ஆங்கில மூலம் : நவரட்ண பண்டார
இனத்துவ மேலாண்மை முறை
மில்டன் ஜே. எஸ்மன் (Milton J. Esman) என்னும் அரசியல் அறிஞரின் இனத்துவ மேலாண்மைமுறை (Ethnic Dominance System) என்னும் எண்ணக்கருவை இலங்கையின் இனத்துவ அரசியல் வரலாற்றை விளக்குவதற்கு பிரயோகிக்கும் நவரட்ண பண்டார அவர்கள், இலங்கையில் சிங்களப் பெரும்பான்மை இனக்குழுமம் மேலாண்மை பெற்ற இனமாகவும், சிறுபான்மை இனமான தமிழ் இனம் மேலாண்மை இனத்திற்குக் கீழ்ப்பட்ட சிறுபான்மை இனமாகவும் (Subordinate Minority) மாற்றம் பெற்றதை அடுத்து விளக்குகிறார். நூலின் 304 – 305 ஆகிய இரு பக்கங்களில் அவர் கூறியிருக்கும் கருத்துகளை எளிமைப்படுத்திய விளக்கமாகக் கீழே தந்துள்ளோம்.
1. மக்கள்வாத அரசியல் நிகழ்ச்சி நிரல்
இனத்துவ மேலாண்மை முறையின் தொடக்கம் 1948 ஆயினும், 1956 இல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ‘மகாஜன எக்சத் பெரமுன’ அரசாங்கம் அம்முறையினைக் கட்டி வளர்க்கும் திட்டத்தைத் தீவிரப்படுத்தியது. எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் தலைமையிலான அவ்வரசாங்கத்தின் செயல்திட்டத்தை நவரட்ண பண்டார அவர்கள் “மக்கள்வாத அரசியல் நிகழ்ச்சி நிரல்“ (Populist Political Agenda) எனக் குறிப்பிடுகிறார். சிங்கள அரசியல் உயர்குழாம் சிங்கள வெகுஜனங்களை தமது தலைமையில் அணி திரட்டுவதற்காக இரு தந்திரோபாயங்களைக் கையாண்டது. முதலாவதாக, இலங்கையின் பெரும்பான்மைச் சமூகமான சிங்களச் சமூகம் இலங்கை அரசின் பாகமாக அமையும் பிரதான சமூகம் (Core Nation of the State) என்ற உணர்வை பிரசாரம் மூலம் சாதாரண மக்கள் மனதில் வேரூன்றச் செய்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் ‘அப்பே ஆண்டுவ’ (எமது அரசு) என்ற உணர்வு சாதாரண சிங்கள மக்கள் மனதில் ஊட்டப்பட்டது. மறுவழமாகப் பார்த்தால் தமிழ்ச்சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கையின் அரசில் இருந்து உளவியல் ரீதியாக அந்நியப்படுத்தப்பட்டனர். அவர்களால் ‘அப்பே ஆண்டுவ’ என்ற உரிமை உணர்வைப் பெற முடியவில்லை.
அரசின் பொருளாதார – சமூக நலத்திட்டங்கள் மூலம் சமூகநீதி சார்ந்த பயன்களை சாதாரண மக்களிற்கும் கிடைக்கச் செய்தமை, ‘மக்கள் வாதம்’ எனப்படும் (பொப்பூலிஸ்ட்) அரசியல் நிகழ்ச்சி நிரல் திட்டத்தின் இரண்டாவது தந்திரோபாயமாகும். இவ்வாறான சமூகநீதிசார் நலத்திட்டங்களைச் (Social Justice Oriented Welfare Based Development Programmes) செயற்படுத்துவதற்காக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பொருளாதாரத் துறைகளைக் கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்தது. பொருளாதாரத் துறைகள் மீது அரசின் ஆதிக்கம் உள்ள நிலையை, ‘அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொருளாதாரம்’ (Command Economy) என்ற சொல்லால் வருணித்தல் பொருத்தமுடையது. 1948 – 1956 காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி கடைப்பிடித்த தாராண்மைவாதப் பொருளாதாரக் கொள்கைக்கு இது மாறானது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குறித்த இரு தந்திரோபாயங்களின் மூலமும் சிங்கள அரசியல் உயர்குழாம் இலங்கையின் அரசு அதிகாரக் கட்டமைப்பில் முக்கிய நிலைகளில் தன் அதிகாரத்தை வலுப்படுத்தி இனத்துவ மேலாண்மை முறையை வலுப்படுத்தியது.
