பயணங்களின்போது நூல்களை வாசிப்பதற்காகக் கொண்டு செல்லும் வழமை இன்றைய திறன்பேசி (Smartphone) யுகத்தில் அருகிவிட்டாலும் முற்றாக இல்லை என்று கூறிவிட முடியாது. இன்று புகையிரதப் பயணங்களில் திறன்பேசிகளில் இசையை, விரிவுரையைக் கேட்டவாறு செல்வார்கள்; பிடித்தமான ஏதோவொன்றைப் பார்த்தும் கேட்டும் ரசித்தும் பயணங்கள் தொடரும்.
40 வருடங்களுக்கு முன்னர் 1975 – 1979 காலப்பகுதியில் கட்டுப்பெத்தை வளாகத்தில் (தற்போதைய மொரட்டுவப் பல்கலைக்கழகம்) கட்டுமானப் பொறியியல் (Civil Engineering) படிக்கச் சென்ற நாகலக்ஷ்மி அக்கா (உயிர்நிழல் – லக்ஷ்மி) விடுமுறையின் போது சுன்னாகம் – கொழும்பு புகையிரதப் பயணங்களின்போது அவரது அப்பா படித்த புத்தகங்களைப் படிப்பதற்காக எடுத்துச் செல்வார்; மு. வரதராசனாரது அகல்விளக்கு, கயமை; கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு முதலானவை. நாகலக்ஷ்மி அக்காவினுடைய அம்மா அமரர் திருமதி. ஞானரத்தினம் (எங்களது தாய்வழி உறவினர்) சிறுவயதில் எமக்கு இதைச் சொன்னார். நாகலக்ஷ்மி அவர்கள் வாசிப்பின் உன்னதத்தை, உலக இலக்கியத்தின் இன்னொரு பக்கத்தை அறிந்து கொண்டது பிரான்சுக்குப் போன பிறகுதான்.
உரோம் பேரரசு ஒருநாளில் கட்டப்பட்டதல்ல
பிரெஞ்சு மொழியில் கி.பி. 1190 காலப்பகுதியில் உருவான “Rome ne fu pas faite toute en un jour” என்ற பழமொழியை 1953 இல் ஜோன் கீவூட் ஆங்கிலத்தில் வெளியிட்ட பின்னரே “உரோம் பேரரசு ஒருநாளில் கட்டப்பட்டதல்ல: Rome wasn’t built in a day” என்ற சொற்றொடர் உலகில் அதிகம் மேற்கோள் காட்டப்படும் ஆங்கில வாசகங்களில் ஒன்றாகியது. கிறீன் தமிழில் மருத்துவம் கற்பிக்க ஆரம்பித்தமையும் ஒருநாளில் நிகழ்ந்ததல்ல.
அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திலிருந்து ஜேக்கப் பேர்க்கின்ஸ் என்ற கப்பலில் 1847 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 20 ஆம் திகதி சென்னையை நோக்கிப் புறப்பட்ட மருத்துவர் கிறீன் தனது நீண்ட கடற்பயணத்தின் போது கற்பதற்காகத் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் எடுத்து வருகிறார். கிறீன் அமெரிக்காவிலிருந்து புறப்படும்போது தமிழ் இலக்கண நூலைத் தேடி எடுத்து வந்தமைக்கு ஒரு நோக்கம் இருந்தது. சவால்களை எதிர்கொண்டு 4 மாதங்களுக்கு மேற்பட்ட கடற்பயணத்தின் பின்னர் கிறீன் 1847 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 4ஆம் திகதி சென்னையை அடைந்து, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஒக்ரோபர் 6ஆம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்தார்.
கிறீன் 1848 இல் மானிப்பாயில் மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்து மருத்துவர்களைப் பயிற்றுவித்தார். இதனால் யாழ்ப்பாணம் மேலைத்தேச மருத்துவத்தின் பயனை அனுபவித்தது. கிறீன் 1852இல் கல்வின் கற்றர் எழுதிய அங்காதிபாதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார்.
