அறிமுகம்
மனிதன் இந்தப் பூமியில் படைக்கப்பட்டதில் இருந்து சனத்தொகையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இந்த அதிகரிப்பானது குறைந்த வீதத்தில் இருந்தாலும், பின்னர் மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் காரணமாகவும், மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறையில் ஏற்பட்ட மேம்பாடு காரணமாகவும் இறப்பு வீதம் குறைவடைய மனிதக் குடித்தொகையின் வளர்ச்சிப் போக்கு வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. 1800 ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1 பில்லியன் (Billion) ஆக இருந்த மனித சனத்தொகை, 123 வருடங்களிலேயே இருமடங்காகப் பெருகியது. ஆனால், 1925 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஒவ்வொரு இரு மடங்காகப் பெருகுவதற்கு வெறும் 45-50 ஆண்டுகளே தேவைப்பட்டன. இந்த அசுர வளர்ச்சியானது மிகப் பயங்கரமான விளைவுகளை (உணவுப் பஞ்சம், இடப் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, காலநிலை மாற்றம், நாடுகளுக்கு இடையேயான போட்டி) இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்படுத்தியது. இந்த விளைவுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாக இருந்தன. ஒரு விளைவு ஏற்படும்போது பலவிளைவுகளின் தாக்கங்கள் மனித சமூகத்தை ஒன்றாக அழுத்தின. இவற்றில் பிரதானமானவையும் ஜீரணிக்கமுடியாதவையுமாக பசியும் பட்டினிச் சாவும் காணப்படுகின்றன.
சனத்தொகை பெருக்கமும் பட்டினியும்
பட்டினிச் சாவினால் பல மில்லியன் கணக்கான மக்கள் மிகக் குறுகிய காலத்தில் இறந்ததனால் 18 ஆம் நூற்றாண்டில் மனிதப் பெருக்கம் கட்டுக்குள் இருந்தது. இதற்குச் சான்றாக உலகளவில் ஏற்பட்ட மிகப் பெரிய உணவுப் பஞ்சத்தையும் இதனால் ஏற்பட்ட உலகின் மிகப் பெரிய பத்து பட்டினிச் சாவு அவலங்களின் வரலாற்றையும் கூறலாம். (அட்டவணை 1) ஆனாலும், மனிதக் குடித்தொகை வளர்ச்சி வீதத்தின் வேகம் குறைந்தபாடில்லை. இதனால் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தே மனிதக் குடித்தொகைப் பெருக்கத்தின் தாக்கத்தினை மீண்டும் உலக நாடுகள் உணரத் தொடங்கின.
இந்தக் காலத்தில் தாமஸ் ரொபேர்ட் மால்தஸ் (Thomas Robert Malthus) என்ற பிரிட்டிஷ் தத்துவஞானி மற்றும் பொருளாதார வல்லுநர், மால்தூசியன் வளர்ச்சி வளையியையும் மக்கள்தொகை வளர்ச்சியை திட்டமிடுவதற்கு பயன்படுத்தப்படும் சூத்திரத்தையும் வகுத்து, மக்கள்தொகையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்ய முடியாது, இதன் விளைவாக நோய், பஞ்சம், போர் மற்றும் பேரழிவு ஏற்படும் என்றும் இதன்மூலமே சனத்தொகைப் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் என்ற கோட்பாட்டை முன்மொழிந்தார். இதனைக் கருத்தில் கொள்ளாத நாடுகள் முன்னாயத்தமாக பெருகிவரும் சனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய ஒரு மிகப் பெரிய நெருக்கடிக்கும் நிர்ப்பந்தத்துக்கும் தங்களை தயார்ப்படுத்த முயற்சிகளை எடுத்தன. இதற்காக, ஒவ்வொரு நாடும் பாரம்பரிய விவசாய முறைமைகளை மாற்றியமைத்து நவீன விவசாயத்துக்கு செல்லவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன. இந்த முயற்சியே விவசாயப் புரட்சிக்கு வித்திட்டது.
விவசாயப் புரட்சியும் அதிகரித்த உணவு உற்பத்தியும்
பாரம்பரிய விவசாய நடைமுறைகள் மூலம் நமது பாரம்பரிய பயிர் வர்க்கங்களைக் கொண்டு உணவு உற்பத்தியை மேற்கொண்டால் மட்டுப்படுத்தப்பட்ட விளைச்சலே கிடைக்கும். உதாரணமாக நெல்லின் மூலம் 2 ton/hac என்ற அளவிலே தான் விளைச்சலைப் பெற முடியும். பல மடங்கு உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமாக இருந்தால் இரண்டே இரண்டு உத்திகள் மாத்திரமே இருக்கின்றன.
