எதியோப்பியாவின் சமஷ்டி அரசியல் யாப்பு : ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் ஆய்வுரையை முன்வைத்து ஓர் உரையாடல் - பகுதி I
Arts
18 நிமிட வாசிப்பு

எதியோப்பியாவின் சமஷ்டி அரசியல் யாப்பு : ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் ஆய்வுரையை முன்வைத்து ஓர் உரையாடல் – பகுதி I

May 12, 2024 | Ezhuna

இனக் குழுமம், சமயம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் வேறுபாடுகளைக் கொண்ட பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களில் (MULTI – CULTURAL SOCIETIES) சமாதான வழிகளில் தீர்க்க முடியாதனவான சிக்கலான அரசியல் பிரச்சினைகள் தீவிரமடைந்து உள்நாட்டுக் குழப்பங்களிற்கும், உள்நாட்டு யுத்தங்களிற்கும் வழிவகுத்துள்ளன. இதனை மூன்றாம் உலக நாடுகளின் சமகால வரலாறுகள் உணர்த்தியுள்ளன. இவ்வரசியல் பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தைகள் மூலம் சமாதான வழியில் தீர்த்தல், சம்மந்தப்பட்ட நாடுகளின் அமைதிக்கும், சமூக – பொருளாதார – அரசியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. அமைதி வழியான தீர்வை அரசியல் தீர்வாக (POLITICAL SOLUTION) அமைப்பதோடு அதிகாரப் பகிர்வு (POWER SHARING), சுயாட்சி (SELF RULE) ஆகியவற்றுக்கான ஆட்சிக் கட்டமைப்புக்களை, அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்குவதும் இன்றியமையாத முன் தேவையாக உள்ளது. அந்த வகையில், ‘அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்’ என்னும் இப்புதிய தொடரில் மூன்றாம் உலக நாடுகளான இலங்கை, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் அனுபவங்களை விளக்கியுரைக்கும் கட்டுரைகளின் தமிழாக்கம் வெளியிடப்படும். பல்வேறு தீர்வு மாதிரிகள், அத்தீர்வு மாதிரிகளின் பின்னால் உள்ள அரசியல் கோட்பாடுகள் (POLITICAL THEORIES), அரசியல் யாப்புத் தத்துவங்கள் (CONSTITUTIONAL PRINCIPLES) என்பனவும் விளக்கிக் கூறப்படும்.

உரையாடலுக்கு ஆதாரமான பிரதி – ஆங்கிலத்தில் : கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண

சட்ட அறிஞர் ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் ‘TOWARDS DEMOCRATIC GOVERNANCE IN SRI LANKA – A CONSTITUTIONAL MISCELLANY’ என்ற தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். பத்துக் கட்டுரைகளின் தொகுப்பாக அமையும் இந்நூல் 2014 ஆம் ஆண்டு ‘INSTITUTE FOR CONSTITUTIONAL STUDIES’ என்னும் ஆய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலின் தலைப்பை பொருள் விளக்கம் செய்யும் முறையில் இவ்வாறு மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

‘இலங்கையில் ஜனநாயக ஆளுகையை நோக்கிய பயணம் : அரசியல் யாப்புக் கட்டுரைக் கதம்பம்’

இந்நூலின் பத்துக் கட்டுரைகளில் முதலாவது கட்டுரையின் தலைப்பு ஆங்கிலத்தில் பின்வருமாறு உள்ளது.

‘CONSTITUTION MAKING IN MULTI-CULTURAL SOCIETIES: SOME INTERNATIONAL EXPERIENCES’

இதனைத் தமிழில் பின்வருமாறு மொழி பெயர்த்துக் கொள்ளலாம். ”பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களிற்குப் பொருத்தமான அரசியல் யாப்புக்களை வரைதல் : சர்வதேச அனுபவங்கள் சில”. 

இம் முதலாவது கட்டுரை 74 பக்கங்கள் வரை நீளுவதான ஓர் ஆய்வுரை. அதன் முதல் 9 பக்கங்களில் உள்ளவற்றைத் தழுவி ஒரு கட்டுரையை எழுதி ஏப்பிரல் 2024 ‘எழுநா’ இதழில் பிரசுரித்தோம். இம்மாதம் அக்கட்டுரையின் பக்கம் 53-62 வரையான 9 பக்கங்களில் ‘எதியோப்பியா சமஷ்டி’ பற்றி அவர் எழுதியுள்ளவற்றைத் தழுவியும் சுருக்கியும் கூறவுள்ளோம். அத்துடன் அமையாது இக்கட்டுரையில் விக்கிரமரட்ண அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் தொடர்பான ‘உரையாடல்’ ஒன்றையும் நடத்தவுள்ளோம். எமது நோக்கத்தை தெளிவுபடுத்தும் முறையில் இக்கட்டுரையின் தலைப்பை ‘எதியோப்யாவின் சமஷ்டி அரசியல் யாப்பு : ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் ஆய்வுரையை முன்வைத்து ஓர் உரையாடல்’ எனக் குறிப்பிட்டோம். இனி சட்ட அறிஞர் விக்கிரமரட்ண அவர்கள் எதியோப்பிய சமஷ்டி பற்றி எழுதியவற்றைப் பார்ப்போம்.

