“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு” – திருக்குறள் (424)
சாலமன் பாப்பையா விளக்கம்:
அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி
எளியனவாகவும், அவர்மனங் கொள்ளும்படியும் சொல்லும்;
பிறர் சொல்லும் கருத்து நுண்ணியதுஎன்றாலும் அதை
எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.
இன்றைய கால வாழ்க்கையில் எம்மை மேலே உயர்த்தவும் நாட்டை அபிவிருத்தி செய்யவும், அத்தோடு உலகளாவிய வகையில் இணைந்து வாழ்வதற்கும் புதுத்தொழில் முறை (Startup companies) மிக்க உதவியாக இருக்கிறது. இந்த புதுத்தொழில் முறையை எல்லா விதமான வணிகத்துறையிலும் பிரயோகிக்கலாம். உதாரணமாக கடற்தொழில், விவசாயம், வர்த்தகம், மருத்துவம் என்று எந்த தொழில்களைப்பற்றி ஆராய்ந்தாலும் அவற்றை உருவாக்குவது தொடக்கம், பின்பு வளமாக்கி அவற்றை உலகளாவிய ரீதியில் வாடிக்கையாளர்களை கைப்பற்றி வெற்றி பெறலாம். எனது குடும்பத்தவரிடமும் என் மூதாதையரின் செயலிலும் கற்றுக்கொண்ட பன்முகத்தன்மை எனது தொழில் முயற்சிகளுக்கு எவ்வாறு கைகொடுத்தன என்பது பற்றி பகிர நினைக்கிறேன். இது வாசகர்களுக்கும் ஒரு உந்துதலாக இருக்கக்கூடும்.
பூர்வீகம்
நான் பிறந்து வளர்ந்த இடம் யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் புலவர்கள் ‘ஒலி’ பாடிய கிராமமான புலோலி. அங்கு வாழ்ந்தவர்கள் மற்றைய தமிழ் மக்கள் போலவே சிறந்த வளம் கொண்ட மக்கள் ஆவர். இலங்கையின் வடக்கு பகுதியானது, வருடத்தின் சில நாட்களே மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறும் நிலமென்றாலும், மக்கள் அந்த நிலத்தை சாதூரியமாகப் பயன்படுத்தி பல தொழில்களைச் செய்து வந்தார்கள். அப்படியான ஒரு குடும்பத்தில் தான் நான் பிறந்தேன். எனது தாயின் தந்தையார் தென்னிலங்கைக்கு சென்று வியாபாரம் செய்து, தனது குடும்பத்தைப் பேணினார். என் அப்பாவின் தந்தையார், புலோலியில் ஒரு கடை வைத்து பிழைத்து வந்தார். பின்பு அந்தக் கடையை என் தகப்பனார் எடுத்து நடாத்தினார்.

என் முதலாவது தொழில் அனுபவம் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ரொக்வெல் (Rockwell) என்ற நிறுவனத்தில் தொடங்கியது. அந்த நிறுவனத்தில் பல தசாப்தங்களாக விண்வெளி, மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தமான வேலைகளில் அனுபவமுள்ளவர்கள் பலர் வேலை செய்துவந்தார்கள். அவர்கள் என்னிலும் அதிக வயது கூடியவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களாகவும் இருந்தாலும் எனது சிறிய வயதில் ஈழத்தில் பெரியவர்களிடம் கற்றுக்கொண்ட பல விடயங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற உதவியாக இருந்தது. அவற்றில் சில பெரியோருக்கு மரியாதை கொடுப்பது, மற்றவர்கள் கதைக்கும் போது ஆர்வமாக கேட்பது, வித்தியாசமான கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது என்பவையாகும்.
