வடக்கு மாகாணத்தில் வறட்சி : ஓர் அவதானிப்பு 
Arts
18 நிமிட வாசிப்பு

வடக்கு மாகாணத்தில் வறட்சி : ஓர் அவதானிப்பு 

September 1, 2024 | Ezhuna

ஒரு பிரதேசத்தின் பல்வேறு விடயங்களை கட்டமைப்பதில் அந்தப் பிரதேசத்தின் இயற்கை அம்சங்கள் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றன. குறிப்பாக ஒரு பிரதேசத்தின் காலநிலை சார்ந்த அம்சங்கள் அந்தப் பிரதேசத்தினுடைய இயற்கையையும் அந்த பிரதேசத்திற்குரிய பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும் கட்டமைப்பதில் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றது. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தினுடைய பல்வேறு வகைப்பட்ட விடயங்களை தீர்மானித்ததில் வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை மிகப்பெரிய செல்வாக்கினை பெற்றிருக்கின்றது. வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை சார்ந்த பாரம்பரிய அறிவியல் விடயங்களையும் நவீன விஞ்ஞான ரீதியிலான ஆய்வு சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கியதாக வடக்கு மாகாணத்தினுடைய காலநிலைப் பண்புகளை முழுமைப்படுத்தி வெளியிடுவதாக ‘பிராந்திய காலநிலையியல் : வடக்குப் பிராந்தியம், இலங்கை‘ எனும் தொடர் அமைகின்றது.

அறிமுகம்

இன்றைய மனித சமூகம் எதிர்கொள்ளுகின்ற மிக முக்கியமான இயற்கை அனர்த்தங்களுள் வறட்சியும் ஒன்றாகும். பூகோள ரீதியிலான காலநிலை மாற்றம் உலகளாவிய ரீதியில் வறட்சி அனர்த்தங்களின் நிகழ்வு எண்ணிக்கையையும் பாதிக்கும் தன்மையையும் அதிகரித்து வருகின்றது (Dananjaya et al., 2022). 2019 ஆம் ஆண்டின் ஐ.பி.சி.சி. யின் அறிக்கை, உலகளாவிய ரீதியில் ஆண்டுக்கு சராசரியாக 42 நாடுகள் வறட்சியினால் பாதிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றது (Abeysinghe & Rajapaksha, 2020). அத்தோடு எல் நினோ போன்ற காலநிலைப் பிறழ்வுச் செயற்பாடுகளினாலும் ஆண்டுதோறும் வறட்சி நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண முடியும். அந்த அடிப்படையில் இலங்கையும் ஆண்டுதோறும் வறட்சியினால் பாதிப்படைந்து வருகின்றது. குறிப்பாக வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலப்பகுதிகளில் இலங்கையினுடைய வடமேற்குப் பகுதிகளும் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலப்பகுதிகளில் இலங்கையினுடைய வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களும் அதிக அளவு வறட்சியால் பாதிப்படைந்து வருவதை அவதானிக்க முடியும். அந்த அடிப்படையில் வறட்சிக்கான நிலமைகளும் அவற்றின் பாதிப்புகளும் இலங்கையினுடைய வடக்கு மாகாணத்தில் மிக உயர்வாகவே காணப்படுகின்றன. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று காலப்பகுதிகளிலும் முதலாவது இடைப்பருவ காலங்களின் பிற்பகுதியிலும் இலங்கையினுடைய வடக்கு மாகாணம் வறட்சியினால் பாதிப்படைந்து வருகின்றது. அந்த அடிப்படையில் இந்தக் கட்டுரை வடக்கு மாகாணத்தின் வரட்சிக்கான வாய்ப்புகளையும் வடக்கு மாகாணத்தின் வறட்சி நிலைமைகளின் தன்மைகளையும் ஆராய்வதாக உள்ளது. 