தமிழ்மொழி மூலம் ஆங்கிலமருத்துவத்தைக் கற்பிப்பதற்கு பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து நூல்களும் தமிழ்மொழியில் இருக்கவேண்டும் என்று கிறீன் கருதினார். கிறீன் தானே மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டதுடன் ஒரு சில நூல்களை மொழிபெயர்க்கும் பணியைத் தனது நம்பிக்கைக்குரிய மாணவர்களிடம் ஒப்படைத்தார். மொழிபெயர்ப்புப் பணியின்போது உதவுவதற்காகத் தமிழும் சம்ஸ்கிருதமும் வல்ல பண்டிதர் நெவின்ஸ் அவர்களை நியமித்ததுடன் அனைத்தையும் கிறீன் மேற்பார்வை செய்தார். பண்டிதர் நெவின்ஸ் அவர்களுக்கு டிஸ்பென்சரியிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து மாதந்தோறும் 2 ஸ்ரேலிங் பவுண் சம்பளமாக வழங்கப்பட்டது.
Translation – மொழிபெயர்த்தல் என்ற சொல்லுக்கு தொல்காப்பியத்தில் அதர்ப்பட யாத்தல் என்ற சொல் வழங்கப்படுகிறது. அதர்ப்பட யாத்தல்: மொழிபெயர்ப்பு எனத்தோன்றாதவாறு மூலநூல் போலவே தோற்றுமாறு அதனோடு பொருந்த அமைப்பது ஆகும்.
கிறீனது தமிழுணர்வும் கலைச்சொல்லாக்க வழிமுறையும்
தமிழில் மருத்துவம் கற்பிக்க வேண்டும் என்ற சிந்தனை கிறீனுக்கு ஏற்பட்டபோது தமிழிற் கலைச்சொற்களை (துறை சார்ந்த சிறப்புச் சொல்) உருவாக்குவது அவசியம் என்று கருதி புதிய சொற்களை உருவாக்கும் முயற்சியில் கிறீன் ஈடுபட்டார். இதற்காக பின்வரும் விதிமுறைகளைக் கைக்கொண்டார்.
1. தமிழில் வழக்கத்திலிருந்த சொற்களுள் மிகப்பொருத்தமானதையும் சுருக்கமானதையும் தேர்ந்தெடுத்தார். உதாரணம்: Hepatic Disorder – ஈரற் பிசகு, Histology – திசுவறி விளக்கம், இ(கி)ஸ்தாலுகம்)
2. அடுத்துத் தமிழ்ச் சொற்களிலிருந்து பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து சிறுமாற்றங்களுடன் கலைச்சொல் உருவாக்கினார். ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் இருப்பின் அவைகளில் ஒன்றைத் தெரிவு செய்தார். உதாரணமாக Diagnosis என்பதற்கு நோய்நிதானம், ரோகஞம் ஆகிய சொற்கள் மருத்துவர் கிறீனால் பயன்படுத்தப்பட்டன. இங்கு ரோக என்ற சம்ஸ்கிருதச் சொல்லே தமிழில் ரோகம், உரோகம் என்று வழங்கப்படுகிறது. அதேபோல் நிதான என்ற சம்ஸ்கிருதச் சொல்லே தமிழில் நிதானம் என்று வழங்கப்படுகிறது.
இன்று Diagnosis என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நோய் நிர்ணயம், நோயறிதல், நோய்நாடல், நோய் ஆய்வுறுதி, நோயாய்வு முதலான பல பதங்கள் வழங்கப்படுகின்றன.
3. தமிழிலிருந்து தேவையான சொல் கிடைக்காதபோது கிறீன் ஆங்கில உச்சரிப்பையும் ஒலியையும் பேணி ஆங்கிலத்திலிருந்து முதனிலையைத் தெரிவு செய்து தமிழ் மரபிற்கு ஏற்றவாறு விகுதியை அமைத்தார்.
உதாரணமாக Aneurism – அனுரிசம்; Vertebra – வேடிபிறம்; Prostatic gland – புரஸ்த கோளம், புரஸ்தி; Canula- கனுலை, கனுலம்; Carcinoma, Cancer – காசினோமம், கன்சர், புற்று, குலிரம்; Plasma – பிளஸ்மம் முதலான கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டன.
4. அவ்வாறு முடியாதவிடத்து சம்ஸ்கிருதத்திலிருந்து தேவையான சொல் பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக Anatomy என்ற ஆங்கிலச் சொல்லுக்கு உடற்கூற்றியல் என்ற செந்தமிழ்ச் சொல் இன்று வழங்கப்படுகிறது. ஆனால் கிறீனது காலத்தில் Anatomy என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அங்காதிபாதம் என்ற வடசொல்லே வழங்கப்பட்டது. (அங்காதிபாதம் – உச்சி முதல் உள்ளங்கால் வரை); மேலும் Surgeon என்ற சொல்லுக்கு இரணகன், சத்திரீகன் ஆகிய வட சொற்களை கிறீன் வழங்கினார். இன்று Surgeon என்ற சொல்லுக்கு சத்திரசிகிச்சை நிபுணர் என்ற சொல் ஈழத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இதற்குரிய தமிழ்ச் சொல்லாக அறுவைமருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் என்பன தமிழ்நாட்டில் வழக்கிலுள்ளன.
