விக்டோரியா மகாராணியின் (English Breakfast Tea) "ஆங்கில காலை உணவு இலங்கைத் தேநீர்"
Arts
7 நிமிட வாசிப்பு

விக்டோரியா மகாராணியின் “ஆங்கில காலை உணவு இலங்கைத் தேநீர்” (English Breakfast Tea)

March 7, 2023 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

Queen-Victoria-1

இலங்கைத்  தேயிலையை உலக அரங்கில் பிரபல்யமடையச் செய்த முதலாவது நிகழ்வு 1888இல் ஸ்கொட்லாந்தில் நடைப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 4 சர்வதேச கண்காட்சிகளில் முதலாவது அறிவியல், கலை மற்றும் தொழில்துறை சர்வதேச கண்காட்சி  1888 மே மாதம் முதல்  நவம்பர் மாதம் வரை கெல்விங்ரோவ் பூங்காவில் (Kelvingrove Park) நடந்தது. அங்கு இலங்கை தேயிலையும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இன்னும் வானொலியோ தொலைக்காட்சியோ பாவனையில் இல்லாத போதும் செய்தித்தாள்கள் பிரபல்யம் பெற்றிருந்தன. இக்கண்காட்சிக்கு 5,748,379 பேர் வருகை தந்திருந்தனர்.

1888ஆம் ஆண்டின் சர்வதேச கண்காட்சிக்கான இறுதி பாராட்டு விக்டோரியா மகாராணியின் எதிர்பாராத வருகையாக அமைந்தது.   1849க்குப் பிறகு கிளாஸ்கோவிற்கு ராணியின் முதல் வருகை இதுவாகும். நீண்ட காலம் இப்பகுதிக்கு வருகைதராததால் பால்மோரல் செல்லும் வழியில் திடீரென அவர் அக்கண்காட்சிக்கு வந்தார். இதனால் கூடியிருந்தோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அவர் இலங்கை தேநீர் விற்பனை நிலையத்தில் நின்று தனக்கு பிரியமான தேநீரைப் பருகினார். இதனால் இலங்கையின் தேயிலைக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. மன்னர் அருந்திய தேநீர் பானம் மக்களுக்கும் பிடித்த பானமானது. அதிலிருந்த “ஆங்கில காலை உணவு தேநீர்” (English Breakfast Tea) என்ற விக்டோரியா மகாராணி காலத்து பழக்கம் மேலும் பிரபலமடைந்து. இவ்விடயம் தொடர்பாக ‘உலகையே அடிமையாக்கிய இலங்கைத் தேயிலை’ என்ற தலைப்பில்  இரா. சடகோபன் அவர்கள் எழுதிய சிறப்பான கட்டுரை எழுநாவில் (12.09.2022) வெளியாகியுள்ளதால் இது பற்றி இங்கு விரிவாக விபரிக்கவில்லை.

International-Exhibition-of-Science-Art-and-Industry-Glasgow-1888-May-1

எனினும் ஒரு விடயத்தைக் குறிப்பிடவேண்டும். இக்காலப்பகுதியில் புதுவிதமான நிறவாதம் இங்கிலாந்தில் உருவாகியிருந்தது. 1833இல் அடிமை முறை பிரித்தானிய சாம்ராச்சியத்தில் ஒழிக்கப்பட்டிருந்தாலும் “உயிரினங்களின் தோற்றம் பற்றி“ (On the Origin of Species) என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்களின் பரிணாமம் பற்றிய ஆய்வு நூல் 1859 இல் வெளியான பின்னர் சமூக டார்வினிசம் (Social Darwinism) உருவாகியிருந்தது. “தகுதியானவற்றின்  உயிர்வாழ்வு” “survival of the fittest” என்ற விஞ்ஞான கோட்பாடு இனவாதரீதியில் விளக்கப்பட்டு சில மக்கள் சமுதாயத்தில் சக்திவாய்ந்தவர்களாக மாறுகிறார்கள், ஏனெனில் அவர்கள் பிறவியிலேயே சிறந்தவர்கள், ஆகவே வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் கறுப்பர்கள் அரை மனிதர்கள் அரை மிருகங்கள்  என சித்தரிக்கும் பல கலை நிகழ்ச்சிகளும் இத்தகைய கண்காட்சிகளில்  இடம்பெற்றன.

