வட்டுக்கோட்டையில் குடிபுகுதல்
பெருமந்தத்தின் விளைவாகத் தன் வேலையை இழந்து, இளவயதிலேயே ஓய்வூதியம் பெற்ற என் தகப்பனார் பொருளாதாரப் பிரச்சினை நீங்கும்வரை மலாயாவில் தங்கி இராது, குடும்பத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார். வட்டுக்கோட்டையில் அம்மாவுக்குக் கொடுக்கப்பட்ட சீதன வளவில் இரண்டு அறைகளையுடைய கல்வீடு ஒன்றைக் கட்டி அதில் என் குடும்பத்தினர் குடிபுகுந்தனர். இது எங்கள் ஊரில் கட்டப்பட்ட இரண்டாவது கல்வீடு.
மலாயாவில் இருந்து திரும்பி வந்தவர்கள் எவ்வாறு யாழ்ப்பாணத்தின் பல்வேறு ஊர்களில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அம்சங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தினர் என்பதை ஓரளவு விளங்கிக்கொள்ள, என் பெற்றோர் மலாயாவில் இருந்து புதிய வீட்டுக்குக் கொண்டுவந்த சில பொருட்களைக் குறிப்பிடலாம்.
என் அண்ணனை (இராஜேந்திரா) குழந்தையாகக் (இரண்டு வயது என்று நினைக்கின்றேன்) கொண்டுவந்த காரணத்தினால் கோலாலம்பூர் வீட்டில் அவருக்கென வாங்கியிருந்த பல்வகை உபகரணங்களையும், விளையாட்டுப் பொருட்களையும் கப்பலில் ஏற்றி என் பெற்றோர் கொண்டுவந்திருந்தனர். நான் சிறுவனாக இருந்தபோது இவற்றுள் பல பழுதடைந்த நிலையில் இருந்தன. ஒன்று, குழந்தைகளை வெளியே கொண்டுசெல்லும்போது பயன்படுத்தப்படும் தள்ளுவண்டி (ஆங்கிலத்தில் Pram/ Perambulator). இன்னொன்று, சிறுபிள்ளைகள் காலால் மிதித்து ஓட்டும் ‘கார்’ வண்டி.
சமையல், சாப்பாட்டுடன் தொடர்புடைய பல பொருட்களையும் என் பெற்றோர் கொண்டுவந்திருந்தனர். குறிப்பிடத்தக்கவையாக எனக்கு நினைவில் உள்ளவை; மேசைக் கத்தி, மேசைக் கரண்டி, முட்டை அடிக்கும் கருவி (Egg-whisk), தகரம் வெட்டும் கருவி (Tin-cutter), பீங்கான் (Porcelain) தட்டுகள் ஆகியவை. இவற்றுடன் ஒரு பெரிய கற்பூரப் பெட்டியும் (Chinese camphor box) கொண்டுவரப்பட்டது. கோலாலம்பூர் வீட்டில் பயன்படுத்திய இரண்டு கம்பளங்களையும் (Carpets) பெற்றோர் கொண்டுவந்திருந்தனர். மிகவும் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்ட தளபாடம், ஒரு மடிக்கக்கூடிய சாய்மானக் கதிரை (Folding easy chair). வேறு வீட்டுத் தளபாடங்களும் கொண்டுவரப்பட்டனவோ தெரியவில்லை.