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வழங்கிய தமிழ் வசனநடைக்கும் சொற்பிரயோகங்களுக்கும் 21 ஆம் நூற்றாண்டில் வேறுபாடுகள் நிறைய உண்டு. 19 ஆம் நூற்றாண்டில் மருத்துவர் கிறீன் உருவாக்கிய கலைச்சொற்களில் பெரும்பாலானவற்றை இன்றைய நிலையில் பயன்படுத்துவதில் பல இடர்பாடுகள் உண்டு. எனினும் தமிழர்கள் கிறீனது மருத்துவத் தமிழ்க் கலைச்சொல்லாக்க முறைமையிலிருந்து பலவிடயங்களைக் கற்றுக்கொள்ளவும், சிந்திக்கவும், பின்பற்றவும் முடியும்.
நவீன இலத்திரனியல் சாதனம் ஒன்றிற்கு இன்று ஈழத்தில் ஒரு சொல்லும் தமிழகத்தில் பிறிதொன்றும் சிங்கப்பூர் மலேசியாவில் இன்னோர் சொல்லும் வழங்கப்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது.
தமிழறிஞர், தமிழ்மொழிப்பற்றாளர் ஒருவரிடம் உள்ள மொழி மீதான தொலைநோக்கு, கரிசனை அமெரிக்கரான கிறீன் மருத்துவரிடம் 19ஆம் நூற்றாண்டில் காணப்பட்டது. மருத்துவர் கிறீன் அவர்கள் இந்தியாவிலுள்ள தமிழரின் கருத்தையும் அறிந்து தமிழ்நாட்டு அறிஞர்களின் ஒத்துழைப்புடன் ஒருமைப்பாடான கலைச்சொற்களைத் தமிழ்கூறும் நல்லுலகில், தமிழ்மக்களிடையே ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் பரவும் வழி செய்தல் வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார்.
“ஒரே கலைச்சொற்களைப் பிரயோகிப்பதற்கு எல்லோருஞ் சம்மதிக்க முடியுமானால் அதுகுறித்துத் தாம் மகிழ்ச்சியும் ஊக்கமும் பெறக் காரணமுண்டு.”
என்று திருவாங்கூரிலிருந்த மருத்துவர் லோ என்னும் அறிஞருக்கு 1865 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் கிறீன் குறிப்பிடுகின்றமை சிந்தனைக்குரியது.
உலகத் தமிழர்களுக்காக தமிழக அரசு வழங்கும் தமிழ்ச் சொற்குவை
இற்றைநாளில் தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் பிறமொழிகளின் துணையின்றி தனித்தியங்கவல்ல வளம்மிகு தமிழின் தனித்துவத்தைப் பேணவும் வளர்ந்து வரும் துறைகளுக்குரிய கலைச் சொற்களை உருவாக்கியும் உலகந் தழுவிய ஒருமைப்பாட்டைக் காணவும் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்காக உருவாக்கியுள்ள இணையத்தளம்தான் சொற்குவை: https://www.sorkuvai.com/ இத்தளத்தில் பல்வேறு தகவல்களும் சொல்வயல் என்ற ஏடும், பொருட்செறிவான அறிஞர்களது கட்டுரைகளும் வலையொளித் தொகுப்புக்களும் உள்ளன. மேலும் இன்றுவரை 7 இலட்சத்து 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் காணப்படுகின்றன. ஒரு ஆங்கிலச் சொல்லுக்குரிய செந்தமிழ்ச் சொல்லை, பொருத்தமான மொழிபெயர்ப்பை இங்குதான் காணலாம்.
தமிழ்மொழியின் சொல்வளத்தைக் காத்தல், தமிழ் மொழியின் சொல்வளத்தைப் பெருக்குதல், தமிழ்மொழியில் பிறமொழிக் கலப்பைத் தவிர்க்கத் துணைநிற்றல் என்ற உயரியநோக்கோடு தமிழ்(ச்) சொற்குவை தமிழர்களை மொழியால் ஒருங்கிணைத்து வருகிறது.
தொடரும்.