இலங்கையில் ஜனாதிபதிமுறையை ஆதரித்து முன்வைக்கப்படும் போலியானதும் நகைப்புக்கிடமானதுமான வாதங்கள் - பகுதி 2
Arts
27 நிமிட வாசிப்பு

இலங்கையில் ஜனாதிபதிமுறையை ஆதரித்து முன்வைக்கப்படும் போலியானதும் நகைப்புக்கிடமானதுமான வாதங்கள் – பகுதி 2

March 31, 2025 | Ezhuna

இலங்கையின் சட்டத்துறை அறிஞர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் இலங்கையின் அரசியல் யாப்புகள் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் (Core Issues) பற்றிய உயராய்வுகள் பலவற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த மூன்று அரசியல் யாப்புகள் பற்றியும், இம்மூன்று அரசியல் யாப்புகளுக்கும் கொண்டுவரப்பட்ட யாப்புத் திருத்தங்கள் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றியும் இவ் உயராய்வுகளில் விரிவாக அலசப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில் உள்ளடங்கிய பெறுமதிமிக்க கருத்துகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே ‘அரசியல் யாப்புச் சிந்தனைகள்’ என்னும் இத்தொடரின் நோக்கமாகும். 

ஆங்கில மூலம்: அசங்க வெலிக்கல

இலங்கை மக்கள் ஜனாதிபதிமுறை தொடர்ந்திருப்பதை விரும்புகிறார்களா?

1978 அரசியல் யாப்புக் கொண்டுவரப்பட்டு 42 ஆண்டுகள் கடந்தபின் இன்று (2020இல்) ஜனாதிபதிமுறை தொடர்ந்து இருந்துவிட்டுப் போகட்டும், அதனைத் திருத்த வேண்டாம் என்ற அபிப்பிராயம் உடையவர்கள் பலர் இருப்பது உண்மையே. ஜனாதிபதிமுறைக்குப் பரவலான ஆதரவு உள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆயினும் ஜனாதிபதிமுறைக்கு எதிரான மூன்று வாதங்கள் பரிசீலனைக்கு உரியனவாகும்.

  1. மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி

1978இல் ஜனாதிபதிமுறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட பின் இன்றுவரை (2020) 7 ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றன. அத்தேர்தல்கள் பலவற்றில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் தேர்தல் சமயத்தில் ஜனாதிபதிமுறையை ஒழிப்போம் என்று வாக்குறுதியளித்தனர். 1989, 1994, 1999, 2005, 2010, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் இத்தேர்தல்கள் நடைபெற்றன. இவற்றுள் முதல் நான்கு தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்கள் ஜனாதிபதிமுறையை ஒழித்தல் அல்லது திருத்துதல் பற்றிய உறுதிமொழியை வழங்கினர். இத்தேர்தல்களில் முதல் மூன்று தேர்தல்களிலும் பிரதான எதிர்ப்போட்டியாளர்களும், தாம் பதவிக்கு வந்தால் ஜனாதிபதிமுறையை ஒழிப்போம் அல்லது திருத்துவோம் என வாக்குறுதி வழங்கினர். ஆகவே ஜனாதிபதிமுறை நடைமுறைக்கு வந்தது முதல், 1999 வரையான 20 ஆண்டுக்காலத்தில், ஜனாதிபதிமுறையை ஒழிக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் நாட்டு மக்களிடம் இருந்து வந்திருப்பதைக் காணலாம்.

  1. 2015இல் கொடுக்கப்பட்ட தெளிவான மக்களாணை

2015 ஜனாதிபதித் தேர்தலின்போது, மக்கள் முன் வைக்கப்பட்ட பிரதான விடயம் ஜனாதிபதிமுறையின் எதிர்காலம் பற்றியதாகும். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய கூட்டணி, அரசியல் யாப்புச் சீர்திருத்தத்திற்கான (Constitutional Reform) தெளிவான மக்களாணையைப் பெற்றது. அவ்வாணையின்படி அவ்வரசாங்கம் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றியது. இத்திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தது. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் இத்திருத்தத்திற்கு பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 215 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அப்பாராளுமன்றத்தில் ஆளும் கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாதபோதும் எதிர்த்தரப்பினரதும் ஆதரவோடுதான் 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் சம்மதம், மக்களாணைக்கு அவர்கள் மதிப்பளித்தார்கள் என்பதன் அடையாளம் ஆகும். 19ஆவது திருத்தத்திற்கு மக்களின் ஆணை கிடைத்தமையானது ஜனாதிபதிமுறைக்கும், சர்வாதிகாரத்திற்கும், ஊழலுக்கும் இடையிலான தொடர்பை மக்கள் உணர்ந்திருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

  1. மக்களுக்குக் கல்வியறிவூட்டத் தவறிய சூழல்

ஜனாதிபதிமுறையின் தீங்கான அம்சங்களைப் பற்றிய அறிவு மக்களிடம் இருந்துள்ளது. அரசியல்வாதிகள் ஜனாதிபதிமுறை பற்றியும் அதன் சாதக, பாதகங்கள் பற்றியும் திட்டமிடப்பட்ட முறையில் கல்வியறிவூட்டல் செயற்திட்டங்களை ஒருபோதும் நடத்தியதில்லை. அவ்வாறிருந்தும் ஜனாதிபதிமுறையின் பாதகமான அம்சங்கள் பற்றி மக்கள் தெரிந்து வைத்திருந்தனர். ஜனாதிபதிமுறைக்கு மாறான பாராளுமன்றமுறையின் சாதகமான அம்சங்கள் குறித்தும் மக்களுக்குக் கல்வி அறிவூட்டும் வகையில் பிரசாரம் செய்யப்படவில்லை.

1970களில் ஜனாதிபதிமுறையின் தீங்குகள் பற்றி கலாநிதி என்.எம் பெரேராவும், கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வாவும் பத்திரிகைகளில் உயர்தரமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதினர். ஜனாதிபதிமுறையின் தீங்குகள் பற்றி, அதுபோன்ற பிரசாரம் முன்னெடுக்கப்படும் தேவை இன்று உள்ளது. ஜனாதிபதிமுறையின் பாதகமான அம்சங்கள் குறித்து மக்களுக்குக் கல்வி அறிவூட்டினால் மக்கள் ஜனாதிபதிமுறையை ஒழிப்பதற்கான ஆதரவை நிச்சயம் வழங்குவார்கள்.

நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதிமுறை அவசியமானதா?

