ஆங்கில மூலம் : நவரட்ண பண்டார
பேராசிரியர் A.M நவரட்ண பண்டார அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையின் மூத்த பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் 1990 கள் முதல் இன்றுவரை இலங்கையில் இன ஐக்கியம், சமூகநீதி, ஜனநாயகம் என்பவற்றுக்காக தமது புலமைத்துறை ஆய்வுகள் மூலம் பங்களிப்புச் செய்து வருபவர். ‘Ethnic Politics and the Democratic Process in Post – Independence Sri Lanka’ என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் தழுவலாக்கத்தைத் தமிழ் வாசகர்களுக்கு வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். பேராசிரியரின் ஆங்கிலக்கட்டுரை 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘Democracy and Democratization in Sri Lanka : Paths, Trends and Imagination’ என்னும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலில் (தொகுதி 1, அத்தியாயம் 07, பக். 281-321) சேர்க்கப்பட்டுள்ளது. இன்று இலங்கையின் தென்பகுதியிலும் வடகிழக்குப் பகுதியிலும் ஜனநாயகத்திலும் ஜனநாயகச் செயல்முறையிலும் (Democracy and Democratic Processes) நம்பிக்கையுள்ள சக்திகள் அரசியல் அரங்கின் முன்னிலைக்கு வந்துள்ள பின்னணியில், ஒரு நூற்றாண்டு இலங்கை வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதற்கு உதவும் பேராசிரியரின் கட்டுரை பயனுடையது என்றே கருதுகிறோம். இனி கட்டுரைக்குள் செல்வோம்.
அறிமுகம்
இலங்கையின் அரசியலில் இனத்துவ அரசியல் (Ethnic Politics) மேலாதிக்கம் செலுத்தத் தொடங்கிச் சரியாக ஒரு நூற்றாண்டு காலம் (1921-2021) முடிவடைந்துள்ளது. 1921 ஆம் ஆண்டில் இலங்கைத் தேசிய காங்கிரஸ் (CNC) என்னும் அரசியல் அமைப்பில் இணைந்து செயற்பட்ட இலங்கையின் சிங்கள, தமிழ் உயர்குழு (Sinhalese and Tamil Elites) கருத்து வேற்றுமைகள் காரணமாக அவ்வமைப்பைப் பிளவுபடுத்தினர். அவர்களிடையே தோன்றிய கருத்து வேற்றுமைகளுக்குக் காரணம், காலனிய அரசாங்கம் இலங்கையர்களுக்கு அக்காலத்தில் வழங்கவிருந்த அதிகாரங்களைச் சிங்களவர்கள், தமிழர்கள் என்ற இரு சாராருக்கும் எப்படி பகிர வேண்டும் என்பது தொடர்பான சர்ச்சையே ஆகும். பிரித்தானிய காலனிய அரசு அவ்வேளை மூன்று விடயங்கள் சார்ந்த அதிகாரங்களை இலங்கையர்களுக்கு வழங்க முன்வந்தது. அவையாவன:
அ) சட்ட ஆக்கத்துறை அதிகாரங்கள் (Legislative Powers)
ஆ) நிர்வாகத்துறை அதிகாரங்கள் (Executive Powers)
இ) நிர்வாகத்துறைப் பதவிகள், அப்பதவிகள் ஊடாகப் பெறப்படும் அதிகாரங்கள் (Administrative Powers)
இந்த அதிகாரங்களைப் பெறுவதால் இலங்கைக்கு பூரண சுதந்திரம் கிடைக்கப்போகிறது என்று யாரும் கூறவும் இல்லை; அவ்வாறான எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட இந்த அதிகாரத்திற்கான போட்டி சிங்கள, தமிழ் மக்களிடையிலான போட்டி. அன்று இது சிங்கள, தமிழ் உயர் குழாங்களிடையிலான போட்டி (Inter Elite Competition) என்பதை நவரட்ண பண்டார அவர்கள் கட்டுரையின் தொடக்கத்திலேயே குறிப்பிடுகிறார். 1921 இல் ஆரம்பித்த இப்போட்டி 1930 களில் மேலும் தீவிரமடைந்தது. பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கை தொடர்ந்தும் இருந்து வந்த 1930 களில் மேற்குறித்த இனத்துவ அடிப்படையிலான உயர்குழாம் போட்டி (Ethnic – Based Elite Competition) தொடர்ந்தது; தீவிரம் பெற்றது. இப்போட்டியில் 1930 களில் ஒரு பண்பு ரீதியான மாற்றம் (Qualitative Change) ஏற்பட்டது. அம்மாற்றம் ஒரு முக்கியமான திருப்பம் ஆகும். அதுவரை காலமும் உயர்குழாத்தின் மத்தியில் இருந்து வந்த போட்டி சாதாரண மக்களிடையிலான போட்டியாக, உயர்குழாம் அல்லாத சமூக வர்க்கங்களையும் (Non-Elite Social Classes) இனவாதம் என்ற பொறிக்குள் வீழ்த்திய போட்டியாக மாறியது. இப்போட்டிக்குள் சாதாரண சிங்கள – தமிழ் மக்கள் அகப்பட்டுக்கொள்ள வேண்டி ஏற்பட்டதேன்?