லிப்டன் – வர்த்தக முத்திரை

இலங்கையின் தேயிலையை உலக அரங்கிலே    முதன்மை இடத்தில் நிலைநிறுத்தியதில் பலருக்கு பங்குண்டு. ஆயினும்  அதில் தலைமையான  இடம்  சேர் தாமஸ் ஜான்ஸ்டோன் லிப்டன் (Sir Thomas Johnstone Lipton) என்பவரையே சாரும். வறிய குடும்பத்தில் பிறந்த ஐரிஷ்காரரான இவர் படிப்படியாக செல்வந்தரானவர்.

இலங்கையின் தேயிலைக் கைத்தொழிலில் ஒரு முக்கியமான பிரமுகராக பின்னர் புகழ் பெற்ற தோமஸ் லிப்டன்

1890 ஆம் ஆண்டில் லிப்டன்  விடுமுறைக்கு  அவுஸ்திரேலியாவுக்கு சென்று  திரும்பும்  வழியில் இலங்கையில் சிறிதுகாலம் தங்கினார். அவர் தனது கடைகளில் நன்கு விற்பனையாகும் ஒரு பொருளான  தேயிலை மீது ஆர்வம் கொண்டிருந்தார். லிப்டன் இடைத்தரகர்களை நம்பவில்லை. அவர்கள் இலங்கையின் தரமான தேயிலையை இந்தியாவின் தரம் குறைந்த தேயிலையோடு கலந்து விற்றனர். ஆகவே இலங்கைத்  தேயிலையை நேரடியாக பிரிட்டனுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய விரும்பினார். அவர் வந்த நேரம் அவருக்கு நல்லநேரமாக அமைந்தது. அப்போதுதான் கோப்பித்தோட்டங்கள் கோப்பி நோய் காரணமாக நட்டத்திற்கு  மிக மலிவான விலைக்கு விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவர் முதலில் அவ்வாறான நான்கு பெரிய தோட்டங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கினார். இதன் மூலம் தனது நிறுவனத்தின் தேயிலையின் தரம் மற்றும் விலை அனைத்தையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடிந்தது.

லிப்டனின் திட்டம், ஏராளமான இடைத்தரகர்களைக் குறைப்பதன் மூலம் அதன் செலவைக் குறைத்து, சராசரி பிரிட்டிஷ் கடைக்காரர்களுக்கு மலிவு விலையில் தனது தரமான தேயிலையை வழங்குவதாகும். அவரது மற்றொரு புதிய யோசனை, அதை கவர்ச்சியாக பாக்கெட்களில் அடைப்பதாகும். இவ்வாறு  லிப்டன்  “தோட்டத்திலிருந்து தேயிலை நேராக குவளைக்கு” (Straight from the tea gardens to the tea pot) என்ற வாசகத்தைத் தாங்கிய பிரகாசமான வண்ணங்களில் கண்ணைக் கவரும் பாக்கெட்டுகளில் தனது தேயிலையை அடைத்தார். லிப்டனின் வியாபார உத்தி பெரும் வெற்றியளித்தது. ஏனைய வியாபாரிகளால் இவரோடு போட்டியிட முடியவில்லை. அவர் இதனால் பெரும் லாபம் சம்பாதித்தார். இங்கிலாந்து முழுவதும்  அவரது 300 கடைகள் விரைவில் திறக்கப்பட்டன. அதிகரித்துவரும் தேவையை அவரால் சமாளிக்க முடியவில்லை. நாளடைவில்  லிப்டன் ஒரு பிராண்ட் ஆக மாறி உலகம் முழுவதும் பிரபலமான வர்த்தக முத்திரையாக மாறியது.

 அப்போது உலகில்  பல நாடுகள்  இலங்கை என்றொரு  நாடு இருப்பதையே அறிந்திருக்கவில்லை. அங்கெல்லாம் இலங்கை அறிமுகப்படுத்தியது ‘லிப்டன் இலங்கைத் தேயிலை’ தான். இலங்கை லிப்டனின் தோட்டம் (Lipton’s Garden) என்றுதான் அப்போது அறியப்பட்டது.

