வடக்கு – கிழக்கு மாகாணங்களின் மனிதவள அபிவிருத்தியில் கல்வியின் மீதான முதலீடும் அது சார்ந்து செய்யப்படும் அதீத வளப் பயன்பாடும் பற்றிய ஆய்வானது இவ்விரு மாகாணங்களின் அபிவிருத்தியில் அதீத அக்கறைக்குரியதாகும். வரலாற்றின் ஆரம்பம் முதல் கற்றல் செயன்முறை என்பது இவ்விரு மாகாணங்களின் பிரதான முதலீட்டு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எல்லையோரத்திலிருந்த பல குடும்பங்களின் மெய்யான அபிவிருத்தியை வெளிக்கொண்டு வந்ததற்கு, கல்வியினால் அக் குடும்பங்களிலிருந்து மேற்கிளம்பிய ஒரு சில பிள்ளைகள் காரணமாகினர். அக் குடும்பங்கள் வசதியுடையதாகவும் சமூகப் பாகுபாடுகளைக் கடந்து சமநிலையுடைய குடும்பங்களாகவும் மாறத் தொடங்கியதால் கல்வி மீதான அக்கறை அதிகரித்தது. தனியே பொருளாதார நன்மைகளுக்காக மட்டுமன்றி சமூக அடக்குமுறைகளுக்கு எதிரான பிரதான நுழைவாயிலாகவும் கல்வி அமைந்தது. கல்வியில் உயர்வாய்ப்பைப் பெற்றவர்களால் புலப்பெயர்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையின் ஏனைய பகுதிகளில் கல்வியை வளர்த்ததில் மதத் தாபனங்கள் முன்னிலை வகித்தது போல, எமது பிரதேசத்திலும் திண்ணைப் பள்ளிகள் சிறு முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றின் இயக்கம் வறுமைக்கு மத்தியிலும் வளரும் ஒரு முதலீட்டுத் துறையாக கல்வியை மாற்றியது. ஆறுமுக நாவலரின் செயற்பாடுகள், அச்சுத் தொழில்நுட்பம் காரணமாக உருவான பாடப் புத்தகங்கள் போன்றன சுதேச கல்வியை வளர்த்தன. மதத் தாபனங்களின் செல்வாக்கினால் கல்வி வளர்ச்சியடையும் நிலை காலனிய ஆதிக்க காலத்தில் ஏற்பட்டிருந்தது. சுதேசிகளினது ஆட்சியில் அமைந்த சுதந்திரத்தின் பின்னான காலத்தில் இலவச கல்வித் திட்டத்தின் மூலம் கல்வியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கல்வியின் மீதான முதலீடு, தனியே பொருள் முதலீடாக மட்டுமன்றி சமூகம் – பண்பாடு – சிந்தனைப் பாங்கு மீதான முதலீடாகவும் முன்னிலைப்படுத்தப்பட்டது. கல்விக்கான கட்டமைப்பும் அபிவிருத்தியும் அரச நிதி முதலீட்டில் பெரும்பங்கை உள்வாங்கி வருவதனை நாம் கண்டுகொள்ள முடியும்.
