சாதிகள், இனத் தேசியங்கள், தேசங்கள் இடையே சமத்துவமும் ஒப்பிலாத பொதுவுடமைப் புத்துலகும்
Arts
13 நிமிட வாசிப்பு

சாதிகள், இனத் தேசியங்கள், தேசங்கள் இடையே சமத்துவமும் ஒப்பிலாத பொதுவுடமைப் புத்துலகும்

September 14, 2024 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம், மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல. சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

புதிய சமூக சக்தியாக ஐரோப்பாவில் முதலாளி வர்க்கம் எழுச்சியடைந்து வந்த போது அரசையும் கல்வியையும் மதத்தினின்று பிரித்துச் சுதந்திரமாக இயங்க வழி கோலியதன் வாயிலாக ஆன்மிகத்தைத் தனிநபர் விவகாரமாக ஆக்கிக் கொண்டது. அதன் பேறாக விஞ்ஞான அறிவு எல்லைகள் தாண்டிப் புதிய தளங்களுக்குத் தொடர்ந்தும் விரிவாக்கம் அடையலாயிற்று. அதுவரை நிலப்பிரபுத்துவச் சமூக முறைமையில் அதியுச்சங்களைத் தொட்டு மேலும் முன்னேற இயலாமல் வீழ்ச்சியுறத் தொடங்கியிருந்தன இந்தியாவும் சீனாவும். தமது நாட்டுத் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டியதுடன் இந்தியா, சீனா உள்ளிட்ட ‘புதிய கண்டங்களையும்’ காலனிய மயப்படுத்திய ஐரோப்பா அங்கெல்லாம் கொள்ளையடித்த மூலதனத்தையும் பயன்படுத்தி வளர்ந்தபோது தொழிற்புரட்சி வாயிலாக முழு உலகையும் புதிய சகாப்தத்துக்குள் வளர்த்தெடுத்தது. தொழிற்புரட்சி ஏற்படுத்தித் தந்த வாய்ப்புடன் முழுஉலகையும் வேகமாகத் தொடர்பாடித் தனது கட்டுக்குள் கையாளும் ஆற்றலைப் பெற்றிருந்தது மூலதனம்.

நிலப்பிரபுத்துவ வாழ்நிலையில் தத்தமது பண்ணைகளினுள் பெரும்பாலும் அனைத்துத் தேவைகளையும் பெற்றுவிட இயலுமாக இருந்த நிலை மூலதனத்தின் மேலாண்மையின் கீழ் சாத்தியமற்றுப் போனது; ஒவ்வொரு தேசமும் ஏனையவற்றுடன் கொண்டும் கொடுத்தும் ஊடாட வேண்டிய வாழ்வியல். தேச எல்லைகள் கடந்து முழு உலகையும் ஒரு குடைக்கீழ் கொணர்ந்திருந்தது மூலதனம். அதேவேளை, முன்னதாகவே மூலதன உற்பத்தி – பரவலாக்கம் என்பவற்றிலான வாய்ப்பைப் பெற்றிருந்த மேலைத்தேசம் தனக்கான மூலதனப் பெருக்கத்தின் பொருட்டு ஒடுக்கப்பட்ட காலனி நாடுகளை வறுகச் சுரண்டி வற்றடிப்பதில் குறியாக இருந்த காரணத்தால் தேசங்களிடையேயான சமவீனம் விரிவாக்கம் பெறுவதாக அமைந்தது.