புதிதாகத் தேக்கு மரத்தில் ஒரு கட்டிலும் மேசையும் செய்விக்கப்பட்டன. அக்காலகட்டத்தில் மரவேலையில் திறமையுடைய சிலர் கேரளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து வீட்டுத் தளபாடங்களைச் செய்தனர் எனத் தோன்றுகிறது. வேலுப்பிள்ளை மாமாவின் வீடு கட்டப்பட்டபோது அப்படி ஒரு கேரள மரவேலைக் கலைஞர் வந்திருந்தார். அவர் பெயர் கிருஷ்ணன். இவர் எங்கள் வீட்டுக் கட்டிலையும் மேசையையும் செய்து உதவினார். இதெல்லாம் நான் பிறக்குமுன் நடந்தவை. ஆனால் இவர் மீண்டும் எங்கள் வீட்டுக்கு, எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதாய் இருக்கும்போது வந்திருந்தார். அப்பொழுது இந்த விவரங்களை நான் அறியக்கூடியதாய் இருந்தது. அவர் பெயரை என்னால் மறக்க முடியவில்லை. அவர் ஒரு நல்ல மனிதர் என்று என் பெற்றோர் பலதடவை சொல்லக் கேட்டிருக்கிறேன்.
மலேரியா நோய் 1930களில் கடுமையாகப் பரவிக் கஷ்டங்களை விளைவித்ததால், எங்கள் கட்டிலுக்குக் கொசுவலையும் போடப்பட்டது. அத்துடன் பஞ்சு மெத்தையும் இருந்தது. இவ்வாறு வேறும் பல ‘சிங்கப்பூர் பெஞ்சன்காரர்’ 1930களில் கட்டிய வீடுகளில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வசதிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன என நான் நினைக்கிறேன். சில வீடுகளில் நான் இவற்றைக் கண்டும் இருக்கிறேன்.
அம்மாவுக்குப் பல ஆண்டுகளாகப் பயன்பட்ட ஒரு பொருளாகக் கொண்டுவரப்பட்டது, கையால் சுழற்றி இயக்கக்கூடிய ஒரு தையல் இயந்திரம் (Singer sewing machine) ஆகும். நானும் என் இரு தங்கைமாரும் சிறுபிள்ளைகளாக அணிந்த உடைகள் அனைத்தும் இந்தக் கருவியில் அம்மாவால் தைக்கப்பட்டன. இதே காலத்தில் பிற ‘மலாயாவில் இருந்து திரும்பிய’ குடும்பங்களில் இத்தகைய தையல் இயந்திரங்கள் இருந்திருக்கும் என நினைக்கின்றேன்.
இணுவில் மகப்பேற்று வைத்தியசாலை
வட்டுக்கோட்டையில் குடியமர்ந்து, கோலாலம்பூர் நகர வாழ்க்கையில் இருந்து பெரிதும் வேறுபட்ட ஊர்ப்புற வாழ்க்கையை என் பெற்றோர் தொடங்கி ஒரு சில ஆண்டுகளின் பின், 1937 ஒக்டோபரில், பிரசவத்துக்காக அம்மா இணுவில் மக்லவுட் மகப்பேற்று வைத்தியசாலையில் (Inuvil McLeod Maternity Hospital) அனுமதிக்கப்பட்டார். அங்கு அம்மாதம் 22 ஆம் திகதி நான் பிறந்தேன். அப்பொழுது அங்கு மகப்பேற்று வைத்தியராகக் கடமையாற்றியவர், இஸபெலா கேர் (Dr. Isabella Curr) என்ற மிஷனரி வைத்தியர் ஆவர்.

யாழ்ப்பாணத்தின் பெண்விடுதலை வரலாற்றில் இணுவில் வைத்தியசாலை ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய நிறுவனம் என்பது பொதுவாக உணரப்படுவதில்லை. விடுதலை என்பது பல்வகைப்பட்ட அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளியல் கட்டுப்பாடுகளில் இருந்து வெளியேறும் நிலையைக் குறிக்கும். யாழ்ப்பாணத்துப் பெண்களுக்கு, பிரித்தானியப் பேரரசின் ஆட்சி தொடங்கியபோது, அதாவது 19 ஆம் நூற்றாண்டு தொடங்கும் கட்டத்தில், பாரம்பரியக் கட்டுப்பாடுகளால் அடக்கப்பட்ட நிலை காணப்பட்டது எனலாம். பேரரசின் ஆட்சியின்போது இந்த நிலை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது.
