இன அழிப்பிற்கெதிரான ஐ.நா சாசனத்தினை முன்வைத்து ‘தமிழினப் படுகொலைகள் : 1956 - 2008’ நூலின் ஆவணப் பெறுமதியும் உள்ளடக்கமும்  
Arts
20 நிமிட வாசிப்பு

இன அழிப்பிற்கெதிரான ஐ.நா சாசனத்தினை முன்வைத்து ‘தமிழினப் படுகொலைகள் : 1956 – 2008’ நூலின் ஆவணப் பெறுமதியும் உள்ளடக்கமும்  

September 23, 2024 | Ezhuna

ஈழம் சார்ந்தும் ஈழப்பிரச்சினை சார்ந்தும் ஆங்கிலத்திலும் தமிழல்லாத பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2009 இற்கு பின்னர் வெளியாகிய அபுனைவு நூல்களை அவற்றின் சமூக – அரசியல் முக்கியத்துவம் கருதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு ‘திக்குகள் எட்டும்’ என்ற தொடர் வெளிவருகின்றது. இத்தொடரின் மூலம் தமிழ் சூழலுக்கு தமிழல்லாத பரப்பில் நடைபெறும் ஈழம் சார்ந்த வெளிப்பாடுகள் அறிமுகமாகும்.

பௌத்த சிங்கள பேரினவாத அரச இயந்திரத்தின் தமிழர் மீதான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை நேரடிச் சாட்சியங்களுடனும், நேர்த்தியான தரவுகளுடனும் ஆவணப்படுத்தி, பதிவு செய்த நூலாக ‘தமிழினப் படுகொலைகள்: 1956 – 2008’ ஆவணம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது. வடக்கு – கிழக்கு மனித உரிமைகள் மையம் (North East Secretariat On Human Rights – NESOHR) இந்நூலினை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் ‘மனித உரிமைகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு’ தளங்களில் இயங்குகின்ற ‘மனிதம்’ எனும் அமைப்பு இந்நூலினை வெளியீடு செய்திருக்கின்றது.

ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் தனித்தனிப் பதிப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளமை பயனுள்ளது. இதன் ஆங்கிலப் பதிப்பு, அமெரிக்காவின் பழமை வாய்ந்ததும் புகழ்பெற்ற நூலகமுமான ‘அமெரிக்க கொங்கிரஸ்’ நூலகத்தில் (Library of Congress) வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்காதாகும் (http://lccn.loc.gov/20103185).

2009 இறுதிப் போரின் போதான இன அழிப்பு, அதன் பின்னரான சூழ்நிலைகளின் பின்னணியிலும் இந்நூலுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. இனப்படுகொலை மட்டும் இன அழிப்பு அல்ல. இன அழிப்பு என்பது, ஒரு இனத்தை பகுதியாகவோ, வேருடனோ அழித்தொழிக்கும் திட்டமிட்ட நோக்கம் கொண்டது. 1948 இல் இன அழிப்பிற்கு (Genocide) எதிரான சாசனம் ஐக்கிய நாடுகள் பேரவையினால் உருவாக்கப்பட்டது.

இன அழிப்பிற்கெதிரான ஐ.நா சாசனம்

இன அழிப்பு நடவடிக்கையின் கூறுகளை ஐ.நா சாசனம் பின்வருமாறு வரையறை செய்கின்றது:

  • ஒரு தேசிய இனத்தின் அல்லது குழுமத்தின் உறுப்பினர்களைக் கொல்வது.
  • ஒரு இனத்திற்கு அல்லது குழுமத்திற்கு வலிந்தும் திட்டுமிட்டும் பாரிய உடல் – உள ரீதியான இன்னல்களை விளைவிப்பது.
  • சொந்த வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவது.
  • இனத்தின் மத்தியில் குழந்தைகள் பிறக்காத வகையில் (இன விருத்தியைத் தடுக்கும் வகையில்) கொடுமைகளைப் புரிதல்.
  • பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவங்களை, அடையாளங்களை அழித்தல்.

இன அழிப்பு நடவடிக்கைகளாக கருதப்படுபவை எவை என்பதை எடுத்துரைக்கும் சட்ட அடிப்படையிலான விளக்கங்களாக மேற்கூறப்பட்டவை உள்ளன.