map

”எதியோப்பியா ஒரு பன்மைப் பண்பாட்டுச் சமூகம்; அது ஒரு குறைவிருத்தி (LDC) நாடும் ஆகும். (ஆயினும்) அந்நாடு அதிகாரப் பகிர்வு (POWER SHARING) மூலம் நாட்டின் இனக்குழும முறுகல் நிலையையும், முரண்பாடுகளையும் வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்து வரும் நாட்டிற்கு உதாரணமாக விளங்குகிறது. சமஷ்டி முறை அந்நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளின் அபிவிருத்திக்கு உதவியுள்ளது. அந்நாட்டில் 80 இற்கும் மேற்பட்ட இனக்குழுமங்கள் உள்ளன. அங்கே பல மொழிகள் பேசும் சமூகங்கள் உள்ளன. சில இனக் குழுமங்களின் சனத்தொகை வெறும் 10,000 உறுப்பினர்கள் மட்டுமே. அத்தோடு வரலாற்று நோக்கில் பார்த்தால் உலகின் பழமையான அரச உருவாக்கங்களில் ஒன்றாக எதியோப்பியா விளங்குகிறது. இவ்வாறு தொடக்கப் பந்தியில் எதியோப்பியாவை அறிமுகம் செய்யும் விக்கிரமரட்ண அவர்கள் அந்நாட்டின் பிரமிப்பைத் தரும் இனக்குழுமப் பன்மைத்துவம் பற்றிய புள்ளி விபரங்களைத் தருகிறார்.

எதியோப்பியாவின் 80 இற்கும் மேற்பட்ட இனக்குழுமச் சமூகங்களில் ஒறோமோ (OROMO) யாவற்றையும் விடப் பெரியது. ஒறோமோவின் சனத்தொகை மொத்த சனத்தொகையின் 34.5%. இதற்கு அடுத்த நிலையில் அம்ஹரா (AMHARA) (26.9%), சோமாலி (6.2%), TIGRAWAY (6.1%), சிடமா (4%), குறகே (2.5%), வொல்யடா (2.3%) என, நாட்டின் நான்கில் ஒன்றுக்கு மேற்பட்ட சனத்தொகையுடைய அம்ஹரா முதல் மிகச் சிறிய சிறுபான்மைச் சமூகங்கள் பலவற்றையும் ஒரே புவியியல் எல்லைக்குள் உள்ளடக்கிய நாடாக எதியோப்பியா விளங்குகிறது. பேசும் மொழியின் அடிப்படையிலான புள்ளி விபரங்கள் பின்வருமாறு:

மொழிப் பிரிவு      வீதாசாரம்
ஒறோமோ (OROMO)              33.8%
அம்ஹரிக் (AMHARIC)     29.33%
சோமாலி     6.25%
ரிகிறின்யா (TIGRINYA)           5.86%
சிடமோ                4.84%
வொல்யடா                2.21%
குறகே          2.01%
அவார் (AFAR)       1.74%
language

அம்ஹரிக் நாட்டின் உத்தியோக மொழியாக உள்ளது. நான்கு பிரதான இனக்குழும மொழிச் சமூகங்களில் அம்ஹரா, ரிக்கிறவே, ஒறோமோ என்பன உயர்நிலப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன. சோமாலி இனக்குழுமம் நாட்டின் தென்கிழக்கு பகுதியின் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்ந்து வருகிறது. மொழியை விட சமய வேறுபாடுகளும் உள்ளன. 

எதியோப்பிய ஒதொடோக்ஸ் (ETHIOPIAN ORTHODOX)43.5%
முஸ்லீம்33.9%
புரட்டஸ்தாந்து18.6%
மரபுவழிச் சமயங்கள்2.6%
கத்தோலிக்கர் 0.7% 
religion

மேற்குறித்த புள்ளி விபரங்கள் 2007 ஆம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டவை.