பேரரசு எனும்போது பொதுவாக மனதில் எழும் எண்ணங்கள் ஏகாதிபத்தியம், படைபலம், அடக்குமுறை, பொருளாதாரச் சுரண்டல், பண்பாட்டுச் சிதைவு பற்றியவையாகவே இருக்கும். ஆனால் பேரரசுக்குள் இயங்கும் பல்வகைப்பட்ட சக்திகளுள் சில முற்போக்கானவை, சில சீர்திருத்தத்தை நாடுபவை, சில மாற்றங்களுக்காகப் போராடுபவை.
பிரித்தானியப் பேரரசு 19 ஆம் நூற்றாண்டில் உலகின் பல பாகங்களைக் கைப்பற்றித் தன் ஆதிக்கத்தை வளர்த்துச் செல்ல, அதன் ஆதிக்க மையமான இங்கிலாந்திலேயே அதற்குப் பெருவருமானத்தைப் பெற உதவிய அடிமை வர்த்தகத்துக்கும், அடிமை முறைக்கும் எதிரான தாராண்மைவாதச் சக்திகள் குரல் எழுப்பின. இதன் விளைவாக முதலில் அடிமை வர்த்தகம் தடை செய்யப்பட்டது; பின்னர் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
இவ்வாறே இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானியர் ஆதிக்கம் மெதுவாகப் படர்ந்து சென்ற வேளையில் பெண்களின் நிலை தொடர்பாகக் காணப்பட்ட ஒரு கொடிய வழக்கத்தை ஒழிப்பதற்குப் பேரரசுக்குள் இயங்கிய சக்திகள் உதவின.
நீண்ட காலமாக, முக்கியமாக வட இந்தியாவில், கணவனை இழந்த பெண்கள் கணவனின் உடல் எரிக்கப்படும்போது ‘உடன்கட்டை ஏறும்’ வழக்கம் இருந்தது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விதவைகள், மிகவும் இளமையானவர்கள் உட்பட, இக்கொடூர வழக்கத்தால் உயிரிழந்தனர். இதனை ஒழிப்பதற்கு ஒரு புறம் கிறிஸ்தவ மிஷனரிமாரும், இன்னொரு புறம் இந்தியச் சீர்திருத்தவாதிகளும் செயற்பட்டனர். அவர்களுள் ஒருவர் ராம் மோகன் ரோய். இதன் விளைவாக 1829 இல் பிரித்தானிய ஆளுநர் உடன்கட்டை ஏறுதலை ஒழிக்கும் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினார். இது இந்தியப் பெண்விடுதலை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
பிரித்தானியாவில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து பெண் செயற்பாட்டாளர்கள், ஆண்களுடன் சமமாக அரசியல் வாக்குரிமை பெறுவதற்கு இயக்கம் நடத்தினர். இது படிப்படியாக வளர்ந்து செல்ல, 20 ஆம் நூற்றாண்டின் முதற்காலில் வலுப்பெற்ற சமூகவுடைமை (Socialism) சிந்தனைகளும், தாராண்மைவாதமும் 1928 இல் பிரித்தானியப் பெண்களுக்கு முழுமையான வாக்குரிமையைப்பெற உதவின. இது பெண் விடுதலை வரலாற்றில் ஒரு பெரு வெற்றியாக விளங்கியது.