2. உளவியல் ரீதியான தாழ்நிலை
இனத்துவ மேலாண்மை முறையின் முக்கிய இயல்புகளில் ஒன்று சிறுபான்மை இனங்களிடம் உளவியல் ரீதியான தாழ்நிலை (Psychological Subordination) ஏற்படுத்தப்படுவதாகும். இக்கருத்தை விளக்கும் நவரட்ண பண்டாரவின் கூற்று பின்வருமாறு: “The imposition of psychological subordination of the minorities by unleashing communal violence and the rejection of power – sharing compromises also played an initial role in the ethnic dominance system” இவ்வாக்கியத்தின் பொருளை விளக்கும் வகையில் அமைந்துள்ள ஓர் பந்தியில் கூறப்பட்டிருப்பவை வருமாறு:
1956, 1958 ஆகிய இரு ஆண்டுகளிலும் 1966 இலும் இனவன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. சிறுபான்மையினர் மீதான இதன் உளவியல் தாக்கம் அவர்களிடம் தாம் தாழ்ந்த நிலை சமூகம் என்ற ‘உளவியல் தாழ்நிலையை’ உருவாக்கியது. 1957 இலும் 1968 இலும் அதிகாரப்பகிர்வு, தமிழ் மொழி உரிமைகள் என்பன தொடர்பாக சிறுபான்மையினர் இணக்கமான சமரச உடன்பாட்டைச் செய்துகொள்ள முன்வந்தனர். அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இந்நிராகரிப்பும் அவர்களது உணர்வு நிலையில் தாம் சமத்துவமான இனக்குழுமம் அல்ல, ஒரு தாழ்நிலைச் சமூகம் என்ற உளவியலை உருவாக்கியது.
3. சமூகவள அதிகாரம் இழக்கப்படுதல்
1956 இற்குப் பிற்பட்ட காலத்தில் சிறுபான்மைத் தமிழ்ச்சமூகம் சமூக வள அதிகாரத்தை (The Social Resources of Power) இழந்தது என்பதை நவரட்ண பண்டார அவர்கள் அடுத்து விளக்கிக் கூறுகிறார். சிறுபான்மை இனத்தின் உயர்குழாங்களிடம் கல்வி, தொழில் முயற்சிகள், வர்த்தகம் (Education, Business, and Trade) என்ற துறைகளில் இருந்து வந்த சமூக மூலதனம் இழக்கப்படும் நிலை உருவானது. தமிழ் புத்திஜீவிகளும் (Intelligentia) வர்த்தகர்களும், தொழில் முயற்சியாளர்களும் 1956 – 1977 காலத்தில் பலமிழந்தனர். 1970 களில் தரப்படுத்தல் புள்ளியிடுதல் முறை மூலம் விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் தமிழ் மாணவர்களின் நுழைவு தடுக்கப்பட்டது. இது பற்றிப் பேசும் C.R. De சில்வா என்னும் அறிஞரின் ‘The politics of University Admissions (The Journal of Social Sciences ; 1: 85-123)’ என்னும் ஆய்வுக்கட்டுரையை உசாத்துணையாகக் குறிப்பிடுகிறார். வர்த்தக, தொழில் முயற்சிகளில் தமிழ் உயர்குழுக்களின் பங்கினை 1970 – 1976 காலத்தில் ஏற்றுமதி – இறக்குமதித் துறையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், அரச ஏகபோக நிறுவனங்களும் (State Monopolies) குறைத்து விட்டதையும், சிறுபான்மை இனங்களின் வர்த்தக முயற்சிகள் பலமிழக்கச் செய்யப்பட்டதையும் நவரட்ண பண்டார குறிப்பிடுகிறார். இந்நடவடிக்கைகள் நடுத்தர வர்த்தகர்களாகவும் தொழில் முனைவோராகவும் இருந்த பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தவர்களை ‘தொழிற்துறை அதிபர்கள்’ (Captains of industry) என்ற நிலைக்கு உயர்த்தியது எனக் குறிப்பிடுகிறார். நியூட்டன் குணசிங்கவின் வாக்கியத்தை இதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டுகிறார்.
