இலங்கையின் கறவை மாடுகளை பல தொற்று நோய்கள் பாதிக்கின்றன. அவற்றுள் கால்வாய் நோய் (foot and mouth disease), தொண்டையடைப்பான் நோய் (Hemorrhagic septicemia), கருங்காலி நோய் (Black quarter), லம்பி தோல் கழலை நோய் (lumpy skin disease), புருசெல்லா கருச்சிதைவு நோய் (Brucellosis), மடியழற்சி நோய்கள் (Mastitis), குடற்புழு நோய்கள் (gastro intestinal worms) என்பன குறிப்பிடத்தக்கன. இந்த நோய்கள் கறவை மாடுகளைப் பாதித்து அவற்றின் உற்பத்தியைப் பாதிக்கின்றன. சில நோய்கள் உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. சில நோய்கள் நிரந்தர மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகின்றன. சில நோய்கள் மனிதனுக்கும் தொற்றுக்களை தர வல்லன (Zoonotic). நோய்களை சுகப்படுத்த கணிசமான அளவு பணத்தை பண்ணையாளர்கள் மருந்துகளுக்கு செலவிட வேண்டி ஏற்படுகிறது. கால்வாய் நோய், தொண்டையடைப்பான், கருங்காலி நோய்களைத் தடுக்கும் தடுப்பூசிகளுக்கு அரசாங்கம் அதிகளவான பணத்தையும் செலவிடுகிறது. இந்தத் தடுப்பூசிகள் கறவை மாடுகளுக்கு அரச கால்நடை வைத்திய அலுவலகங்களினூடாக இலவசமாக வழங்கப்படுகின்றன. பொருளாதார நெருக்கடிமிக்க அண்மை நாட்களில் அவற்றுக்கான தட்டுப்பாடும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருப்பதால் ஏனைய நாடுகளில் இருந்து நேரடியாக எந்தத் தொற்று நோயும் இலகுவில் நுழைய முடியாது. துறைமுகங்கள், விமான நிலையங்களினூடாக மாத்திரமே உத்தியோகபூர்வமாக நோய்கள் நுழைய முடியும். எனினும் இந்தியாவிலிருந்து கடல் வழியான சட்டவிரோத கடத்தல்காரர்கள் மூலமாக, அவர்களின் உணவுக்காக கொண்டு வரும் விலங்குகள் மூலமாக கால்வாய்நோய், லம்பி தோல்நோய் போன்றன பரவிய வரலாறு உள்ளது. அண்மைக்காலத்தில் இந்தியாவிலிருந்து படகுகள் மூலம் சட்ட விரோதமாக ஆடுகள், பசுக் கன்றுகள், கோழிகள், நாய்கள் என்பன வட மாகாணத்தில் வந்திறங்குவதையும் காணமுடிகிறது. இவை இலங்கையிலில்லாத பல புதிய கால்நடை நோய்களைப் பரப்பும் வாய்ப்பைத் திறந்துவிடுகின்றன. இதனை விட கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிநாடுகளில் இருந்து முறையற்ற தனிமைப்படுத்தல் முறைமையின்றிக் கொண்டுவரப்பட்ட பல மாடுகளால் ‘Bovine viral diarrhoea’ போன்ற நோய்கள் பரவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இனி, சில முக்கியமான சில நோய்கள் குறித்துப் பார்ப்போம்.
கால்வாய் நோய் / கோமாரி நோய் (Foot and mouth disease)
மாடுகள், எருமைகள், ஆடுகள், செம்மறி் ஆடுகள், பன்றிகள் போன்ற பிளவுற்ற குளம்புள்ள (cloven foot) விலங்குகளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. ‘foot and mouth disease virus’ எனும் RNA வைரஸ் இந்த நோயை ஏற்படுத்துகிறது. O,A,C, Asia 1, SAT 1, SAT 2,SAT 3 எனும் 7 உப வகைகளை இந்த வைரஸ் கொண்டுள்ளது. இலங்கையில் ‘O serotype’ வைரசே நோய் நிலையை அண்மைக் காலத்தில் தோற்றுவிக்கிறது. இந்த வைரஸ் சூழலில் நிலைத்திருக்கக் கூடியதுடன் பயன்படுத்தப்படும் விவசாய உபகரணங்கள், மனிதர்கள் மூலம் வேகமாகப் பரவலடைகிறது (காற்று மூலம், உணவின் மூலம், செயற்கைச் சினைப்படுத்தல் மூலம், கொப்புளங்களிலுள்ள திரவங்களின் தொடுகை மூலம்). இந்த நோய்க்குரிய தடுப்பூசிகள், இலங்கையில் தயாரிக்கப்பட்டும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் வழங்கப்படுகிறது.

