எதியோப்பியாவின் சமஷ்டி அரசியல் யாப்பு : ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் ஆய்வுரையை முன்வைத்து ஓர் உரையாடல் - பகுதி 2
Arts
14 நிமிட வாசிப்பு

எதியோப்பியாவின் சமஷ்டி அரசியல் யாப்பு : ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் ஆய்வுரையை முன்வைத்து ஓர் உரையாடல்  – பகுதி 2

May 22, 2024 | Ezhuna

இனக் குழுமம், சமயம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் வேறுபாடுகளைக் கொண்ட பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களில் (MULTI – CULTURAL SOCIETIES) சமாதான வழிகளில் தீர்க்க முடியாதனவான சிக்கலான அரசியல் பிரச்சினைகள் தீவிரமடைந்து உள்நாட்டுக் குழப்பங்களிற்கும், உள்நாட்டு யுத்தங்களிற்கும் வழிவகுத்துள்ளன. இதனை மூன்றாம் உலக நாடுகளின் சமகால வரலாறுகள் உணர்த்தியுள்ளன. இவ்வரசியல் பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தைகள் மூலம் சமாதான வழியில் தீர்த்தல், சம்மந்தப்பட்ட நாடுகளின் அமைதிக்கும், சமூக – பொருளாதார – அரசியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. அமைதி வழியான தீர்வை அரசியல் தீர்வாக (POLITICAL SOLUTION) அமைப்பதோடு அதிகாரப் பகிர்வு (POWER SHARING), சுயாட்சி (SELF RULE) ஆகியவற்றுக்கான ஆட்சிக் கட்டமைப்புக்களை, அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்குவதும் இன்றியமையாத முன் தேவையாக உள்ளது. அந்த வகையில், ‘அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்’ என்னும் இப்புதிய தொடரில் மூன்றாம் உலக நாடுகளான இலங்கை, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் அனுபவங்களை விளக்கியுரைக்கும் கட்டுரைகளின் தமிழாக்கம் வெளியிடப்படும். பல்வேறு தீர்வு மாதிரிகள், அத்தீர்வு மாதிரிகளின் பின்னால் உள்ள அரசியல் கோட்பாடுகள் (POLITICAL THEORIES), அரசியல் யாப்புத் தத்துவங்கள் (CONSTITUTIONAL PRINCIPLES) என்பனவும் விளக்கிக் கூறப்படும்.

அரசியல் யாப்புச் சட்டங்களின் ஒப்பீடு

‘பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களிற்குப் பொருத்தமான அரசியல் யாப்புக்களை வரைதல் : சர்வதேச  அனுபவங்கள்  சில’ என்னும் கட்டுரையின் சில பக்கங்களில் உள்ள கருத்துக்களை மேலே சுருக்கித் தந்தோம். இக்கட்டுரைத் தலைப்பு, இக்கட்டுரை ஆராயும் விடயங்கள் ஆகியன அரசியல் யாப்புச் சட்டம் பற்றியவை. குறிப்பாக அரசியல் யாப்புச் சட்டங்களின் ஒப்பீடு (COMPARATIVE CONSTITUTIONAL LAW) என்ற பாடத்தின் பகுதியாக அமையும் விடயங்களையே விக்கிரமரட்ண ஆராய்விற்கு எடுத்துக் கொள்கிறார். இப்பாடப் பரப்புப் பற்றி லக்ஸ்மன் மாறசிங்க தரும் வரைவிலக்கணம் எமது உரையாடலுக்குப் பொருத்தமானது.

”அரசியல் யாப்புச் சட்டங்களின் ஒப்பீடு பல்வேறு அரசியல் யாப்புக் கட்டமைப்பு மாதிரிகளை (MODELS) ஆராய்கிறது. வெவ்வேறு சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளின் தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு நாடுகள் அரசியல் யாப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன. அவ்வரசியல் யாப்புகளின் உருவாக்கப் பின்புலத்தில் வெவ்வேறு அரசியல் யாப்புகளின் சட்டப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன.”

“IN A STUDY OF COMPARATIVE CONSTITUTIONAL LAW ONE CONSIDERS A VARIETY OF MODELS OF CONSTITUTIONAL STRUCTURES. EACH STRUCTURE CARRIES DIFFERENT LEGAL IMPLICATIONS AND PROVIDE FOR VARYING SOCIO-ECONOMIC AND POLITICAL NEEDS OF THE COMMUNITY (LAKSMAN MARASINGHE 2007:3)”

எதியோப்பியாவின் அரசியல் யாப்பு மாதிரி (MODEL) எத்தகையது? அதன் யாப்புக் கட்டமைப்பு யாது? அது அத்தேசத்தின் சமூக, பொருளாதார, அரசியல் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கம் பெற்றதாயின் அத்தேவைகள் யாவை? போன்ற வினாக்கள் எமது உரையாடலுக்குப் பயன் உடையன.

