இலங்கையில் எழுந்த தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் கீழைக்கரையின் வரலாறு, பண்பாடு பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றில் யாழ்ப்பாண வைபவ மாலை, வையாபாடல், கைலாயமாலை, கோணேசர் கல்வெட்டு, கைலாச புராணம், திரிகோணாசல புராணம், மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், நாடுகாட்டுப்பரவணி என்பன முக்கியமானவை[1]. இவற்றோடு எழுந்த பெரியவளமைப்பத்ததி, குளக்கோட்டன் கம்பசாத்திரம், இராசமுறை ஆகிய நூல்கள் இன்று கிடைக்கப்பெறவில்லை.
இலங்கையின் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் மொழிநடை அடிப்படையிலும் பேசுபொருள் அடிப்படையிலும் 16ஆம் நூற்றாண்டுக்கு முற்படாதவை என்பது ஆய்வாளர் துணிபு (பத்மநாதன், 2004:13) எனவே இவற்றை மிகப்பழைய சம்பவங்களுக்கான உண்மை வரலாற்றுத்தொகுப்பாகக் கொண்டு ஆராய்வது சிரமம்.
இலங்கையில் கிடைத்த இலக்கியங்களில் வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை என்பன வட இலங்கையில் உருவானவை. கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, திரிகோணாசல புராணம் என்பன திருகோணமலையில் தோன்றியவை. மட்டக்களப்புப் பூர்வசரித்திரம், நாடுகாட்டுப்பரவணி என்பன மட்டக்களப்புப் பிரதேசத்தில் தோன்றியவை. இந்நூல்களில் கைலாயமாலையில் கீழைக்கரை பற்றிய நேரடியான குறிப்புகளெதுவும் கிடைக்கப்பெறவில்லை. ஏனைய இலக்கியங்களைப் பார்ப்போம்.
1. வட இலங்கை இலக்கியங்கள்
1.1 வையாபாடல்
இன்று கிடைக்கும் வட இலங்கை இலக்கியங்களில் மிகப்பழையதாகக் கருதப்படுவது வையாபாடல். இப்பெயர் அதன் ஆசிரியரான வையாபுரிப் புலவர் பெயரால் உண்டானது[2]. இந்நூலுக்கு நூலாசிரியர் சூட்டியபெயர் “இலங்கை மண்டலக் காதை” என்பதாகும். வையாபாடலிலுள்ள அகச்சான்றைக் கொண்டு வையாபுரிப் புலவர் யாழ்ப்பாண அரசனான முதலாம் சங்கிலிக்கும் பரராசசேகரனுக்கும் சமகாலத்தில் வாழ்ந்தவர் என்பர் (நடராசா 1980:4-8). பொதுவாக இந்நூல் முதலாம் சங்கிலியின் காலத்தில் எழுந்தது (1519-61) என்றும் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இன்றுள்ள வடிவத்தை அடைந்தது என்றும் கொள்வதுண்டு (பத்மநாதன் 2004:43).
உக்கிரசிங்கசேனனுக்கும் மாருதப்பிரவைக்கும் மகனான சிங்கமன்னன் காலத்தில் 60 வன்னியர்கள் வன்னிநாட்டிலும் திருகோணமலைப் பகுதியிலும் குடியேறியதாகப் பாடுகிறது வையாபாடல். அறுபதின்மரில் ஒருவன் கண்டியில் “திசை”யாக அமர்ந்ததும் மாமுகன் என்பவன் வெருகல், தம்பலகமம் என்பவற்றுக்கு அதிபதியானதும், கொட்டியாரத்தை சுபதிட்டன் என்பவன் ஆண்டதும் கூறப்படுகிறது. அறுபது வன்னியரில் ஐம்பத்து நால்வர் இராட்சதருடனான போரில் இறந்துவிட்டனர்.