இலங்கைப் புவிப்பரப்பின் ஒற்றுமையைப் பேணுவதற்கு ஜனாதிபதிமுறை அவசியம் என்று கூறுவது அபத்தமான கருத்தாகும். இவ்வாறு கூறுவதற்கு ஆதாரங்கள் எவையும் இல்லை. இதை நியாயப்படுத்துவதற்கான அனுபவச் சான்றுகளும் இல்லை. அண்மையிலுள்ள இந்தியா ஒரு பெரியதேசம்; அங்கு பல்வேறு இனங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். இந்தியாவில் பாராளுமன்றமுறைதான் இருந்து வருகிறது. ஜனாதிபதிமுறை இல்லாததால் அந்த நாடு சிதைந்து அழிந்துவிடவில்லை. பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட இந்தியா போன்ற சமூகங்களில் பாராளுமன்றமுறை மூலம் ஜனநாயக ஆளுகையையும், பல்வேறு மக்கள் சமூகங்களை உள்ளீர்த்துக் கொள்வதான ஒருமைப்பாட்டையும் (Inclusiveness) ஏற்படுத்த முடிந்துள்ளது. பாராளுமன்றமுறையோடு ஒப்பிடும்போது, ஜனாதிபதிமுறை மூலம் ஏற்படுத்த விரும்பும் ஒற்றுமை, சர்வாதிகாரத்திற்கு வழியமைப்பதைக் காணமுடிகிறது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைப் பதவியில் இருத்தும் போது, ‘அதிகாரக் கட்டுப்பாடு மூலம் ஐக்கியம்’ என்ற கருத்து அழுத்தம் பெறுகிறது. இக்கருத்து இறுதியில் சர்வாதிகாரமும் இராணுவமயமாக்கலும் தோன்றுவதற்குக் காரணமாகிறது.

இலங்கையில் இன்று வரை தொடரும் வன்முறை மோதல்களுக்குப் பல காரணங்கள் உள்ளன. ஆயினும் இலங்கையில் ஜனாதிபதிமுறை அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே வன்முறை மோதல்கள் தூண்டப்பெற்று வேகம் பெற்றன என்பதை மறுக்க முடியாது. ஜனநாயக அரசியலில் (Democratic Politics) விட்டுக் கொடுப்புகளுக்கும், சமரசங்களுக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஜனாதிபதிமுறை அதிகாரத்தை மத்தியப்படுத்தும் (Centralization of Power) முறையாகையால், அது கட்சிகளுக்கிடையிலும், குழுக்களுக்கிடையிலும் வன்முறை மோதல்களுக்குத் தூண்டுதல் அளிக்கிறது; வெற்றி அல்லது தோல்வி என்றவாறான அரசியல் போட்டி ஊக்குவிக்கப்படுகிறது. ஜனாதிபதிமுறையில் ‘வெற்றியாளர் முழுவதையும் பெற்றுக் கொள்கிறார்; தோற்பவர்கள் யாவற்றையும் இழந்து நிற்கிறார்கள்’ (Winner takes all) என்ற நிலை ஏற்படுகிறது. இக்காரணத்தால் பிளவுண்ட சமூகங்களிற்கும், முரண்பாடுகளால் சிதைவுறும் நிலையில் உள்ள நாடுகளுக்கும், ஜனாதிபதிமுறை ஏற்றதல்ல என்பதையே வரலாற்று அனுபவம் உணர்த்துகிறது. மூன்றாம் உலகின் பின்தங்கிய பொருளாதார நாடுகளின் ­­விளிம்புநிலைச் சமூகங்களும், இனத்துவச் சிறுபான்மைக் குழுமங்களும், பொருளாதார – சமூக நிலையில் பின்னடைவுக்குட்பட்ட குழுக்களும், விடுதலையை அடைவதற்கும், சமூகநீதியைப் பெறுவதற்கும், ஜனநாயக அரசியல் வழிமுறைகளைக் கையாள்வதற்குப் பதிலாக வன்முறை அரசியல் வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கும் ஜனாதிபதிமுறை தூண்டுதல் அளிப்பதாக உள்ளது. இக்காரணங்களால் சில சமூகங்களுக்கு ஜனாதிபதிமுறை பொருத்தமற்றது என வாதிடப்படுகிறது. அம்முறை, நாடுகளின் ஐக்கியத்திற்குத் தீங்கானது. இலங்கையிலும் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதிமுறை தடையாக அமைந்துள்ளது.

உறுதியான அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதிமுறை அவசியமானதா?

ஜனாதிபதி குறிப்பிட்ட காலத்தவணை (Fixed Term) வரை பதவியில் இருக்க முடியும், அவர் நாட்டு மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார் என்ற இரு காரணங்களும் ஜனாதிபதிமுறையில் உறுதியான அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதற்குச் சான்றுகளாகக் காட்டப்படுகின்றன. மேலோட்டமான பார்வையில் ஜனாதிபதிமுறை உறுதிநிலையை ஏற்படுத்துவது போல் தோற்றமளிக்கிறது. பாராளுமன்றமுறையை எடுத்து நோக்கினால் பிரதம நிர்வாகியான பிரதமர், சட்ட ஆக்கத்துறையான பாராளுமன்றத்தினால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் எந்நேரமும் பதவியில் இருந்து அகற்றப்படும் ஆபத்து உள்ளது என்பதும் உண்மையே. இவ்வாறான மேலோட்டமான ஒப்பீடுகள் மூலம் பாராளுமன்றமுறை, அரசியல் உறுதிநிலையைப் பேணுவதற்கு சாதகமற்றது என முடிவு செய்தல் தவறு. பாராளுமன்றமுறை நிர்வாகத்துறை (Parliamentary Executive) உறுதியுடையதாக நிலைத்திருப்பதற்கு, அம்முறையினுள் அரசியல் யாப்பு வழிமுறைகள் பல உள்ளடக்கப்படுவதுண்டு. ‘உறுதிநிலையை ஏற்படுத்துதல்’ என்ற நோக்கத்துடன் பாராளுமன்றமுறையைக் கைவிட்டு ஜனாதிபதிமுறையைத் தழுவுதல் புத்தியுள்ள செயலன்று. பாராளுமன்ற முறையை உறுதியுடையதாகப் பலப்படுத்துவதற்கு பின்வரும் அரசியல் யாப்புச் சட்ட வழிமுறைகள் உலக நாடுகளில் பின்பற்றப்பட்டுள்ளன:

  1. குறிப்பிட்ட காலத்தவணை முடியும்வரை கலைக்கப்பட முடியாததாகப் பாராளுமன்றத்தை ஆக்குதல் (Fixed Term Parliament) என்பது ஓர் உபாயமாகும். உதாரணமாக 5 ஆண்டுகள் பதவிக்காலத்தையுடைய பாராளுமன்றத்தை 4 ஆண்டுகளும் 6 மாதங்களும் முடிவடைவதற்கு முன் கலைக்க முடியாது என்ற அரசியல் யாப்பு விதியை உட்படுத்தல் முடியும். அரசாங்கத்தின் உறுதிநிலையை (Stability) இது போன்ற வழிகளில் பேண முடியும் எனக் கருதப்படுகிறது.
  2. இரட்டைக் கலைப்பு (Double Dissolution) என்னும் நடைமுறையைப் புகுத்துதல். உதாரணமாக பாராளுமன்றம் (சட்ட ஆக்கச் சபை) நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் அரசாங்கத்தைக் கலைக்கும்போது, அத்தீர்மானத்தின் மூலம், பாராளுமன்றத்தையும் கலைத்து பொதுத்தேர்தலுக்கு வழிவிடல் ‘இரட்டைக்கலைப்பு’ ஆகும். அரசாங்கத்தைத் தோற்கடித்துப் பதவியிழக்கச் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமது பதவியையும் இழக்கும் ஆபத்து இருப்பதால் அரசியல் உறுதிநிலையைப் பேண முன்வரலாம்.
  3. பொதுத்தேர்தல் முடிவுற்றவுடனேயே பிரதமரும் தெரிவு செய்யப்படுதல் என்ற ஏற்பாட்டைச் செய்தல். இதன்மூலம் மறைமுகமாக பிரதம நிர்வாகியான பிரதமரும் நேரடியாக வாக்காளர்களால் தெரிவு செய்யப்படுகிறார் எனப் பொருள் கொள்ளப்படுவதால், பிரதமரின் பதவிக்குப் பலம் சேர்க்கப்படுகிறது (Providing an indirect mandate that reinforces the legitimacy of the chief executive).
  4. சாதாரணப் பெரும்பான்மையால் அரசாங்கத்தைப் பதவியில் இருந்து நீக்க முடியாது; அதிபெரும்பான்மையால் (Super Majority) மட்டுமே நீக்க முடியும் என்ற ஏற்பாட்டைச் செய்தல்.
  5. கலப்புத் தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தல். உதாரணமாக 250 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தின் 100 உறுப்பினர்கள் தனி அங்கத்தவர்கள் தொகுதி முறையூடாகவும் (First-Past-Post System), மீதி 150 பேர் விகிதாசாரத் தேர்தல் முறையூடாகவும் (Proportional Representation) தெரிவு செய்யப்படுதல் என்னும் கலப்புமுறையை நடைமுறைப்படுத்தல். ஆங்கிலத்தில் Mixed Member Proportional (MPP) System என இது அழைக்கப்படும். இக்கலப்புமுறையில் தொங்கு பாராளுமன்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
  6. ஒரு கட்சியில் இருந்து பதவி விலகி வேறு ஒரு கட்சியுடன் இணைதலைத் தடை செய்யும் சட்டங்களை இயற்றுதல். ஆங்கிலத்தில்  ‘Anti Defection Laws’ என இது அழைக்கப்படும். கட்சித்தாவலைத் தடுத்தலும், கூட்டுகளை அமைத்தலும் (Coalition Formation) இத்தகைய சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தப்படும். தேர்தலின்போது வாக்காளர் கொடுத்த ஆணையை மீறாமல் இருத்தலையும், ஊழல் நடவடிக்கைகளைத் தடுப்பதையும் இத்தகைய சட்டங்கள் உறுதி செய்யலாம்.
  7. அரசியல் கட்சிகளின் ஒழுங்கமைப்பை வரையறை செய்யும் சட்டங்களை இயற்றுதல், தனிநபர்களான அரசியல்வாதிகளை முதன்மைப்படுத்தும் தனிநபர்வாதம் (Personalism), கட்சிகள் பிளவுபட்டுப் பலவாகச் சிதறுதல் என்பன நாட்டில் பலமான இருகட்சிமுறை (Two Party System) தோன்றுவதற்குத் தடையாக அமைவன. சட்டங்கள் மூலம் இவற்றை ஒழுங்கமைத்து இரு கட்சிமுறையைப் பலப்படுத்தலாம். இன அடையாளங்களின் அடிப்படையிலான கட்சிகள் பல காணப்படும் நிலையில், பொதுத்தேர்தல் முடிவில் தொங்கு பாராளுமன்றம் என்ற பிரச்சினை ஏற்படுவதுண்டு. சில நாடுகளில் இன அடையாளங்களின் அடிப்படையிலான கட்சிகள் உருவாக்கப்படுவதைச் சட்டரீதியாகத் தடுக்கும் நடவடிக்கைகூட மேற்கொள்ளப்படுவதுண்டு.

அசங்க வெலிக்கல அவர்கள் ‘வளர்ச்சியுறும் ஜனநாயக நாடுகள்’ (Developing Democracies) என்ற தொடர் மூலம் ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் புதிய தேசங்களின் ஜனநாயகமுறைமைகளின் விசேட பிரச்சினைகளை எமது கவனத்திற்குக் கொண்டுவருகிறார். நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதிமுறையை இந்நாடுகளில் நடைமுறைப்படுத்தும்போது அரசியல் ‘உறுதிநிலை’ (Stability) கருத்தில் கொள்ளப்படுகிறது. நடைமுறையில் ‘உறுதிநிலை’ என்பது அதிகாரங்களை ஓரிடத்தில் மிகையாகக் குவிப்பதற்கு (Over Centralization of Power) வழிவகுக்கிறது. ஜனாதிபதிமுறையில், அதிகாரங்களை மிகையாக ஓரிடத்தில் குவித்தல் இடம்பெறும். பல்வேறு இன, மொழி, சமய, பண்பாட்டு வேறுபாடுகளைக்கொண்ட சமூகங்களில் உள்ளீர்ப்பதற்கான அரசியல் முறையினை (Inclusive Political System) ஏற்படுத்துதல் வேண்டும். ஜனாதிபதிமுறை சிறுபான்மை இனத்துவக் குழுமங்களை உள்ளீர்ப்பதற்கான அரசியல் முறையன்று. இத்தகைய அரசியல்முறையில் எதிர்க்கட்சிகளுக்கும், எதிரணி அரசியல் இயக்கங்களுக்கும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அரசாங்கத்தை ஆதரிப்பதால் நன்மை எதுவும் கிடைப்பதில்லை.

ஜனாதிபதிமுறை உள்ள நாடுகள் சிலவற்றில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ள ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் அரசியல் யாப்பை தமது அரசியல் தேவைகளுக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்தும் போக்கைக் காணமுடிகிறது. பொதுத்தேர்தலின் பின்னர் ஆட்சி அதிகாரம் மாறுகின்ற ஒவ்வொரு தடவையும், அரசியல் யாப்பில் ஒட்டு வேலைகளும் திருத்தங்களும் செய்யப்படுகின்றன. அரசியல் யாப்பையே முழுமையாக இரத்துச் செய்துவிட்டு ஆட்சியில் உள்ள அரசாங்கத்தை அகற்றி விடுவதும் இடம்பெறுவதுண்டு.

நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு நிருவாக ஜனாதிபதிமுறை அவசியமானதா?