இவ்வகையில் காலனிய நாடுகள் மீதான அபகரிப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதியுச்ச நிலை பெற்றிருந்தது. ‘21 ஆம் நூற்றாண்டில் மூலதனம்’ எனும் நூலில் தாமஸ் பிக்கெட்டி இந்த வரலாற்று வளர்ச்சிப் போக்கைத் தெளிவுற எடுத்துக் காட்டி உள்ளார். ஐரோப்பாவைப் பொறுத்த வரையில், “1750-1800 காலகட்டத்தில் வெளிநாட்டுச் சொத்துகள் முக்கியத்துவம் பெற்றன. 19 ஆம் நூற்றாண்டில் தான் பிரிட்டிஷ் மக்கள் உலகத்தின் இதர பகுதிகளில் முன்பு எப்பொழுதும் தெரியாத அளவு பணத்தினைக் கொண்டு மிக அதிக அளவு சொத்துகளைச் சேர்க்கத் தொடங்கினர்; இந்த அளவினை இன்றுவரை அவர்கள் விஞ்சவில்லை” என்பார் தாமஸ் பிக்கெட்டி (தாமஸ் பிக்கெட்டி, 2018. 21 ஆம் நூற்றாண்டில் மூலதனம், தமிழில்: பேரா.கு.வி. கிருஷ்ணமூர்த்தி, சென்னை.ப.156). இவ்வகையில் செழிப்படைந்த பிரித்தானியாவில் இருந்து 1850 ஆம் ஆண்டுக்கு சற்று முன்-பின்னாக இந்தியாவில் பணியாற்ற வந்த காலனித்துவ அதிகாரிகளில் இருந்து 1840 ஆம் ஆண்டுகளிலும் அதற்கு முன்னரும் வந்தவர்களது ஆட்சிப் பண்பு குணாம்ச ரீதியில் வேறுபட்டிருந்தது பற்றி முந்திய இயல்களில் பார்த்து வந்துள்ளோம். 1757 இல் முதல்  ஆட்சிப் பிரதேசம் இந்தியாவினுள் கிடைத்த போதிலும் நுற்றாண்டுக்குப் பின்னர் கடைசி மொகலாய மன்னர் 1857 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சிப்பாய் புரட்சிக்குத் தலைமை ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டமையானது, முந்தியவர்கள் போலன்றி 19 ஆம் நூற்றாண்டின் நடுக்கூறில் வந்தவர்கள் மொகலாய மன்னரை ‘மேன்மைமிக்க அரசர்’ என்பதாக அல்லாமல் தாமே முற்றிலும் மேலாதிக்கமிக்க ஆட்சியுரிமை படைத்தோர் என்பதைத் தமது நடைமுறைகள் வாயிலாக வெளிப்படுத்தி இருந்த காரணத்தினாலேயே; உண்மையான காலனித்துவ ஒடுக்குமுறை 1857 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முழுமைப்பட்டதாயினும் பொருளியல் சுரண்டல் முன்னரிருந்தே வேகம்பெற இடமிருந்தது.