உலக வரலாற்றுப் பட்டறிவினூடு நோக்குகையில் அரசுகளும் அரசுகளால் இயக்கப்படுகின்ற சக்திகளுமே இன அழிப்பினை அரங்கேற்றியிருக்கின்றன, அரங்கேற்றுகின்றன. முதலாம் உலகப்போரின் போது நடந்தேறிய இனப் படுகொலைகளின் பாதிப்பே இன அழிப்பிற்கெதிரான அனைத்துலகச் சட்ட உருவாக்கத்திற்குரிய தூண்டுதலாக இருந்துள்ளது. போலந்து நாட்டைச் சேர்ந்த சட்டவாளர் Raphael Lemkin என்பவராலேயே இன அழிப்பிற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற சட்ட அலோசனை 1933 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். ஆனபோதும், 2 ஆம் உலகப் போரிற்கு பிற்பட்ட காலத்திலேயே ஐக்கிய நாடுகள் அவையில் இன அழிப்பிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹிட்லரின் நாசிப் படைகள், யூதர்களைத் தேடித் தேடி அழித்த கொடுமைகளின் பின்னரே இன அழிப்பிற்கு எதிரான சாசனம் சட்ட அமுலாக்கம் கண்டது.

தண்டனை பெற்ற நாடுகள்

1990 களிலேயே முதன் முதலாக இன அழிப்பிற்கெதிரான சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. Rwanda இல் நடந்தேறிய இன அழிப்புக்கு பொறுப்பானவர்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் முன்நிறுத்தப்பட்டனர். ஹிட்லரின் யூத இன அழிப்பிற்கு அடுத்ததாக, பாரிய இன அழிப்பாக 1994 ஆம் ஆண்டு நடந்தேறிய Rwanda இன அழிப்பு குறிப்பிடப்படுகின்றது. 100 நாட்களில் 800,000 வரையான மக்கள் அழித்தொழிக்கப்பட்டனர்.

கூற்டு (Hutu) இனவாதிகளால் றுற்சி (Tutis) இன மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பாரிய இன அழிப்புக் கொடூரம் இது. ஐ.நா வின் அமைதிப்படைகள் 1993 ஆம் ஆண்டிலிருந்து Rwanda இல் நிலைகொண்டிருந்தன. ஐ.நா படைகளின் பிரசன்னம் இருந்த காலப் பகுதியிலேயே இன அழிப்பு நடந்தேறியது. பிரான்ஸ் நாடும் Rwanda இன அழிப்புக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உடந்தையாக இருந்ததாக பிந்திய காலப்பகுதியில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பில் கிளின்ரன் தலைமையிலான அன்றைய அமெரிக்க அரசாங்கமும் பாராமுகமாய் இருந்தது.

கொசவோ, போஸ்னியா, குறுவாட்சியா, ஸ்லோவேனியா போன்ற முந்நாள் யூகொஸ்லாவியா குடியரசு நாடுகள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு நடடிக்கைகளுக்காக சேர்பிய அரசுத் தலைவர் ஸ்லோவடான் மிலோசவிச் மீது இன அழிப்பு போர்க் குற்றம் சுமத்தப்பட்டு, 2001 ஆம் ஆண்டு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டமை கவனிப்பிற்குரியது.

குர்தீஸ் மக்கள் மீதான சதாம் உசேனின் இன அழிப்பு, 1975 – 1979 காலப்பகுதியில் கம்போடியாவில் நடந்தேறிய இன அழிப்பு, சூடானின் டார்பர் பிரதேசம், கிழக்கு கொங்கோ மற்றும் இன்றைய சமகாலத்தில் பலஸ்தீனம் என்பன இன அழிப்பினை எதிர்கொண்டுள்ள நாடுகளாகும். சூடானின் டார்பர் பிரதேச மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் போர்க் குற்றங்களுக்காக சூடானின் அரசுத் தலைவர் ஓமர் ஹசான் அல் பசிர் மீது அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் (International Criminal Court) 2009 ஆம் ஆண்டு கைது ஆணை பிறப்பித்தது.

காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் நடவடிக்கைகளுக்கான எதிர்வினைகளாக சட்ட ரீதியானதும் அரசியல் ரீதியானதுமான இரண்டு முக்கிய நிகழ்வுகள் சர்வதேச மட்டத்தில் இந்த ஆண்டு (2024) நிகழ்ந்து வருகின்றன. ஒன்று, சர்வதேச நீதிமன்றத்தில் (IJC) 2024 ஜனவரி மாதம் தென் ஆபிரிக்கா இஸ்ரேல் மீது இன அழிப்பு, போர்க்குற்ற வழக்குத் தொடுத்தமையும் சர்வதேச நீதிமன்றம் அவ்வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டமையும். இரண்டாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் காரீம் கான் (Karim Khan) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் Yoav Galant மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் மூன்று தலைவர்கள் மீது கைது ஆணை பிறப்பிக்கக் கோரி 2024 மே மாத இறுதியில் விண்ணப்பித்திருக்கின்றமையும். அதன் பொருள் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதல்ல. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத் தலைமை வழக்கறிஞரின் இந்த விண்ணப்பத்தினை சர்வதேச நீதிமன்றத்தின் பிரத்தியேக ஆணைக்குழு விசாரணை மற்றும் பரிசீலனைக்கு உட்படுத்தி, மேற்சொன்ன நபர்கள் மீது கைது ஆணை பிறப்பிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தினை எடுக்கும் என்ற அளவிலேயே இந்நிகழ்வினைப் பார்க்கலாம். ஆனால் சர்வதேச நீதித்துறை சார்ந்த ஒரு அமைப்பு, அமெரிக்காவின் செல்லப்பிள்ளையும், சர்வதேசத் தீர்மானங்கள், அழுத்தங்கள் எதனையும் இதுவரை பல தசாப்தங்களாகப் பொருட்படுத்தாததுமான இஸ்ரேலின் உயர்மட்டத் தலைவர்கள் மீது கைது ஆணை பிறப்பிக்கக்கூடிய புறச்சூழல் எழுந்துள்ளது. இது போர்க் குற்றத்திற்கு எதிரான மிக முன்னுதாரணமான நகர்வு, மாற்றம் என்பதை மறுக்க முடியாது.

இராணுவ இயந்திர மேலாதிக்க அடக்குமுறைக்கு ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்று முழுதாக நசுக்குவது பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் மூலோபாயமாக இருந்து வந்துள்ளது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களத் தலைமைகள், இராணுவ அடக்குமுறையைக் கருவியாகக் கொண்ட மூலோபாயத்தையே கையாண்டன. 2009 இற்குப் பின்னர் போர் முடிவுக்கு வந்தபோதும், கட்டமைக்கப்பட்ட ரீதியில் தமிழர் தாயகம் முழுவதும் சிங்கள அரசினது மேலாதிக்கமும், இராணுவ ஆக்கிரமிப்பும், அரசியல் உரிமை மறுப்பும் தொடர்கின்றன.

இன அழிப்பு – போர்க் குற்றம் – மனிதத்திற்கு எதிரான குற்றம்

ஐ.நா சாசனத்தில் இன அழிப்புக் குற்றங்களென எவை வரையறுக்கப்பட்டுள்ளனவோ – போர்க் குற்றங்களென எவை வரையறுக்கப்பட்டுள்ளனவோ – மனிதத்திற்கு எதிரான குற்றங்களென எவை வரையறுக்கப்பட்டுள்ளனவோ – இன அழிப்பின் கூறுகள் என எவை வரையறுக்கப்பட்டுள்ளனவோ அவை அனைத்தையும் சிறிலங்கா பேரினவாத அரச இயந்திரம் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தியிருக்கின்றது.

தமிழர்களின் இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்குவதற்குரிய மூலோபாய திட்டங்களை வகுத்து, படிப்படியாக அவற்றை நடைமுறைப்படுத்தி வந்திருக்கின்றது. பாராளுமன்றப் பெரும்பான்மை மூலமாக தமிழரெதிர்ப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சட்டங்களாக்கப்பட்டன. சட்டங்களின் துணையோடு இராணுவ இயந்திரம் தமிழ் மக்கள் மீது ஏவிவிடப்பட்டு, அடக்குமுறை படிப்படியாக கட்டவிழ்த்துவிடப்பட்டது.

