ஆங்கில மூலம்: அசங்க வெலிக்கல
கோத்தபாயராஜபக்ச 2019இல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் ஜனாதிபதிமுறையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது ஆட்சிக் காலத்தில் 20ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இத்திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி இலங்கையை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரதான நகர்வாக அமைந்தது. இத்திருத்தம் கொண்டுவரப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை ஜனாதிபதி முறைக்கு (Presidentialism) ஆதரவாக முன்வைக்கப்பட்ட வாதங்களை மறுத்து பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டன. அசங்க வெலிக்கல (Asanga Welikala) என்னும் சட்ட அறிஞர் 2020ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையொன்று ‘Nonsense Upon Stilts? Revisiting Justifications Of Presidentialism In Sri Lanka’ என்னும் தலைப்பில் அமைந்தது. அக்கட்டுரையின் கருத்துகளைத் தழுவி இத்தமிழ்க்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அசங்க வெலிக்கல அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தலைப்பில் ‘Nonsense Upon Stilts?’ என்னும் மரபுத்தொடர் (Idiomatic Phrase) காணப்படுகிறது. இதன்பொருள் ‘அர்த்தமற்ற, அபத்தமான வாதங்கள்; நகைப்பிற்கிடமான கூற்றுகள்; அபத்தமான கருத்துகள்’ என்பதாகும். ஜனாதிபதிமுறைக்கு ஆதரவாகப் பேசியவர்களின் வாதங்கள், நகைப்பிற்கிடமான அபத்தமான வாதங்கள் என சட்ட அறிஞர் அசங்கவெலிக்கல அவர்களின் கட்டுரை எடுத்துக் காட்டியது. 18.11.2020 திகதியில் ‘Ground Views’ இணைய இதழில் வெளிவந்த இக்கட்டுரையினை இன்றைய பொருத்தம் கருதி தமிழில் அறிமுகம் செய்கிறோம்.

சர்வாதிகார ஜனாதிபதிமுறை என்னும் ஆபத்தான பாதையில் இலங்கையை நகர்த்திச் செல்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே அரசியல் யாப்புக்கான 20ஆவது திருத்தம் அமைந்தது. இத்திருத்தம் ஜனநாயகத்திற்கு ஓர் இருண்ட யுகமாக அமையலாம்; அல்லது இத்திருத்தம் குறுகிய காலத்தின் பின்னர் திருத்தம் செய்யப்பட்டு, மறைந்தும் போகலாம். காலம்தான் இதற்கான பதிலைக்கூற வேண்டும். இப்போது எம் முன்னால் உள்ள பணி சர்வாதிகார ஜனாதிபதிமுறைக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் போலி வாதங்களைத் தோலுரித்துக்காட்டி, உண்மையை மக்களுக்குப் புரிய வைப்பதாகும் என அசங்க வெலிக்கல இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஓர் அரசாங்க முறை (A System Of Government) என்ற முறையில் ஜனாதிபதிமுறை இலங்கைக்குப் பொருத்தமற்றது என்பதை அவரது கட்டுரையைத் தழுவி எழுதப்பட்ட இத்தமிழ்க்கட்டுரை எடுத்துக் கூறுகிறது. ஒரு சமூகம் தனக்குப் பொருத்தமான அரசாங்க அமைப்பு முறையினை எவ்வாறு தெரிவு செய்கிறது? இத்தெரிவை அச்சமூகத்தின் உயர் அடுக்கினைச் சேர்ந்த உயர்குழாம் வகுப்பே (Elite Class) செய்கிறதெனலாம். இலங்கையிலும் அரசியல் யாப்புத் திருத்தம், புதிய யாப்பினை வரைதல் என்பன இலங்கையின் உயர்குழாம் வகுப்பினராலேயே செய்யப்பட்டு வருவதைக் காணலாம்.
அரசியல் யாப்புத்திருத்தம், புதிய யாப்பை வரைதல் என்ற செயல்முறையில் கருத்துகள், செயற்பாடுகள், சுயநலன்கள் (Ideas, Functions and Self Interest) என்ற மூன்று விடயங்கள் சம்பந்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இம்மூன்று விடயங்களையும் இலங்கையின் ஜனாதிபதிமுறையை நீடிப்பதற்குச் சார்பாக முன்வைக்கப்படும் வாதங்களின்படி பின்வருமாறு வகுத்துரைக்கலாம்:
- அரசியல் யாப்புகளை வரைதல் தொடர்பான கருத்துகள், கொள்கைகள், சிந்தனைகள் என்பனவற்றின் அடிப்படையிலான வாதங்கள் முதலாவது வகையின. இவற்றை ஆங்கிலத்தில் ‘Ideational Arguments’ என்பர். தமிழில் கருத்துகள்சார் வாதங்கள் எனக் குறிப்பிடுவோம்.