  1. எதியோப்பியா ஒரு பன்மைத்துவப் பண்பாடுகள் கொண்ட தேசம். அதன் சிக்கலான பிரச்சினையே அதுதான்.
  1. இரண்டாவதாக அது ஒரு ‘LDC’ – அதாவது உலகின் தீவிர குறைவிருத்தி நாடுகளில் ஒன்று. இலங்கை, குறைவிருத்தி நாடு என்றும் வளர்ச்சியடையும் (DEVELOPING) நாடு என்றும் பலவாறு அழைக்கப்படுவதுண்டு. ஆனால் இலங்கை ஒரு போதும்  ‘LDC’ என்ற அடையாளத்தைப் பெறவில்லை.

எதியோப்பியா, பன்மைப் பண்பாடுகள் – தீவிர குறைவிருத்தி என்ற இரண்டு பிரச்சினைகளையும் தீர்க்கும் தேவையை எதிர்நோக்கியது. இவ்விரு பிரதான பிரச்சினைகளையும் அதிகாரப் பகிர்வு (POWER SHARING), பிராந்தியங்களின் சுயாட்சியும் (AUTONOMY) சுய ஆளுகையும் (SELF-RULE) ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் தீர்வு செய்யும் முடிவை அந்நாட்டு மக்கள் மேற்கொண்டனர். பேரரசர் ஹெய்லி செலசியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இவ் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு 17 ஆண்டுகள் கழிந்த பின்னர் 1991 இல் EPRDF இயக்கத்தின் அரசியல் தலைமை எதியோப்பியாவிற்கு சமஷ்டி முறையை அறிமுகம் செய்ய முடிவு செய்தது.

selassy

அபிசீனியா

1995 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின்படி, எதியோப்பிய சமஷ்டி ஜனநாயகக் குடியரசு என அழைக்கப்படுகின்றது. இந்நாட்டின் பழைய பெயர் அபிசீனியா ஆகும். 1935 ஆம் ஆண்டில் இத்தாலியின் பாசிஸ்ட் சர்வாதிகாரியான முசோலினி அபிசீனியாவின் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடங்கினார். 1936 இல் அபிசீனியா இத்தாலியின் அடிமைக் காலனி நாடாகியது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் அபிசீனியா சுதந்திரம் பெற்றது. இதன் பின்னர் 1974 இல் சதிப்புரட்சி, அதற்கு 17 ஆண்டுகளின் பின் 1991 இல் ஆட்சி மாற்றம், 1995 இல் புதிய அரசியல் யாப்பு என எதியோப்பியா ஏற்ற இறக்கங்கள் மிகுந்த நீண்ட வரலாற்றை உடைய நாடாக விளங்குகிறது. எதியோப்பியாவின் வரலாற்றில் அதன் இனத்துவப் பன்மைத்துவம் (ETHNIC DIVERSITY) முக்கியமான காரணியாக இருந்து வந்தது.

நவீன அரசும் நவீனத்திற்கு முந்திய அரசும்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எதியோப்பியாவில் நவீன அரசு (MODERN STATE) ஒன்று உருவாகியது. நவீன அரசின் தோற்றத்திற்கு முந்திய அரசு, வரலாற்று ஆசிரியர்களாலும் அரசியல் கோட்பாட்டாளர்களாலும் நவீனத்திற்கு முந்திய அரசு (PRE MODERN STATE) என அழைக்கப்படுகிறது. எதியோப்பியா மட்டுமல்லாது மூன்றாம் உலகின் முன்னாள் காலனிகளும் இன்று சுதந்திரம் பெற்ற நாடுகளுமாக உள்ள அனைத்து நாடுகளின் நவீன அரசுகள், நவீனத்திற்கு முந்திய அரசுகளில் இருந்து அடிப்படையில் வேறுபட்ட இயல்புகளை உடையனாவாய் இருந்து வருகின்றன. இக்கட்டுரையின் முதலாம் பகுதியில் மேற்கோளாகத் தரப்பட்ட மென்கிஸ்டு அறபெய்ன் என்ற அறிஞரின் கூற்று இந்த வேறுபாட்டை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

1. நவீன அரசு மத்தியப்படுத்தப்பட்ட அரசாக (CENTRALISED STATE) வளர்ச்சியடைந்தது.

