ஆங்கில மூலம் : கலன சேனரத்ன
இலங்கையின் சட்ட அறிஞர்களில் ஒருவரான கலன சேனரத்தின (LL.B, LL.M, PH.D) அவர்கள் ‘Democratic Governance and the Supreme Court in Sri Lanka’ என்னும் தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். இக்கட்டுரை Democracy and Democratisation in Sri Lanka : Paths, Trends and Imaginations என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் பகுதி 1 இல் (பக். 237 – 279) சேர்க்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துகளைச் சுருக்கிக் கூறி கட்டுரையைத் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் இத்தமிழ்க் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
நீதித்துறை, ஜனநாயக சமூகங்களில் மிக முக்கியமான வகிபாகத்தைப் பெறுகிறது. நீதித்துறை பிணக்குகளை விசாரித்துத் தீர்ப்புச் சொல்கிறது என்று அதன் பணியைக் குறுக்கிப் பார்க்கக் கூடாது. சட்டத்தின் ஆட்சியை (Rule of law) உறுதி செய்வதும், நாட்டு மக்களின் சுதந்திரங்களைப் பாதுகாப்பதும் நீதித்துறையின் கடமையும் பொறுப்புமாகும். அதன் மூலம் ஆளுகையானது (Governance) அரசியல் யாப்புக்கும், ஜனநாயகம் பற்றிய அடிப்படைத் தத்துவங்களுக்கும் இயைபுடையதாக அமைவதை நீதித்துறை உறுதி செய்கிறது. நாட்டின் நீதித்துறையிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது இதனையேயாகும். (பக் 237)
கட்டுரையின் தொடக்கத்தில் மேற்கண்டவாறு கலாநிதி கலன சேனரத்தின அவர்கள் நீதித்துறையின் வகிபாகம் பற்றிக் குறிப்பிடுகிறார். இலங்கையில் ஆளுகை முறையில் அடிப்படையான ‘முறைமை மாற்றத்தை’ (System Change) வேண்டி அரகலய கிளர்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இப் பின்னணியில், செப்டெம்பர் 2023 இல் இக்கட்டுரை எழுதப்பட்டது.
இலங்கையில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்குத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போது இலங்கையின் உயர்நீதிமன்றத்தின் நீதித்தீர்ப்புகள் எவ்வாறு அமைந்தன? ஜனநாயக ஆளுகை (Democratic Governance) பற்றிய தத்துவங்களிற்கு அமைவாக அத்திருத்தங்கள் அமைந்துள்ளனவா என்பதை அவை பரிசீலித்தனவா? அரசியல் யாப்புத் திருத்தங்களின் அரசியல் யாப்பு இயைபுடைமையைப் (Constitutionality) பரிசீலித்தனவா? ஆகியனவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. குறிப்பாக 4 ஆவது திருத்தம், 13 ஆவது திருத்தம், 17 ஆவது திருத்தம், 18 ஆவது திருத்தம், 19 ஆவது திருத்தம், 20 ஆவது திருத்தம் ஆகிய முக்கியமான சர்ச்சைக்குரிய திருத்தங்கள் பற்றி இக்கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
ஜனநாயக நாடுகளில் நீதித்துறைகளின் வகிபாகம்
மேற்குறிப்பிட்ட அரசியல் யாப்புச் சட்டத் திருத்தங்கள் பற்றி ஆராய்வதற்கு முன்னர் ‘Judiciaries in Democratic States’ என்னும் தலைப்பில் நான்கு பக்கங்களில் (239 – 242) ஜனநாயக அரசுகளில் நீதித்துறையின் வகிபாகம் என்ற விடயப்பொருள் குறித்து கட்டுரையில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது. அதன் சுருக்கத்தை எமது வார்த்தைகளில் கீழே தந்துள்ளோம்.
- வரலாற்று நோக்கில் பார்க்கும் போது நீதிமன்றம் பழமைவாத நிறுவனமாக (Conservative Institution) இருந்து வந்துள்ளதைக் காணலாம். குறிப்பாக பிரித்தானியாவில் விக்டோரியன் காலத்தில் (Victorian Age) நீதிமன்றங்கள் சட்ட ஆக்கத்துறையின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தாது, அதற்குப் பணிந்து செயற்படுவனவாக இருந்தன. சட்டத்தை அரசியலோடும், கொள்கை வகுத்தலோடும் இணைத்துப் பார்ப்பதற்குப் பதிலாக அதனைச் ‘சட்டம்’ என்ற எல்லைக்குள் மட்டும் வைத்துப் பார்க்கும் நோக்குமுறையைப் பிரித்தானிய நீதிமன்றங்கள் கடைப்பிடித்தன. இதனைச் சட்டத்தின் அர்த்தத்தை மட்டும் (Plain Meaning) பார்த்தல் எனவும், சட்டத்தின் நேர்க்காட்சிவாத விளக்கம் (Positivist Interpretation of the Law) எனவும் கூறலாம். சட்டத்திற்கு வெளியே சென்று அதற்குப் பின்னால் உள்ள அரசியலை (Politics) அல்லது கொள்கை வகுத்தலை (Policy Making) பரிசீலிப்பதற்கு தயக்கம் காட்டும் இப்போக்கு பழமைவாத (Conservative) அணுகுமுறையாகும். இதற்கு மாறாக நவீன காலத்தில் ஜனநாயக நாடுகளில் நீதிமன்றங்கள் முற்போக்கான, ஆக்கபூர்வமான கொள்கை நோக்குடைய (Progressive Creative and Purposive) விளக்கங்களை வழங்கி வருகின்றன. பிரித்தானிய காலனியத்தின் மரபில் தோன்றிய வரலாற்றுப் பின்புலத்தையுடைய இலங்கையில், நீதிமன்றங்கள் பழமைவாத நோக்குடையனவாகச் செயற்பட்டதைக் காணலாம்.
