இற்றைக்கு 28000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது இடைக்கற்கால காலத்தில் இருந்தே இலங்கையில் வேடர் சமூகம் வாழ்ந்து வருகின்றது என்பதனை, இலங்கை மானிடவியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள் தமது வரையறைக்கு எட்டியவரை எடுத்துக்காட்டி நிற்கின்றன. இயக்கர், நாகர் என்னும் வரலாற்றுக்கு முந்தைய குடிகளை தமது மூதாதையர்களாக சிங்கள மற்றும் தமிழ் மக்கள் அடையாளப்படுத்தும் முயற்சியில் இருக்கும் சூழ்நிலையில் அந்த குடிகளின் காலத்துக்கு எத்தனையோ ஆயிரமாண்டு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த குடிகளாகவும் இன்றும் பழங்குடி அடையாளங்களுடன் தொடரும் குடிகளாகவும், கிழக்கிலங்கை வேட்டுவ குடிகள் காணப்படுவதானது அவர் தம் வாழ்வின் தொன்மையை எடுத்தியம்புவதாக அமைகின்றது.
அம்பாறை தொடங்கி மட்டக்களப்பு, திருகோணமலை என மிக நீண்டதான கரையோரத்துடன் அண்டியதாக கடலோர வேடர் குடிப்பரம்பலை இன்றும் காணமுடிகிறது. கிழக்கின் இனக்கலப்பில் இன்றும் பழங்குடிகளின் அடையாளங்கள் சடங்கார்ந்த நடவடிக்கைகள் ஊடாக வெளிக்கிளம்பியே உள்ளன.
கிழக்கிலங்கையில் வாகரை, வெருகல், மூதூர் பாட்டாலிபுரம், இலக்கந்தை, சந்தோசபுரம், வெருகல், இலங்கைத்துறை மாங்கேணி, கழுவாக்கேணி காயங்கேணி, பனிச்சங்கேணி, மதுரங்குளம், கிரிமிச்சை, உறியக்காடு, கதிரவெளி, கட்டுமுறிவு, அமந்தனாவெளி, வாகரை, புன்னைக்கிளங்கு, குஞ்சான்குளம், மட்டக்களப்பு வேடர் குடியிருப்பு (குடியிருப்பு), தளவாய், சித்தாங்கேணி, களுவன்கேணி, நாசிவன் தீவு, இறால் ஓடை, பொண்டுகள் சேனை, கொங்கனை, பால்ச்சேனை, திராய்மடு, வாகனேரி, முறுத்தானை, தம்பானை, கொக்கட்டிச்சோலை, கழுமுந்தன் வெளி, கரடியன்குளம், வேப்பவெட்டுவான், குசலன்மலை, விந்தனை, நாடுகாடு எனப் பல இடங்களில் பழங்குடி மக்கள் தமது இன அடையாளத்தினை சடங்கின் அடியாக இன்றும் பாதுகாத்து வருகின்றனர்.
வளப்போட்டிகள் அதிகம் நிறைந்த கிழக்கு மாகாணத்தில் நவீன வாழ்க்கை முறையை உட்செரித்துக் கொண்ட, போட்டிகள் நிறைந்த சமூகச் சூழல், பொருளாதாரம் மற்றும் பாடசாலைக் கல்வியறிவு முதலானவற்றில் இற்றை வரைக்கும் தொல்குடிகள் தாம் போராட வேண்டிய நிலையே காணப்படுகின்றது. காலனிய நுகர்வுச் சூழல், பேரினவாதச் சிந்தனை, ஆரியக்கலப்புடனான தமிழ்க்காலனியம் முதலான பண்பாட்டசைவுக் கூறுகள் போன்ற விடயங்கள் பூர்வகுடிகள் தம் நிலங்களை, வளங்களை மற்றும் பண்பாடுகளைச் சிதைப்புச் செய்வதற்கும், சூறையாடுவதற்கும் ஏற்ற சூழ்நிலையை இன்றைய காலகட்டத்தில் மிகப் பெருவாரியாக ஏற்படுத்தி இருக்கிறது.
கிழக்கிலங்கை கடலோர வேடர்கள் இன்றும் பெருவாரியாக வாழ்ந்து வரும் இடங்களான மூதூர், வெருகல் பகுதிகளில் பிற சமூகத்தவர்களாலும், சுதேச அரச பிரிவுகளாலும் நிகழ்த்தப்பட்ட ஆக்கிரமிப்புகளையும் அநீதிகளையும் இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
- யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் அரச படைகளால் மலை நீலி அம்மன் கோவில் ஆக்கிரமிக்கப்பட்டு மலையில் பெளத்த வழிபாடு நடத்தப்படுகிறது. இலங்கை முகத்துவாரம் பெரியசாமி கோயில் சிதைக்கப்பட்டு முழுமையாக பெளத்த கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.