ஜனநாயக அரசியல்
ஜனநாயக அரசியலின் மிக முக்கியமான கூறு வயதுவந்த ஆண் – பெண் இருபாலாருக்கும் உரித்தான வாக்குரிமையாகும். 1931 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அரசியல் யாப்பு சர்வசன வாக்குரிமையை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அதற்கு முற்பட்ட காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை (Limited Franchise) இருந்து வந்தது. மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை என்பதன் பொருள்;
அ) ஆங்கிலக் கல்வி கற்ற படித்த இலங்கையர்களுக்கு மட்டுமே வாக்குரிமை,
ஆ) படித்தவர்களாக மட்டுமல்லாது சொத்துகளை உடைமையாகக் கொண்ட நபர்களுக்கே (Property Owning Individuals) வாக்குரிமை,
இ) ஆங்கிலம் படித்தவராகவும், சொத்துடையவராகவும் இருந்தாலும் பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது,
என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கல்வி கற்ற சொத்துடமையுள்ள ஆண்களுக்கு மட்டுமே (Educated and Property Owning Males) வாக்குரிமை உரியதாக இருந்தது.
இலங்கையை சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றப் பாதையில் எடுத்து சென்ற சர்வசன வாக்குரிமை, இனத்துவ அடிப்படையிலான அரசியலையும் (Ethnicity Based Identity Politics) உடன் கொண்டு வந்தது. இந்த முரண்பாடான தோற்றப்பாட்டை நவரட்ண பண்டார அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “Thus Sri Lanka’s entry into democratic political modernity, ethnicity and democracy have remained intertwined and interdependent” (பக். 281)
இதன் பொருள் : இலங்கை ஜனநாயக அரசியல் நவீனத்துவத்திற்குள் காலடி எடுத்து வைத்த காலம் தொடக்கம், இனத்துவம் (Ethnicity), ஜனநாயகம் என்ற இரண்டும் ஒன்றோடொன்று பிணைப்புடையனவாயும், ஒன்று இல்லாமல் மற்றது இல்லை (Interdependent) என்ற நிலையிலும் இருந்து வந்துள்ளன.
இலங்கையின் ஆளும் குழுக்களின் அரசைக் கட்டி வளர்க்கும் திட்டம்
இலங்கை 1948 இல் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றது. 1948 இற்குப் பிந்திய காலத்தைப் பின்காலனித்துவக் காலம் (Post – Colonial Period) என வரையறை செய்யலாம். இக்காலத்தில் இலங்கையின் ஆளும் குழுக்கள் அரசைக் கட்டி வளர்த்தன. ‘State Building’ என்னும் திட்டத்தைச் செயற்படுத்தின. இந்தச் செயற்திட்டத்தின் பயனாக இனத்துவ தேசியவாதம் (Ethnic Nationalism) தோன்றியது எனவும், இவை சிங்களவர்களின் இனத்துவ தேசியவாதம், தமிழர்களின் இனத்துவ தேசியவாதம் என்ற இரு வடிவங்களில் வெளிப்பட்டன எனவும் நவரட்ண பண்டார கூறுகிறார். தொடக்கத்தில் இனத்துவ தேசியவாதத்தில் இருந்து விலகி நின்ற முஸ்லீம் சமூகத்தில், 1990 களில் முஸ்லிம்களின் இனத்துவ – சமய அடையாளத்தை (Ethno – Religious Identity) வலியுறுத்தும் தேசியவாத