ஒரு நாட்டின் அரசாங்கமுறைக்கும் (System of Government) பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூற முடியாது. உலகின் பொருளாதார வளர்ச்சியடைந்த செல்வந்த நாடுகளில் பல, பாராளுமன்றமுறையைக் கொண்டனவாக உள்ளன. ‘G7’ என்ற குழுவில் உள்ளனவான ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, இத்தாலி, யப்பான், கனடா என்பன பாராளுமன்ற ஜனநாயகமுறை நாடுகளாகும். இக்குழுவில் உள்ளவற்றுள் ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ் என்ற இரண்டு நாடுகள் மட்டுமே ஜனாதிபதிமுறை நாடுகளாகும். இரண்டாம் உலக யுத்தத்தின்போது பேரழிவுக்கு உள்ளான ஜேர்மனி, யப்பான், இத்தாலி என்பன போருக்குப் பிந்திய காலத்தில் பாராளுமன்றமுறையைத் தொடர்ந்ததோடு பொருளாதார வளர்ச்சியில் பெருவெற்றியைப் பெற்றன.

தனிநபர் வருமானம் (Per Capita Income) என்ற அளவுகோலின்படி, செல்வந்த நாடுகளாக விளங்கும் ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் உலகின் மிகவும் பழமையான பாராளுமன்றமுறை நாடுகளாக விளங்குவதைக் காணலாம். பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளான சிங்கப்பூரும் மலேசியாவும் பின்காலனித்துவக் கட்டத்தில் பாராளுமன்றமுறையில் தொடர்ந்திருந்தபோது, பொருளாதார வளர்ச்சியில் சாதனை படைத்தன. இவ்வாறே பாராளுமன்றமுறை நாடான இந்தியாவும் கடந்த சில பத்தாண்டுகளில் பொருளாதாரத்துறையில் பெரும் முன்னேற்றத்தை அடைந்த பொதுநலவமைப்பு நாடாக விளங்குகிறது.

இலங்கை, சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ச்சியாகப் பின்தங்கியே இருந்து வந்தது. 1960களில் ஜே.ஆர். ஜயவர்த்தன, இலங்கையின் பொருளாதாரப் பின்னடைவுக்குக் காரணம், இலங்கையின் பாராளுமன்ற முறைதான் என்று கூறியதோடு பிறரின் ஆதரவையும் பெற முனைந்தார். அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுச் செயற்பட்டனவென்றும், அரசாங்கங்கள் அடிக்கடி மாறினவென்றும், இக்காரணங்களால் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டதென்றும் அவர் வாதிட்டார். அவர் இலங்கைக்கு பிரான்ஸ் தேசத்தின் பாதி ஜனாதிபதிமுறை (Semi Presidentialism) பொருத்தமானதென்றும், அம்முறையில் ஜனாதிபதிமுறை, பாராளுமன்றமுறை என்ற இரண்டினதும் சாதகமான கூறுகள் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுபவர். அவரது பதவிக்காலம் இத்தனை ஆண்டுகள் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது (Fixed Term). ஆகையால் அவர் தமது பதவிக்காலத்தில் உறுதியோடு செயற்படலாம்; பாராளுமன்ற உறுப்பினர்களின் தயவில் அவர் ஆட்சியில் தொடரும் தேவை இல்லை. அவரால் நீண்டகாலம் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை முன்வைத்துத் திட்டமிட்டபடி செயற்பட முடியும்; நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமான தீர்மானங்களைத் துணிந்து எடுக்க முடியும் என்று வாதிடப்பட்டது. ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்படாதவராகச் சுயாதீனமான நிருவாகத்தைக் கொண்டிருக்கும்போது, பிரதமரும் மந்திரிசபையும் பாராளுமன்ற மரபுகளைப் பேணி வருவர். இக்காரணத்தால் ஜனாதிபதிமுறை, பாராளுமன்றமுறை இரண்டினதும் சாதகமான கூறுகளைப் பாதி ஜனாதிபதிமுறையூடாக ஒன்றிணைக்க முடியும் என வாதிடப்பட்டது. கவர்ச்சிகரமாகத் தோன்றிய இந்த வாதங்களின் உண்மைத்தன்மை, இலங்கையில் ஜனாதிபதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டபோது வெளிப்படலாயிற்று.

ஜனாதிபதிமுறை இலங்கையில் நடைமுறைக்கு வந்த பின்னரும் குறுகியகால நலன்களுக்கான தேர்தல் அரசியல் பண்பாடும், அப்பண்பாட்டு நடைமுறைகளும் தொடர்ந்தன. நீண்டகால நலன்களை முன்வைத்து மேற்கொள்ளப்படும் பருநிலைப் பொருளாதார (Macro Economic) நடவடிக்கைகளை தவறான முறையில் நிர்வகித்தலிலும் மாற்றம் ஏற்படவில்லை. பருநிலைப் பொருளாதாரத் திட்டமிடுதலிலோ அல்லது அக்கொள்கையை நிறைவேற்றுதலிலோ ஜனாதிபதிமுறையின் கீழ் முன்னேற்றம் ஏற்பட்டதெனக் கூற முடியாது. வருமானத் திரட்டுதலில் பொறுப்பற்ற செயற்பாடுகள், செலவுகளைச் செய்வதில் வீண்விரயம் என்பன மோசமடைந்தன. நிர்வாகத்துறையின் தாமதமும், திட்டமிட்டமுறையிலான ஊழல் நடவடிக்கைகளும் தொடர்ந்தன.

ஜனாதிபதிமுறையின்கீழ் முரண்பாடுகள் மோசமடைவதும், ஜனநாயக விரோத நடைமுறைகள் தொடர்வதும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இலங்கையைப் போன்ற பண்பாட்டுச் சூழல் நிலவும் நாடுகளில், ஜனாதிபதிமுறையின் கீழ் இவை தொடர்வதனை நிறுவனம்சார் முறையில் விளக்க முடியும். ஜனாதிபதிமுறை என்ற நிறுவனம் ஜனாதிபதியின் தற்துணிவு அதிகாரம் (Presidential Discretion) என்பதைக் கட்டுப்பாடற்ற முறையில் உபயோகிக்க இடமளிக்கிறது.

இவ்வதிகாரம் ஆட்சியில் உள்ள அரசின் தேவைகளுக்கு முதன்மையளிக்கிறது. மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தப்படுவதில்லை. சிறந்த பொருளாதார ஆளுகை (Good Economic Governance), அதிகாரத்தின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் முறையில் அமைதல் வேண்டும். முடிவு எடுத்தலில் (Decision Making) கட்டமைக்கப்பட்ட செயற்பாடாக அது அமைதல் வேண்டும். வரம்பற்ற முறையிலான தற்துணிவு அதிகாரப் பிரயோகம், சிறந்த பொருளாதார நிர்வாகத்திற்கு உதவுவதில்லை. இலங்கையின் ஜனாதிபதிமுறையின் கீழான முகாமைத்துவம், நாடு பொருளாதாரரீதியில் பின்னடைவை எய்துவதற்குக் காரணமாக இருந்தமையை அனுபவம் உணர்த்தியுள்ளது. பொருளாதார நிறுவனங்களைச் சீர்திருத்தி, பொருளாதார அடைவுகளை மேம்படுத்த வேண்டும். ஜனாதிபதிப் பதவியில் உள்ளவர்களிடம் அதிகாரத்தைக் குவித்தலும், வலுவாக்கம் செய்தலும் (Empowering Presidentialism) பொருளாதார வளர்ச்சிக்கு உதவப் போவதில்லை.