- இரண்டாவது வகையான வாதம் செயற்பாட்டியல் வாதம் (Functionalist Argument) எனப்படும். உதாரணமாக, பொருளாதார வளர்ச்சிக்கு உரிய சிறந்த கருவி ஜனாதிபதி அரசாங்கமுறை; இம்முறைதான் நாட்டில் அரசியல் உறுதிநிலையை ஏற்படுத்தும் என்பது போன்ற வாதங்கள்.
- மூன்றாவதாக, அரசியல் யாப்பை வரைபவர்களின் சுயநலன்கள் (Self Interest of Constitution Makers) அரசியல் யாப்புகளின் உருவாக்கச் செயன்முறையில் முக்கியமான பங்கைப் பெறுகின்றன. இலங்கையின் உயர்குழாம் வகுப்பைச் சேர்ந்த தனிநபர்களும், குடும்பங்களும், நிர்வாகிகளும், சட்ட வல்லுநர்களும், பிறரும் தத்தம் சுயநல நோக்கங்களுக்காகச் சர்வாதிகார ஜனாதிபதிமுறை நீடிக்கப்பட வேண்டும் என்ற வாதங்களை முன்வைக்கின்றார்கள்.
இக்காரணங்களால் கருத்துகள், செயற்பாடுகள், சுயநலன் என்ற மூன்றினதும் கலவையான நோக்குமுறையில் அமைந்த வாதங்கள் ஜனாதிபதிமுறைக்குச் சார்பாக முன்வைக்கப்படுவதை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியமானது.
அ) கருத்துச்சார்ந்த வாதம் (Ideational Argument):
இலங்கைக்கு ஜனாதிபதிமுறை வேண்டும் என்று வாதிடுவோர் ‘சிங்கள – பௌத்த அரசு’ என்னும் கற்பிதமான, பொற்காலமான கடந்தகாலத்தைப் பற்றிப் பேசுகின்றனர். கடந்த காலத்தில் இங்கு நிலைபெற்றிருந்த அந்த அரசை ஜனாதிபதிமுறை (Presidentialism) என்னும் வடிவில் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என இவர்கள் வாதிடுகின்றனர். இவர்களது வாதங்கள் இலங்கையின் சிங்கள – பௌத்த கடந்த காலம் பற்றிய மனோரதியமான நோக்கில் (A Romantic View of Utopian Sinhala Buddhist Past) இருந்து தோற்றம் பெற்றவை என அசங்க வெலிக்கல அவர்கள் கூறுகின்றார். நவீன ஜனாதிபதிமுறை என்ற வடிவில் இக்கருத்துடையோர் பண்டையகால முடியாட்சியை மறுஉற்பத்தி செய்வதை (Modern Reproduction of Ancient Monarchy) விரும்புகின்றனர் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். நாட்டின் ஐக்கியத்திற்கு ஆபத்து வந்துள்ளது என்றும், சிங்கள – பௌத்தம் இந்நாட்டில் வளர்வதைப் பாதுகாக்கும் அரணாக ஜனாதிபதிமுறை விளங்குகிறது எனவும் இவர்கள் வாதிடுகின்றனர்.
ஆ) செயற்பாட்டியல் வாதம்:
இரண்டாவதான செயற்பாட்டியல் வாதம் (Functionalist Argument), பொருளாதார அபிவிருத்தி வாதம் (Economic Developmentalism) என்னும் சிந்தனையில் ஆதாரம் கொண்டுள்ளது. இச்சிந்தனைப்படி மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரக்கட்டமைப்பு (Centralization of Authority) உறுதியான தொலைநோக்குடைய தலைமைத்துவத்திற்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது. தனிநபர் ஒருவரின் தலைமைத்துவம் (Single Ruler Leadership) நாட்டிற்கு அவசியமானது. ஊழலற்ற அரசாங்கத்தை அமைக்கவும், பாராளுமன்றக் கட்சி அரசியலின் திசையறியாப் போக்குகளைக் கட்டுப்படுத்தவும், ஜனாதிபதிமுறை தேவையானது போன்ற வாதங்கள் இக்கருத்துடையோரால் முன்வைக்கப்படுகின்றன.