இந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் 17 வலயக்கல்வி அலுவலகங்களும், 48 கோட்டக்கல்வி அலுவலகங்களும், 1,115 மாகாண – தேசிய பாடசாலைகளும் உள்ளடங்கலாக 23,278 ஆசிரியர்களும், 399,105 மாணவர்களும் கல்வித்துறையில் ஈடுபடுகின்றனர். வடக்கு மாகாணத்தில் 14 வலயக்கல்வி அலுவலகங்களும், 35 கோட்டக்கல்வி அலுவலகங்களும், 1091 பாடசாலைகளும் உள்ளடங்கலாக 13,812 ஆசிரியர்களும், 158,041 மாணவர்களும் கல்வித்துறையில் ஈடுபடுகின்றனர். வடக்கு மாகாணத்தில் ‘1AB’ தரத்திலான உயர்தர வசதியுள்ள 118 பாடசாலைகளும், ‘1C’ தரத்தில் 123 பாடசாலைகளும், ‘தரம் II’ வகையில் 294 பாடசாலைகளும், ‘தரம் III’ வகையில் 461 பாடசாலைகளுமாக, 996 பாடசாலைகள் திருப்தியடைந்த மட்டத்திலான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் ‘1AB’ தரத்திலான 110 பாடசாலைகளும், ‘1C’ தரத்திலான 184 பாடசாலைகளும், ‘தரம் II’ வகையில் 362 பாடசாலைகளும், ‘தரம் III’ வகையில் 459 பாடசாலைகளுமாக, 1115 பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் 23,278 ஆசிரியர்கள், 17 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில் கல்விச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் 18,225 ஆசிரியர்கள், 11 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில் கல்விச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் 4,727 பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களும், 4,356 பட்டதாரி ஆசிரியர்களும், 8,185 பயிற்றப்பட்ட ஆசிரியர்களும், 1,617 பயிற்றப்படாத ஆசிரியர்களும், ஏனைய வகை சார்ந்து 24 ஆசிரியர்களும் தகமையடிப்படையில் கல்வி கற்பித்து வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் 8,291 பட்டதாரி ஆசிரியர்களும், 3,729 கல்வி டிப்ளோமா ஆசிரியர்களும், 6,237 பயிற்றப்பட்ட ஆசிரியர்களும், 1,139 பயிற்றப்படாத ஆசிரியர்களும், ஏனைய வகை சார்ந்து 61 ஆசிரியர்களும் தகமையடிப்படையில் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்த வகையில் மனிதவள அபிவிருத்திக்கான கல்வி முன்னெடுப்பானது ஆரம்பம் மற்றும் இடைநிலை மட்டங்களில் திட்டமிடப்பட்டு வழங்கப்படுகிறது. தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் தனிநபர் வழிப்படுத்தல் நிலையங்கள் மூலமும் கல்வியறிவுக்கான மிகப் பரந்த அக்கறையை இவ்விரு மாகாணங்களும் வெளிப்படுத்துகின்றன. மனித வளத்துக்கு தேவைப்படும் அறிவு, திறன், உளப்பாங்கு என்பன இவ்விரு மாகாணங்களிலும் முதன்மையானவையாகக் கருதப்படுகின்றன.
கல்வியின் விளைபயன்
கல்வியமைப்பில் தேசிய ரீதியில் எடுக்கப்படும் அனைத்து நிகழ்ச்சித் திட்டங்களும் உதவியளிப்புகளும் இவ்விரு மாகாணங்களுக்கும் சரிவர வழங்கப்பட்டுள்ள போதும், கல்வியின் உயர் இலக்கான அனைவருக்கும் சமவாய்ப்பு என்பது இவ்விரு மாகாணங்களுக்கும் சவாலாகவே அமைந்து வருகின்றது. பரந்த நிலப்பரப்பைக் கொண்ட இம் மாகாணங்களில் ஆசிரிய வளத்தைப் பகிர்வு செய்வதில் காணப்படும் நடைமுறைச் சவால்கள் காரணமாக, கிராமப் புறப் பாடசாலைகளில் பாடவாரியாக அதிக வெற்றிடங்கள் காணப்படுகின்றது; நகர்ப்புறப் பாடசாலைகளில் மேலதிக ஆளணி இனங் காணப்பட்டுள்ளது. சனச்செறிவு மிகுந்த நகரங்களிலிருந்து அதிகளவானவர்கள் கல்விச் சேவைக்கு தெரிவாகும் நிலையில், இவர்களை கிராமங்களை நோக்கி அழைத்து வருவது, அவர்களுக்கான விடுதி வசதிகளைப் பெற்றுக் கொடுப்பது போன்றன சவாலாகக் காணப்படுகின்றது. இதனால் கிராமத்துக்குரிய ஆளணி ஈர்ப்பானது வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொதுவான பிரச்சினையாக அமைகிறது. கிராமிய வீதிகளின் சீரின்மை காரணமாக போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொடுப்பது பாரிய நிதியைக் கோரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் கிராமியப் பயணங்கள் வசதியுடைய ஒன்றாக மாற்றப்பட முடியாத நிலையில், குறைபாடுகளுடன் பயணிக்கும் வாய்ப்பு மட்டுமே கிராமங்களுக்குக் காத்திருக்கின்றன. இருந்த போதும் பாடசாலைச் சமூகத்தைச் சார்ந்த பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள சமூக முதலீடுகள் வடக்கில் கல்வியின் வளர்ச்சியை சாத்தியப்படுத்தியுள்ளன. ஆனால் கிழக்கில் இந்நிலை சற்றுக் குறைவாகவே உள்ளது. பாடசாலை நிர்வாகத்தில் காணப்படும் நிர்வாக வேறுபாடுகளும் கல்வி அடைவை பாதிக்கும் பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றன. வட மாகாணத்தில் 73 மத்திய அரசுப் பாடசாலைகளும், 1011 மாகாணப் பாடசாலைகளும் செயற்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் 40 மத்திய அரசுப் பாடசாலைகளும், 6 தனியார் பாடசாலைகளும், 1075 மாகாணப் பாடசாலைகளும் செயர்படுகின்றன. இவை பெற்றுக் கொள்ளும் நிதி ஒதுக்கீட்டு வேறுபாடுகள் காரணமாக சம வளர்ச்சி என்பது சவாலுக்குரியதாகக் காணப்படுகிறது. இதனைவிட பல பாடசாலைகள் செயற்படாத பாடசாலைகளாகவும் உள்ளன. வட மாகாணத்தில் 94 பாடசாலைகள் இயங்காத நிலையில் இருக்கின்றன. முன்பள்ளிகளின் நிர்வாகம் கல்வி அமைச்சின் ஏற்பாடுகளின் கீழ் மேற்பார்வை செய்யப்படுகின்ற போதிலும், இவற்றின் நேரடி நிர்வாகம் கிராமிய அமைப்புகள், மத அமைப்புகள், பிரதேச சபை எனப் பல்வேறு தரப்புகளாலும் செய்யப்படுகின்றன. வட மாகாணத்தில் 1664 முன்பள்ளிகள் இயங்குவதுடன் 2925 முன்பள்ளி ஆசிரியர்கள் பணி செய்கின்றனர். இதில் 35,592 பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றனர். ஆசிரியர்களின் சம்பளம் பல்வேறு நிலைகளில் வழங்கப்படுகின்றன. பலர் தொண்டர் சேவையாகவே இதனைச் செய்து வருகின்றனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் இணைப்புச் செய்யப்பட்ட பல பாதுகாப்பு அலுவலர்கள், முன்பள்ளி ஆசிரியர்களாக செயற்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் 1832 முன்பள்ளிகள் செயற்படுவதுடன் இவற்றில் 4054 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 46,643 பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றனர். முன்பள்ளி தொடர்பில் ஒரு முறையான திட்டமும் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும் போதுதான் வளர்ந்த நாடுகளில் உள்ளது போல் கல்வி நடைமுறையினை இப் பருவப் பிள்ளைகளிடத்தில் ஏற்படுத்த முடியும்.
பிள்ளைகளின் செயற் திறனைத் தூண்டி, புத்தாக்கச் சிந்தனையும் நேர் மனப்பாங்கும் கொண்டவர்களாக அவர்களை உருவாக்க கல்வி உதவ வேண்டும். தற்சார்புச் சிந்தனையுடன் தன்னம்பிக்கையும் தேசப்பற்றுமுள்ள கலைத்திட்டத்தினூடாக அதனை அடைந்து கொள்ள முடியுமா என்ற விவாதம் கல்வியியலாளர்களிடையே தொடர்ந்து வருகிறது. எவ்வாறாயினும் பொருளாதார நோக்கில் அதிகமான பொது முதலீட்டைப் பெற்றுக் கொள்ளும் கல்வித் துறையின் பொருளாதார வெளியீடுகள் உத்தம மட்டத்தில் கிடைக்கப் பெறவில்லை என்பதே உண்மையாகும். கல்விக்கு இடப்பட வேண்டிய முதலீடுகளை விட, வெளியீடுகளை மேம்படுத்தும் கலைத்திட்ட மாற்றமும், வேலைச் சந்தையின் கேள்விக்கான திறன்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான மறுசீரமைப்புகளும் கல்வித்துறையில் கொண்டுவரப்பட வேண்டும் என்பது மீள மீள வலியுறுத்தப்படுகிறது.