”…..The Period of state regulation and import substitution provided the background to the upliftment of a fair section of middle level Sinhalese entrepreneurs to the position of captains of Industry” (பக். 305).
4. சர்வாதிகார ஜனாதிபதிமுறைத் தலைமைத்துவம்
மேற்குறிப்பிட்ட மூன்று செயல்முறைகள் ஊடாக இலங்கையில் உருவாக்கம் பெற்ற இனத்துவ மேலாண்மைமுறை 1977 இற்குப் பின்னர் சர்வாதிகார ஜனாதிபதிமுறைத் தலைமைத்துவம் (Authoritarian Presidential Leadership) மூலம் மேலும் பலப்படுத்தப்படுவதை நவரட்ண பண்டார அவர்கள் எடுத்துக் காட்டுகிறார் (பக். 305).
இனத்துவ மேலாண்மை முறையும் சர்வாதிகார ஜனாதிபதி முறையும் ஒன்றிணைந்த அரசியல்முறை 1978 இல் உருவானது. அப்போது விதிவிலக்கான ஜனநாயக அம்சங்கள் சிலவும் அரசியல் யாப்பில் புகுந்தன என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும். 1978 அரசியல் யாப்பு அடிப்படை உரிமைகளையும் மொழி உரிமைகளையும் இலங்கையின் சிறுபான்மையினர் உட்பட எல்லாப் பிரஜைகளுக்கும் வழங்கியது. சிங்களமும் தமிழும் தேசிய மொழியாக்கப்பட்டன. ஆயினும் இந்த ஜனநாயக மாற்றங்கள் மேற்பூச்சு நடவடிக்கைகளாகவே அமைந்தன. தமிழ் பிரிவினைவாத தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் சிறுபான்மை இனத்தவர்களினதும் சாதாரண மக்களினதும் ஜனநாயக உரிமைகளும் மனித உரிமைகளும் மீறப்பட்டன.
5. உறுதியற்ற அரசியல்நிலை
இனத்துவ மேலாண்மைமுறை நிறுவனமயப்படுத்தப்பட்டுத் தாபிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் உறுதியற்ற அரசியல் நிலை உருவானது. சர்வாதிகார ஜனாதிபதி முறையின் கீழ் இலங்கையில் இளைஞர் கிளர்ச்சிகள், இனத்துவ வன்முறைகள் (Ethnic Pogroms), இனக்கலவரங்கள் (Communal Riots), சமய வன்முறை, பயங்கரவாதம் என்பன தொடர்ந்து இடம்பெற்றன. இவ்வாறான வன்முறைகளால் ஏற்பட்ட அரசியல் உறுதியற்ற நிலை பிராந்திய அரசுகள், உலக அரசுகள், பயங்கரவாத அமைப்புகள் என்பன இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதற்கு வழிதிறக்கப்பட்டது.
சர்வாதிகார நிர்வாகிகள்
1972 முதலாவது குடியரசு அரசியல் யாப்பு பிரதமர் பதவியில் உள்ளவரைச் சர்வாதிகாரியாக ஆக்கியது. பாராளுமன்றம், மந்திரிசபை ஆகிய அனைத்து அரச அங்கங்களிலும் மேம்பட்ட அதிகாரமுடைய சர்வாதிகாரியாக 1972 – 1977 காலத்தில் பிரதமர் விளங்கினார். 1978 இன் அரசியல் யாப்பு நிறைவேற்று ஜனாதிபதிமுறை என்னும் சர்வாதிகார முறையை உருவாக்கியது. இக்காரணத்தால் 1972 இற்குப் பின்னர் இலங்கையில் பதவிக்கு வந்தவர்களான அரசாங்கங்களின் தலைவர்கள் (Head of Government) சர்வாதிகாரிகளாகவே ஆட்சி செய்தனர். இவ்விரு அரசியல் யாப்புகளும் இனத்துவ மேலாண்மை முறையையும் நிருவாக சர்வாதிகாரத்தையும் (Executive Authoritarianism) ஒன்று கலந்தன. இவ்விரு அரசியல் யாப்புகளும் இன்னோர் அம்சத்தையும் இலங்கையின் அரசியல் முறையில் புகுத்தின. அவசரகால விதிகளையும், சட்ட ஆக்கங்களையும் ஆக்கும் அதிகாரத்தை நிர்வாகிக்கு வழங்கும் அரசியல் யாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அப்பதவியில் உள்ளவரின் தற்துணிவு அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன.