அரசியல் கட்சி ஒன்று தோற்றம் பெற்றது. ஆகையால் 1990 க்கு பிற்பட்ட 30 ஆண்டு அரசியல் அணி திரட்டலில் (Political Mobilization) சிங்களத் தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம், முஸ்லிம் தேசியவாதம் என்ற மூன்று தேசியவாதங்கள் தோன்றி தத்தமது பாதையில் அரசியல் போராட்டங்களை முன்னெடுத்தன. இம்மூன்று தேசியவாதங்களின் அரசைக் கட்டியெழுப்பும் திட்டங்கள் வெவ்வேறானவையாக இருந்தன. சனத்தொகையில் 75% ஆன சிங்கள மக்களின் சிங்களத் தேசியவாதம் அரசைக் கட்டமைக்கும் செயல்முறையில் மேலாதிக்கம் செலுத்தியது. இதன் விளைவாக சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்து இலங்கையில் ‘இனத்துவ மேலாதிக்க அரசு’ (Ethnic Hegemonic State) உருவானது. இனத்துவ மேலாதிக்க அரசின் உருவாக்கத்தின் விளைவாக இலங்கையில் இரண்டு அரசியல்கள் ஓரங்கட்டப்பட்டன. அவையாவன:
- தாராண்மைவாத அரசியல் (Liberal Politics)
- சோஷலிச அரசியல் (Socialist Politics)
1972 அரசியல் யாப்பும் 1978 அரசியல் யாப்பும் சோஷலிச ஜனநாயகக் குடியரசை (Socialist Democratic Republic) உருவாக்கும் எண்ணத்தை வெளிப்படையாகப் பிரகடனம் செய்தன. ஆயினும் அவ்வரசியல் யாப்புகள் இலங்கையின் அரசியலில் தாராண்மைவாதம், சோஷலிசம் என்ற இரண்டும் மெல்ல மெல்லக் காணாமல் ஆக்கப்பட்ட நிலையைத் தோற்றுவித்தன. ஜனநாயகம், தேசியவாதம் என்ற இரண்டு தத்துவங்களின் கலப்பினால் எழும் விபரீத நிலையை விளங்கிக் கொள்வதற்கு இவ்விரு அரசியல் எண்ணக்கருக்களையம் (Political Concepts) புரிந்து கொள்ள வேண்டும்.
இனத்துவத் தேசியவாதமும் ஜனநாயகமும்
இனத்துவத் தேசியவாதமும் ஜனநாயகமும் என்னும் உப தலைப்பின் கீழ் நவரட்ண பண்டார அவர்கள் தாராண்மை ஜனநாயகம் (Liberal Democracy), தேசிய வாதம் (Nationalism) என்ற இரு எண்ணக்கருக்களையும் (Concepts) விளக்கிக் கூறுகிறார். அவரது விளக்கம் தாராண்மைவாத ஜனநாயகமும் தேசியவாதமும் தோன்றிய ஐரோப்பாவின் 18ஆம் 19ஆம் நூற்றாண்டின் வரலாற்றின் பின்புலத்தில் அமையும் விளக்கமாக அமைந்துள்ளது. ஐரோப்பாவில் 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் தேசிய அரசுகள் (Nation-States) தோன்றின. இத்தேசிய அரசுகள் குறிப்பிட்ட எல்லைப்பரப்புக்குள் (Territory) வாழும் மக்களை ஜனநாயக சுதந்திரங்களையும் உரிமைகளையும் கொண்ட குடிமக்களாக (Citizens) ஒன்றிணைத்தன. அதாவது புவியியல் இடப்பரப்பு (Territoriality), தாராண்மை ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையிலான ஒன்றுபட்ட மக்கள் சமூகம் என்ற இரண்டினையும் கலப்புச் செய்த அடையாளத்தையுடைய அரசுகள் உருவாக்கப்பட்டன. இவ்வகைத் தேசியவாதத்தைக் குடிமக்கள் தேசியவாதம் (Civil Nationalism) என வரையறை செய்யலாம். குடிமக்கள் தேசியவாதத்தின் இப்பண்பினை ஆங்கிலத்தில் ‘Conflation of Territoriality and Liberal Values into One Identity’ என நவரட்ண பண்டார அவர்கள் வருணிக்கின்றார் (பக். 