சிலப்பதிகார காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கண்ணகி வழிபாடானது தமிழுலகெங்கும் பரவி இருந்ததெனலாம். இதனை “ஒருமா முலை இழந்த திருமா உண்ணி” என்னும் நற்றிணைப் பாடலடிக் குறிப்பின் வழியும் உணரலாம். சிலப்பதிகாரத்தின் பல பகுதிகளில் இளங்கோவடிகள் கண்ணகி வழிபாடு பல்லாண்டுகளாக இருந்து வருகின்றமைக்கான சான்றுகளைக் குறிப்பாக வழங்கிச் சென்றுள்ளமையினைக் காணலாம். கண்ணகி வழிபாடானது உலகம் முழுமையும் பரவிய நிலையினை,
அருஞ்சிறை நீங்கிய வாரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னருங்
குடகக் கொங்கரு மாளுவ வேந்தருங்
கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்
என்னும் அடிகளின் வழி சிலப்பதிகாரம் காட்டிச் செல்கின்றது. அவ்வகையில் கண்ணகி வழிபாடானது தமிழகத்திலும் ஈழத்திலும் எவ்வகையான பாங்குகளில் திகழ்கின்றது என்பதனைக் குறித்துக் காணலாம்.
கொங்கு நாட்டில் கண்ணகி வழிபாடு
‘கொங்கச் செல்வி’ என சிலப்பதிகாரத்தில் கண்ணகி சுட்டப்படுகின்றமையினை நோக்குகின்றபோது பண்டுதொட்டே கொங்கில் கண்ணகி வழிபாடானது செல்லியம்மன் வழிபாடாகவே வழங்கி வரப்பெற்ற தெனலாம். இதற்கான சான்றுகள் பல இன்றளவும் கொங்கு நாட்டுப் பகுதிகளில் காணக்கிடைக்கின்றன. மூன்று மன்னர்களாலும் போற்றி நிறுவப்பட்ட கோயிலாக அமைவது மதுக்கரையில் அமைந்த செல்லியம்மன் கோயிலாகும். இம் மதுக்கரை எனும் தலம் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கு எல்லையாக அமைந்த பகுதி என்று கூறுவர். இதன்வழி கண்ணகி வழிபாடானது தமிழ் உலகு மூன்றினுக்கும் பொதுவாக எடுத்துச் செல்லப்பட்டமையினை அறியலாம். இதனது தல வரலாற்றில் இவ்வரலாறுகள் குறித்த தொன்மங்கள் இன்றும் காணக்கூடியதாக உள்ளன. மதுக்கரையில் உள்ள இச் செல்லியம்மன் கோவில் இன்று மதுக்கரைச் செல்லாண்டியம்மன் கோயிலென அழைக்கப்படுகின்றது. செல்லியம்மன் எனும் கண்ணகி வழிபாடு செல்லாண்டியம்மன் எனும் வழிபாடாக வழங்கி வருகின்றது. அத்தோடு கொங்கு மண்டல பெண் தெய்வக் கதைகளில் அப்பெண் தெய்வங்களின் கணவன்மார் கொல்லப்பட்டதான தொன்மங்களே இன்றளவும் கூறப்பட்டு வருகின்றமையினைக் காணவியலும். கொங்குக் குடிகளுக்குள் காணப்படும் சமூகப் பழக்கவழக்கங்கள் பலவற்றிலும் கண்ணகி வழிபாட்டின் எச்சங்களை இன்றளவும் காணவியலும். சான்றாக கொங்கு வெள்ளாளர்களின் வாழ்வியற் சடங்குகளில் ஒன்றாக அமைவது ‘எழுதிங்கள்’ என்னும் சடங்காகும். இச்சடங்கானது திருமணமான மங்கலப் பெண்டிர் தங்களது பெண் மகவு பருவமடைவதற்கு முன் மேற்கொள்கின்ற சடங்காக அமைகின்றது. இச்சடங்கிற்கும் கண்ணகி வழிபாட்டிற்குமான தொடர்புகள் ஒரே தன்மையானதாக இருப்பதைக் காணலாம். இச்சடங்கினை மேற்கொள்ளும் பெண், பல வழிபாடுகளை மேற்கொண்டு ஒரு அச்சு வெல்லக்கட்டியினை இடித்த பச்சரிசி மாவினுள் வைத்து, அம் மாவினை இட்டலிப்பானை போன்ற பானையில் வைத்து அம் மாவு வேகும் மட்டும் பல மணி நேரம் அவிப்பாள். பிறகு அம் மாவினை எடுத்து வந்து வீட்டின் நிலையில் வைப்பாள். அப்போது எழுதிங்கள் நோன்பை மேற்கொள்ளும் பெண், அம் மாவுக்கட்டியை கோடாலியாற் பிளக்க, வெல்லம் கரையாமலும் உடையாமலும் இருந்தால், அவள் குடும்பம் தழைக்கும் என்றும், அவள் குலப்பெண்கள் கற்பில் சிறந்தோராக இருப்பர் என்றும் நம்புவது இன்றளவும் உள்ளது. இதனை அடியொற்றிப் பார்க்கின்றபோது இதனைக் கண்ணகி வழிபாட்டின் ஓர் எச்சமாகவே கொள்ள வேண்டும். கண்ணகி தன் கற்பு நிலையினைத் தன் சிலம்பினை உடைத்து மெய்ப்பித்தமை போல் இந்நிகழ்வும் அமைந்துள்ளது. நிலவு வணக்கமான திங்கள் வழிபாடு கண்ணகிக்கு உரியது. அவ் வகையில் ‘எழுதிங்கள்’ எனும் சடங்கின் பெயரும் மேற்கொள்ளப்படும் முறைமைகள் யாவும் அச்சடங்கில் கண்ணகி வழிபாட்டினை வலியுறுத்தும் விதமாகவே அமைவதைக் காணலாம்.