இதன் விளைவாகப் பேரரசில் நடந்தது என்ன? மூன்றே மூன்று ஆண்டுகளுக்குள், 1931 இல், போராட்டம் எதுவும் இல்லாது, இலங்கையில் எல்லாப் பெண்களுக்கும் வேறுபாடின்றி வாக்குரிமை வழங்கப்பட்டது. இலங்கையில் அப்பொழுது அரசியல் தலைவர்களாகக் கருதப்பட்ட பிரமுகர்கள், நாட்டில் அனைவருக்கும் சமமான வாக்குரிமை வழங்குவதை எதிர்த்து வாதாடியும், மலையகத்தில் தேயிலைத் தோட்டத்தில் எழுத்தறிவில்லாது தவித்த பெண்களுக்கும், யாழ்ப்பாணத்தில் சமூகத்தின் கீழ்நிலையில் இடர்பட்டு வாழ்ந்த பெண்களுக்கும், பேரரசால் சமனான அரசியல் உரிமை வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துப் பெண்விடுதலை வரலாற்றில் இணுவில் மகப்பேற்று வைத்தியசாலை எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றது? இதனைப் புரிந்து கொள்ள 19 ஆம் நூற்றாண்டில் மகப்பேறு தொடர்பாகப் பெண்கள் அனுபவித்த இன்னல்களையும் சமூக – பண்பாட்டுக் கட்டுப்பாடுகளையும் நோக்கவேண்டும்.
எல்லாப் பாரம்பரியச் சமூகங்களிலும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகப் பல்வகைப்பட்ட கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இருப்பதைக் காணலாம். இவை சமூகத்தில் பெண்ணைத் தாழ்நிலைப்படுத்தி தன் கண்ணியத்தை (Dignity) இழக்க வைத்ததுடன், உடல் வேதனையை அனுபவிக்கவும் வைத்தன. இத்தகைய நிலை யாழ்ப்பாணத்தில் 20 ஆம் நூற்றாண்டு உதயமாகியபோது இருந்தது என்பதை அறியமுடிகின்றது.
பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிச் சான்றுதரும் வரலாற்றுச் சுவடிகளைப் பெறுவது அரிது. எனினும் வெளிநாட்டு மிஷனரிமார் குறிப்புகளை வைத்தும், நான் சிறுவனாக இருந்த காலத்தில் அறிந்த சிலவற்றை வைத்தும், ஓரளவுக்கு, பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் பற்றி அறிய முடிகின்றது.
பெண்களின் வாழ்க்கையில் இரண்டு காலப்பகுதிகள் மாசுபட்ட (Pollution) வேளைகளாகக் கருதப்பட்டன எனலாம். இது தொடர்பாகத் தமிழில் ‘துடக்கு’ என்ற சொல் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டாலும், இச்சொல் ‘மாசுபட்ட நிலை’ என்பதற்கும் அப்பால் பரந்த பொருளை உடையது என எனக்குத் தோன்றுகிறது. யாழ்ப்பாண வழக்கில் வேறும் பல சொற்கள் ‘மாசுபட்ட நிலை’யைக் குறிக்கப் பயன்பட்டன என அறியமுடிகின்றது.
மாசுபட்ட வேளைகளுள் முதலாவது, ஒவ்வொரு மாதமும் பெண்கள் அனுபவிக்கும் ‘மாதவிடாய்’ என வழங்கும் காலம். இது தொடர்பாக இருந்த கட்டுப்பாடுகள் வீட்டுக்கு வீடு வேறுபட்டவையாக இருந்திருக்கலாம். இக்கட்டுப்பாடுகள் 1940களில் கூட இருந்ததை நான் அறிவேன்.
