வட்டுக்கோட்டைக் கல்விக்கழகம் உருவாக்கிய மருத்துவர் ஐரா கௌல்ட்
Arts
10 நிமிட வாசிப்பு

வட்டுக்கோட்டைக் கல்விக்கழகம் உருவாக்கிய மருத்துவர் ஐரா கௌல்ட்

November 5, 2022 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

மருத்துவர் ஐரா கௌல்ட் 1850 இல் யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் மருத்துவமனை (FINS Hospital – தற்போதைய போதனா  மருத்துவமனை) ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவமனையின் முதலாவது டிஸ்பென்சராகவும் முதலாவது வதிவிட சத்திரசிகிச்சை மருத்துவராகவும் கடமையைப் பொறுப்பேற்றார். (Ira Gould, Alias Antho Simon of Pandaiteripo, First Dispenser and Resident Surgeon of the Jaffna Friend-in-Need Society’s Hospital). மருத்துவர் ஐரா கௌல்ட் 1858 வரை யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவி  மருத்துவமனையில் கடமையாற்றினார்.

Dispenser என்ற ஆங்கிலச் சொல் மருந்து வழங்குபவர், மருந்தாளர் என்ற கருத்தில் இன்று வழக்கில் இருந்தாலும் 19 ஆம் நூற்றாண்டில் மருத்துவர் அல்லது உதவி மருத்துவர் என்ற கருத்தினைத் தரும் வகையிலும் பாவனையில் இருந்தது. அந்தக்காலத்தில் மருத்துவரே நோயாளிக்கு மருந்தை வழங்குபவராகவும் விளங்கினார்.

மருத்துவர் கிறீன், மானிப்பாயில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடமையாற்றியவாறு யாழ். நகரத்தில் 1850 இல் தாபிக்கப்பட்ட ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக  மருத்துவமனையின் முதலாவது வருகை சத்திரசிகிச்சை நிபுணராகவும் பணியாற்றினார் (First Visiting Surgeon of the Jaffna Teaching Hospital). மானிப்பாயில் கிறீன் ஆரம்பித்த டிஸ்பென்சரி வெளிநோயாளர் மருத்துவமனையாகவே விளங்கியது.

ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்கு இணையாகத் திகழ்ந்த வட்டுக்கோட்டைக் கல்விக்கழகம்

பிரித்தானிய குடியேற்ற நாட்டுச் செயலாளர் சேர். எமர்சன் ரெனன்ற் 1848 இல் வட்டுக்கோட்டை செமினரியைப் பார்வையிட்டு கல்லூரியை ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்கு இணையாகக் குறிப்பிட்டிருந்தார். தென்னிந்தியச் திருச்சபையின் யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது பேராயராக விளங்கிய வண. சபாபதி குலேந்திரன், வட்டுக்கோட்டை செமினரி பெற்றிருந்த உயர்நிலையை இலங்கையின் எந்த ஒரு உயர்கல்வி நிறுவனமும் இன்று வரை பெற்றதில்லை என்று 1992 இல் அமரத்துவம் அடையும் முன்னர் கூறிய வாசகங்கள் இன்றும் சிந்தனைக்குரியன.

வட்டுக்கோட்டை செமினரியில் கல்விகற்பதென்றால் முதலில் கிறிஸ்தவராக வேண்டும். பண்டத்தரிப்பைச் சேர்ந்த ஐரா கௌல்ட் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவி, கல்வி கற்று, மருத்துவராகி இன்றைய யாழ். போதனா மருத்துவமனையில் கடமையாற்றிய முதல் மருத்துவர்களில் ஒருவராக விளங்கினார். 1855 இல் வட்டுக்கோட்டை செமினரி மூடப்பட்டதைத் தொடர்ந்து 1872 இல் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கல்லூரியின் கல்வித்தரமும் ஒரு காலத்தில் மிக உயர்நிலையில் இருந்தது.  இதற்கு வித்திட்டவர்கள் அமெரிக்க மிசனரிகள். இலங்கையின் கல்வி வரலாற்றில் ஆரம்பம் முதலே மாணவர்களுக்குப் பிரம்பினால் தண்டனை வழங்காத கல்லூரி என்ற வரலாற்றுச் சிறப்பை யாழ்ப்பாணக் கல்லூரி கொண்டிருந்தது. (“From its very inception Jaffna College had no corporal punishment, a proud record in the history of education in the then Ceylon” – Silan Kadirkamar)  

வண. பெஞ்சமின் பெய்லி

1884 இல் கிறீனது மறைவின் போது மருத்துவர் பெஞ்சமின் ஏ. மில்ஸ், ’மருத்துவர் கிறீனது காலத்தில் யாழ்ப்பாணம் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் மேலைத்தேச மருத்துவ விஞ்ஞானத்தின் தலைமை இடமாகத் திகழ்ந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார்.  