திருச்செங்கோடு
கொங்கு மண்டலத்தில் கண்ணகி வழிபாட்டு மரபின் மையமாக திருச்செங்கோடு அமைந்திருந்த தெனலாம். மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் தமது கட்டுரை ஒன்றில் திருச்செங்கோட்டின் மலைமேல் உள்ள மங்கை பங்கன் கோயில் கண்ணகி கோயிலென்றும் அதனைப் பிறிதோரிடத்தில் விவரிப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் பிறகு அவர் அது குறித்து எழுதியதாக அறியக் கூடுதலில்லை. மயிலை சீனியாரின் கூற்றுக்கொப்ப அக்கோயில் கண்ணகி கோயில் தான் என்பதினை மெய்ப்பிப்பதாக அதன் வழிபாட்டு முறைமைகளும் திருவிழாக்களும் அமைந்துள்ளமை எண்ணத் தகுந்ததாகும்.
திருக்கொடிமாடச் செங்குன்றூர் இவ்வூரின் பழைய பெயராகும். செங்கோடு என்பது இவ்வூரிலுள்ள குன்றின் பெயராகும். ஆனால் அரும்பத உரையாசிரியர் காலத்திலேயே குன்றின் பெயரான செங்கோடு ஊருக்கும் வழங்கப்படுவதாயிற்று. இக்குன்றின் மேல் உள்ள கோயிலின் அமைப்பினை நோக்குவோமெனில் மேற்கு பார்த்த நிலையில் கோயில் அமைந்துள்ளது. இதன் திசைமுகம் சேரநாட்டு கண்ணகி கோயிலை நோக்கியதாக அமைகின்றது. கோயிலின் மேற்கு வாயிலுக்கு இடதுபுறம் ஒரு கிணறு அமைக்கப்பட்டிருந்தது (இப்போது மூடிவிட்டனா்). கோயிலின் வடபுறம் ஒரு கிணறு அமைக்கப்பட்டிருந்தது (நடராசா் சந்நிதி அருகில்). கோயிலின் கீழ்ப் பக்கம் தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. கோயிலின் கிழக்கே மலைமேற் செல்கையில் அல்லிச் சுனை ஒன்றும் அமைந்திருக்கும். மூலவரின் சிலையின் பாதத்திலும் ஒரு நீரூற்று உண்டு. நீர் நிலை தொடர்பான இவ்வமைப்புகள் சேர செங்குட்டுவன் கட்டி, சோழர்களால் திருப்பணி செய்யப்பட்ட கண்ணகி கோயிலை ஒத்ததாகும். ஈழத்துக் கண்ணகி கோயிலோடும் பெரிதும் ஒப்புமை உடையனவாக அமைகின்றன. சிலப்பதிகாரக் காலத்திலேயே இக்கோயிலில் முருக வழிபாடும் கண்ணகி வழிபாடும் சிறப்புற்றிருந்ததெனலாம்.
ஞானசம்பந்தரின் காலத்திலேதான் இக்கோயில் மங்கை பங்கன் கோயிலாக மாற்றப்பட்டதெனலாம். இவ்விறைவனின் பெயா் ‘மங்கை பாகர்’ எனக் குறிப்பிட்ட போதும் மக்கள் வழக்கில் ‘செங்கோடு பாவாத்தா’ என்பதாகவே உள்ளது. கோயிலில் ஆராத்தி காட்டும் பூசாரிகளும் “செங்கோடு பாவாத்தா காணிக்கை போடுங்கோ” என்று தான் குறிப்பிடுவர். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இப்பகுதியில் பல பெண்களின் பெயர் ‘பாவாயி‘ (பாவை) என்பதாக உள்ளமை எண்ணத்தகும். பாவை (தென் தமிழ்ப் பாவை) என்பதும் கண்ணகிக்கு வழங்கும் ஒரு பெயராகும்.
இவ்வூர்த் திருவிழாவும் ஈழத்தில் கண்ணகி கோயிலான வற்றாப்பளை, ஆரையம்பதி முதலான கண்ணகி கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களும் வைகாசி மாதம் விசாக மீனினை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வதும் எண்ணத்தகும்.