284). 18 ஆம் நூற்றாண்டில் உருவான தேசிய அரசுகள் ‘குடிமக்கள் தேசியவாதம்’ என்னும் அடிப்படையில் மக்கள் சமூகங்களை ஒன்றிணைக்கும் ஒற்றை அடையாளமுடையனவாக அமைந்தன. 19 ஆம் நூற்றாண்டில் பல்லின மக்கள் சமூகங்களைக் கொண்ட மத்திய ஐரோப்பாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் தேசிய அரசுகள் உருவாக்கம் பெற்ற பொழுது அவை ‘இனத்துவ தேசிய அரசுகள்’ (Ethnic Nations) என்னும் இயல்பை உடையனவாய் அமைந்தன. இவ்வகை அரசுகள் பெரும்பான்மை இனக்குழுமத்தின் தேசியவாதத்திற்கு முதன்மையளிக்கும் தேசியவாதங்களாயின. குடிமக்கள் தேசியவாதம் அரசியல் அடிப்படையில் தேசிய அரசுகளைக் கட்டமைத்தது; இனத்துவ தேசியவாதம் இனத்துவ அடிப்படையில் இனத்துவ அரசுகளைக் (Ethnic Nations) கட்டமைத்தது. அந்தனி டி சிமித் என்னும் அறிஞரை மேற்கோள் காட்டும் நவரட்ண பண்டார பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
Anthony D. Smith defined politically motivated nation states in the 18th century as civil nations’ and ethnically motivated nation states in the 19th century as ethnic nations to distinguish between civil nationalism and ethnic nationalism (Smith 1988:140-142) ஐரோப்பாவின் இரு நூற்றாண்டு வரலாறு இரண்டு வகை தேசிய – அரசு (Nation – State) மாதிரிகளை உருவாக்கியது.
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் தேசிய அரசுகளைக் கட்டமைப்பதற்கான மாதிரியாக இனத்துவ அரசுகள் (Ethnic Nations) அமைந்தன. பன்மை இனத்துவச் சமூகங்களில் (Multi Ethnic Societies) அரசியல் அணி திரட்டலில் (Political Mobilisation) இனத்துவ தேசியவாதம் மேலாதிக்கம் பெற்ற கருத்தியலாகச் (Dominant Ideology) செயற்பட்டது. இனத்துவ தேசிய அரசுகள் மேற்கு ஐரோப்பாவின் குடிமக்கள் அல்லது பிரஜைகளின் பிரதேசம் (Territory) என்ற மாதிரியில் அமைந்த தேசியவாதத்தில் இருந்து வேறுபட்டனவாய் அமைந்தன.
இனத்துவ தேசியவாதத்தின் அடிப்படைப் பண்புகளை அந்தனி டி சிமித் என்னும் அறிஞரை மேற்கோள் காட்டி நவரட்ண பண்டார பின்வருமாறு வரையறை செய்கிறார்:
அ) ஒருவரின் பிறப்பினதும், மரபுரிமையினதும் வழியிலான அடையாளத்தை முதன்மைப்படுத்தல் (Genealogy for National Belonging).
ஆ) மொழி, வழமைகள், சமய வழிபாட்டு முறைகள் ஆகிய பண்பாட்டு அடையாளங்களை முதன்மைப்படுத்தல்.
இ) சுதேசிய இனத்துவ வரலாறு (Nativist Ethno History), நாட்டார்களின் கூட்டு நினைவுகள் (Shared Folk Memories) என்பனவற்றை வலியுறுத்துதல்.
ஈ) வெகுஜனங்களை அணிதிரட்டுவதற்காக மேற்குறிப்பிட்ட அடையாளங்களின் அடிப்படையில் மக்களை ஒன்றுதிரட்டி, தேசத்தின் உண்மையான குரல் (Authentic Voice of the Nation) இதுவென இனத்துவ தேசியவாதத்தை முன்னிறுத்தல்.