பொதுப் பாதுகாப்புச் சட்டம் (Public Security Ordinance), அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தவும், அவசரகால விதிகளை (Emergency Regulations) ஆக்கவும் அதிகாரத்தை வழங்கியது. முதலாவது குடியரசு யாப்பு பொதுப் பாதுகாப்புப் பற்றிய தனி அத்தியாயம் ஒன்றைக் கொண்டிருந்தது. இவ்வத்தியாயத்தின் ஏற்பாடுகளின்படி அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவதற்கான தேவை எழுந்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்கும், அவசரகால விதிகளை ஆக்குவதற்கும் உரிய முழு அதிகாரமும் (Sole Authority) பிரதமருக்கு வழங்கப்பட்டிருந்தன. 1978 இன் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தியது. இவ் அரசியல் யாப்பின் உறுப்புரைகள் 75, 84, 155 ஆகியன ஒடுக்குமுறை அவசரகால விதிகளையும், சட்டங்களையும் ஆக்கும் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தின.
சட்டங்களையும் விதிமுறைகளையும் ஆக்குவதில் சட்டசபையின் கண்காணிப்பு (Legislative Oversight), நீதித்துறையின் கண்காணிப்பு (Judicial Oversight) என இரண்டு தடைகள் உள்ளன. அத்தடைகளை அகற்றி அவசரகால விதிகளையும் தேவைக்கேற்றபடி சட்டங்களையும் ஆக்கும் அதிகாரம் பெற்றவர்களான இலங்கையின் அரசுத் தலைவர்கள் 1971 முதல் தொடர்ச்சியாகவே இலங்கையை அவசரகால நிலையில் வைத்திருந்து ஆட்சி செய்து வந்துள்ளனர். 1980 களில் இனத்துவ முரண்பாடு நீண்டகால உள்நாட்டு யுத்தமாக மாறிய போது அரசின் கையில் ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்’ (PTA) என்ற ஆயுதமும் சேர்க்கப்பட்டது. பொதுப் பாதுகாப்புச் சட்டம் (PSO), பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) என்ற இரண்டின் சேர்க்கையான சர்வாதிகாரம் பிரஜைகளின் சிவில் உரிமைகளையும் அரசியல் உரிமைகளையும் எழுந்தமான முறையில் மீறுவதற்கு இடமளித்ததை நூலின் இரு பக்கங்களில் (பக். 308 – 309) நவரட்ண பண்டார விளக்கியுள்ளார். அவரது கூற்று ஒன்று பின்வருமாறு:
“Thus through the exercise of powers under the PSO and PTA, the successive government made the ethnic dominance system into a repressive constitutional order not only for minorities but also for all citizens irrespective of their ethnic identity and became a generalized and regular feature of the country’s state citizens relations.”
இதன் பொருளைத் தமிழில் பின்வருமாறு விளக்கிக் கூறலாம்:
“PSO + PTA அதிகாரங்களை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் உபயோகித்தன; இவ்வதிகாரங்களுடன் இணைந்த இனத்துவ மேலாண்மைமுறை சிறுபான்மையினரை மட்டும் ஒடுக்குவதாக அல்லாது பெரும்பான்மையினரான சிங்களவரையும் ஒடுக்குவதாக அமைந்துள்ளது. இது மொழி, மத, இனம் முதலிய அடையாள வேறுபாடு இன்றி அனைத்துப் பிரஜைகளையும் ஒடுக்கும் அரசியலமைப்பாக உருவாக்கம் பெற்றுள்ளது. அரசுக்கும் பிரஜைகளுக்கும் இடையிலான உறவு ஒடுக்குவோர் – ஒடுக்கப்படுவோர் உறவாக மாறியுள்ளது.