- நீதிமன்றங்களின் பழைமைவாத நோக்கு விமர்சனத்திற்குள்ளானது. நவீன காலத்தில் அரசுகளின் செயற்பாட்டு எல்லைகள் விரிவடைந்தன. அரசுகளின் எல்லைக்குள் வாழும் மக்கள் பல்லினத்தன்மை உடையவர்களாக மாறினர். அரசியல் யாப்புச் சட்டங்களை விளக்கியுரைப்பதில் மரபுவழிப்பட்ட பழமைவாதம் ஏற்புடையதல்ல எனவும், சட்டத்தை அரசியலில் இருந்து வேறாக்கிப் பார்ப்பது தவறு என்றும் கூறப்பட்டது.
- வளர்ச்சியடைந்து வரும் பின்காலனித்துவ அரசுகளில் (Post Colonial States) ஜனநாயக மாதிரி ஆளுகை முறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. சனத்தொகைப் பெருக்கம், பொருளாதாரப் பிரச்சினைகள், அரசுகளின் சர்வாதிகாரப் போக்கு ஆகியன நீதிமன்றங்கள் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் செயற்படும் தேவையை உணர்த்தியது. சமூகப் பன்மைத்துவமும் (Social Plurality) இனத்துவ பண்பாட்டுப் பன்மைத்துவமும் (Ethnic and Cultural Plurality) நீதிமன்றங்கள் தலையிட்டுச் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேவையை உருவாக்கியது. இப்பின்னணியில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் நடத்தல் (The Doctrine of Self-restraint) என்னும் தத்துவம் பொருத்தமற்றது என்ற கருத்து எழுந்தது.
- பழமைவாத அணுகுமுறை, முற்போக்கு அணுகுமுறை என்னும் இரண்டு எதிரெதிர் துருவ நிலைகளில் நீதிமன்றுகள் செயற்படுகின்றன; நீதிபதிகளிலும் இரண்டு வகையானவர்கள் உள்ளனர் என்பது யதார்த்த நிலைக்குப் பொருத்தமானதாகக் காணப்படுகிறது. நீதிபதிகள் சில வேளைகளில் சட்டத்தின் கண்கொண்டு பார்ப்பவர்களாக இருக்கலாம்; ஆனால் அவர்கள் வேறு பல சந்தர்ப்பங்களில் முற்பாக்கான ஆக்கபூர்வமான சட்டத்தீர்ப்புகளையும் வழங்கியுள்ளனர். நீதிபதிகள் எப்பொழுதுமே ஒரேயொரு நோக்குமுறை என்ற கண்ணாடி ஊடாக அரசியல் சட்டப் பிரச்சினைகளைப் பார்ப்பதில்லை. அவர்கள் முன்னால் பரிசீலணைக்கு வரும் சட்டப் பிரச்சினையின் தன்மையைப் பொறுத்து அவர்களின் நோக்குமுறை வேறுபடுவதுண்டு. ஒரு பிரச்சினையை ஒற்றையாட்சி அரசியல் அமைப்புப் பின்புலத்தில் ஒரு நீதிபதி அணுகுவதற்கும் சமஷ்டியாட்சிப் பின்புலத்தில் அணுகுவதற்கும் வேறுபாடு இருக்கும். இதனால் நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் பல்வேறு நோக்குமுறைகள் வெளிப்படுவதைக் காணலாம்.
- இந்தியா, தென்னாபிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் நீதிமன்றங்களின் அரசியல் யாப்புச் சட்டத் தீர்ப்புகளை ஒப்பிட்டு ஆராயும் போது பல்வகையான நோக்கு முறைகள் வெளிப்படுவதைக் காணலாம். அத்தோடு ஒரு குறிப்பிட்ட நாட்டை எடுத்து அந்நாட்டின் நீதிமன்றங்கள் அரசியல் யாப்புத் தீர்ப்புகளை என்ன நோக்கில் அணுகின எனப் பார்க்கும் போதும், காலத்திற்குக் காலம் அணுகுமுறைகளில் வேறுபாடுகளும் பல்வகைத் தன்மையும் (Diversity of Approaches) காணப்படுவதை அவதானிக்கலாம்.
