மலையகத் தமிழ் மக்களின் இனப் பரம்பல் வீழ்ச்சி : பெரும்பான்மை, சிறுபான்மையாக்கப்பட்டதன் பின்னணி
Arts
12 நிமிட வாசிப்பு

மலையகத் தமிழ் மக்களின் இனப் பரம்பல் வீழ்ச்சி : பெரும்பான்மை, சிறுபான்மையாக்கப்பட்டதன் பின்னணி

July 17, 2024 | Ezhuna

முதலாளி வர்க்கம் வசதியாக வாழ தம் வாழ்க்கையைத் தியாகம் செய்த மலையகத் தமிழ் மக்கள் தாது வருடப் பஞ்சத்தின் போது தமிழகத்திலிருந்து பல நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அண்மை நாடான இலங்கைக்கும் அழைத்துவரப்பட்ட இம் மக்கள் ஏமாற்றப்பட்டே அழைத்துவரப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. இந்த நாட்டிலே உழைத்து இந்த நாட்டின் சகல மக்களுக்காகவும் தங்களை மாய்த்துக் கொண்ட இலங்கை மலையகத் தமிழ் சமூகம் 200 வருடங்களாக அடையாளச் சிக்கலைச் சந்தித்து வருகிறது. மலையகத் தமிழர்களின் அவலங்களையும் கடந்த காலத்தின் துன்பியல் சுவடுகளையும் அனுபவங்களாகக் கொண்டு, எதிர்காலத்தில் இச் சமூகம் தனியான ஓர் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படுவதையும், சுதந்திரமான வாழ்க்கையை நோக்கி நகருவதையும் நோக்கமாகக் கொண்டு “இலங்கை மலையகத் தமிழ் மக்களின் இன அடையாளச் சர்ச்சை : 200 வருடங்கள்” என்னும் இத் தொடர் அமைகின்றது.

200 வருடங்களுக்கு முன் தமிழகத்திலிருந்து மக்களைக் கூட்டம் கூட்டமாக அழைத்து வந்தபோது, அந்த மக்களை மனிதர்களாக நினைக்காமல் மிருகங்களை விட மோசமாக நடத்தியதன் காரணத்தினால், கடலிலும் காட்டிலும் மாண்டு போன சோகக் கதைகளில் ஆரம்பிக்கின்றது இந்த மக்கள் கூட்டத்தின் வரலாறு. ஆதிலட்சுமி என்ற கப்பலில் இங்கிருந்து தாயகம் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் கடலிலே மூழ்கி மரணித்தமை இதற்கான உதாரணமாகும். வெள்ளையர்களுக்கும் ஐரோப்பிய அரசாங்கத்திற்கும் ஏகாதிபத்திய கம்பெனிக்காரர்களுக்கும் இந்த மக்களின் உழைப்பு மாத்திரமே தேவைப்பட்டது. ‘குறைந்த கூலிக்கு அதிக வேலை’ என்பது தான் முதலாளித்துவத்தின் அடிநாதமாகக் காணப்பட்டது. ஏகாதிபத்தியவாதிகளின் மனங்களில் இந்த மக்கள் உயிருள்ள ஜீவன்கள் என்ற சிந்தனை துளி என்றும் இருக்கவில்லை.

மலையக மக்களைப் பயன்படுத்தி அரசியல் ஏகபோகமும் சுகபோகமும் அனுபவிக்கும் மலையக அரசியற் பிரதிநிதிகள் இந்த மக்களுக்கு வீட்டுரிமை, காணி உரிமை, நிரந்தரத் தொழில் உரிமை என்பவற்றைப் பெற்றுக்கொடுக்க மறுக்கின்றனர். வாக்குகளைப் பெற்று ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கங்களும் இந்த மக்களுக்கு உரிமைகளை வழங்கிவிட்டால், அவர்கள் தங்கள் சமூகத்தினரை விட வளர்ச்சியை அடைந்து விடுவார்கள் என்ற அச்சத்தினால், இந்த மக்களுக்கான சகலவற்றையும் மறுதலிக்கும் மனோநிலையில் இருந்தன. இந்தக் கசப்பான அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற காரணத்தோடு இக்கட்டுரை எழுதப்படுகிறது.

மனித இனம் யுத்தம், பட்டினி, பஞ்சம், இயற்கைச் சீற்றம், தொற்று நோய் போன்றன காரணமாக அழிந்த கதைகள் மனித குல வரலாற்றில் காணப்படுகின்றன. ஆனால் மலையகச் சமூகத்தின் இனப் பரம்பலானது, இன்னொரு சமூகத்திற்கு ஏற்படுத்திய அச்சம் காரணமாக அச் சமூகம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட வரலாறு சூழ்ச்சிகரமானது. எந்தவித வசதிகளும் உரிமைகளும் இல்லாமல் உடற் பலத்தினை மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் தட்டிப்பறித்த இலங்கை நாட்டின் கசப்பான அனுபவங்கள் பலராலும் பதியப்பட்டுள்ளன.

நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள், அரசியல் அமைப்புச் சட்டங்களை மாற்றுவதன் மூலம் மலையக மக்களின் உரிமைகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இனவாத அரசியற் சட்டங்கள் மூலமாக இந்த மக்கள் ஒடுக்கப்பட்டதுடன், அபிவிருத்தி என்னும் பெயரில் இவர்களின் வாழ்விடங்களும் பறிக்கப்பட்டன. பரவலாக வாழ்ந்தவர்களைத் துண்டாக்கிப் பிரிப்பதும், மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மை இன மக்களின் குடியேற்றங்களை ஏற்படுத்துவதும் அரசின் ஆதரவுடன் இடம்பெற்றது. வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விவசாய நிலங்களைப் பெறுவதில் இருந்தும், அரசியலில் பங்கெடுப்பதில் இருந்தும் இம் மக்கள் ஓரங் கட்டப்பட்டனர். கல்வி வசதியும் மறுக்கப்பட்டது. இன வன்செயல்கள் மூலம் அச்சத்தை உருவாக்கி, இம் மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து புலம்பெயரச் செய்தனர். இவ்வாறான அரங்கேற்றங்களுக்கு மலையக அரசியல்வாதிகளும் துணைபோவதனைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலையில், ஒரு பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்த ஒரு சமூகம், சிறுபான்மையினராக ஆக்கப்பட்டதும், ஆக்கப்படுவதும் ஆய்வுக்குரிய விடயமாகிறது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் என்றும் மலை நாட்டில் வாழும் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இலங்கைத் தமிழர்களை வடக்கு – கிழக்குத் தமிழர்கள் எனப் பிரித்திருப்பது போல, மலையகத் தமிழர்களை பெருந்தோட்டத் தமிழர்கள் – கொழும்பு (வாழ் மலையக) தமிழர்கள் எனப் பாகுபடுத்தும் கருத்து அண்மைக் காலங்களில் வலுவடைந்து வருவகிறது. மலையக மக்களில் அநேகமானவர்கள் தங்களை இலங்கைத் தமிழர்கள் என்று குடிசன மதிப்பீடுகளில் அடையாளப்படுத்துவதும், சிங்கள மக்களுடன் கலப்புத் திருமணம் முடித்தவர்கள் சிங்கள அடையாளத்தை குடிசன மதிப்பீடுகளில் முன்னுரிமைப்படுத்துவதும், நகர்ப்புறத்திற்கு புலம்பெயர்ந்தவர்கள் மலையக அடையாளத்தை நிராகரிப்பதும் மலையக மக்களின் இன ரீதியான பரம்பலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.

கோப்பி, தேயிலை, இறப்பர் தோட்டங்கள் நிறுவப்படும் முன்னரே ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் கப்பல் கட்டுதல், கோவிற் சிற்ப வேலைகள், கோயில் கட்டுதல், வீதிகளைப் புனரமைத்தல், துறைமுகங்களில் வேலை செய்தல், வியாபாரம், இராணுவ சேவை ஆகிய வேலைகளைச் செய்தனர். அவ்வாறானவர்கள் கண்டியில் ‘திகனை’ போன்ற இடங்களில் வசித்தனர். இவர்களில் அதிகமானவர்கள் தமிழ் அடையாளத்தைப் புறக்கணித்து சிங்கள அடையாளத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டனர்.

1871 ஆம் ஆண்டு முதன் முதலாக இலங்கையில் சனத்தொகை மதிப்பீடு இடம்பெற்றுள்ளது. அதற்கு முன் எழுமாற்றாக ஆங்காங்கே சில இடங்களில் மதிப்பீடுகள் இடம்பெற்றுள்ள போதும், 1871 ஆம் ஆண்டிலேயே முறையான குடிசன மதிப்பீடு நடைபெற்றது. ஆனால் மலையக மக்கள் அம் மதிப்பீட்டில் உள்வாங்கப்படவில்லை. மலையக மக்களை நாடற்றவர்களாகவும், கள்ளத் தோணிகளாகவும், இந்த நாட்டிற்கு எந்த விதத்திலும் சொந்தமில்லாதவர்களாகவும் அரசு இயந்திரம் சித்தரித்ததே இதற்கு முக்கியமான காரணமாகும். இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்திய தோட்டத் தொழிலாளர்கள், குறித்த காலத்திற்குப் பிறகு மீண்டும் தங்களின் தாய் நாடான இந்தியாவிற்குப் போகலாம் என சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு துண்டு முறைமை என்று பெயர். குறித்த ஒரு கங்காணிக்கு, ஒரு மக்கள் கூட்டத்தினரைப் பொறுப்புக் கொடுத்து, அவர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இன்று, நாங்கள் மலையக மக்கள் அல்ல; நகர்ப்புற மக்கள் அல்லது கொழும்புத் தமிழர்கள் அல்லது மாத்தளைத் தமிழர்கள்; நகர்ப்புறம் சார்ந்த நாங்கள் மலையக மக்கள் என்ற அடையாளத்தை எடுக்க முடியாது என்றெல்லாம் கதை பேசிக் கொண்டிருப்பவர்களுள் பலர், 1871 ஆம் ஆண்டு முதல் 1901 ஆம் ஆண்டு வரை, எந்தவொரு அடையாளத்திற்கும் உள்வாங்கப்படாதவர்களாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