வறட்சிக்கான காரணங்கள் 

வடக்கு மாகாணத்தின் வறட்சிக்கு, நீண்ட நாட்களுக்கு மழையற்ற தன்மையும் பருவத்தில் கிடைக்க வேண்டிய மழையின் குறைவான கிடைப்பனவுமே பிரதானமான காரணிகளாகும். பொதுவாக வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை அமைப்பைப் பொறுத்தவரையில் வடக்கு மாகாணம் இரண்டாவது இடைப்பருவ காலத்திலும் வடகீழ் பருவக் காற்றுக் காலத்திலுமே மழையைப் பெறுகின்றது. தென்மேற்கு பருவக்காற்றுக் காலத்திலும் முதலாவது இடைப்பருவக் காலத்திலும் வெப்பச் சலனச் செயற்பாட்டினால் மாத்திரமே வடக்கு மாகாணம் குறைந்த அளவிலான மழை வீழ்ச்சியைப் பெறுகின்றது. மிக நீண்ட நாட்களுக்கு மழையற்ற வறண்ட வானிலை நிலவுவதன் காரணமாக வடக்கு மாகாணத்தினுடைய பல பகுதிகளும் வறட்சியை அல்லது நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்வதைக் காண முடிகின்றது. மழையினால் நிரப்பப்பட வேண்டிய தரைக்கீழ் மற்றும் தரை மேற்பரப்பு நீர் வளங்கள் முழுமையாக மீள் நிரப்பப்படாத காரணத்தினாலும் மீள்நிரப்புவதற்குத் தேவையான மழை வீழ்ச்சி இல்லாததன் காரணமாகவும் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் தென்மேற்கு மற்றும் முதலாவது இடைப்பருவ காலத்தில் வறட்சியை எதிர்கொள்கின்றன. 

வறட்சிக்கான இரண்டாவது காரணமாக, அதிகரித்த பகல் பொழுது வெப்பநிலையைக் குறிப்பிடலாம். வடக்கு மாகாணத்தில் மார்ச் மாதத்தில் இருந்து செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் பகல் பொழுதின் அதிகூடிய வெப்பநிலை சராசரியாக 35 பாகை செல்சியஸ்க்கு கூடுதலாகவே காணப்படுவது வழமையாகும். குறிப்பாக மார்ச் மாதத்தின் பிற்பகுதிகளிலும் செப்டெம்பர் மாதத்தின் முற்பகுதிகளிலும் வடக்கு மாகாணத்தில் சூரியனுடைய உச்சம் கிட்டத்தட்ட 90 பாகையை அண்மித்த நிலைமையில் காணப்படுவதன் காரணமாக இந்தக் காலப்பகுதிகளில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் அதிகளவு சூரிய ஒளியைப் பெறுவதோடு அதன் காரணமாக வளிமண்டல வெப்பநிலை மற்றும் மண் வெப்பநிலையினுடைய அதிகரிப்பும் உயர்வாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக பகல் பொழுதில் நிலவுகின்ற அதிகரித்த வெப்பநிலை காரணமாக இந்தப் பிரதேசங்களில் இந்தக் காலப்பகுதிகளில் வறட்சி அனர்த்தங்கள் அல்லது நீர்ப் பற்றாக்குறை நிலமைகள் அல்லது மிகவும் வெப்பநிலையுடன் கூடிய வானிலை நிலமைகளை அனுபவிக்கின்ற சூழலைக் காண முடிகின்றது. 