நோயின் அறிகுறிகள்:
- காய்ச்சல்
- முகம், முரசு, வாய், நாக்கு, குளம்பு, முலைச்சுரப்பி போன்ற இடங்களில் கொப்புளங்கள் தோன்றுகிறது.
- கொப்புளங்கள் உடைந்து புண் ஏற்படுகிறது.
- தொடர்ச்சியாக எச்சில் வடிதல்.
- உணவில் நாட்டமின்மை, நீர் அருந்தாமை.
- விலங்குகள் நொண்டுதல், நடக்கச் சிரமப்படல், குளம்புகள் கழன்று விழல்.
- பாலுற்பத்தி குறைதல்.
- கன்றுகள் இறத்தல் (இதயப் பாதிப்புக் காரணமாக).
கால்வாய் நோயினால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகள்:
- உற்பத்தி குறைதல் (பால், இறைச்சி).
- சிகிச்சைச் செலவு அதிகமாதல்.
- பண்ணையாளரின் வருமானம் குறைதல்.
- கருச்சிதைவு ,சினைப்பிடிக்காமை.
- கன்றுகளின் இறப்பு.
- நொண்டுதல், குளம்பு கழர்தல், நிரந்தர அங்கவீனம்.
- மடியழற்சி ஏற்படல்.
- தடுப்பூசி மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் அரசாங்கத்துக்கு அதிக செலவு ஏற்படுகிறது.
கால்வாய் நோய் ஏற்பட்ட பின் என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக பிரதேச அரச கால்நடை வைத்தியருக்கு அறிவித்து நோயுற்ற விலங்குகளை தனிமைப்படுத்திச் சிகிச்சையளித்தல் வேண்டும். அரச கால்நடை வைத்தியர் தகுந்த இடங்களுக்கு அறிவித்து மாடுகளின் அசைவுகளைக் கட்டுப்படுத்துவார்கள். விசேட தடுப்பூசித் திட்டங்களைச் செய்வார்கள் (இதன் மூலம் ஏனைய கால்நடைகள் தொற்றுக்குள்ளாகுவதைத் தடுக்க முடியும்). நோயுற்ற விலங்குளை பொதுவான மேய்ச்சல் வெளிகளுக்கு அனுப்பக் கூடாது. இறந்த கால்நடைகளை முறையாக அகற்றுவது அவசியம்.

நோய் வராமல் தடுப்பது எவ்வாறு?
- தடுப்பூசி வழங்குதல்.
- நம்பிக்கையான பண்ணைகளில் இருந்து கால்நடைகளைக் கொள்வனவு செய்தல்.
- நோயுற்ற விலங்குகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தல்.
- புதிய கால்நடைகளை உடனடியாக பண்ணைக்குள் விடாமல் சில வாரங்கள் தனிமைப்படுத்தி வைத்தல் (Quarantine).
லம்பி தோல் நோய் (Lumpy skin disease)
இது, அண்மைக் காலத்தில் இலங்கையின் கறவை மாடுகளில் அடிக்கடி ஏற்படும் நச்சுயிரி (virus) நோயாகும். 1929 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்க நாடுகளில் முதன் முதலில் அவதானிக்கப்பட்ட இந்த நோய், 2019 ஆம் ஆண்டில் வட இந்தியாவில் அடையாளம் காணப்பட்டது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமாக இந்த நோய் பரவலடைந்து, இறுதியில் தமிழ்நாட்டை அடைந்து, சில வாரங்களில் வடக்கு இலங்கையையும் வந்தடைந்தது. அதன் பிறகு இன்றை வரை அடிக்கடி இலங்கையின் பல பகுதிகளில் இந்த நோய்க் கிளர்ச்சியை அவதானிக்க முடிகிறது.