சுத்தமான ஆளுகைக்கு (Clean Governance) ஜனாதிபதிமுறை அவசியமானதா?

‘சுத்தமான ஆளுகை’ என்ற தொடரில் அமைந்துள்ள ‘Clean’ என்ற சொல் ஊழல், மோசடி அற்ற நிர்வாகம் என்ற கருத்தை உடையது. ஜனாதிபதிமுறை ஊழலையும் மோசடிகளையும் ஒழிப்பதற்கான தீர்வாக அமைய மாட்டாது. தேர்தல் முறையும், நாட்டின் அரசியல் பண்பாடும் ஊழல் அரசியலுக்கான பிரதான காரணங்களாகும். ஜனாதிபதிமுறை நிர்வாகத்துறையைக் கட்டுப்படுத்துவதற்கான மாதிரி (Constraining Model) அன்று; அது நிருவாக ஜனாதிபதியைப் பலப்படுத்தும் அரசு மாதிரி; இதனால் ஒரு நிறுவனம் என்ற முறையில் அது சர்வாதிகாரம், ஊழல் என்பனவற்றிற்கு இரையாகக் கூடிய ஒன்று. ஜனாதிபதிகள் பொறுப்புக்கூறலுக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பதில்லை. நாட்டு மக்களின் தேவைகளை அலட்சியம் செய்யும் போக்கும் அவர்களிடம் வெளிப்படும்.

வளர்ச்சியடைந்து வரும் ஜனநாயக நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, ஜனாதிபதிமுறையுடன் விகிதாசாரத் தேர்தல்முறையும் இணையும்போது ஊழல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளது. விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறையில் பல நன்மைகள் உள்ளன. கொள்கையளவில் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை சிறுபான்மையினர், விளிம்பு நிலையினர் ஆகியவர்களையும் அரவணைத்து உள்ளீர்ப்பதற்கு (Inclusiveness) ஏற்றதொரு தேர்தல்முறையாகும். பன்மைத்துவச் சமூகங்களில் இணக்கத்தை வளர்ப்பதற்கு அது உதவக்கூடியது. ஆயினும் அத்தேர்தல் முறையில் இரண்டு பாதகமான அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, அது கட்சி அரசியல் முறையைப் பிளவுபடுத்துகிறது; அம்முறையின் கீழ் கட்சிகள் உடைந்து பல கட்சிகள் தோன்றும் சாத்தியம் கூடிய அளவில் உள்ளது.

இரண்டாவதாக, இலங்கை போன்ற பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களில் அரசியல் இனத்துவமயப்படுதலை (Ethnicisation of Politics) ஜனாதிபதிமுறை தூண்டுகிறது; இனத்துவ அடிப்படையிலான கட்சிகள் தோன்றுவதற்கு அது தூண்டுதல் வழங்குகிறது. இந்நிலையில் ஊழல் நடவடிக்கைகள் அதிகரிக்கும். சட்டத்தின் ஆட்சி, பலம் குன்றும். தமது ஆதரவுக் குழுக்களுக்கு நன்மைகளைப் பகிர்ந்தளித்தல் (Patronage Distribution) அரசியல்வாதிகளின் கடமை என்று கருதப்படும் மனப்பாங்கு மக்களிடம் வளரும்போது, ஊழலுக்கு எதிரான உணர்வும் மழுங்கடிக்கப்படும்.

பாராளுமன்ற அரசியல் ஊழல் மலிந்ததாயும், பல கட்சிகளாகப் பிளவுண்டு பலமற்றதாயும் அமையும் சூழ்நிலையில், ஜனாதிபதி ஓர் இரட்சகராக நாட்டைப் படுகுழியில் இருந்து மீட்பவராக இருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. பாராளுமன்றம் பலவீனமடைந்தால் ஏற்படும் சாதக நிலையை ஜனாதிபதி தனக்குச் சாதகமாகவே பயன்படுத்தப் பார்ப்பார். இதற்காக ஜனாதிபதிமுறை அவருக்கு வழங்கியுள்ள அனைத்து வளங்களையும் (Resources) அவர் உபயோகித்து, அரசியலில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிப்பார்; மேலாதிக்க மனோபாவம் ஜனாதிபதியிடம் வளருமேயன்றிக் குறைவதில்லை. பாராளுமன்றத்தின் பலவீனத்தை அதிகரிக்கச் செய்வதால் அவருக்கு நன்மையே கிடைக்கும்.

பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவதை விடுத்து அவர் பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாது; அது திருத்தவே முடியாத ஒரு நிறுவனம் என்ற விம்பத்தைக் கட்டமைக்கத் தூண்டப்படுவார். அப்பொழுது நாட்டில் குழப்பநிலை நீடிக்கும். நாட்டின் அரசியல் பண்பாட்டில் விரும்பத்தகாத பண்புக்கூறுகள் பூதாகரமாக மேற்கிளம்பியுள்ள சூழலில், பொதுமக்கள் நாட்டை மீட்டெடுப்பதற்கு ஒரு மீட்பர் தேவை எனச் சிந்திப்பார்கள். அவ்வாறான ஒரு நிலை நாட்டில் உருவாகிவிட்டதென்றால், அந்நாடு மக்கள்வாத ஜனாதிபதிச் சர்வாதிகாரம் (Populist Presidential Authoritarianism) என்ற பொறிக்குள் வீழும் அபாயமான வேளை நெருங்கிவிட்டதென உறுதியாகக் கூறலாம்.

இனத்துவ அரசியலின் தீயவிளைவுகளைத் தவிர்ப்பதற்கும், நாட்டில் நல்லாளுகையை உறுதி செய்வதற்கும் ஜனாதிபதிமுறை அவசியமானது எனக் கூற முடியுமா?

பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களில் சிறுபான்மையினரை அந்நியப்படுத்தாது அரவணைத்துச் செல்லுதல் வேண்டும். இதற்கான வழிமுறைகளாக விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை (Proportional Representation), அதிகாரப் பரவலாக்கம் (Devolution) ஆகிய நிறுவன ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இவ்விரு ஏற்பாடுகளும் சில சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் காணமுடிகிறது. ஆட்சியில் உள்ள அரசாங்கத்திற்குச் சார்பாகச் சிறுபான்மை இனங்களின் அரசியல் தலைவர்களைக் கவர்ந்திழுத்து, அவர்களின் ஊடாக சிறுபான்மை இனத்தவர்களின் மொத்த வாக்குகளை (Block Votes) ஆட்சியில் உள்ள அரசாங்கம் அபகரிப்பது ஒரு தந்திரமாகும். இதற்காக சிறுபான்மை இனங்களின் தலைவர்களுக்குப் பல சலுகைகளை அரசாங்கம் தாரளாமாக அள்ளி வழங்கும். இவ்வாறான சலுகைகள் மட்டுமல்லாது அமைச்சுப் பதவிகளை வழங்குதல், இலஞ்சம் வழங்குதல், அபிவிருத்தி நிதி என்ற போர்வையில் அரச நிதியை வழங்குதல், போஷகர் அரசியல் (Patronage Politics) செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குதல் போன்றன சிறுபான்மை இனங்களின் தலைவர்களை விலைக்கு வாங்குவதற்கு ஒப்பான துஷ்பிரயோகமாகும். சிறுபான்மையினருக்கான  பாதுகாப்பு (Minority Protection) தொடர்பான அரசியல் நிறுவன ஏற்பாடுகள், ஜனநாயக அரசியலுக்கு (Democratic Politics) பாதகமான முறையில், ஜனாதிபதிமுறையில் பிரயோகிக்கப்படுதற்குப் பல உதாரணங்களைக் காட்டமுடியும். இத்தகைய துஷ்பிரயோக நடவடிக்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்தாடல்களை (Anti-Minority Discourses) முன்னெடுப்பதற்கு உதவுகின்றன. மக்கள் மத்தியில் சந்தேக உணர்வை வளர்ப்பதற்கும், பிளவுகளைத் தூண்டி விடுவதற்கும் இவை காரணமாக அமைகின்றன. பாராளுமன்ற அரசியலை (Legislative Politics) செயலற்றதாக்குதல், நிர்வாகத்துறை மேலாதிக்கத்திற்கு (Executive Dominance) உதவும் என்பதை நடைமுறை அனுபவம் உணர்த்துகிறது. தமக்குப் போட்டியான நிறுவனமான (Rival Institution) பாராளுமன்றத்தைப் பலவீனப்படுத்துவதற்கு ஜனாதிபதிப் பதவியில் இருப்பவர்கள் தூண்டப்படுகின்றார்கள். பிளவுண்டதும், ஊழல்மிக்கதுமான இனத்துவக் கட்சி முறைமை (Fragmented and Corrupt System of Ethnic Parties), நிருவாகத்துறையின் மேலாதிக்கத்திற்கு உதவுவதாகவே அமைவதால், ஜனாதிபதிமுறை இனத்துவ அரசியலின் தீய விளைவுகளை நீக்கி நல்லாளுகைக்கு வழிவகுக்கும் எனக் கூறுவது ஏற்புடையதன்று.

சிங்கள – பௌத்தப் பண்பாட்டைப் பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும் ஜனாதிபதிமுறை அவசியமானதா?

ஜனாதிபதிமுறை இலங்கையின் பண்டைய சிங்கள – பௌத்த முடியாட்சியின் மீள் உருவாக்கம் செய்யப்பட்ட ஆட்சிமுறையே அன்றி வேறல்ல என்ற கருத்தை ஜே.ஆர். ஜயவர்த்தன சிங்கள – பௌத்தர்களிடையே பரப்பினார். இக்கருத்தின் மூலம் ஒரு தூரநோக்கு இலட்சியம் (Vision) முன்வைக்கப்பட்டது. அவர் குடியரசின் (Republic) தலைவராகவே தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டார். ஆயினும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானதும் தாம் ‘தர்மிஷ்ட சமாஜய’ என்னும் பௌத்த சமயிகள் சமூகத்தை ஆட்சி செய்யும் ‘தர்மராஜ’ ஆக இருப்பதாகக் கூறினார். பண்டைய சிங்கள – பௌத்த மன்னர் வழி வந்த ஒரு முடிமன்னர் தாமென்ற பாவனை, அவர் பேச்சுகளிலும் நடத்தைகளிலும் வெளிப்பட்டன. மக்கள் குடியரசின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர், ஒரு குறிப்பிட்ட மொழி, சமயப் பிரிவினரின் ‘தர்மராஜ’ எனக் கூறத் தொடங்கினார். இலங்கை மக்களுக்கு அவர் முன்வைத்த அரசியல் யாப்பு இலட்சியம் (Constitutional Vision) பற்றி அசங்க வெலிக்கல அவர்கள் பின்வருமாறு கருத்துரைக்கின்றார்:

“This was an astute blend of tradition and modernity for the purpose of communication and ‘selling’ his constitutional vision to the electorate.”

அசங்க வெலிக்கல அவர்கள் கருத்துச் செறிவும் சொற்சிக்கனமும் கொண்டதாக ஆங்கிலத்தில் அழகாகச் சொல்லியிருப்பதைத் தமிழில் பின்வருமாறு விளக்கிக் கூறலாம்:

“முடிமன்னர் ஆட்சி என்ற மரபுவழிக் (Tradition) கருத்தையும் முடியாட்சி (Republic) என்ற நவீனத்துவம் (Modenity) சார்ந்த எண்ணக்கருவையும் ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்கள் தந்திரமான முறையில் கலப்புச் செய்கிறார். இக்கலவை வாக்காளர்களுக்கு ஓர் அரசியல் யாப்பு இலட்சியத்தை (Constitutional Vision) வழங்குவதற்காக அவரால் தயாரிக்கப்பட்டது. வாக்காளர் மனதில் இக்கருத்தை அவர் கச்சிதமான முறையில் ஆழப்பதித்து விடுகிறார்.”

1972இன் பாராளுமன்ற அரசியல் யாப்புக்கும் 1978இன் ஜனாதிபதிமுறை அரசியல் யாப்புக்கும் இடையே சிங்கள – பௌத்தப் பண்பாட்டைப் பாதுகாத்தல் என்ற விடயத்தில் அதிக வேறுபாடு இல்லை என்பதையும், இரு அரசியல் யாப்புகளும் ‘பௌத்த – சிங்களப் பண்பாட்டிற்கு முதன்மை’ (Primary of the Sinhala Buddhist Culture) என்பதற்கு அங்கீகாரத்தை வழங்கின என்பதையும் அசங்க வெலிக்கல அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார். ஆகையால் பாராளுமன்ற முறையினால் மட்டுமே சிங்கள – பௌத்தப் பண்பாட்டைப் பாதுகாக்க முடியும் என்ற வாதம் பொருந்தாது என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

13ஆவது அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் பின்னர், 1972 யாப்புக்கும், 1978 அரசியல் யாப்புக்கும் இடையே குறிப்பிடத்தக்க இரண்டு வேறுபாடுகள் ஏற்பட்டதை அசங்க வெலிக்கல அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை. அவ்வேறுபாடுகளாவன:

  1. 13ஆவது திருத்தம் சிங்களத்தையும் தமிழையும் உத்தியோக மொழியாக்கியது. இதன்மூலம் பன்மைத்துவ உத்தியோக மொழிக்கொள்கை (Pluralist Official Language Policy) அரசியல் யாப்பில் புகுத்தப்பட்டது.
  2. அதிகாரப் பரவலாக்கம் (Devolution) இலங்கையின் ஒற்றையாட்சி இயல்பை ஓரளவுக்கு மாற்றியது (Diluted the Unitary with Devolution).