வடக்கு மாகாணத்தின் அதிகரித்த வறட்சி நிலைமைகளுக்கான மற்றும் ஒரு பிரதானமான காரணியாக வெப்பநிலை உயர்வாக உள்ள காலப்பகுதிகளில் நிலவுகின்ற உயர்வான ஆவியாக்க ஆவியுயிர்ப்பு விகிதத்தினைக் குறிப்பிடலாம். அதிகரித்த வெப்பநிலை காரணமாகவும் இக்காலப் பகுதியில் வீசுகின்ற காற்றின் வேகம் காரணமாகவும் தரை மேற்பரப்பு நீர்நிலைகள் மிக வேகமாக ஆவியாகுவதுடன், அதிகரித்த வெப்பநிலை மற்றும் அதிகரித்த காற்றின் வேகத்தினை சமாளிப்பதற்காக தாவரங்கள் அதிக அளவிலான ஆவியுயிர்ப்பை மேற்கொள்ளுவதனையும் கவனிக்க முடிகின்றது. இதன் காரணமாக அதிகரித்த ஆவியாக்கம் மற்றும் ஆவியுயிர்ப்பு நிலமைகளினால் வறட்சிக்கான நிலமைகள் தூண்டப்படுகின்றன. பெரும்பாலான வடக்கினுடைய மேற்பரப்பு நீர் நிலைகள் மற்றும் சில பகுதிகளின் (மணற் பகுதிகள்) தரைக்கீழ் நீரும் அதிகளவான ஆவியாக்கத்திற்கு உட்படுவதன் காரணமாக இந்தப் பிரதேசங்களில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி நிலமைகள் தூண்டப்படுகின்றது. வடக்கினுடைய பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் அல்லது மிகப் பெரிய குளங்கள் திறந்த மேற்பரப்பைக் கொண்டு காணப்படுவதன் காரணமாக சூரிய ஒளி மேற்பரப்பு நீரோடு தொடர்புபட்டிருக்கின்றமையும், வளிமண்டல ஈரப்பதனில் ஏற்படுகின்ற மாற்றமும், காற்றின் வேகமும், அதிகரித்த வெப்பநிலையும் வடக்கு மாகாணத்தில் மே மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதிகளில் அதிக அளவிலான ஆவியாக்கத்தைத் தூண்டுவதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகள் வறட்சி நிலமையை அனுபவிப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. 

வடக்கு மாகாணத்தினுடைய வறட்சிக்கான மற்றும் ஒரு பிரதானமான காரணியாக வடக்கு மாகாணத்தினுடைய மனித நடவடிக்கைகளை குறிப்பிட்டுக் கூறலாம். அந்த அடிப்படையில் பின்வரும் மனித நடவடிக்கைகள் வடக்கு மாகாணத்தின் வறட்சி அனர்த்த நிகழ்வுகளுக்கு அடிப்படையாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக தாவரப் போர்வைகளை மிக அதிக அளவு அகற்றுவதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகள் வறட்சிக்கான நிலமையை அனுபவிப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. குறிப்பாக பல்வேறு தேவைகளின் பொருட்டு காடுகள் மற்றும் தாவர விதானங்கள் அல்லது தாவரங்கள் அகற்றப்படுவதன் காரணமாக அந்தத் தாவரங்கள் மூலம் வளிமண்டலத்துக்கு வழங்கப்படுகின்ற ஈரப்பதன் அளவு குறைக்கப்படுவதுடன் தொடர்ச்சியாக மழையற்றுப் போய் அதிகரித்த வெப்பநிலை நிலவுகின்றது. அதன் காரணமாக அந்தப் பிரதேசம் அதிக அளவிலான நீர்ப் பற்றாக்குறையை அல்லது மிக வெப்பமான வானிலையை அனுபவிப்பதோடு அது தொடர்ச்சியாக வறட்சி நிலமைக்கும் இட்டுச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. 