செயல்துடிப்புடைய நீதித்துறை (Activist Judiciary)
மேலே குறிப்பிட்டவாறு நீதிமன்றுகள் பல்வேறு நோக்குமுறைகளை அரசியல் சட்டத் தீர்ப்புகளில் பிரயோகிப்பதை எடுத்துக் கூறும் கலன சேனரத்தின அவர்கள் ‘செயல் துடிப்புடைய நீதித்துறை’ (Activist Judiciary) என்னும் எண்ணக்கருவை அறிமுகம் செய்கிறார். (பக் 24)
செயல்துடிப்புடைய நீதித்துறைகள் வளர்முக நாடுகளின் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளில் தலையீடு செய்து மக்கள் சார்பான நீதித் தீர்ப்புகளை வழங்கி வருகின்றன. இலங்கை போன்ற வளர்முக நாடுகளின் சமூகங்கள் பிளவுபட்ட அரசியல் சமூகங்களாக (Fractured Polities) உள்ளன. பெரும்பான்மைவாதம் (Majoritarianism) பொருளாதாரப் பின்னடைவு, வறுமை, ஊழல், சர்வாதிகாரம் என்பன இந்நாடுகளில் தொடர்ச்சியாக அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கி வருகின்றன. இப்பின்புலத்தில் இந்நாடுகளின் உயர்நீதிமன்றுகள் ‘செயல்துடிப்புடைய நீதித்துறை’ என்னும் வகிபாகத்தை எடுக்கும் அவசியம் ஏற்பட்டது. அஹரன் பரக் (Aharan Barak) என்பவர் நீதிபதி ஒருவரின் பணி எத்தகையது என்பதைப் பின்வருமாறு குறிப்பிட்டார்:
“ஒரு ஜனநாயக முறைமையின் கீழ் நீதிபதி ஒருவரின் கடமைப் பொறுப்பு, அரசியல் யாப்பையும் ஜனநாயகத்தையும், காப்பாற்றுவதாகவே இருத்தல் வேண்டும்“ (The main role of the judge in a democracy is to maintain and to protect the constitution and democracy (Barak, 2006:22)
இக்கூற்றை மேற்கோள் காட்டும் கலன சேனரத்தின அவர்கள் பல நாடுகளில் ‘செயல்துடிப்புடைய நீதித்துறை’ தோற்றம் பெற்றுள்ளது எனக் குறிப்பிடுகிறார். இவ்விதமாக, நீதிமன்றங்களின் மரபுவழிப் பாதையில் இருந்து விலகிச் செல்லும் போக்கை, பிறழ்நிலைப் போக்கு என்றோ அல்லது நடக்க முடியாத ஒரு நிகழ்வு என்றோ (Abnormality or Impossibility) கருத முடியாது என்றும் குறிப்பிடுகிறார். செயல்துடிப்புடைய நீதித்துறை பற்றித் தெரிந்து கொள்வதற்கு இலங்கையின் அயல் நாடான இந்தியா சிறந்த உதாரணமாகும். அங்கு 1970 களில் செயல்துடிப்புடைய நீதித்துறை தோன்றியது. பல நீதிபதிகளின் முன்னுதாரணமான தீர்ப்புகள் சட்டவியலை (Jurisprudence) வலுப்படுத்தியுள்ளன. நீதிபதிகள் புத்தாக்கமான நீதித் தத்துவங்களை முன்வைத்தனர்; புதுமையான விசாரணை நுட்பங்களையும் நடைமுறைகளையும் (Investigative Techniques and Mechanisms) நீதித்துறையில் புகுத்தினர். அந்நீதிபதிகள் சமூகச் செயற்பாட்டு வழக்காடுதல் (Social Action Litigation) என்னும் எண்ணக்கருவை உருவாக்கினர். இதனை ஆங்கிலத்தில் ‘Public Interest Litigation’ என்ற பிரபலமான சொற்தொடரால் அழைப்பர். பொதுநலன் சார்ந்த வழக்காடுதல் என்பது இதன் பொருளாகும். மக்களின் முறையீடுகளை நீதிமன்றுகள் நேரடியாகப் பெற்று நடவடிக்கையில் இறங்கும் இச்செயல்முறையை ஐகதிஷ் பகவதி, உபேந்திர பக்சி போன்ற நீதிபதிகள் இந்தியாவில் செயற்படுத்தினர். இந்திய நீதிமன்றங்கள் பொதுநலன் சார்ந்த வழக்குகள் என்னும் செயல்முறை ஊடாக ஜனநாயகத்தின் அடிப்படை நியமங்களுக்கும், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் மாறான நிருவாகத்துறையின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தின. பல வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள் இந்திய அரசியல் யாப்பிற்குப் புதுமையான முற்போக்கான அரசியல் சட்ட விளக்கங்களைக் கொடுத்தன. கோலக் நாத் எதிர் பஞ்சாப் அரசு (Golaknath vs the State of Punjab) கேசவானந்த பாரதி எதிர் கேரள அரசு (Kesavananda Bharathi vs the State of Kerala) என்னும் இரு வழக்குத் தீர்ப்புகள் பிரசித்தமானவை. இத்தீர்ப்புகள் ‘அடிப்படைக் கட்டமைப்பு’ என்னும் சட்டவியல் தத்துவத்தை விளக்கிக் கூறி இந்திய அரசியல் யாப்பிற்கு முற்போக்கான விளக்கத்தைக் கொடுத்தன. ஆங்கிலத்தில் ‘Basic Structure Doctrine’ என அழைக்கப்படும் இத் தத்துவம் இந்திய அரசியல் யாப்பு மாற்ற முடியாத சில அடிப்படைகளைக் கொண்ட கட்டமைப்பை (Unalterable Basic Structure) உடையது என விளக்கம் கொடுத்தது.