‘வடக்கு – கிழக்கு மனித உரிமைகள் செயலகம்’

‘வடக்கு – கிழக்கு மனித உரிமைகள் செயலகம்’ வடக்குக் கிழக்கில் நடந்தேறிய மனித உரிமை மீறல்களை உரிய தரவுகள், தகவல்கள், ஆதாரங்களுடன், நேரடிச் சாட்சியங்கள் மூலம் ஆவணப்படுத்தி உடனுக்குடன் அறிக்கையிடும் பணியினை முன்னெடுத்துவந்த அமைப்பாகும். 2004 ஆண்டு ஜூலை மாதம் இச் செயலகம் அமைக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து, சிறிலங்கா பேரினவாத அரச படைகளினது தமிழ் மக்களுக்கெதிரான அரச பயங்கரவாத – இனப் படுகொலை நடவடிக்கைகளை ஆவணப்படுத்தி வெளியிட்டு வந்துள்ளது.

இந்நூலுக்குரிய தரவுகள், ஒளிப்படங்கள் என்பன வடக்கு – கிழக்கு புள்ளிவிபர மையத்திடமிருந்து பெறப்பட்டுள்ளன. 2009 இல் சிறிலங்கா அரசினால் நடாத்தப்பட்ட இன அழிப்பு வன்போரின் விளைவாக NESOHR இன் ஆவணங்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டன. ஆனபோதும் உருவாக்கப்பட்ட அறிக்கைகள் அவ்வப்போது உரிய முறையில் அதன் இணையத்தளத்தில் (www.nesohr.org) தரவேற்றப்பட்டமையால் அவை பாதுகாக்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் உடனுக்குடன் இணையத்தளத்தில் ஏற்றப்படாது விடப்பட்டிருப்பின், முக்கிய ஆவணங்கள் இன்று வரலாற்றிலிருந்தே அழிக்கப்பட்டிருக்கும்.

முள்ளிவாய்க்கால் : இன அழிப்பின் உச்சம்

2009 இல் சிறிலங்கா அரச படைகள், புதுமாத்தளனிலும் முள்ளிவாய்க்காலிலும் 5 மாதங்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களைக் கொன்றழித்து, பாரிய இனப் படுகொலையை அரங்கேற்றின. வேதியல் ஆயுதங்கள் (Chemical Weapons), நச்சுக் குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (Cluster bombs) என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து நாசகார ஆயுதங்களையும் பேரினவாத அரசு  போரில் பயன்படுத்தியுள்ளது. மே 16, 17 ஆகிய இரு நாட்களிலும் நடாத்தப்பட்ட கடைசி நேர இனவெறித் தாக்குதல்களில் மட்டும் 40,000 உயிர்கள் பலியெடுக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அவையை மேற்கோள் காட்டிய தகவல்கள் வெளிவந்தமை உலகறிந்ததே. அனைத்துலகப் போர் நெறிகளை மீறியதற்கான தடயங்களை, சாட்சியங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் அரசு மும்முரமாக ஈடுபட்டிருந்தது. ஆக்கிரமிப்பு வன்போர் முடிவடைந்து பல மாதங்கள் கடந்த பின்னர்கூட அனைத்துலகப் பிரதிநிதிகளோ, ஊடகங்களோ போர் நடைபெற்ற பகுதிகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

பிரித்தானியக் கொலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைத் தீவு விடுபட்ட காலத்திலிருந்து தமிழர்களுக்கெதிரான சிங்கள மேலாதிக்கப் பிடி, படிப்படியாக இறுக்கமடைந்து வந்துள்ளது. தமிழ் மக்கள் மீதான பாரிய படுகொலைகள், நிலப்பறிப்பு, மொழியுரிமைப் பறிப்பு, அரசியல் உரிமை மறுப்பு, கல்வி – பண்பாட்டு அழிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் என நீள்கிறது தமிழர் மீதான ஒடுக்குமுறை வரலாறு. இவற்றில் 2009 வரையான 60 ஆண்டு கால பின்-கொலனித்துவ வரலாற்றில் எண்ணற்ற படுகொலைகளைத் திட்டமிட்ட முறையில் பேரினவாதம் நடாத்தியிருக்கின்றது.