வையாபாடல் சொல்லும் கதையை ஒரு தொன்மமாகவே காணமுடியும். உதாரணமாக வெருகல் கொட்டியாரத்தின் தென்பகுதி. தம்பலகாமம் கொட்டியாரத்துக்கு சமாந்தரமாக மேற்கே நிலவிய ஒரு நிர்வாகப்பிரிவு. வன்னியிலும் திருகோணமலைப் பகுதியிலும் வெவ்வேறு காலப்பகுதியில் இடம்பெற்ற வன்னியக் குடியேற்றங்கள் பற்றிய பழங்கதைகளை நினைவுகூர்ந்து பிற்காலத்தில் வையாபாடல் பாடப்பட்டதென்றே கொள்ளவேண்டும்.
1.2 யாழ்ப்பாண வைபவமாலை
யாழ்ப்பாண வைபவ மாலையானது, பதினேழாம் நூற்றாண்டில் மயில்வாகனப்புலவரால் எழுதப்பட்டது. யாழ்ப்பாணத்தின் வரலாற்றை உரைநடை வடிவிலும் செய்யுள் வடிவிலும் பாடுகின்ற இவ்விலக்கியம் மக்கறூன் எனும் ஒல்லாந்து ஆளுநரின் காலத்தில் பாடப்பட்டதாக நம்பப்படுகிறது (நடராசா 1980:2-3). இந்நூலை எழுதுவதற்கு வையாபாடல், கைலாயமாலை உள்ளிட்ட நூல்கள் உசாத்துணையாக இருந்தன என்று குறிப்புள்ளதால், இந்நூல் அவற்றுக்குக் காலத்தால் பிற்பட்டது (ஞானப்பிரகாசர், 1928:1-3). யாழ்ப்பாண வைபவ மாலையில் கீழைக்கரை பற்றிய இரு செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.
முதலாவது, கண்டியை ஆண்ட பாண்டு மகாராசன் காலத்தில், கீரிமலைக்குச் சமீபமாயிருந்த கரைதுறைகளில் சிங்களவர் முக்குக வலைஞரைக் கொண்டு மீன்பிடித்து உணவளித்து, கண்டி முதலிய நாடுகளுக்கு வியாபாரம் செய்து வந்தார்கள். உசுமன், சேந்தன் முதலிய முக்குகத் தலைவர்கள் மீன்பிடித்து வருகையில், முக்குகர்கள் சிவாலயங்களில் தங்கி தீர்த்தக்கிணறுகளில் நீரெடுத்து மீன் காயவைத்து வந்தார்கள். அதனால் பிராமணர்கள் சிவாலயங்களைப் பூட்டிவிட்டு விலகினார்கள். பின்னர் பாண்டு நியாய விசாரணை செய்து முக்குகரை அங்கிருந்து அகற்றினான். அவர்கள் மட்டக்களப்புக்குப் போய் பாணகை, வலையிறவு ஆகிய இடங்களில் குடியேறினார்கள் (சபாநாதன் 1999:9-10).
வடபுலத்திலிருந்து அல்லது தமிழகத்திலிருந்து முக்குகர் வந்ததும், அவர்கள் திமிலருடன் முரண்பட்டதும், மேற்காசிய மற்றும் இந்திய முஸ்லிம்களின் வம்சாவழியினரான பட்டாணியருடன் நல்லுறவு கொண்டிருந்ததும் கீழைக்கரையிலும் பல்வேறு தொன்மங்களாக நீடித்துவருகின்றன (சலீம் 1990:18-21). ஆனால் முக்குகர் நெய்தல் சமூகமாகவன்றி, வேளாண் குடியினராகவே கீழைக்கரையில் வாழ்ந்துவந்திருக்கின்றனர். மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் முக்குகர் என்பது ஒற்றைச் சமூகமாகவன்றி, முற்குகர், முக்குவர், முக்கியர் என்ற பல்வேறு குலங்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முக்குகர் மாத்திரமன்றி இன்றுள்ள வேளாளர், குருகுலம் (கரையார்), சீர்பாதர் உள்ளிட்ட கீழைக்கரைச் சமூகங்கள் யாவும் பல்வேறு குலக்கலப்புக்களால் உருவானவை என்பதற்கு அங்குள்ள சமூக உட்பிரிவுகளான ‘குடி’களின் பெயர்கள் ஆதாரமாகின்றன. அப்படிப் புலம் பெயர்ந்த ஒரு கதையாகவே கீரிமலைக் கரைதுறை வலைஞர்கள், பாணகைக்கும் வலையிறவுக்கும் சென்ற வைபவ மாலைக் கதையையும் நோக்கவேண்டும்.
