முதல் இரண்டு அத்தியாயங்களில் கடல், கரையோரங்கள், காடுகள் மற்றும் அங்குள்ள உயிரினங்கள், ஏனைய பல்வகைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. இம் மூன்றாம் அத்தியாயம், தரையிலுள்ள முக்கியமான அம்சங்களை பல்வகைமையுடன் தொடர்புபடுத்தி ஆராயவுள்ளது. ஆகையால், இவ் அத்தியாயம் ‘நிலப்பயன்பாடும் நன்னீர் நிலைகளின் பல்வகைமையும்’ எனும் தலைப்பில் அமைகிறது.
வட மாகாண நிலம், நன்னீர்நிலைகளின் பல்வகைமை
வடக்கு கிழக்கு பிரதேசம் 8 மாவட்டங்களைக் கொண்டது. இலங்கையின் முதலாவது நிர்வாகக் கட்டமைப்பு வட மாகாணத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. வட மாகாணத்தின் அடையாளக் கொடி மையத்தில் சூரியனைக் கொண்டுள்ளது. இது இம் மாகாணத்தின் வல்லமைமிக்க சக்தித் தோற்றங்களின் உருவாக்கலை சுட்டுகின்றது. இக் கொடியின் நெட்டையான மூன்று வரிகளினால் தொழில், தொழிற்றுறைகள், பொதுமைப்பாடடைந்த நோக்குடன் செயற்படுதல் என்பன குறிக்கப்படுகின்றன. இது சமாதானம், ஒன்றிணைந்த வாழ்வு போன்றவற்றையும் குறிக்கும். கொடியின் பச்சை நிறமானது பசுமையையும் விவசாயத்தையும் காட்டுகிறது. சுற்றிவர இருக்கும் நீலநிறம், மாகாணத்தைச் சூழவுள்ள கடலை எடுத்துக்காட்டுகின்றது. இம் மாகாணத்தின் இலட்சணையில் பனைமரம் காணப்படுகின்றது. பனைசார்ந்த மரபுரீதியான வாழ்வியலை, பொருளாதார அடித்தளத்தை இச் சமுதாயம் கொண்டிருப்பதை இது காட்டுகின்றது. அன்னப் பறவை போன்று வரையப்பட்டுள்ள யாழின் உருவம், மூன்று பிரதான உள்ளடக்கங்களை கொண்டுள்ளது. யாழ், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யாழ்ப்பாணம் எனும் பெயரை சுட்டி நிற்கின்றது. அன்னம், பாலையும் நீரையும் பிரித்தெடுப்பதாக கருதப்படும் அன்னத்தின் பண்புடைய, நன்மை தீமை என்னவென்று பிரித்தறியக்கூடிய ஆற்றலுடைய சமுதாயத்தை குறிக்கின்றது. ஐந்து இழைகளானது இம் மாகாணம் கொண்டுள்ள ஐந்து மாவட்டங்களையும் குறிக்கின்றது.
வட மாகாணத்தின் தரைத்தோற்றம்
இம் மாகாணத்தில் ஐந்து பிரதான தரைத் தோற்றங்களைக் காணமுடியும்.
- சாதாரணமான தரை (Undulating Plains).
- பழைமையான கடற்கரை (Old Beaches).
- நீண்ட நீர்நிலைகளுடன் தொடர்புபட்ட தரை.
- மண்மேடுகள் அடங்கிய கடற்கரை.
- சுண்ணக்கல் பாறைத் தளங்கள்.
செங்கபில நிற மண் (Reddish Brown Earth soil), செம்மஞ்சள் மண், வண்டல் மண் (Alluvial Soils), களிமண், கல்சியம் அற்ற கபில மண் (Non Calcic Brown soil) செங்கபில மண், லட்டரைட் மண் (Reddish Brown), செம்மஞ்சள் பொடோசோலிக் மண் என்பன இம் மாகாணத்தில் காணப்படும் மண்வகைகளாகும்.