நேரடிச் சாட்சியங்கள் – ஆதாரங்கள்

இந்நூலில் 1956 இல் இருந்து 2008 வரையான 52 ஆண்டு காலங்கள் சிறிலங்காவின் பௌத்த, சிங்கள, பெருந்தேசியவாத அரச இயந்திரத்தினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப் படுகொலைகள் பற்றிய நேரடிச் சாட்சியங்கள் உட்பட்ட பல்வேறு ஆதாரங்களுடனான பதிவு முதன்மையாக இடம்பெற்றுள்ளது. கால வரிசையில் படுகொலைகள் கிரமமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் – வயது – சொந்த இடம் போன்ற விபரங்களோடு பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

அத்தோடு சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இன அழிப்பின் பல்வேறு கூறுகள் வரலாற்றுப் பின்னணியோடு, உரிய ஆதாரங்களோடு, வரலாற்று நிகழ்வுகள் பற்றிய எடுத்துரைப்புகளோடு சொல்லப்பட்டிருக்கின்றன. மென்முறை தழுவிய அறப்போராட்டம் எவ்வாறான புறநிலையில் வன்முறை தழுவிய ஆயுதப் போராட்டமாக மாற்றப்பட்டது என்ற வரலாற்றுப் பின்னணி எடுத்துரைக்கப்படுள்ளது.

நூலின் ஆரம்பத்தில், 1940 இல் அம்பாறை மாவட்டத்தில் அரச நிதியுதவியுடன் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் (State sponsored colonisation) நிறுவப்பட்டமை தொடர்பான குறிப்பு இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து (வெளி மாவட்டங்களிலிருந்து) சிங்கள மக்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் குடியேற்றப்பட்டார்கள், சிறிலங்கா பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்புடன் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு எவ்வகையில் சிங்களக் குடியேற்றங்கள் விரிவுபடுத்தப்பட்டன போன்ற விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. சுருங்கக் கூறின் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பாரம்பரிய நிலங்கள் எவ்வாறு திட்டமிட்ட முறையில் சூறையாடப்பட்டன என்ற வரலாறு நூலின் ஆரம்பப் பகுதியில் பதிவாகியுள்ளது.

கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் பெருமளவு விழுங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இருந்த அம்பாறை, திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பகுதிகளில் சிங்களவர்கள் பெரும்பான்மையாகியுள்ள நிலையும் ஏற்பட்டுள்ளது. இனப்படுகொலை பற்றிய பகுதி ‘இங்கினியாகலை படுகொலையுடன்’ தொடங்குகின்றது. இது 1956 ஜூன் 5 நடந்தேறிய படுகொலையாகும். அம்பாறையில் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையர்களால், இங்கினியாகல பிரதேசத்தில் கரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்த 150 வரையிலான தமிழ்த் தொழிலாளர்கள், கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டும், குற்றுயிராகத் துடித்தவர்கள் தீயிலிட்டு எரிக்கப்பட்டும் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இதுவாகும்.

சிங்களம் மட்டும்

இலங்கைத் தீவில் தங்கியிருந்த புகழ்பெற்ற ஆங்கில ஊடகவியலாளரான டாசி வித்தாச்சி அவர்கள் எழுதிய ‘அவசர காலச் சட்டம் ஐம்பத்தெட்டு’ என்ற நூலை ஆதாரமாகவும், அன்றைய காலப்பகுதியில் வெளிவந்த நாளேடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை அடியொற்றியும் இங்கினியாகலைப் படுகொலை பற்றிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

‘சிங்களம் மட்டும்’ சட்டத்திற்கு எதிராக தமிழரசுக் கட்சி தலைமையில், அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் இணைந்து நடாத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வன்முறையைப் பிரயோகித்தமை, 1974 இல் யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குழப்பும் சதியுடன் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலை, 1977 இல் நாடு முழுவதும் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் (திருகோணமலை, வவுனியா, பதுளை, இரத்தினபுரி), 1981 இல் தமிழ் மக்களின் கல்விச் சொத்தான யாழ் நூலக எரிப்பு, 1983 – கறுப்பு ஜூலை படுகொலைகள் என தமிழர் மீதான அழிப்பின் ஆரம்பம் முதல், அதன் தொடர்ச்சி எவ்வாறு சிறிலங்கா பேரினவாதிகளால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதென்பதை இந்நூல் பதிவு செய்துள்ளது. இவை மட்டுமல்ல நிலப்பறிப்பையும் சிங்களக் குடியேற்றத்தையும் மூலநோக்காகக் கொண்டு, சிங்கள அரசினால் வழிநடத்தப்பட்ட படுகொலைகள் எண்ணிலடங்காதவை.