இலங்கையினுடைய வடக்கு மாகாணத்தில் அதிகரித்த அளவிலான வறட்சி நிலமையை உருவாக்குவதில் மனிதனுடைய கட்டுமானம் சார்ந்த செயற்பாடுகளும் அதிக அளவுக்கு பங்களிப்புச் செய்கின்றன. 2009 ஆம் ஆண்டிற்கு பின்னரும் சமாதானம் நிலவிய காலப் பகுதியிலும் வடக்கு மாகாணத்தில் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு வகையான கட்டமைப்புச் சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக பெருந்தெருக்கள் நிர்மாணம், கட்டிடங்கள் நிர்மாணம் மற்றும் பல கட்டமைப்புச் சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளின் காரணமாக அதிகளவான நீர் நுகர்வு தூண்டப்பட்டு வடக்கு மாகாணத்தில் வறட்சி நிலவக் காரணமாகின. குறிப்பாக இந்தக் கட்டுமானத் தேவைகளுக்காக, வடக்கு மாகாணத்தின் கோடை காலம் என்று அழைக்கப்படுகின்ற மார்ச் தொடக்கம் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் நுகரப்படுகின்ற அதிகரித்த அளவிலான நீரின் காரணமாக, வடக்கு மாகாணத்தின் பல பகுதிகள் நீர்ப் பற்றாக்குறையை அல்லது வறட்சியை அனுபவிக்கின்றன. குறிப்பாக பெருந்தெருக்கள் மற்றும் பாலங்கள்  போன்றவற்றின் நிர்மாணத்திற்காக அதிகளவிலான நீர் உள்ளெடுக்கப்படுகின்றது. இதன் காரணமாக இந்த அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக பல்வேறு தரப்பினராலும் பெற்றுக்கொள்ளப்படுகின்ற அதிகரித்த அளவிலான நீர் நுகர்வின் காரணமாக வடக்கு மாகாணத்தினுடைய தரைக்கீழ்  மற்றும் தரை மேற்பரப்பு நீர்நிலைகள் நீர்மட்டங்களை இழப்பதோடு அதன் காரணமாக அந்தப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக வறட்சி நிலமைகளும் தூண்டப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தினுடைய வறட்சிக்கான காரணங்களில் ஒன்றாக வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் நீர்ப் பயன்பாடு குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது. வடக்கு மாகாண மக்கள் நீரை மிகவும் உத்தமமான அளவிற்குப் பயன்படுத்துவது கிடையாது. தேவைக்கு மேலதிகமான நீர்ப் பயன்பாடும் (Over use) துஸ்பிரயோகமான நீர்ப் பயன்பாடும் (Abuse) தவறான நீர்ப் பயன்பாடும் (Misuse) வடக்கு மாகாணத்தினுடைய நீர் வளங்களில் நீர் இழப்பை ஏற்படுத்துகின்றது. அதன் காரணமாக தொடர்ச்சியாக நீர்ப்பற்றாக்குறை அல்லது வறட்சி நிலமைகள் உருவாக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. 

வடக்கு மாகாணத்தில் வறட்சியைத் தூண்டுகின்ற மற்றொரு பிரதானமான காரணியாக திட்டமிடப்படாத அல்லது நீர் வினைத்திறன் குறைந்த விவசாய நடவடிக்கைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். குறிப்பாக வடக்குப் பிராந்தியத்தில் உள்ள பல மாவட்டங்களின் பெரும்பாலான மக்கள், குறுகிய காலத்தில் அதிகளவிலான விளைச்சலை பெறவேண்டும் என்ற நோக்கில் விவசாய நடவடிக்கைகளையே மேற்கொள்வதனை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்ற பணப் பயிர்ச் செய்கைக்காக அதிகளவான நீர் நுகரப்படுகின்றது. குறிப்பாக கோடை காலங்களில், அதாவது மானாவாரியான பயிர்ச்செய்கை இல்லாத காலங்களிலும், நீர்ப்பாசனத்தை மட்டுமே நம்பி இருக்கின்ற முதலாவது இடைப் பருவக் காலங்களிலும் மற்றும் தென்மேற்கு பருவக் காற்றுக் காலங்களிலும் பல்வேறு வகைப்பட்ட பணப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிளகாய், வெங்காயம், புகையிலை மற்றும் நிலக்கடலை போன்ற பல்வேறு வகையான பணப் பயிர்ச்செய்கைக்காக அதிகளவான தரை மேற்பரப்பு மற்றும் தரைக்கீழ் நீர் நுகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில், ஓகஸ்ட் மாதத்தின் பிற்பகுதிகளிலிருந்து தரைக்கீழ் நீர்மட்டத்தின் அளவு மிகக் கணிசமான அளவு குறைந்து பல பிரதேசங்களில் நீர்ப் பற்றாக்குறை நிலவுவதற்கு, முற்பட்ட காலங்களில் இத்தகைய பயிர்ச் செய்கைக்காக மிக அதிக அளவில் நுகரப்பட்ட நீர்ப் பயன்பாடே காரணமாகும். பங்குனியில் இருந்து ஆவணி வரையான காலப்பகுதிகளில் பல்வேறு வகைப்பட்ட பயிர் நடவடிக்கைகளுக்காக அதிகளவான நீர்  கிணற்றில் இருந்து இறைக்கப்படுகின்றது. இதன் காரணமாக தரைக்கீழ் நீர்மட்டம் குறைவடைவதுடன் பல பிரதேசங்களில் கடுமையான நீர்ப்பற்றாக்குறை அல்லது வறட்சி நிலமை உருவாக்கப்படுகின்றது.  