ஒவ்வொரு மண் வகைகளும், அவற்றிற்குரிய குணாம்சங்களை கொண்டிருப்பதால் அப் பகுதிகளில் வாழும் பயிர்வகைகளும் இவ் மண்வகைக்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டிருக்கும். உதாரணமாக செங்கபில மண்ணானது மானாவாரிப் பயிர்ச்செய்கைக்கும் நீர் இறைத்து பயிர்செய்யும் பயிர்களுக்கும் பொருத்தமானது. அவ்வாறே வேறுபட்ட பயிர்வகைகள் அம் மாகாணங்களில் அம் மண் வகைக்கேற்ப வகைப்படுத்தப்படும்.
இவற்றோடு இணைந்ததாக ஆற்றுப் படுகைகள், சிறிய – பெரிய குளங்கள் போன்றவற்றையும் வடமாகாணம் கொண்டுள்ளது. மொத்தமாக 1,424 சிறிய குளங்கள் காணப்பட்டாலும் 608 சிறிய குளங்களே பாவனையிலுள்ளன. 57 சதவீதமானவை பாவனைக்குட்படாமல் கைவிடப்பட்டுள்ளன. இத் தரவுகள் மாறுபட்ட குடித்தொகைகள் மற்றும் விவசாயம் சம்பந்தமான மாறுபாடுகள் போன்ற இன்னோரன்ன விடயங்களை கொண்டுள்ளன.
வடமாகாணத்தின் 20 ஆற்றுப் படுகைகள், 1424 சிறிய குளங்களை ஒன்றிணைக்கின்றன. சூரியனாறு, சாவலாறு, பல்லாடியாறு, மணலாறு, கோடாலிக்கலு ஆறு, பேராறு, பழையாறு, மருதப்பிள்ளை ஆறு, தேராவிலாறு, பிரமந்தனாறு, நெத்தலியாறு, கனகராஜன் ஆறு, கல்வளப்பு ஆறு, அக்கறாயன் ஆறு, மண்டைக்கல் ஆறு, பல்லவராயன் கட்டு ஆறு, பாலியாறு, சப்பியாறு, பறங்கி ஆறு, நாயாறு என்பன இக்குளங்களை இணைக்கும் ஆறுகளாகும். இவற்றில் பல பெருங்குளங்கள் அல்ல; சிறிய குளங்களாகவே காணப்படுகின்றன.
சிறு குளங்களில் அநேகமானவை அரச நிர்வாகத்திற்கு உட்படாதவை. மக்கள் செறிவாக வாழும் இடங்களிலுள்ள சிறிய வாழ்விடக் கிணறுகள், விவசாயக் கிணறுகள் என்பனவும் குறித்துக்காட்டப்பட வேண்டிய நீர் நிலைகளாகும். வாழ்விடங்களைச் சுற்றிவரவுள்ள ஆற்றுப்படுகைகள், பெருங்குளங்கள், சிறிய குளங்கள், கிணறு என்பன நன்னீர் நிலைகளாக உள்ளன. இவற்றோடு அண்டிய வாழ்வியல் வகைகளே எம்மவர்களின் பேண்தகு நிலைக்கு வழிவகுக்கின்றது. மேற்கூறிய இவ் அறிமுகத் தரவுகள் இக் கட்டுரையில், கீழ்வரும் விடயங்களுக்கு உசாத்துணையாக கொள்ளப்படும்.