இ) குழுக்கள் சார்ந்த சுயநலன்கள் (Partisan Self Interest):
அரசியல் யாப்புகளை வரைதலில் இது மிக முக்கியமான பங்கை வகிக்கிறது; இந்த விடயம் பெரும்பாலும் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை என அசங்க வெலிக்கல அவர்கள் கூறுகின்றார். தமது திறமைகளில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்களான ராஜபக்ச குடும்ப அரசியல் தலைவர்களுக்கு, தேர்தல் போட்டி என்னும் விளையாட்டில் ஈடுபடவும், வெற்றிபெற்று தம் ஆட்சியைப் பலப்படுத்தவும், மத்தியில் அதிகாரங்களைக் குவிக்கும் ஓர் அரசியல் யாப்புமுறை மிகவும் வாய்ப்பானதொன்றாகத் தெரிகிறது. குறுங்காலத்தில் (Short Run) இது அவர்களுக்குச் சாதகமாக அமைந்து விடுகிறது. அதனால் அவர்கள் அதன் கவர்ச்சி மாயையில் சிக்குண்டுள்ளனர்.
ஆயினும் நீண்டகாலத்தில் இந்த சர்வாதிகாரமுறை அவர்களுக்கு எதிராகவே மாறி அவர்களை ஆட்சியைவிட்டு விரட்டிவிடும் என்பதை அவர்கள் உணரத்தவறிவிட்டனர். எதிரணியில் நிற்கும் தலைவர்கள், சர்வாதிகார ஜனாதிபதி என்ற பதவியையும், அச்சர்வாதிகார முறையையும் தட்டிப்பறித்து, ராஜபக்சக்களை விரட்டிவிட்டு ஆட்சியில் அமரும் கனவுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதிரணிப்படையினர் இந்த இலக்கை எதிர்காலத்தில் அடைவார்களா, இல்லையா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது. ஆயினும் ஆளும் தரப்புக்கும், எதிர்த்தரப்புக்கும் ஜனாதிபதிமுறை கவர்ச்சிகரமானதொன்றாகவே இருக்கிறது. ஆகையால் இருதரப்பாரும் இம்முறையைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். அவர்களின் குழுக்கள் சார்ந்த சுயநலன்கள் இந்த முறையின் நீடிப்புக்குப் பலம் சேர்ப்பதாக அமையும்.
மேலே குறிப்பிட்ட மூன்று அடிப்படைகளில் அமையும் வாதங்களின் கலவையான கருத்துகள் ஜனாதிபதிமுறை பற்றிய சொல்லாடலில் இடம்பெறுவதை நாம் காண்கின்றோம். இவற்றைப் பகுத்தாராய்ந்து, அடையாளம் கண்டு விமர்சனத்திற்கு உட்படுத்தவேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது. இவ்வாறான விமர்சனம் இல்லாதவிடத்து நான்கு தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலத்தில், ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்களால் ஜனாதிபதிமுறைக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட பழைய வாதங்களையே கிளிப்பிள்ளைபோல் ஒப்புவிக்கும் நிலை தொடரும். ஆகையால் ஜனாதிபதிமுறை பற்றிய அபத்தமான போலி வாதங்களை முறியடிக்கும் தேவை இன்று எழுந்துள்ளது. எமது விவாதத்தை ஜனாதிபதிமுறை என்றால் என்ன? பாதி-ஜனாதிபதிமுறை என்றால் என்ன? அவற்றை எவ்வாறு வரைவிலக்கணம் செய்யலாம்? என்னும் வினாக்களுடன் ஆரம்பிப்போம்.
ஜனாதிபதிமுறை என்றால் என்ன? பாதி-ஜனாதிபதிமுறை என்றால் என்ன?