வடக்கு மாகாணத்தில் வறட்சியைத் தூண்டுகின்ற மற்றொரு மானிடக் காரணியாக மனிதர்களின் வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தினைக் குறிப்பிடலாம். 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், பல்வேறு வகைப்பட்ட கட்டுமானச் செயற்பாடுகள் வடக்கு மாகாணத்தில் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய தனிப்பட்ட அபிவிருத்திகளிலும் கணிசமான அளவு கவனம் செலுத்துபவர்களாக காணப்படுகின்றார்கள். பலரும் தங்களுடைய வீடுகளை நிரந்தரமான வீடுகளாக அமைப்பதற்காக மாடி வீடுகள் அமைக்கின்ற பொழுது, தங்களுடைய வீடு அமைந்திருக்கின்ற வளவின் நிலப்பகுதியை அழகுக்காகவும் தங்களுடைய சௌகரியத்திற்காகவும் கொழுவுகல் மற்றும் சீமெந்து கொண்டு மூடி விடுவதை நவநாகரீகமாகக் கருதுகின்றார்கள். இவ்வாறு நிலப்பகுதி நீர் உட்புகாதவாறு நிரப்புச் செய்யப்படுவதன் காணமாக நீர் உட்புகும் தன்மை தடுக்கப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு இயல்பாகவே வடக்கு மாகாணத்தின் தரைக்கீழ் நீர் வளத்துக்குச் சேர வேண்டிய நீரின் அளவு கணிசமான அளவு குறைக்கப்படுகின்றது. இதன் காரணமாக உரிய காலத்தில் மழைவீழ்ச்சி கிடைத்தாலும் கூட, போதுமான அளவு தரைக்கீழ் நீர் வளம் சேராமல் இருப்பதன் காரணமாக, நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு, வடக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களிலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 