மென்கிஸ்டு அறபெய்ன் (MENGISTU AREFAINE) என்ற ஆய்வாளர் எதியோப்பியாவில் நவீன அரசு (MODERN STATE) உருவாவதற்கு முந்திய நிலையை பின்வருமாறு கூறுகிறார்.

”எதியோப்பியாவின் நவீன அரசு உருவாகும் முன் அங்கு உண்மையில் மத்திய கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட சுயாட்சி அரசுகள் (De Facto Autonomy) இருந்தன. அச்சுயாட்சிப் பகுதி தமது சொந்த மன்னர்களையும் ஆளுநர்களையும் கொண்டிருந்தன. ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் நவீன அரசு உருவாக்கம் பெற்ற பொழுது எதியோப்பியாவின் பல்வேறு பிராந்தியங்களுக்கும் மத்திய அரசு தனது அதிகாரத்தை விஸ்தரித்தது. இம்மத்திய அரசு அப்பிராந்தியங்களின் பல்வேறு இனக்குழுமங்களையும் தேசிய சமூகக் குழுக்களையும் (NATIONAL GROUPS) தனது ஆட்சி அதிகாரத்துக்குள் கொண்டு வந்தது. இதன் பின்னர் ஒரே ஒரு சமூகக்குழுவின் (அம்ஹரா) மேலாதிக்கத்திற்கு இவை உட்பட்டன. அம்ஹரா இனக்குழுமத்தின் கையில் ஆட்சி அதிகாரம் வந்தது. பிற இனக்குழுமங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக்கப்பட்டன. அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் இப் பிராந்தியங்களுக்கு அவ்வப்பகுதி மக்களின் ஆலோசனைகளைப் பெறாதும், உண்மையும் நேர்மையும் அற்ற முறையிலும் பல்வேறு அரசியல் யாப்புக்களை அப்பகுதிகளுக்கு வழங்கினர். இவ் ஆட்சியாளர்களும் மத்திய அரசும் சமயம், பண்பாடு, மொழி என்பனவற்றால் பல்வேறுபட்ட குழுக்களை மேலாதிக்கம் பெற்ற இனக்குழுவான அம்ஹராவுடன் ஒன்றிக் கலந்து விடும் கொள்கையை (POLICY OF ASSIMILATION) நடைமுறைப்படுத்தின. இதன் விளைவாக எதியோப்பியா நீண்டகால சிவில் யுத்தத்தாலும், பொருளாதாரப் பின்னடைவாலும் பேரிடர்களை எதிர்கொண்டது. இதற்கெல்லாம் காரணம் மேலாதிக்கம் செலுத்திய குழுவான அம்ஹரா அதிகார வர்க்கம் தாமாகவே முன்வந்து அரசாங்க அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள மறுத்தமையாகும். இவ்வாட்சியாளர்கள் பன்மைத்துவம் (DIVERSITY) என்ற யதார்த்தத்தை  ஏற்றுக் கொண்டு அதனை உரிய முறையில் நிர்வகிப்பதற்குரிய செயல்முறையை (MECHANISM) வகுக்கத் தவறிவிட்டனர் (பக் 54).

மேற்குறித்த கூற்றை ‘MENGISTU AREFAINE’ எழுதிய ‘FEDERALISM AND ACCOMMODATION OF DIVERSITIES WITH SPECIAL REFERENCE TO DIVIDED SOCIETIES (HELBING AND LITCHTENHAHRN 2005 : பக் 247-8) என்னும் நூலில் இருந்து ஐயம்பதி விக்கிரமரட்ண மேற்கோள் காட்டுகிறார்.