இனத்துவ தேசியவாதத்தின் மேற்குறித்த வெளிப்பாடுகளை தாராண்மைவாதம் (Liberalism) ஏற்க மறுத்து நிராகரித்தது. தாராண்மைவாத நோக்கிலான விமர்சனம் இனத்துவ தேசியவாதத்தின் இயல்புகள் தாராண்மைவாத இலட்சியங்களுக்கு (Liberal Ideals) நேர்எதிரானது என்பதைச் சுட்டிக்காட்டியது. நபர் ஒருவரின் பிறப்பின் அடிப்படையிலான பிணைப்புகளை முதன்மைப்படுத்தி தேசிய ஒற்றுமையை உருவாக்கும் செயற்திட்டம் ஏற்புடையதல்ல. தாராண்மை விழுமியங்களின் (Liberal Values) அடிப்படையில் மக்களை ஒற்றுமைப்படுத்தும் தேசிய ஒற்றுமையே ஒற்றுமையான தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கான வழி எனத் தாராண்மைவாதிகளின் வாதங்கள் அமைந்தன. இனத்துவ தேசியவாதம் மேலாதிக்கம் பெற்ற தேசிய இனத்துடன் மேலாதிக்கம் செய்ய முடியாத இனத்துவக் குழுக்களையும் (Non-Dominant Ethnic Groups), சிறுபான்மை இனங்களையும், போட்டியில் ஈடுபடவும் மோதலில் ஈடுபடவும் தூண்டுகிறது. இதனால் ஜனநாயக இலக்குகள் அடையப்பட முடியாதனவாகின்றன.
ஜனநாயகமும் இனநாயகமும்
அரசியல் யாப்புச் செயல்முறையில் (Constitutional Mechanism) ஒரு இனக்குழுமத்தின் மேலாதிக்கத்திற்கு இடமளிக்கும் போது உருவாக்கம் பெறும் அரசுகளை ஜனநாயகத்தின் (Democracy) அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட அரசுகள் என வருணிக்க முடியாது. அவற்றை இனநாயக அரசு (Ethnocracy) என அழைத்தலே பொருத்தமுடையது எனக் கருதிய அரசியல் ஆய்வாளர்கள் ‘எத்னோகிறசி’ என்னும் எண்ணக்கருவை அறிமுகம் செய்தனர். இனநாயக அரசுகளையும் அவற்றின் அரசியலமைப்பினையும் ‘Ethnic Constitutional Orders’ என்ற ஆங்கிலத்தொடர் விளக்குவதாக உள்ளது. ஜனநாயகம், இனநாயகம் என்னும் கருத்தாக்கங்களிற்கிடையிலான வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டும் நவரட்ண பண்டார அவர்கள் இரண்டு அரசு மாதிரிகளை அறிமுகம் செய்கிறார்.
அ) இனநாயக அரசு மாதிரி (State Model Based on Ethnocracy).
ஆ) இனத்துவ ஜனநாயக அரசு மாதிரி. இம்மாதிரியை ஆங்கிலத்தில ‘Ethnic Democracy’ என அழைக்கலாம்.
முதலாவதான இனநாயக அரசு மாதிரிக்கு நடைமுறை உதாரணமாக இஸ்ரேல் அரசு விளங்குவதை ‘Yiftachel’ என்னும் ஆய்வாளர் விளக்கியிருப்பதைக் குறிப்பிடுகிறார் (அவ்வறிஞரின் ‘Democracy or Ethnocracy : Territory and Settler Politics in Israel/ Palestine Middle East Report No 207’ (Summer) 8-13 என்னும் கட்டுரை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது – பக். 285). எத்னோகிறசி அல்லது இனநாயகம் என அழைக்கப்படும் அரசு முறையின் முக்கிய இயல்புகள் பின்வருவன:
அ) இனநாயக அரசு அரசியல் யாப்புச் சட்டப்படியாக அமைக்கப்படுவது
ஆ) அவ்வரசு ஒரு இனக்குழுமத்தை மையப்படுத்திய (Ethnocentric) அரசு ஆகும்.
இ) அவ்வரசு ஒரு குறிப்பிட்ட இனக்குழுமத்தை அரசின் ‘Core Nation’ என அடையாளப்படுத்துவதோடு அரசின் ஆட்சி எல்லைக்குள் வாழும் ஏனைய இனக்குழுமங்களை அந்நியப்படுத்துகிறது.
மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஒரு ஜனநாயக அரசு எனத் தன்னைப் பிரகடனப்படுத்தும் இஸ்ரேலிய அரசு, யூதர்களுக்குச் சார்பாகவும், பலஸ்தீனியர்களுக்கு எதிராகவும் பாரபட்சமான கொள்கைகளை (Ethnically Biased Policies) நடைமுறைப்படுத்தும் அரசு என்பதை ‘Yiftachel’ எடுத்துக் காட்டியிருப்பதை நவரட்ண பண்டார குறிப்பிடுகின்றார்.