ஆகவே இன்று இலங்கையின் பிரச்சினை பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளும் சுதந்திரங்களும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் மறுக்கப்படும் அரசியல்முறை நிலைபெற்று இருப்பதே ஆகும். பெரும்பான்மை இனத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கென்று உருவாக்கப்பட்ட பெரும்பான்மைவாத ஜனநாயகமுறை (Majoritarian Democratic System) பெரும்பான்மையினராலேயே வெறுக்கப்படும் நிருவாக சர்வாதிகாரமாக (Executive Authoritarianism) மாற்றம் பெற்றுள்ளதை சுதந்திரத்திற்குப் பின்னரான 76 ஆண்டுகால அரசியல் யாப்பு வரலாறு எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
அரசியல் தீர்வு முயற்சிகளின் வரலாறு
தமிழ் அரசியல் உயர் குழாத்தின் கோரிக்கைகளை ஏற்று இணக்கம் செய்து இலங்கையின் அரசியல் அமைப்பில் பெரும்பான்மைவாதத்திற்கு மாறான கூறுகளை (Non – Majoritarian Elements) புகுத்துவதன் மூலம் இனத்துவ மேலாண்மை முறையைத் திருத்தம் செய்வதற்கான முயற்சிகள் சில 1950 களில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சிங்கள பௌத்த தேசியவாதத் தீவிரவாதிகள் அத்தகைய ஒவ்வொரு முயற்சியையும் முறியடித்தனர்.
சிங்களம் மட்டும் சட்டத்தை இயற்றிய எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, அச்சட்டம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு கழிந்த பின் சமஷ்டிக் கட்சியின் (F.P) தலைமையுடன் 1957 இல் உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டார். பண்டா – செல்வா ஒப்பந்தம் என அழைக்கப்படும் இவ்வுடன்படிக்கை பெரும்பான்மைவாதத்திற்கு மாறான கூறுகள் பலவற்றைக் கொண்டிந்தது. பிராந்தியச் சுயாட்சி (Regional Autonomy) மூலம் அதிகாரப் பகிர்வு, சிறுபான்மையினரின் மொழியுரிமைகளை ஏற்றுக் கொள்ளல் என்பன இவ்வுடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டன. சிறுபான்மைச் சமூகங்களின் குழு உரிமைகளை (Group Rights) ஏற்றல் என்னும் தத்துவம் இவ்வுடன்படிக்கையில் உள்ளடக்கபட்டிருந்தது. பண்டா – செல்வா ஒப்பந்தம் பிராந்தியச் சபைகள் (Regional Councils) மூலமாக தமிழர்கள் பெரும்பான்மையினராக செறிந்துவாழும் பகுதிகளான வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்தல், பொதுத்துறை நிறுவனங்களிலும், நீதிமன்றுகளிலும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழை உத்தியோக மொழியாகவும் கல்வி மொழியாகவும் ஏற்றல், குடியேற்றத் திட்டங்களில் காணிகளைப் பகிர்ந்தளிப்பதில் பிராந்தியச் சபைகளிற்கு அதிகாரமளித்தல் ஆகியன பண்டா – செல்வா உடன்படிக்கையின் இலக்குகளாக இருந்தன.
பத்தாண்டுகளுக்கு முன்னர் பண்டா – செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராகத் தீவிர எதிர்ப்புப் பிரசாரத்தை நடத்திய டட்லி சேனநாயக்க 1965 ஆம் ஆண்டு ஏறக்குறைய பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் அம்சங்களை ஏற்றுக் கொள்ளும் இணக்கப்பாட்டினை சமஷ்டிக் கட்சித் தலைமையுடன் செய்துகொண்டார். அவர் சமஷ்டிக் கட்சியை தனது அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இணைத்துக் கூட்டரசாங்கம் ஒன்றை அமைத்தார். டட்லி – செல்வா இணக்கப்பாட்டில் மாவட்ட சபைகளை நிறுவுதல், வரிகளை அறவிடுதல் மூலமும் கடன்களைப் பெறுதல் மூலமும் அபிவிருத்திக்கான மாவட்ட நிதி (District Fund) ஒன்றை உருவாக்குதல் என்பன உள்ளடங்கியிருந்தன. 1958 தமிழ்மொழி (விசேட ஏற்பாடுகள்) ஏற்பாடுகள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதெனவும் இணங்கப்பட்டது.