பேரரசர் ஹெய்லி செலஸ்சி ஆட்சிக்கு முடிவு கட்டிய சதிப்புரட்சி

பேரரசர் ஹெய்லி செலஸ்சி 1974 இல் சதிப்புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்காலிக இராணுவச் சபை (DERG) ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. 17 ஆண்டுகள் கழித்து 1991 ஆம் ஆண்டில் ‘EPRDF’ என்ற அமைப்பினால் ஆட்சியில் இருந்து DERG நீக்கப்பட்டது. ‘EPRDF’ என்ற சுருக்கப் பெயரின் விரிவு எதியோப்பிய மக்களின் புரட்சிகர ஜனநாயக முன்னணி (THE ETHIOPIAN PEOPLE’S REVOLUTIONARY DEMOCRATIC FRONT) என்பதாகும். ‘ஈ.பீ.ஆர்.டீ.எவ்’ அரசாங்கம் உடனடியாகவே அரசியல் யாப்புச் சபை (CONSTITUENT ASSEMBLY) ஒன்றை அமைத்தது. இவ்வரசியல் யாப்புச் சபை, சமஷ்டி அரசியல் யாப்பு (FEDERAL CONSTITUTION) ஒன்றை வரைந்தது. மக்களின் கருத்தறிதலுக்காக சர்வசன வாக்கெடுப்பையும் நடத்தி அங்கீகாரத்தையும் பெற்றது. மன்னராட்சி முடிவுக்கு வந்ததோடு 1995 இல் அந்நாடு எதியோப்பிய சமஷ்டி ஜனநாயகக் குடியரசு (THE FEDERAL DEMOCRATIC REPUBLIC OF ETHIOPIA)  எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் உலக யுத்தத்தின் போது எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டிருந்த எரிற்றியா (ERITREA) 1993 இல் எதியோப்பியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக தன்னைப் பிரகடனப்படுத்தியது.

எதியோப்பியா பாராளுமன்ற ஜனநாயக முறையைக் கொண்ட நாடாகும். அந்நாட்டின் ஜனாதிபதி நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படுவதில்லை. ஜனப்பிரதிநிதிகள் சபை, சமஷ்டி சபை (HOUSE OF THE FEDERATION) என்ற இரு சபைகளதும் இணைந்த  அமர்வில் (JOINT SESSION) மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.

தேசிய இனம், சிறுபான்மைத் தேசிய இனம், ஒரு மக்கள்

எதியோப்பியாவின் பெயரில் ‘சமஷ்டி’, ‘ஜனநாயகம்’, ‘குடியரசு’ என்ற மூன்று வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதை (எதியோப்பிய சமஷ்டி ஜனநாயகக் குடியரசு) போன்று அதன் யாப்பின் உறுப்புரை 39 (4) அந்நாட்டின் மக்கட் குழுமங்களை ‘NATION, NATIONALITY OR PEOPLE’ என்ற மூன்று சொற்களால் வரையறை செய்துள்ளது. இம் மூன்று சொற்களையும் தேசிய இனம், சிறுபான்மைத் தேசிய இனம், ஒரு மக்கள் என்று மூன்று வெவ்வேறு பதங்களாக மொழிபெயர்த்துக் கொள்வோம்.

இவை பொருள் பொதிந்த எண்ணக்கருக்களை குறிக்கும் சொற்கள் என்பதைத் தமிழ் வாசகர்கள் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். உறுப்புரை 39 (4) இனை பின்வருமாறு மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

‘பொதுவான பண்பாடு, ஒரே விதமான (ஒழுக்க) நியமங்கள், பரஸ்பரம் புரிந்து கொள்ளக் கூடிய பொது மொழி, பொதுவான அல்லது தொடர்புடைய அடையாளங்களில் நம்பிக்கை, பொதுவான உளவியல் பாங்கு என்பனவற்றை உடையவர்களாகவும் தொடர்ச்சியான நிலப்பரப்பில் செறிவுற்றும், முதன்மை பெற்றும் வாழ்பவர்களுமான சனக்குழுமங்கள்‘ என தேசிய இனம், சிறுபான்மைத் தேசிய இனம், ஓர் மக்கள் என்பன வரையறை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு தேசிய இனம், சிறுபான்மைத் தேசிய இனம், ஓர் மக்கள் என்பன சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையன; இவ்வுரித்து நிபந்தனையற்ற உரித்துமாகும் (UNCONDITIONAL RIGHT TO SELF – DETERMINATION). இந் நிபந்தனையற்ற சுயநிர்ணய உரிமை பின்வரும் கூறுகளை உள்ளடக்கியதாகும்.

  1. பிரிந்து (தனிநாடாகச்) செல்வதற்கான உரிமை (RIGHT TO SECESSION [V1])
  1. தமது சொந்த மொழியில் பேசவும், எழுதவும், மொழியின் வளர்ச்சிக்காக உழைக்கவும் உள்ள உரிமை
  2. தமது பண்பாட்டை வெளிப்படுத்தவும், வளர்க்கவும், அப்பண்பாட்டின் வரலாற்றைப் பாதுகாப்பதற்குமான உரிமை
  3. ஒரு தேசிய இனம், சிறுபான்மைத் தேசிய இனம், ஓர் மக்கள் (A PEOPLE) என்பன முழுமையான சுய ஆட்சிக்கான (SELF GOVERNMENT) உரிமை உடையன. தமது வாழ்விடமான புவிப்பரப்பில் (TERRITORY) அரசாங்க நிறுவனங்களை அமைக்கவும், அரசாங்கத்திலும் சமஷ்டி அரசாங்கத்திலும் சமத்துவமான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கும் அவற்றிற்கு உரிமை உண்டு.