13ஆவது திருத்தத்துடன், பாராளுமன்றமுறை இல்லாதுபோய், ஜனாதிபதிமுறை வந்திருந்தாலும், சிங்கள – பௌத்தப் பண்பாட்டு முதன்மை (Sinhala Buddhist Cultural Primacy) என்பதில் அடிப்படை மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆகையால் சிங்கள – பௌத்தப் பெரும்பான்மையினருக்கு, தமது சிங்கள – பௌத்தப் பண்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதற்கு, ஜனாதிபதிமுறையைப் பாதுகாக்க வேண்டும் என்ற தேவை இல்லை என்பதை அசங்க வெலிக்கல அவர்கள் வலியுறுத்திக் கூறுகிறார்.

ஜனாதிபதிமுறையை ஒழிக்க வேண்டிய அவசியம் இல்லை; அம்முறையின் சர்வாதிகார இயல்புகளை அரசியல் யாப்புச் சீர்திருத்தம் மூலம் நீக்கிவிடுதலே சாலச் சிறந்தது என்ற வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

இலங்கையின் ஜனாதிபதி என்ற நிருவாகத்துறை நிறுவனத்திடம் உள்ள சர்வாதிகார அதிகாரங்களை அரசியல் யாப்புச் சீர்திருத்தம் மூலம் நீக்கிவிடலாம். அதுவே ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி; ஜனாதிபதிமுறையை ஒழிக்க வேண்டியதில்லை எனச் சிலர் வாதிடுகின்றனர். இவ்வாதத்தின் பொருத்தமுடைமை பற்றிப் பரிசீலித்துப் பார்ப்போம். யாப்புச் சீர்திருத்தத்தின் மூலம் திருத்தப்பட்ட ஜனாதிபதிமுறை பின்வரும் இரு மாதிரிகளில் ஒன்றாகவே அமைதல் முடியும்.

அ) அமெரிக்காவின் மாதிரியிலான தூய ஜனாதிபதிமுறையாக (Pure Presidentialism of the American Model) இருத்தல் முடியும். இம்முறைக்கு மாறும்போது முழுமையான அதிகாரப் பிரிப்பு (Full Seperation of Power) இருக்கும். அதாவது சட்ட ஆக்கச் சபைக்கும் (பாராளுமன்றம்) நிர்வாகத்துறைக்கும் (ஜனாதிபதி) இடையே முழுமையான அதிகாரப் பிரிப்பு  நடைமுறையில் இருக்கும்.

ஆ) பாதி-ஜனாதிபதிமுறையைத் (Semi-Presidentialism) திருத்தம்செய்து, அதனை பிரதமர்-ஜனாதிபதிமுறையாக (Premier-Presidential) மாற்றுதல் இரண்டாவது வழியாகும்.

இவ்வாறு சீர்திருத்தம் மூலம் ஜனாதிபதிமுறையைத் திருத்தியமைக்கலாம் என்று கூறுபவர்கள், இலங்கையின் அரசியல் முறைமையின் நோயியல் கூறுகளைச் சரியாக அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்றே கருதலாம்.

ஜனாதிபதிமுறை என்னும் அரசியல் நிறுவனம் ஊடாக நிருவாக அதிகாரம் (Executive Power) பிரயோகிக்கப்படுதல் இலங்கையில் எத்தகைய அரசியல் பண்பாட்டுப் (Political Culture) பின்புலத்தில் இடம்பெறுகிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கையின் அரசியல் பண்பாடு, தனிநபர் ஒருவரிடம் அரசியல் அதிகாரங்களைக் குவிக்கும் ‘தனிநபர் வாதம்’ (Personalism) என்னும் அரசியல் பண்பாட்டை ஊக்குவிப்பது; இலங்கையில் ஜனநாயக அரசியல் பண்பாடு மலர வேண்டும் என்று விரும்புபவர்களால் இத்தகைய ‘தனிநபர் வாதத்தை’ ஏற்க முடியாது. இது சர்வாதிகார ஜனாதிபதிமுறை தனிநபர் ஒருவரிடம் குவிவதற்கு ஆதரவான ஆட்சிமுறையாகும்.

அதிகாரத்தை மிகையாக மத்தியில் குவிக்கும் (Over Centralised) ஜனாதிபதிமுறை நல்லாளுகைக்கு மாறான ஜனநாயக விரோத நடைமுறைகளை நிருவாகத்துறையில் புகுத்திவிடும். முடிவுகளை எடுத்தலில் (Decision Making) வெளிப்படைத்தன்மையும், பொறுப்புக்கூறலும் (Transparency and Accountability) இருக்கமாட்டாது. தனி ஒருவரை மையமாகக்கொண்ட நிருவாகமுறை ஊழலுக்கு வழிவகுக்கும். ஊழலையும், நிருவாகச் சீர்கேடுகளையும் தடுப்பதற்கு, பல நிறுவனங்களிடமும், பல்வேறு மையங்களிடமும் அதிகாரத்தைப் பரவலாக்கி விடுதலே (De-concentrate or De-centre Power) சிறந்த வழியாகும். அதன்மூலம் நிருவாகத்துறைக்குள் கட்டுப்பாடுகளும், சமன்படுத்தல்களும் (Checks and Balances) செயற்பட வழி ஏற்படும்.

ஜனாதிபதிமுறை இத்தகைய கட்டுப்பாடுகளை அனுமதிக்காது. ஜனாதிபதிமுறையோடு பாராளுமன்ற முறையை ஒப்படும்போது, அதிகாரச் சமநிலையுடைய (Balance of Power) நிறுவன ஒழுங்கமைப்பை உருவாக்குவதற்கு பாராளுமன்றமுறையே சிறந்த மாதிரி ஆகும். அம்முறையின் கீழ் சட்டசபையின் ஓர் அங்கமாக, கூட்டு நிர்வாக அதிகாரமுடைய (Collective Executive Power) மந்திரிசபை விளங்குகிறது. அம்மந்திரி சபை சட்டசபைக்குப் பொறுப்புக்கூற வேண்டியதாகவும் உள்ளது. நிருவாக அதிகாரத்தைச் செலுத்தும் மந்திரிசபை சட்ட ஆக்கத்துறையான பாராளுமன்றத்தின் நம்பிக்கையை இழக்கும்போது, பதவியிழக்க வேண்டி ஏற்படும். இக்காரணங்களால் ஒப்பீட்டளவில் ஊழலற்ற, வினைத்திறனுடைய நிர்வாகத்தை உருவாக்குவதற்கு பாராளுமன்றமுறையே சிறந்தது.