இரண்டாவது குறிப்பு, பறங்கியர் நல்லூர், கீரிமலைக் கோவில்களை இடித்த காலத்தில், கந்தசுவாமி கோவிலில் பணிவிடைக்காரனாயிருந்த பண்டாரம் என்பவன் ஆலயங்களைக் குறித்த சம்பவங்களும் ஒழுங்குத்திட்டங்களும் அடங்கிய செப்புப் பட்டயத்தை எடுத்துக்கொண்டு மட்டக்களப்புக்கு ஓடினான். (சபாநாதன், 1998;81). இதே கதை ஒருசிறு மாறுதல்களுடன் கீழைக்கரையில் வழங்கிவருகின்றது. யாழ்ப்பாணத்தில் பறங்கியரின் அடாவடி பெருகுவதைக் கண்ட ஒத்துக்குடாக் கந்தப்பர் என்பவர் ஏழு கண்ணகி சிலைகளையும் ஏழு நாடார் குடும்பங்களையும் ஏழு கோவில் ஊழியக் கோவியக் குடும்பங்களையும் மூன்று நம்பி குடும்பங்களையும் வயிரவ விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு தன் மகள் மற்றும் சகோதரியருடன் மட்டக்களப்புக்குக் குடிவந்தார் (கமலநாதன் & கமலநாதன், 2005:45-47).
போர்த்துக்கேயர் யாழ்ப்பாண அரசை ஆக்கிரமித்த காலத்தில், இலங்கையில் போர்த்துக்கேயருக்கெதிரான வலுவான அரசாக விளங்கியது கண்டி அரசு மாத்திரமே. எனவே கண்டி அரசின் கீழ் விளங்கிய மட்டக்களப்பை யாழ்ப்பாணத்தவர் பாதுகாப்பான இடமாகக் கருதியிருக்கக்கூடும். முதலாம் விமலதர்மசூரிய மன்னன் காலத்தில் வடக்கு- கிழக்கில் நிலவிய யாழ்ப்பாணம், கொட்டியாரம், மட்டுக்களப்பு, பழுகாமம் ஆகிய தமிழ் அரசுகள் சில சிங்களச் சிற்றரசுகளுடன் இணைந்து 1594ஆம் ஆண்டு போர்த்துக்கேயரை எதிர்க்க கண்டியுடன் படைக்கூட்டணி அமைத்ததை ஒரு ஐரோப்பியக் குறிப்பு சொல்கிறது (Baldaeus, 1702:672). எது எவ்வாறாயினும், வடக்குக்கும் கிழக்குக்கும் நெடுநாளாகவே பண்பாட்டு ரீதியில் நெருக்கமான உறவு இருந்திருக்கிறது என்பதற்கு யாழ்ப்பாண வைபவ மாலையிலுள்ள இரு குறிப்புகளும் ஆதாரமாகின்றன.