- பூர்வகுடிகளின் பிரதான பூர்வீகத் தொழில்களான வேட்டையாடுதல், தேன் எடுத்தல், விறகு வெட்டுதல், சிறுகடல் பெருங்கடல் மீன்பிடித்தல், நன்னீர் மீன் பிடித்தல், பலவகை கிழங்கு மற்றும் சேனைப் பயிர்ச்செய்கை, கூலித்தொழில் என்பனவற்றை மேற்கொள்ளும்போது சக சமூகத்தினரில் சிலர் காடுகளை அழிப்பது மற்றும் மிருகங்களை வேட்டையாடுவதை காரணம் சொல்லி வனப் பாதுகாப்பு சபை, வனவிலங்கு பாதுகாப்பு சபை, பொலிஸ் என்பவற்றின் ஊடாக மக்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர்.
- 2006ஆம் ஆண்டு யுத்தம் மற்றும் சுனாமி காரணமாக வெருகல் முகத்துவாரப் பகுதி மக்கள் சூரநகர் என்னும் பகுதிக்கு இடமாற்றப்பட்டார்கள். மக்கள் வெளியேற்றப்பட்ட வெருகல் முகத்துவாரப் பகுதி முழுவதையும் ஏறத்தாழ 1000 ஏக்கர் நிலப்பரப்பை வனப்பாதுகாப்பு சபை ஆக்கிரமித்து வைத்துள்ளது.
- கிறவல் குழி (சந்தோசபுரம்) கிராமத்து மக்களின் குடியிருப்பு காணிகள், விவசாயக் காணிகள், நிரந்தர வீடுகள், மலசலகூடங்கள், வழிபாட்டு இடங்கள் என்பன அரசின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் சேனையூர் கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு உட்பட்ட சீதனவெளி என்னும் கிராமத்தில் குடியேற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில், கல்வி பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த சமூகத்தவர் மத்தியில் போட்டிபோட்டு வாழ முடியாது பூர்வகுடிகள் பெரும் நெருக்கடிகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும் உள்ளாகிறார்கள். அக்கிராமத்திற்கென ஒதுக்கப்படும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒதுக்கீடுகளில் பாரபட்சம் காட்டப்பட்டு மிகச் சிறிய பகுதியே பழங்குடி மக்களுக்கு கிடைக்கிறது.
- 2006 இல் இடம்பெயர்ந்து போன பகுதிகளை முஸ்லிம் சமூகத்தவர்கள் உள்ளூரில் இருக்கும் சில முஸ்லிம் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் துணைகொண்டு அரசாங்க சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி உப்பூரல் மற்றும் நல்லூருக்கு இடைப்பட்ட பகுதிகளில் இருந்த மாவடியூற்று என்னும் எமது பழங்குடி கிராமத்தில் 2009-2010 காலகட்டத்தில் முஸ்லிம்கள் முன்பு இருந்த பகுதிகளாக அறிவித்து குடியேற்றி இன்று தாகிப் நகர் என்னும் சட்டவிரோதப் பகுதியை உருவாக்கியிருக்கிறார்கள். தாகிப் நகர் என்னும் சட்டவிரோதப் பகுதி உருவாக்கத்துடன் அதை அண்டியுள்ள பழங்குடியினர் மீன் பிடிக்கும் கடல் பகுதியையும், சிறு கடல் பகுதியையும் சில முஸ்லிம் மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள்.
- வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட உப்பூரலுக்கும் மட்டப்புக்கழி பகுதிகளுக்கும் இடைப்பட்ட கடலோரப் பகுதியில் 100 ஏக்கர்களுக்கு மேலான நிலப்பகுதியை “Ceylon Business Private Matter Company” என்னும் பெயரில் உள்ள ஒரு கம்பனி மூலம் தோப்பூர் முஸ்லிம்கள் பெரும் ஆக்கிரமிப்பை செய்திருக்கிறார்கள். போராட்டங்களுக்கூடாக பழங்குடி மக்கள் இந்த நிலங்களை மீட்டுவருகின்றனர்.
- மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தொல்குடிக் கிராமமான சந்தனவெட்டை பகுதியில் மூதூரைச் சார்ந்த சில முஸ்லிம்கள் அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி காணி அபகரிப்பை செய்து வருகின்றனர். இதன் பிரதான ஆக்கிரமிப்பாக எந்த அடிப்படையான மனசாட்சியும் இன்றி தொல்குடிகளின் இடுகாட்டையும் ஆக்கிரமித்துள்ளனர். பழங்குடி மக்கள் தேன் மற்றும் பழங்கள் பெறும் பகுதிகளும் இந்த ஆக்கிரமிப்பிற்குள் அடங்குகிறது. இந்தப் பகுதியில் மக்கள் பயன்படுத்தும் சிறு மலையை வெடிவைத்து கல்லெடுக்கும் பாதகமான வேலை அதே மக்களில் சிலரால் மேற்கொள்ளப்படுகிறது. இக்கிராமத்தில் 2009 – 2010 காலட்டத்தில் மீள்குடியிருப்பு செய்யப்பட்டது. இன்றுவரை இக்கிராமத்திற்கென வீதி புனரமைப்பு, குடிநீர் வசதி, சமுர்த்தி வசதி, நிரந்தர வீட்டுத்திட்டம் போன்ற எந்தப்பணிகளும் உள்ளூர் அதிகார சபைகளால் மேற்கொள்ளப்படவில்லை. இக்கிராமத்தில் 25% மான குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக இருக்கும் சூழ்நிலையில், சில முதியோரும் பெண்களும் பிச்சை எடுத்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
- நல்லூர், பாட்டாளிபுரம், வீரமாநகர், நீனாக்கேணி ஆகிய பூர்வீக பழங்குடிக் கிராம மக்களின் ஒரே ஒரு விவசாயக் குளமாக இருந்த உல்லைக் குளம் டி. எஸ் சேனநாயக்கா ஆட்சிக் காலத்திலும் வெள்ளைக்காரர்களாலும் இம்மக்களுக்காக 1917-18 காலப்பகுதிகளில் அவர்களைக் கொண்டே வெட்டி உருவாக்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு மூன்று தொடக்கம் நான்கு ஏக்கர் வரை காணி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு பட்டாங்கட்டி என்னும் ஒரு தலைவர் நியமிக்கப்பட்டு அரசாங்கத்தால் அவருக்கு சம்பளமும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. இக்குளத்திற்கு அண்மையில் பத்தினி அம்மன் வழிபாடும் உருவாக்கி இதற்கு ஒரு தீர்த்தக் கிணறும் அமைக்கப்பட்டது. பத்தினி அம்மன் விவசாய சம்மேளனம் என்னும் பெயரில் ஒரு விவசாய அமைப்பும் உருவாக்கப்பட்டிருந்தது. 1935 மற்றும் 1950-55 காலப்பகுதிகளில் பழங்குடி மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் இருந்து 2006 வரை இந்தக் குளத்தை எமது மக்களே நிர்வகித்து வந்திருக்கிறார்கள். 2006இல் ஏற்பட்ட யுத்தத்தினால் இடம்பெயர்ந்து 2009 – 2010 இல் மீள்குடியேறும் காலப்பகுதிக்குள் தோப்பூரைச் சேர்ந்த முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களால் ஏறத்தாழ 1000 ஏக்கர் விவசாய நிலப்பரப்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கூடவே இப்பகுதியை ஒட்டிய கடல் துறைமுகத்தினையும் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதுடன் பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் அதிகாரத்துடன் நடந்து கொள்ளும் பண்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
- சாலையூர் என்று அழைக்கப்படும் கிராமம் தொல்குடிகளின் உத்தியாக்கள் காலத்தில் ரோட்டுச்சேனை என்று அழைக்கப்பட்டு வந்தது. 1975 – 76 காலப்பகுதியில் அவ்வூரைச் சூழவிருந்த கல்வி பொருளாதார ரீதியில் வளர்ச்சி கண்டிருந்த தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் தொல்குடிகளை ஆடு மாடு மேய்த்தல், தோட்டத்தில் கூலிவேலைகள், வீட்டு வேலைகள், தங்கள் விவசாயப் பயிர்களுக்கான இரவு பகல் காவல் வேலைகள் புரிதல் போன்றவற்றிற்கு பயன்படுத்திக் கொண்டனர். இதற்கு ஊதியமாக சிறு தொகை பணம், குறுநெல் அரிசி, உடைகள் என்பவற்றை மட்டும் வழங்கி வந்தனர். வறுமை நிலையில் கடனாளிகளாக மாறிய இவர்களிடம் வெற்றுப் பத்திரங்களில் கைநாட்டுகளை பெற்று அவர் தம் நிலங்களை அபகரித்துக் கொண்டார்கள். இதை அறிந்து இப்போது சந்தோசபுரம் என அழைக்கப்படும் கிறவற்குளியில் இருந்த மக்கள் நீதிகேட்டு படையெடுத்து சாலையூர் சென்றார்கள். நிலங்களை ஆக்கிரமித்திருந்த குடும்பங்களில் போராட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர்களை குண்டர்கள் போல பயன்படுத்தி எம்மக்களை அவர்கள் விரட்டியடித்தார்கள். விரட்டியடிக்கப்பட்ட எம்மக்கள் சந்தோசபுரம் மற்றும் சந்தனவெட்டை என்னும் கிராமங்களில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
- வெருகலம்பதி சித்திர வேலாயுதசாமி கோயிலில் பழங்குடி மக்கள் பூர்வீகமாகச் செய்து வந்த பதின்மூன்றாம் திருவிழாவான வேட்டைத் திருவிழா செய்யும் உரிமை அந்தக் கோயிலை நிர்வகிக்கும் தமிழ் மக்களில் ஒரு பிரிவு குடியினரால் திட்டமிட்டு மறுக்கப்பட்டிருக்கிறது.