வடக்கு மாகாணத்தின் வறட்சிக்கான மற்றொரு காரணமாக 2009 ஆம் ஆண்டின் பின்னர் மிக அதிகமாக வழங்கப்பட்ட அகழ்வுக்கான அனுமதிகளும் சட்டவிரோதமான அகழ்வுகளையும் குறிப்பிடலாம். வடக்கு மாகாணத்தில் 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னதாக 119 மணல் அகழ்வதற்கான இட அனுமதியும் 89 கிறவல் அகழ்வதற்கான அனுமதியும் 249 கல்லகழ்வு அனுமதியும் (சுண்ணாம்புக்கல் மற்றும் கருங்கல்) மிகப்பெரிய அளவில் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை மிகப்பெரிய அளவிலான அகழ்வு ஏற்பாடாக இருப்பதன் காரணமாக மிகப்பெரிய பள்ளங்கள் அல்லது குழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இயல்பாகவே வடக்கு மாகாணத்தில், குறிப்பாக வன்னியினுடைய இயற்கையான வடிகால் பாங்குகள், இப்பிரதேசங்களில் மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள நீர்ப்பாசனக் குளங்களுக்கு நீரைக் கொண்டு சேர்க்கின்றன. இந்த இயற்கையான வடிகால்களை குழப்பமடையச் செய்து அமைக்கப்படுகின்ற இந்த அகழ்வுச் செயற்பாடுகளின் காரணமாக இந்த நீர்நிலைகளுக்குச் சேர வேண்டிய நீர் தடுக்கப்படுகின்றது. அத்தோடு மிகப்பெரிய அளவிலான அகழ்வுச் செயற்பாடுகள் இடம்பெற்றிருப்பதன் காரணமாக அந்த அகழ்வுச் செயற்பாடுகளினால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய குளங்கள் போன்ற பள்ளங்களில் இந்த நீர் இயற்கையான வடிகால்களூடாக வந்து தேங்கி மனிதர்களுக்குப் பயன்படாமல் வீணாகிறது. உதாரணமாக முத்தையன்கட்டிற்குத் தெற்கே அமைக்கப்பட்டிருக்கின்ற தட்டாமலை, ஒட்டுசுட்டான், மதவாச்சி, ஒலுமடு, நெடுங்கேணி, கல்விளான், வெள்ளாங்குளம் ஓமந்தை மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களில் இடம்பெறுகின்ற அதிக அளவிலான கல்லகழ்வுச் செயற்பாடுகளின் காரணமாகவும், கனகராயனாறு, பேராறு, பாலியாறு, பறங்கியாறு, சிப்பியாறு, நாயாறு மற்றும் அருவியாறு போன்ற ஆற்றங்கரையோரங்களில் மேற்கொள்ளப்படுகின்ற மணல் அகழ்வின் காரணமாகவும் தரைக்கீழ் அல்லது தரை மேற்பரப்பு நீர்நிலைகளுக்குச் சேர வேண்டிய நீர் தடுக்கப்பட்டு மேற்பரப்பு நீர் நிலைகள் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக மேற்பரப்பு நீர் நிலைகள் தமது முழுக் கொள்ளளவைப் பெற முடியாமையின் காரணமாக முதலாவது இடைப்பருவ காலத்திலேயே நீரற்றுப் போய், சிறுபோகச் செய்கைக்கான நீரை வழங்க முடியாமல் உள்ளன.   