ஜனாதிபதிமுறை (Presidentialism), பாதி-ஜனாதிபதிமுறை (Semi Presidentialism) என்பன பற்றிய தெளிவான புரிதல் மிகவும் அவசியமானது. ஜனாதிபதிமுறையில் அரசாங்கத்தின் நிர்வாகத்துறை (Executive), சட்ட ஆக்கத்துறை (Legislature) என்ற இரண்டிற்கான தேர்தலும் வெவ்வேறாக நடத்தப்படும். அவை இரண்டும் தனித்தனியாக இயங்கும். ஜனாதிபதி சட்டமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியவரல்லர். விதிவிலக்காக, குற்றச்சாட்டு நடைமுறை (Impeachment) மேற்கொள்ளப்படும்போது மட்டும் ஜனாதிபதி சட்டமன்றத்திற்குப் பொறுப்புச்சொல்ல வேண்டியவராக இருப்பார். ஜனாதிபதி மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார். அவர் குறிப்பிட்ட கால எல்லைவரை (Fixed Term) பதவியில் இருக்கலாம். ஜனாதிபதியின் உதவியாளர்கள் போன்ற அமைச்சர்கள் ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார்கள். அமைச்சர்கள் ஜனாதிபதிக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களாய் இருப்பர். ஐக்கிய அமெரிக்கா, ஜனநாயக ஜனாதிபதிமுறைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
பாதி-ஜனாதிபதிமுறையில் (Semi-Presidentialism) மக்களால் நேரடியாகத் தேர்தல்மூலம் தெரிவு செய்யப்பட்டவரான ஜனாதிபதி சட்டசபையில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களான பிரதமருடனும், அமைச்சர்களுடனும் இணைந்து நிருவாக அதிகாரத்தை (Executive Power) பிரயோகிப்பார். பிரான்ஸ் நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயக பாதி-ஜனாதிபதிமுறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். பாதி-ஜனாதிபதிமுறையில் இரண்டு உபபிரிவுகள் உள்ளன. பிரதமர்-ஜனாதிபதிமுறை (Premier-Presidential) எனவும் ஜனாதிபதி-பாராளுமன்றமுறை (President-Parliamentary) எனவும் இப்பிரிவுகள் அழைக்கப்படும். பிரதமர்-ஜனாதிபதிமுறையில், பிரதமரும் அமைச்சர்களும் நேரடியாகச் சட்டசபைக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களாய் இருப்பர். இரண்டாவதான ஜனாதிபதி-பாராளுமன்றமுறையில், பிரதமரும் அமைச்சர்களும் கூட்டாக ஜனாதிபதிக்கும், சட்டசபைக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருப்பர். 19ஆவது திருத்தத்தின் பின்னர் இலங்கை, பிரதமர்–ஜனாதிபதிமுறைக்கு மாற்றம் பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. 19ஆவது திருத்தத்திற்கு முன்னரும் 20ஆவது திருத்தத்திற்குப் பின்னரும் இலங்கை ஜனாதிபதி-பாராளுமன்றமுறையை உடையதாக இருந்தது.
ஜனாதிபதிமுறை, பாதி-ஜனாதிபதிமுறை என்ற இரண்டும் ஜனநாயக யாப்புமுறைகள் (Democratic Constitutional Systems) ஆகும். ஐக்கிய அமெரிக்காவும், பிரான்சும் இவ்விரு முறைகளுக்கும் உதாரணங்களாகும். இவ்விரு நாடுகளும் ஜனநாயக நாடுகள் ஆகும். ஜனாதிபதிமுறை, பாதி-ஜனாதிபதிமுறை என்பன அரசாங்கமுறையாக உள்ள சர்வாதிகார நாடுகளும் பல உலகில் உள்ளன. பாராளுமன்றமுறை சர்வாதிகாரமாக மாறுவதற்கு உள்ள வாய்ப்பைவிட ஜனாதிபதிமுறை, பாதி-ஜனாதிபதிமுறை என்பன சர்வாதிகாரமாக மாறுவதற்குக் கூடியளவு சாத்தியம் உள்ளது. பலமுடைய நிருவாக ஜனாதிபதி (Strong Executive President), ஜனாதிபதி நேரடியாக வாக்காளர்களால் தேர்ந்து எடுக்கப்படுபவராக இருத்தல் என்ற இரண்டும் சேரும் போது, அது சர்வாதிகாரமாக (Authoritarianism) மாறுவதற்கான கூடிய வாய்ப்பு உள்ளது.
ஜனாதிபதிமுறையைத் தேர்வு செய்வதற்கான காரணங்கள் யாவை?
உலகின் பலநாடுகள் ஜனாதிபதிமுறையைத் தேர்வு செய்து கொண்டுள்ளன. இவ்வாறு தேர்வு செய்வதற்கான காரணங்கள் யாவை? ஜனாதிபதிமுறையின் சாதகமான அம்சங்கள் எவை? ஜனாதிபதிமுறைக்குச் சாதகமாக பின்வரும் நான்கு காரணிகள் முன்வைக்கப்படுகின்றன:
1. நேரடியான தேர்தல் (Direct Election)
சில விதிவிலக்குகள் தவிர எல்லா ஜனாதிபதிமுறை நாடுகளிலும் ஜனாதிபதி முழுநாட்டு மக்களாலும் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார். பாராளுமன்றமுறையின்படி பிரதமர் நாட்டு மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுபவர் அல்லர்; அவர் பாராளுமன்றத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர் ஆவார். நாட்டு மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு சட்டமுறையான வலு (Legitimacy) கூடியதாக உள்ளது.
