மன்னர் காலத்திற்குப் பின்னர் “நாம் தமிழ் இனம்” என்ற பிரக்ஞை தமிழ்நாட்டில் சுதந்திர இயக்கப் போராட்டங்களுடன் இணைந்தே மீண்டும் எழுச்சி பெற்றது. இதன் பிரதிபலிப்புகள் இலங்கையிலும் காணப்பட்டன. இத்தகு எழுச்சி தமிழ்நாட்டில் பார்ப்பனருக்கு எதிரான எழுச்சியுடன் ஆரம்பமாகிறது. இவ்வெழுச்சிக்குக் காரணமாக “தமிழன்” மற்றும் “திராவிடன்” என்ற மனவெழுச்சி ஏற்படுத்திய பிரவாகம் இருக்கிறது.
இந்த மனவெழுச்சியுடன் இணைந்து பிராமணர்களுக்கு எதிரான “சுயமரியாதை” இயக்கம் 1925 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இந்த எழுச்சியின் தந்தையாக இருந்தவர் “ஈவேரா” என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஈ. வே. ராமசாமி நாயக்கர் ஆவார். இவர் பின்னர் தந்தை பெரியார் என்றும் அழைக்கப்பட்டார். இவர் 1879 ஆம் ஆண்டு ஒரு வர்த்தகரின் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயது முதலே இவர் சாதிக் கட்டுப்பாடுகளை மீறி அதனை உடைத்தெறிவதில் முனைப்புக் காட்டினார். அதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போதும் மெட்ராஸ் காங்கிரஸ் தலைவர்களின் பார்ப்பனியச் செயற்பாடுகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார். காங்கிரஸ் தலைமைத்துவத்திற்குள் காணப்பட்ட பார்ப்பனிய மேட்டுக்குடி எண்ணங்கள், சமூகப் பிற்போக்குத்தனங்கள், கடவுள் தத்துவம், மூடநம்பிக்கைகள், சமூக ஒடுக்குமுறைமை என்பவைகளுக்கு எதிராகச் செயற்படத் தொடங்கினார். அரசியல் விடுதலை மூலம் பார்ப்பனியத் தலைமைகள் உருவாவதைக் கடுமையாக எதிர்த்தார்.
இதனால் பார்ப்பனியர்கள் அல்லாத ஏனைய சமூக அடிமட்டப் பிரிவினரை ஒன்று திரட்டி மூடநம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு சமூகத்தை உருவாக்கப்பாடுபட்டார். அவர் தனது கொள்கைகளை இந்தியாவுக்கு வெளியிலும் பரப்புரைகள் செய்வதற்காக 1932 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அந்த விஜயத்தின்போது கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து இந்துத்துவக் கடவுள் நம்பிக்கைகளுக்கு எதிராகவும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் இந்து சமயத்தில் பிராமணிய ஆதிக்கத்துக்கு எதிராகவும் பகுத்தறிவுவாதத்தை முன்வைத்து பிரசங்கங்கள் மேற்கொண்டார். அவரது வாதங்கள் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என்பதையும் வலியுறுத்தின. பெரியாரின் பகுத்தறிவுவாதக் கருத்துக்கள் இலங்கையில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரிதும் பிரபல்யம் பெற்றது. அதன் காரணமாக யாழ்ப்பாணத்திலும் மலையகத்திலும் திராவிட இயக்கங்கள், சங்கங்கள் தோன்றின. 1930 களை தொடர்ந்தும் 1940 களின் முற்பகுதியிலும் பெரியாரின் பகுத்தறிவுவாத இயக்கம், பிராமணியத்துக்கு எதிரான போராட்டம், சுயமரியாதைப் போராட்டம் என்பன தமிழ்நாட்டில் பலமாக வேரூன்றின. அதனுடன் சேர்ந்து அறிஞர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து “தமிழ்நாடு தமிழனுக்கே” என்ற கோஷத்தை முன்வைத்தது. இந்திய தேசிய காங்கிரஸில் வேரூன்றிக் கொண்டிருந்த ஆரியர் மேலாதிக்கத்துக்கு எதிராகவும் இவர்கள் கோஷங்களைப் பலமாக முன் வைத்தனர்.