2. இம் மத்தியப்படுத்தப்பட்ட அரசு நாட்டின் பல்வேறு சிறுபான்மை இனக்குழுமங்களையும், மக்கள் சமூகங்களையும் மத்தியில் உள்ள ஆட்சியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

3. மத்தியின் ஆட்சியில் அம்ஹரா (AMHARA) என்ற தேசிய இனம் பிற எல்லா இனக்குழுமங்களையும் மக்கள் சமூகங்களையும் புறந்தள்ளி அரசு அதிகாரத்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் எதியோப்பியாவின் நவீன அரசு ஒரு தேசிய இனத்தின் அரசாக ‘நேஷன் ஸ்டேட் (NATION STATE)’ ஆக மாற்றம் பெற்றது.

4. எதியோப்பியாவின் ‘தேசிய அரசு’ ஏனைய தேசியங்களையும் மக்கள் சமூகங்களையும் அவற்றின் பண்பாட்டு மொழி அடையாளங்களையும் அழித்து, ஒன்றிக் கலக்கச் செய்தல் (ASSIMILATION) என்னும் செயல் முறையை நடைமுறைப்படுத்தியது.

5. நவீனத்திற்கு முந்திய கால அரசு முறையில், நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களிலும் அதிகாரம் செலுத்திய மன்னர் ஆட்சிப் பகுதிகளும் (KINGDOMS) குறுநில அரசுகளும் (CHIEFDOMS) சுயாட்சி உடையனவாய் இருந்தன. இவை யாவும் சுயாட்சி அதிகாரத்தை இழந்தன.

எதியோப்பியாவின் உள்நாட்டு யுத்தங்களால் (CIVIL WAR) நாடு சீரழிந்தது. அதன் பொருளாதாரப் பின்னடைவுக்கு (BACKWARDNESS), மேலாதிக்கம் பெற்றிருந்த இனக்குழுமம் அரசு அதிகாரத்தைப் பகிர்வதற்கும், நாட்டின் பன்மைத்துவத்திற்கு (DIVERSITY) முதன்மையளிக்கும் அரசியல் தீர்வுக்கு இணங்க மறுத்ததுமே காரணம் என்பதை அறபெய்ன் அவர்களின் மேற்கோள் அழுத்திக் கூறுகிறது.

தேசிய இனங்களின் விருப்பத்திற்கு மாறான தெரிவு

மூன்றாம் உலகின் பன்மைத்துவப் பண்பாட்டுச் சமூகங்கள் யாவற்றுக்கும் பொதுவான பிரச்சினை நவீன அரசுகளின் தோற்றத்துடன் ஆரம்பமாகியது. காலனிய அரசுகள் நாடுகளின் புவிப்பரப்பில் எழுந்தமானமாக எல்லைகளை வகுத்ததன் விளைவாக இன்றைய தேசிய அரசுகளை உருவாக்கின. இதன் விளைவாகப் பல தேசிய இனங்களின் வாழிடங்கள் கூறு போடப்பட்டன. அவற்றுள் பல, காலனியத்திற்கு முந்திய காலத்தில் அனுபவித்த சுயாதீனத்தை இழந்தன. தமது விருப்பத்திற்கு மாறான தெரிவு தம் மீது சுமத்தப்பட்டுள்ளதை அவை உணர்ந்தன. இது ஒரு வரலாற்று விபத்து ஆகும். சிறுபான்மைத் தேசிய இனங்கள் பலவற்றின் விருப்பத்திற்கு மாறான இத்தெரிவை ஜயம்பதி விக்கிரமரட்ண ஆங்கிலத்தில் ‘IN STATES NOT OF THEIR CHOICE’ எனத் தலைப்பிட்ட பகுதியில் (நூலின் பக் 3-7) உதாரணங்கள் காட்டி விளக்கியிருந்தார். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் எதியோப்பியாவுடன் எறிற்றியா இணைக்கப்பட்டது. இவ் இணைப்பு எறிற்றிய மக்களின் விருப்பத்திற்கு மாறாகச் செய்யப்பட்டது.

எதியோப்பியாவின் வரலாற்றில், எறிற்றியா மக்களின் விடுதலை போராட்டத்தால் இரத்த ஆறு பெருகியது. அந்நாட்டைச் சிதைத்துச் சீரழித்த உள்நாட்டு யுத்தம் 1993 இல் முடிவுக்கு வந்தது. எறிற்றியா தனி நாடாகப் பிரிந்து சுதந்திரம் பெற்றது.