வட்டுக்கோட்டை செமினரி பாடத்திட்டத்தில் கணிதம், விஞ்ஞானம், தருக்கம் (Logic), மேடைப் பேச்சுக்கலை, ஆங்கில இலக்கியம், ஒழுக்கவியல், உளவியல், மெய்யியல் முதலான பாடங்களுடன் இந்திய, கிரேக்க மற்றும் உரோமானிய வரலாறு என்பனவும் தமிழ், சமஸ்கிருதம், ஹிப்ரு முதலான மொழிக் கற்கைகளும் இடம்பெற்றிருந்தன.

மருத்துவர் நேத்தன் உவோட் செமினரியில் இயற்கை மெய்யியல் கற்பித்து வந்ததுடன் நிருவாகியாகவும் கடமையாற்றினார்.  தெரிவு செய்யப்பட்ட உள்ளூர் மாணவர்களுக்கு மருத்துவர் உவோட் மருத்துவமும் கற்பித்தார்.

கிறீன் 1847 இல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போது பல்வேறு இடங்களிலும் உவோட்டிடம் மருத்துவப் பயிற்சி பெற்ற சுதேச  ஆங்கில மருத்துவர்கள் கடமையாற்றி வந்தனர்.

கிறீன் அமெரிக்க இலங்கை மிசனது வேண்டுகோளை ஏற்று 1848 இல் வட்டுக்கோட்டையில் இருந்து மானிப்பாய்க்கு நகர்ந்து மருத்துவமனையை ஆரம்பித்தார். அப்போது வட்டுக்கோட்டை செமினரியில் நேத்தன் உவோட்டிடம் மருத்துவம் பயின்ற கௌல்ட் (Assistant Physician) கிறீனுக்கு உதவியாக மானிப்பாயில் கடமையாற்றினார்.

1st Batch in Caption in Tamil

வட்டுக்கோட்டை செமினரியில் உவோட் மருத்துவரிடம் பயின்றோர்:

  1. ஐரா கௌல்ட்
  2. எஸ். ஏ. இவாட்ஸ்
  3. டானியல் நிக்கலஸ்
  4. எஸ். ரோப்ஸ்
  5. ரி. ஸ்கொட்
  6. எஸ். மில்லர்
  7. எஸ். குட்செல்
  8. ஜெரேமியா இவாட்ஸ்

இலங்கைத் தீவை ஆட்சிசெய்த பிரித்தானிய குடியேற்ற நாட்டு அரசாங்கம் 1851 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளின் கல்வி நிலையை மதிப்பீடு செய்வதற்காக வண. பெஞ்சமின் பெய்லியை (3rd Archdeacon of Colombo)  கொழும்பிலிருந்து  யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியது.  வண. பெய்லி பிரித்தானிய அரசாங்கத்திடம் கையளித்த மதிப்பீட்டு அறிக்கையில் கிறீனின் மருத்துவக் கல்லூரிக்கு வருடாந்தம் 50 ஸ்ரேர்லிங்பவுண் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். மேலும் இங்கிலாந்திலுள்ள இளம் மருத்துவர்கள் மருத்துவப் பட்டம் பெற்று மக்களிடையே மருத்துவப் பணி செய்ய ஆரம்பிக்கும் போது அவர்களிடம் காணப்படும் மருத்துவ நிபுணத்துவ அறிவை யாழ். நகரத்தில் உள்ள அரச மருத்துவமனையில் (தற்போதைய போதனா மருத்துவமைனை) பணிபுரியும் ஐரா கௌல்ட் (Ira Gould) கொண்டிருந்ததாகவும் தனது மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மருத்துவர் கௌல்ட் கண்புரைநோய்க்கு (cataract) வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சை செய்ததுடன் ஆபத்தான நிலையிலிருந்த ஒருவரது காலையும் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியமையை மருத்துவர் கிறீன்  குறிப்பிட்டிருக்கிறார்.