நிறுவனமயப்படுத்தப்பட்ட அடக்குமுறை

தமிழர் தாயகக் கோட்பாட்டை (வடக்கும் கிழக்கும் இணைந்த தொடர்ச்சியுடைய நிலப்பரப்பைக் கொண்ட தமிழர் தாயகம்) உடைப்பதும், வடக்கு – கிழக்கு மக்கள் தம்மை ஒரு தேசமாக (Nation) அடையாளப்படுத்துவதை முறியடிப்பதுமே சிங்களத்தின் மூலோபாயம். நிர்வாகம் மற்றும் நில அமைவிடம் ஆகிய இருநிலைகளிலும் தமிழர் தாயகக் கோட்பாட்டை மழுங்கடிப்பதே இனவாதத்தின் இலக்கு!

பிரித்தானியர் இலங்கைத் தீவிலிருந்து வெளியேறிய (1948 ஆம் ஆண்டு) தறுவாயிலிருந்தே, பௌத்த – சிங்கள இன மேலாதிக்கம், தமிழர் அழிப்பு என்ற பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு செயல் வடிவம் கொடுக்கத் தொடங்கியது. சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் மீதான அழிப்பினை மிக நுட்பமாகத் திட்டமிட்டு செயற்படுத்தி வந்துள்ளனர்.

1949 இல் மலையகத் தமிழர் குடியுரிமைப் பறிப்பிலிருந்து இன்றைய முட்கம்பி வேலி வதைமுகாம்கள் வரை தொடர்கின்றது பௌத்த – சிங்கள இன மேலாதிக்கத்தின் தமிழின அழிப்பு. 1956 இல் ‘சிங்களம் மட்டும்’ (Sinhala Only) சட்டம் மூலம் தமிழ் மக்களின் மொழி உரிமை பறிக்கப்பட்டது. மொழியுரிமை பறிப்பு என்பது இனத்துவ அடையாளம், சமூக பண்பாட்டு வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தை இழக்கச் செய்யும் சூட்சும் கொண்டதாகும். அரச நிர்வாகங்களில் ‘சிங்களம் மட்டும்’ பயன்பாட்டினால், தமிழர்கள் தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிட்டது.

தொடர்ச்சியாக 1972 இல் கல்வித் தரப்படுத்தல் சட்டமாக்கப்பட்டது. சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே பல்கலைக்கழக உள்நுழைவுக்கு தெரிவாக முடியுமென்ற பாரபட்ச நிபந்தனை கல்வித் தரப்படுத்தல் சட்டம் மூலம் கொண்டுவரப்பட்டது. தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளத்தினையும் மேம்பாட்டினையும் தடுப்பதற்குரிய மூலோபாயம் இதுவாகும்.

1981 இல் நிகழ்ந்த யாழ் நூலக எரிப்பென்பது, தமிழ்க் கல்விச் சமூகத்தைச் சிதைக்கும் திட்டமிட்ட இன அழிப்பு நோக்கம் கொண்டது. தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமென்று பெயர் பெற்ற, நூறாயிரம் வரையான அரிய பல்துறை நூல்களையும், தமிழர்சார் வரலாற்று ஆவணங்களையும் யாழ் நூலகம் கொண்டிருந்தது என்பது பலரும் அறிந்ததே.

ஒட்டுமொத்தமாக இவ்வாறான தமிழர் விரோதச் சட்டங்கள் மூலம், தமிழ் மக்கள் இன – மொழி – அரசியல் – சமூக – பொருளாதார – கல்வி அடிப்படைகளில் பல முனைகளிலும், நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆட்சியதிகாரம், பாராளுமன்ற ஜனநாயகம், நீதித்துறை என்பன சிங்கள ஆட்சியாளர்களால் அரசியல் விழுமியங்களின் தார்மீக ஒழுக்க அடிப்படையில் கைக்கொள்ளப்படவில்லை. நாட்டின் அரசியல் யாப்பு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாது உருவாக்கப்பட்டதாகும். சிங்களப் பேரினவாத, பௌத்த மதவாத அரச இயந்திரமாகவே அது இயக்கப்பட்டு வந்திருக்கின்றது.