நன்னீர் நிலைகளின் பல்வகைமை
ஒப்பீட்டளவில் வடமாகாணமானது, வடமத்திய மாகாணத்தை போலல்லாது, பெரும் நீர்ப்பரப்புகளை குறைவாகவே கொண்டுள்ளது. மன்னார் மாவட்டத்திலுள்ள கட்டுக்கரைக் குளம், கிளிநொச்சிலுள்ள இரணைமடுக்குளம், வவுனியா மாவட்டத்திலுள்ள பூவரசங்குளம், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முத்தையன்கட்டுக் குளம் குறித்துச் சொல்லக்கூடிய பெருங்குளங்களாகும். யாழ் மாவட்டத்தில் பெருங்குளங்கள் இல்லை. இப் பெருங்குளங்களிலிருந்து பெறப்படும் நீர், பல்வேறுபட்ட பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இக் குளங்களில் காணப்படும் உயிர்ப்பல்வகைமை சிறிய அளவிலேயே வேறுபாட்டைக் கொண்டுள்ளன. உதாரணமாக பூவரசங்குளத்தின் குளப்படுகையில் வாழும் தாவர வகைகளுக்கு இடையில் வேறுபாட்டைக் குறிப்பிடலாம். செந்தாமரை (Lotus), வெண்தாமரை (Water lily), ஐக்கோணியா (Icornia), சல்வீனியா (Salvinia), பிஸ்ரியா (Pistia), ஐதரில்லா (Hydrilla) போன்றன இங்கு வளரும் நீர்த் தாவரங்கள் ஆகும். கிளைமிடமோனஸ் (Chlamydomonas), நன்னீர் அல்காக்கள் என்பனவும் இங்கு காணப்படும்.
இவை தவிர, நீராம்பல், குள அறுகு, யானைப்புல் போன்ற தாவரங்களும் இந் நன்னீர் நிலைகளில் காணப்படுகின்றன. வரட்சிக் காலங்களில் குறைந்துபோகும் இத் தாவர வகைகள் மாரிகாலத்தில் மறுபடியும் பெருகும் இயல்பை உடையன. குளப்படுகைகளில் நாயுருவி, கடுகு நாவல், கிடைச்சி போன்ற தாவரங்கள் வளருவதற்கு ஏதுவான சூழல் நிலவுகின்றது. நன்னீர் தாவரங்களில் அநேகமானவை குளச் சாகியத்துடனே அவற்றின் வாழ்க்கை வட்டத்தை முடித்துக்கொள்ளும் இயல்புடையன. தாமரை போன்ற தாவரங்களின் பல்வகைமை நன்னீர் நிலைகளிலுள்ள ஏனைய உயிரினங்களின் பரம்பலில் செல்வாக்குச் செலுத்துகின்றன. உதாரணமாக குளப்படுகையில் காணப்படும் சில தாவரங்களின் பரம்பல் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். இதனால் அங்கு வாழும் மீன்களின் எண்ணிக்கை குறையாது.
சூழற் சமநிலையை பேணுவதற்கு இத் தாவரப் பல்வகைமை கணிசமான அளவு பங்களிப்பு செய்கிறது. நகர்ப்புறங்களை அண்டிய நன்னீர் நிலைகளில் வாழும் சில தாவரங்கள், பார உலோகங்களால் குளத்து நீர் நஞ்சாவதைத் தடுக்கின்றன. ஆயினும், மேற்பரப்பில் மிதக்கும் தாவரங்களை, சேதனப்பசளை உருவாக்கத்துக்கு பயன்படுத்தும் போது, பசளையில் பார உலோகங்கள் காணப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
பெருங்குளங்களில் ஊர்வன, ஈருடகவாழிகள், பறவைகள், மீனினங்கள், இன்னோரன்ன நீர்ப்பூச்சி வகைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து, தொடர்புகளை ஏற்படுத்தி, உணவுச் சங்கிலியை உருவாக்குகின்றன. பெரும் நீர்ப்பரப்புகளில் முதலை இனங்கள் வாழுகின்றன. சுமார் 13 தவளை இனங்கள், தேரை இனங்கள் இக் குளங்களில் வாழுவதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக Duttaphrynus melanostictus, Bufo Scaber என்பவற்றை சொல்லலாம். இக் குளங்களிலும் குளங்களை அண்டிய பகுதிகளிலும் ஏறத்தாள 18 வகை பாம்புகள் காணப்படுகின்றன. இப் பாம்புகளின் பரம்பல், இவற்றுடன் தொடர்புபட்ட உணவுச் சங்கிலியில் பங்கெடுக்கும் ஏனைய மீனினங்களின் வகைகளிலும் செல்வாக்கைச் செலுத்துகின்றன. இக் குளங்கள் சிலவற்றிலிருந்து பாய்ச்சப்படும் நீர் சற்று உவர்த்தன்மையை கொண்டிருப்பதாக அண்மைக்காலத் தரவுகள் காட்டுகின்றன. இதனால் மாரி காலங்களில் ஓடும் புதுவெள்ளத்தினால் கடற்கரையில் வாழும் பாலை, மணலை, வெள்ளியான் போன்ற மீனினங்கள் இக் குளங்களை நாடி வருதல் அங்கு வாழும் மீனினங்களின் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவது தெளிவாகின்றது. கட்டுக்கரைக் குளத்தை அண்டிய கடற்பகுதிகளிலிருந்து அருவியாறு ஊடாக தேக்கம் வரை புதுவெள்ளத்துடன் கலந்து வரும் மீனினங்களின் பரம்பலை இதற்கு உதாரணம் காட்டலாம்.