என் தாயார் இவ்வேளையை அனுபவித்தபோது, “அம்மா தொடக்கூடாது” என்று நாங்கள் சொல்லுவோம். அயல் வீடுகளில் இருந்த பிள்ளைகள் “அம்மா வீட்டுத்தூரம்” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இரண்டு சொற்றொடர்களும் பொருள் நிரம்பியவை. நேரடியாக உண்மை நிலையைக் கூறாது மறைமுகமாகச் சொல்வதைத் தமிழ் இலக்கணத்தில் இடக்கரடக்கல் (Euphemism) என்பர். அம்மா மாசுபட்ட நிலையில் இருப்பதாகக் கருதியபடியால் நாங்கள் அவரைத் தொடக்கூடாது. அவரும் வீட்டுப் பொருள்களைத் தொடக்கூடாது; சமையல் செய்யவும் கூடாது. வழமையாகத் தூங்கும் படுக்கை அறையைவிட்டு, வெளியே விறாந்தையில் ஒரு மூலையில் பாய்போட்டுப் படுக்கவேண்டியிருந்தது. கரியால் கோடு போட்டு அந்த இடம் வேறாகக் குறிக்கப்பட்டது. கோட்டைக் கடந்து பிறர் செல்ல முடியாது. மூன்று நாட்களின்பின் (சிலவேளை நான்கு அல்லது ஐந்து நாட்கள் என நினைக்கின்றேன்) முழுகியதும் தாயார் சாதாரண நிலைக்குத் திரும்புவார். அவர் உடுத்த சேலை, பாவாடை ஆகியவையும் படுக்கையில் போடப்பட்ட துணிகளும் ஒரு மூட்டையாகக் கட்டப்பட்டு வெளியே வேறாக வைக்கப்படும். வீட்டுக் கிணற்றடியில் அவை கழுவப்படுவதில்லை. குடும்பத்துக்குச் சலவைத்தொழில் புரிபவர் (வண்ணான் – இவரை நாங்கள் கட்டாடியார் என்று மரியாதையுடன் அழைப்போம்) இந்த மூட்டையை எடுத்துச் சென்று கழுவுவார்.
‘வீட்டுத்தூரம்’ என்ற சொற்றொடரில் இருந்து ஒரு முக்கியமான விஷயத்தை ஊகிக்க முடிகின்றது. பெண் மாசுபட்ட நிலையில் இருப்பதாகக் கருதப்பட்டபோது வீட்டில் இருக்காது வெளியே ஓர் ஒதுக்கிடத்தில் இருக்கவேண்டி ஏற்பட்டது. இன்றும் சில தென்இந்தியச் சமூகங்களில் இத்தகைய நிலை இருப்பதை அறியமுடிகின்றது. பிரசவத்தின்போது வேறாக அமைக்கப்பட்ட கொட்டிலில் பிள்ளையைப் பெறவேண்டியிருந்தது என்று கொள்ளவும் சான்று உண்டு.
இவ்வாறு கட்டுப்பாடுகள் பல காணப்பட்ட நிலையில், பிரசவத்தின்போது பெண்களுக்கு உதவிசெய்ய ஆண்களோ, வைத்தியர்களோ அணுகமுடியாதிருந்தமை ஆச்சரியத்துக்கு உரியதல்ல. வேதனையால் தவிக்கும் பெண்ணுக்கு உதவி செய்ய ‘மருத்துவிச்சி’ ஒருவர் அழைக்கப்படுவார். இவர் சமூகத்தில் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண்ணாகவே இருப்பார். அனுபவத்தால் பெற்ற அறிவைவிட, வேறு மருத்துவ அறிவு அவருக்குக் கிடையாது. நான் சிறுவனாக இருந்த காலத்தில், 1940களில், அயல் ஊரில் அப்படியான ஒரு பெண் இருந்தார். அவர் பெயர் சின்னத்தங்கி; பிள்ளைகள் இல்லை; கணவன் சுப்பன், கோழிக்குஞ்சுகளை அடைப்பதற்குப் பயன்படும் கரப்பு என்ற கூடுகளைச்செய்து பிழைப்பவர்.
பெண்களுக்கான வைத்தியசாலை
யாழ்ப்பாணத்துப் பெண்கள் தங்கள் உடல்நலனைக் கவனிப்பதற்குப் பெண் வைத்தியர்களோ, பெண்களுக்கான வைத்தியசாலையோ இல்லாது பல இன்னல்களுக்கு ஆளாகுவதை 19 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் கண்ணுற்ற இரு அமெரிக்கப் பெண்கள், இந்த நிலைமையை மாற்றத் தீர்மானித்தனர். இருவரும் சகோதரிகள்; அமெரிக்க மிஷனைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மேரி லீச் (Mary Leitch), மற்றவர் மாகரட் லீச் (Margaret Leitch).