2. அதிகாரப் பிரிப்பு (Separation of Powers)
நிருவாகத்துறையும், சட்ட ஆக்கத்துறையும் வெவ்வேறான தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படுவதோடு, ஒன்றில் இருந்து மற்றது தனித்து இயங்குவது, ஜனாதிபதிமுறையின் சிறப்பியல்பு. இம்முறையில் அதிகாரப்பகிர்வு நடைமுறையில் இருப்பதால் கட்டுப்படுத்தல்களும் சமப்படுத்தல்களும் (Checks and Balances) செயற்படும் வாய்ப்பு கூடிய அளவில் உள்ளது.
3. செயற்திறன் (Effectiveness)
ஜனாதிபதி, நிர்வாக அதிகாரங்களையுடைய பலம் பொருந்திய பிரதமநிர்வாகி (Chief Executive) என்ற நிலையில் உள்ளார். அவர் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவராய் இருத்தல், அவருக்குச் சட்டமுறை வலுவை வழங்குகிறது. அவரால் செயற்திறனுடன் கருமங்களை ஆற்றமுடிகிறது.
4. உறுதிநிலை (Stability)
குறிப்பிட்ட காலம்வரை (Fixed Term) ஜனாதிபதி பதவியில் இருப்பார். அவர் தெளிவாக முன்பே திட்டமிடப்பட்டதும், மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றதுமான வேலைத்திட்டத்தைத் தனது பதவிக்காலத்தில் செயற்படுத்தக்கூடியவராக இருப்பார். பிரதமரை பாராளுமன்றம் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் நீக்குவது போல், ஜனாதிபதியைப் பதவி நீக்க முடியாது.
மேற்கூறிய சாதகமான காரணிகளை மறுத்துரைத்து, ஜனாதிபதிமுறையின் பாதகமான அம்சங்களை எடுத்துக்காட்டும் எதிர்வாதங்கள் பின்வருமாறு:
1. நேரடியான தேர்தல்
நேரடியான தேர்தல், தனிநபர் முதன்மை வாதத்தையும் (Personalism), மக்கள் வாதத்தையும் (Populism) ஊக்குவிக்கிறது. தனிநபர் முதன்மைவாதம் ஒரு கலாசாரமாக வளர்க்கப்படும் போது, அரசியல் தலைமைத்துவம், கவர்ச்சி ஆளுமைமிக்க ஒரு தலைவருக்கு உரியதாக்கப்படுகிறது. இக்காரணத்தால் அரசியல் நிறுவனங்கள் (Political Institutions) முக்கியம் இல்லை; தனிநபர் ஒருவர்தான் முக்கியம் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. தனிநபர் முதன்மைவாதம் நிறுவனங்கள் மீதும், அதிகாரப் பிரயோகம் மீதான ஜனநாயகக் கட்டுப்பாடுகள் மீதும், மக்களிற்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி அவற்றை வலுவிழக்கச் செய்கிறது. தனிநபர் முதன்மைவாதத்தின் தீவிரவளர்ச்சி நிலையாக அமையும் மக்கள்வாதம் என்னும் ‘பொப்யுலிசம்’ தனிநபர் முதன்மைவாதத்தின் இன்னொரு வடிவமாகும்.
மக்கள்வாத அரசியலைக் கையில் எடுக்கும் ‘தலைவர்’ மக்களின் குறைகளை (Grievances) எடுத்துக்காட்டி, அவை பற்றி மேடைகளில் முழங்குவார்; பலியாடுகளாக சில நபர்களையும் சமூகக் குழுக்களையும் சுட்டிக்காட்டுவார். அவர் சிக்கலான பிரச்சினைகளுக்கு மிகவும் எளிதான தீர்வுகளைக் (Simple Solutions to Complex Problems) கூறுவார். அரசியல் யாப்பு விதிக்கும் ஜனநாயகக் கட்டுப்பாடுகளை மக்களது இறைமைக்கு (Popular Sovereignty) எதிரானது என்று கூறுவார். பெரும்பான்மையின் உறுதியான விருப்பம் (Majoritarian Will) என்பதே முக்கியம் என்று வாதிடுவார். தலைவரின் சர்வாதிகாரச் செயற்திட்டங்களுக்கு (Authoritarian Projects) பெரும்பான்மைவாதம் சட்ட வலிதுடைமையை (Legitimacy) வழங்குகிறது. இக்காரணங்களால் நேரடியான தேர்தல் சர்வாதிகாரத்திற்கு வழியமைப்பதாக அமைகிறது.
