல்லாக இருந்தது. இதனால், கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்துவது முக்கியம் என நான் உணர்ந்து கொண்டேன்.

decision

திறந்த கதவும் எனது நகர்வும்: எனக்கு ஐக்கிய அமெரிக்காவின் மினசோற்றா பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு வாய்ப்புக் கிடைத்ததால், நான் அமெரிக்கா வந்தேன். எனது ஈழத்துக் கல்வி, பல்கலைகழகத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க உதவியது. ஆனால் எனக்கு அமெரிக்க வேலை அனுபவம் இல்லாததாலும், நான் சர்வதேச மாணவனாக இருந்ததாலும், பகுதி நேர வேலை எடுப்பது எனக்குக் கடினமாக இருந்தது. அதனால் நான் மிக மனக் கவலையடைந்தேன். ஓர் சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால், எனது பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் மிக நீளமாக இருக்கும். எனது முதற் பெயரையும், கடைசிப் பெயரையும் சேர்த்தால் ஆங்கிலத்தில் மொத்தமாக 28 எழுத்துகள் வரும். எனது பெயரைக்கூறி அழைக்க பேராசிரியர்கள் சிரமப்படுவார்கள். இக் காரணத்தினாலும், நான் வகுப்பில் நல்ல புள்ளிகள் எடுப்பதனாலும் பேராசிரியர்கள் என்னை நன்றாக அறிந்திருந்தார்கள்.

ஓர் நாள் நான் விரக்தியுடன், எனது மின்சாரவியல் பேராசிரியரிடம் சென்று, என்னை அறிமுகப்படுத்தி, எனது சூழ்நிலையை அவரிடம் கூறினேன். அவர் எனது திறமையை அறிந்திருந்தார்; அவரது நல்ல மனப்பான்மையினால், அவரது ஆய்வகத்தில் வேலை கொடுத்தார். நான் அவருடன் மூன்று வருடங்கள் வேலை செய்தேன். அப்போது பல தொழில்நுட்பங்களைக் அவரது குழுவினரிடமிருந்து கற்றுக் கொண்டேன். அவர் எனது மேற் படிப்பிற்கும் பரிந்துரை செய்து, எனக்கு உலகின் முன்னிலையான ‘Stanford University’ இல் கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார். நான் பேராசிரியரிடம் எனது நிலமையைச் சொல்லுவதற்காக கதவைத் திறந்த அந்தச் சிறு நகர்வு, எனது வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியது.

standford

வாடிக்கையாளரை முதன்மைப்படுத்தல்: நான் முதலில் வேலை பார்த்த நிறுவனம் ‘ரொக்வெல்’ என்னும் பெரிய நிறுவனம். ஆரம்பத்தில் எனது அணியினர், பெரியளவில் சிந்தித்து மிகச் சிக்கலான பொருட்களை உருவாக்க நினைத்தார்கள். அதில் பல அம்சங்கள்  இன்றைய கால கைத்தொலைபேசியில் இருப்பவை. எனது காலம் 30 வருடங்களுக்கு முந்தியது. அவர்களது யோசனை பெரிதாக இருந்தாலும், அவர்கள் வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடி முடிவு செய்யாததால் அந்தப் பொருட்களை சந்தைக்குக் கொண்டுவர முடியவில்லை. அதே நேரம் இன்னொரு சக அணி, வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடி ஓர் பொருளை உருவாக்கினார்கள். அந்த வரைதிட்டத்தில் எனக்கு ஆர்வம் உண்டாகியதால், நான் அந்த அணியில் சேர்ந்து, அந்தப் பொருளை உருவாக்கும் ஓர் முக்கிய உறுப்பினர் ஆனேன். அதன் மூலம் அந்தப் பொருளை வெற்றிகரமாக உருவாக்கி மில்லியன் கணக்கில் வியாபாரம் செய்தோம். அதனால் என்னை அவர்கள் அந்தக் குழுவிற்குத் தலைவர் ஆக்கினார்கள்; நான் முதலில் இருந்த குழுவைக் கலைக்கவும் முடிவு செய்தார்கள். இந்த அனுபவத்தினால், நான் வாடிக்கையாளர்கள் எவ்வளவு முக்கியம் என்று கற்றுக்கொண்டேன். அதை எனது பிற்கால வாழ்க்கையில் பயன்படுத்தி, எப்படியான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்று கற்றுக் கொண்டேன்.

சொகுசான வேலையைத் துறந்தேன்: நான் மேலே கூறியபடி, புதிய குழுவுடன் சேர்ந்து உருவாக்கிய தயாரிப்புப் பொருள், சாம்சங் (Samsung) போன்ற நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு உலகின் முதல் தலைமுறை நவீன கைத்தொலைபேசிகள் உருவாக்கப்பட்டன. அந்த நேரத்தில் நான் வேலை புரிந்த நிறுவனத்திலும், இன்னொரு நிறுவனத்திலும், மேற் பதவிகளுக்குப் போக சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அதனை நிராகரித்துவிட்டு, இருந்த வேலையையும் விட்டுவிட்டு, மனத் துணிச்சலுடன் சில நண்பர்களுடன் எனது முதலாவது ஆரம்பத் தொழில்நுட்ப நிறுவனத்தை ஆரம்பிக்க முடிவு செய்தேன். ஓர் ஆரம்ப நிறுவனத்தைத் தொடங்குவதற்கு பல விடயங்கள் அவசியம். அணி சேர்க்க வேண்டும், பண வியாபாரங்களில் முதலீடு செய்பவர்களிடம் எமது யோசனையில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும், உற்பத்திப் பொருள் இல்லாமலேயே எமது எதிர்கால வாடிக்கையாளர்களுடன் பேசி எமது யோசனைக்கு ஒப்புதல் வாங்க வேண்டும் எனப் பல கடினமான விடயங்கள் இருந்தன. இவற்றை எல்லாம் நாம் செய்வோம் என எங்களை நாங்களே நம்பி, எமது சொகுசான வேலையை விட்டுவிட்டு, ஆரம்ப நிறுவனம் ஒன்றைத் தொடங்க முடிவு செய்தமை ஓர் எல்லை தாண்டிய துணிச்சலே. இப்படியான துணிச்சலான செயலில் இறங்கியதால் தான், இன்று எனது வாழ்க்கைக் கதையை மன உறுதியுடன் கூறமுடிகிறது.

chess

நான் எனது தொழில் வாழ்க்கையை, அதாவது கடந்த முப்பது வருட அனுபவங்களை (உண்மையில் நான் ஐக்கிய அமெரிக்காவில் வேலை செய்யத்தொடங்கி இந்த மாதத்தோடு – மே. 2024 – சரியாக 30 வருடங்கள் ஆகிறது.) மேலே கூறியது போன்ற சில நிகழ்வுகளே, எனது வாழ்க்கையை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்ல மிகப் பெரிய பங்களிப்புகளைச் செய்திருக்கின்றன. மேலேயுள்ள திருக்குறளில் கூறியது போல், கல்வியே அடிக்கல்லை வைக்கும், காலம் தாமதிக்காத செயல்முறை சந்தையைச் சரியான நேரத்தில் கைப்பற்ற உதவும், ஆனால் இவற்றோடு அடுத்த நிலைக்குப்போக, துணிவுடமை மிக முக்கியம்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4537 பார்வைகள்

About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (1)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)