1970 இல் பதவிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் சிங்கள – பௌத்த தீவிரவாதக் கொள்கைகளை முன்னெடுத்தது. இது தமிழ்த் தேசியவாத அரசியல் தீவிரவாதக் குழுக்களின் தோற்றத்திற்கு வழியமைத்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் 1980 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மாவட்ட அபிவிருத்திச்சபைகள் சட்டத்தை இயற்றியது. மாவட்ட சபைகளுக்கு நிதியீட்டுவதற்கும், நிர்வாகத்தை இயக்குவதற்குமான அதிகாரங்கள் இன்மையால் அவை தோல்வியில் முடிவடைந்தன.
அரசியல் யாப்புக்கான 13 ஆவது திருத்தம்
1987 ஆம் ஆண்டின் இந்தியா – இலங்கை ஒப்பந்தம் மேற்குறித்த 1957, 1965 ஒப்பந்தங்களையும், 1980 ஆம் ஆண்டின் மாவட்ட சபைகளை அமைக்கும் முயற்சியையும் அடுத்து வந்த முக்கியமான அரசியல் தீர்வு முயற்சியாகும். 13 ஆவது திருத்தம் பற்றிய முக்கியமான அம்சம் ஒன்றை நவரட்ண பண்டார குறிப்பிடுகிறார்.
மத்தியில் உள்ள அதிகாரங்களை மாநில/ மாவட்ட அலகுகளிற்குப் பகிர்ந்தளிக்கும் அதிகாரப் பகிர்வு (Devolution) இருவகைகளில் அமையலாம்.
அ) பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் (Act of Parliament) அதிகாரத்தை பகிர்ந்தளித்தல் ஒருமுறை. இதனை ஆங்கிலத்தில் ‘Statutory Devolution’ எனக் குறிப்பிடுவர்.
ஆ) அரசியல் யாப்புச் சட்டத்தை திருத்துவதன் மூலம் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல். இது அரசியல் யாப்பு ரீதியிலான அதிகாரப் பகிர்வு (Constitutional Devolution) எனப்படும். 13 ஆவது திருத்தம் இவ் இரண்டாவது வகையான அரசியல் யாப்பு ரீதியான திருத்தம் ஆகும். இந்த வேறுபாட்டின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொள்ளுதல் அவசியம். இந்திய – இலங்கை உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கைத் தமிழர்களின் வரலாற்று வாழ்விடம் (Historical Habitation of Tamils of Sri Lanka) என்ற கருத்தின் அடிப்படையில், 13 ஆவது திருத்தம் தற்காலிக ஒன்றிணைப்பிற்கும் வழியமைத்தது.
1987 முதல் 2020 வரை
1987 இல் அரசியல் யாப்பு ரீதியிலான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட்டது முதல் 2020 இல் 20 ஆவது அரசியல் திருத்தத்தின் மூலம் ‘ராஜபக்ச அரசின் தேசியவாத சர்வாதிகாரச் செயல்திட்டம்’ (Nationalist Authoritarian Project) நிறைவேற்றப்பட்டது வரையான அரசியல் யாப்புத் திருத்த வரலாற்றை பத்துக்கு மேற்பட்ட பக்கங்களில் (பக். 310 -320) நவரட்ண பண்டார அவர்கள் விரிவாக அலசுகிறார். அக்கால வரலாற்றைப் பற்றிய தமது அவதானிப்பை பின்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார் (பக். 317).