அத்தகைய காலனித்துவச் சுரண்டல் குறித்த  தாமஸ் பிக்கெட்டியின் மேல்வரும் சித்திரிப்பு மனங்கொள்ளத்தக்கவொன்று: “வெளிநாட்டுச் சொத்துகளின் இந்த மிகப்பெரிய நிகர நிலைமைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கட்டமைப்பு ரீதியான வணிகப்பற்றாக்குறைகளை (Structural Trade Deficits) சமாளிப்பதற்கு பிரிட்டனையும் பிரான்ஸையும் அனுமதித்தன. 1880 இற்கும் 1914 இற்கும் இடையே இரண்டு நாடுகளும் அவற்றால் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களையும், சேவைகளையும் விட இதர நாடுகளில் இருந்து அதிக அளவு பொருட்களையும் சேவைகளையும் பெற்றன (இவற்றுடைய வணிகப் பற்றாக்குறைகள் சராசரியாக நாட்டு வருவாயின் 1 – 2 விழுக்காட்டளவுக்கு இருந்தன). இது எந்தவிதப் பிரச்சினைகளையும் எழுப்பவில்லை. ஏனெனில், வெளிநாட்டுச் சொத்துகளிலிருந்து அவை பெற்ற வருவாய் நாட்டு வருவாயில் 5 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தது. எனவே, அவற்றின் நிலுவைத் தொகையளிப்பு (balance of payment) வலுவான நேர்மறை நிலைமையில் (positive) இருந்தது. இது தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தம்முடைய வெளிநாட்டு சொத்துகளை அதிகரித்துக் கொள்ள உதவியது. வேறு சொற்களில் கூற வேண்டுமெனில், காலனியாதிக்க நாடுகளின் நுகர்வை அதிகரிக்க இதர நாடுகள் உழைக்க வேண்டியிருந்தது. அது மட்டுமல்லாது மென்மேலும் அதிக அளவிற்குக் கடன்பட்டிருக்க வேண்டியிருந்தது. இது அதிர்ச்சியாகத் தோன்றலாம். எனினும், வியாபாரம் மூலம் பெற்ற லாபங்களையும் காலனியாதிக்க நாடுகளின் மூலம் ஒதுக்கப்பட்ட பணங்களையும் கொண்டு வெளிநாட்டில் சொத்துகளைக் குவிப்பதன் இலக்கு பின்னால் வணிகப்பற்றாக்குறைகளைச் சமாளிப்பதற்கு ஏற்ற நிலையில் நிச்சயமாக இருப்பதுதான். எப்பொழுதுமே தொடர்ந்து வணிக இலாபங்களைப் பெறுவதில் எந்தவித ஆர்வமும் இருக்காது. சொத்துகளைச் சொந்தமாக்கிக் கொள்வதன் நன்மை என்னவெனில், வேலை செய்யாமலேயே ஒருவர் தொடர்ந்து அதிகமாக நுகரவும் குவிக்கவும் அது உதவும். அல்லது, எப்படியாவது தானாகவே ஒருவர் உற்பத்தி செய்வதை விட அதிகமாக தொடர்ந்து நுகரவும் அது உதவும் என்பது தான். காலனியாதிக்க காலத்தில் பன்னாட்டளவில் இது உண்மையாகவும் இருந்தது” (தாமஸ் பிக்கெட்டி, மேலது . ப . 157).

இரு வேறு உலகத்து இயற்கை 

காலனித்துவச் சுரண்டலில் ஏகாதிபத்தியத் திணை மூலதன அபகரிப்பை அதீதமாகக் குவித்த போதிலும் தனது சொந்த நாட்டுத் தொழிலாளர்களைக் கொடூரமாகச் சுரண்டுவதை நிறுத்திக் கொண்டதில்லை. ஏகாதிபத்தியக் கட்டத்தை எட்டிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கூறிலும் கூட மேற்கு ஐரோப்பியத் தேசங்களின் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வாயிலாகச் சோசலிசத்துக்கான மாற்றம் நடந்தேறும் என்ற நம்பிக்கை மார்க்சிய மூலவர்களான கார்ல் மார்க்சிடமும் ஏங்கெல்சிடமும் இருந்தது. இறுதி இரு தசாப்தங்களில் புரட்சியலை கிழக்கு நோக்கி நகர்ந்து முன்னதாக ருஷ்யாவில் சமூக மாற்றத்துக்கான தொழிலாளர்களது புரட்சி வெடிக்க வாய்ப்புள்ளமையை அவர்கள் கவனங்கொண்டார்கள். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில், அதன் உத்வேகம் மேற்கு ஐரோப்பியப் புரட்சியைத் தூண்டும் எனக் கருதினர்; அவர்கள் மட்டுமன்றி ருஷ்ய ஒக்டோபர் புரட்சிக்கு 1917 இல் தலைமை தாங்கிய லெனினும் கூட அந்தப் புரட்சியின் வீச்சுடன் மேற்கு ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கமும் எழுச்சியுற்று சோசலிச முன்னெடுப்புக்கான புரட்சியில் இறங்கும் வாய்ப்புள்ளது என்ற கருத்துடன் இருந்துள்ளார்! 