அவ்வாறான மாற்றமுடியாத அடிப்படைகளாக, அரசியல் யாப்பின் மேலாண்மை (Constitutional Supremacy), மதச்சார்பின்மை (Secularism), ஜனநாயகம் (Democracy), சமஷ்டிமுறை (Federalism) என்பன அமைந்துள்ளதாக நீதிமன்றுகள் விளக்கம் கொடுத்தன. இந்தத் தீர்ப்புகள் இந்தியாவின் அரசியல் வரலாற்றின் மிக முக்கியமான சூழமைவுகளில் வழங்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளாகும் என கலன சேனரத்தின அவர் விளக்கிக் கூறுகிறார். (பக் 241 – 242)
இந்திய நீதிபதிகள் பலர் ஜனநாயக ஆளுகையைப் பாதுகாப்பதற்காக (To safeguard the fundamentals of democratic governance) செயற்பட்டனர். இதற்காக அவர்கள் செயற்பாட்டாளர் வகிபாகம் (Activist Role) என்னும் கடினமான சவால்மிக்க பணியை ஏற்க வேண்டியிருந்தது. நீதிபதி V.R. கிருஷ்ண ஐயர் இச்சவால்மிக்க பணி பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார்: ‘To transform the supreme court of India into the supreme court for Indians was the challenge” (Legally Speaking’ என்ற நூல் 2003:217). இதன் பொருள் : இந்தியாவின் உச்ச நதிமன்றத்தை இந்திய மக்களுக்கான உச்ச நீதிமன்றமாக மாற்றும் சவால்மிக்க பணியை நீதிபதிகள் ஏற்றனர்.
இந்திய அரசியல் வரலாற்றின் நெருக்கடிமிக்க காலத்தில் இந்திய நீதித்துறை ஜனநாயக ஆளுகையின் அடிப்படைத் தத்துவங்களை பாதுகாக்கும் முறையில் செயற்பட்டதைக் காணலாம். (பக் 242)
இலங்கையின் உயர்நீதிமன்றம்
இலங்கையின் நீதித்துறையின் அதிஉயர் நிலையில் உள்ளதான இலங்கையின் உயர் நீதிமன்றம் (The Supreme Court of Sri lanka) நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தை உடையது. இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்பின் முதன்மையிடத்தில் (At the Apex of Judicial Structure) இருக்கும் உயர்நீதிமன்றம் இலங்கையில் ஜனநாயக ஆளுகையும் மனித உரிமைகளும் காப்பாற்றப்படுவதை உறுதி செய்யக்கூடிய அதிகாரமும் தகைமையும் உடைய மன்றாக விளங்குகிறது. உயர் நீதிமன்றம் அரசியல் யாப்பை விளக்கிக் கூறும் (Sole Power to Interpret the Constitution) அதிகாரத்தை உடையது; அத்தோடு பாராளுமன்றம் இயற்றவிருக்கும் சட்ட மசோதாவினை ஆராய்ந்து அம்மசோதா அரசியல் யாப்புக்கு முரண்பட்டதாக உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் (Test the Constitutionality of the Proposed Legislation) அதிகாரமும் உயர்நீதிமன்றத்திற்கு உரியதாகும். இதனைவிட அடிப்படை மனித உரிமைகள் வழக்குகளை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் உயர் நீதிமன்றத்திற்கு மட்டுமே (The sole jurisdiction to hear fundamental rights cases) உள்ள அதிகாரம் ஆகும். இக்காரணங்களினால் பொது மக்களின் உரிமைகளும், நாட்டில் ஜனநாயக ஆளுகையும் (Democratic Government), அரசாங்கத்தின் நிருவாகத்துறையினாலும், சட்ட ஆக்கத் துறையினாலும் மீறப்பட்டுப் பறிக்கப்படும் ஆபத்து தோன்றும் போது, அவற்றைக் காப்பாற்றும் பொறுப்பும் அதிகாரமும் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது. அவ்வாறான ஆபத்துகள் எழும் சந்தர்ப்பங்களில் பிரஜைகள் நீதி கேட்டு விண்ணப்பிக்கக்கூடிய மன்றமாக உயர் நீதிமன்றம் விளங்குகிறது. பிரதம நீதியரசர் பசநாயக்க அவர்கள் 1964 ஆம் ஆண்டில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “நிருவாகத்துறை அலுவலர் ஆட்சியின் கொடுங்கோன்மை, சர்வாதிகாரம் என்பனவற்றிற்கும் அதன் வரம்பு மீறிய செயல்களுக்கும் எதிரான ஒரேயொரு பாதுகாப்பாக நீதித்துறை மட்டுமே உள்ளது.” (“To the people, the judiciary is the sole protection against tyranny, autocracy, and into intemperate acts of the bureaucracy”) (இக்கூற்று கட்டுரையாசிரியரால் A.R.B.Amarasinghe அவர்களின் ‘The Supreme Court of Sri Lanka the First 185 Years’ என்னும் நூலில் (1986:105) இருந்து பெறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