இக் குளங்களை அண்டிய ஆற்றோரங்கள், குளப்படுகைகளில் பரவிக் காணப்படும் காட்டு விலங்குகளும் இவ்வுயிர்ப் பல்வகைமையில் அடக்கப்படலாம்.
நிலப் பாவனையின் பல்வகைமை
வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களும் அவற்றின் நிலப் பயன்பாட்டைப் பொறுத்தவரையில் வேறுபட்ட போக்கை காட்டுகின்றன. உதாரணமாக மக்கள் வாழும் இடப்பரப்பு யாழ் மாவட்டத்தில் 28.9 வீதமாகவும், வவுனியாவில் 5.5 வீதமாகவும், கிளிநொச்சியில் 3.6 வீதமாகவும், முல்லைத்தீவில் 2.7 வீதமாகவும், மன்னாரில் மிகக்குறைந்தளவாக 1.3 வீதமாகவும் காணப்படுகின்றது. காட்டின் பரம்பல், மன்னாரில் அதிகமாக 80 வீதமாகவும், யாழ்ப்பாணத்தில் குறைவாக 2 வீதமாகவும் உள்ளது. நெல்வயல்கள், கடல்நீரேரிகள், சிறிய புற்தரைகள், பற்றைக்காடுகள், மண்மேடுகள் அல்லது கடற்கரைகள், வண்டல் பாதைகள், ஏனைய பயிரிடப்படும் பகுதிகள், சேற்று நிலங்கள், சிறிய மற்றும் பெரிய பாறைகள், தென்னை மரங்கள், புற்தரைகள், சேனைப் பயிர்ச்செய்கை நிலங்கள், ஆறுகள், கட்டடங்கள், குளங்கள், கைவிடப்பட்ட குளக்கரைகள் என பல்வேறுவகைப்பட்ட நிலங்கள் வடபிராந்தியத்தில் அமையப்பெற்றுள்ளன. இவற்றுள் காடுகளே அதிக பரப்பளவில் காணப்படுகின்றன. 6.82 விகித நிலப்பரப்பு நெற் செய்கைக்காக பயன்படுத்தப்படுகிறது.
கிழக்கு மாகாண நிலம், நன்னீர் நிலைகளின் பல்வகைமை
கிழக்கு மாகாணமானது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்குகின்றது. அதன் நிலம் நாட்டின் 16 வீத கடற்பரப்பை தொட்டுச்செல்கிறது. மேலும் இந்நிலம் 25 வீத கடற்கரை, அதேயளவு கடல்நீரேரிகள், 28 வீத கண்டல் பரப்புகள், 31 வீத நல்ல நிலங்கள், 5 வீத மண்மேடுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இம் மாகாணம் 55 வீதமளவில் தாவரப் போர்வையை கொண்டிருப்பதுடன், இது நாட்டின் தாவரப் பரம்பலின் மொத்த வீதத்தில் 28 வீதம் ஆகும். 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் இம் மாகாணம் பெரும் அழிவுகளைச் சந்தித்தது. அதன் பின்னர் இம் மாகாணத்தின் நிலப்பயன்பாட்டில் மாறுபாடு ஏற்பட்டது.