2. திருகோணமலை இலக்கியங்கள்
2.1 கைலாசபுராணம்:
இலங்கையின் தமிழ் வரலாற்று இலக்கியங்களிலும் தலபுராண இலக்கியங்களிலும் மிகப்பழையது கைலாசபுராணம் ஆகும். பொதுவழக்கில் இது இன்று தட்சிண கைலாய புராணம் என்றே அழைக்கப்படுகிறது. இப்புராணம் யாழ்ப்பாணத்தின் ஆரியச்சக்கரவர்த்திகளில் ஒருவனான செகராசசேகரனால் பாடப்பட்டதென்றும், அவன் பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் (1350கள்) வாழ்ந்தவன் என்றும், அவனே செகராசசேகரமாலை எனும் சோதிடநூல், செகராசசேகரம் எனும் வைத்தியநூல் என்பனவற்றில் புகழப்படுபவன் என்றும் விரிவாக ஆராய்ந்து நிறுவுகிறார் பேராசிரியர்.சி.பத்மநாதன் (1995:ix – xxiv). கைலாசபுராணத்தில் வருகின்ற குளக்கோட்டன், கஜபாகு ஆகிய மன்னர்கள் பற்றிய செய்திகள், சிங்கள – பாளி இலக்கியங்களின் பின்னணியில் கீழைக்கரை வரலாற்றோடு இணைத்து ஆராயத்தக்கவை. குளக்கோட்டன் கந்தளாய்க் குளத்தைப் புதிதாக அமைக்கவில்லை, திருத்தியமைத்தான் என்று கைலாசபுராணம் கூறும் செய்தி ஊன்றி நோக்கத்தக்க குறிப்பாகும்.
2.2 கோணேசர் கல்வெட்டு
இது இலங்கையில் தோன்றிய “கல்வெட்டு” எனும் இலக்கிய மரபில் உருவான முதல் நூலாகக் கருதப்படுகிறது. உரைநடையும் செய்யுளும் கலந்தே காணப்படும் இந்நூல், கைலாசபுராணத்தையும் ஏனைய மரபுகளையும் பின்பற்றி 17ஆம் நூற்றாண்டில் எழுந்தது என்று ஊகிப்பார் சி.பத்மநாதன். பெரும்பாலும் திருக்கோணேச்சரம் இடித்தழிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக தம்பலகாமத்தில் ஆதிகோணேச்சரம் அமைக்கப்பட்ட பின்னரே இக்கோணேசர் கல்வெட்டு பாடப்பட்டிருக்கவேண்டும். கோணேசர் கல்வெட்டிலும் குளக்கோட்டன் கல்வெட்டு கவிராச வரோதயரால் பாடப்பட்டதென்றும், கயவாகு கல்வெட்டும் உரைநடையில் அமைந்த பகுதியும் பின்னாளில் வேறு சிலரால் எழுதி இணைக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் ஊகிக்கப்படுகிறது (வடிவேல், 1993:14-17).
கோணேசர் கல்வெட்டு, பலவிதங்களில் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் நூலோடு ஒப்பிடவேண்டியது. அதிலுள்ள குளக்கோட்டன், க|சபாகு மனுநேயகயவாகு, ஆடகசவுந்தரி உள்ளிட்ட மன்னர்களின் தொன்மங்கள், பல்வேறு சமூகங்களின் குடிவரவு, நன்மை தீமைக்கான தொழும்புகள், தானம் – வரிப்பத்து என்போரின் கடமைகள் முதலிய பல்வேறு விடயங்கள் கோணேசர் கல்வெட்டு – பூர்வ சரித்திரம் ஆகிய இரு நூல்களிலும் ஒப்பீடு செய்து ஆராயப்படவேண்டியவை.