மேலே குறிப்பிட்டவற்றை விட எதியோப்பிய அரசியல் யாப்பு பிரிந்து போவதற்கான உரிமையையும் வழங்குகிறது. பிரிந்து போதல் உட்பட்ட சுய நிர்ணய உரிமைக்கு தேசிய இனங்கள், சிறுபான்மை தேசிய இனங்கள் உரிமையுடையனவாய் உள்ளன. ஒறோமோ தேசிய விடுதலை முன்னணி (OROMO NATIONAL LIBERATION FRONT), ஒகாடன் தேசிய விடுதலை முன்னணி என்பன இந்த உரிமையைப் பயன்படுத்தியே அங்கு விடுதலைக்கான பேரம்பேசலில் ஈடுபட்டிருப்பதையும் குறிப்பிடுகிறார் (பக். 55-56).

இனக்குழுமங்களின் அடிப்படையிலான அரசுகளைக் கொண்ட நாடு

எதியோப்பியாவின் சமஷ்டி இனக்குழுமங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசுகளைக் கொண்டது என்பதை அரசியல் யாப்பின் உறுப்புரை 46 (2) கூறுகிறது என விக்கிரமரட்ண குறிப்பிடுகிறார் (பக். 56).

‘STATES SHALL BE STRUCTURED ON THE BASIS OF SETTLEMENT  PATTERNS, LANGUAGE, IDENTITY AND CONSENT OF THE PEOPLE’ என 46 (2) உறுப்புரை கூறுகிறது. இதன் பொருள் வருமாறு:

“மக்களின் குடியிருப்புப் பாங்கு, மொழி, அடையாளம் மற்றும் அவர்களின் சம்மதம் என்பனவற்றின் அடிப்படையில் அரசுகள் கட்டமைக்கப்படும்.”

எதியோப்பியா 9 அரசுகளைக் கொண்ட சமஷ்டியாகும். அவையாவன:

  1. ரிகாரி             
  2. அவார் (AFAR)      
  3. அம்ஹரா
  4. ஒறோமோ       
  5. சோமாலி மற்றும் பென்சாங்குல்/குமாஸ்
  6. தெற்குத் தேசியங்கள் (SOUTHERN NATIONS)
  7. SNNPS பிராந்திய அரசு (NATIONALITIES AND PEOPLES REGIONAL STATE)
  8. கம்பெல மக்களின் பிராந்திய அரசு (GAMBELA PEOPLES’ REGIONAL STATE)
  9. ஹராரி மக்களின் அரசு (HARARI PEOPLES’ REGIONAL STATE)
states

மேற்குறித்த 9 அரசுகளில் எந்த ஒரு அரசுப் பிரதேசமும் ஒரு இனத்தை மட்டும் கொண்ட பகுதியாக இல்லை. பல இனக்குழுமங்களும் எல்லா அரசுகளுக்குள்ளும் உள்ளன. உதாரணமாக தெற்குத் தேசங்கள் (SOUTHERN NATIONS) என்னும் பிராந்திய அரசின் கீழ் 50 சமூகக் குழுக்கள் வாழ்கின்றன. இந்த 9 அரசுகளுக்குள் வாழும் தேசிய இனங்களும், சிறுபான்மைத் தேசிய இனங்களும், மக்களும் எந்தச் சமயத்திலும் தமக்குத் தேவைப்படும் அரசு ஒன்றை அமைத்துக் கொள்ளலாம். தலைநகரான அடிஸ்அபாவும், இன்னொரு நகரமான டயர் டவாவும் (DIRE DAWA) சுய நிர்ணய உரிமையுடையவை. இவற்றுக்கு சுய நிர்வாக உரிமை (POWERS OF SELF – ADMINISTRATION) வழங்கப்பட்டுள்ளது. இவை மத்திய அரசாங்கத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியனவாய் உள்ளன.