நிலப்பல்வகைமை
இம் மாகாணத்தின் நிலம் அண்ணளவாக கடல் மட்டத்திலிருந்து 50 மீற்றர் உயரத்தில் அமைந்திருந்தாலும், சில இடங்களில் மட்டும் 300 மீற்றர் வரை உயரத்தை தொடுகிறது. கிழக்கு மாகாணத்தின் தரைத்தோற்ற அமைவிடத்தில் காடு, சிறு பற்றைக்காடு என்பன பிரதான அங்கம் வகிக்கின்றன. இது அண்ணளவாக 65 சதவீதம் ஆகும். இம் மாகாணத்தில் விவசாய நிலங்கள் 22 வீதமாகவும் வாழ்விடங்கள் 7 வீதமாகவும் நன்னீர் நிலைகள் 9 வீதமாகவும் காணப்படுகின்றது. கிட்டத்தட்ட 77 வீதமான நிலப்பரப்பு வருடம்பூராகவும் பச்சைப் போர்வையாக காணப்படுவது இம் மாகாணத்தின் சிறப்பம்சம்.
வரள் நிலங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. குடியேற்றங்கள் (இவற்றில் கட்டுமானங்கள் மற்றும் குடியிருப்புகளும் அடங்கும்), விவசாய நிலங்கள் (நெல், சேனைப்பயிர்ச்செய்கை, தெங்கு மற்றும் ஏனைய பயிர்கள்), காடுகள், சேற்று நிலங்கள், புற்தரைகள், சிறு பற்றைக்காடுகள், பாதைகள், கல்லுடைக்கும் தொழிற்சாலைகள், மண் மற்றும் கடற்கரைகள், நன்னீர்நிலைகளும் வாய்க்கால்களும் மற்றும் பிற நீர்நிலைகளுமாக இந் நிலப் பயன்பாடு பிரிக்கப்பட்டுள்ளது.
நன்னீர்நிலைகள்
கிழக்கு மாகாணத்தில் மகாவலி ஆற்றின் தொடர்பு காணப்படுவதால் நாட்டிலுள்ள நிரற்படுத்தப்பட்டுள்ள 103 ஆறுகளில் 38 ஆறுகள் கிழக்கு மாகாணத்தினூடாக ஊடறுத்துப் பாய்ந்து, ஊற்றுக்களைத் தொட்டுச் செல்வது இந்நிலத்திற்கு வளத்தைச் சேர்க்கிறது. இவ் ஆறுகள் உயர்நிலங்களில் வழிந்தோடும் நீரை கடலினுள் சேர்க்கிறது. கும்புக்கண் ஓயா மற்றும் மகாவலி கங்கை என்பன நிரந்தரமாக வருடம்பூராகவும் நீரை கொண்டிருக்கும் ஆறுகளாகும். இந் நிரற்படுத்தப்பட்ட ஆறுகளின் பெயர்கள் இங்கு தரப்பட்டால் வாசகர்களுக்கு பிரயோசனமுள்ளதாக இருக்கும். அவ்வாறுகளாவன, கும்புக்கன் ஓயா, பகுர ஓயா, கிரிககுள ஓயா, ஹெலவஅரா, வில ஓயா, ஹெட ஓயா, கரண்ட ஓயா, சயமென ஆறு, சாய்மனை ஆறு, தண்டியாடி ஆறு, கஞ்சிக்குடிச்சாறு, ரூபுஸ் ஆறு, பனல்ல ஓயா, அம்பலம் ஓயா, கல் ஓயா, அந்தல ஓயா, தும்பன்கேணி ஆறு, நமக்கட ஆறு, மண்டிப்பற்று ஆறு, பத்தந்தே ஆறு, வெற்றாறு, உண்ணிச்சை ஆறு, முன்டெனி ஆறு, மியங்கொல்லே எல, மாதுறு ஓயா, புலியன்போட்ட ஆறு, கிரிமேச்சி ஓடை, போதிகொட ஆறு, மண்டனாறு, மக்கரைச்சி ஆறு, மகாவலி ஆறு, கந்தளை ஆறு, பன்ன ஓயா, பாலம்பூத்த ஆறு, பன்குளம் ஆறு, குஞ்சிக்கும்பன் ஆறு, புலன்குட்டி ஆறு, யானு ஓயா மற்றும் மீ ஓயா என்பனவாகும்.