குடியேற்றம் : தாயகக் கோட்பாட்டை மறுதலிக்கும் மூலோபாயம்

தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட, வடக்கு – கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசங்களில் திட்டமிட்ட முறையில் சிங்களக் குடியேறறங்கள் ஏற்படுத்தப்பட்டன. இது மக்கள் தொகைச் சமநிலையை – மக்கள் தொகைப் பரம்பலை (Demographic Balance) குழப்பும் நோக்கம் கொண்டது. திட்டமிட்ட குடியேற்றங்களால் தென் தமிழீழம் பாரிய அளவு விழுங்கப்பட்டடுள்ளது. இன அழிப்பினை இலக்காகக் கொண்ட அரசுகள் கையாளும் முதன்மை மூலோபாயங்களில் இதுவும் ஒன்றாகும். இவ்வாறே பலஸ்தீன மக்களின் பாரம்பரிய நிலங்களை யூதக் குடியேற்றங்கள் மூலம் இஸ்ரேல் விழுங்கி வருகின்றது.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் 1940 களிலிருந்து சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் நிறுவப்பட்டன. தாயகப் பிரதேசங்களை அபகரித்து சிங்களவர்களின் பரம்பலை அதிகரிப்பதன் மூலம், தமிழர்கள் சிறுபான்மையினர் என்ற கருத்துருவாக்கத்தை வேரூன்றச் செய்வதே பேரினவாத அரச இயந்திரத்தின் நோக்கம். தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட வடக்கும் கிழக்கும் இணைந்ததே தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்ற யதார்த்தத்தினை மறுதலித்து வடக்கினையும் கிழக்கினையும் துண்டாடும் சூழ்ச்சிக்கு திட்டமிட்ட குடியேற்றம் கருவியாய் கைக்கொள்ளப்பட்டது.

1983 ஆம் ஆண்டு ஜூலைப் படுகொலைகளை அடுத்து தொடர்ச்சியாக தமிழர் பிரதேசங்களில் – கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலும், வடக்கில் – மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலும் அடுத்தடுத்து எண்ணிலடங்காத படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளன.

1985 இல் திருகோணமலையில் ‘நிலாவெளிப் படுகொலைகள்’, அதே ஆண்டு ‘கந்தளாய்ப் படுகொலை’, 1990 இல் ‘திரியாய்ப் படுகொலை’, 1987 இலும் 1991 இலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட மட்டக்களப்பு ‘கொக்கட்டிச்சோலைப் படுகொலை’, 1990 இல் கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை, அதே ஆண்டு நடந்தேறிய ‘வந்தாறுமூலைப் படுகொலை’, ‘சத்துருக்கொண்டான் படுகொலை’, 1990 இல் அம்பாறையில் ‘வீரமுனைப் படுகொலை’ என கிழக்கு மாகாணத்தில் கோரமான பல படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இந்நூலில் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

போர் நிறுத்த காலப் படுகொலைகள்

சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட, போர் நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் இருந்த காலகட்டங்களில் கூட சிறிலங்கா அரச படைகள் பொது மக்கள், தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பல ஆயிரக் கணக்கானவர்களைப் படுகொலை செய்தது.

போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த 2002 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரையான 5 ஆண்டுகளுக்குள் மாத்திரம் 4000 பேர் வரை கொல்லப்பட்டதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புள்ளிவிபரங்கள் தெரிவித்தன. போர் நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் இருந்த காலத்தில் நடாத்தப்பட்ட படுகொலைகள் உரிய ஆதாரங்களுடன் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

2006 ஆம் ஆண்டு கிழக்கில் பாரிய வன்போர் நடவடிக்கையைத் தொடங்கிய இலங்கைப் படையினரால் நடாத்தப்பட்ட படுகொலைகளிலிருந்து, வடக்குக்கு விரிவுபடுத்தப்பட்ட போரில் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை நடாத்தப்பட்ட முரசுமோட்டை விமானக் குண்டு வீச்சுப் படுகொலைகள் வரை இந்நூலில் ஆதாரங்களுடன் பதிவுக்குள்ளாகியுள்ளன.

2009 இல் இறுதிப் போரில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான பதிவு இந்நூலில் உள்ளடக்கப்படவில்லை. எனவே இந்நூலினை சிங்கள, இனவாத அரச இயந்திரத்தினால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பின் ஒரு முழுமையான பதிவாகக் கொள்ள வேண்டாமென வடக்கு – கிழக்கு மனித உரிமைகள் செயலகம் வாசகர்களை எச்சரித்துள்ளது.