‘வைகாசித் திங்கள் வருவேன்’ என கண்ணகி சிலப்பதிகாரத்தில் உரைத்தமைக் கேற்பதாகவே வைகாசித் திங்கள் திருமேனியை எழுந்தருளச் செய்து இவ்விழாக்கள் நிகழ்வதாகின்றது.
வைகாசி மாதம் விசாகத்திற்கு முன்வரும் கருவா (அமாவாசை) அன்று இவ்வூர் காளி கோயில் தேரோட்டத்தோடு தொடங்கும் விழாவின் பெரும்பாலான நிகழ்வுகள் கண்ணகி வழிபாட்டின் சடங்கியல்களாகவே அமைவதினைக் காணலாம். இறைத்திருமேனி தேரில் எழுந்தருளும் நாளாக வைகாசி விசாகம் அமைகின்றது. திருவிழாவின் நிறைவு நாளன்று பூசை செய்யும் பூசாரி பெண் வேடமிட்டு பூசை செய்வார். அன்றைய இரவு சத்தாவரம் எனும் நிகழ்ச்சி நடைபெறும். அந்நிகழ்வில் கடவுளா் அடியார்களுக்கு வேண்டும் வரங்களை வழங்குவர். அணிகலன்கள், மகப்பேறு, திருமணம், நோய் நீக்கம், மழை வளம், பயிர் வளம், பால்வளம் முதலானவை தொடர்பான வரங்களே பண்டு வழங்கப்பட்டமைக்கான பாடலொன்று பூசாரிகளால் முன்பு பாடப்பட்டன. இன்று இவ் இறை உரு ரூபங்கள் அர்த்தநாரீஸ்வரர் என வழங்கப்பட்ட போதிலும், இவ்விறைவருக்கு மங்கள அணியான தாலி மிகப் பெரிதாக ஏனைய கோயில்களில் இருந்து வேறுபட்டதாகச் சாத்தப்படுவது மங்கள தேவியை நினைவுறுத்துவதாக அமைகின்றது. திருவிழாவின் நிறைவில் மலையேறியவுடன் படையலாக மிளகுச் சாறு கலந்த சோறு வழங்கப்படுதலும் பண்டைய மரபை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இப்பகுதியில் வழங்கும் வழக்காறுகள் சில இங்கு கண்ணகி வழிபாடு நிகழ்ந்தமைக்கான சான்றுகளாக அமைகின்றன. ஆடி மாதம் கோவலன் கொல்லப்பட்டான்; மதுரை எரியுண்டது; இதனை சிலம்பின் வழி அறியலாம். கோவலன் மதுரையின் வீதிகளில் உள்ள காட்சிகளைக் கண்டு வரும் வேளையில் வீசியகாற்று ‘குடக்காற்றெறிந்து’ எனும் அடிகளால் குடக்காற்றெனக் கொள்ளப்படுகிறது. இதனை இதற்கு உரைகூறும் அரும்பத உரையாசிரியா் ”ஆடித்திங்களென்பது தோன்றக் குடக்காற்றுக் கூறினான்” எனக் கூறுகின்றமையினால் மேலும் உறுதிசெய்யலாம். அதற்கான மற்றுமொரு சான்றாக,
ஆடித் திங்கட் பேரிருட் பக்கத்த
தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத் தொள்ளரி யுன்ன
உரைசான் மதுரையோ டரைசுகேடுறுமெனு
(கட்டுரைக்காதை 133-136)
என்னும் இக் கட்டுரைக்காதை அடிகள் அமைகின்றன. ஆடி மாதம் என்பது ஆடவர்க்கு பாதிப்பு உண்டாக்கக்கூடிய மாதம் எனும் வழக்கம் உள்ளது. இம்மாதத்திலேயே காவல் தெய்வங்களுக்கான வழிபாடுகளும் சிறப்பானதாகத் திகழ்கின்றது. யாவற்றிலும் மேலானவொரு நிகழ்வானது ஆடி மாதம் முதல்நாள் நடைபெறுகின்றது. தலையாடி எனும் ஆடி முதல் நாளில் தேங்காய் சுடும் நோன்பி (நோன்பு) எனும் ஒரு விழா நடைபெறுகின்றது. வீட்டிலுள்ள சிறுவர்களின் கைகளில் மட்டை நீக்கிய தேங்காய் ஒன்றினை பெற்றோர் கொடுப்பர். சிறுவர்கள் தேங்காயின் மேற்புற ஓட்டுப் பகுதியை பாறையில் தேய்த்து மொழுமொழுப்பாக மாற்றுவர். பின்னர் அத் தேங்காயின் மூன்று கண்களில் பெரிய கண்ணில் ஓட்டையிட்டு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து பின்பு ஓட்டையின் வழியாக பொடியாக இடித்து வைத்துள்ள பச்சைப் பயறு, பச்சரிசி, பொட்டுக்கடலை, ஏலக்காய், நாட்டுச்சர்க்கரை முதலானவற்றை இட்டுத் தேங்காய்த் தண்ணீரினையும் ஊற்றிக் கிளறி நிரப்புவர். பின்னர் ஆறடி நீளமுள்ள அழிஞ்சில் குச்சிகளின் நுனிமுனையைச் செதுக்கி அதனைக் கொண்டு அத்தேங்காயின் கண்ணினை