- வெருகல் பகுதியில் உள்ள வட்டவன் என்னும் கிராமத்தில் பழங்குடி மக்களின் விவசாய நிலங்கள் தமிழ் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
- மூதூர் பகுதியில் உள்ள சந்தோசபுரம் பழங்குடி கிராம மக்களின் பிரதான நன்னீர் மீன்பிடிக் குளமான சம்புக்கழி குளத்தினை தமிழ் சமூகத்தை சேர்ந்த சிலர் விவசாயப் பண்ணை அமைக்கும் திட்டத்துடன் நிரந்தரமாக மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார்கள்.
- இளக்கந்தை பூர்வீக பழங்குடி கிராமத்தினுடைய விவசாய இடமான பாலைவனக் குளம் சம்பூரைச் சார்ந்த சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
- பழங்குடி மக்களின் பல கிராமங்களில் கிறிஸ்தவ சபைகள் பழங்குடி மக்களின் வறுமை, அறியாமையை பயன்படுத்தி சிறு சலுகைகள், உலர் உணவுப் பொதிகள், சிறு பண உதவிகள் என்னும் வழிமுறைகளூடாக எமது மக்களின் பூர்வீக நம்பிக்கைகளை சிதைத்து கிறிஸ்தவ மதத்திற்கு இழுத்துச் செல்கிறார்கள். சர்வதேச அளவில் இருக்கும் கிறிஸ்தவமத வலைப்பின்னலை பயன்படுத்தி மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை வரை இருக்கும் சிறு சமூகமாகிய எம் பழங்குடி மக்களின் பண்பாடு, கலை, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகளை திட்டமிட்டு சிதைக்கும் வேலையை இவ்வமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
புதிய ஏற்பாடுச் சபை, கிருபை ஐக்கிய சபை, மெதடிஸ் சபை, ஆர்மோன் சபை, கல்வாரி சுவிசேஷ சபை, ஏயோச்சி சபை என பல கிறிஸ்தவ சபைகள் எமது மக்கள் மீது பண்பாட்டு படையெடுப்பை செய்கின்றன. மதமாற்றத்தின் பாதிப்பு என்பது எங்கள் மக்கள் மத்தியில் பிரிவினையை தோற்றுவிக்கிறது. பழங்குடி குடும்பம் ஒன்றில் ஒருவர் மதம் மாற்றப்படும் பொழுது மரணச்சடங்கு என்பது கூட எந்த முறைப்படி செய்வது என்னும் குழப்பத்தில் அந்தக் குடும்பமும் கிராமமும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகிறது என்பதனை ஒரு சிறு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறான பல சொல்லொண்ணா நெருக்கடிகளை இன்றைய காலத்தில் வாழும் கிழக்கிலங்கை பூர்வகுடிகள் எதிர்கொள்கின்றன்ர். தமிழ்க்காலனியத்தின் திணிப்பால் இவர் மொழியானது வெறும் சடங்காசாரங்களுடன் வடிகட்டப்பட்டு விட்டது. இயற்கை மற்றும் செற்கை கலப்புக்களால் இவர்களுக்கே உரித்தான பண்பாடும் படிப்படியாக சிதைந்து கொண்டு போகின்றது. இது பற்றி சிந்திப்பது யாருடைய கடமை?
தொடரும்.
தகவல்- நடராசா கனகரட்ணம் நாகரெட்டினம் வரதன் (குவேணி பழங்குடி அமைப்பு – கிழக்கிலங்கை)