உதாரணமாக இங்கிருந்த கோவில் நிருவாக முறையைச் சொல்லலாம். கோணேசர் கல்வெட்டு கூறுவதன் படி, திருக்கோணேச்சரத்தின் நிருவாகம், குளக்கோட்டு மன்னன் விதித்தபடி, இருபாகை முதன்மை, வன்னிபம், தானம், வரிப்பற்று எனும் நான்கு தரப்பார் மூலம் நிகழ்த்தப்பட்டது. இருபாகை முதன்மை என்பது சைவநாயக முதன்மை, வேதநாயக முதன்மை, எனும் இரு அந்தணரைக் குறிக்கும் (வடிவேல், 1993:111). இவர்கள் முறையே சைவ மற்றும் வைதிக அந்தணர்களாக இருந்திருக்கக்கூடும். தானம் என்பது மருங்கூரிலிருந்து வந்த முப்பது குடிகள். இவர்களில் ஏழு குடிகள் கோணேச்சரக் கோவிற்கடமைகளில் முதன்மையான இடத்தை வகித்தார்கள். வரிப்பற்று என்பது காரைக்காலிலிருந்து வந்த இருபத்தொரு குடிகள். இவர்கள் தானத்தாருக்கு அடுத்த இடத்தில் கோவிற்கடமைகளைச் செய்து வந்தார்கள். தானத்தாரில் ஏழு குடிகள் ‘ராயர்’ என்ற பட்டமும், வரிப்பத்தரில் ஐந்து குடிகள் ‘பண்டாரம்’ என்ற பட்டமும் பெற்றிருந்தார்கள். தானத்தார், வரிப்பத்தரிடையே முரண்பாடுகள் ஏற்படும் போது அதைத் தீர்ப்பதே வன்னிபத்தின் பணி.
கிட்டத்தட்ட இதே நிருவாக முறைமை கீழைக்கரையில் பேணப்பட்டதை மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் சொல்கின்றது. அதிலுள்ள புவனேசர் கல்வெட்டின் படி, திருக்கோவிலைத் திருத்திக் கட்டிய மனுநேய கயவாகு மன்னன் வடநாட்டு அதிபதிகளிடமிருந்து ‘ஏழு இராயரையும் நாற்பது திறவுகுடிகளையும் நாட்டியப்பெண்களையும்’ பெறுகின்றான். அவர்களில் ஏழு இராயரையும் திரவியத்ததிபராகவும், இருபாகையாக மறையோரையும், தனது சந்ததிகளை முதன்மையாகவும் நியமிக்கிறான். பின்பு வரிப்பத்தரான பண்டார மரபினர் ஐவரையும் மறையோருக்கு ஊழியம் செய்யவேண்டும் என்ற அவன், பதினெட்டு சிறைக்குடிகளும் கண்டகுடி எனும் காராளர் குலத்தின் தலைமையில் கோவிலில் ஊழியம் புரியவேண்டும் என்று திட்டம் பண்ணினான்.
ஐந்து பண்டாரம், காராளர், அவர்களின் பதினேழு சிறைக்குடிகள், அந்தணர்கள் ஆகிய இருபத்து நால்வரும் தன் கட்டளைகளை மீறினால் ஏழு நரகத்திலும் கிடப்பர் என்று ஆணையிடும் மனுநேய கயவாகு, இந்த எல்லா ஊழியங்களும் செய்யும் குற்றம் குறைகளை தன் அமைச்சர்களான மூன்று படையாட்சி வன்னிபங்களும் ஏழு இராயரும் ஆராய்ந்து நீதி வழங்க வேண்டும் என்று சொல்லி தன் நகரான உன்னாசகிரிக்குத் திரும்பினான். (கமலநாதன் & கமலநாதன், 2005:120-121).
இதில் இருபாகை முதன்மை, வன்னிபம், ஏழு இராயர், ஐந்து பண்டாரங்கள் என்பன நேரடியாகவே கோணேச்சரக் கோவிலுக்குரிய நிர்வாக அலகுகளாகும். திருக்கோவில், திருக்கோணேச்சரம் இரண்டிலும் இருபாகையாக அந்தணர்களே விளங்குகின்றபோதும், கோணேசர் கல்வெட்டின் படி, கோணேச்சரத்தில் “முதன்மை” அந்தணர்களாக அமைய, புவனேசர் கல்வெட்டின் படி, திருக்கோவில் முதன்மையாக கலிங்ககுல வன்னிபம் அமர்கிறார்.