அடைத்துத் தேங்காய்க்கும் தடிக்கும் மஞ்சள் பூசி வைப்பார். இத் தேங்காய்களினை மாலை ஆறு மணி போல் சிறுவர்கள் கையில் எடுத்து வர, பெற்றோர் ஓரிடத்தில் தென்னை மட்டை, பனை ஓலை முதலானவற்றினை குவித்துத் தீமூட்டுவர் அத்தீயிலே சிறுவர் தேங்காயினைச் சுடுவர். சிறிது நேரம் சுட்டபின் தேங்காய் ஓடு வெடிக்கத் தொடங்கும். அப் பதத்திலே தேங்காய் சுடுவதினை நிறுத்திவிடுவர். அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கோ வீட்டின் பூசை அறையிலோ வைத்து, அழிஞ்சில் குச்சியினைக் கழட்டிவிட்டு தேங்காயினை இரண்டாக உடைப்பர். தேங்காயுள்ளிருக்கும் பூரணம் சிறப்பாக வெந்திருந்தால் குடும்பத்திற்கு நல்லதென வணங்குவர். தலையாடி என வழங்கப்பெறும் ஆடி முதலாம் தேதி, இந்நிகழ்வானது திருச்செங்கோடு பகுதியில் மாத்திரம் நிகழ்கின்றது. இந்நிகழ்வு கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடையதாகவே அமைகின்றது. தேங்காயினுள் பூரணம் வைத்து அவித்துச் சோதித்தல் ஆனது தற்குறி கேட்டல் என்பதான பண்டைய வழிபாட்டுமுறை என்பதை வரந்தருகாதையிலும் நாம் அறியலாம்.
கெரடிகம்பம் தொடுதல்
கொங்குநாட்டுக் கோயில்களிற் காணப்படும் தனிச் சிறப்புகளிலொன்றாக இக்கெரடி கம்பங்களைக் குறிப்பிடலாம். கெரடிகம்பம் என்பது வேறு கொடிக்கம்பம் என்பது வேறு. கொடிக்கம்பம் என்பது கோயிலின் பலிப் பீடத்தின் அருகில் அமைவது. கெரடிகம்பம் என்பது இராஜ கோபுரத்தின் வெளியே அமைவது; விளக்கேற்றப் பயன்படுவது. கோயிற் கோபுரத்திற்கு முன்பு காணப்படும் ஒற்றைக் கல்லாலான உச்சியில் விளக்கேற்றும் கற்தூண் அமைப்பே கெரடிகம்பம் எனப்படும். இக் கற்தூணின் மேல் திருவிழாக் காலங்களில் பெரிய விளக்கேற்றுதலினைக் காணலாம். தமிழகத்தில் காணப்படும் கெரடிகம்பங்களில் மிக உயர்ந்ததாக திருச்செங்கோட்டுக் கோயிலின் முன் உள்ள கெரடிகம்பத்தினைக குறிப்பிடலாம். ஏறத்தாழ அறுபதடி உயரமுடைய இக் கெரடிகம்பத்தினை மண்ணுக்குள் பதிய நட்டு தூக்கி நிறுத்துதல் என்பது அத்தனை எளிதான செயலாக அன்றைய நாளில் இருக்கவில்லை. கற்புடைப் பெண்டிர் கை பட்டால் கெரடிகம்பத்தினை நிறுத்துதல் எளிது என்னும் நம்பிக்கை அக் காலத்தில் வலுவானதாக நிலவியது. இன்றும் கற்புடைப் பெண்களைக் குறிப்பிடும் போது ‘அவள் என்ன கெரடிகம்பமா பிடிக்கப் போறாள்’ என்பதான வழக்கு கொங்கு நாட்டுப் பகுதியில் உள்ளமையினைக் காணலாம்.
மிகப்பெரிதான இக்கெரடிகம்பத்தினை எவ்வகையில் யாருக்கும் சேதமில்லாமல் நிறுத்துவது என்ற எண்ணம் தச்சர்களுக்கு ஏற்பட்டபோது, அங்குள்ள மகளிரும் அறிஞர் பெருமக்களும் “அவ்வூரிலுள்ள பறைத்தெருவில் ‘வெள்ளச்சி’ என்ற கற்பிற் சிறந்த மங்கை வாழ்கின்றாள்; அவள் இக்கம்பத்தினைத் தொட்டுக் கொடுத்தால் நிறுத்துவது எளிதாகும்” எனக் கூறலாயினர். ஆதலால் அவ்வூரார் மேள தாளம் முதலான இசைக்கருவிகள் முழங்க வெள்ளச்சியின் இல்லம் சென்று அவளிடம் செய்தியினைக் கூறி அழைத்தனர். வெள்ளச்சியும் அவர்களுடன் வந்து கெரடிகம்பத்திற்குப் பூசைகள் செய்து அதனைத் தொட்டுத் தூக்க, தச்சர்கள் மிக எளிதாக கெரடிகம்பத்தினை நிறுவினர் என்னும் செய்தி திருச்செங்கோட்டில் உண்டு. இதன் வழியாகக் கற்புடைப் பெண்ணின் ஆற்றல் வெளிப்பாடானது வலியுறுத்தப்படுதலினைக் காணலாம். இவ்வாறான நிகழ்வுகள் கண்ணகி வழிபாட்டின் தொன்ம எச்சங்களாகும்.