இருவரும் சில ஆண்டுகள் பல போற்றத்தக்க முயற்சிகளை எடுத்து, பிரித்தானியாவுக்குச் சென்று தேவையான நிதியைத் திரட்டி வந்து, இணுவிலில் பெண்களுக்கான வைத்தியசாலையை நிறுவினர். யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட முதலாவது மகப்பேற்று வைதியசாலையாக 1898 இல் இது திறக்கப்பட்டது. பாரம்பரியக் கட்டுப்பாடுகளில் இருந்து யாழ்ப்பாணப் பெண்கள் விடுதலை பெற்ற வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு மைல்கல்லாகும். இது நிகழ்வதற்குப் பேரரசில் செயற்பட்ட சக்திகள் காரணமாக இருந்தன என்பதை மறுக்கமுடியாது.
இஸபெலா கேர்
இணுவில் வைத்தியசாலையின் முதலாவது வைத்தியராக ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த இஸபெலா கேர் (Dr. Isabella Curr), லீச் சகோதரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் பெற்றார். பெண் வைத்தியர் இருந்தும், பெண் உதவியாளர் இருந்தும், பெண்களுக்கான சிறப்பு வசதிகள் இருந்தும் தொடக்கத்தில் நோயாளிகள் வரவில்லை. பிள்ளைப்பெறும் காலத்தில் பெண் வெளியே செல்ல முடியாது, வைத்தியரைக் காணமுடியாது போன்ற தடைகளுடன், ஒரு கிறிஸ்தவ வெள்ளையருடன் தொடர்பு கொள்வது மாசுபடுத்தும் செயல் எனக் கருதப்பட்டதாலும் பெண் நோயாளிகள் தொடக்கத்தில் இங்கு வரவில்லை. வைத்தியர் கேர், தன் உதவியாளருடன், நோயுற்ற பெண்களின் வீட்டுக்குச்சென்று உதவ முற்பட்ட வேளைகளிலும்கூட, கணவன்மார் அவரை அனுமதிக்க மறுத்தனர்.
இத்தகைய நிலை விரைவில் மாறி, படிப்படியாக இணுவில் வைத்தியசாலைக்கு கூடுதலான பெண்நோயாளிகள் செல்லத் தொடங்கினர். பிள்ளைப் பெறுவதற்காக வைத்தியசாலைக்குச் செல்லும் வழக்கத்தை யாழ்ப்பாணத்தவர் கடைப்பிடிக்க, இணுவில் வைத்தியசாலை வழிதிறந்தது.
இந்த வைத்தியசாலையுடன் தொடர்புடையதாக ஒரு முக்கிய நிகழ்ச்சி 1911 இல் இடம்பெற்றது. இந்த ஆண்டில் ஒரு தமிழ்ப் பெண் வைத்தியர், நல்லம்மா முருகேசன், வைத்தியர் கேருக்கு உதவிபுரிய நியமிக்கப்பட்டார். இவரே யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய முதல் தமிழ்ப் பெண் வைத்தியர் எனலாம்.

இவ்வாறாக 20 ஆம் நூற்றாண்டின் முதற்காலில் யாழ்ப்பாணத்தில் பெண்களின் நிலை தொடர்பாகக் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பிரித்தானியப் பேரரசில் செயற்பட்ட சக்திகள், பல வழிகளில் பெண் விடுதலைக்கு வழிதிறந்து உதவின. இச்சக்திகள் பெரும்பாலும் மத அடிப்படையில் எழுந்தவையாக இருந்தபோதிலும் அவற்றின் விளைவாக யாழ்ப்பாணத்தில் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன என்பது முக்கியமானது.