வடக்கு மாகாணம் ஆண்டு தோறும் தென்மேற்குப் பருவக் காற்றுக் காலத்தில், குறிப்பாக ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மிகப்பெரிய அளவில் வறட்சி நிலைமையை அல்லது நீர்ப் பற்றாக்குறை நிலமையை எதிர்கொண்டு வருகின்றது.  மிக நீண்ட நாட்களாக மழையற்ற தன்மையும், அதிகரித்த வெப்பநிலையும், அதிக அளவிலான ஆவியாக்க ஆவியுயிர்ப்புச் செயற்பாடுகளும், முறையற்ற நீர்ப் பயன்பாடும், முறையற்ற நீர் முகாமைத்துவச் செயற்பாடுகளும் வடக்கு மாகாணத்தில் வறட்சி நிலமைகளைத் தூண்டுகின்றன. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் வறட்சி என்பது மிதமான வறட்சியாகவும் பெரும்பாலும் வளிமண்டல வறட்சியாகவுமே காணப்படுகின்றது. ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் வடக்கு மாகாணத்தினுடைய வறட்சியானது வளிமண்டல வறட்சியிலிருந்து நீரியல் வறட்சியாகவும், சில சந்தர்ப்பங்களில் விவசாய வறட்சியாகவும் உருமாறுகின்றது. எவ்வாறாயினும் மக்கள் இடம்பெயர்கின்ற அளவிற்கு மிக மோசமான வறட்சி நிலைமைகள் கடந்த மூன்று தசாப்தங்களாக வடக்கு மாகாணத்தில் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாணத்தில் தென்மேற்குப் பருவக்காற்றுச் செயற்பாடுகள் உயர்வாக அல்லது உச்சமாக உள்ள காலப் பகுதிகளான ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களிலேயே அதிக அளவிலான வறட்சி நிலமைகளை அல்லது நீர்ப் பற்றாக்குறை நிலமைகளை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக வடக்கு மாகாணத்தினுடைய சில பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக வறட்சி நிலமைகளை அல்லது நீர்ப் பற்றாக்குறை நிலமைகளை எதிர்கொள்கின்ற சூழ்நிலையை அவதானிக்க முடிகின்றது. இந்த வறட்சியின் காரணமாக மக்கள் நீரின்றி இருக்கின்ற அதேவேளை, பல பிரதேசங்களில் மக்கள் குடிநீரை அல்லது வீட்டுத் தேவைகளுக்கான நீரைப் பெறுவதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து பெறவேண்டிய சூழ்நிலையும் காணப்படுகின்றது. எனினும் அண்மித்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினுடைய ஏற்பாட்டில், தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலப்பகுதிகளில் நீர் வழங்கல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதன் காரணமாக, நீர்ப் பற்றாக்குறை என்பது ஒப்பீட்டு ரீதியாக குறைவான பாதிப்பை ஏற்படுத்துகின்ற நிலைமையே காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தின் சில பிரதேச செயலாளர் பிரிவுகள், குறிப்பாக வடக்கு மாகாணத்தின் முசலி, நானாட்டான், மாந்தை மேற்கு, துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், செட்டிகுளம், வவுனியா வடக்கு, கரைச்சியின் மேற்குப்பகுதி, கண்டாவளையின் வடக்குப் பகுதிகள், வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, காரைநகர், வலிகாமம் கிழக்கின் சில பகுதிகள், மற்றும் வலிகாமம் மேற்கின் சில பகுதிகள் ஆண்டுதோறும் வறட்சியினால் கடுமையாகப் பாதிக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது (படம் 12.4). வடக்கு மாகாணத்தில் வறட்சியின் போது, அதிக அளவு ஆவியாதல் காரணமாக பெரும்பாலான குளங்கள், குட்டைகள் மற்றும் கிணறுகள் அவற்றின் நீரை இழக்கின்றன. குறிப்பாக குடிநீருக்காக மக்கள் தொலைதூர இடங்களுக்குச் செல்கின்ற நிலைமையை அவதானிக்கலாம். மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்கள் குடிநீரைப் பெறுவதற்கு 03 அல்லது 04 கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது. வடக்கு பிராந்தியத்தில் ஆண்டுதோறும் 175,000 இற்கும் அதிகமான மக்கள் நேரடியாக வறட்சி காரணமாகப் பாதிக்கப்படுகின்றனர். தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் மூன்றாம்பிட்டி, தேவன்பிட்டி, இலுப்பைக்கடவை, நாச்சிக்குடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27% மக்கள், தங்கள் வீட்டு உபயோகத்திற்குத் தேவையான தண்ணீரைப் பெற ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாகச் செலவழிக்கின்றனர்.  