மேற்படி கூற்றில் கூறப்பட்டுள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முறையில் இலங்கையின் நீதித்துறை செயற்பட்டுள்ளதா? குறிப்பாக அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக இலங்கையின் நீதித்துறையின் செயற்பாடும் அது தொடர்பான சட்டவியல் பற்றிய விடயமும் பல ஆய்வாளர்களால் விரிவாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்தல் (Minority Rights Protection) என்ற விடயத்தில் உயர்நீதிமன்றம் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டது என்ற விமர்சனத்தை The Judicial Mind in Sri Lanka: Responding to the Protection of Minority Rights (2014) Law and Society Trust, Colombo என்னும் நூலின் ஆசிரியர்களான டி அல்மெய்டா குணரத்தினவும் பிறரும் முன்வைத்துள்ளனர். இலங்கையின் உயர்நீதிமன்றம் செயற்பாட்டு வகிபாகத்தை (Activist Role) எடுக்க வேண்டும் எனக் Coomaraswamy (1987), Edirisinghe (1989) ஆகியோரின் ஆய்வுகளில் எடுத்துக் கூறப்பட்டிருந்தது. ஆயினும் இலங்கையின் நீதிமன்றங்கள் கடந்த காலத்தில் முற்போக்கான முறையில் செயற்பட்டுள்ளதைக் காணலாம் (பக் 243). சில வகை உரிமைகளின் பாதுகாப்பு விடயத்தில் நீதிமன்றுகள் மிகவும் முற்போக்கான அணுகுமுறையைக் கடைப்பிடித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (Udagama 2003:297)
மேற்குறித்தவாறு பிற ஆய்வாளர்களின் மதிப்பீடுகள் பற்றிக் கருத்துரைக்கும் கலன சேனரத்தின அவர்கள் 1978 அரசியல் யாப்புத் தொடர்பான முக்கிய திருத்தச் சட்டங்கள் பற்றி ஆராய்ந்து தமது மதிப்பீட்டைத் தெரிவிக்கும் முறையில் கட்டுரையின் மிகுதிப் பகுதியை அமைத்துள்ளார். அரசியல் யாப்பின் 4 ஆவது திருத்தம் முதல் 20 ஆவது திருத்தம் வரையான திருத்தங்கள் ஏறக்குறைய நாற்பது ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டவை. ஆய்வுக்காக 4,13,17,18,19,20 ஆகிய 20 அரசியல் யாப்புத் திருத்தங்களே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. திருத்தங்களை ஆராய்ந்த நீதிமன்று உயர்நீதிமன்றமே ஆயினும், திருத்தத்தை ஆராய்ந்த நீதிபதிகள் குழு (The Bench of Judges) வெவ்வேறானவை. நீதிமன்றத்தின் தீர்மானத்திற்காக முன்வைக்கபட்ட காலமும், முன்வைக்கப்பட்ட வாதங்களின் வரலாற்று அரசியல் பின்புலங்களும் வேறுபட்டனவாக இருந்தன. இவற்றைக் கருத்தில்கொண்டு ஒவ்வொரு திருத்தங்கள் பற்றிய நீதிமன்றத் தீர்ப்புகளை ஆராய்தல் வேண்டும்.
1978 அரசியல் யாப்பிற்கான 4 ஆவது திருத்தம்
அரசியல் யாப்புக்கான 4 ஆவது திருத்த மசோதா ஜே.ஆர். ஜயவர்த்தன அரசாங்கத்தால் 1982 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. ஜே.ஆர். ஜயவர்த்தன அப்போது தான் (ஒக்டோபர் 1982) ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். 4 ஆவது திருத்த மசோதா 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை (Term of Office) 6 ஆண்டுகள் நீடிப்புச் செய்து, அப்பாராளுமன்றம் 1989 வரை பதவியில் தொடரலாம் என முன்மொழிந்தது. அதாவது 1983 ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த பதவிக்காலத்தை மீண்டும் பொதுத் தேர்தலை நடத்தாமலேயே மேலும் 6 ஆண்டுகள் தொடருவதற்கு வழி செய்வதே ஜே.ஆர். ஜயவர்த்தனவின் திட்டமாகும். இத்திருத்தம் நிறைவேறியதும் 1977 இல் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மேலும் 6 வருடங்கள் பதவியில் தொடர்வார்கள். இந்தப் பிரேரணை ஜனநாயக ஆளுகையின் அடிப்படை ஜனநாயகத் தத்துவங்களையும், மக்களின் இறைமையையும், உரிமைகளையும் மீறுவதாக அமைந்தது. ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் மக்களின் சம்மதத்துடன் (Consent) இருக்க வேண்டும என்பதே 1931 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சர்வசன வாக்குரிமையின் அடிப்படைக் கருத்தாகும். ஆகையால் 4 ஆவது திருத்தச் சட்டம் பற்றிய தனது முடிவைத் தெளிவாகக் கூறுவதற்கும், அது பற்றித் தனது விமர்சனக் குறிப்புகளைப் பதிவு செய்வதற்கும் உயர் நீதிமன்றத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன் தலைமையிலான 7 நீதிபதிகளைக் கொண்ட மன்று தனது தீர்மானத்தை அறிவித்தது. ‘The majority of this court is of the view that the period of the first parliament may be extended as proposed by this draft bill………’ என ஒரு நீண்ட வசனத்தைக் கொண்ட ஒரு பந்தியில் தனது தீர்மானத்தை உயர்நீதிமன்றம் அறிவித்தது (SLR 82 (2) 787 – 758). பண்டாரநாயக்க எதிர் சட்டஅதிபதி நாயகம் (அட்டர்ணி ஜெனரல்) என்னும் வழக்கின் சுருக்கமான சிறிய பந்தியில் அமைந்துள்ள தீர்ப்பின் உள்ளடக்கத்தை பின்வருமாறு தமிழில் விளக்கிக் கூறலாம்:
- முதலாவது வாக்கியம், 7 பேரில் பெரும்பான்மையினர் திருத்த மசோதாவிற்குச் சம்மதம் தெரிவித்தனர் எனக் கூறுகிறது.