- உணவு உற்பத்தி செய்வதற்கான விவசாய நிலத்தின் விஸ்தீரணத்தை அதிகரித்தல்:
ஏற்கனவே நாம் பூமியின் நிலப்பரப்பில் 38% வீதமான பரப்பளவை விவசாயத் தேவைகளுக்காகவும் (பயிர் உற்பத்தி) மற்றும் மனித பயன்பாட்டிற்காக கால்நடைகளை வளர்ப்பதற்காகவும் பயன்படுத்தி வருகின்றோம். இதற்கு மேல் நாம் விவசாயம் செய்யும் நிலப்பரப்பை அதிகரிப்போமானால் நாம் நமது இருப்பையும் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் காடுகளை அழிக்க வேண்டிய நிலை உருவாகும். அதன் விளைவாக ஏற்படும் பாரிய காலநிலை மாற்றத்தினால் இயற்கை அனர்த்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டி வரும். எனவே இது சாத்தியமில்லை.
- எம்மிடம் இருக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் இருந்து உற்பத்தித்திறனை அதிகரித்தல்:
விவசாய நிலங்களில் இருந்து உற்பத்தித்திறனை அதிகரிக்கின்ற வழிமுறைகளைக் கையாண்டால் மாத்திரமே எம்மால் உணவு உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தி தன்னிறைவு அடைய முடியும் என்பது கண்கூடு. இதற்காக நாம் விவசாய நுட்பங்கள், உள்ளீடுகள் மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் என்பவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் சாத்தியமாக்கலாம். இதனையே பசுமைப் புரட்சி என அழைக்கின்றோம்.
பசுமைப் புரட்சி
விவசாயப் புரட்சி என்பது விவசாயத்துறையில் தொடர் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதுமையான குறைந்தகால அதி உயர் விளைச்சலைத் தரக்கூடிய பயிர் வர்க்கங்களை, அதிகளவிலான விவசாய உள்ளீடுகளான இரசாயன உரங்கள், பீடைநாசினிகள், நிலத்தைப் பண்படுத்தும் இயந்திரங்கள், பயிர் நடும் இயந்திரங்கள், நீர்ப்பாசன மற்றும் அறுவடைத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பன்மடங்கு விளைச்சலை ஒரு ஹெக்ரேயர் நிலத்தில் இருந்து பெறுவதை முன்னிறுத்துகின்றது.
விவசாயப் புரட்சியின் ஆரம்பம் 1940 களில் மெக்ஸிக்கோவில் விவசாயத்தில் ஆர்வமுள்ள அமெரிக்க விஞ்ஞானி நார்மன் போர்லாக் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு, 1960 களின் பிற்பகுதியில் உலகம் முழுக்க உணவு உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தி தாமஸ் மால்தஸ் என்ற பிரிட்டிஷ் தத்துவஞானியின் பொருளாதாரக் கோட்பாடுகளை பார்க்கச் செய்தது. இந்த விவசாயப் புரட்சியை ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பின் தலைவர் William Gaud பசுமைப் புரட்சி என்று பெயரிட்டு அழைத்தார். அதன் பின்னர் பசுமைப் புரட்சி என்ற நாமம் உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் விவசாயத்துறையில் ஏற்படுத்தப்படுகின்ற அனைத்து மேம்பாடுகளும் அப்பெயர்கொண்டு அழைக்கப்பட்டன.
பசுமைப் புரட்சியின் வரலாறு
அமெரிக்க விஞ்ஞானி நார்மன் போர்லாக் 1940 களில் மெக்ஸிக்கோவில் தனது அயராத ஆராய்ச்சிகள் மூலம் துரு நோய் மற்றும் இதர நோய்களைத் தாங்கி வளரும் நோய் எதிர்ப்பைக் கொண்ட அதிஉயர் கோதுமை வர்க்கங்களை உருவாக்கினார். இவ்வாறு உருவாக்கப்பட்ட இனங்களை இயந்திரமயமான விவசாய தொழில்நுட்பங்களுடன் இணைத்து பயிரிட்டு ஏக்கருக்கு பன்மடங்கு (7 மடங்கு அதிக விளைச்சல்) விளைச்சலை பெறலாம் என்பதை நிரூபித்துக் காட்டினார். இதன் மூலம் மெக்ஸிக்கோ அதன் சொந்த குடிமக்களுக்கு தேவைப்படுவதைக் காட்டிலும் அதிக கோதுமையை உற்பத்தி செய்ய முடிந்தது.இதனால் அமெரிக்கா 1940 களில் அதன் கோதுமைத்தேவையின் பாதியை இறக்குமதி மூலமே பெற்றுக்கொண்டது. ஆனால் பசுமைப் புரட்சி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, 1950 களில் கோதுமையில் தன்னிறைவு பெற்றது, 1960 களில் அமெரிக்கா ஒரு கோதுமை ஏற்றுமதி நாடாக மாறியது. இதனை கௌரவிக்கும் முகமாக நார்மன் போர்லாக்கின் ஆராய்ச்சிக் கூடம் 1959 இல் சர்வதேச ஆராய்ச்சிக் கூடமாக தரமுயர்த்தப்பட்டு பின்னர் 1963 இல் இது முறையாக கோதுமை மக்காச்சோளம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனமாக (CIMMYT) தரமுயர்த்தப்பட்டுள்ளது. மெக்ஸிகோவில் நடந்த இந்த விவசாயப் புரட்சி 1950 கள் மற்றும் 1960களில் உலகளவில் பரவியது. அதிகரித்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப் புரட்சி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களை பட்டினி மற்றும் பஞ்சத்தில் இருந்து காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையை இந்த வெற்றி உலக நாடுகளுக்கு அளித்தது.