தேயிலையின் நீடித்த நிலையான இருத்தலுக்கான காரணங்கள்

The-Tea-Table-1-1

பெருந்தோட்ட விவசாயத்தில் கோப்பியே முன்னோடியாக இருந்தது. மேலும் அதன் வளர்ச்சியின் போது அது நவீனமயமாக்கலின் ஊக்கியாக இருந்தது. தற்கால இலங்கையின் ஒவ்வொரு முக்கிய அம்சமும் கோப்பி சகாப்தத்தில் இருந்தே தொடங்குகிறது. தேயிலை  கோப்பியை  மாற்றீடு செய்ததே தவிர புதிய தோர்  உற்பத்திமுறையாக உருவாகவில்லை.  இதனால் தோட்ட கட்டமைப்பு அமைப்பு அப்படியே இருந்தது. அதனால் கோப்பி காலத்தில் செய்யப்பட்ட  பாரிய  ஆரம்ப முதலீடுகள் தேயிலைக்கு  தொடக்கத்தில் ஏற்படவில்லை. கோப்பியின் வீழ்ச்சியும் தேயிலையின் எழுச்சியும் நடைபெற்றுக்கொண்டிருந்த இதே காலப்பகுதியில்தான் ஐரோப்பாவில், குறிப்பாக இங்கிலாந்தில் ஒரு பாரிய மாற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதுதான் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறிக்கொண்டிருந்தது. அந்த மாற்றம் பெருந்தோட்ட உற்பத்தியிலும் வெளிப்பட்டது. 

இவ்விரு  பயிர்களுக்குமிடையே மூன்று வேறுபாடுகள் இருந்தன, முதலாவதாக, கோப்பி பெருந்தோட்டத்திற்கு அதிக மூலதனமோ  பெருமளவு நிரந்தர தொழிலாளரோ அதிநவீன தொழில் நுட்பமோ பாரிய இயந்திரங்களோ  தேவைப்படவில்லை. எனவே சிறு உடமையாளர்களும் விவசாயிகளும் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கை அதில் வகித்தனர். ஆனால் தேயிலைப் பெருந்தோட்ட உற்பத்திக்கு   பெரிய தொழிற்சாலைகள்,  விலையுயர்ந்த நவீன இயந்திரங்கள் ஆகியவற்றிக்கு  அதிக முதலீடு தேவைப்பட்டது. இரண்டாவதாக, தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் முறையும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டது. கோப்பி தோட்டங்களில் தொழிலாளர்களுக்கான தேவை பருவகால அடிப்படையில்  இருந்தது, எனவே  பெருமளவு  நிரந்தர தொழிலாளர் படையை பராமரிப்பதற்கான தேவை இருக்கவில்லை.  இதற்கு நேர்மாறாக, தேயிலைப்  பெருந்தோட்டத்துக்கு  தொழிலாளர் தேவை வருடம்  முழுவதும் தேவைபட்டது. நிரந்தர உழைப்பு வழங்கல் என்பது தேயிலைத் தோட்டங்களில் முதன்மையான தேவையாக இருந்தது. இவர்களுக்கான அடிப்படை தேவைகளை வழங்கி பராமரிப்பதற்கும்  நிர்வகிப்பதற்கும் கூடுதலான பணம் தேவைப்பட்டது. எனவே பெருமளவு முதலீடு செய்யக்கூடிய கம்பனிகள் மாத்திரமே தேயிலை பெருந்தோட்ட உற்பத்தியில் ஈடுபட்டு வெற்றிபெற  முடிந்தது. ஆகவே தேயிலை பெருந்தோட்டத்தை  ஏகாதிபத்திய யுகத்துக்குரிய  உற்பத்தி முறையாகக்கருதலாம். மூன்றாவதாக, கோப்பியைப் போலல்லாமல், தேயிலையை  கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 முதல் 6000 அடிகள் வரை பயிரிடலாம், 4000 அடிகள் உயரத்தில் தேயிலை சிறப்பாக வளர்ந்தது. அதே நேரத்தில் அதிக மழைப்பொழிவு, அதன் வளர்ச்சியின் முக்கியமான கட்டத்தில் கோப்பி பயிரை ஆபத்தில் ஆழ்த்தியது.  ஆனால் கூடிய மழையால் தேயிலை உற்பத்தி அதிகரித்தது. தேயிலை காலநிலை மாற்றங்களுக்கு  சிறப்பாக முகம் கொடுத்தது.

 தொடரும்.