- ஆகையால் நீதிபதிகளில் சிலர் மசோதாவின் சட்ட வலிதுடைமை பற்றிச் சந்தேகம் கொண்டிருந்தனர்; தம்முடைய சம்மதத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை என்பது உட்கிடையாக (Implied) அமைந்துள்ளது.
- திருத்த மசோதா அரசியல் யாப்பின் முக்கிய ஏற்பாடுகளை மீறுவதாக இருந்தது என்பதும், அதனால் சர்வசன வாக்கெடுப்பின்படி சம்மதத்தைப் பெற்றால் அன்றி நிறைவேற்றப்பட முடியாது என்பதும் வெளிப்படை.
- இத்தீர்மானத்திற்கான காரணங்களை நீதிமன்றம் கூறவில்லை. ஜனநாயக ஆளுகையின் அடிப்படைத் தத்துவங்களை மீறுவதாக மசோதா அமைந்திருப்பதை நீதிமன்று பரிசீலனை செய்து தனது கருத்துகளைக் கூறவில்லை.
- 4 ஆவது திருத்தம் அரசியல் யாப்புக்கு முரணானது, அதனை மீறுவது என்பதையும் அத்தகைய மீறல் ஏன், எவ்வாறு இடம்பெறுகிறது என்பதையும் நீதிமன்றம் கூறத் தவறியது. அரசியல் யாப்பு மீறல் உட்கிடையானது. (The court did not say why or how the proposed bill violated the constitution the violation was implied)
உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்திற்கான காரணங்களை (Reasons for Determination) ஏன் கூறவில்லை என வினவும் ஆட்சேபனை மனுவை பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க உடேனே தாக்கல் செய்தார். தீர்மானத்திற்கான காரணங்களை நீதிமன்று கூறியிருக்க வேண்டும். காரணங்கள் கூறப்படாததால் தீர்மானம் வலிதற்றது என மனுதாரர் தெரிவித்திருந்தார். (The Petitioner Felix Dias Bandaranaike contended that the court’s determination was invalid, because inter alia, the determination was not accompanied by reasons. Bandaranaike vs Attorney general SLR 82(2),788)
இம்மனுவை ஆராய்ந்த நீதிபதி எஸ். சர்வானந்த தலைமையிலான மூவர் கொண்ட நீதிமன்று தனது கருத்தை (Response) அறிவித்தது.
மூவர் கொண்ட நீதிமன்றம் மனுதாரரின் வாதங்களை நிராகரித்தது. குறித்த மசோத அரசியல் யாப்புக்கு முரணானது என்ற சந்தேகம் 7 நீதிபதிகளில் எவருக்கும் இருக்கவில்லை. அவர்கள் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நீடிக்கப்பட முடியுமா அல்லது நீடிக்கப்பட முடியாத என்பதில்தான் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். ஆகவே நீதிபதிகளிடையே சந்தேகம் இருந்தது என்ற எடுகோளின்படி அமையும் மனுதாரரின் வாதங்கள் பொருத்தமற்றவை என நீதிமன்றம் கருத்துரைத்தது. (The court responded………… by stating that neither the majority nor the minority had any doubt that the bill was inconsistent with the constitution. The difference of opinion was grounded on the question whether the period of the first parliament could be extended as proposed by the draft bill. Hence arguments based on the supposition of the existence of such a doubt are irrelevant’ Bandaranaike Vs attorney General SLR 82(2), 792)
4 ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் என்னும் ஜனநாயக விரோதமான நடவடிக்கையை அன்றைய அரசாங்கம் மேற்கொண்ட போது நீதிமன்றின் எதிர்வினையும், அதன் அணுகுமுறையும் அதன் பழமைவாத நோக்கை எடுத்துக் காட்டுகிறது எனக் கலன சேனரத்தின கருத்துரைக்கின்றார். அவர் கூற்று வருமாறு:
“The….. approach of the court is an unfortunate one; especially given that the entire bench had not entertained any doubt that the bill was inconsistent with the constitution. It was a difference of opinion regarding the procedure of extending the term of the parliament that divided the court into a majority and minority. Yet, the court does not consider it necessary to elaborate on its decision. This paints the court in an extremely conservative light”
இக்கூற்றின் பொருள் : “நீதிமன்றின் அணுகுமுறை துரதிஷ்டவசமானது. நீதிபதிகள் குழு குறித்த மசோதா அரசியல் யாப்புக்கு முரணானது என்பது பற்றி எவ்வித ஐயத்தையும் கொள்ளவில்லை. பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடித்தல் பற்றிய நடைமுறை தொடர்பாகவே அவர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. நீதிமன்றம் தனது முடிவை விளக்கிக் கூறுதல் அவசியம் என்றும் கருதவில்லை. நீதிமன்றின் இம்முடிவு அதன் பழமைவாதத்தையும், எதிர்மறை அணுகுமுறையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது“
”ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சியில் ஜனநாயகத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட தாக்குதல் நடைபெற்றபோது உயர்நீதிமன்றம் எதுவும் கூறாது மௌனம் காத்தமை வருத்தத்திற்குரியது. உயர்நீதிமன்றம் கடுமையாக எதனையும் கூறாமல்விட்டது ஜே.ஆர். ஜயவர்த்தனவிற்கு நன்மை தருவதாக அமைந்தது. அவர் தேர்தலை நடத்தாமல் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிக்கலாமா என மக்களைக் கேட்டார். சர்வசன வாக்கெடுப்பை நடத்தினார். அவ்வாறு பதவிக்காலத்தை நீடிப்பதன் சட்ட வலிதுடமை (Legitimacy) கேள்விக்குரியதாக இருந்த போதும், பெரும்பான்மை மக்கள் பதவிக்காலத்தை நீடிப்பதற்குச் சம்மதத்தை வழங்கினர். இதனையடுத்து ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் ஜனநாயக விரோத சர்வாதிகார ஆட்சியென்னும் சரிவுப்பாதையில் நாடு சறுக்கிச் செல்வதை எடுத்துக் காட்டின என கலன சேனரத்தின கருத்துரைக்கின்றார் (பக் 248).” (தமது இக்கருத்தை ராஜன் கூல் அவர்களின் 2001 ஆம் ஆண்டு நூல் Sri Lanka : The Arrogance of Power – Myths, Decadence and Murder பக் 90 – 94 ஆதாரப்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார்.)