18 மாவட்டங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட 2001 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி : 

சிங்களவர்கள் 89.9% 

இலங்கைத் தமிழர்கள் 4.3%

மலையகத் தமிழர்கள் 5.1%

1971 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி: 

சிங்களவர்கள் 72.0% 

இலங்கைத் தமிழர்கள் 11.2%

மலையகத் தமிழர்கள் 9.3%

1971 முதல் 2001 ஆம் ஆண்டு வரையான முப்பது வருட காலத்தில் இலங்கைத் தமிழர்களின் சனத்தொகையிலும், மலையக மக்களின் சனத்தொகையிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது சில சந்தேகங்களை உண்டாக்கி இருக்கின்றன. இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு சரியான தரவுகளை பதிதல் காலத்தில் கட்டாயத் தேவையாகும். 1971 ஆம் ஆண்டு கணிப்பீட்டில், மலையக மக்களின் எண்ணிக்கை 1,174,606 ஆகும். 1981 இல் அவர்களின் இனப் பெருக்கத்துடன் அவ் எண்ணிக்கை 1,343,659 ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால் 1981 இன் கணிப்பீட்டின்போது, மலையக மக்களின் எண்ணிக்கை 818,656 ஆகவே காணப்பட்டது. இவ்விரண்டு தரவுகளுக்கு இடையேயான வித்தியாசம் 525,000 ஆகும். இவர்கள் இடம்பெயர்ந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழலாம். ஆனால் இடப்பெயர்வுத் தகவல்களின் படி, இக் காலப்பகுதியில் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை ஏறக்குறைய 312,000 மட்டுமே ஆகும். இக் கணிப்பீட்டில் வித்தியாசப்படும் 200,000 பேர், தங்களை இலங்கைத் தமிழர்கள் என்றோ, இஸ்லாமியர்கள் என்றோ. சிங்களவர்கள் என்றோ பதிவு செய்திருக்கலாம் என்ற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது.

நாட்டில் இடம்பெறும் அரசியல் தொடர்பாக அக்கறை கொள்ளாது இருப்பதும், இன அடிப்படையில் ஒற்றுமை கொள்ளாது இருப்பதுமே மலையக மக்களின் வீழ்ச்சிக்குக் காரணமாகும். மலையக மக்கள் என்ற அடையாளத்தை தங்களோடு இணைத்துக் கொள்ள விரும்பாத கீழ் மத்திய தர வர்க்கமாகவும் அல்லது மேல் மத்திய தர வர்க்கமாகவும் இருப்பவர்கள், விசேடமாக தோட்டப்புறங்களில் இருந்து புலம்பெயர்ந்து நகர்ப்புறங்களுக்கு அல்லது நகரை அண்டிய கிராமங்களுக்கு வந்தவர்கள், தங்களின் அடையாளத்தை மறுக்கும் பின்தங்கிய மனோநிலையே இதற்கு மிகப் பிரதானமான காரணமாக இருக்கின்றதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8164 பார்வைகள்

About the Author

சை. கிங்ஸ்லி கோமஸ்

அரச உத்தியோகத்தராகப் பணியாற்றும் சை. கிங்ஸ்லி கோமஸ் வீரகேசரி, தினக்குரல், தாயகம் (யாழ்பாணம்), புது வசந்தம் (யாழ்ப்பாணம்) ஆகிய பத்திரிகைகளின் கொட்டகலைக்கான மேலதிக நிருபருமாவார். கட்டுரையாளர், விமர்சகர், சிறுகதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், குறும்பட இயக்குனர் என பன்முக ஆளுமை கொண்டவர். ‘The Dark Nest’ எனும் இவரது குறுந்திரைப்படத்திற்கு பெண்கள் ஊடக மைய்யத்தின் (இலங்கை) 2023 ஆம் ஆண்டிற்கான விஷேட விருது கிடைத்திருக்கின்றது. ஊடறு, பெண்ணியா, காக்கைச் சிறகினிலே (தமிழ்நாடு), ஜித்தன் (தமிழ் நாடு) போன்ற பிற நாட்டுப் பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார். மலையக வரலாறு, சமூகவியல், அரசியல் சார்ந்த இவரது எழுத்துகள் குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)