இன அழிப்பு வன்போரினை நடாத்திய சிறிலங்கா அரசு, தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பாரிய மனிதப் பேரவலங்களையும், சமூகச் சிதைவுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. சொந்த நிலங்களில் மீளக் குடியேற வழியின்றி அல்லற்படுவோர், உடல் உறுப்புகளை இழந்தோர், வாழ்க்கைத் துணையை இழந்தோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் என பெரும் மனித அவலங்களை எதிர் கொண்ட தமிழர் தாயகப் பிரதேச மக்கள் அடிப்படை மனித உரிமைகள், அரசியல் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கின்றனர்.

வரலாற்றுத் திரிபுக்கும் மறைப்பிற்கும் உட்படாதிருக்க இந்நூலின் பங்களிப்பு

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், அனைத்துலக மட்டத்தில் சிறிலங்காவின் அரச படைகளின் போர் மீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த கண்டனங்களும் விசாரணைகள் பற்றிய குரல்களும் ஓங்கியிருந்த காலட்டத்தில் இந்த நூல் வெளிவந்தது. 2009 ஆம் ஆண்டு கிளிநொச்சி நகரம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதிலிருந்து முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்த காலம் வரையான சாட்சியங்கள் அற்ற இலங்கைப் படைகளின் இன அழிப்பு தொடர்பான பதிவுகள் இந்நூலில் இடம்பெறவில்லை. சிறிலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வு, சிறிலங்காப் படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் 2008 இன் இறுதிப் பகுதியுடன் NESOHR இன் இயங்குநிலை முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டமை அதற்கான காரணங்களாகும். 2009 இல் நடந்த நிகழ்வுகளின் களத் தகவல்கள், அறிக்கைகளைத் தம்மாற் சேகரிக்க முடியவில்லை எனக் NESOHR குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், அந்தக் காலகட்டப் படுகொலைகள் சார்ந்த சில ஆதாரத் தொகுப்புகள், ஒளிப்படங்களை நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலைகள் வரலாற்றிலிருந்து அழிக்கப்படாமலும், காலப்போக்கில் திரிபுபடுத்தப்படாமலும், மறைக்கப்படாமலும் இருப்பதற்கு இந்நூல் பாரிய பங்களிப்பாக அமைந்துள்ளது. படுகொலைகளை மட்டும் ஆவணப்படுத்தும் ஒரு தொகுப்பாக அல்லாமல், சிங்களத்தின் தமிழர்சார் அழிப்பின் மூலங்களை அடையாளப்படுத்தி அரசியல் ரீதியில், வரலாற்று ரீதியில் புரிதலை ஏற்படுத்தும் வகையில் இதன் பதிவுகள் அமைந்துள்ளன.

அவ்வாறு நோக்குகையில், தமிழர்கள் மீதான படுகொலைகள் பற்றிய முழுமையான நூலாக இல்லாவிடினும் 2009 இற்கு முன்னான படுகொலைகளை கூடியளவு தகவல் ரீதியாகப் பதிவு செய்யும் நூலாக இதனைக் கருத முடியும்.


ஒலிவடிவில் கேட்க

2587 பார்வைகள்

About the Author

சிவராஜா ரூபன்

ரூபன் சிவராஜா அவர்கள் 1993 ஆம் ஆண்டு சிறுவனாக இருக்கும்போது ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தார். தற்போது கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் ஊடகம் ஆகிய தளங்களில் இவர் செயற்பட்டு வருவதுடன் அரசியல், சமூகம், கலை, இலக்கியம் சார்ந்தும் எழுதி வருகிறார். ஈழம், தமிழகம், மற்றும் புலம்பெயர் ஊடகங்கள், இதழ்களில் இவரது எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.

'எதிர்ப்பரசியல்', 'அதிகார நலனும் அரசியல் நகர்வும்' (உலக அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு), 'எழுதிக் கடக்கின்ற தூரம்' (கவிதைத் தொகுப்பு), 'கலைப்பேச்சு' (திரை நூல் அரங்கு) என்பன இவரது படைப்புகளாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • September 2024 (16)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)