13 ஆவது அரசியல் யாப்புத் திருத்தம்
அடுத்ததாக 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பிற்குக் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் குறித்து உயர்நீதிமன்றத்தின் எதிர்வினை எவ்வாறு அமைந்தது என்பதை கலன சேனரத்தின அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார்.
1978 அரசியல் யாப்பிற்குக் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் யாவற்றிலும் 13 ஆவது திருத்தமே மிகுந்த சர்ச்சைக்குரியதாகவே அமைந்தது. இத்திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்ட வரலாற்றுப் பின்புலம் நாம் எல்லோரும் அறிந்ததொன்றே. ஆயினும் அவ்வரலாற்றுப் பின்னணியைப் பற்றிக் கலன சேனரத்தின குறிப்பிடும் கருத்துகளைக் கவனத்தில் கொள்வது அவசியம்.
- தமிழ் மக்கள், குறிப்பாக வடக்குக் – கிழக்கு மக்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதலாக தமது குறைகளிற்கு நிவாரணம் கோரியும், தமது அரசியல் பிரச்சினைகளுக்கு சமஷ்டி முறையிலான தீர்வு வேண்டும் என்றும் கேட்டுவந்தனர்.
- சமஷ்டிக் கோரிக்கை 1976 இல் தனிநாட்டுக் கோரிக்கையாக மாற்றமுற்றது. இதனால் முரண்பாடுகள் தீவிரம் பெற்றன.
- 1980 களில் ஏற்பட்ட பிரச்சினைகள் – நிகழ்வுகளின் தொடர்ச்சி, அரச ஆதரவுடன் கூடிய தமிழர் மீதான 1983 ஜீலை வன்முறையில் (Tamil Pogrom of July 1983) முடிவுற்றது.
- இலங்கையின் உள்நாட்டு அலுவல்களில் இந்தியாவின் தலையீட்டிற்கு இது வழிவகுத்தது.
- இவ்வரலாற்றுப் போக்கில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு 1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை உடன்படிக்கையாகும்.
- இந்திய – இலங்கை உடன்படிக்கையின்படி இலங்கை அரசு மாகாணசபை முறையை உருவாக்குவதென பொருந்திக் கொண்டது. குறிப்பாக வடக்கு மாகாணத்தினதும் கிழக்கு மாகாணத்தினதும் தேவைகளை கருத்தில் கொண்டு மாகாணசபை முறையை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு (Sri Lankan State) பொருந்திக் கொண்டது.
நீதிமன்றின் முன்னால் பரிசீலனைக்கு வந்துள்ள சட்டத் திருத்தத்தின் அரசியல் வரலாற்றுப் பின்புலம் கலன சேனரத்தின அவர்களால் அழுத்தம் கொடுத்து மேற்கண்டவாறு விபரிக்கப்பட்டுள்ளது. (பக் 248)
13 ஆவது திருத்தம் மத்திய அரசாங்கத்தின் சட்டவாக்க அதிகாரத்தை மாகாணசபைகளுக்குப் பகிர்ந்தளிப்பது (Devolving legislative powers held by the centre to the provincial councils) என்பது முக்கியமானது. இதனைவிட 13 ஆவது திருத்தம் தமிழ்மொழியை உத்தியோக மொழியாக அங்கீகரிப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது.
13 ஆவது திருத்தம் இந்தியாவின் அரைச் சமஷ்டி முறையின் மாதிரியில் அமைந்த அதிகாரப் பகிர்வை இலங்கையில் புகுத்துவதோடு, இலங்கையின் ஆட்சிமுறைக் கட்டமைப்பை முழுமையாக மாற்றுவதாகவும் அமைந்தது. இக்கருத்தைக் கூறும் கூற்று வருமாறு:
“Modelled on the quasi – federalist power – sharing framework in India, the 13th amendment bill promoted unprecedented reformation of the entire state structure of governance in Sri Lanka” (பக். 249)
தொடர்ந்து இது பற்றிக் கூறும் கலன சேனரத்தின பின்வருமாறு குறிப்பிடுகிறார். சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் இடம்பெற்ற சீர்திருத்தவாத ஜனநாயக அரசுத்தலையீடு யாவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த அரசுத் தலையீடு இது (It was the most significant reformist and democratic intervention since independence). இந்த அரசமைப்புச் சீர்திருத்தம் மத்தி (Centre), சார்புப் பிராந்தியம் (Periphery) என்ற நிலைகளில் ஆட்சி முறையில் சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் நோக்கத்தை உடையதாக அமைந்தது.