இந்த விவசாயப் புரட்சியை உலகம் முழுவதும் ஏற்படுத்த, ராக்பெல்லர் பவுண்டேஷன் மற்றும் ஃபோர்ட் அறக்கட்டளை (The Rockefeller Foundation and the Ford Foundation), மற்றும் உலகெங்கிலும் உள்ள பல அரச நிறுவனங்களும் அதிக ஆராய்ச்சிகளுக்கு நிதியளித்தன.
1960 களின் ஆரம்பத்தில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை காரணமாக, இந்தியா பஞ்சத்தின் விளிம்பில் இருந்தது. இதனால் 1970 களில், இந்தியாவிற்கும் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்துக்கும் வரவழைக்கப்பட்ட நார்மன் போர்லாக் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவினர் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸில் பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளை அந்தநாடுகளின் விவசாய விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொண்டு பல்வேறு வகையான அதிஉயர் விளைச்சலைத் தரக்கூடிய கோதுமை மற்றும் நெல் (IR8) வர்க்கங்களை உருவாக்கினர். அத்துடன் நீர், உரம் மற்றும் பீடைநாசினி மேலாண்மை மற்றும் முகாமைத்துவ நுட்பங்களும் பயிற்றுவிக்கப்பட்டன. இந்தியாவில் IR8 ஐக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மேலதிக ஆராய்ச்சிகள் மூலம் IR36 என்ற கட்டை நெல் இனமும் உருவாக்கப்பட்டு ஆசியா முழுவதும் நெற் பசுமைப் புரட்சி உருவானது. இதனை மேற்கொண்ட எம். எஸ் சுவாமிநாதன் என்ற இந்திய விவசாய விஞ்ஞானி ஆசியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படுகிறார். இந்தப் பசுமைப் புரட்சியால் நெல் விளைச்சல் 2 ton/hac வில் இருந்து 7.7-10 ton/hac என பன்மடங்கு அதிகரித்தது. இந்தியாவில் அரிசி உற்பத்தி வளர்ச்சியடைந்ததை அடுத்து, பத்தாண்டுகளில் உலகின் முன்னணி அரிசி உற்பத்தியாளர்களில் இந்தியா முதன்மை வகித்தது. அத்துடன் ஆசியா முழுவதும் பரவலாக IR8 அரிசியும் பயன்படுத்தப்பட்டது.
பசுமைப் புரட்சியின் தத்துவங்கள்
பசுமைப் புரட்சியின் வெற்றிக்கு பின்வருவன காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
(i) Short duration High-Yielding Variety(HYV) seeds: குறுகிய காலத்தில் முதிர்ச்சியடையும் அதிக விளைச்சல் தரும் வகை (HYV) விதைகளைப் பயன்படுத்துதல்.
(ii) Use of fertilizers, manures and chemicals: விவசாய உற்பத்தியில் உரங்கள் மற்றும் இரசாயனங்களின் பயன்பாடு
(iii) Multiple Cropping Patterns: விவசாயிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்களை ஒரே இடத்தில் வளர்க்க அனுமதிக்கும் பல பயிர் முறைகள் காரணமாக உயர் விளைச்சல் தரும் வர்க்கங்களின் (High Yielding Varieties) விதைகள் விரைவாக முதிர்ச்சியடையும். இது மொத்த உற்பத்தியை அதிகரிக்க உதவியது.
(iv) Farm Mechanization: டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள் பம்ப் செட் போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்தி விவசாயத்தை இயந்திரமயமாக்குதல் மூலம் விவசாயம் பெரிய அளவில் நடக்கிறது.