”இலங்கையின் இனத்துவ மேலாண்மை முறையும், சர்வாதிகார நிருவாக ஜனாதிபதி முறையும் மிகமிகச் சிக்கலான விடயமாகிவிட்டது; இம்முறைகளைத் திருத்திச் சீர்செய்வது இலங்கையின் ஜனநாயக சக்திகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. ஏறக்குறைய 50 – 60 ஆண்டுகளுக்கு முன்பே 1957 – 1967 காலத்தில் பிராந்திய சுயாட்சித் (Regional Autonomy) தீர்வு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அப்போதைய அதிகார உயர்குழுக்கள் (Power Elites) அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன. அக்குழுக்கள் இலங்கையில் தமது பெரும்பான்மைவாதத் தேசத்தைக் கட்டி வளர்த்தல் (Majoritarian Nation Building) என்னும் திட்டத்தில் இருந்து விலகிச் செல்ல விரும்பவில்லை. இலங்கையின் பின்காலனித்துவ கால அரசுக்கட்டமைப்பை மாற்றுதல் தொடர்பாக ஆரம்ப கட்டத்தில் உயர்குழுக்களிடம் இருந்த நடத்தைக் கோலத்தில், பிந்திய காலகட்டங்களிலும் மாற்றம் எதுவும் வெளிப்படவில்லை. இலங்கையின் இனத்துவ மேலாண்மை முறையையும், அதன் பின்விளைவுகளையும், திருத்தம் செய்து சீர்மை செய்ய முயற்சி எடுக்கப்பட்ட தருணங்களில் எல்லாம் இவ்வுயர் அதிகாரக் குழுக்கள் அரசியல் யாப்புத் திருத்தங்களிற்குத் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன. இக்காரணத்தால் 1987 இல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட மாகாணசபைகள் மூலமான அதிகாரப் பகிர்வு (Devolution) மட்டுப்படுத்தப்பட்டதாகவும், செயல்வலு அற்றதாகவும் (Restrictive and Ineffective) அமைந்தது. உண்மையில் மாகாணசபைகள் மூலம் நிறுவப்பட்ட நிறுவனங்கள் அதிகாரப் பகிர்வைச் செயற்படுத்துவதற்குப் பதிலாக மீள்–மத்தியப்படுத்தலுக்கான (Re-centralisation) கருவிகளாக உபயோகிக்கப்பட்டன. அதிகாரப் பகிர்வுக்கான மாகாணசபை முறையின் ஊடாக பிராந்திய சுயாட்சியின் எல்லைகளை விரிவாக்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்ட போதெல்லாம் அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அவ்வேளைகளில் பழைய இனத்துவ – தேசியவாத வாதாட்டங்கள் (Ethno – Nationalist Arguments) மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டன. இதனால் தாபிதம் பெற்றிருந்த இனத்துவ மேலாண்மை முறை புத்துயிர் பெற்றது. இவ்வாறே 1990 முதல் இடதுசாரிகள், வலதுசாரிகள், நடுப்போக்கினர் (Centrists) ஆகிய எல்லாத் தரப்பு சிங்களத் தலைவர்களும் நிருவாக அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் விருப்பம் காட்டிய போதும், இலங்கையின் அரசியல் யாப்பில் புகுந்து வேரூன்றியுள்ள இனத்துவ மேலாண்மைமுறையை ஒழிப்பதில் சிறிதளவேனும் அக்கறை செலுத்தவில்லை (எளிமைப்படுத்திய தமிழ் மொழிபெயர்ப்பு).”
இலங்கையின் அரசியல் முறையை முடமாக்கிவிட்ட ‘அக்கிலசின் குதிக்கால்’ (Achilles Heel) என வருணிக்கத்தக்க பலவீனமான இடம் ஒன்று உள்ளது என்பது வெளிப்படை. அதாவது இனத்துவ மேலாண்மை முறையையும், சர்வாதிகார நிருவாக ஜனாதிபதி முறையையும் ஒரே சமயத்தில் ஒழிப்பது என்பது முடியாத காரியமாக்கப்பட்டுவிட்டது. ஆகையால் கடந்த காலத்தின் தோல்விகளில் இருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என நவரட்ண பண்டார குறிப்பிடுகிறார் (பக். 317).
A.M. நவரட்ண பண்டார
பேராசிரியர் A.M. நவரட்ண பண்டார B.A, M.A, D.Phil (York) ஆகிய பட்டங்களைப் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரசியல் விஞ்ஞானம், பொது நிருவாக இயல் என்னும் இருதுறைகளிலும் புலமையாளரான பேராசிரியர் நவரட்ண பண்டார இலங்கையில் அதிகாரப்பகிர்வு, இலங்கையில் உள்ளூராட்சி முறை, இனத்துவ முரண்பாடுகளும் அரசியல் தீர்வும் ஆகிய விடயங்கள் குறித்துப் பல ஆய்வுகளை எழுதிப் பிரசுரித்துள்ளார். அவரது முக்கிய பிரசுரங்கள் இரண்டு கீழே தரப்பட்டுள்ளன.
- Management of Ethnic Secessionist Conflict: Big Neighbour Syndrome, Dartmouth, Publishers, Aldershot, 1995.
- Public Administration in South Asia : India, Bangladesh and Pakistan, Bocaration : CRC Press, Taylor and Francis Group, 2013.