இரண்டாவதான இனத்துவ ஜனநாயக அரசு (Ethnic Democracy) என்ற மாதிரி ‘Smooha’ (சுமுகா) என்னும் அறிஞரின் கண்டுபிடிப்பாகும். இந்த மாதிரியை விளக்குவதற்கு Smooha அவர்களும் இஸ்ரேல் நாட்டையே உதாரணமாகக் கொள்கிறார். ‘Yiftachel’ குறிப்பிடுவது போல் இஸ்ரேல் இனநாயகம் அன்று; அது ஜனநாயத்தையும், இனத்துவ தேசியவாதத்தையும் ஒன்றிணைக்கும் இனத்துவ ஜனநாயக அரசு மாதிரி (Ethnic Democracy Model) எனக் குறிப்பிடுகிறார். அவரது வாதத்தின் சாராம்சம் : இஸ்ரேலிய அரசு யூதர்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்குகிறது. அதே வேளை அது பலஸ்தீனர்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கிறது. தாராண்மைவாத ஜனநாயகம், இன ஒடுக்குமுறை என்ற முரண்பட்ட இரு விடயங்களை அரசுக்கட்டமைப்புக்குள் ஒன்றிணைப்பதை இஸ்ரேல் அரசு சாதித்துள்ளது. முன்னாள் தென் ஆபிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கை அரசு (Apartheid South African State) இஸ்ரேலை ஒத்த ஒரு வகை இனத்துவ ஜனநாயக அரசு ஆகும் என Smooha குறிப்பிடுகின்றார். ஜனநாயக முறைப்படி தேர்தல்களை நடத்துவது, குடியியல் உரிமைகளை வழங்குவது ஆகிய ஜனநாயகச் சலுகைகள் அனைத்தையும் யூதர்களுக்கு இஸ்ரேல் வழங்குகிறது. அதேவேளை இவ்வுரிமைகள் பலஸ்தீனர்களுக்கு மறுக்கப்படுகிறது. முன்னாள் தென் ஆபிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கை அரசும், டச்சு போயர் குடியேறிகளுக்கு ஜனநாயக அரசாகவும், தென் ஆபிரிக்காவின் பிற இனங்களுக்கு ஜனநாயகத்தை மறுக்கும் அரசாகவும் விளங்கியது.
பெல்ஜியம், வட அயர்லாந்து, பொஸ்னியாவும் ஹெர்சகோனியாவும், தென் ஆபிரிக்கா, கொசோவா, சூடான் ஆகிய நாடுகளில் அண்மைக்காலத்தில் இனக்குழுமத் தேசியவாதம், பெரும்பான்மைவாத ஜனநாயகம் (Majoritarian Democracy) ஆகியவற்றின் தீயவிளைவுகளைத் தணிப்பதற்கும், இன நல்லிணக்கம், சமாதானம் என்பனவற்றை ஏற்படுத்துவதற்குமான ஜனநாயக மாற்றுவழிகள் (Democratic Alternatives) நடைமுறைப்படுத்தப்பட்டன. அம்மாற்று வழிகள் தொடர்பான கருத்தாக்கங்கள் சில பின்வருமாறு (பக். 287) :
- கொன்சோசியேசனல் ஜனநாயகம் (Consociational Democracy)
- பிரதேச சுயாட்சி (Territorial Autonomy)
- பிளவுபட்ட சமூகங்களில் முரண்பாடுகளைத் தீர்த்தல் (Conflict Resolution in Divided Societies)
இலங்கையின் அரசியல் யாப்பு வளர்ச்சி 1833 – 1948
இலங்கையில் ‘பிரதிநிதித்துவ அரசாங்கம்’ (Representative Government) என்னும் ஜனநாயக முறையின் அடிப்படைக் கருத்துகள் 1833 இல் கோல்புறூக் கமெரன் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் ஊடாகப் புகுத்தப்பட்டன. அக்காலம் முதல் இலங்கை சுதந்திரமடைந்த ஆண்டான 1948 வரை, தாராண்மைவாத சுதந்திரங்களும், ஜனநாயக பிரதிநிதித்துவ நிறுவனங்களும் படிப்படியாக இலங்கையில் வளர்ச்சியுற்றன. 1833 இல் கொண்டுவரப்பட்ட நீதித்துறைச் சீர்திருத்தங்கள் தனிநபர்களைச் சமூகத் தளைகளில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக நபர்களுக்கான சுயாதீன இயங்குதலை (Personal Autonomy) வழங்கியது. பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான முயற்சியாண்மையை (Entrepreneurship) ஊக்குவித்தலுக்கு இத்தனிநபர் சுயாதீன இயக்கம் அவசிய