(v) High-Tech Infrastructure facilities: சிறந்த போக்குவரத்து, நீர்ப்பாசனம், சேமிப்புக் கிடங்கு, ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், சந்தை வசதிகள், கிராமப்புற மின்மயமாக்கல் ஆகியவை பசுமைப் புரட்சியின் போது உருவாக்கப்பட்டன.
(vi) Price Incentives: இது பல்வேறு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதை நிர்ணயித்ததோடு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையை தொடர்ச்சியாக வழங்குவதிலும், விவசாயிகள் தத்தமது கண்டுபிடிப்பை ஊக்குவிக்கவும் வழிவகுக்கிறது
(vii) Better financial assistance: பரந்த வளர்ச்சியுடன் கடன் வசதிகளை பரப்புவதன் மூலம் சிறந்த நிதி உதவி, வணிக வங்கிகளின் தொடர்பு, கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கியை நிறுவுதல். விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி கிராமப்புற நிதியை ஒருங்கிணைக்கும் வங்கி வசதிகள் தொடங்கப்பட்டன
பசுமைப் புரட்சியால் உணவுத் தேவை பூர்த்தி செய்யப்பட்டதா?
1960 களின் பசுமைப் புரட்சி எவ்வளவு காலம் பெருகிவரும் மக்கள் தொகைக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யும்? என்ற கேள்வி இன்று அனைவரது மனதிலும் எழுகிறது. உணவு உற்பத்தி மற்றும் தேவை வளையியின் படி நாம் தற்போதைய உற்பத்தியின் 1.75% அதிகரித்த உற்பத்தி வீதத்தில் ஒவ்வொரு வருடமும் உற்பத்தி செய்தால் மாத்திரமே எம்மால் அனைவருக்கும் போதுமான உணவை வழங்க முடியும்.
அதுமட்டுமன்றி, ஐ. நா. வின் பட்டினிக்கான அமைப்பின் தரவுகளின் படி உலகளாவிய ரீதியில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 828 மில்லியனாக உயர்ந்துள்ளது, 2020 முதல் சுமார் 46 மில்லியன் மற்றும் COVID-19 தொற்றுநோய் (1) வெடித்ததில் இருந்து 150 மில்லியனாக அதிகரித்துள்ளது (படம் 3). இந்தப் புள்ளி விபரங்கள் ஐக்கிய நாடுகளின் திட்டப்படியான 2030 ஆம் ஆண்டுக்குள் பசி, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை அதன் அனைத்து வடிவங்களிலும் முடிவுக்குக் கொண்டுவரும் இலக்கிலிருந்து உலகம் மேலும் விலகிச் செல்கிறது என்பதற்கான புதிய சான்றுகள். இதில் இருந்து ஒன்று தெளிவாகிறது. அதாவது, பிரிட்டிஷ் தத்துவஞானியும் பொருளாதார வல்லுநருமான மால்தூசியன் கொள்கைப் படி மக்கள்தொகையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு உற்பத்தியை மேற்கொள்ள முடியாது.இதன் விளைவாக நோய், பஞ்சம், போர் மற்றும் பேரழிவு ஏற்படும் என்பதுடன், இதன்மூலமே சனத்தொகைப் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும்.
இதனையே நாம் இன்று கண்கூடாகக் காண்கின்றோம். உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி, பஞ்சம், இயற்கை அழிவு, போர், நாடுகளுக்கு இடையிலான போட்டி இவை அனைத்தும் மனிதக் குடித்தொகை அதிகரிப்பால் ஏற்பட்ட விளைவுகளே. இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் COVID-19 வந்ததே மக்களை அழித்து உலகை சமநிலைப்படுத்தவேயாகும். நாம் எமது விஞ்ஞான முன்னேற்றத்தால் தடுப்பூசி போட்டு கொவிட்டைத் தடுத்துவிட்டோம் என நினைத்து யாரும் சந்தோசப்படக்கூடாது. இன்னும் பல பேரழிவுகள் பூமியை சமநிலைப்படுத்துவதற்காக காத்திருக்கின்றன.
இங்கே இன்னொரு கேள்விக்கும் மக்களிடம் இருந்தே பதில் கிடைக்க வேண்டும், அதாவது பாரதி சொன்ன “தனியொருவனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்ற கூற்றை ஏற்போமா அல்லது இந்த ஜெகம் அழியக் கூடாது என்பதற்காக மனித அழிவை ஏற்போமா? சிந்தித்து எதிர்கால சந்ததிக்காக செயலாற்றுவோம்.
தொடரும்.