அறுபதாம்படி
கண்ணகி வாய்மையின் பாற்பட்ட தெய்வம். பொய்மையினை அழிக்கும் தெய்வம். அறங்காக்கும் தெய்வமாகக் கண்ணகி போற்றப்பட்டாள். அரசனேயாயினும் தன்னறம் பிழைத்தால் குற்றத்திற்குரியவனே என்பதே சிலப்பதிகாரம் கூறும் கண்ணகி வழிபாட்டு மரபாகும். திருச்செங்கோட்டு மலையில் ஏறி கண்ணகியினை வழிபடச் செல்லும் படிகட்டுகளில் ‘அறுபதாம்படி’ என்ற படிகட்டுத் தொகுப்பு உண்டு. இது அறுபது படிக்கட்டுகளை உடையதாகும். மலைக்குச் செல்லும் படிக்கட்டுப் பாதையில் இடைவழியில் உள்ளதாகும். மலையேறுவோர் இப்படிக்கட்டினை வணங்கியே செல்லுவர். இவ்வூரிலுள்ளோர் தங்களுக்குள் ஏற்படும் பிணக்குகளான பொருட் களவு, சொத்துச் சிக்கல்கள், உண்மையை உணர்த்துதல் என்பனவற்றினுக்கான தளமாக இவ்வறுபதாம் படியினை நம்பினர். மேள தாளத்துடன் அறுபதாம் படிக்கு வந்து, ஊர்ப் பெரியோர் முன் அறுபதாம்படி வழிபாடு செய்து அப்படியின் மேல் ஆணையிட்டுக் கூறும் கூற்றுக்கள் யாவும் உண்மையென அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். ஆதலால் இதனை ‘சத்தியப்படி’ என்றும் அழைத்தனர். அறுபதாம்படியில் பொய் கூறியோர் குடும்பத்துடன் அழிவர் என நம்பினர். இவ்வாறான ‘சத்தியப்படி’ மரபு என்பது கண்ணகி வழிபாட்டுத் தொன்மத்துடன் தொடர்புடையதாகும்.
வறடிக்கல்
இம்மலையின் செங்குத்தான சிகரப் பகுதியில் மகுடம் போல் அமைந்துள்ளது ஓர் பாறைக்கல் வறடிக்கல் எனப்படுகிறது. இக் கல்லினையொட்டி பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதான பாண்டீச்சுவரர் கோயிலும் சிறிய கருவறையும் நடு மண்டபத்துடன் காணப்படுகின்றது. இப்பாறைக் கல்லின் வட பகுதியில் அதனைச் சுற்றுவதற்கான இடைவெளியாக ஓரடி அளவுள்ள பாதையே உள்ளது. இப் பாறையினையே வறடிகல் என அழைக்கின்றனர். வடமொழியில் இதனை வந்தியா பர்வதம் என இச் சிகரத்தோடு சேர்ந்து அழைப்பர். மகப்பேறில்லா பெண்கள் மகப்பேறு வேண்டி இச்சிகரத்திற்கு அருகிலுள்ள குமார சுனையில் குளித்துவிட்டு, இக்கல்லினை ஆபத்தான முறையில் சுற்றி வந்து வணங்கியுள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் (டல்கவ்சி பிரபு), இக்கல்லினைச் சுற்றி வருவோர் பலர் கீழே விழுந்து உயிரிழந்ததால் அதற்குத் தடைவிதித்து சுற்றுச் சுவரையும் எழுப்பிவிட்டனர். இவை போன்றதான வரம் பெறும் வழிபாட்டு முறைகள் கண்ணகி வழிபாட்டின் தொன்மத்தினை நினைவுறுத்துவதாக அமையக் காணலாம். மழைவளம், மக்கட்பேறு முதலான வரங்களை வேண்டுவோர் திங்கட்கிழமைகளில் நோன்புடன் இம்மலை முழுவதையும் வலம்வரும் மரபும் காணப்படுகின்றது.