இடைக்காலம்
எனது தகப்பனார் தனது பிரதான தொழிலாக பலசரக்கு கடையை வைத்திருந்தாலும், அத்தோடு மாத்திரம் அவரது நடவடிக்கைகள் சுருங்கிவிடவில்லை. அவர் கடைக்காரர் என்பதையும் தாண்டி இன்னும் பல பரிமாணங்களைக் கொண்டவராக இருந்தார். எமது கிராம உபதபால் அதிபராகவும், சமாதான நீதவானாகவும், விவசாயியாகவும், எமது பிராந்தியத்தில் மிகவும் பிரசித்திபெற்ற வல்லிபுர ஆழ்வார் கோவிலின் தர்மகர்த்தாவாகவும் அவர் இருந்தார். எனக்கு பத்து, பதினொரு வயது இருக்கும்போது நான் என் அப்பாவுடன் அவரது துவிச்சக்கர வண்டியில் அனைத்து இடங்களுக்கும் போவேன். அப்போது பார்த்து, கேட்டு அறிந்த பல விடயங்கள் இப்போதும் என் வாழ்வில் என் தொழில்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று, அவர் வல்லிபுரக் ஆழ்வார் தர்மகர்த்தாவாக இருந்தபோது பன்முகத்தன்மையான குழு உறுப்பினர்களை ஒன்று சேர்த்து, அவர்களது அபிலாசைகளுக்கு மரியாதை கொடுத்து, கோவிலையும் அதனைச் சுற்றிய இடங்களையும் அபிவிருத்தி செய்த விடயத்தைச் சொல்லலாம். அந்த உறுப்பினர்கள் வேறு வேறு கிராமங்களில் இருந்து, பல விதமான அனுபவம் உள்ளவர்களாகவும், வித்தியாசமான தொழில் செய்பவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கோவிலின் இராஜ கோபுரத்தை கட்டியெழுப்பியது மிகப்பெரிய சாதனையே.

எனது முதலாவது நிறுவனம் தொடங்கும்போது பல தொழிலாளர்களை பணிக்கு எடுக்க வேண்டியிருந்தது. மொத்தமாக சுமார் நூற்றைம்பதுக்கும் மேலான தொழிலாளர்களை நாங்கள் பணிக்கமர்த்தினோம். அதில் பிரதான குழுவாக (Core Team) சிலரை தேர்ந்தெடுக்கும் பணி என்தலையில் விழுந்தது. நான் ஈழத்தில் என் தந்தையிடம் கற்ற சில பாடங்களை வைத்து, அந்த குழுவைத் தேர்ந்தெடுத்தேன். அந்தக்குழு அங்கத்தவர்கள் ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, தாய்வான், சோமாலியா, சீனா, ஜேர்மனி, லெபனான், வியட்நாம், இஸ்ரேல் என்று பல நாட்டையும் சேர்ந்தர்கள். அவர்கள் நாட்டால் மட்டுமல்ல, மொழியாலும், கலாசாரத்தாலும், நடத்தையாலும் தமக்கிடையே பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தனர். எனது வியட்நாமிய நண்பர் அமெரிக்க-வியட்நாம் போரின் பின்னர் அகதியாக அமெரிக்கா வந்து அமெரிக்காவின் முன்னணிப் பல்கலைக்கழகமான பேக்கிளியில் (UC Berkeley) பட்டம் பெற்றவர். இன்னொரு நண்பரோ லெபனானின் உள்நாட்டுப் போரின் போது அமெரிக்கா வந்தவர். இவர்கள் இருவரினது அனுபவங்களும் வித்தியாசமானதோடு அவர்களது வேறுபட்ட பின்னணி காரணமாக அவர்களின் சிந்தனைச் செயல்முறைகளும் வேறானவையாக இருந்தன. அப்படியான பன்முகத்தன்மையான பின்னணிகளைப் பிரயோகித்து, நாங்கள் எதிர்கொண்ட சிக்கல்களை திறமையாகச் சந்தித்து வெற்றிகொண்டோம்.
வளர்ந்த காலம்
இலங்கையின் உள்நாட்டுப் போரால் என் வாழ்வு திசைமாறியது. தென்னாபிரிக்கா நாடான பொட்ஸ்வானா (Botswana) நாட்டில் என் மூத்த அண்ணா பணிபுரிந்து கொண்டிருந்தார். எனவே போரின் காரணமாக க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றாமல் நானும் இடம்பெயர்ந்து பொஸ்ட்வானவுக்குச் சென்றேன். அது ஒரு சுவாரஸ்யமான நாடு. ஆபிரிக்காவை ஆண்ட வெள்ளையர்கள் அந்தநாட்டின் சுரங்கங்களில் இருந்த வைரக்கல்லைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. எனவே அவர்கள் நிலத்தைப் பிரித்து அந்த நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டார்கள். அதன்பின் கண்டெடுத்த வைரச் சுரங்கங்களால் அந்த நாடு செல்வந்த நாடாக முன்னேறியது. எனினும் அந்த நாட்டுமக்களின் கல்வியறிவு முன்னேற்றகரமாக இருக்கவில்லை. எனவே வேலைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆட்களை தருவித்தார்கள். அவர்களில் ஒருவர் தான் என் சகோதரர். அங்கே வேலைக்காக உலகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். அங்கு அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கடமை உணர்வுடன் வேலை செய்துவந்ததை என்னால் அவதானிக்கமுடிந்தது. இப்படி பன்முகமான பின்னணியில் பிறந்து, வேறுபாடான பொருளாதாரநிலையில் வளர்ந்தவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தமை எனக்கொரு படிப்பினையாக இருந்தது.