தேசிய இனங்களின் பிரச்சினை

‘தேசிய இனங்களின் பிரச்சினை (THE NATIONAL QUESTION)’ என்ற தொடர் 1920 கள் முதல் சமூக விஞ்ஞானத்தில் பிரபலம் பெற்ற ஒரு தொடராக இருந்து வந்துள்ளது. இத்தொடர் தேசிய இனம் (NATION) எனும் கருத்தாக்கத்தை வரையறை செய்வதன் மூலம் ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் இனம், மொழி, சமயம், பண்பாடு, வாழுமிடம் என்னும் அடையாளங்களையுடைய சமூகங்களின் பிரச்சினைகளை அடையாளம் காண உதவுகிறது. எதியோப்பியாவின் அரசியல் யாப்புச் சட்டம் அந்நாட்டின் எல்லைக்குள் வாழ்ந்து வரும் 80 வரையான சமூகக் குழுக்களை தேசிய இனம் (NATION), சிறுபான்மைத்தேசிய இனம் (NATIONALITY), ஒரு மக்கள் (A PEOPLE) என வரையறை செய்துள்ளது. அரசியல் யாப்பின் உறுப்புரை 39 (4), பொதுவான பண்பாடு, ஒரே விதமான (ஒழுக்க) நியமங்கள், பரஸ்பரம் புரிந்து கொள்ளக்கூடிய பொது மொழி, பொதுவான அல்லது தொடர்புடைய அடையாளங்களில் நம்பிக்கை, பொதுவான உளவியல் என்பனவற்றை உடையவர்களாகவும், தொடர்ச்சியான நிலப்பரப்பில் செறிவுற்றும் முதன்மை பெற்றும் வாழ்பவர்களுமான சனக்குழுமங்கள் என இத்தொடர்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. கூறியது கூறலாக அமைந்தாலும் மீண்டும் இதனைச் சுட்டிக்காட்டுதல் பொருத்தமுடையது. ‘ஒவ்வொரு தேசியம், சிறுபான்மைத் தேசிய இனம், ஓர் மக்கள் என்பன சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையன. இவ்வுரித்து நிபந்தனையற்ற உரித்துமாகும்’ எனவும் எத்தியோப்பிய அரசியல் யாப்புச் சட்டம் வரையறை செய்துள்ளது எனவும் விக்கிரமரட்ண குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மைச் சமூகங்களுடன் அரசு அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுதல் (SHARING STATE POWER) மட்டுமே தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு அடிப்படையாக அமையும் என்பதை எதியோப்பிய அரசியல் யாப்பு உணர்த்தி நிற்கிறது.

சுயநிர்ணய உரிமை

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, விவாதத்திற்குரிய கோட்பாட்டுப் பிரச்சினையாகும். இவ்விடயம் இச்சிறு கட்டுரையில் விரிவாக விவாதிக்கப்படக் கூடியது அன்று. எதியோப்பிய அரசியல் யாப்பு தேசிய இனங்கள், சிறுபான்மை தேசிய இனங்கள், ஒரு மக்கள் ஆகிய சமூகக் குழுக்களுக்கு சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்துள்ள முன் உதாரணமான அரசியல் யாப்பு ஆகும். இவ்வுரிமை:

  1. பிரிந்து தனிநாடாகச் செல்வதற்கான உரிமை
  2. மொழியுரிமைகள்
  3. பண்பாட்டு உரிமைகள்
  4. தமது வாழிடத்தில் சுயாட்சிக்கான உரிமை
  5. தமது வாழிடத்தில் அரசாங்க நிறுவனங்களை அமைக்கவும், அரசாங்கத்தில் சமத்துவமான பிரதிநிதித்துவத்தை (EQUAL REPRESENTATION) பெறுவதற்கான உரிமை.

என்பனவற்றை  உள்ளடக்கியதாகும்.