இவ் ஆறுகளின் பெயர்களிலுள்ள வேறுபாடுகள், உதாரணமாக ஆறு, ஓடை, எல, ஓயா மற்றும் கங்கா என்பன இவ் ஆறுகளின் பருமனை குறிப்பாக அகலத்தை சுட்டிக் காட்டுவது, இவ் ஆறுகளின் பல்வகைத் தன்மையை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
கிழக்கின் ஆறுகளின் கொள்ளளவும் நீர் வருகையும் நீரை கடலுக்குள் அனுப்பும் அளவும் அதிகமானதாகும். இவ் ஆறுகள் கடலைத் தொடுவதனால் இவற்றின் உயிர்ப்பல்வகைமையும் வேறுபடுகின்றன. உதாரணமாக இவ் ஆறுகள் கடல்நீரேரிகளிலுள்ள கடல் மீன்களைக் கொண்டுவருவதால், இவ் ஆறுகளில் மீன்களின் பல்வகைமை அதிகரித்துக் காணப்படுகின்றன.
கடல்நீரேரிகள் முக்கியமாக குறித்துச் சொல்லப்பட வேண்டிய விடயமாகும். இவை கிழக்கு கரையோர உயிரியற் சாகியத்தில் முக்கியமான பங்குவகிக்கின்றது. கொக்கிளாய் நீரேரியானது வடக்கிலிருந்து கிழக்கைத் தொடும் நீரேரியாகும். பல்வக்கை நீரேரியானது சிறியதாக இருந்தாலும் செறிவான கண்டல் தாவரங்களை உள்ளடக்கியுள்ளது. பெரிய கரைச்சி மற்றும் சிறிய கரைச்சி ஏரிகள் என்பன சிறிதாக இருந்தாலும் அநேக வகையான மீன்களுக்கும் நன்னீர் உயிரினங்களுக்கும் வாழ்விடமாக இருப்பதோடு இடம்பெயரும் பறவைகளின் புகலிடமாகவும் திகழ்கின்றன. பைரேற் கோப் ஏரியானது குச்சவெளி, போடவக்கட்டு என்னும் பகுதிகளில் முருகைக்கற் பாறைகளைக் கொண்டுள்ளது. உப்புவெளி நீரேரியும் தம்பலகாமம் நீரேரியும் சற்று உப்புத் தன்மை வாய்ந்த நீரைக் கொண்டுள்ளது. உள்ளக்களி, பனிக்கன்கேணி என்பன பறவைகளின் புகலிடமாக விளங்குகின்றன. கோமாரி ஏரியிலும் பறவைகள் வந்தடையும். பொத்துவில் பன்னம ஏரி, குனுக்குளம், ஒக்கண்டா ஏரி, பகுர ஏரி, யக்கல ஏரி என்பனவும் புலம்பெயர் பறவைகளின் வாழிடமாகக் காணப்படுகின்றன.
உண்ணிச்சைக் குளம், சேனநாயக்க சமுத்திரம் என்பன பெருங்குளங்களாக அமைந்துள்ளன. இவற்றிலுள்ள தாவர வகைகள் பெரும்பாலும் வட நீர்நிலைகளை ஒத்துள்ளன. அக் கரையோரங்களிலுள்ள இலுப்பை மரங்களை குறித்துச் சொல்லலாம். முதலைகள், ஊர்வன, பறவைகள் மற்றும் காட்டு விலங்குகள் போன்றனவற்றில் பெரிதளவில் வேறுபாடுகள் கண்டறியப்படவில்லை.
தொடரும்.