Bibliography

  1. Ameer Ali, A,C,L (1971(  ‘Cinchona Cultivation In Ninei’effi’l’h Centuby Ceylon’  Modern Ceylon.
  2. Ameer Ali, A. C. L. (1972) “Peasant Coffee in Ceylon during the 19th Century.” Ceylon Journal of Historical and Social Studies (new series) 2
  3. Angela McCarthy (2017) Tea and Empire James Taylor in Victorian Ceylon,  Manchester University Press. 
  4. Angela McCarthy & T.M. Devine (2017) Transition to tea https://doi.org/10.7228/manchester/9781526119056.003.0004
  5. Blackwood, William (1933) “Sir Thomas Lipton” in The Post Victorians. London 
  6. CO 54/235, Tennent-Earl Grey, No. 6, 21 April 1847
  7. CO 54/470, Murdoch—Herbert, 26 May 1871, Minute by Herbert, 6 June 1871.
  8. De Silva, K. M. (1981) A History of Sri Lanka. Delhi: Oxford University Press.
  9. De Silva. K. M. (“‘Economic and Political Factors in the 1915 Riots1981) A History of Sri Lanka, Delhi: Oxford University Press
  10. Hunter, Stanley K. “Kelvingrove and the 1888 Exhibition”. Exhibition Study Group.
  11. Jayawardena, Kumari (l973) History of the LabourMovement in Ceylon, Duke University Press.
  12. Johnsson, S. (2016). The green gold from Sri Lanka – Linnaeus University
  13. K. M. De Silva, “Indian immigration to Ceylon 1840-1855,
  14. Kinghorn, Jonathon (1988). Glasgow’s International Exhibition, 1888. Glasgow Museums & Art Galleries. ISBN 978-0-902752-36-8.
  15. Kondapi, C (1951) Indians Overseas 1838-1949, (Madras, 1951
  16. Lewis B. Green, (1926) The Planter’s Book of Caste and Custom, Colombo.
  17. Mackay, James (1998) Sir Thomas Lipton: The Man Who Invented Himself”, Mainstream Publishing.
  18. McDiarmid, Andrew (2014). “Thomas Lipton’s 10 secrets to success”. History Scotland Magazine.
  19. Meyer, É.  (1992) “‘Enclave’ Plantations, ‘Hemmed-In’ Villages and Dualistic Representations in Colonial Ceylon,” in Plantations, Peasants and Proletarians in Colonial Asia. Special Issue of Journal of Peasant Studies, Vol. 19, No. 3+4, ed. E. V. Daniel, H. Bernstein, and T. Brass (London).
  20. Moldrich Donovan (1990), Bitter Berry Bondage – The Nineteenth Century Coffee Workers of Sri Lanka, Co-ordinating Secretariat of Plantation Areas, Kandy, Sri Lanka.
  21. Peebles Patrick, (1976) Land use and Population Growth on Colonial Ceylon’ Contribution to Asian Studies.
  22. Peebles, Patrick (2006). The History of Sri Lanka. Greenwood. ISBN 9780313332050 Publications of Planters’ Association of Ceylon
  23. Rajaratnam, S.(1961) “The Growth of Plantation Agriculture in Ceylon, 1886-1931.” Ceylon Journal of Historical and Social Studies 4
  24. Reports from Committees, Vol. XII, (1850), Second Report from the Select Committee on Ceylon, Evidence of George Ackland, [planter and merchant], 5 June 1849,
  25. The Examiner, 16 June 1853, “On Coee Planting in Ceylon”
  26. “TED Case Studies – Ceylon Tea”. American University, Washington, DC.
  27. “The rise of the Ceylon Tea Industry James Taylor and the Loolecondera Estate”. Official Website of the Government of Sri Lanka.
  28. The Origins of Tea in Britain by Rosemary and Richard Christophers, https://www.thelightbox.org.uk/blog/the-origins-of-tea-in-britain
  29. Vanden riesen, (1954) “Some Aspects of the History of the Coee In dustry in Ceylon with special reference to the period 1823-85, Ph.D. Economic History, London,
  30. 150 Years of Ceylon Tea (2017)
  31. Wenzlhuemer, Roland (2008). From Coffee to Tea Cultivation in Ceylon, 1880–1900: An Economic and Social History. Leiden: Brill. ISBN 978-9004163614.
  32. Wickremeratne, L. A.(1972)  “The Establishment of the Tea Industry in Ceylon. The First Phase, c. 1870 to c. 1900.” Ceylon Journal of Historical and Social Studies (new series) 2


ஒலிவடிவில் கேட்க

11778 பார்வைகள்

About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்