ஏகாதிபத்தியம் வலுப்பட்டுவிட்ட இருபதாம் நூற்றாண்டு, ருஷ்யப் புரட்சியின் வாயிலாக உலகின் ஆறிலொரு பங்கு நிலப்பரப்பில் சோசலிசத்தைப் பாட்டாளி வர்க்கம் சாத்தியப்படுத்தியிருந்த காரணத்தால் மேலைத்தேசங்கள் தமது முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்கும் பொருட்டு மாற்றுச் சிந்தனைக்கு ஆட்படவேண்டி இருந்தது. நேரடிக் காலனித்துவம் அற்றுப்போன போதிலும் ஏகாதிபத்திய அரசியல் முன்னெடுப்புடன் நவ காலனித்துவ முறைப் பிரகாரம் சமவீனமான வர்த்தகத்தை அவர்களால் மேற்கொள்ள இயலுமாக இருந்தது. அந்த வரலாற்று இயங்கு முறையை மாற்றிச் செயற்பட்ட பாங்கு ஏகாதிபத்தியச் சுரண்டலைப் பயன்படுத்தி மக்கள் நல அரசுகளை நடைமுறையாக்கித் தமது நாடுகளினுள் பாட்டாளி வர்க்கப் புரட்சி ஏற்படாத வகையிலான சமூக – பண்பாட்டு – அரசியல் முன்னெடுப்புகளை ஏகாதிபத்தியத் திணையால் மேற்கொள்ள இயலுமாயிற்று.

சோவியத் யூனியன் சமூக விடுதலை சார்ந்து உலக வரலாற்று இயங்கு முறையை மாற்றிச் செயற்பட்ட பாங்கு காரணமாகவே ஏகாதிபத்தியத் திணையும் அதன் சில நடைமுறைகளைத் தாம் பிரயோகிக்க முற்பட்டதன் பேறாக உருவாகிய மக்கள் நல அரசு எனும் மாற்று வடிவத்துக்குக்கு ஆட்பட வேண்டியிருந்தது. அந்தச் சோவியத் யூனியனை உருவாக்கியதில் ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்துடன் ருஷ்யாவால் ஒடுக்கப்பட்டிருந்த தேசங்களும் கைகோர்த்திருந்தன; சோசலிச முன்னெடுப்பைக் கைவிட்டு சோவியத் யூனியன் தகர்ந்து போன போது ருஷ்யாவினின்றும் வேறு 15 தேசங்கள் பிரிந்து சென்றிருந்தன என்பது மிகுந்த கவனிப்புக்கு உரியது. ‘சோவியத் ருஷ்யா’ சாத்தியப்பட இயலாத வரலாற்று மாற்றம் ஏற்பட்டு (பாட்டாளி வர்க்கப் புரட்சி வாயிலாக மட்டும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி விட இயலாமலாகி) ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைப் புரட்சியும் சோசலிச மாற்றியமைத்தலை  முன்னெடுத்தாக வேண்டிய வகையில் வரலாற்றுச் செல்நெறியில் ஏற்பட்டிருந்த திருப்பம் ‘சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்’ உருவாக வழிகோலி இருந்தது. வரலாற்று இயக்கு சக்தியில் ஏற்பட்டிருந்த இத்தகைய மாற்றப்போக்குப் (பாட்டாளி வர்க்கம் மட்டும் அன்றி விடுதலைத் தேசமும் சமூக மாற்ற இயக்கு விசை என்பது) போதிய அளவு கவனம் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

மேற்கு ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்கும் கம்யூன் அமைப்பாக்கம் வாயிலாக சமத்துவம் நோக்கிய பயணம் சாத்தியமில்லாமல் ஆகியிருந்தது. ஆசிய உற்பத்தி முறைக்குரிய புராதன கம்யூனிச சமூக முறையின் எச்சங்களைத் தாங்கி இருந்த சோவியத் அமைப்பாக்கத்தை ருஷ்ய மக்கள் கட்டமைத்ததன் ஊடாக முக்கால் நூற்றாண்டு முன்னெடுக்கப்பட்ட சோசலிச நடைமுறை வீழ்ச்சியடையக் காரணமாக அமைந்த அடிப்படை அம்சம் வர்க்கவாத அணுகுமுறையே என்பதும் கவனங்கொள்ளப்படாமல் உள்ளது. வர்க்க அரசியல் செல்நெறிக்கு மாற்றாகத் தெளிந்த வரலாற்று ஓட்டத்தை வெளிப்படுத்திய திணை அரசியலுக்கு உரியதான, பாரதி முன்னிறுத்திய கிருதயுக எழுச்சி வாயிலாகச் சமத்துவத்தை வடிவமைக்க இயலாமல் போனது ஏன்?