2. அதிகாரப்பிரிப்பு
ஜனாதிபதிமுறையில் நிறுவனங்கள், செயற்பாடுகள் (Institutional and Functional) என்ற இரு நிலைகளிலும் அதிகாரப்பிரிப்பு முழுமையானதாக அமைவதைக் காணலாம். இத்தகைய அதிகாரப்பிரிப்பு கட்டுப்படுத்தல்களையும் சமன்படுத்தல்களையும் (Checks and Balances) செயற்பட வைப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தினதும், ஜனநாயகத்தினதும் செயற்பாடுகளை முடக்குவதாக (Breakdown of Government and Democracy) அமைந்துவிடுகிறது. நிருவாகத்துறைக்கும் சட்ட ஆக்கத்துறைக்கும் (பாராளுமன்றத்துக்கும்) இடையே பகை உணர்வு மிகும்போது ஒரு பகுதி பணிந்து விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு உருவாகுவதில்லை; அதிகாரப் போட்டி தொடரும். இதனால் அரசாங்க நடவடிக்கைகள் முடக்கப்படும். இந்நிலையில் ஜனாதிபதிப் பதவியில் இருப்பவர் சட்ட ஆக்கத்துறையைப் பலாத்கார வழிகளில் அடக்குவதற்கு முயற்சிப்பார். ஊழல் நடவடிக்கைகள் மூலம் சட்ட ஆக்கத்துறையினரை தம்மோடு ஒத்துப்போகச் செய்வதற்கும் இவர் முயற்சிப்பார். பலாத்காரத்தால் செய்யமுடியாததை முறையற்ற ஊக்குவிப்புகளை வழங்குவதன் மூலம் சாதிக்க முடிகிறது.
3. செயற்திறன்
பிரதான நிறைவேற்று அதிகாரமுடையவராய் அரசாங்கத்தை வினைத்திறனுடன் ஒரு தலைவர் நடத்திச்செல்வதற்கு ஜனாதிபதிமுறை (Presidentialism) என்ற அரசாங்கமுறைதான் அவசியம் என்பது தவறானதொரு கருத்தாகும். ஒரு தலைவரின் செயற்திறனைப் பலகாரணிகள் தீர்மானிக்கின்றன. இவற்றுள் ஒரு தலைவரின் தனிப்பட்ட திறமைகள் முக்கியமானவை. உலகின் பல நாடுகளில் செயற்திறன்மிக்க பிரதமர்கள் இருந்துள்ளார்கள். ஐக்கிய இராச்சியத்தின் வின்ஸ்டன் சேர்ச்சில், கிளமன்ட் அட்லி, மார்கிரட் தட்சர், ரொனி பிளயர் என்போரும், இந்தியாவின் ஜவஹர்லால் நேருவும், சிங்கப்பூரின் லீ குவான் யு வும், மலேசியாவின் மஹதிர் மொகம்மதுவும், கனடாவின் பியர் ரூடோவும் சாதனையாளர்களான பிரதமர்கள் ஆவர். வரலாற்றின் திசைவழியை மாற்றும் வகையில் செயற்பட்ட இத்தகைய தலைவர்களுக்கு ஜனாதிபதியின் அதிகாரங்கள் தேவைப்படவில்லை.
4. உறுதிநிலை
ஜனாதிபதி குறிப்பிட்ட காலத்தவணைக்குப் பதவி வகிக்கலாம். அடுத்த ஜனாதிபதித் தேர்தல்வரை அவரைப் பதவியில் இருந்து அகற்றமுடியாது. குற்றம் சாட்டுதல் (Impeachment) செயல்முறையும் நடைமுறையில் மிகவும் கடினமானது. இதனால் திறமையற்றவரும், சர்வாதிகாரியும், ஊழல்வாதியுமான ஒருவர் ஜனாதிபதிப் பதவியில் ஆழ வேர்பதித்து நிலைத்துவிட முடியும். பாராளுமன்றமுறையில் அத்தகைய ஒரு பிரதமரை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பாராளுமன்றத்தினால் பதவியில் இருந்து நீக்க முடியும்; அவரது பதவிக்காலம் விரைவாகவே முடித்து வைக்கப்படும்.
தொடரும்.