முன்தேவையாக இருந்தது. பொருளாதார சுதந்திரத்தைச் சுயாதீன இயக்கத்தின் மூலம் பெற்றுக்கொண்ட தனிநபர்கள் படிப்படியாக, சிவில் உரிமைகளான (Civil Rights) ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், விருப்பப்படி எவ்விடத்திற்கும் சென்று வருவதற்கான சுதந்திரம், கருத்துத் தெரிவிப்பதறகான சுதந்திரம், சொத்துகளை உடைமையாக வைத்திருப்பதற்கான சுதந்திரம் என்பவற்றைப் பெற்றுக்கொண்டனர். இச்சுதந்திரங்களை மக்களுக்கு வழங்குவது பிரித்தானியாவின் வர்த்தக, தொழில் நலன்களுக்கு அவசியமானதாகவும் இருந்தது. ஆயினும் 1833 இன் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் அரசியல் பங்கேற்றலுக்கான (Political Participation) வாய்ப்புகளை இலங்கையின் சிறு குழுவான உயர்குழாமுக்கே (Elites) வழங்கியது. இலங்கையின் உயர்குழாமின் பிரதிநிதிகள் சட்ட ஆக்க விடயங்களில் ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டனர். மிகக் குறைந்த மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையுடைய நியமனப்பிரதிநிதித்துவ முறை (Nominated Representation) புகுத்தப்பட்ட போது, பிரித்தானியர் இலங்கையின் பிரதான இனக்குழுமங்களை அடையாளம் கண்டு, முக்கிய இனக்குழுமங்களைச் சேர்ந்த உயர்குடும்பங்களில் இருந்து ஆட்களைத் தெரிவு செய்து நியமனம் செய்தனர். இந் நியமனமுறை இனத்துவ அடையாள உணர்வையும் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய அரசியலையும் (Ethnocentric Politics) தோற்றுவித்தது. தனிநபர் சுயாதீனம், பொருளாதார சுதந்திரம் என்பன புதிய சமூக வர்க்கங்களை உருவாக்கியது. புதிய சமூக இயக்கங்கள் (Social Movements) வளர்ச்சியுற்ற போது இனத்துவ உணர்வுநிலை (Ethnic Consciousness) வெகுஜனங்களிடமும் கிளர்ந்தது. 1911 இற்கும் 1931 இற்கும் இடைப்பட்ட காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் சட்டசபைகளில் (Legislative Councils) சுதேசிகளான இலங்கையர்களின் உயர்குழாம் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. இப்பிரதிநிதிகளை நியமிப்பதில் பிரித்தானிய அரசு இனவிகிதாசார முறையைக் (Ethnic Ratio) கையாண்டது. இதன் விளைவாக இலங்கையின் அரசியல் உயர்குழுக்களிடையே (Political Elites) இனத்துவ அடிப்படையிலான போட்டி ஏற்பட்டது. 1931 டொனமூர் சீர்திருத்தம் சர்வசன வாக்குரிமையை வழங்கியது. நியமனமுறைக்குப் பதிலாக தேர்தல் மூலம் சட்ட சபைக்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படலாயினர். 1911-1931 காலத்தில் இன அடிப்படையில் பிளவுபட்டிருந்த அரசியல் உயர்குழாம், 1931-1947 காலப்பகுதியிலும் அரசியல் அதிகாரத்தைத் தமக்கிடையே பகிர்ந்து கொள்வதில் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டது. இம்முரண்பாடுகள் பொதுஜனங்கள் மத்தியிலும் தேர்தல் அரசியல் ஊடாகப் பரவி இனத்துவ முரண்பாடுகளை அதிகரித்தன.
இரு அரசியலமைப்பு மாதிரிகள்
இன முரண்பாடுகள் இலங்கையில் அதிகரித்துக் கொண்டு சென்ற பின்புலத்தில் இலங்கையில் காலனிய அரசாங்கத்தால் இரண்டு அரசியலமைப்பு மாதிரிகள் (Constitutional Models) அறிமுகம் செய்யப்பட்டன. அவையாவன:
- நிர்வாகக்குழு முறையைக் (Executive Committee System) கொண்டதான டொனமூர் அரசியல் திட்டம் – 1931.