ஈழத்தில் கண்ணகி வழிபாடு
கண்ணகி வழிபாட்டு மரபானது இன்றளவும் உயிர்ப்புடன் ஈழநாட்டில் விளங்கி வருகின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணகி கோயில்கள் ஈழநாட்டில் வழிபாட்டில் உள்ளன. பௌத்தம் இலங்கைக்கு வருமுன் ஈழத்தில் வழங்கிய வழிபாட்டு முறைகளாக கண்ணகி வழிபாடு, எழுமங்கையர் வழிபாடு, நாகனார் வழிபாடு முதலான வழிபாடுகள் அமைகின்றன. இதற்கான தொன்மங்களும் தொல்லியற் சான்றுகளும் பல உண்டு. ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடைப்பட்ட பகுதிகளில் காணப்படும் தீவுகள் ஈழத்திற்கும் தமிழகத்திற்குமான சமயப் பரிமாற்றங்களில் பெரும் பங்கு வகிப்பதாக அமைகின்றன. பண்டு மணிபல்லவம் என்று வழங்கிய நயினாதீவு பௌத்தத்தின் தலைமையிடமாகவும் அனலைதீவு ஆசிவகத்தின் தலைமையிடமாகவும் அமைந்தது. அதேபோல் காரைதீவில் கண்ணகி வழிபாடானது பண்டுதொட்டு இன்றளவும் சிறப்புடன் விளங்கிவருகின்றது. சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் எடுப்பித்த கண்ணகி கோட்டத் திருவிழாவில் இலங்கையின் மன்னனான கயவாகு கலந்து கொண்டான் என்பதினை,
அருஞ்சிறை நீங்கிய வாரிய மன்னரும்
பெருஞ்சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரு மாளுவ வேந்தரும்
கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்
என்ற அடிகளின் வழியறியலாம். இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கந்தரோடைக்கும் மாசியப்பட்டிக்கும் இடையிலுள்ள ஊர் ‘அங்கணாமைக் கடவை’ எனப்படும். இவ்வூரிலேயே முதன்முதலாக கயவாகு மன்னன் மிகப் பழமையான கண்ணகி அம்மன் கோயிலையும் அதன் எதிரே ஒரு தாமரைக் குளத்தையும் அமைத்தான். இவ்வூரின் பண்டைய பெயர் அங்கணாக்கடவை ஆகும். “இக்குளக்கரையில் கயவாகு மன்னனின் கற்சிலை ஒன்றிருந்தது. பின், அச்சிலை 1974 ஆம் ஆண்டு அநுராதபுரத்து அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது” என செ. கிருஷ்ணராசா கூறுவார். ‘அங்கன் அம்மை’ என்பது கண்ணகியின் பெயராகும். அவ்வகையிலும் இன்று சிறு கோயிலாக உள்ள இக்கோயிலிலேயே இலங்கையில் கண்ணகி வழிபாடு தோன்றிய தெனலாம். இதற்கு மற்றுமொரு சான்றாக அமைவது ‘ஊர் சுற்றுக் காவியம்’ என்னும் உடுக்குச் சிந்துப் பாடல்களாகும். எழுபத்தி இரண்டு பாடல்களைக் கொண்ட இச்சிறு நூலானது வி.சி. கந்தையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டதாகும். இந்நூலின் இருபத்து மூன்றாம் பாடல் தொடங்கி எழுபத்திரண்டாம் பாடல்கள் வரையுள்ள பகுதி முழுவதும் கண்ணகி கோயில் கொண்டுள்ள ஊர்களின் சிறப்புகளையும் அங்கு உறையும் கண்ணகியின் அருளையும் விளக்குவதாக அமைகின்றது. அந்நூல் விளக்கும் முதற்தலமாக அமைவது அங்கணாவைக் கடவை என்பதனை,
திங்கள்போ லுந்திரு நுதலையுடை யாளைச்
செந்தா மரைமுகத் தாளைஒப் பாளைப்
பொற்குபுக ழாலுயர்ந் தவபொதறி ருவைப்
பொய்யென்ன மெய்யாக வந்துதித் தவளைத்
தங்கள்பழி கொள்ளென்று பாண்டியன் முன்னே
சத்துரு தனைமுடித் தயிர்மீள வந்து
அங்கணாமைக்கடவை தன்னில் வாழ் கண்ணகையார்
அடித்தாமரைப் பாதம் நாளும் மறவேனே
(ஊர்சுற்று காவியம் – 23)
எனும் இருபத்து மூன்றாம் பாடல்களின் வழி அறியலாம். இந்நூலின் வழி ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவிய பழமையான தலங்களாக பாண்டிருப்பு, கல்முனை, பட்டிமேடு, வீரமுனை, தம்பிலுவில், கரேறு, காரைதீவு, எருவில், செட்டிபாளையம், வந்தாறு மூலை, கல்லாறு, மகிழூர், மண்முனை, மகிழடிச் சோலை, மதலைக்குடா, புதுக்குடி, கொக்கட்டிச்சோலை, சிற்றாண்டி, வற்றப்பாளை, ஆரையம்பதி போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.