மத்திய அரசினதும் ஒன்பது அரசுகளதும் அதிகாரங்கள்

மத்திய அரசினது அதிகாரங்களாவன  :

  1. சமூக பொருளாதார அபிவிருத்தி
  2. வருவாய், நிதி மற்றும் வெளிநாட்டு முதலீடு (FISCAL, MONETARY AND FOREIGN INVESTMENT POLICIES)
  3. சுகாதாரம் தொடர்பான தேசிய தர நிர்ணயம் (NATIONAL STANDARDS)
  4. கல்வி, பண்பாடு, வரலாற்று மரபுரிமையும், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
  5. வெளி விவகாரக் கொள்கை
  6. சமஷ்டி அரசுப் பொலிஸ் (FEDERAL POLICE)
  7. அரசுகளுக்கிடையிலான வர்த்தகமும் வெளிநாட்டு வர்த்தகமும்
  8. குடிவரவு, பிரஜா அந்தஸ்து
  9. சமஷ்டி அரச வரிகள் (FEDERAL TAXES)
  10. வான், ரெயில், கடல் போக்குவரத்து
  11. நாணயமும் அந்நியச் செலாவணியும்
  12. அவசரகாலநிலை
  13. நிலம், இயற்கை வளங்கள், வரலாற்று மரபுரிமை என்பனவற்றை பயன்படுத்தலும் பாதுகாத்தலும்
  14. தேர்தல்கள்

சமஷ்டி அரசுக்கு மட்டும் உரியவை எனக் குறித்தொதுக்கப்படாத அதிகாரங்கள் அரசுகளுக்கு உரியவையாகும்.

சமஷ்டி அரசுக்கும் அரசுகளுக்கும் என ஒதுக்கப்பட்ட ஒருங்கிணை அதிகாரங்களும் அரசுகளுக்குரியவை.

அரசுகளின் அதிகாரங்கள் பின்வருவன :

  1. பொருளாதார, சமூக அபிவிருத்திக் கொள்கைகளை தயாரித்தலும் நடைமுறைப்படுத்தலும்
  2. நிலம் மற்றும் இயற்கை வளங்களை சமஷ்டி அரசால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு அமைய நிர்வகித்தல்
  3. அரசுகளுக்கெனக் குறித்து ஒதுக்கப்பட்ட வரிகளையும் தீர்வைகளையும் அறவிடுதல்
  4. அரசினது பொலிஸ் சேவையும், சட்டமும் ஒழுங்கும்

சனப் பிரதிநிதிகள் சபை

எதியோப்பியாவின் சனப்பிரதிநிதிகள் சபை (HOUSE OF REPRESENTATIVES) 550 உறுப்பினர்களைக் கொண்டது. இத்தொகையில் ஆகக் குறைந்தது 20 ஆசனங்கள் சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் மக்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும். தேர்தல் ஒற்றையங்கத்தவர் தொகுதி முறையில் ‘FIRST – PAST – THE – POST’ முறையில் நடைபெறும். சனப்பிரதிநிதிகள் சபையை விட சமஷ்டிச் சபை (HOUSE OF FEDERATION) என்ற நிறுவனம் பற்றியும் ஜயம்பதி விக்கிரமரட்ண குறிப்பிடுகிறார். இது பற்றிய விபரங்கள் நூலின் பக்கம் 57 இல் தரப்பட்டுள்ளன.

அரசுகளின் அரசியல் யாப்புகள்

எதியோப்பிய சமஷ்டியில் 9 அரசுகள் சமஷ்டியுடன் இணைந்தனவாக உள்ளன என்று குறிப்பிட்டோம் அல்லவா? எதியோப்பியாவின் அரசியல் யாப்பை விட, ஒவ்வொரு அரசுக்கும் தனித்தனியான யாப்புக்களும் உள்ளன என விக்கிரமரட்ண குறிப்பிடுகிறார். ”அரசுகள் தமக்கென ஒரு அரசியல் யாப்பைக் கொண்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் தத்தம் விசேட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு தமது அரசியல் யாப்புக்களை வரைந்துள்ளன. உதாரணமாக SNNPS பிராந்திய அரசு, கீழ்சபையை விட மேற்சபை என்னும் இரண்டாவது சபையையும் (A SECOND CHAMBER) கொண்டுள்ளது. இது தேசியங்களின் சபை (COUNCIL OF NATIONALITIES) என அழைக்கப்படுகின்றது. இவ்விரண்டாம் சபையில் அவ்வரசுக்குக் கீழ் உள்ள பகுதியில் உள்ள தேசிய இனங்கள், சிறுபான்மைத் தேசிய இனங்கள், மக்கள் எனப்படும் எல்லாச் சமூகங்களிற்கும் ஆகக் குறைந்தது ஒரு பிரதிநிதியைத் தம் பிரதிநிதியாகக் கொண்டிருக்க வழி செய்யப்பட்டுள்ளது. அரசுகள் தமது பகுதியின் பன்மைத்துவத்திற்கு ஏற்ப உள்ளூராட்சி அமைப்புகள் பற்றிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். அரசுகள் இன்னொரு முக்கியமான முடிவையும் செய்கின்றன. அது தம் பகுதிக்குரிய உத்தியோக மொழி அல்லது மொழிகள் எவை என்ற முடிவாகும்.