கிறீனின் முதல் அணி மாணவர்களில் ஜோசுவா இடன்போத், ஜோன் டெனின்சன் இருவரும் வட்டுக்கோட்டை செமினரியில் கல்வி பயின்றவர்கள். இளையதம்பி வைத்திலிங்கம் வண. பீற்றர் பேர்சிவல் பாதிரியாரிடம் உவெஸ்லியன் உயர் பாடசாலையில் (யாழ். மத்திய கல்லூரி) கல்வி கற்றவர்.

மானிப்பாயில் கிறீனின் மருத்துவக் கல்லூரியில் முதலாவது அணியிற் பயின்றவர்கள் மருத்துவக் கல்வியை 1850 இல் பூர்த்தி செய்தனர். ஜோசுவா இடன்போத் மானிப்பாயில் கிறீனின் டிஸ்பென்சரியில் கிறீனுக்கு உதவியாகப் பணியாற்றினார். ஜோன் டெனின்சன் அரசசேவையில் இணைந்து பருத்தித்துறையில் மருத்துவராகப் பணியாற்றினார். இதன்மூலம் வருடத்துக்கு 24 ஸ்ரேர்லிங் பவுண் என்ற கவர்ச்சியான வருமானத்தைப் பெற்றார்.  இளையதம்பி வைத்திலிங்கம் முல்லைத்தீவில் மருத்துவப் பணியை ஆரம்பித்தார்.

இந்தக்காலகட்டத்தில் கிறீன் ஆங்கில மருத்துவத்தில் வழங்கும் சொற்பதங்களுக்கான தமிழ்ச் சொற்கோவை ஒன்றைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

’அங்காதிபாத சுகரண வாத உற்பாலன நூல்

கிறீனின் 2 ஆவது அணி மருத்துவ மாணவர்கள் (1851-1852)

  1. சாமுவேல் மில்லர் (வேலுப்பிள்ளை)
  2. நேத்தன் பார்க்கர் (அருணாசலம்)
  3. ஜோசப் எச் ரவுண் (பூபாலசிங்கம்)
  4. சார்லஸ் மெட் (கணபதி)
  5. ஏ.சி.ஹோல் (குமார்)

இவர்கள் அனைவரும் கிறீனுடைய மருத்துவக்கல்லூரியில் பயில முன்னர் வட்டுக்கோட்டை செமினரியிற் கல்வி கற்றுப் பட்டம் பெற்றவர்கள்.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் ஆங்கில மருத்துவ நூல்:  கற்றரின் அங்காதிபாதம், கல்வின் கற்றர் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய மருத்துவ நூலான Anatomy, Physiology and Hygiene   எனும் மருத்துவ நூலை 1852 இல் மருத்துவர் சாமுவேல் பிஷ்க் கிறீன் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் ஆங்கில மருத்துவ நூல் இதுவேயாகும். இந்நூலின் இரண்டாவது பதிப்பு 1857 இல் ’அங்காதிபாத சுகரண வாத உற்பாலன நூல்’ என்னும் பெயரில் வெளிவந்தது.  

தொடரும்

உசாத்துணை

  1. Life and letters of Samuel Fisk Green, M.D., of Green Hill, Authors: Samuel Fisk Green, Ebenezer Cutler – First Published 1891
  2. Martyn’s Notes on Jaffna Chronological-Historical-Biographical-Etc. with Appendix by Jhon H Martin – 1923
  3. Nineteenth century American medical missionaries in Jaffna, Ceylon: with special reference to Samuel Fisk Green by Thiru Arumugam – 2009
  4. Poetical Sketches of the Interior of Ceylon – Benjamin Bailey’s Original Manuscript, 1841. Introduction: Rajpal K de Silva, 2011 Serendib Publications London 2011
  5. Some Accounts of American Mission Medical School by Sir William Twynam Kt., C.M.G. – Reproduced from Manuscript of 1901
  6. Reflections on the History of Jaffna College by Silan Kadirgamar – Essay :https://www.colombotelegraph.com/index.php/reflections-on-the-history-of-jaffna-college/
  7. A Dictionary of Biography of Ceylon Tamils by S. Arumugam 1997

ஒலிவடிவில் கேட்க

13104 பார்வைகள்

About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)