உழைக்கும் மக்கள் – அபகரிப்பால் செல்வம் திரட்டுவோர் எனவாகிய இருவேறு உலகத்து இயற்கை சர்வ வியாபகமானது. மேற்கில் வர்க்கப் பிளவடைந்த சமூக முறைமை தனக்குரித்தான வர்க்கப் போராட்டங்கள் வாயிலாக வெவ்வேறு உற்பத்தி உறவுகளை உடையதான சமூக அமைப்புகளைச் சாத்தியமாக்கி வந்தது. ஆண்டான் – அடிமை உற்பத்தி உறவு தகர்க்கப்பட்டு நிலப்பிரபு – பண்ணயடிமை எனும் உற்பத்தி உறவு ஏற்பட்ட போது பழைய ஆண்டான் – அடிமை என்ற வர்க்கங்களும் இல்லாமல் ஆகின. பழையன முற்றாக அழிக்கப்பட்டுப் புதியன உருப்பெற்று வளர்ந்தன. முதலாளி – தொழிலாளி எனும் மூலதனத் தொடர்பான இன்றைய உற்பத்தி உறவு எழுச்சி பெற்ற பின்னர் நிலப்பிரபு – பண்ணையடிமை என்ற பழைய வர்க்கங்கள் முற்றாகவே அங்கு அற்றுப்போயிருந்தன.

திணை அரசியலுக்குரிய எமது வரலாற்றில் புதியன தோற்றம் பெறாமல் இல்லை; புதிய சமூக அமைப்புக்கான முழு வீச்சான மாற்றங்கள் சாத்தியப்படுவதன் உள்ளேயே பழையதன் இருப்பும் ஆழமாகத் தக்க வைக்கப்பட்டவாறு தொடரும். நில அபகரிப்புக்குரிய ஆளும் சாதிகளும் ஒடுக்கப்பட்டு சுரண்டலுக்கு ஆட்பட்ட சூத்திர – தீண்டாமைக்கு ஆட்பட்ட சாதிகள் என்பனவும் இன்றுவரை நிலைத்துள்ளன. இருதரப்புக்கும் இடைப்பட்ட வைசியர் எனும் வர்ணப் பிரிவுக்குரிய வணிகச் சாதி அதிகாரம் பெற்ற அறநெறிக் காலத்தில் விவசாயப் பிரிவுக்குரிய  வைதிக மதம் பின்னடைந்து பௌத்தம், சமணம் போன்ற மதங்கள் எழுச்சி பெற்றன. பக்திப் பேரியக்கத்தின் மூலமாக புதிய வடிவ மாற்றத்துடன் விவசாய அணியின் வைதிக மதம் எழுச்சி பெற்ற போது வணிகச் சாதிகள் அழிக்கப்படவில்லை; அதிகார இழப்புடன் தொடர்ந்தும் இருந்தன. இன்று மூலதன ஆதிக்கம் மேலெழத் தொடங்கும் போது மீளெழுச்சி கொள்ளத்தக்க வகையில் பௌத்த – சமண இருப்பு எமது பண்பாட்டுத் தளத்தில் தடம் பதித்தவாறிருந்தது.