புவனேசர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் ஏழு இராயரை, கோணேசர் கல்வெட்டிலுள்ள தானத்தாரின் ஏழு இராயராக இனங்கண்டுகொள்ளலாம். ஐந்து பண்டாரங்கள் புவனேசர் கல்வெட்டில் வரிப்பத்தர் என்ற பெயரில் திருத்தமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். வரிப்பத்தர் என்ற பெயர் ஆளப்படும் போதும், புவனேசர் கல்வெட்டில், தானத்தார் என்ற பெயர் ஆளப்படாமைக்கான சரியான காரணம் தெரியவில்லை.
புவனேசர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் உன்னாசகிரி மன்னனான புவனேக கயவாகு, கோணேசர் கல்வெட்டிலும் ஒரு கோணேச்சர அடியவனாகக் குறிப்பிடப்படுகின்றமை, வரிப்பத்தர் வருகையை உறுதிப்படுத்தும்படி இன்றும் திருக்கோவிலுக்கு அப்பால் ‘வரிப்பத்தான்சேனை’ எனும் இடப்பெயர் காணப்படுகின்றமை ஆகிய தகவல்களின் பின்னணியில் இச்செய்திகளின் வரலாற்றுத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
இனி கீழைக்கரையில் உருவான வரலாற்று இலக்கியங்களில் முக்கியமானவை, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு, களுதேவாலயக்கல்வெட்டு, சீர்பாதக் கல்வெட்டு இலக்கியங்கள், முக்குவர் கல்வெட்டு இலக்கியங்கள், கண்ணகி இலக்கியங்கள், சோனக வரலாற்று இலக்கியங்கள், குடிமக்கள் வரவு முதலிய இலக்கியங்கள் என்பனவாம். இவற்றில் நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு பற்றி அடுத்துப் பார்க்கலாம்.
தொடரும்.
அடிகுறிப்பு
[1] இப்பட்டியல் வரலாறு கூறும் நூல்களை மாத்திரமே கருத்தில் கொள்கிறது சோதிட நூல்களாக எழுந்த, காலத்தால் முற்பட்ட சரசோதிமாலை, செகராசசேகரம் முதலிய நூல்களை இப்பட்டியல் கருத்தில் கொள்ளவில்லை.
[2] வையாபுரி என்பது அறுபடை வீடுகளுள் ஒன்றான பழனியின் செல்லப்பெயர். பழனியிலிருந்து ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவனான ஆவியர் குலப் பேகனுக்கு வையாவிக் கோப்பெரும்பேகன் என்ற பெயர் இருந்தது.
உசாத்துணைகள்:
1.கமலநாதன், சா.இ., கமலநாதன், க. (2005). மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம். கொழும்பு – சென்னை: குமரன் புத்தக இல்லம்.
2. சபாநாதன், கு. (பதிப்பு). (1995). யாழ்ப்பாண வைபவ மாலை. கொழும்பு: இந்து சமய அலுவல்கள் திணைக்களம்.
3. சலீம், ஏ.ஆர்.எம். (1990). அக்கரைப்பற்று வரலாறு. அக்கரைப்பற்று: ஃகிரா பப்ளிகேசன்`ச்.
4. ஞானப்பிரகாசர், சு. (1927). யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம். அச்சுவேலி: ஞானப்பிரகாச யந்திரசாலை.
5. நடராசா, க.செ. (பதிப்பு). (1980). வையாபாடல். கொழும்பு: கொழும்புத் தமிழ்ச் சங்கம்.
6. பத்மநாதன், சி. (பதிப்பு). (1995). தட்சிண கைலாச புராணம் : பகுதி 01, கொழும்பு 02: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
7. பத்மநாதன், சி. (2004). ஈழத்து இலக்கியமும் வரலாறும். கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.
8. வடிவேல், இ. (1993). கோணேசர் கல்வெட்டு: கவிராஜவரோதயன் இயற்றியது. கொழும்பு 02: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
9. Baldaeus, P. (1703). A True and Exact Description of the Most Celebrated East Indian Coasts of Malabar and Coromandel as also of the Isle of Ceylon, London.