இத்தகைய தமிழர் எழுச்சிகள் 1930 களிலும் மற்றும் 1940 களிலும் தமிழர்தம் கலாசாரம், சமூகச் சீர்திருத்தம் போன்றவற்றின் அவசியம் தொடர்பில் உரத்துக் குரல் எழுப்பக் காரணமாக அமைந்தன. இந்தக் குரல்கள் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மலைநாட்டின் பெருந்தோட்டப் பகுதிகளிலும் கூட ஒலிக்கத் தொடங்கின. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் என்பன கொழும்பிலும் மலை நாட்டிலும் எழுச்சிக் குழுக்களை உருவாக்கின. இத்தகைய குழுக்களில் சமையல் தொழில்புரிபவர்கள், சவரத் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், ரிக்சா ஓட்டுபவர்கள், உணவகப் பணியாளர்கள், வீட்டுத் தோட்ட வேலையாளர்கள், போத்தல் – சாக்கு – இரும்பு சேகரிப்பவர்கள் முதலானோர் பங்குபற்றினர். விரைவிலேயே இந்த இயக்கம் பெருந்தோட்டத் துறைக்கும் பரவியது. 1945 ஆம் ஆண்டில் இந்தத் திராவிட இயக்கத்துக்கு இலங்கைத் திராவிடக் கூட்டமைப்பு என்று பெயரிடப்பட்டது. அது 1948 ஆம் ஆண்டு இலங்கைத் திராவிடக் கழகம் என்று உருமாற்றம் அடைந்தது. 1949 ஆம் ஆண்டு அது திராவிட முன்னேற்றக்கழகமாக மாறி டி. எம். கே. என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. இது பின்னர் ஏ. இளஞ்செழியனை செயலாளராகக் கொண்டு தனது கூட்டங்களை கண்டி, தலவாக்கலை போன்ற நகரங்களில் ஏற்பாடு செய்தது. இளஞ்செழியன் ஒரு ஹோட்டல் தொழிலாளியாகவே தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எழுச்சி அடைந்த தேசிய மக்கள் இயக்கங்களின் செயற்பாடுகள் மற்றும் மக்களைப் பெருந்திரளாக இணைத்துக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் என்பன இலங்கைத் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் பிரதிபலித்ததுடன் இந்தியப் பெருந்தோட்டத் தொழிலாளர் மத்தியிலும் செல்வாக்குச் செலுத்தியதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அவ்வப்போது நிகழ்ந்த, செல்வாக்கு மிக்க இந்தியத் தலைவர்களின் இலங்கை வருகைகள், இலங்கையில் வசித்த இந்திய வம்சாவழி மக்களின் மோசமான வாழ்க்கை நிலையை வெளி உலகத்திற்கு எடுத்துச் சொல்ல பெறும் வாய்ப்புகளாக அமைந்தன. குறிப்பாக அவர்கள் இலங்கை மத்திய மலைநாட்டில் கூலித் தொழிலாளர்களாக கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் தொழில் புரிந்த மக்களைப்பற்றி வெளியுலகத்திற்கு பிரசாரம் செய்தார்கள். இதனால் அந்தத் தொழிலாளர்கள் எந்த அளவுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு விலங்குகள் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.