அமெரிக்காவில் நிறுவனங்களை நடத்தும்போது என் நிறுவனத்தில் பன்முகமான நபர்களைச் சந்தித்து அவர்களுடன் இணைந்து வேலை செய்யவேண்டியிருந்தது. அந்த நேரங்களில் எனது ஆபிரிக்க அனுபவம் மிக்க உதவியாக இருந்தது. உதாரணமாக எனது முதலாவது நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் மேலே நான் கூறியதுபோல பல நாடுகளிலிருந்து ’சிலிக்கன் வலி’க்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள். அவர்கள் பலரையும் வேலைக்கு எடுத்து, அவர்களின் அனுபவங்களையும் உபயோகித்து, சிக்கல்களை வெற்றிகரமாக எதிர்நோக்கினோம். அதில் எனது வியட்நாம் நண்பர் அமெரிக்காவுக்கு அகதியாக 1970களில் சின்ன வயதில் வந்தவர் என்பதால் அவர் ஆங்கிலத்தில் தொடர்பாட சிரமப்பட்டாலும், அவரது ஆக்கபூர்வமான அறிவுரைகளும், அதை அவர் எடுத்துச் சொல்லும் விதங்களும் பல கடினமான நேரங்களில் உதவியாக இருந்தன. அதேபோல் லெபனான் தொழிலாளியும் அகதியாக வந்து அவரது தகப்பனார் அமெரிக்காவில் கட்டடத் தொழிலாளராக வேலை செய்து தனது பிள்ளைகளை பல்கலைக்கழகம் அனுப்பிப் படிப்பித்தவர். இப்படியானவர்களின் கடின வேலைத்தன்மைக்கு நிகரானது எதுவுமில்லை.
கற்றவை
நான் எனது வாழ்க்கைப் பயணத்தை எனது குடும்பத்தில் தொடங்கி பின் வாழ்வின் ஒவ்வொரு காலத்திலும் நான் சந்தித்த மக்களிடம் கற்றுக்கொண்ட பன்முகத்தன்மையை (Diversity) வைத்து உருவாக்கினேன்.

- சிறிய வயதிலிருந்தே வயதானவர்களிடம் கற்றுக்கொள்வது.
- வித்தியாசமான வாழ்க்கைப் பின்னணியிலிருந்து வந்தவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது.
- பன்முகமான கல்வித்துறை மற்றும் பாடசாலை/பல்கலைக்கழகத்தில் கற்றது.
- அனுபவமுள்ளவர்களிடம் அறிந்துகொண்டு அதை தற்போதைய தேவைக்கேற்றவாறு பயன்படுத்துவது.
- இளையவர்களுடன் இணைந்து புதிய நுணுக்கங்களைப் பழகுவது மற்றும் பயன்படுத்துவது.
எனது அனுபவத்திலிருந்து ஓர் உயர்ந்த கட்டடத்திற்கு வலுவான அத்திவாரம் எவ்வளவு முக்கியமானதோ அதேபோல பன்முகத்தன்மையானது சிக்கலான மற்றும் நிலையான வடிவமைப்புகள் செய்வதற்கு முக்கியம். ஒரே மனப்பான்மையுடன் இருப்பவர்கள் ஒரே மாதிரி சிந்திப்பதால், சில நேரங்களில் இலகுவான காரணங்களையும் சிந்திக்கத் தவறிவிடுவார்கள். அதை முதலிலிருந்தே தவிர்ப்பதற்கு பன்முகமான அனுபவமும் அறிவுமுள்ளவர்களை அணியில் சேர்ப்பதும் அவசியம். நான் இதை “வலிமையில் பன்முகத்தன்மை அத்தோடு பன்முகத்தன்மையில் வலிமை (Diversity in Strength and Strength in Diversity)” என்று அணியினரை ஊக்குவிக்க அடிக்கடி கூறுவேன். இந்த நுணுக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அணியினரை ஒன்றாக்கி வெற்றிபெற முடியும்.
தொடரும்.