இந்த நோய் உண்ணிகள் ஈ, நுளம்புகள் மூலம் அதிகளவு பரவலடைகிறது. நேரடியாக மாடுகளைத் தொடுவதன் மூலம் நோயற்ற மாடுகளுக்கும் பரவுகிறது. தாயிடம் பால் குடிப்பது மூலம் கன்றுகளுக்குப் பரவுகிறது. இந்த நோயைப் பரப்பும் பூச்சிகள், பல கிலோமீட்டர்கள் பறந்து நோயைப் பரப்ப வல்லன. எருமை மாடுகளை விட பசுமாடுகளில் அதிக தொற்றுகள் அவதானிக்கப்படும். உள்ளூர்ப் பசுக்களை விட, கலப்பினப் பசுக்கள் அதிக பாதிப்பைச் சந்திக்கின்றன. பெரிய பசுக்களை விட, கன்றுகள் அதிக பாதிப்படைகின்றன. இறப்பு வீதமும் அதிகம்.
நோய் அறிகுறிகள்:
- கடும் காய்ச்சல், உணவைத் தவிர்த்தல்
- கண்களிலிருந்து தொடர்ச்சியாக கண்ணீர் வடிதல்.
- மூக்கிலிருந்து சளி வடிதல்.
- மூச்சு விடச் சிரமப்படல்.
- கால் வீங்குதல், நடக்கச் சிரமப்படல்.
- உடல் முழுவதும் வீக்கம், கட்டிகள் தோன்றுதல்.
- கட்டிகள் 2-3 வாரங்களில் படிப்படியாகக் குறையும்.
- சில மாடுகளின் கட்டிகள் உடையும், சீழ் பிடிக்கும்.
- கட்டிகள் உடைந்த இடம் நெருப்புச் சுட்டது போலத் தெரியும்.
- கன்றுகளின் நுரையீரல் பாதிக்கப்பட்டு சளி வடியும், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு மரணம் ஏற்படும்.
- உடல் மெலியும், பாலுற்பத்தி குறையும்.
பொருளாதார இழப்புகள்:
1. மாடுகள் பலவீனமடையும்
2. பாலுற்பத்தி குறைதல்.
3. வளர்ச்சி குறையும், இழுவைத் திறன் குறையும்.
4. சினைப் பிடிக்காது, கருச்சிதைவு ஏற்படும் (இளம் சினை மாடுகளில்).
5. மடி வீக்கம் காரணமாகப் பாலுற்பத்தி குறையும்.
6. கன்றுகள் இறக்கும்.
7. காயம் காரணமாக தோலின் பெறுமதி குறையும்.
8. நோய் அறிகுறிகளின்வ்கோரமான தோற்றம் காரணமாக பால் அருந்துவதையோ, இறைச்சி உண்பதையோ மக்கள் விரும்புவதில்லை.
9. காயங்களுக்கான மற்றும் வீக்கங்களுக்கான சிகிச்சைக்கான செலவு அதிகம்.
10. தடுப்பூசிச் செலவும் அதிகம் (அண்மையில் இந்தியா இந்த நோய்க்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, ஆட்டு அம்மைத் தடுப்பூசியையும் பயன்படுத்த முடியும். இலங்கையில் சில தனியார் நிறுவனங்கள் இந்த நோய்க்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளன.)
நோய்த் தடுப்பும் பராமரிப்பும்:
- நோயுற்ற மாடுகளைத் தனிமைப்படுத்தல்
- கிருமிநாசினி மூலம் பட்டிகளைக் கழுவுதல் (பீனோல், போமலின், ஈதர்).
- காவிகளான பூச்சிகளைக் கட்டுப்படுத்தல்.
- பண்ணைகளில் உயிர்ப்பாதுகாப்பு முறைகள் (புதிய கால்நடைகளை உடனடியாக அறிமுகப்படுத்தாமை, தனிமைப்படுத்தல், புதிய விலங்குகள் மனிதர்களைத் தவிர்த்தல்).
- தடுப்பூசி வழங்கல்.
- இரண்டாம் நிலை நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை காயத்துக்கு பயன்படுத்தல்.
- கன்றுகளின் சுவாச தொற்றுக்கு அதி தீவிர சிகிச்சை அவசியம்.
- கால்நடை வைத்தியருக்கு அறிவித்து தேவையற்ற நடமாட்டத்தை தவிர்த்தல் (கால்வாய் நோய்க்கு செய்ததைப் போல).
- பாரம்பரிய மூலிகை மருத்துவம் மூலம் சிகிச்சையளித்தல்.
அடுத்த கட்டுரைகளில் மேலும் பல நோய்களைத் தொடர்ச்சியாக ஆராய்வோம்.
தொடரும்.