எதியோப்பியா – தீர்வு மாதிரிகளுள் ஒன்று

உலகின் பல நாடுகளில் 20 ஆம் நூற்றாண்டில் அரசியல் யாப்புப் பரிசோதனைகள் நடைபெற்றன. பல மாதிரிகள் (MODELS) எமக்குக் கிடைக்கின்றன. எதியோப்பியாவின் சமஷ்டி, அவ்வாறான மாதிரிகளில் ஒன்று என்பதை நாம் கவனத்தில் இருத்துதல் வேண்டும். அம்மாதிரியின் சிறப்பு அம்சங்கள் சிலவற்றை மேலே குறிப்பிட்டோம். விக்கிரமரட்ணவின் கட்டுரை உலகின் பன்மைப் பண்பாட்டுச் சமூகங்கள் பலவற்றின் அரசியல் யாப்பு அனுபவங்களையும், வெவ்வேறு அரசியல் யாப்பு மாதிரிகளையும் விளக்கும் ஒப்பீட்டு ஆய்வாக உள்ளது. சிக்கலான இனத்துவ முரண்பாடுகளின் களமாக அமைந்தது ஸ்பானியா தேசம். அங்கு பஸ்க் (BASQUE) கற்றலோனியா, ஹலீசியா (GALICIA) முதலிய தேசிய இனங்கள் விடுதலைக்கான போராட்டங்களை நடத்தி வந்தன. ஸ்பானியாவின் சிறுபான்மைத் தேசிய இனங்கள் அரசியல் அதிகாரப் பகிர்வு முறையிலான சீர்திருத்தங்களின் நன்மைகளைப் பெற்று இன்று முன்னேற்றப் பாதையில் செல்கின்றன. பெல்ஜியம் இன்னோர் சிறந்த முன் உதாரணம் எனக் குறிப்பிடலாம். டச்சு மொழி பேசும் ‘FLANDERS’ மக்கள், பிரஞ்சு மொழி பேசும் மக்கள் என்ற இரு மொழிச் சமூகங்களிற்கிடையே பெல்ஜியத்தில் இணக்கப்பாடும் ஒற்றுமையும் வளர்வதற்கான நல்ல அறிகுறிகள் தோன்றியுள்ளன. அந்நாட்டில் ‘NON-TERRITORIAL FEDERALISM’ என்றும் புத்தாக்கமான அரசியல் முறைமை நடைமுறையில் உள்ளதை விக்கிரமரட்ண எடுத்துக் காட்டுகிறார். ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய பகுதிகளில் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களை வழங்கிய ஐக்கிய இராச்சியம், பல்லினப் பண்பாட்டுச் சமூகங்களின் அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வாக சமஷ்டி முறைமையை வெற்றிகரமாக உபயோகித்து வருவதை இக்கட்டுரை விரிவாக விளக்குகிறது. டென்மார்க் நாட்டின் ஆள்புலத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் கிறீன்லாந்து (GREEN LAND),  பின்லாந்து நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட ஆலந்து தீவுகள், பிரான்ஸ் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட கோர்சிக்கா தீவு என்பன சமஷ்டி அலகுகள் போல் இயங்கும் அதிசயத்தை இக்கட்டுரை சுருக்கமாக விளக்குகிறது. மேலே குறிப்பிட்டவை மேற்கு நாட்டு உதாரணங்கள். அந்நாடுகளின் அரசியல் கலாசாரம் (POLITICAL CULTURE) வேறு, மூன்றாம் உலகம் வேறு என்று கடந்து போவதை விடுத்துப் பல மாதிரிகளையும், பல பரிசோதனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையை இக் கட்டுரை உணர்த்தி நிற்கிறது. ‘SUCCESS IN INDIA’ (வெற்றிப் பாதையில் இந்தியா) (பக் – 29 -36) என்னும் தலைப்பில் அமைந்த பகுதியில் இந்திய சமஷ்டியின் உதாரணம் விளக்கிக் கூறப்பட்டுள்ளது. இந்தோனேசியா, பப்புவா நியுகினியா ஆகிய நாடுகளின் அனுபவங்களும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. சுருங்கக் கூறின் அரசியல் யாப்பு மாதிரிகள் பற்றிய சிறந்த ஒப்பீட்டு ஆய்வாக இக்கட்டுரை விளங்குகிறது. விக்கிரமரட்ண முன் வைக்கும் மாதிரிகளில் ‘எதியோப்பிய சமஷ்டி’ என்னும் ஒரு மாதிரியை முன்வைத்த உரையாடலாக இக்கட்டுரையை அமைத்துள்ளோம். தமிழ் வாசகர்களுக்கும் பல்கலைக்கழகங்களில் வரலாறு, அரசறிவியல், சமூகவியல், சட்டம் ஆகிய பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் பெறுமதிமிக்க இந்நூலைச் சிபாரிசு செய்கிறோம்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

8294 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • October 2024 (4)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)