பொதுவாக வறட்சியினால் ஆண்டு தோறும் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளே பாதிப்புக்கு உட்படுகின்றன. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் வெள்ளாங்குளம், கல்மடு, மூன்றாம்பிட்டி, இலுப்பைக்கடவை, முதலியன்கமம், பாம்போட்டி, திகலை, முருங்கைப்பிட்டி, கரவெட்டியான் வேம்பு, குருந்தன்குளம், கன்னாட்டி, காத்தாடிவயல், கள்ளியடி, ஆத்திமோட்டை, சவிரிக்குளம், புதுக்குளம், கட்டாடிவயல், பெரியமடு, பரிகாரிகண்டல், சாலம்பன், வண்ணான்குளம், நெடுங்கண்டல், ஆட்காட்டிவெளி, அடம்பன், அகத்திக்குளம், அன்னம்மாகுளம், கொம்பன்சாய்ந்தகுளம், பெரியமுறிப்பு, ஆண்டாங்குளம், எலியங்குளம், நரிகலைச்சான், பாலையடிக்குளம், தம்பனைக்குளம், மடு, சின்னப்பூவரசங்குளம், இரணை இலுப்பைக்குளம், மஞ்சளையங்குளம், ஊமத்திக்குளம், சின்னாமை, வல்லான்குளம், எருக்கலம்பிட்டி, கொல்லங்குளம், செட்டியார்கடல், நறுவிலிக்குளம் பகுதிகளும்; வவுனியா மாவட்டத்தில் நெடுங்குளம், கூமாங்குளம், தோணிக்கல், வைரவபுளியங்குளம், பண்டாரிக்குளம், நேரியகுளம், பறையனாலங்குளம், சூடுவேய்ந்தபுலவு, பூவரசங்குளம், பெரியதம்பனை, செக்கட்டிப்புலவு, நவ்வி, மூன்றுமுறிப்பு, குஞ்சுக்குளம், ஆண்டியார்புளியங்குளம், நெடுங்கேணி, செட்டிக்குளம் பகுதிகளும்; முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளாங்குளம், அமைதிபுரம், ஆலங்குளம், பழைய முறிகண்டி, தென்னியங்குளம், தேராங்கண்டல், கிழவன்குளம், பனிக்கன்குளம், ஐயங்கன்குளம், புதுவெட்டுவான், செல்வபுரம், பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், பனங்காமம், சிராட்டிக்குளம், கிடாய்பிடிச்சகுளம், ஒட்டங்குளம், கறிப்பட்டமுறிப்பு, தச்சடம்பன் பகுதிகளும்; கிளிநொச்சி மாவட்டத்தில் தேக்கங்காடு, நல்லூர், ஆலங்கேணி, கல்லங்குறிச்சி, செட்டியக்குறிச்சி, ஞானிமடம், மட்டுவில்நாடு, பள்ளிக்குடா, பரமன்கிராய், பல்லவராயன்கட்டு, கரியாலை, நாகபடுவான், கிராஞ்சி, ஜெயபுரம், பொன்னாவெளி, ஆனைவிழுந்தான், நாவலடி, செம்பன்குண்டு, உமையாள்புரம், தட்டுவன்கொட்டி, பரந்தன் மற்றும் அக்கராயன்  போன்ற பகுதிகளும் வறட்சியினால் அதிகளவு பாதிக்கப்படுகின்றன (படம் 12.4).  

யாழ்ப்பாண மாவட்டத்தின் நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் போன்ற பிரதேசங்களில் அதிக அளவிலான நீர்ப் பற்றாக்குறை அல்லது வறட்சி நிலமை காரணமாக கால்நடைகள் இறப்பதுடன் மக்கள் மிக நீண்ட தூரமும் மிக நீண்ட நேரமும் குடிநீருக்காகச் செலவிட வேண்டியும் இருக்கின்றது. வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் வரையறுக்கப்பட்ட குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதன் காரணமாகவும் தென்மேற்குப் பருவக் காற்று நிலவும் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதக் காலப் பகுதியில் நிலவுகின்ற அதிக அளவிலான நீரின் தேவையும் பல்வேறு வகைப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துவது அவதானிக்கப்பட்டிருக்கின்றது. சில பகுதிகளில் விவசாயச் செயற்பாடுகளை இடை நடுவில் கைவிட வேண்டிய அளவிற்கு தரைக்கீழ் நீர் மட்டம் குறைவடைந்து, தரை மேல் நீரும் இல்லாத சூழ்நிலையில், மக்கள் குடிநீருக்காக பல்வேறு வகைப்பட்ட துன்பங்களை எதிர்கொள்ளுகின்றனர். எனினும் இலங்கையினுடைய ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது ஒப்பீட்டு ரீதியாக வறட்சியினால் மிகக் குறைவான பாதிப்பே வடக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் எதிர்காலத்திலும் இத்தகைய நிலைமையே இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியாது. 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6539 பார்வைகள்

About the Author

நாகமுத்து பிரதீபராஜா

கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார். காலநிலையியலில் தனது கலாநிதி பட்டத்தினை பூர்த்தி செய்த பிரதீபராஜா காலநிலையியல் தொடர்பான பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை பற்றியும் பொதுவான காலநிலை அம்சங்கள் தொடர்பாகவும் 07 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 40 இற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரித்துள்ளார். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, வடக்கு மாகாணத்தினுடைய வானிலை தொடர்பான இவரது எதிர்வு கூறல்களை பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்