எதியோப்பிய அரசியல் யாப்பின் குறைகளும் நிறைகளும்

நூலின் 58-59 பக்கங்களில் எதியோப்பிய அரசியல் யாப்பின் குறைகளையும் நிறைகளையும் மதிப்பீடு செய்து கருத்துரைக்கப்பட்டுள்ளது.

  1. எதியோப்பிய சமூகம் எதிர்நோக்கும் முக்கியமான அறைகூவல் அதன் பன்மைத்துவத்தை (DIVERSITY) முகாமை செய்வதாகும். பன்மைத்துவம் என்ற பின்புலத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த யாப்பு வரையப்பட்டுள்ளது. இதனால் இதனை ‘DIVERSITY – ORIENTED FEDERALISM’ என அழைப்பது பொருத்தமானது என அறபெய்ன் (AREFAINE) என்ற அறிஞர் குறிப்பிட்டுள்ளார். எதியோப்பியாவின் பன்மைத்துவம்சார் பிரச்சினைகளை வெற்றிகரமாகத் தீர்வு செய்வது, அனைத்து தேசிய இனங்களையும், சிறுபான்மைக் குழுக்களையும் சமத்துவமான பங்கேற்பு (EQUAL PARTNERSHIP) என்பதை ஏற்கச் செய்வதில் தங்கியுள்ளது. குறிப்பாக அந்நாட்டின் பெரும் தேசிய இனங்கள் மேலாதிக்கம் செய்யும் போக்கைக் கைவிட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அறபெய்ன் கூறுகிறார்.
  2. எதியோப்பிய அரசியல் யாப்பு தேசிய இனங்களின் பிரச்சினையில் (THE NATIONALITY QUESTION) அதிகூடிய கவனம் செலுத்தியுள்ளது. அரசியல் யாப்பினை நடைமுறைப்படுத்துவதில், எல்லைகளை தீர்மானித்தல், தாயகத்திற்கு வெளியே வாழும் நபர்களின் பிரச்சினைகள், ஒரு பகுதியில் செறிந்து வாழாது சிதறிப் பரவியுள்ள இனக்குழுமங்களின் பிரச்சினைகள் போன்ற நடைமுறைப் பிரச்சினைகள் பல உள்ளன.
  3. ‘FISEHA’ என்ற அறிஞர் எதியோப்பிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்தும் போது எழுகின்ற பிரச்சினைகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி அவற்றைத் தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறார். 59 ஆம் பக்கத்தின் ஒரு பந்தியில் அவர் கூறிய கருத்துகளை விக்கிரமரட்ண சுருக்கமாகத் தந்துள்ளார்.
  4. டானியல் டெமிசி (DANIEL DEMISSIE) என்பவர் வொல்யடா (WOLAYTA) மக்கள் என்ற சிறு மக்கள் சமூகத்தின் பிரதிநிதி. அவர் ‘எதியோப்பியாவில் சமஷ்டியும் ஜனநாயகமும் குழந்தைப் பருவத்திலேயே உள்ளன.’ (FEDERALISM AS WELL AS DEMOCRACY ARE STILL IN INFANCY IN ETHIOPIA) என்று நம்பிக்கை தரும் கருத்தைக் கூறுகிறார்.
  5. எதியோப்பியாவின் அரசியலில் ‘EPRDF’ என்னும் சுருக்க எழுத்துக்களால் குறிப்பிடப்படும் அரசியல் கட்சியின் ஆதிக்கம் ஆழ வேரூன்றியுள்ளது.

1974 இல் ஹெய்லி செலஸ்சி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்த ‘EPRDF’ இயக்கத்தின் விரிவுப்பெயர் எதியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி (ETHIOPIAN PEOPLE’S REVOLUTIONARY DEMOCRATIC FRONT) என்பதாகும்.