13 ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தின் அரசியல் யாப்பு சட்ட வலிதுடமை (Constitutionality) பற்றித் தீர்மானிப்பதற்காக 9 நீதிபதிகள் கொண்ட மன்று (Bench of 9 Judges) அமைக்கப்பட்டது. பிரதம நீதியரசர் எஸ். சர்வானந்தா இதற்குத் தலைமை தாங்கினார். முறையீடுகளை (Petitions) விசாரணை செய்த மன்றின் நீதிபதிகளில் நால்வர் ஒரு முடிவையும், வேறு நால்வர் மாறுபட்ட இன்னொரு முடிவையும் முன்வைத்தனர். இதனால் ஏற்பட்ட சிக்கல் நிலையை ‘The judges were evenly split in their decision’ (பக் 249) எனக் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார். இந்தச் சிக்கல் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
”பிரதம நீதியரசரும் வேறு மூவருமாக நால்வர் 13 ஆவது திருத்த மசோதா அரசியல் யாப்புக்கு அமைவானது எனவும், ஆகையால் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் இம் மசோதாவைச் சட்டமாக இயற்ற முடியும் எனக் கூறினர். ஏனைய நால்வர் மாறுபட்ட கருத்தைக் கூறினர். அவர்களின் கருத்துப்படி குறித்த மசோதா அரசியல் யாப்பினை மீறுவதாக உள்ளது; ஆகையால் சர்வசன வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட்டு மக்கள் சம்மதத்தைப் பெற்ற பின், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் சட்டமாக இயற்றப்படலாம் எனக் கூறினர்.
ஒருவர் மட்டும் வித்தியாசமான முடிவைத் தெரிவித்தார். அரசியல் யாப்பின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்தும், சிலவற்றை நீக்கியும், 13 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற முடியும்; சட்டமாக இயற்ற முடியும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் அவரது ஆலோசனையையும் உட்படுத்திய 5 நீதிபதிகளின் முடிவு சாதகமானதாக அமைந்தது. நால்வர் தமது மாறுபட்ட கருத்தையும் முடிவையும் பதிவு செய்தனர். அரசாங்கம் 5 நீதிபதிகள் முடிவின்படி அரசியல் யாப்பில் திருத்தங்களைச் செய்து 13 ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது.
மேற்தோற்றத்தில் பார்த்தால் நீதிமன்றம் முற்போக்கான தீர்மானத்தை எடுத்தது. இலங்கையின் ஒற்றையாட்சி முறைக்குள் (அரசியல் யாப்பின் 2 ஆம் உறுப்புரை) அதிகாரப் பகிர்வைச் சாத்தியமாக்கும் மாகாணசபை முறையைத் தாபிக்க நீதிமன்று உதவியது.
உயர்நீதிமன்றம் பெரும்பான்மையினரின் (Majority) முடிவை அறிவித்தது. நீதிமன்றம் ஆராய்ந்த விடயங்கள் எவையென்பதை கலன சேனரத்தின பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்.
- ‘ஒற்றையாட்சி’ (Unitary), சமஷ்டி (Federal) ஆகிய எண்ணக்கருக்களின் பொருளை விளக்கியுரைத்த நீதிபதிகள் 13 ஆவது திருத்த மசோதா அரசின் ஒற்றையாட்சி இயல்பை (Unitary Character of the State) மாற்றுவதாகவோ பாதிப்பதாகவோ உள்ளதா என ஆராய்ந்தனர்.
- உருவாக்கப்படும் மாகாணசபைகள் மத்திய பாராளுமன்றத்தில் இருந்து தனித்து சுதந்திரம் உடையதாக (Independent) இருக்குமா? அல்லது மாகாணசபைகள் மத்திய பாராளுமன்றத்திற்கு கீழ்ப்பட்டனவாக (Subordinate) அமையுமா? என்னும் வினாக்கள் பற்றியும் ஆராய்ந்தனர்.
- குறித்த மசோதா மக்களின் சட்ட ஆக்க இறைமையைப் பறித்துக் குறைப்பதாக அமைந்துள்ளதா என்பதும் அவர்களால் ஆராயப்பட்ட இன்னொரு பிரச்சினையாகும். (Whether the bill abridged the legislative sovereignty of the people)
- மசோதா, மாகாணசபை மட்டத்தில் உச்ச நீதிமன்றங்கள் (High Courts) நிறுவப்படுவதை முன்மொழிந்தது. இது அரசியல் யாப்புச் சட்டத்திற்கு அமைவானதா (Constitutionality) என்னும் வினாவையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்.
மேற்குறித்த எல்லா விடயங்களையும் பற்றி ஆராய்ந்த நீதிபதிகள் ஐவரும் இலங்கையில் ஜனநாயக ஆளுகையை மேம்படுத்துவதற்கு 13 ஆவது திருத்தம் பங்களிப்பு செய்யும் எனக் கூறினர். பெரும்பான்மையினரான ஐவர் முடிவுகளோடு மாறுபட்ட முடிவுகளை சிறுபான்மை (Minority) நால்வர் முன்வைத்தனர். இந்நால்வரில் மிகவும் முக்கியம் வாய்ந்த கருத்துகளை நீதிபதி வணசுந்தர அவர்கள் பதிவு செய்தார். 13 ஆவது திருத்தம் குறித்த மாறுபட்ட முடிவுகளை அடுத்து நோக்குவோம்.
தொடரும்.