இந்தியத் தேசிய விடுதலை அமைப்புகளுக்கு அப்பால் சமூகச் சீர்திருத்தம், சமூக ஒடுக்குமுறை, உயர் சாதி – கீழ்சாதி வேறுபாடுகள், தீண்டாமை முதலான சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராக போராட்டங்கள் மேற்கொண்ட பல அமைப்புகளும் இலங்கை வாழ் பெருந்தோட்ட மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வு ஏற்படுவது தொடர்பில் கரிசனை கொண்டிருந்தன. பிற்காலத்தில் ஏற்பட்ட பல்வேறு சமூக மாற்றங்களுக்கு இவை அடிப்படை ஊக்குவிப்புகளாக அமைந்தன. எனினும் மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் வசித்த காலத்தில் அங்கிருந்த இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக போராட்டங்கள் மேற்கொண்டதுபோல் இலங்கையின் மத்திய மலைநாட்டில் இவ்விதம் இந்தியத் தொழிலாளர்கள் துன்பப்படுகிறார்கள் என்று தெரிந்திருந்தும் அதுபற்றி அவரது இலங்கை விஜயத்தின்போது ஒன்றுமே குறிப்பிடவில்லை. அவர் இந்தியா சென்ற பின்னரும் அது தொடர்பில் ஒன்றுமே செய்யாமல் விட்டது ஒரு குறைபாடாகவே தென்படுகிறது என்று பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எது எப்படி இருந்த போதும் இலங்கையின் பிரித்தானிய அரச அதிகாரிகளும் பெருந்தோட்டச் சொந்தக்காரர்களும் அரச இயந்திரத்துக்குள் கடுமையான சட்டதிட்டங்களை அமுல்படுத்தி, தொழிலாளரைக் கசக்கிப் பிழிந்து பெருந்தோட்டத் துறையிலிருந்து உச்ச இலாபத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தனரேயன்றி உற்பத்திச் செயற்பாடு எவ்வாறு செயலாற்றுகின்றது, தோட்ட உட்கட்டமைப்பு எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, தொழிலாளர் என்ன நிலையில் இருக்கிறார்கள், அவர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி துளியளவிலாவது அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எனினும் இந்த நிலைமையிலும் கூட தமக்கு எதிரான ஒடுக்குமுறை, உரிமை மறுப்பு மற்றும் பல்வேறு அநீதிகளுக்கு எதிராகவும் போராட வேண்டும் என்ற ஒரு தலைமைத்துவ உணர்வை இவர்கள் மத்தியில் ஏற்படுத்த யாரும் முயற்சிக்கவில்லை.
மறுபுறத்தில் இந்தியத் தேசிய தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து அவர்கள் பேசிய கருத்துக்கள் “நாம் இந்தியர்” என்ற உணர்வை இவர்களுக்கு ஏற்படுத்தியதுடன் ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு எதிரான உணர்வை அவர்களது உள்ளங்களில் தோற்றுவித்து காலனித்துவத்திற்கு எதிரான அணிக்கு ஆதரவு வழங்க அவர்களைத் தூண்டின. அதேசமயம் திராவிட இயக்கக் கருத்துக்களால் கவரப்பட்ட அவர்கள் சாதியத்திற்கு எதிராகவும் பிராமணியத்துக்கு எதிராகவும் போராடும் உணர்வு பெற்றனர். ஆனாலும் இந்தத் தலைவர்கள் யாருமே தொழிலாளர் உரிமை மறுப்புக்காக பெருந்தோட்த்ட தொழிலாளர்களும் போராட வேண்டும் என்ற உணர்வை அவர்கள் மனதில் தோற்றுவிக்க தவறிவிட்டனர். இந்த நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தோட்டத் துரைமார்கள் தொடர்ந்தும் தமது சட்டதிட்டங்களை கிடுக்கிப் பிடியாக இறுக்கி, தொழிலாளர்கள் தோட்டங்களில் இருந்து வெளியே செல்லாமலும் அதேசமயம் வெளியிலிருந்து தோட்டங்களுக்கு யாரும் சென்று விடாமலும் இருக்க மிகக் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை அமுல்படுத்தி, தொடர்ந்தும் தொழிலாளர்களை அடிமை போன்று நடத்தி வந்தார்கள். அத்தகைய சட்டதிட்டங்களை யாரும் மீறினால் அவர்களைச் சட்டங்கள் கொண்டு தண்டிக்கவும் அவர்கள் கரங்களில் அதிகாரம் என்ற ஆயுதம் எப்போதுமே மின்னிக் கொண்டிருந்தது.
தொடரும்.