அரசியல் யாப்புச் சட்ட நோக்கில் பாராளுமன்றமுறை, ஜனாதிபதிமுறை என்பனவற்றின் ஒப்பீடு இவ் உண்மையை எமக்குத் தெளிவுபடுத்துகிறது.

  1. மந்திரிசபையின் கூட்டுப் பொறுப்பு

பாராளுமன்றமுறையில் மந்திரிசபை கூட்டுப் பொறுப்பு (Collective Responsibility) என்னும் அடிப்படையில் செயற்படுகிறது. கூட்டுப் பொறுப்பு என்ற கருத்து உணர்த்துவது யாதெனில், நிருவாக அதிகாரம் பலரால் கூட்டாகச் செயற்படுத்தப்படுகிறது; அதனால் அவ்வதிகாரம் பன்மை அதிகாரமாகும், என்பதே. அது ஒரு தனிநபரின் அதிகாரப் பிரயோகத்தைக் குறிப்பிடவில்லை (The principle of collective responsibility means that the political executive is plural, collegiate and corporate entity and not the rule of one person).

  1. மந்திரி சபையின் தலைவரான பிரதமர்

மந்திரி சபையின் தலைவரான பிரதமர் பிறமந்திரிகளுக்குச் சமதையானவர்; அவர் அவர்களுள் முதன்மையானவர் (First Among Equals) ஆவார். அவர் ஜனாதிபதி என்ற தனிநபரின் நிலையில் இருந்து வித்தியாசமான அந்தஸ்தை உடையவர். ஜனாதிபதி, மந்திரிகளை தனக்குக் கீழ்ப்பட்டவர்களாக, சுதந்திரமாகச் செயற்பட முடியாதவர்களாக ஆக்கும் முறையில் நிருவாகத்தை நடத்த முடியும்.

  1. அரசுத்தலைவர் வேறு, அரசாங்கத் தலைவர் வேறு

பாராளுமன்றமுறையில் அரசுத்தலைவர் சம்பிரதாயபூர்வமான கடமைகளை ஆற்றும் பெயரளவிலான அதிகாரமுடையவராக இருப்பார். அரசாங்கத் தலைவரான (Head of Government) பிரதமர், நிர்வாகத்துறைத் தலைவராக இருப்பார். ஜனாதிபதிமுறையில் அரசுத்தலைவர் (Head of Government), அரசாங்கத் தலைவர் என்ற இரு பதவிகளையும் ஒருவரே வகிக்கின்றார். இவ்விரு பதவிகளையும் ஒன்றிணைக்கும் ஜனாதிபதிப்பதவி, சர்வாதிகாரத்திற்குத் துணைபோவதாக அமையும் ஏற்பாடாகும். பாராளுமன்றமுறையில் அரசுத்தலைவர், அரசாங்கத் தலைவர் என்ற அதிகாரப் பிரிப்பு (Separation of Powers), நிர்வாகத்துறையின் அதி உயர் மட்டத்தில் (Apex Level) உள்ளவரின் மீதான கட்டுப்பாடாகும்.

  1. நிர்வாக அதிகாரத்தின் பிரிப்பு

பாராளுமன்றமுறையில் நிர்வாக அதிகாரம் பிரிக்கப்பட்டு பரவலாக்கப்பட்டு இருக்கும். உள்ளகப் பிரிப்பு என்ற வகையில் மந்திரிசபைக்குள் அதிகாரப் பிரிப்பு உள்ளது. செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் என்ற வகை அதிகாரிகளிடமும் அதிகாரம் பகுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிமுறை, தனிநபருக்கு முடிவுகளை எடுப்பதில் முதன்மை அளிப்பதால், நிருவாகத் துறைக்குள் உள்ளக அதிகாரப் பிரிப்புக்கு (Internal Separation of Powers) இடமளிப்பதில்லை. பாராளுமன்றமுறையில் எந்தவொரு தனிநபரும் தமக்கு மக்களின் நேரடி ஆணை (Direct Mandate) உள்ளதெனக் கோர முடியாது.

அரசியல் யாப்புச் சட்ட நோக்கிலான மேற்குறித்த ஒப்பீடு, பாராளுமன்றமுறை தனிநபர் சர்வாதிகாரத்தைத் தடுக்கக்கூடியது என்ற உண்மையைத் தெளிவுபடுத்துகிறது. ஆயினும் உலக நாடுகளின் வரலாற்று அனுபவத்தில் இருந்து ‘சர்வாதிகாரப் பாராளுமன்ற முறைகளுக்கு’ (Authoritarian Parliamentary Systems) உதாரணம் காட்டமுடியும் என அசங்க வெலிக்கல குறிப்பிடுகிறார். அரசியல் விஞ்ஞானிகளாலும், அரசியல் சட்டப் புலமையாளர்களாலும் எழுதப்பட்ட ஒப்பீட்டு ஆய்வுகள், ஜனாதிபதிமுறையானது பாராளுமன்றமுறையைவிடச் சர்வாதிகாரிகள் தோன்றுவதற்கு கூடியளவு வாய்ப்புகளை அளிக்கின்றது எனவே கூறுகின்றன. 

பாராளுமன்றமுறை ஜனநாயக அரசியல்முறை மலர்ச்சி பெறுவதற்குச் சாதகமான அரசாங்க முறையாகும்:

அ) பாராளுமன்ற முறை அரசியல் பன்மைத்துவத்தின் (Political Pluralism) அடிப்படையில் கட்டமைக்கப்படுவது.

ஆ) இதற்கு மாறாக ஜனாதிபதிமுறை, நிர்வாக அதிகாரம் பிரிக்கப்படாமல் ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருக்க வேண்டும்; அவ்வதிகாரம் தனிநபர் அதிகாரமாகவும் இருத்தல் வேண்டும் என்ற ஒருமைக் கோட்பாட்டின் (Monistic and Personalised Executive Power) அடிப்படையில் கட்டமைக்கப்படுவது.

இ) இக்காரணங்களால் பாராளுமன்றமுறை, ஜனநாயகத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும், ஜனாதிபதிமுறை கட்டுப்பாட்டுக்கு (Control) அழுத்தம் கொடுப்பதாகவும் அமைகிறது.

முடிவுரை

இத்தமிழ்க்கட்டுரை ‘Nonsense upon Stilts? Revisiting Justifications of Presidentialism in Sri Lanka’ என்ற தலைப்பில் அசங்க வெலிக்கல அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் எளிமைப்படுத்திய தமிழாக்கமாகும். ஆங்கிலக் கட்டுரையில் கூறப்பட்ட கருத்துகள் தொகுத்தும் சுருக்கியும், வேண்டியவிடத்து விரித்து விளக்கியும், தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலக் கட்டுரை 2020ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி ‘Ground Views’ இணைய சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது.


ஒலிவடிவில் கேட்க


About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்