மதப் பிணைப்பைத் தகர்க்க முனையும் மூலதன இயல்பு காரணமாக நாத்திகவாதம் தமிழர் பண்பாட்டில் முனைப்புறும் வாய்ப்பும் இருந்தது. விவசாய – வணிகத் திணைகள் இடையேயான மேலாதிக்க மோதலின் பண்பாட்டுத் தள வெளிப்பாடுகளாக மத மோதல்கள்  அமைந்தன. விவசாயச் சாதிகளின் மேலாதிக்கம் பின்னடைந்து மூலதன மேலாதிக்கம் அரசியல் அரங்கில் சாத்தியப்பட்ட போதிலும் நிலப்பிரபுத்துவக் காலத்துக்குரிய ஆதிக்க சாதிகள் சமூக – பண்பாட்டுத்தள மேலாண்மையுடனேயே இன்றும் உள்ளன. உற்பத்தி உறவு சார்ந்த அடிப்படைகளை காணத் தவறி, ஆதிக்க சாதிகள் முன்னிறுத்தும் இந்து சமயத்தை அழித்துவிட்டால் சமூக நீதி கிட்டும் என்ற எடுகோளுடன் இயங்கும் போக்கு இன்று வலுப்பட்டுள்ளது. இதன் தாற்பரியங்கள் குறித்து இந்தத் தொடரின் நான்காம் பகுதியான இந்த “சாதிகள், இனத் தேசியங்கள், தேசங்கள் இடையே சமத்துவமும் ஒப்பிலாத பொதுவுடமைப் புத்துலகும்” என்ற தலைப்பின் கீழ் விவாதிப்போம்.

புத்தம் புதிய பாதை       

ஆயிரம் வருடங்களுக்கு மேலாக திணை அரசியலுக்குரிய எமது சமூகம் உலகின் முதல் நிலையில் நீடித்து வந்த போதிலும் இரண்டு நூற்றாண்டுகளாகத் தாழ்வுற்றுப் பின்னடைந்த வாழ்வியலில் உழன்றது. மூன்று நூற்றாண்டுகளாகக் கூர்மையான வர்க்கப் போராட்டங்கள் வாயிலாக புத்தம் புதிய வாழ்வியலைக் கட்டமைத்து வளர்ந்த மேலைத்தேசம் இன்று இறங்கு திசையடைந்து வருகிறது. ஆயினும், அந்த மேலைப் புலச் சிந்தனை முறை இன்றுவரை உலகின் மீது ஆளுமை செலுத்தும் மேலாண்மையைத் தக்கவைத்தவாறே தான் உள்ளது.

அரை நூற்றாண்டாக கீழைத்தேச சிந்தனை மயமாக்கல் பேசுபொருளாகி வந்துள்ளமையை அவதானிக்கலாம். ருஷ்ய – சீன மார்க்சியப் பிரயோகங்களை நிராகரித்தவாறு தென் அமெரிக்க மார்க்சியர்கள் 21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிச முன்னெடுப்புப் பற்றிப் பேசி வருகின்றனர். ‘ஐரோப்பிய மையம்’, ‘கீழைத்திசை முகப்படல்’, ‘21 ஆம் நூற்றாண்டு சோசலிசம்’ என்பன குறித்த அக்கறைகள் மேலெழக் காரணங்கள் எவை? இத்தகைய மாற்றுச் சிந்தனைகளால் புதிய ஒளி பாய்ச்சப்பட்ட வெகுஜன எழுச்சிகள் மேற்கிளம்பும் உத்வேகத்தை ஏற்படுத்த இயலாது இருப்பது ஏன்?

இவற்றைப் பேசுபொருளாக்கும் இந்த நான்காம் பகுதி பின்வரும் நான்கு இயல்களைக் கொண்டிருக்கும்:

  1. பாட்டாளி வர்க்க – ஒடுக்கப்பட்ட தேசங்களின் புரட்சிகள்.
  2. யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசும் விடுதலைத் தேசியமும்.
  3. ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கம்.
  4. ஏகாதிபத்திய – பேரினவாதத் தகர்ப்பும் விடுதலைத் தேசிய மார்க்சிசமும்.

இவை நிறைவாக்கப்பட்ட பின்னர் ‘முடிவுரை: இனிச் சில விதிகள் செய்வோம்’ எனும் இறுதி இயல், இன்று அவசியப்படுகின்ற புத்தம் புதிய பாதை எவ்வாறு அமைக்கப்பட இயலும் என்பது குறித்த தேடலாக இருக்கும். தொடர்வோம்!    


ஒலிவடிவில் கேட்க

3614 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)