‘EPRDF’ ஜனநாயகம், சோஷலிசம் என்பவை பற்றிப் பேசினாலும் அது சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் நடைமுறையில் மதிப்பளிப்பதாகத் தெரியவில்லை. அது ஆட்சியதிகாரத்தில் தேர்தல்கள் மூலம் அமர்ந்து கொண்டதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சுதந்திரமான இயக்கத்திற்கு இடமளிக்காது, மத்தியப்படுத்தப்பட்ட முடிவெடுக்கும் செயல்முறையை (CENTRALISED DECISION MAKING PROCESS) நடைமுறைப்படுத்துகிறது. 2010 இல் பாராளுமன்றத் தேர்தல்களும், பிராந்திய அரசுகளின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்ட உடனேயே ‘EPRDF’ கட்சியின் மேலிடம் அவசர கூட்டத்தை நடத்தி, பிராந்திய அரசுகளின் அரசுச் சட்ட சபைகள் (REGIONAL STATES COUNCILS) யார், யாரைப் பதவிகளுக்கு தெரிவு செய்ய வேண்டும் என்பதை அறிவித்தது.

இது கொள்கை வகுப்பதில் மத்தியப்படுத்தப்பட்ட கட்சி முறையே முக்கியமான மாறிலியாக் காணப்படுவதையும் சமஷ்டி முக்கியமல்ல என்பதையும் எடுத்துக் காட்டுகிறது (THE CENTRALISED PARTY SYSTEM, NOT FEDERALISM , IS A CRUCIAL VARIABLE IN POLICY MAKING – பக். 60).

60-61 ஆம் பக்கங்களில் ‘EPRDF’ கட்சியின் ஆதிக்கம் சமஷ்டி செயல்முறையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

சமஷ்டி எதியோப்பியாவிற்கு நன்மையளித்ததா?

எதியோப்பியா பற்றிய எண்ணம் எமது மனதில் தோன்றும் போது, அந்நாட்டின் கொடிய வறுமையும், எலும்பும் தடியுமாக பசியால் வாடி வதங்கும் சிறுவர்களின் கோரக் காட்சிகளும், வறுமை குறித்த பிம்பங்களுமே வரும். ஊடகங்களும் அவ் விம்பத்தையே எமக்கு தந்து கொண்டிருக்கின்றன. ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் எதியோப்பிய சமஷ்டி பற்றி நம்பிக்கை தரும் சித்திரத்தை எமக்கு வழங்குகிறார்.

சமஷ்டி, எதியோப்பியாவின் தேசிய இனங்களின் சுயநிர்ணயம், எதியோப்பியாவின் வறுமை என்ற இரண்டு விடயங்கள் சார்ந்த அறை கூவல்களுக்கு முகம் கொடுத்து அவை சார்ந்த பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளித்து முன்னேறுகிறது என்கிறார். எத்தியோப்பியா பற்றிய அறிமுகத்தை அதிகுறைவிருத்தி நாடொன்றில் சமஷ்டி எதியோப்பியா (ETHIOPIA – FEDERALISM IN AN LDC) என ஆரம்பிக்கும் விக்கிரமரட்ண முடிவுரையாகப் பின்வருமாறு கூறுகிறார்.

“(எதியோப்பியாவில்) சமஷ்டி அறிமுகப்படுத்திய பின்னர் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்புகள் என்பனவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1991 இல் நாட்டில் இரண்டு பல்கலைக்கழகங்கள் மட்டும் இருந்தன. அவ்விரண்டிலும் கல்வி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்தது. முதனிலைக் கல்வி சனத்தொகையின் 19% மக்களுக்கே கிடைத்தது. சமஷ்டி முறை அறிமுகமான பின்னர் 30 புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.

இப்புதிய பல்கலைக்கழகங்கள், எல்லாப் பிராந்தியங்களுக்கும் பல்கலைக்கழகக் கல்வியை எடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் நிறுவப்பட்டன. பிராந்திய அரசுப் பகுதிகளில் (REGIONAL STATES) பல பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. முன்னர் ஆண்டு ஒன்றுக்கு சில ஆயிரம் மாணவர்களே பல்கலைக்கழகங்களிற்குத் தெரிவானார்கள். சமஷ்டி முறை அறிமுகமான பின்னர் இது 150,000 ஆக அதிகரித்துள்ளது. முதல் நிலைக் கல்வியில் சேர்வு வீதம் 92% வீதமாக உயர்ந்துள்ளது. சுகாதார வசதிகளில் பெரு முன்னேற்றம் ஏற்பட்டதோடு சுகாதார வசதிகள் பிற்பட்ட பகுதிகளுக்குச் சென்றடைதல் அதிகரித்துள்ளது. வீதிகள், தொலைபேசி வசதி, மின்சாரம் போன்ற உட்கட்டமைப்புக்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எதியோப்பியா இப்போது தனது அண்டை நாடுகளான கெனியா, சுடான் என்பனவற்றிற்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்குத் திட்டமிடுகிறது (பக். 62).

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

7293 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • October 2024 (4)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)