- பெரும்பான்மை – சிறுபான்மை மாதிரியில் (Majority – Minority Model) அமைந்த சோல்பரி அரசியல் திட்டம் – 1947
முதலாவதான டொனமூர் அரசியல் திட்டம் நிருவாகக் குழுக்கள் மூலம் சட்டசபை உறுப்பினர்களுக்கு நிருவாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் (Sharing of Executive Powers) செயல்முறையை நடைமுறைப்படுத்தியது. இம்முறை எதிர்பார்த்த வெற்றியை அளிக்காதபடியால் ஏறக்குறைய 17 ஆண்டுகள் கழிந்தபின் பாராளுமன்ற மந்திரிசபை முறை (Cabinet Parliamentary System) இலங்கையில் அறிமுகமாகியது. பெரும்பான்மை – சிறுபான்மை (Majority – Minority) எதிர்நிலையால் சிறுபான்மை இனங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை நீக்குவதற்காக சோல்பரி அரசியல் யாப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் (Constitutional Safeguards) உள்ளடக்கப்பட்டன. இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்த போது உருவாக்கம் பெற்றிருந்த அரசியல் அமைப்பின் பிரதான இயல்புகள் பின்வருவன:
அ) சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான பாரபட்சம் காட்டுதலை தடுப்பதற்கான அரசியல் யாப்புப் பாதுகாப்புகள் (The Safeguards for Non-Discrimination) உள்ளடக்கட்டிருந்தன.
ஆ) சிறுபான்மையினருக்கான அரசியல் யாப்புப் பாதுகாப்புகளில் முதன்மையானதாக சோல்பரி அரசியல் யாப்பின் 29 ஆவது பிரிவு அமைந்தது.
இ) பெரும்பான்மை – சிறுபான்மை உறவுகளை இனத்துவக் குழுக்களிற்கிடையிலான சமத்துவம் (Inter Group Equality) என்னும் தத்துவத்தின் அடிப்படையில் இணக்கம் செய்வதை இலக்காகக் கொண்டிருந்தது.
ஈ) தாராண்மைவாத விழுமியங்களான (Democratic Values) சமத்துவம், சுதந்திரம், உரிமைகள் என்பன அரசியல் யாப்பின் உயர் இலட்சியங்களாக அமைந்தன.
1948 இல் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்குவதற்கு சில மாதங்கள் முன்பாகவே இலங்கையின் பெரும்பான்மைச் சிங்கள அரசியல் உயர் குழுக்களும், சிறுபான்மை இனத்து அரசியல் உயர் குழுக்களும் ஒற்றுமைப்பட்டு ஓரணியில் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை (National Unity Government) அமைக்கவும், பிரித்தானியரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் முன்வந்தன. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் (ACTC) என்னும் தமிழ் அரசியல் கட்சி டி.எஸ். சேனநாயக்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தமை ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகும். ஜி.ஜி. பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வழங்க முன்வந்த ஒத்துழைப்பை அரசியல் ஆய்வாளர் ஏ.ஜே. வில்சன் ‘Responsive Cooperation’ கொள்கை என அழைத்தார். “பெரும்பான்மைத் தரப்புக்கு நீதியாகவும், நியாயமாகவும் நடந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவோம்” என்ற நம்பிக்கையின் அடிப்படையிலான ஒத்துழைப்பு என இக்கொள்கையை விளக்கிப் பொருள் கொள்ளலாம் எனவும் ஏ.ஜே. வில்சன் குறிப்பிட்டார். 1948 இல் முரண்பட்டு நின்ற இரண்டு இனக்குழுமங்கள் ஒற்றுமைப்பட்டு ஒரு சமூக ஒப்பந்தத்தைச் (Social Contract) செய்துகொண்டன.
சோல்பரி அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த சிறுபான்மையினருக்கான காப்பீடுகள் (Minority Safeguards) இச் சமூக ஒப்பந்தத்திற்கு அடிப்படையாக அமைந்தன. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் (ACTC) என்னும் தமிழ் அரசியல் கட்சி டி.எஸ். சேனநாயக்கவின் அரசாங்கத்திற்கு மேற்குறித்த சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த நம்பிக்கையின்படி ஆதரவு வழங்கியது. இச்சமூக ஒப்பந்தம் மீறப்பட்ட போது சிங்கள – தமிழ் உறவுகள் மோசமடைந்தன.
தொடரும்.