மேற்கண்ட தலங்களின் வரிசை முறையினை நோக்கினால் தமிழரின் தாயகமெங்கும் கண்ணகி வழிபாடு பரவலாக்கம் பெற்றமையினை அறியலாம். கண்ணகி குறித்து பல இலக்கியங்கள் ஈழத்தில் எழுந்துள்ளன. கண்ணகையம்மன் தாலாட்டு, கண்ணகையம்மன் குளுவம், ஊர் சுற்று காவியம், கண்ணகி வழக்குரை என்பனவாக அவை பெருகும். கண்ணகி வழக்குரை எனும் இலக்கியம் காப்பிய நிலையில் வைத்துப் போற்றப்படுவதாகின்றது. கதைப்போக்கில் சிலப்பதிகாரத்திலிருந்து பல மாறுதல்களையும் கொண்டுள்ளது. நாட்டுப்புற இலக்கியக் கூறுபாடுகள் பலவற்றைக் கொண்டதாக அமைகின்றது. ஆடவரை ஐயன் என அழைத்தல் எவ்வாறு உயர்வுச் சிறப்பை அளிக்கக்கூடிய சொல்லாகின்றதோ அதனை ஒத்ததாகவே பெண்டிரைக் குறிக்கும் ஐயை எனும் சொல்லும் உள்ளது. கண்ணகியைத் தெய்வநிலை உயர்வுச்சிறப்பு நிலை கொடுத்தே ‘கண்ணகை’ என்று ஈழத்தில் வழங்குவர். மட்டக்களப்பில் உள்ள பல பெண்கள் இன்றளவும் பத்தினி, கண்ணகி போன்ற பெயர்களைக் கொண்டுள்ளமையினை காணலாம். கண்ணகையம்மன் கோயில்களில் ஆண்டிற்கு ஒரு முறை பத்து பதினைந்து நாட்கள் பெருந் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். ‘வைகாசித் திங்கள் வருவேன்’ என சிலப்பதிகாரத்தில் கண்ணகி கூறிய கூற்றினுக்கேற்ப, ஆண்டு தோறும் வைகாசி மாதம் மதிய நாளினைச் சிறப்பிப்பதாக இவ்விழா நடைபெறும். விழா நாளில் கண்ணகி வழிபாட்டுக்குரிய பல சடங்குகள் நிகழ்த்தப்பெறும். பண்டுதொட்டு கண்ணகி வழிபாட்டுச் சடங்கினைப் பத்தடியார் எனும் மரபினர் செய்வர். இம்மரபு முழுவதும் தமிழ் மரபாகவே உள்ளது. அண்மைக் காலத்தில் சில கோயில்களில் சிவாச்சாரியர்களைக் கொண்டும் பூசை செய்கின்றனர். இது ஏற்புடையதாக இல்லை. மட்டக்களப்பின் குடிகளான போடியர், முக்குவர் முதலானோரின் ஆளுகையில் பல கண்ணகிக் கோயில்கள் உள்ளன. கேரள மக்களை போல் இவர்கள் தாய்வழி குடிமுறையினை உடையோராவர். இக்குடிமுறையில் குறிப்பிட்ட சில குடியினரே கண்ணகி கோயில் பூசைக்கும் ஆளுகைக்கும் உரியோராகின்றனர். ஈழத்திலும் கேரளத்திலும் நிகழும் கண்ணகித் திருவிழாக்கள் வைகாசி மாதத்தை அடிப்படையாகக் கொண்டே நிகழ்கின்றன. ஈழத்து வற்றாப்பளையிலும், ஆனாயம்பதியிலும், கன்னங்குடாவிலும் உள்ள கண்ணகி கோயில்களில் நடைபெறும் பெரும் பொங்கல் நிகழ்வானது கேரளத்து ஆற்றுக்கால், ஆத்திங்கள் முதலாய இடங்களில் நடைபெறும் கண்ணகி (பகவதி) கோயில் பொங்கல் நிகழ்வோடு பெரிதும் ஒப்புமை உடையனவாக விளங்கக் காணலாம். ஈழத்திலும் கேரளத்திலும் வழிபடப்படும் சிலம்பின் வடிவமும் ஒத்த தன்மை உடையனவே. சிலப்பதிகாரம் சுட்டுவதற்கேற்றவாறே ஈழத்திலும் கேரளத்திலும் வரந்தரும் தெய்வமாகவே கண்ணகி விளங்குகிறாள். நோய் தீர்த்தல், மழை வளம் தருதல், மக்கட் செல்வம் வழங்கல், வேளாண் செல்வங்களைத் தருதல் முதலான வரங்களை நல்கக் கூடியவளாக கண்ணகி வழிபடப்படுகின்றாள். ஒழுக்கமும், அறமும் உள்ளோரைக் காக்கும் தெய்வமாக கண்ணகி போற்றப்படுகிறாள். இவை அல்லாதோரை சினந்து தண்டிப்பாள் என அடியார்கள் அச்சம் கொள்வார். ஈழத்திலும் கேரளத்திலும் பொற்கொல்லரை உள்ளடக்கிய பிரிவினர் கண்ணகியை வழிபடுவதில்லை. ‘வருடத்திற்கொரு பூசையும் வவ்வால் அடைந்த கோயிலும்’ என இவர்கள் கண்ணகி கோயிலைப் பழிப்பதனை மட்டக்களப்பில் காணலாம். அனைத்து மக்களும் கண்ணகியை வழிபட இவர்கள் காளியை வழிபடுவோராகின்றனர். யாழ்ப்பாணத்தில் கண்ணகி வழிபாட்டுக்கு எதிராக ஆறுமுகநாவலர் செயற்பட்டார். மானுட செட்டிப் பெண்ணான கண்ணகியை வழிபடுதல் மடமையெனக் கண்டித்ததோடு பல கண்ணகி கோயில்களை ராஜராஜேஸ்வரி கோயிலாகவும், மனோன்மணி அம்மன் கோயிலாகவும் மாற்றினார். ஆயினும் இவரது முயற்சி முழு வெற்றி பெற்றதல்ல.
சிங்கள மக்கள் கண்ணகியைத் பத்தினித் தெய்யோ என வழிபட்டு வருகின்றனர். தமிழர்களின் வழிபாட்டில் உள்ள கண்ணகியின் திரு உருவச் சிற்ப அமைதிக்கும் சிங்களவர்கள் வழிபடும் கண்ணகியின் சிற்ப அமைதிக்கும் வேறுபாடு உண்டு. தமிழரின் வழிபாட்டில் கண்ணகி வலது கையில் அடைக்கல (அபய) முத்திரை காட்டி இடக்கையை இயற்கையாக உள்ளவாறு அமைத்தல் மரபு. சிங்களர் மரபில் கண்ணகியின் இரண்டு கைகளிலும் இரண்டு சிலம்பு உள்ளவாறும் அமைக்கப்பட்டிருக்கும். இலண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள கண்ணகி சிலை தமிழ் மரபில் வடிக்கப்பட்டதேயெனலாம். அனைத்து பௌத்த பள்ளியிலேயும் கண்ணகி வழிபாடு உண்டு. தனித்த கோயில்களிலேயும் சிங்களவர் கண்ணகியை வழிபடுவர். இலங்கையில் கண்ணகி வழிபாடு குறித்து கனநாத் ஒபய சேகர என்ற பேராசிரியர் ‘The Cult of the Goddess Pattini’ என்ற மிக விரிவான நூலினை எழுதியுள்ளார். தமிழர்களிடம் உள்ளது போலவே கண்ணகி கோயில்களில் நிகழும் தீபாய்தல் போன்ற சடங்குகள் சிங்களவர்களிடமும் உண்டு.
இலங்கையிலும் கேரளத்திலும் காணப்படும் கண்ணகி கோயில்கள் பல, ஒத்த தன்மையுடையனவாகவே காணப்படுகின்றன. சேரன் செங்குட்டுவன் எடுப்பித்த கண்ணகி கோட்டத்தில் தேவந்தி எனும் பெண்ணே பூசை செய்வோளாவாள். மட்டக்களப்பிலும் தொடக்கத்தில் பெண்களே பூசை செய்வோராக இருந்திருக்க வேண்டும். அம்மரபின் தொடர்ச்சியாகவே இன்று ஆண் பூசாரிகள் சேலை கட்டிப் பூசை செய்யும் மரபு உள்ளமையினைக் காணலாம்.
அங்கணா மைக்கடவை காரேறு நகர் எருவில்
ஆனதம் பிலுவிலொடு வீரமுனை தன்னிலும்
பங்கசெர் பட்டிமேடு உயர்செட்டி பாளையம்
வந்தாறு மூலையொடு மற்றுமுள பதியும்
திங்கள்நேர் ஒத்தநுதல் எங்கும் திற்பெரிய
தெய்வீக மென்ன விளை யாடியெப் பொழுதும்
எங்குமாய் திற்குமொரு பங்கமா தின்பெருமை
எந்தனா விற்கனவில் என்றுமக லாதே
(உடுங்குச்சித்து – ஊற்றுக்காவியம் – 69)
பத்தியொடு தொழுவோர்கள் இடகல வருள்கொண்டு
பண்டுசெளி தம்பிலுவில் பட்டிமா நகரம்
மொய்த்தபுகழ் வீரமுனை கல்முனைகல் லாறு
மகிழூர்செட்டி பாளையப் எருவில்மண் முனைபூமும்
வைத்தமகி ழடிச்சோலை முதலைக்குடா
வளமைவரு புதக்குடி நகரமொடு வந்தாறுமூலை
இத்தனை தலங்களிலும் அங்கண மைக்கடவை
என வந்து காரைநகர் இனிதிருத் தவளே
– 70
பட்டிநகர் தம்பிலுவில் காரைநகர் வீரமுனை
பவிதபெறு கல்முனைக்கல் வாறுமகி ழூரெரவில்
செட்டிபா ளையம்புதுக் குடியிரப்பு மண்முனை
செல்வமுத லைக்குடா கொக்கட்டிச் சோலை
அட்டதிக் கும்புகழ் வந்தாறு மூலை
அன்பான சிற்றாண்டி நகாதனில் உரையும்
வட்டவட் பூசங்குழல் மண்முனைக் கண்ணகையை
மனதினில் நினைக்க வினை மாறியோ டிகுமே.
– 71